• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா- 1

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -1



"மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!"



தலையில் கட்டிய துண்டோடு, பொங்கல் செய்வதற்காக வெண்ணெய் காய்ச்சிக் கொண்டு இருந்தாள் ஜானகி. இனிமையான அவளது குரல் இன்று கொஞ்சமே கொஞ்சம் கரகரத்தது. இடையிடையே இருமல் வேறு தொல்லை செய்தது.



ஹாலில் உட்கார்ந்து உலகில் உள்ள சானல்களில் எல்லாம் ராசி பலன் பார்க்கத் தயாராகிக் கொண்டிருந்த ரகுவரனின் காதுகளை திருப்பாவையும் நெய் மணமும் எட்டியதோ இல்லையோ மனைவியின் இருமல் விரைவில் எட்டியது. சட்டென்று டிவியின் சத்தத்தைக் குறைத்துவிட்டு உள்ளே ஓடி வந்த ரகுவரனின் பார்வை காலண்டரைப் பார்த்து விட்டு மனைவியை முறைத்தது.



வழக்கமாக ஆறு மணிக்கு முன்னால் கண் விழிக்காத ஜானகி இன்று ஆறு மணிக்கெல்லாம் குளித்து சமையலறையில் புகுந்து கொண்டதன் காரணம், இன்று மார்கழி முதல் நாள். அடுத்த முப்பது நாட்களைக் கடப்பதற்குள் ரகுவரனுக்கு உயிர் பல தடவை போய் வரும். நல்ல வேளை கோலம் போடுகிறேன் என்று மனைவி பனியில் நிற்கவில்லை என்று மனதோரம் ஒரு நிம்மதி ரகுவரனுக்கு. வாசலை எட்டிக் கூடப் பார்க்காமல் எப்படி இப்படி ஒரு நிம்மதி வரலாம். அந்த நிம்மதியின் ஆயுட்காலம் எவ்வளவோ, அந்த மார்கழி தான் அறியும்.



"ம்ச்.. ஜானு! உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா? நீ என்ன சின்னக் குழந்தையா? இந்த வருஷம் பனி ஜாஸ்தி ஆனது மாதிரி இருக்கு, வெயில் வந்த பிறகு மெதுவா குளிச்சா போதும்னு ஒரு வாரமா சொல்றேன். இப்படி காலங்கார்த்தால எழுந்து தலைல தண்ணியை கொட்டிக்கலேன்னா என்ன? இவ்வளவு சீக்கிரம் எழுந்து குளிச்சு என்னத்த சாதிக்கப் போற? நாள் பூராவும் வெட்டி ஆஃபீசராத் தானே இருக்கப்போற." ரகுவரனின் குரலில் காரம் ஏறிக்கொண்டே போனது. காற்றில் மிதந்து வந்த நெய் மணம் அந்த காரத்தில் மேலும் மிளகாய்த்தூளைத் தூவியது.



"மார்கழி ஒன்னாந்தேதி பொங்கல் செஞ்சே ஆகணும்னு ஏதாவது ரூல் இருக்கா, அதுவும் விடியறதுக்கு முன்னாடியே? இந்த இருமலோட நாலு வாய் பொங்கல் கூட சாப்பிட முடியாது உன்னால. பேசிப் பேசி என் எனர்ஜி தான் வேஸ்ட் ஆகுது. உன்னை மாதிரி ஆட்களை எல்லாம் அந்த ஆண்டாளே வந்து சொன்னாலும் திருத்த முடியாது."



கோபத்துக்கு ஜானகியிடம் எந்த எதிரொலியும் இல்லை. வழக்கம் போல, கணவனின் கோபத்தை எல்லாம் தன் மேல் அவனுக்கு இருந்த அக்கறை என்று ஒதுக்கிவிட்டுத் தன் போக்கில் வேலையைத் தொடர முயன்றாள். கணவனோ விடுவதாக இல்லை.



"ஆமா… நான் கெய்சர ஆன் பண்ணவே இல்லயே, பச்சைத் தண்ணில குளிச்சியா? ஷாம்பூவாச்சும் போட்டியா இல்லையா?" என்று கேள்விக் கணைகள் தொடர்ந்து வர, ஜானகியின் தலையோ குனிந்து நிலத்தைப் பார்த்தது. அது ரகுவரனின் கோபத்துக்கு இன்னும் தூபம் போட்டது. சிறு வயது முதலே சீயக்காய் வாங்கி அதில் ஏகப்பட்ட பொருட்கள் சேர்த்து அரைத்துக் கூந்தலைப் பராமரித்து வந்தவள் அவள்.



ஒரு கட்டத்தில் அவளுக்கு சுவாசத்தில் சிறிய பிரச்சினை வர, டாக்டர் முதல் வேலையாக சீயக்காய்க்குத் தடைவிதித்து விட்டார். ஆங்கில மருத்துவர் அப்படித்தான் கூறுவார், சீயக்காயின் மகிமையைப் பற்றி அவருக்கென்ன தெரியும் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டு இவள் சீயக்காயைத் தொடர மூச்சுப் பிரச்சினை பெரிதாகிப் போனது. விஷயம் தெரிந்து ரகுவரன் ஆடிய ருத்ர தாண்டவத்தைப் பார்த்த பிறகு ஜானகியின் கூந்தல் சீயக்காயைப் பார்க்கவில்லை.



ஜானகியைப் பொறுத்தவரை எந்த ஷாம்புவாக இருந்தாலும் கூந்தலுக்கு எதிரி தான். எனவே, அரும்பாடுபட்டு வளர்த்த கூந்தலை ஷாம்பு போட்டு கெடுக்க விரும்பாத ஜானகி தலைக்கு எதையும் பயன்படுத்துவதில்லை, மலையாளப் பெண்குட்டியாக மாறிப் போனாள்.



தேங்காய் எண்ணெயை வழிய வழியத் தடவி தண்ணீரை ஊற்றிக்கொள்பவள், தலையில் கட்டிய துண்டோடு மணிக்கணக்கில் உலாவி பல உபாதைகளை வான்டட்டாக வாங்கிக் கொள்கிறாள். கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி ஏதேதோ செய்து பார்த்து ரகுவரனின் வாய் வலித்தது தான் மிச்சம், ஜானகியின் தலைக் குளியல் மாறவே இல்லை. ஆனாலும், தன் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தன் போல சொல்ல வந்ததைச் சொல்லாமல் ரகுவரனின் விடுவதில்லை.



"நினைச்சேன்… இப்போ தான் மார்க்கெட்ல ஏகப்பட்ட ஆர்கானிக் ஷாம்பு வந்திருக்கே.. அதுல ஆராய்ச்சி பண்ணி எதையாவது யூஸ் பண்ண வேண்டியது தானே. ஒரு அஞ்சு நிமிஷம் செலவழிச்சு நிதானமா தலையை அலசினால் எதை யூஸ் பண்ணினாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. ஏந்தான் இப்படி இருக்கியோ? சொல்லிச் சொல்லி என் வாய் தான் வலிக்குது. இத்தனை சீக்கிரம் குளிச்சிட்டேன்னு யாராவது வந்து உனக்கு ஏதாவது அவார்ட் கொடுக்கப் போறாங்களா? இப்போ பாரு இருமலை இழுத்து வச்சிருக்க.. இன்னும் பத்து நாளைக்கு சாப்பிட முடியாமல் தூங்க முடியாமல் அவஸ்தைப்படப் போறது யாரு? நீ பண்ற அலப்பறைல இனிமேல் பாத்ரூமை பூட்டி வைக்கணும் போலிருக்கு. அப்படியாவது அடங்கறியான்னு பார்க்கணும்."



"சீக்கிரம் குளிக்கிறதெல்லாம் கூட பரவாயில்லை. அட்லீஸ்ட் முடியைக் காயவச்சுட்டாவது அடுத்த வேலையைப் பார்க்கலாமில்ல. வர வர நீ ரொம்ப படுத்துற ஜானு!"



வாய் அதன் போக்கில் மனைவியைக் கண்டித்துக் கொண்டிருக்க, கைகள் அவள் கையில் இருந்த சாம்பிராணி கரண்டியை வாங்கிக் கீழே வைத்தது, மனைவியை ஹாலுக்கு அழைத்து வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தது, அவளது தலையில் இருந்த துண்டை அவிழ்த்துத் தலையைத் துவட்ட ஆரம்பித்தது. இரண்டடி நீளத்தில் சாட்டை போன்று நீண்டிருந்த கூந்தல் எளிதில் காய்வேனா என்று அடம்பிக்க, ட்ரையரைத் தேடி எடுத்து தனது வேலையைத் தொடர்ந்தது ரகுவரனின் கைகள்.



விடாது தொடர்ந்த ஜானகியின் இருமல் அந்தக் கைகளை மேலும் வேலை செய்ய விடாமல் தடுத்தது. இல்லாவிட்டால் தலைமுடிக்கு சாம்பிராணி போடும் வேலையையும் அந்த கைகள் செய்யும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு தலைமுடி காய்ந்து விட்டதா என்று தொட்டுப் பார்த்த ரகுவரனின் கைகள் அங்கே இருந்து நகர மறுத்தது. மனைவியின் பட்டுப் போன்ற கூந்தலை முகர்ந்த ரகுவரனுக்குள் செண்பகப் பாண்டியனின் ஆவி புகுந்து கொண்டது போலும்.



"ஏன் ஜானு, எனக்கு இப்போ நக்கீரரைக் கூப்பிட்டு அவருக்கு ஒரு விஷயத்தை தெளிவாக்கணும் போல இருக்கே" என்று கரகரத்த குரலில் சொன்ன ரகுவரனை விளங்காத பார்வை பார்த்தாள் ஜானகி.



"இல்ல…. சீயக்காய் போடாம, ஷாம்பு போடாம சிங்காரச் சென்னையோட மெட்ரோ வாட்டர்ல அலசியும் இப்படி ஒரு மணம் இருந்தால்… பெண்களோட கூந்தலுக்கு இயற்கைலயே மணம் இருக்குன்னு தானே அர்த்தம்" தனது கண்டுபிடிப்பில் உண்டான பெருமிதம் அந்தக் குரலில் தெரிந்தது.



"அது சரி… ரொம்ப நல்ல கண்டுபிடிப்பு" என்று சிரித்தாள் ஜானகி.



"அதான்.. நம்ம நக்கீரர் பாவம் எத்தனை வருஷமா இந்த விஷயத்தைத் தப்பாவே புரிஞ்சு வச்சிருக்கார். இத்தனை வருஷம் கழிச்சு எனக்குக் கிடைத்த ஞானத்தை அவருக்கும் சொல்லித் தெளிவு படுத்தலாம்னு ஒரு எண்ணம்…."



"சரியா போச்சு போங்க. இப்போ இந்த ஆராய்ச்சி ரொம்ப அவசியம் தேவை தான்" என்று வாய்விட்டுச் சிரித்த ஜானகி தொடர்ந்து இரும ஆரம்பித்தாள். நிமிடங்கள் கடந்தும் தொடர்ந்த இருமலால் ஜானகியின் கண்கள் நிற்காமல் நீரைப் பொழிந்தன.



சற்று நேரம் செய்வதறியாது திகைத்து நின்ற ரகுவரன், வெந்நீர் எடுத்து வந்து மனைவியிடம் கொடுக்க ஜானகியின் இருமல் சிறிது மட்டுப்பட்டது.



"போதுங்க" என்று பாதியில் டம்ளரை நீட்டிய ஜானகியின் குரலில் கரகரப்பு கூடியிருந்தது. அதில் ரகுவரனின் முகம் யோசனைக்குப் போனது.



மிகப்பெரிய வித்வானிடம் முறையாக சங்கீதம் பயின்று அதையே பற்றுக்கோலாகக் கொண்டு பல சங்கீத மேதைகளை உருவாக்கியவள் ஜானகி. எப்போதுமே தனது குரலைப் பாழாக்கும் எந்த விஷயத்தையும் அவளை அறியாமல் கூட செய்யமாட்டாள். அவசியத்திற்குக் கூட அவளது சத்தம் உயராது. அப்படிப்பட்ட குரலில் சிறிது காலமாகவே நிரந்தரமாக ஒரு கரகரப்பு தெரிகிறது. பாடும் போது பிசிறு தட்டுகிறது. இதை நினைக்கும் போதெல்லாம் ரகுவரனின் கற்பனைக் குதிரை இறக்கை கட்டிப் பறக்கிறது.



என்ன செய்வது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பழக்கங்கள் இருக்கும். அதில் சில பழக்கங்கள்

விநோதமானதாக இருக்கும். ரகுவரனுக்கும் அப்படித்தான். ஏதாவது அசம்பாவிதத்தைப் பார்க்க நேர்ந்தாலோ அல்லது அதைப்பற்றிப் படித்தாலோ, கேள்விப்பட்டாலோ அந்த இடத்தில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வைத்துப் பார்த்துத் தேவையில்லாமல் கலங்குவது ரகுவரனின் வழக்கம். இப்போதும் அப்படித்தான், மனைவியின் குரலில் தெரிந்த கரகரப்பை நேற்றிரவு டிவியில் பார்த்த திரைப்பட கதாநாயகனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வைத்தது.‌



வானளாவப் பரந்து விரிந்த கற்பனை பயத்தைக் கொடுக்க, அதன் சிறகைத் தற்காலிகமாக முறித்து வீட்டு ஹாலுக்கு வரவைத்தது மனைவியின் நிலை. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இருமியவள் மூச்சுக்குத் திணர, அதற்குண்டான மருத்துவம் செய்து சாய்வு நாற்காலியில் அவளைப் படுக்க வைப்பதற்குள் ரகுவரனது பயமீட்டர் எவரெஸ்டைத் நெருங்கி இருந்தது.



ஜானகிக்கு இது போன்று உடல்நிலை சரியில்லாமல் போகும் தான். ஆனால் வருடத்திற்கு ஓரிரு முறை என்பது காலப்போக்கில் மாதம் ஓரிரு முறை என்றாகி இப்போது வாரம் ஓரிரு முறை என்றானது தான் ரகுவரனின் பயத்துக்கான முதல் காரணம். எதனால் இப்படி ஆகிறது என்று விரைவில் கண்டறிய வேண்டும் என்று அவ்வப்போது தோன்றினாலும் அதற்கு மனைவியின் ஒத்துழைப்பு வேண்டும் அல்லவா? கொஞ்சம் தெளிவானதும், எழுந்து அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவாள். இன்றும் அப்படித்தான் நடக்கும்.



மருந்தின் உதவியால் ஜானகி சற்றுக் கண்ணயர, ரகுவரனது உலகமே ஸ்தம்பித்து நின்றது. அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கக் கூட முடியாமல் மூளை மரத்துப் போனது போலிருந்தது. அந்த அளவுக்கு ஜானகி கணவனை ஆக்கிரமித்திருந்தாள்.



அப்படியே எவ்வளவு நேரம் சென்றதோ, அழைப்பு மணியின் ஓசை ரகுவரனை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது. இரண்டு முறை அடித்த மணியோசை, வந்திருப்பது பால்காரன் என்று அறிவித்தது. அந்த ஓசையிலும் அமைதியாகத் தூங்கும் மனைவியை யோசனையுடன் பார்த்தபடி வாசலுக்குச் சென்று பாலுக்காகக் கையை நீட்டிய ரகுவரனைப் பார்த்து விழி விரித்தான் அந்தப் பால்காரன்.



"என்ன சார் அதிசயமா இருக்கு, இந்நேரம் நீங்க சன்டிவில ராசிபலன் பாத்துட்டு இருக்கணுமே, கரண்ட் இல்லையா? டிவி ரிப்பேரா?"



பதில் சொல்லாமல் ரகுவரன் அவனை முறைக்க, அவன் தொடர்ந்தான்.

"அம்மாக்கு மேலுக்கு சரியில்லையா சார்? நாள் தவறாம அஞ்சு மணிக்கு எழுந்து அடையற வரைக்கும், இருக்கிற வேலையெல்லாம் இழுத்துப் போட்டு செஞ்சா இப்படித்தான் ஆகும் சார். இங்க பாருங்க, மார்கழி பொறந்தாச்சுன்னு பெரிய கோலமா போட்டிருக்காங்களே. இந்தப் பனில எவ்வளவு நேரம் நின்னாங்களோ?"



அவன் சொன்ன பிறகே வாசலை எட்டிப் பார்த்த ரகுவரனுக்கு மனைவியின் கைவண்ணத்தில் உருவான ரோஜாப்பூக்களை ரசிப்பதா இல்லை வலியச் சென்று வியாதியை வரவழைப்பவளை நொந்து கொள்வதா என்று புரியவே இல்லை.



"வீட்டுப் பொம்பளைங்க உடம்பு நோவெல்லாம் கண்டுக்காம குடும்பத்தைப் பாத்துக்க, ஆம்பளைங்க சம்பாதிக்கிறோம்ற பேர்ல வீட்டுல ஒரு ஆணியும் புடுங்கறதில்லை. வயசு காலத்தில கெத்தா நான் ஆம்பளைன்னு திரிய வேண்டியது, அப்புறம் காலம் போன காலத்தில அச்சோ பொண்டாட்டி படுத்துட்டாளேன்னு ஒரு மண்ணும் தெரியாம முழிக்கத் தான் லாயக்கு. கண்ணு முன்னாடி இருக்கிற வரைக்கும் இந்த மனுஷப் பயலுகளுக்கு பொண்டாட்டி அருமை தெரியவே மாட்டேங்குது. நீங்க பார்த்து சூதானமா நடந்துக்கோங்க சார். அம்புட்டு தான் சொல்லுவேன்."



சாதாரண கேள்வியில் ஆரம்பித்து நிறைய அறிவுரைகளும் சேர்ந்து வந்தது ரகுவரனுக்கு. மனைவியின் அருமை பெருமைகளை அறியாத ஆண்மகன்களைக் கொன்று போட்டுவிடவேண்டும் என்று ஐந்தே நிமிடத்தில் வக்கீல் இல்லாமல் வாய்தா இல்லாமல் தீர்ப்பளித்துவிட்டான் அவன். சொந்த அனுபவம் போலும். "நான் அவனில்லை" என்று இடையிடையே சொல்ல முயன்ற ரகுவரனை அவன் கண்டுகொள்ளவே இல்லை.



'நேரம்டா, உன் கிட்ட எல்லாம் பேச்சு கேட்க வச்சிட்டாளே அவளைச் சொல்லணும். தினமும் அஞ்சு மணிக்கு எழுந்திரிக்கிறாளா? நீ பார்த்தியா? இன்னைக்கு எனக்கு விடிஞ்ச நேரமே சரியில்லை. ஆரம்பமே இப்படி இருக்கே, இன்னும் யாரெல்லாம் அட்வைஸ்ங்கிற பேர்ல உயிர வாங்கப் போறாங்களோ?' என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொள்ளத்தான் முடிந்தது ரகுவரனால்.



ஒரு வழியாக பால்காரன் சொன்னதற்கெல்லாம் தலையாட்டிவிட்டு உள்ளே வந்த ரகுவரனுக்கு, இவ்வளவு பேச்சுச் சத்தத்திலும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்த போது கவலையாகிப் போனது. ஒதுக்கி வைத்திருந்த பயம் மீண்டும் தலைதூக்க, சீக்கிரமே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று உறுதி எடுத்த பிறகே மனம் ஒரு நிலைக்கு வந்தது. யாரைப் பிடித்தால் காரியம் நடக்கும் என்பதும் ரகுவரனுக்குத் தெரியும், தன் மனைவி தன் உரிமை என்று இதுவரை தங்கள் விஷயத்தில் மூன்றாவது நபரின் தலையீட்டை விரும்பாத ரகுவரனுக்கு இன்று வேறு வழியே இருக்கவில்லை.



பாலைக் காய்ச்சி தனக்கும் மனைவிக்குமான காஃபியுடன் ரகுவரன் ஹாலுக்கு வர, அப்போதும் ஜானகி தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். தூங்குபவளை எழுப்ப மனமில்லாத போதும் வெறும் வயிற்றில் இருக்கிறாளே என்ற கவலை அவளை எழுப்ப வைத்தது.



"ஜானு! ஜானு! மெதுவா எழுந்துக்கறயா? இந்த காஃபியைக் குடிச்சிட்டுப் படுத்துக்கோ. சூடா குடிச்சா கொஞ்சம் இதமா இருக்கும்." வார்த்தைக்கு வலிக்குமோ என்று மனைவியை எழுப்பிய ரகுவரனின் குரலில் அத்தனை மென்மை.



கணவன் விடாமல் எழுப்பியதில் மெதுவாகக் கண்விழித்த ஜானகி, ரகுவரனின் கையில் இருந்த காஃபியைப் பார்த்துப் பதறினாள். "பால்காரன் வந்துட்டானா? எப்படியோ அசந்துட்டேன் போல. ரொம்ப நேரம் தூங்கிட்டேனா? என்னை எழுப்ப வேண்டியது தானே, நீங்க ஏன் இந்த வேலையெல்லாம் செய்றீங்க?"



அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்ட மனைவியின் கைகள், கணவனின் தீர்க்கமான பார்வையில் அவனிடம் இருந்து காஃபியை அவசரமாக வாங்கியது.



"ஹூம்.. இன்னைக்காவது நான் காஃபி போடணும்னு நினைச்சேன்" என்று முணுமுணுத்து கொண்டு காஃபியைக் குடித்தாள் ஜானகி. அதாகப்பட்டது, அந்த வீட்டில் பின் தூங்கி முன் எழும் பழக்கம் ரகுவரனுடையது. மார்கழி மாதம் தவிர மற்ற பதினொரு மாதங்களும் ஆறரை மணிக்கு பால்காரன் வரும் வரை ஜானகிக்குத் திருப்பள்ளியெழுச்சி ஆனதில்லை. வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு தனி ஆளுண்டு அங்கே. ஜானகியின் எல்லா அலப்பறைகளும் மார்கழியிலும் மற்ற பண்டிகை நாட்களிலும் தான், அதுவும் சமீபத்தில் தான் சோசியல் மீடியாக்களின் புண்ணியத்தால் வந்தது.



"#மார்கழி"

"#முதல் நாள்" என்று ஹேஷ்டேக் போட்டு கோலம், பிரசாதம், அன்றைய திருப்பாவை திருவெம்பாவை என்று வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் போன்றவையில் சுடச்சுட பதிவிட்டு நாள் பூராவும் அதில் வரும் லைக்குகளையும் கமெண்டுகளையும் பார்த்துக் கொண்டே பொழுது போக்கிவிடுவாள். தற்போது தான் யூட்யூப் பற்றிய ஞானத்தை அவளுக்கு யாரோ வழங்கி இருக்கிறார்கள். "ஜானுவின் ஜாலங்கள்" என்று ஒரு சேனல் தயாராகி வருகிறது.



காஃபியைக் குடித்து முடித்த ஜானகி நாற்காலியில் இருந்து எழுந்து நின்று, "அந்த டம்ளரை இப்படிக் கொடுங்க" என்று கணவனின் காஃபி டம்ளருக்குக் கை நீட்டினாள். வழக்கமாக நடப்பது தான் என்பதால், ஒரே நாளில் எத்தனை தடவை தான் வாயை வலிக்க வைப்பது என்று அமைதியாகத் தன் டம்ளரை நீட்டிய ரகுவரன் குளிக்கச் சென்றுவிட ஜானகி சமையலறைக்குள் நுழைந்தாள்.



மனைவி அடுத்து என்ன செய்யக் காத்திருக்கிறாளோ என்ற யோசனையுடன் அரைகுறையாகக் குளித்து விட்டு உடை மாட்டி வந்த ரகுவரனை மேசை மீது இருந்த வேஷ்டியும் சட்டையும் வரவேற்றது. வீட்டினுல் நிலவிய அமைதி அடுத்து என்ன வரப் போகிறது என்று உணர்த்திப் புருவம் சுழிக்க வைத்தது.



காலையில் இருந்து வாய் வலிக்க மனைவிக்கு அறிவுரை கூறியதில் வயிறு "எதையாவது உள்ளே போடேன்" என்று கெஞ்ச ஆரம்பித்திருந்தது. பொங்கல் என்ன நிலையில் இருக்கிறது என்று பார்க்கப் போனவனை ஏமாற்றாமல் மனைவியின் குரல் அழைத்தது.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா- 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom