• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 13

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 13



திருமணத்தன்றே நாள் நன்றாக இருக்கிறது என்று அவர்களுக்கான தனிமையை ஏற்படுத்தி விட்டார் செண்பகம். ஆனால் இருவருமே வாழ்க்கையை ஆரம்பிக்கும் மனநிலையில் இல்லை.



"ஜானு! கொஞ்ச நேரம் பேசலாமா?" என்று கேட்டுக் கொண்டு மனைவி கைபிடித்து கட்டிலில் அமர்ந்தான் ரகுவரன்.



அவளுக்கு இருந்த பதட்டத்தை மறைத்துக் கொண்டு தானும் உடன் அமர்ந்தாள். கணவனிடம் இருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள அவள் செய்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தது. மனைவியின் முகத்தில் வந்து போன பதட்டம், அதையும் மீறி அங்கே குடிகொண்டிருந்த வெட்கம் இதையெல்லாம் பார்த்தவனுக்கு பேச வந்த விஷயம் எல்லாம் மறந்தே போய்விட்டது.



புது மணமகனாக, முதன் முதலாக மனைவியைத் தனிமையில் சந்தித்திருப்பது மட்டுமே அவனது ஞாபகத்தில் இருக்க நிதானமாக மனைவியை ரசிக்க ஆரம்பித்தான். ஜானகி, தயங்கித் தயங்கி விழி உயர்த்துவதும் கணவனின் பார்வையைச் சந்தித்தவுடன் தலை குனிவதுமாக இருந்தாள். வார்த்தைகள் அற்ற ஏகாந்த நிலை இருவரையும் சூழ்ந்து கொண்டது.



எத்தனை நேரம் அப்படியே இருந்தார்களோ, எங்கோ ஒலித்த கடிகார மணியின் சத்தம் இருவரின் மோன நிலையைக் கலைத்தது. ஒரு சின்ன சிரிப்புடன் ரகுவரன் தோளைக் குலுக்க சட்டென்று பார்வையைத் தழைத்தாள் ஜானகி.



"உன்னைப் பார்த்தா பேச்சே வராது போல இருக்கே.. நான் நாளைக்கே ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கேன்" என்று பேச்சை ஆரம்பித்தவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்கள் மனதில் தோன்றிய பயத்தை அப்பட்டமாகக் காட்டின.



"சாயங்கால ட்ரைன்ல போகலாம்னு பார்க்கறேன். உங்க அம்மா அப்பாவும் கூட கிளம்பலாமான்னு கேட்டாங்க. அவங்களையும் கூப்பிட்டு போகணும். நீ.. நீ.. இங்கே தனியா இருந்துப்பியா?"



"....." நான் எப்படி என்று பார்வையில் கேட்டாள் ஜானகி. இதுவரை அவனது முகத்தை நேருக்கு நேர் பார்த்திராதவள் இப்போது கண்சிமிட்டாமல் பார்த்தாள். ஏன் இந்த முடிவு, எத்தனை நாள் இந்த பிரிவு, இப்படி தனியே விட்டுச் செல்ல எதற்கு அவசரமாக இந்த கல்வி என்பது போன்ற பல கேள்விகளை அந்தப் பார்வையில் படித்த ரகுவரன், பதில் சொல்வதற்கு தயாரானான்.



பேசுவதற்கு முன் மனதுக்குள் ஏகப்பட்ட ஒத்திகை பார்த்துக் கொண்டான். முதல் கோணல் முற்றும் கோணல் என்று ஆகிவிடக் கூடாதே.. மேலும் இங்கே வீட்டில் உள்ளவர்கள் அவளை எப்படி நடத்துவார்கள் என்று அவனுக்கு ஓர் அனுமானம் இருந்தது. அதற்கு மனைவியைத் தயார் செய்ய வேண்டிய கடமையும் அவனுக்கு இருந்தது.



"அப்பாவோட முப்பது முடிச்சிட்டு நாம மெட்ராஸ் போயிடலாம். அதுவரைக்கும், மிஞ்சிப் போனால் ஒரு இன்னும் ஒரு பதினைஞ்சு நாள் பொறுத்துக்கோ. இங்கே உள்ளவங்க எல்லாம் உன்னை நல்லா பாத்துப்பாங்கன்னு சொல்றதுக்கு ஆசை தான்.. ஆனால் அப்படி எதுவும் நிச்சயமா நடக்காது. எப்படி எல்லாம் கொடுமை பண்ணலாம்னு இப்பவே யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க"



அவன் பேசப் பேச ஜானகியின் முகம் பயத்தில் வெளுத்தது. வெகு சுலபமாகச் சொல்லி விட்டு அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த பயத்தைப் பார்த்து நிறுத்தினான்.



"இதுக்கே பயந்தால் எப்படி? இன்னும் நிறைய இருக்கு. இந்த ரூமுக்குள்ள நான் இதுவரைக்கும் யாரையும் அனுமதிச்சதே இல்லை. தம்பிங்க கூட வரமாட்டாங்க. அவங்க இரண்டு பேருக்கும் அம்மாவை விட சின்னம்மாவைத் தான் நிறைய தெரியும்.. அவங்களைத் தப்புன்னு சொல்ல முடியாது. அம்மா இறந்தபோது ராமச்சந்திரனுக்கு நாலு வயசு ரங்கநாதன் கைக்குழந்தை.. அதனால அவங்க எங்க பாசம் காட்டினாங்களோ அங்கே ஒட்டிக்கிட்டாங்க. ஆனால் நான் அப்படி இல்லை. எனக்கு அம்மாவை நல்லா ஞாபகம் இருக்கு. அந்த இடத்தை நான் வேற யாருக்கும் கொடுக்க தயாரா இல்லை. எங்க அப்பா… அவர் வாழ்க்கை வேற மாதிரி.. "



எதையோ பேச ஆரம்பித்து பழைய நினைவுகளுக்குள் சென்றவனைத் தடுக்காமல் அவனைப் பேச வைத்தாள் ஜானகி. அந்த நொடியில் அவளுக்குத் தோன்றியது எல்லாம் ஒன்று தான், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சினை இருக்கும் போல. நம்ம பிரச்சினை தான் பெரிசுன்னு நினைச்சா இவர் அதையெல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி வரிசையா சொல்றாரே. அவளது மனக்கண்ணில் தாயை இழந்து நிற்கும் மூன்று சின்னஞ்சிறு உருவங்கள் தோன்றி ஏதோ செய்தது.



அவளது இயல்பான குணம் தலைதூக்க அந்த உருவங்களை அணைத்து ஆறுதல் சொல்ல நினைத்தவள், தன்னையறியாமல் கணவனின் கைகளை அணைத்துப் பிடித்திருந்தாள். அவள் நேசத்துடன் செய்த அந்த செயல் ரகுவரனின் கண்களை நனைத்தது. தன்னைப் பற்றியிருந்த கைகளைப் பிடித்து கண்ணில் ஒற்றிக் கொண்ட ரகுவரன் சற்று நேரம் மௌனமாக இருந்தான்.



"பழசெல்லாம் பேச ஆரம்பிச்சா.. ஒரு நாள் போதுமான்னு பாடணும். ஊர்ல போய் விலாவாரியா பேசிக்கலாம். அதனால, இப்போ நாளைல இருந்து அடுத்த பதினைஞ்சு நாளைக்கு நீ என்ன பண்ணனும்னு பேசுவோம்."



"...."



"முடிஞ்ச வரை பாட்டி கூடவே இரு, நானும் சொல்லிட்டு போறேன். மத்தவங்க எதுவும் சொல்லும் போது அவங்க பதில் பேசிடுவாங்க. ஆனால், அவங்க எதுவும் பேசமாட்டாங்கன்னு என்னால உத்தரவாதம் தர முடியாது. அதை நீ தான் சமாளிக்கணும்" என்று சிரித்தபடி ஆரம்பித்தான்.



"சமையல்… மத்த வேலையெல்லாம் உன்னை ஏதாவது செய்ய சொன்னா செய்.. நீயா போய் நான் செய்யவான்னு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே நீ செஞ்சாலும் அதுல ஆயிரத்தெட்டு குத்தம் கண்டுபிடிப்பாங்க."



"...."



"என்ன.. நான் சொல்றது ஏதாவது புரியுதா.. இல்லையா? இப்படி முழிச்சா என்ன அர்த்தம்?"



"...." அதற்கும் அவளிடம் மௌனமே.



"நீ வாயைத் திறந்து சொன்னால் தான் நான் மேலே பேசுவேன்" என்று கைகட்டி அமர்ந்து கொண்டான்.



'ஹான்.. நானா?' என்று பார்த்தவள், இவள் வாய் திறக்காமல் அவன் பேச மாட்டான் என்று உணர்ந்து கொண்டாள்.



"புரிஞ்ச மாதிரித் தான் இருக்கு…. " என்றாள் மெதுவாக.



"ஆனால்.. புரியாத மாதிரியும் இருக்கு.. அப்படித்தானே?" என்று சத்தமாகச் சிரித்தான் ரகுவரன்.



"அச்சோ!" என்று அவனது வாயை மூடுவதற்கு பதிலாக, அவளது வாயை மூடிக் கொண்டாள். அதைப் பார்த்த அவனது சிரிப்பு இன்னும் அதிகமானது. பயத்துடன் அறையின் வாசலைப் பார்த்தாள் ஜானகி. அந்தச் சின்ன ஊரில் ஏழெட்டு மணிக்கெல்லாம் நடமாட்டம் குறைந்துவிடும். ஒன்பது மணிக்குக்குள் ஊரே உறங்கி விடும். கல்யாண வேலைகள் இருந்ததால் இவர்களுக்கு சற்று நேரம் பிடித்தது.



அப்போதும் கூட இவர்களை ஒன்பதரை மணிக்கெல்லாம் உள்ளே அனுப்பி விட்டார்கள். மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க, அந்த அர்த்த ராத்திரியில், பேய் உலாவும் நேரத்தில் அவன் இப்படி சிரித்து வைத்தால் வெளியே உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள். ஏற்கனவே அவளைத் தனியே விட்டுச் செல்லப் போகிறான், கொடுமைப்படுத்துவார்கள் என்று அவனே ஒத்துக் கொள்கிறான்.



இப்போது இவனே அவர்கள் பேசுவதற்கு அல்வா போன்று விஷயத்தை எடுத்துக் கொடுக்கிறானே என்று நொந்தே போனாள் அவள். அதே நினைவுடன் கணவனைப் பரிதாபமாகப் பார்த்து வைத்தாள்.



அவளது பார்வையைப் பார்த்தவன், போனால் போகிறதென்று மனமிரங்கி சிரிப்பை நிறுத்தினான்.



"சரி.. சரி.. உனக்குப் புரிஞ்ச வரைக்கும் சமாளிச்சுக்கோ.. மணியாச்சு.. இப்போ தூங்கலாம்.. காலைல அஞ்சு மணிக்கு மேல தூங்கினா அவ்வளவு தான்..‌ பாட்டி கிட்ட இருந்து நல்ல நல்ல வார்த்தையா வாங்கி கட்டிக்கணும். அதனால கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்திரு. எல்லாம் ஊருக்குப் போய் பேசிக்கலாம்" என்றவாறு படுத்துவிட்டான்.



ஜானகி தான் பயத்துடன் அமர்ந்திருந்தாள். “இப்பவே பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் சந்திக்கும் போது தானா தெரியும், அதை எதிர்கொள்வது எப்படின்னு.. உறவுகளுக்குள்ள பிரச்சினை வருமோன்னு நீ பயந்து பதில் கொடுக்காமலும் இருக்க வேண்டாம். இங்கே உள்ள யாரும் நாம பிரியம் வைக்கத் தகுதி இல்லாதவங்க. சுயநலத்தோட மொத்த உருவம்.. வயசுல பெரியவங்கன்னு மரியாதையா ஒதுங்கி போனாலும் விடமாட்டாங்க.” படுத்தபடியே தனது பேச்சைத் தொடர்ந்தான் ரகுவரன்.



ஜானகி, அவனைத் திரும்பிப் பார்த்தாளே ஒழிய எதுவும் பேசவில்லை.‌ “எல்லாத்தையும் விட இரண்டு முக்கியமான விஷயம் நீ கண்டிப்பா தெரிஞ்சுக்கோ..‌ முதல் விஷயம், நாம இங்க அடிக்கடி வரவேண்டிய அவசியம் கிடையாது. அப்புறம் இது தான் ரொம்ப முக்கியம், இந்த வீடும் இங்கே இருக்கிற சொத்துக்கள் எல்லாமும் எங்க அம்மாவோட தாய் வழி சீதனம். இதுவரைக்கும் இவங்களே எல்லாத்தையும் அனுபவிச்சதால அவங்களோடது நினைப்பு அவங்களுக்கு.. நான் எதையாவது நேரடியாகக் கேட்டுடுவேன்னு என் கிட்ட அவ்வளவா பேச மாட்டாங்க.. உனக்கும் இந்த விஷயம் தெரியும்னு நீ ஜாடைமாடையா காட்டினாலே தன்னால தள்ளி நின்னுவாங்க…



எப்படியும் அப்பா காரியம் முடிஞ்சதும் சொத்து விஷயத்தில் ஒரு முடிவெடுக்கணும். தம்பி இரண்டு பேரையும் என்ன செய்யறதுன்னு பார்க்கணும். தாத்தா பாட்டி கிட்ட பேசி இருக்கேன். அதோ அந்த அலமாரில அம்மாவோட நகைகளும், புடவைகள் சிலதும் இருக்கு, அப்பா சொன்னது தான், நான் திறந்து பார்த்ததில்லை. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, ஒரு பெரிய பெட்டி நிறைய வெள்ளிச் சாமான்கள் இருந்தது, அம்மா எனக்கு காட்டி இருக்காங்க.‌ அதெல்லாம் இப்போ என்ன ஆச்சுன்னு கூட எனக்கு தெரியாது. எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்.‌ ஒரு பத்து பன்னிரண்டு நாள் எப்படியாவது சமாளிச்சுக்கோ.. எனக்காக… ப்ளீஸ்”



ஜானகி, கேசவனின் மூலம் சுந்தரத்தின் வாழ்க்கை, அவரது முதல் மனைவி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறாள் என்றாலும் அவை எல்லாமே கேசவன், சுந்தரத்தின் நண்பன் என்ற முறையில் காண்பித்த பரிமாணம் தான். இப்போது ரகுவரனின் வாயிலாக சில விஷயங்களைக் கேட்கும் போது எந்த விஷயத்துக்கும் மாறுபட்ட கோணம் என்று ஒன்று இருக்கிறது என்று புரிந்தது. அது பற்றிப் பேசுவதற்கு இது நேரமல்ல என்பதும் புரிந்தது. அவன் தன்னுடனான திருமணத்தை நடத்திக் கொண்ட விதத்தில் மிகவும் நெகிழ்ந்திருந்தாள். எனவே வாய் திறந்து கணவனுக்கு உத்தரவாதம் அளித்தாள்.



“நீங்க கவலைப் படாமல் போயிட்டு வாங்க..‌ நான் பார்த்து இருந்துக்கறேன்.‌”



அவளது உத்தரவாதம் தந்த நிம்மதியில் ரகுவரனும் எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தெளிவோடு ஜானகியும் உறங்கிப் போனார்கள்.



நேரம் கழித்து உறங்கினாலும் மறுநாள் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து விட்டு வந்தாள் ஜானகி.‌ ருக்மணி முந்தைய தினமே அவளுக்கு அறிவுறுத்தி இருந்தார். திருமணம் ஆன பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று பெரிய பட்டியலே கொடுத்திருந்தார். அதன்படியே காலையில் முதல் கடமையாகக் குளித்து வந்தவள் இரண்டாம் கடமையை நிறைவேற்ற வேண்டி சமையலறை நோக்கிச் சென்றாள்.



ரகுவரனின் இரண்டாவது சித்தி பாலைக் காய்ச்சிக் கொண்டிருக்க, “நான் டிகாஷன் போடவா அத்தை” என்ற‌கேள்வியுடன் அருகில் சென்றாள். தயங்கித் தயங்கித் தான் கேட்டாள் என்றாலும், வார்த்தைகள் தெளிவாகவே வந்து விழுந்தன. அங்கே வந்தது முதலே கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். அவளது மூன்று மாமியார்களில் இளையவள் வேறு மாதிரி என்று புரிந்து கொண்டாள். அதன் காரணமாகவே இந்த தைரியமான கேள்வி.



“ஓ.. போடேன்.. எனக்கும் கொஞ்சம் வேலை குறைஞ்ச மாதிரி இருக்கும். அதோ அந்த பாத்திரத்துல வெந்நீர் போடு. ஃபில்டர் அங்கே இருக்கும் பாரு. போட்டுட்டு சொல்லு.. யார் யாருக்கு எப்படி காப்பி வேணும், யார் கொண்டு போய் கொடுக்கணும்னு சொல்றேன்.” காப்பியைக் காரணம் காட்டி அவர்களுக்கு இடையே ஒரு சகஜமான பேச்சு வார்த்தை தொடங்கியது.



நன்றாகவே தொடங்கிய அந்த நாள், பெரிய பிரச்சினைகள் எதுவும் இன்றி நகர்ந்தது. மாலையில், ஆயிரம் பத்திரங்களைச் சொல்லி ரகுவரனும் ஆயிரம் அறிவுரைகளைச் சொல்லி ருக்மணியும் அவளிடம் விடைபெற்றுக் கொள்ள, கேசவன் மகளைத் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்ததோடு சரி. நல்லதோ கெட்டதோ எதையும் வாய் வார்த்தையாக சொல்லாமல் பார்வையில் வெளிப்படுத்தி வெளியேறிவிட்டார்.



ரயிலேறும் வரை நிம்மதியாக இருந்த ரகுவரனை, நேரம் செல்லச் செல்ல ஒரு குழப்பம் வந்து ஆட்கொண்டது. ருக்மணிக்கு அவனது முகத்தில் வந்து போன பாவனைகள் புரிந்தாலும் வாய் திறந்து எதையும் சொல்ல முடியவில்லை.‌ கணவனின் எதிரே நின்று பேசத் தெரியாத, பேசக் கூடாத பரம்பரையில் வந்த பெண்மணி அவர். தனது மகன் போன்ற வயது தான் என்றாலும் மாப்பிள்ளை என்ற பதவி காரணமாக ரகுவரன் வந்தாலே சமையலறைக்குள் புகுந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அவர்.



தப்பித் தவறி ரகுவரன் நேரடியாக அவரிடம் எதையாவது கேட்டாலும் பதில் சொல்வதற்குக் கணவனையோ மாமியாரையோ தான் பார்க்க வேண்டும். திருமணம் நிச்சயம் ஆன நாள் முதலாய் அவரது நடவடிக்கைகளைக் கவனித்தவன், “என்ன அத்தை இது? மாப்பிள்ளைன்னா இரண்டு கொம்பா முளைச்சிருக்கு. நான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் நீங்க சமையலறைக்குள்ள புகுந்துக்கிறீங்க. நான் அசலா இருந்தால் கூட பரவாயில்லை. சொந்தத்துக்குள்ள எதுக்கு இப்படி எல்லாம்..” என்று கேட்டு வைக்க, கேசவன் மனைவியை முறைத்ததில் ருக்மணி பஸ்மமாகாமல் இருந்ததே ஆச்சரியம்.



“உனக்கு இதெல்லாம் புரியா தம்பி. உலக வழக்கத்தை மாத்த நாம யாரு?” என்று ரகுவரனைக் கடிந்து கொள்ளவும் அவர் மறக்கவில்லை.

‘ஓ.. உலக வழக்கப்படி நான் மாப்பிள்ளையான பின்னாலும் நீங்க உங்க நண்பனோட மகன்னு நினைச்சே பேசலாம்.. ஆனால் உங்க மனைவி சொந்தக்கார பையன்னு கூட நினைக்கக் கூடாது.. நல்லா இருக்கே உங்க நியாயம்..’ மனதுக்குள் வியந்து போனான் ரகுவரன்.



இதோ, இப்போது கூட ருக்மணி, கேசவனின் பார்வையை எதிர்பார்த்துக் காத்திருக்க அவரோ அமைதியாகத் தனது படுக்கையில் ஏறிப் படுத்துக் கொண்டார். மாமியாரும் மருமகனும் மனதில் குழம்பிக் கொண்டிருந்தாலும் ரயிலின் தாலாட்டு அவர்களை உறங்க வைத்தது.



இவர்கள் உறங்கி விட்ட வேளையில், ‘அப்பாடா! ஒரு வழியா இன்னைக்கு பொழுது போயிடுச்சு’ பெருமூச்சு விட்டபடி படுத்தாள் ஜானகி. ரகுவரன் கிளம்பிய உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை அறியாமலேயே தங்கள் சுயரூபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்து இருந்தனர். இரவு உணவுக்குப் பின் வெகுநேரம் ஆகியும் ஜானகியை பேச்சில் பிடித்திருந்தாள், வள்ளி. மற்ற இரு மாமியாரும் கூட அங்கு தான் இருந்தார்கள்.



சம்பந்தம் இல்லாத விஷயங்களைப் பேசி நேரம் கடத்துவது ஒன்றே வள்ளியின் அப்போதைய லட்சியம் என்று சற்று நேரத்தில் உணர்ந்து கொண்ட ஜானகி எப்படித் தப்புவது என்று யோசிக்க ஆரம்பித்தாள். இதற்கிடையில் வள்ளியின் பேச்சு சியாமளாவிடம் சென்றது. அக்கா அப்படி, அக்கா இப்படி என்று ஒரேயடியாக புகழ்ந்தவளின் பேச்சு மெல்ல சியாமளாவின் நகைகளில் வந்து நின்றது.



இவ்வளவு சீக்கிரம் இது போன்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று ஜானகி நினைக்கவில்லை. என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று யோசிக்கக் கூட அவளுக்கு நேரம் கொடுக்கவில்லை. ‘கல்யாணம் ஆகி ஒரு நாளில் இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னு பதில் கேள்வி கேட்டு வைக்கலாமா’ என்று அவள் மூளை எடுத்துக் கொடுத்ததை அவளது முகம் அப்பட்டமாகக் காட்டியது.



“அதான் முதல் ராத்திரி முடிச்சாச்சே. நான் கூட எங்க அத்தைக் கிழவி, மகன் இறந்த சோகத்தில இப்போதைக்கு எதையும் ஏற்பாடு செய்யாதுன்னு நினைச்சேன்.”



“அதெப்படி நீ நினைக்கலாம், ஏற்கனவே சொத்துக்காரன், இப்போ மெத்தப் படிச்சு கைநிறைய சம்பாதிக்கிறவன். அப்படிப்பட்ட அவங்க பேரனைப் பகைச்சுக்கணும்னு கனவுல கூட நினைக்க மாட்டாங்க. அப்பா இறந்த சோகத்திலயும் கல்யாணம் செஞ்சவன் மத்ததை மட்டும் தள்ளிப் போடுவானா என்ன?”



“அதைச் சொல்லுங்க… இவளைப் பார்த்த பத்தே நாளில் பெரியவங்க பேச்சையெல்லாம் காத்தோட விட்டு

தன் கல்யாணத்தைத் தானே முடிவு செஞ்சவன் அவன். கல்யாணம் இப்போதைக்கு நடக்கலேன்னா எப்போதும் நடக்க விட்டிருக்க மாட்டோம்னு அவனுக்கு தெரியும். இத்தனை நாளில் அவங்க அம்மாவுக்கு இங்கே நடந்தது அவனுக்குத் தெரியாமலா இருக்கும். அவங்க பாட்டியைக் கூட பேசற விதமாக பேசி சரி செஞ்சிருக்கலாம். ஹூம்…”



“அதனால தான், அவங்க கொஞ்சம் அசந்த நேரத்தில் சாமர்த்தியமா பெரிசுகளை தாஜா பண்ணி தன் காரியத்தை சாதிச்சுட்டான்.”



“அதுவும் அந்தப் பொக்கிஷ அறைல எங்களை எல்லாம் கால் வைக்க கூட விடாதவன், இவளை நேரா அங்கே தான் கூட்டிட்டு போனான். அவன் இல்லாத போது கூட இவளை அங்கே தங்கச் சொல்லி இருக்கான்.” ஆளாளுக்கு அவர்களது மேலான கருத்துக்களை சொல்லி தங்கள் சந்தேகங்கள் சரி தான் என்று நிரூபிக்க விரும்பினார்கள்.



ரகுவரனைப் பற்றிய அவர்களது பேச்சுகள் பிடிக்கவில்லை என்றாலும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஜானகிக்கு, இப்போது திருமணம் நடந்திருக்கவில்லை என்றால் எப்போதும் நடத்த விட்டிருக்கமாட்டோம் என்று அவர்கள் சொன்ன விஷயம் கேட்டு ஷாக் அடித்தது போலிருந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்தவள், அவர்களின் வாக்குமூலத்தை அலசி ஆராய்ந்து பார்திருந்தால் நடுநடுங்கிப் போயிருப்பாள்.



“இப்போ சொல்லு, உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லாமலா இருந்திருப்பான்? உங்க இரண்டு பேர் முகத்தைப் பார்த்தாலே ராத்திரி என்ன நடந்திருக்கும்னு அனுபவப் பட்டவ எங்களுக்குத் தெரியாதா?” என்று ஆரம்பித்த கேள்விகள் போகப் போக வேறு திசையில் செல்ல ஆரம்பித்தன.



இது போன்ற அந்தரங்க பேச்சுக்களை அவர்களிடம் இருந்து எதிர்பாராதவள் தலைகுனிந்து அமர்ந்திருக்க,

ஆபத்பாந்தவியாக அங்கே ஆஜரான செண்பகம், “ஊரே தூங்கியாச்சு. இப்போ என்ன அரட்டை. எதுவானாலும் காலைல பேசிக்கலாம். எல்லாரும் கிளம்புங்க. ஏம்மா ஜானகி, உனக்குத் தனியா சொல்லணுமா?” என்று அனைவரையும் கிளப்பி விட்டார்.



அப்போதைக்கு தப்பித்து விட்டோம் என்று நிம்மதியாக நினைக்க முடியாத படி அன்றைய விசாரணை இருந்தது. தொடர்ந்து வந்த நாட்களில் அவள் தெரிந்து கொண்ட விஷயங்கள் உயிர் பயத்தை அளித்தது. ரகுவரனுக்காக பொறுமை காக்க வேண்டும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே நாட்களைக் கடத்துவதற்குள் ‘போதுமடா சாமி, இந்த கல்யாணம்’ என்ற முடிவுக்கு வந்திருந்தாள் ஜானகி.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
பாவம் ஜானகி, சரியான சுயநலவாதிகளா இருக்குங்களே
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
இதென்ன, உலகத்தில் உள்ள வில்லன்களின் மொத்த மூளையையும் இவங்க குத்தகைக்கு எடுத்துட்டாங்களா... அராஜகமா இருக்கே!
 
Top Bottom