• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 12

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 12



செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் முடிந்து, எரிகின்ற கொள்ளியைக் கையில் வாங்கிய ரகுவரனின் கை நடுங்கியது.



"தம்பி! கவனமா‌ இருப்பா.. நெருப்பை நெஞ்சில வைக்கணும்" என்று ஒருவர் சொல்ல, சரி என்பது போலத் தலையசைத்தான். அவனது தம்பிகள் இருவரும் அழுகையுடன் அவனருகில் நின்றனர்.



கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கை நீட்டிய ரகுவரன், அது வரை அடக்கி வைத்திருந்த துக்கம் தாளாமல் கதறி அழுதான்.



"தம்பி! இந்த நேரத்தில அழக் கூடாதுப்பா. அந்த ஆத்மா போக மனசில்லாமல் இங்கேயே கிடந்து தவிக்கும். நமக்கு கஷ்டம் தான், ஆனா உங்க அப்பாவை நல்லபடியா அனுப்பி வைக்கிற கடமை உனக்கு இருக்கு. மனசைக் கட்டுப் படுத்திக்கோ, நீயே இப்படி இருந்தால் தம்பிகளை என்ன சொல்ல? உங்க தாத்தா பாட்டி நிலைமையை யோசிச்சு பாரு.. அவங்களுக்கு கொள்ளி வைக்க வேண்டிய மகனை வாரிக் கொடுத்துட்டு நிக்கறது சாதாரண விஷயம் கிடையாது. நீ விவரம் தெரிஞ்ச பையன். பார்த்து நடந்துக்கோ" தூரத்து உறவினர் ஒருவர் பொறுமையுடன் அவனை அணைத்து ஆறுதலுடன் தட்டிக் கொடுத்தார்.



"ம்ம்… " என்றவன் கண்களை வழியும் கண்ணீரைத் தடுக்க இயலாமல் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையை முடித்தான்.



ஆற்றங்கரையில் முழுகி விட்டு வீட்டுக்கு வரும் வழியில் தான் கூட்டத்தில் ஒட்டாமல் தனியாகவே நடந்த கேசவனைக் கண்டான். அவன் அத்தனை பேசியிருந்த போதும் உறவுகள் அவரிடம் பேசாமல் ஒதுங்கிச் செல்வதும் அவன் கண்களில் இருந்து தப்பவில்லை. நேற்று இவன் வந்தது முதலே வீட்டில் அரசல் புரசலாக ஜானகியின் ராசி பற்றிய பேச்சுகள் உலவிக் கொண்டிந்ததை ஆரம்பத்தில் கண்டும் காணாமல் போனவன், ஒரு கட்டத்தில் வெடித்து விட்டான். அதன் பிறகும் இப்படி நடந்து கொண்டால், பேசிக்கொண்டு மட்டுமே இருந்துவிட முடியாது என்று முடிவு செய்தான்.



அவனது தந்தை தன்னிடம் கடைசியாகப் பேசிய விஷயங்கள் ஞாபகத்தில் வந்தது. சுந்தரம், தனது உடல்நிலை பற்றிய எதையோ மறைந்திருக்கிறார் என்ற அவனது சந்தேகம் அந்த நொடியில் உறுதியானது.



ஜானகியுடனான தனது திருமணமும் குடும்பமாக வாழவேண்டும் என்ற அவரது ஆசையும் அவரது கடைசி ஆசையாகிப் போனதை எண்ணிக் கலங்கினான். தந்தை சொல் காக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.



அது வரைக்கும் தந்தை இறந்த துக்கத்தில் இருந்தவன், வீட்டின் தலைமகனாக நிமிர்ந்து நின்றான்.

ஏற்கனவே முடிவு செய்தபடி அவனது திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருந்தன. ஊரெல்லாம் பத்திரிகை கொடுத்தாயிற்று. அவனைப் பொறுத்தவரை தனது தந்தை நிச்சயித்த திருமணம் நடந்தாக வேண்டும். அது எப்படி நடந்தாலும் அதைப் பற்றிய அக்கறை இல்லை.



நிச்சயித்தபடி மண்டபத்தில் நடந்தாலும் சரி அல்லது வீட்டிலேயே பெரியவர்கள் முன்னிலையில் நடந்தாலும் சரி. ஜானகி தான் இந்த ஜென்மத்தில் அவனது மனைவி, அதில் எந்த மாற்றமும் வருவதை அவன் விரும்பவில்லை. ஒரு வேளை தனது குடும்பத்தாருக்கு இதில் விருப்பம் இல்லை என்றால் அதற்காக அவன் வருத்தப் படப்போவதும் இல்லை. என் வாழ்க்கை என் முடிவு என்று எதற்கும் தயாராகத் தான் இருந்தான்.



ஒன்பது வயதில் தாயை இழந்து அதற்குப் பின் கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் குடும்பத்தை விட்டுத் தனியே விடுதியில் கழித்தவன்.. அந்த அறியாப் பருவத்திலேயே எனது வாழ்க்கையை நான் தான் தீர்மானிப்பேன் என்று இருந்தவன்.. இப்போது படிப்பும், நல்ல வேலையும் கை நிறைய சம்பளமுமாக இருக்கும் போது முடிவெடுப்பதில் என்ன கஷ்டம்?



கேசவன் ஊருக்குக் கிளம்பும் முன் அவருடன் பேசி அவரது அபிப்பிராயத்தை அறிய விரும்பினான். தனது வீட்டில் பேசுவதற்கு முன் அவரிடம் பேசுவது நல்லது என்று நினைத்தவன் அவரை அழைத்துக் கொண்டு சென்ற இடம் காவிரியின் கரையோரம். அவனது தாயும் தந்தையும் அங்கே தான் இருப்பார்கள் என்பது அவனது நம்பிக்கை.



எதற்காக இங்கே வந்திருக்கிறோம் என்று தெரியாமல் கேசவன் விழிக்க, ரகுவரனுக்கு எந்த தயக்கமும் இல்லை.

"மாமா! எங்க அப்பா என் கூட கடைசியா பேசினது என் கல்யாணத்தைப் பத்தித் தான். ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னாடி நிறைய பேசினாங்க. ஜானகியோட நல்லபடியா குடும்பம் நடத்துன்னு ஆரம்பிச்சு மனைவியை எப்படி நடத்தணும்னு பாடம் எடுத்தார். நான் கூட, இதையெல்லாம் நாங்க புருஷன் பொண்டாட்டியா ஆனதுக்கு அப்புறம் கூட இருந்து பார்க்கத் தானே போறீங்கன்னு கேலி செஞ்சேன். ஆனால் அன்னைக்கு அவருக்கு ஏதோ தோணியிருக்கு…" என்று கலங்கிய கண்களுடன் மேலே பார்த்தான்.



"எனக்கு இந்த கல்யாணம் குறிச்ச நாளில் நடக்கணும்னு நான் நினைக்கிறேன். சொல்லப் போனால் எங்க அப்பாவோட கடைசி ஆசை அதுவாகத் தான் இருந்தது…"



"தம்பி! நீங்க என்ன…"



இடையே பதில் கொடுக்க ஆரம்பித்த கேசவனைக் கை நீட்டித் தடுத்தவன், "நான் பேசி முடிச்சிடறேன் மாமா.. அப்புறம் நீங்க பதில் சொல்லுங்க.. எல்லாருக்கும் இது ஒரு சிரமமான காலம் தான். இப்போ பேசறவங்க எப்பவுமே பேசத் தான் செய்வாங்க. நீங்களே யோசித்துப் பாருங்க. முப்பதாம் நாள் காரியம் முடியட்டும்னு தள்ளி வச்சா அப்புறம் முதல்ல இருந்து எல்லாம் செய்யணும்.. இங்கே யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க..



திரும்பவும் இந்த ஜாதகம்னு பேச ஆரம்பிப்பாங்க.. நீங்களே கூட ஜோசியரைத் தேடிப் போகலாம்.. அவர் இன்னும் புதுசா ஒன்னைச் சொல்லுவாரு.. போதும்.. இது வரை நடந்ததே போதும்.. என்னைப் பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும்னு எனக்குத் தெரியாது.. ஜானகியைப் பார்க்கும் போது எங்க அம்மா ஞாபகம் தான் எனக்கு வந்தது.



எஙக அம்மாவுக்கு எத்தனையோ வசதி இருந்தது. அத்தனையும் ஒரு நிமிஷம் கூட அவங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கல. பொறந்த வீடும் இல்லை.. புகுந்த வீடும் சரியில்லை.. பந்தம் பாசம்னு எதுவும் இல்லை.. அது மாதிரி நான் ஜானகியை இருக்க விடமாட்டேன்..



எனக்கு புரியுது.. உங்களுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை.. நீங்க மனசரிஞ்சு செய்யறீங்களோ இல்லை உங்களை அறியாமலேயே செய்யறீங்களோ.. உடம்பை சித்திரவதை செய்யறதை விட மனசை நோக வைக்கிறது ஆயிரம் கொலை பண்றதுக்கு சமம். இதுக்கு மேலேயும் உங்க பிடிவாதமும் ஜோசியமும் தான் முக்கியம்னு நினைக்க மாட்டீங்கன்னு நம்பறேன்.."

என்று கேசவனைப் பேச முடியாமல் செய்து விட்டான்.



அவன் பேசப் பேச தலை குனிந்து இருந்தவர், "நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி தான் தம்பி. இனிமேல் என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கட்டும். ஆனாலும் என் மனசுக்கு இதெல்லாம் சரின்னு படலை.. இந்தக் கல்யாணம் நடந்தாலும் எல்லாத்தையும் மறந்துட்டு என்னால சகஜமா இருக்க முடியாது. நான் தள்ளியே நிக்கறது தான் எல்லாருக்கும் நல்லது. நீங்க வீட்டுல பேசிட்டு சொல்லுங்க. நானும் கூட இருந்தா பிரச்சினை ஆகிடும். துக்கத்துக்கு வந்துட்டு போயிட்டு வரேன்னு சொல்லக் கூடாது" என்று எழுந்து சென்று விட்டார்.



ரகுவரனின் முடிவைக் கேட்டு அவனது வீட்டில் ஒரு பிரளயமே உருவானது. அவனது சித்தப்பாக்களும் சித்திகளும் நிறைய பேசினார்கள். நீ இப்படி ஒரு சுயநலவாதியா இருக்கக் கூடாது என்று ஆரம்பித்து ஆளுக்கொரு அபிப்பிராயம் சொன்னார்கள். மொத்தத்தில் சுந்தரத்தின் ஆன்மா அவனை மன்னிக்காது என்று தீர்ப்பளித்தார்கள். வள்ளி இவ்வளவு பேசுவாள் என்றே அன்று தான் தெரிந்தது. ரகுவரனின் தம்பிகள் இருவரும் அழுகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.



இத்தனை பிரச்சினையிலும் செண்பகம் வாய் திறக்கவில்லை. அவரது கணவரையும் பேச விடாமல் செய்து விட்டார். வாய் வலிக்கும் வரை அவர்கள் பேசி ஓய்ந்த போது செண்பகம் வாய் திறந்தார்.



"இந்த கல்யாணம் சுந்தரத்தோட ஆசை. அவன் பெத்த பிள்ளைக்கு ஆசிர்வாதம் பண்ணத்தான் அவனது ஆன்மா நினைக்கும். அவனுக்கு சாபமெல்லாம் கொடுக்கத் தெரியாது. அப்படித் தெரிஞ்சிருந்தா இங்கே பலபேருக்கு என்னென்னவோ நடந்திருக்கும். ராகவனோட கல்யாணத்தை நானும் அவன் தாத்தாவும் முன்ன நின்னு நடத்தி வைப்போம். வரணும்னு இஷ்டம் இருக்கிறவங்க வரலாம். இல்லேன்னா வழக்கம் போல எதுவும் செய்யாமல் இருக்கலாம்."



வீட்டுக்கு பெரியவர்கள் சொல்லிவிட்ட பிறகு யாரும் மீற முடியாத முடிவு. வேறு வழியின்றி முணுமுணுத்தபடி அனைவரும் கலைந்து செல்ல, "எல்லாருக்கும் ஒன்னு சொல்லணும்னு நினைக்கிறேன். அவன் கல்யாணம் முடிஞ்ச உடனே இந்த வீட்டில் நிறைய முடிவெடுக்க வேண்டியது இருக்கு. தயாரா இருந்துக்கோங்க" என்று பீதியைக் கிளப்பி விட்டார்.



இத்தனை வருடங்களில் செண்பகத்திற்கு மனிதர்களின் சுயரூபம் தெரிந்திருந்தது. மலை போல் நம்பிய மக்களின் நடவடிக்கைகள் அவரைப் பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. ரகுவரனைப் பற்றிய அவரது அபிப்பிராயத்தை அவரது நான்கு மாத மெட்ராஸ் வாழ்க்கை மாற்றி இருந்தது. இனிமேலாவது அந்தப் பிள்ளைகள் அவர்களின் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அவரது முடிவுக்கு காரணமாக அமைந்தது. இல்லை என்றால் கேசவனை விட ஜானகியின் ஜாதகம் பற்றி நிறையவே பேசியிருப்பார். மூத்த மகனை இழந்து வயதான காலத்தில் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் நிலைமை அவரை முற்போக்கு சிந்தனையில் தள்ளியது.



அடுத்த இரண்டு நாட்களில் ரகுவரன் தனது தாத்தா பாட்டி மற்றும் தம்பிகளுடன் மெட்ராஸ் வந்து சேர்ந்தான். அவர்கள் தரப்பில் இருந்து வாங்க வேண்டிய முகூர்த்த புடவை, தாலி போன்றவற்றை சுந்தரமே வாங்கி வைத்திருக்க, அவர்களுக்குப் பெரிதாக வேலை எதுவும் இல்லை. ரகுவரனின் தம்பிகளான ராமச்சந்திரனும் ரங்கநாதனும் அவர்களின் மேல் படிப்பு, வேலை ஆகியவை பற்றிய யோசனையுடன்

நகரத்தைச் சுற்றிப் பார்த்து பொழுது போக்கினார்கள்.



*****

ஊருக்குச் சென்ற கேசவனுக்கு இந்த முடிவு தெரிவிக்கப் பட்டது. அவருக்கு ரகுவரனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. ஒரு சமயம், அவனது முடிவெடுக்கும் திறனை நினைத்து வியந்தார். மற்றொரு சமயம் மரியாதையே தெரியலை அந்தப் பையனுக்கு, நான் நினைச்சதை சாதிக்கணும்னு பிடிவாதம் பிடிக்கிறான். பெரியவங்க சொல்றதைக் கேட்கவே கூடாதுன்னு இருக்கான் என்று ஆதங்கப் பட்டார்.



எது எப்படியோ ஜானகியைப் பொறுத்தவரை பிறந்த வீட்டிலிருந்து செல்வது வருத்தமாக இருந்தாலும் தந்தையின் ஏச்சுகளில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது என்பது அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தது. முகம் அவளது மகிழ்ச்சியை பிரதிபலித்தது. ராஜம்மாள், பேத்தியின் திருமணத்திற்கான சீர் வகைகளைப் பார்த்துப் பார்த்து வாங்கினார். ருக்மணி, நாள் பூராவும் மகளுக்கு அறிவுரை வழங்குவது ஒன்றையே வேலையாகச் செய்து கொண்டிருந்தார்.



குறித்த முகூர்த்தத்தில் ஜானகியின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டான் ரகுவரன். ஜானகியின் ராசி, சுந்தரத்தின் மரணம் என்று திருமண வீட்டிலும் பலரும் பலவிதமாக பேசத்தான் செய்தார்கள். அதையெல்லாம் அங்கே யாரும் கண்டு கொள்ளவே இல்லை. ஊரில் இருந்து வள்ளி மட்டும் வரவில்லை, கணவன் இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற ஊர்க்கட்டுப்பாடு.



மதிய உணவு முடிந்த பிறகு மணமக்கள் ரகுவரனின் குடும்பத்துடன் ஊருக்குக் கிளம்பினார்கள். கேசவனும் ருக்மணியும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். ரகுவரனின் பூர்வீக வீடு, சுந்தரம் மருமகளை வரவேற்க என்று செய்த சில வேலைகளைத் தவிர வேறெந்த மாற்றமும் இல்லாமல் எப்போதும் போல இருந்தது.



பக்கத்து வீட்டில் இருந்து வந்த இருவர் ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்தார்கள். புதுமணமக்களைப் பார்ப்பதற்கென்று வந்து போகும் உறவுகளைத் தவிர, அந்த வீட்டில் ஒரு கல்யாணம் நடந்ததற்கான வேறெந்த மாற்றமும் இல்லை. வாசலில் வாழைமரம் கூட கட்டியிருக்கவில்லை. ரகுவரன் அதை எதிர்பார்க்கவும் இல்லை.



ஜானகியை செண்பகமே பூஜையறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்தார். அவளுடன் சேர்ந்து கடவுளின் சன்னதியில் வணங்கி எழுந்தான் ரகுவரன்.‌ கண்மூடி நின்று, தங்களை ஆசிர்வதித்து மாறு தனது தாய் தந்தையிடம் மானசீகமாக வேண்டிக் கொண்டான்.



அதன் பிறகு ரகுவரன் ஆண்களுடன் இணைந்து கொள்ள ஜானகியின் நிலையோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது. கணவனின் அருகிலேயே இருப்பதா இல்லை குடும்பத்தின் மற்ற பெண்களுடன் இணைந்து கொள்வதா என்று புரியாமல், யாராவது உதவிக்கு வருவார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தாள். செண்பகம் இரவு விருந்துக்கான ஏற்பாடுகள் சரியான முறையில் நடக்கிறதா என்று பார்வையிட்டுக் கொண்டிருந்தார். ருக்மணியும் அவருடன் இருந்தார்.



ஜானகியின் சின்ன மாமியார்கள் மூவரும் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. இவர்கள் வந்திருப்பது தெரிந்த போதும் வள்ளி தனது அறையை விட்டு வெளியே வரவே இல்லை. சம்பிரதாயமாக ரகுவரன் மனைவியுடன் சென்று அவளை வணங்கி எழுந்தான். "நல்லா இருங்க!" என்ற இரு வார்த்தைகளுடன் அவளது ஆசிர்வாதத்தையும் பேச்சையும் வள்ளி முடித்துக் கொள்ள, தோளைக் குலுக்கிய ரகுவரன் மனைவியை அழைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான்.



ரங்கநாதனைக் கைக்குழந்தையாக இருந்த போதிருந்து வளர்த்தவள் என்பதால் அவனுக்கு வள்ளியின் மேல் தனிப் பிரியம் இருந்தது. யாராவது அவளைப் பற்றிப் பேசினால் பதில் கொடுத்து விடுவான். ரகுவரனிடம் மட்டுமே அது நடந்ததில்லை. இப்போதும், ரகுவரன் அவளது அறைக்குள் செல்வதைக் கண்டு அவசரமாக அங்கே வந்து சேர்ந்தான். மணமக்கள் வெளியே சென்றதும் அறைக்குள் சென்றவன் கல்யாணம் நடந்த கதையை ஆதியில் இருந்து அந்தமாக ஒப்பித்து விட்டே வெளியே வந்தான்.



இரவு உணவிற்குப் பிறகு மணமக்களுக்கான தனிமை கிடைத்தது. தன் கையில் இருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்து மனைவியின் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான் ரகுவரன். அவனது செயலை விநோதமாகப் பார்த்தவாறே உள்ளே நுழைந்தாள் ஜானகி. எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல் சாதாரணமாக இருந்த அறையைக் கண்டு ஒரு ஓரத்தில் ஏமாற்றமாக உணர்ந்தாலும் உடனே சமாளித்துக் கொண்டாள்.



ரகுவரனைப் பெற்ற அன்னை வாழ்ந்த அறை அது. அவளுக்குப் பின் வள்ளியை அந்த அறைக்குள் அவன் அனுமதித்ததே இல்லை.

இவன் வரும் போது தங்கிக் கொள்வான். மற்றபடி விடுதிக்குச் செல்லும் போது அறையைப் பூட்டி, சாவியைக் கையோடு கொண்டு சென்று விடுவான்.



சியாமளாவின் மறைவுக்குப் பின் சுந்தரத்துக்கு கூட அங்கு அனுமதி தர மறுத்துவிட்டான். அப்படி ஒன்றும் விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் அந்த அறையில் இல்லை, ஆனால் ரகுவரன் அங்கே அன்னையுடன் இருப்பது போல உணர்ந்தான்.



சியாமளாவின் பிறந்த வீட்டில் ஆகிவந்த வந்த கட்டில் அது, நல்ல தேக்கு மரத்தைக் கடைந்து செய்தது.‌ நான்கு பேர் தாராளமாக படுத்துக் கொள்ளும் அளவுக்கு பெரியது. ரங்கநாதன் தூளியில் தூங்க, ரகுவரனும் ராமச்சந்திரனும் தாயின் இருபுறமும் படுத்துக் கொண்டு உறங்குவார்கள். ஆளுக்கொரு கதை சொல்லி இருவரையும் சமாளித்து தூங்க வைப்பதற்குள் ரங்கநாதன் விழித்துக் கொள்வான்.



பழைய ஞாபகங்கள் அலைமோத அந்த அறையைச் சுற்றி நிதானமாகப் பார்வையை ஓட்டினான் ரகுவரன். ஒரு மூலையில் சியாமளாவின் அலமாரி இருந்தது. இது நாள் வரையில் அதில் என்ன இருக்கிறது என்று அவன் பார்த்ததே இல்லை. இனிமேலாவது கவனிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அறையைச் சுற்றி வந்தவனது பார்வை நின்று கொண்டிருந்த மனைவியின் மேல் நிலைத்தது. இதுவரை இல்லாத உணர்வுகளை அந்தப் பார்வை அவளுக்குக் கடத்தியது.



ஜானகிக்கு அந்தப் பார்வையின் அர்த்தம் புரிவதற்கு சற்று நேரம் ஆனது, புரிந்த போது அவளது தலை தானாகக் குனிந்து கொண்டது. அவளை நோக்கி நீண்ட கைகளுக்குள், புகுந்து கொள்ள கழுத்தளவு ஆசை இருந்த போதிலும் கூச்சம் தடுத்தது.

நேரம் தான் கடந்ததே தவிர நீண்ட கைகள் இறங்கவே இல்லை. அவனது பிடிவாதமும் பிடித்திருக்க, மெல்ல அவனருகில் வந்தவளைத் தன் கைகளுக்குள் கொண்டு வந்து அணைத்துக் கொண்டான் ரகுவரன்.



திருமண விஷயத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளான இருவருக்கும் அந்த அணைப்பு தேவையாக இருந்தது.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
துக்கம், சந்தோஷம் எல்லாம் கலந்த கலவையான பதிவு 👌👌👌
 
Top Bottom