• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -15

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -15



கேசவனும் ருக்மணியும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமர்ந்திருந்தார்கள். கணவன் இல்லாவிட்டாலும் கூட வாய் திறக்காத ருக்மணியை இன்று மாப்பிள்ளையுடன் நீ தான் பேச வேண்டும் என்று அழைத்து வந்திருந்தார் கேசவன். ரகுவரனுக்குத் தன் மேலுள்ள அதிருப்தி அவருக்குத் தெரியும்.



நண்பனின் மகனாக இருந்த போதே, இக்கால இளைஞனாக பெண்களை அவர் நடத்துவது சரியில்லை என்று அவரது முகத்துக்கு நேரே சொல்லி இருக்கிறான். இப்போது வீட்டு மாப்பிள்ளை ஆகிவிட்ட நிலையில் என்னென்ன பேசுவானோ என்ற பயம் அவருக்கு.



சற்று நேரம் சுந்தரத்தைப் பற்றிப் பேசினார்கள். அப்படியே பேச்சு கல்யாணத்தை நோக்கி நகர்ந்தது.



“ஹூம்.. சுந்தரம் பையன் கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்தணும்னு ஆசைப்பட்டான். கடைசியில் அதைப் பார்க்கக் கூடிய கொடுப்பினை அவனுக்கு இல்லை. கல்யாணமும் ஏனோதானோன்னு நடந்து முடிஞ்சாச்சு” நண்பனுக்காக வருந்தினார் கேசவன்.



“என்னத்த சொல்ல? தலைச்சன் மகனாகப் பிறந்த போது கொள்ளி வைக்க பையன் பிறந்தாச்சுன்னு கொண்டாடினோம். இப்போ அவனுக்கு கொள்ளி வச்சிட்டு குத்துக்கல்லாட்டம் நாங்க இருக்கோம். அடுத்த இரண்டும் உயிரோட இருக்கும் போதே கொள்ளி போடற பிசாசுகளா இருக்கும்னு கனவுலயும் நினைக்கலையே!”



செண்பகம் தன் போக்கில் புலம்ப,

தாய் தந்தையை வரவேற்று அடுப்படியில் புகுந்து கொண்டாலும் காதுகளை இங்கே வைத்திருந்த ஜானகி, அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று யூகித்திருந்தாள். ஊரில் நடந்த விஷயங்களை இப்போதே தனது பெற்றோர் தெரிந்து கொள்வதை அவள் விரும்பவில்லை. அந்தப் பேச்சை இன்னொரு முறை கேட்டால் ரகுவரன் உடைந்து போவான் என்று அவளுக்குத் தெரியும்.



“பாட்டிஈஈஈ! கொஞ்சம் இங்கே வாங்க. இந்த கத்திரிக்காயை எப்படி நறுக்கணும்னு சொல்லிட்டு போங்க. நான் பாட்டுக்கு என் இஷ்டப்படி செஞ்சுடுவேன், அப்புறம் என்னைக் குறை சொல்லக் கூடாது.”



ஜானகியின் குரல் சத்தமாக அதே நேரத்தில் செல்ல அதட்டலாக வந்தது. ‘இவளை…. இவ இந்த குணத்தை இன்னும் மாத்திக்கலையா?’ என்று இருந்த இடத்தில் இருந்து ருக்மணி பல்லைக் கடிக்க, முதன் முதலாக தனது மகள் இத்தனை குரலை உயர்த்திக் கேட்டிருந்த கேசவனோ செண்பகத்தையும் ரகுவரனையும் பயத்துடன் பார்த்தார்.



“இவ இருக்காளே.. என்னை ஒரு இடத்தில இருக்க விடமாட்டேங்கறா. எதைச் செய்தாலும் ஆயிரம் சந்தேகம், இவளுக்குன்னு எங்க இருந்து தான் வருமோ? கடிஞ்சு ஏதாவது சொல்ல முடியுதா? எங்க பாட்டி நான் கேட்டா உடனே வந்து நிப்பாங்க, நீங்க என்ன இப்படி ஆடி அசைஞ்சு வரீங்கன்னு கேட்டு வைக்கிறா.. இவளை எப்படித்தான் ராஜம் மதினி சமாளிச்சாங்களோ தெரியலை” என்று அலுத்துக் கொண்ட செண்பகத்தின் வார்த்தைகளில் நிச்சயம் கோபம் இல்லை.



“இத்தனை நாளில் இப்படி ஒரு பொண்ணோ பேத்தியோ இல்லைன்னு நினைக்க வச்சுட்டா. வீடு உயிர்ப்போடு இருக்கணும்னா இப்படி ஒரு பொண்ணு வேணும்.” இவர் அவளது புகழ் பாடிக் கொண்டிருக்க,



“பாட்டீ!” என்று அடுத்த அழைப்பு வந்துவிட்டது.



“அச்சோ நான் பாட்டுக்கு பேசிட்டே இருந்துட்டேன். இதோ வந்துடறேன்.. ருக்கு! நீயும் வா, உன் பொண்ணு கிட்ட இருந்து என்னைக் காப்பாத்திவிடு” ருக்மணியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார் செண்பகம்.



அதுவரை ஏதோ பிரமையில் இருந்த கேசவனை ரகுவரன் தான் பூமிக்கு அழைத்து வந்தான்.



“அவங்க ஏதோ பண்றாங்க, நமக்கெதுக்கு அந்த விஷயம். நீங்க ஏதோ சொல்லிட்டேன் இருந்தீங்களே?” என்று அவர் வந்த வேலையை ஞாபகப் படுத்தினான்.



“அதான் மாப்பிள்ளை.. கல்யாணம் அவசரமா முடிந்து போச்சு. நீங்க இன்னும் வீட்டுக்கு வரவே இல்லை. முதல் தடவை, நாங்க உங்களை முறையா வீட்டுக்குக் கூப்பிடறது தான் வழக்கம். உங்களுக்கு எப்போ தோதுப்படும்னு சொன்னா நான் விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிடுவேன்.நெருங்கின சொந்தம் எல்லாருக்கும் சொல்லி அனுப்பணும். நீங்களும் எல்லாரையும் கூப்பிட்டு வரணும், நான் சொல்றது சரிதானே மாமா.” சொல்ல வந்த விஷயத்தை கடகடவென்று ஒப்புவித்த கேசவன், ரகுவரனின் தாத்தாவைப் பார்த்தார்.



அவர் கஷ்டப்பட்டு மாப்பிள்ளை நீங்க வாங்க என்று மரியாதையை வரவழைத்துக்கொண்டு பேசியதில் ரகுவரனுக்கு சிரிப்பு வந்தது. சூழ்நிலை கருதி சிரிப்பை விட்டு விட்டு கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு பதிலுக்காக தாத்தாவைப் பார்த்தான்.



“நீ சொல்றதெல்லாம் சரிதான் கேசவா. ஆனா நானோ செண்பகமோ அங்க வந்தா கலகலப்பு இல்லாம விருந்து வேற மாதிரி போயிடும்.இப்போதைக்கு ரகுவரனும் பேத்தியும் மட்டும் வரட்டும். வேணும்னா சின்ன பேரன்கள் இரண்டு பேரையும் கூட அனுப்பி வைக்கிறேன். தப்பா எடுத்துக்காத’ என்று தனது தரப்பை தெளிவாக விளக்கினார்.



“அதுவும் சரிதான் மாமா, நீங்க என்ன சொல்றீங்க மாப்பிள்ளை?” என்று மறுபடியும் மாப்பிள்ளையிடம் வந்து சேர்ந்தார் கேசவன். அவனோ, “ஒரு நிமிஷம் மாமா” என்று உள்ளே சென்றான். திரும்பி வந்தவன், “இந்த வாரம் ஜானகிக்கு தோதுப்படாது மாமா. அதனால அடுத்த வாரம் வர்றோம். ஒரு நாள் லீவு போட்டு வரணும்னா கூட பரவாயில்லை” என்று முடித்தான்.



முடிவெடுக்கும் முன் தன் மனைவியின் நிலையறிந்து செயல்பட்டவனைக் கண்ட கேசவனுக்கு அந்தச் செயல் அவ்வளவு ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை. என்ன தான் தான் பெற்ற பெண்ணாக இருந்தாலும் பெண்களுக்கு உரிமை கொடுப்பதெல்லாம் அவருக்கு ஆகாத ஒன்று. மனைவிக்கு மரியாதை என்பதெல்லாம் அவரது அகராதியிலேயே இல்லாத ஒன்று.



அடுத்த தலைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் நல்லதாக இருந்தால் சரி என்று நினைத்துக் கொண்டார்.



சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த மகனைக் கண்ட ராஜம்மாள் கேள்வியாக மருமகளைப் பார்த்தார்.

அவரோ கணவர் என்ன மனநிலையில் இருப்பார் என்று புரியாமல் மாமியாரின் பார்வை கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் உள்ளே சென்று விட்டார். இப்போது வேறு வழியே இல்லாமல், “கேசவா என்ன விஷயம்? ஜானகியையும் மாப்பிள்ளையையும் விருந்துக்கு அழைக்கத் தானே போனீங் அதுல அப்படி என்ன சிரிப்பு உனக்க” என்று மகனிடமே கேட்டு விட்டார்.



அதைக் கேட்ட கேசவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது. “வேற ஒன்னும் இல்லம்மா. அங்க உன் பேத்தி பண்ற அட்டகாசம் தாங்க முடியல. செண்பகம் அத்தை கண்ணால தண்ணி விடுறாங்க. எங்க பாட்டியா இருந்தா இப்படி செய்வாங்களான்னு கேட்டு அவங்களை அப்படிப் படுத்துறா. எப்படித்தான் ராஜம் மதனி இத்தனை வருஷமா இவ கூட குடும்பம் நடத்துனாங்களோன்னு அந்த அத்தை புலம்புறாங்க” என்று மேலும் சிரித்துவிட்டு உள்ளே சென்றார்.



அதைக் கேட்ட ராஜம்மாளின் மனம் நிறைந்திருந்தது. விடிந்தது முதல் அடையும் வரை அவரை வம்புக்கு இழுத்து அவரிடம் இருந்து ஏதாவது வார்த்தைகளைப் பிடுங்கி, சண்டை போட்டு வயதான காலத்தில் அவரை உயிர்ப்புடன் வைத்திருந்த பேத்தி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டார் அவர்.‌ கல்யாணம் நடந்த விதமே ஜானகியைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை என்று அவருக்கு உணர்த்தி இருந்தது.



இப்போது கேசவனின் முன்பே அவள் பேசியிருக்கிறாள் என்றால், “என் பேத்தியை நல்லபடியா வை காமாட்சி தாயே!” என்று வேண்டிக் கொண்டார். பிறந்த வீட்டில் இருந்தவரை அவளது ராஜ்ஜியம் எல்லாம் அடுப்படி மட்டுமே. கேசவன் வீட்டில் இருந்து விட்டால் அவள் மூச்சு விடும் சத்தம் கூடக் கேட்காது.



******

ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்தார் ருக்மணி. அருகே நின்ற ராஜம்மாளுக்குத் திருப்தியாக இருந்தது. பேத்தியையும் அவள் கணவனையும் ஜோடியாகக் காணக் காண தெவிட்டவில்லை அவருக்கு. இருவரையும் அமரவைத்து சுற்றிப் போட்டார்.



அங்கே கூடியிருந்த கேசவனின் குடூம்பத்தாரை ரகுவரன் ஆச்சர்யமாகப் பார்த்தான். தனது உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் அறிமுகப் படுத்தி வைத்தார் கேசவன். ஒரு ஏழெட்டு முறை அந்த வீட்டிக்கு வந்து போயிருக்கிறான் அவன். சுந்தரத்தின் மகனாக நாலைந்து முறை வந்தவன் அந்த வீட்டுப் பெண்ணை மணக்க இருக்கும் மணமகனாக சிலமுறை வந்திருக்கிறான்.



அப்போதெல்லாம் ராஜம்மாள் தான் அவனை வரவேற்று பேசியிருக்கிறார். காபி பலகாரம் கொடுத்து உபசரிக்கும் ருக்மணி சில நேரங்களில் மட்டுமே அவனது நலத்தை விசாரித்திருக்கிறார். அத்தி பூத்தாற் போலக் காட்சி கொடுக்கும் ஜானகி இவனைப் பார்த்ததும் மின்னலாக ஓடிவிடுவாள்.



அப்படி இருக்கையில் இவன் வரும்பொழுது இத்தனை கூட்டம் இந்த வீட்டில் எங்கே என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பெருத்த சந்தேகம் வந்தது அவனுக்கு. அவனது முகத்தில் அந்த சந்தேகம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவரவருக்கு என்று அந்த வீட்டில் தனி போர்ஷன் இருக்கிறது, அனாவசியமாக அடுத்தவர் போர்ஷனுக்குள் வரமாட்டார்கள் என்று ராஜம்மாள் விளக்கினார்.



இப்படி புதுமாப்பிள்ளையாக மாமியார் வீட்டில் இரு நாட்கள் விருந்தாடிய ரகுவரன் அதன் பிறகு அங்கே செல்ல ஆர்வம் காட்டவே இல்லை. ஜானகியையும் அங்கே தங்க அனுமதித்தது இல்லை. பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்று ஜானகி விரும்பினால் அவளை அங்கே அழைத்துச் செல்பவன் கூடவே இருந்து கையோடு திரும்ப அழைத்துக் கொண்டு வந்து விடுவான். இது பெரியவர்களிடம் ஆனந்தத்தையும் சிறியவர்களிடம் கேலியையும் உருவாக்கி இருந்தது.



தலைதீபாவளி பொங்கல் என்று பண்டிகைகளும் வந்து போனது. சுந்தரம் இறந்து வருஷம் ஆகாததால் எதுவும் செய்யத் தேவையில்லை என்று ரகுவரன் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான்.



நாட்கள் உருண்டோட, ஜானகி மற்றும் ரகுவரனின் வாழ்க்கை வண்ணமயமாக மாறி இருந்தது. ராமச்சந்திரனும் ரங்கநாதனும் தங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார்கள். இளநிலை வணிகவியல் முடித்திருந்த ராமச்சந்திரன் ஒரு கம்பெனியில் வேலையில் அமர்ந்தான். கூடவே வங்கி வேலைகளுக்குத் தயார் செய்து கொண்டிருந்தான். எஸ்எஸ்எல்சி முடித்திருந்த ரங்கநாதன் பியூசி சேர்ந்தான். இவர்களைக் கண்டு தாத்தாவும் பாட்டியும் ஆனந்தம் அடைந்தனர்.



ராமச்சந்திரனை விட ஓரிரண்டு வயது மட்டுமே மூத்த ஜானகி, தனக்கு எட்டாக் கனியாக இருந்த‌ படிப்பை நினைத்து மனம் வருந்தினாள். அவளது விருப்பம் கணவனுக்கு தெரிந்திருந்தால் எப்பாடு பட்டாவது அதை நிறைவேற்றி இருப்பான். ஆனால் ஜானகி, தனது ஆசையை மனதுக்குள் வைத்துப் பூட்டி விட்டாள்.



மேலும் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் குடும்பத்தின் புதிய வரவை தெரிவித்தாள் ஜானகி. ரகுவரன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது தாய் வந்து பிறப்பாள் என்ற அசையாத நம்பிக்கை அவனுக்கு. சும்மாவே மனைவியைத் தாங்குபவன் இப்போது அவளைத் தலை மேல் வைத்துக் கொண்டாடினான். அவள் கேட்டது கேட்காதது என்று அனைத்தையும் வாங்கி குவித்தான்.



“மசக்கை உனக்கா, உன் பொண்டாட்டிக்கா?” என்று சுற்றி இருந்தவர்கள் செய்த கேலியெல்லாம் அவனை எதுவும் செய்துவிடவில்லை.



ஜானகிக்கு மசக்கை என்று வந்த அறிகுறி பசி தான். பகாசுரன் போலப் பசித்தது. அனுபவசாலியான செண்பகம் அவளைத் தனியாகவே சாப்பிட வைத்தார்.



“என்ன ஜானு நாலு பேர் சாப்பிடற சாப்பாட்டை ஒரே நேரத்தில் சாப்பிடற” ஒரு நாள் அவள் சாப்பிடும் போது கூடவே இருந்து கவனித்தவன் தன்னையறியாமல் அலறிவிட,



“டேய்! நீ பேசாமல் போடா! சும்மா கண்ணு வச்சிட்டு. இனிமேல் அவ பக்கத்துல வந்தேன்னா பாரு. இரட்டை உயிரா இருக்கிறவளுக்குப் பசிக்காதா. அவளைப் பொறந்த வீட்டுக்கும் அனுப்ப மாட்டேங்குற. ஏதோ என் கிட்ட தயங்காமல் கேட்கறாளேன்னு சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன். வந்துட்டான். என் பொண்டாட்டின்னு“ என்று பேரனை வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார் செண்பகம்.



அதில் முகம் சுருக்கியவன் அதன் பிறகு அமைதியாக இருந்தாலும் மனைவியின் மேல் வைத்த பார்வையை மாற்றிக் கொள்ளவே இல்லை.



சுந்தரம் இறந்து வருடமாகிப் போனது. குடும்பத்துடன் ஊருக்குச் சென்றவன் தந்தைக்கு திதி கொடுத்தான். பிரிந்து விட்ட சொந்தங்களை சேர்த்துக் கொள்வான் என்ற மற்றவர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கினான். காரியங்களைச் செவ்வனே செய்தவன் ஜானகியின் உடல்நிலையைக் காரணம் காட்டி கிளம்பி விட்டான்.



அனைவரிடமும் ஒரு எல்லை வகுத்தே பழகியவன் மனைவியிடம் மட்டும் முழுமையாக சரணாகதி அடைந்திருந்தான். விவரம் அறியா பருவத்தில் தாயிடம் மட்டுமே நெருக்கம் காட்டியவன் அவள் இல்லையென்றான பிறகு தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டான். உறவு நட்போ யாரிடமும் அவ்வளவு எளிதில் தனது மனதை திறந்து விட மாட்டான். மகிழ்ச்சியோ துக்கமோ எந்த விஷயமாக இருந்தாலும் அவன் மனம் திறக்கும் ஒரே இடம் மனைவி மட்டும் தான்.



தனக்கே தனக்கென்று வந்த முதல் உறவை அவன் கெட்டியாக பிடித்துக் கொண்டான். யாரிடமும் எதற்காகவும் மனைவியின் பாசத்தைப் பகிர்ந்து கொள்ள அவன் விரும்பவில்லை. இப்போது தாய்மையின் பேரழகுடன் திகழ்ந்த மனைவியை விட்டு விலகுவது என்பது கடினமான விஷயமாக இருந்தது அவனுக்கு.



வரப்போகும் புதிய வரவு தந்தையை மாற்றுமா? அல்லது என் மனைவி என் உரிமை என்று தன்னுடன் தந்தையைத் தன்னுடன் போட்டியிட வைக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



சீமந்தம் முடிந்தால் மனைவி தாய் வீடு சென்று விடுவாள் என்பதை அறிந்த போது ஒன்பதாம் மாதத்தில் தான் சீமந்தம் நடத்த வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான். அவனது பிடிவாதம் பிடிக்கவில்லை என்றாலும் பெரியவர்கள் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டனர். தானே மொத்த ஏற்பாடுகளையும் செய்து மனைவியின் சீமந்தத்தை நடத்த கோலாகலமாக நடத்திக் காட்டினான் ரகுவரன்.



இரண்டு நாளைக்கு ஒரு முறை மாமியார் வீடு வந்து, மனைவியின் நலனைத் தெரிந்து கொண்டு போனான். அன்றும் அது போல வந்திருந்த ரகுவரனின் காதுகளில் மனைவியின் குரல் வலியுடன் ஒலித்தது.



"அம்மா! அடிவயித்துல ஒரு மாதிரி இருக்கும்மா. என்னால நிக்க முடியல பாட்டி"



“கொஞ்சம் பொறுத்துக்கோ, இந்த கஷாயத்தைக் குடி. பிரசவ வலியா இல்லையான்னு தெரிஞ்சிடும்” வயிறு நன்றாக இறங்கி இருக்க, இது பிள்ளை வலிதான் என்று தெரிந்தது ராஜம்மாளுக்கு.



கஷாயம் குடித்தும் வலி நிற்காததால் மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்து ராஜம்மாள் ரகுவரனை அழைத்தார். அவர் அழைப்பதற்கு முன்னரே மனைவியிடம் வந்து விட்டவன் அவளது கைபிடித்து மெதுவாக அழைத்துச் சென்றான்.



பக்கத்து வீட்டில் காரை இரவல் வாங்கி மருத்துவனை சென்றார்கள். ஜானகியின் அருகில் அமர்ந்திருந்த ரகுவரன், யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் மனைவியை அணைப்பதும் அவளது நெற்றியில் வருடுவதுமாக இருந்தான். அவனே பிரசவ வேதனையை அனுபவிப்பது போலிருந்தது அவனது தோற்றம்.



மனைவியைப் பிரசவ வார்டுக்குள் அனுப்பிவிட்டு எல்லா கணவர்களையும் போல மருத்துமனையைக் காலால் அளந்து கொண்டிருந்தான் ரகுவரன்.



நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின் மருத்துவர் வந்து ரகுவரனிடம் பேசினார்.



“மிஸ்டர்.ரகுவரன்! குழந்தையோட தலை திரும்பி எல்லாம் சரியா தான் இருக்கு. குழந்தையோட வெயிட் ரொம்பவே ஜாஸ்தி, அதனால உங்க மனைவியால் ஒத்துழைக்க முடியல. அவங்க பல்ஸ் வேற இறங்கிட்டே இருக்கு. முடிஞ்ச வரைக்கும் நார்மல் டெலிவரிக்கு முயற்சி பண்ணுவேன் அப்படி இல்லைன்னா சிசேரியன் தான் செய்ய வேண்டி இருக்கும். கொஞ்சம் கஷ்டமான பிரசவம் தான் ரெண்டு பேரையும் காப்பாற்றத் தான் முயற்சி பண்றேன். அதுக்கு மேல கடவுள் விட்ட வழி.”



அவர் சொன்னதை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட ரகுவரன் ஆடிப் போனான். ஜானகி இல்லாத வாழ்க்கையை அவனால் கற்பனையில் கூட பார்க்க முடியாது. “டாக்டர்! நீங்க பெரிய உயிரை எப்படியாவது காப்பாத்திக் கொடுங்க. அவ உயிரோட இருந்தால் போதும் எனக்கு” என்று அவரது கைபிடித்து அழுது விட்டான்.



“நாங்களும் அதுக்கு தான் முயற்சி செய்வோம். கடவுளை வேண்டிக்கோங்க” என்று மருத்துவர் கடமையாற்றச்‌ சென்றுவிட ரகுவரன் அங்கிருந்த இருக்கையில் பொத்தென்று அமர்ந்தான். எப்படியாவது அவளை மீட்டுக் கொடு என்று மனம் அவனது தாயிடம் வேண்டுதல் வைத்தது.



இன்னும் பிறக்காத சிறிய உயிரைப் பற்றி அவனுக்கு யோசனையே இல்லை. தனது ஜானகி வந்துவிட்டால் போதும் என்று மட்டுமே நினைக்கத் தோன்றியது.



யாருடைய நல்ல நேரமோ, சற்று நேரத்தில் பிரசவம் முடிந்து தாயும் சேயும் நலம் என்ற தகவல் வந்து சேர்ந்தது. தன் தந்தையின் மறுபதிப்பாக குழந்தையைக் கையில் ஏந்திய தருணம், ரகுவரன் அளவில்லா ஆனந்தம் அடைந்தான்.‌ அவன் குழந்தை இல்லாமல் போனால் பரவாயில்லை என்று சொன்னதை நினைத்து வருந்தினான்.



நண்பனின் மறுபிறவி போல இருந்த பேரனைக் காணக் காண கண்ணீர் பெருகியது கேசவனுக்கு.



மனைவியைப் பார்த்த ரகுவரனது கண்கள், “எங்க அம்மா வருவாங்கன்னு நினைச்சேன். முதல்ல அப்பா வந்துட்டார். அதனால பரவாயில்லை. ஆனால் எங்க அம்மா வர்ற வரைக்கும் நான் விடறதா இல்லை” என்றது.



ஜானகியைக் கொண்டாடாததை எல்லாம் சேர்த்து வைத்துப் பேரனைக் கொண்டாடினார் கேசவன். சுந்தரம் என்றே பெயர் வைத்திருக்க, கண்ணா, ராஜா என்று அவரவர் இஷ்டத்துக்கு அழைத்தனர். குடும்பத்தில் முதல் பேரன் என்று அவனுக்கு எல்லா பக்கங்களிலும் இருந்து ராஜ உபசாரம் நடந்தது. சித்தப்பாக்கள் இருவரும் அவனைத் தரையில் விடாமல் வளர்த்தார்கள். ராமச்சந்திரன் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அவனுடன் தான் இருந்தான்.



ராமச்சந்திரன் ஒரு வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றான். வேலை பெங்களூரில் என்று அவன் தயங்கி நின்ற போது, ரகுவரன் தம்பியைத் தேற்றி அனுப்பி வைத்தான். வள்ளியின் மீதான தம்பியின் பிரியம் பற்றி அறிந்தவன், தனியாக ஒரு வீடு பார்த்து வள்ளியை ராமச்சந்திரனுடன் தங்க வைத்தான். அவனது வேலை நிரந்தரம் ஆனவுடன் திருமணம் செய்து வைத்து அவனது பங்கு சொத்துக்களை அவனிடம் ஒப்படைத்து விட்டான்.



ராஜாவுக்கு இரண்டு வயதான போது ஜானகி மீண்டும் கருவுற்றாள். அதுவும் ஆண்பிள்ளை ஆனதில் ரகுவரனின் மனதுக்குள் அந்தப் பிள்ளையிடம் ஒரு விலகல் வந்து விட்டது. இதை அறிந்தது போல் அரவிந்தனும் தாயிடம் நன்றாக ஒட்டிக் கொண்டு தந்தையின் பொறாமையை மேலும் சம்பாதித்துக் கொண்டான்.



அரவிந்தனுக்கு மூன்று வயதான போது ரகுவரனது ஆசைப் படியே அவனது மகள் பிறந்தாள்.



மூன்று குழந்தைகளை தனியாக வளர்ப்பது என்பது எந்த காலத்திலும் கஷ்டமான விஷயம் தான். அதுவும் கைக்குழந்தை இருக்கும் வீட்டில் கேட்கவே வேண்டாம்.



செண்பகம் அவரது முதுமை காரணமாக ஓய்ந்து போயிருந்தார். தாத்தா தனது கொள்ளுப் பேத்தியைக் கொஞ்சிய கையோடு வந்த வேலை முடிந்தது என்று கிளம்பி விட்டார்.



ரகுவரன் வேலையிடத்தில் தனது வளர்ச்சியில் கவனத்தை திருப்ப, குடும்பத்தின் மொத்த பொறுப்பும் ஜானகியின் தலையில் விழுந்தது.



சின்னப் பிள்ளைகளைக் கூட எளிதாகக் கையாண்ட ஜானகியால் ரங்கநாதனைச் சமாளிக்க முடியவில்லை. வயதாக ஆக அவனது நடவடிக்கைகள் பெரிதும் மாறி இருந்தது. சிகரெட் பாக்கெட் ஒன்றை அவனது சட்டையில் பார்த்துக் கண்டித்த ஜானகியை அவன் மதிக்கவே இல்லை. பட்டமேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தவன்‌ நேரங்கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வர ஆரம்பித்தான்.



அலுவலக அழுத்தம் காரணமாக ரகுவரன் சீக்கிரம் உறங்குவதைப் பழக்கமான ஆக்கிக் கொண்டான். அவனது செல்லப் பெண் பைரவியும் தந்தையின் நெஞ்சில் சுகமாக உறங்கி விடுவாள். சுந்தரம் செண்பகத்திடம் கதை கேட்டபடி படுத்துக் கொள்வான்.



அரவிந்தன் மட்டும் தாய் படுக்கும் வரையில் அவளுடனே சுற்றிக் கொண்டு இருப்பான். நாள் முழுவதும் மூன்று பிள்ளைகளைப் பராமரிக்கும் ஜானகிக்கு கண்கள் சொக்கும். ஆனால் மைத்துனன் வரும் வரை காத்திருந்து அவனைச் சாப்பிட வைத்து, பாத்திரங்களை அலம்பி அவள் வந்து படுக்கையில் விழும் போது தூக்கம் தூரமாகச் சென்றிருக்கும். ஜானகியின் துணைக்கு தலைவலியை விட்டுச் செல்லும்.



பல நாட்கள் பொறுத்துப் பார்த்த ஜானகி, ஒரு நாள் ரங்கநாதனைக் கேள்வியால் துளைத்து விட்டாள். “நான் எங்க போறேன் எதுக்கு போறேன்னு உங்க கிட்ட ஏன் சொல்லணும். நான் எப்போ வந்தாலும் சாப்பாடு போட வேண்டியது தான் உங்க வேலை. அதைவிட்டு கேள்வி கேட்காதீங்க. காலேஜ், படிப்பு இதைப்பத்தி உங்களுக்கு என்ன தெரியும். பெரிசா பேச வந்துட்டாங்க” என்று அவன் முகத்தில் அறைந்தது போல சொல்லிவிட்டுச் செல்ல ஜானகிக்கு எப்படி இதை எதிர்கொள்வது என்றே தெரியவில்லை.



பைரவிக்கு சற்று ஜூரமாக இருக்க வீட்டில் அனைவரும் அன்று விழித்திருக்கும் வேளையில், ரங்கநாதனின் இத்தகைய பேச்சைக் கேட்டு செண்பகம் பதறினார் என்றால் ரகுவரன் கோபம் கொண்டான்.



அந்தக் கோபத்தின் விளைவாக ரகுவரனின் மனைவி மூன்று குழந்தைகளை பெற்ற பிறகு படிப்பு, பாட்டு என்று பல கலைகளையும் முறையாகக் கற்று சகலகலா வல்லியானாள்.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
மைத்துனன் பேசியது அடாதது என்றாலும் மதனியின் ஏற்றத்துக்கு அதுவே அடித்தளம் வகுத்தது... So, All is Well that ends well
 
Top Bottom