• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -இறுதி அத்தியாயம்

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -18



யாரிந்த தேவதை என்று மனம் கேட்க, இருக்கும் இடத்தை மறந்து பார்த்த விழி பார்த்த படி நின்றிருந்தான் நீரஜ்.



வெகு நேரம் ஐசியு கதவைத் திறந்து வைத்துக் கொண்டு உள்ளேயும் வராமல் நின்றவனைக் கண்டு எரிச்சல் வந்தது அந்த தேவதைக்கு.



“எக்ஸ்யூஸ் மீ” என்றாள் முகத்தில் எரிச்சலைக் காட்டி.



“ஓ.. ஐயாம் சாரி” என்று கதவை மூடிவிட்டு உள்ளே வந்தவன், “நான் நீரஜ், மிஸஸ்.ஜானகியோட அட்டென்டர்” என்று அறிமுகம் செய்து கொண்டான். ‘அப்போது தானே அவளும் செய்வாள், காலங்காலமாக இதைத் தானேடா செய்யறீங்க’ என்று மனசாட்சி மண்டையில் கொட்டியது.



“ஓ..” அவளும் பதிலுக்கு ஓ போட்டாள்.

“ஐயாம் டாக்டர்.சுப்ரஜா, உங்க கிட்ட பேஷண்ட் பத்தின அப்டேட் கொடுக்கலாம்னு தான் வரச் சொன்னேன்” என்று ஜானகியின் ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டே அவன் முகத்தைப் பார்த்தாள்.



“இது லேட்டஸ்ட் ரிப்போர்ட்டா? லெட் மீ சீ!” என்று அவசரமாகக் கேட்டவனை ஆட்சேபணையுடன் பார்த்தாள். பிறகு தான் அவன் ஒரு டாக்டர் எனறு சீஃப் சொன்னது ஞாபகம் வந்தது. “லுக்.‌, மிஸ்டர்.நீரஜ். நீங்க டாக்டரா இருக்கலாம். ஆனால் இங்கே பேஷண்டை நாங்க தான் ட்ரீட் பண்றோம். முதல்ல நாங்க சொல்றதைக் கேளுங்க. அப்புறம் தேவைப்பட்டால் உங்க ஒபீனியனை சொல்லலாம்.”



“தட்ஸ் ஓகே. சொல்லுங்க டாக்டர்.சுப்ரஜா, என் பாட்டிக்கு எப்போ கான்ஷியஸ்நெஸ் வரும். கிட்டத்தட்ட நாற்பது மணி நேரம் ஆகிடுச்சு. வைடல்ஸ் எல்லாம் ஓகே தானே?” என்று பேஷண்டின் பேரனாக மாறி கேள்விகளை வரிசையாகக் கேட்டான்.



“எலக்ரோலைட்ஸ் லாஸ் ஆகியிருக்கு. அவங்க ஏஜ் காரணமா ஸ்லோவா தான் டோசேஜ் ஜாஸ்தி பண்ண முடியும். இப்போதைக்கு அவங்க சேஃப் ஜோன்ல தான் இருக்காங்க. ஆனால் சப்கான்ஷியஸ் மைன்ட்ல ஏதோ டிஸ்டர்பன்ஸ் இருக்கு. எல்லாரும் எப்போதும் சொல்ற மாதிரி தான். அவங்களுக்கு க்ளோஸான யாராவது பக்கத்தில உட்கார்ந்து பேசினால் இம்ப்ரூவ்மென்ட் இருக்கும்” என்று தெளிவாக விளக்கினாள் சுப்ரஜா.



“க்ளோஸான ஆளா?” என்று யோசித்தான் அவன்.



“உங்க தாத்தா எப்படி?”



“வாட்.. தாத்தா எப்படின்னா.. என்ன அர்த்தத்தில் கேட்கிறீங்க?”



“As a husband...The understanding between them எப்படின்னு கேட்கிறேன்”



ஒரு கணவனாக.. அவர்களிடையேயான புரிதல் எப்படி என்று கேட்டவளை நீரஜ் பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று சுப்ரஜா அறியவில்லை.



“கேள்வி கேட்டால் பதில் சொல்லணும், இப்படி பார்த்தா எனக்கு அவரைப் பத்தி வேற மாதிரி அபிப்பிராயம் தான் வரும்”



“ஹா.. ஹா.. ஹா.. “ இருக்கும் இடம் மறந்து சத்தமாகச் சிரித்து விட்டான் நீரஜ்.



“என் ரகுத்தாத்தாவைப் போய்.. ஹா.. ஹா.. எண்பது வயசுலயும் காதல் மன்னனா இருக்கிறவரைப் போய் இப்படி கேட்டுட்டீங்களே” என்று மீண்டும் சிரித்தான்.



“ஐயாம் சாரி சுப்ரஜா. ஐசியுல இப்படி பிகேவ் பண்ணி இருக்கக் கூடாது. வெரி சாரி. எங்க தாத்தாவுக்கு சம்பந்தமே இல்லாத எதையோ கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. அறுபது வருஷத்துக்கு முன்னாடியே என் ஜானு டார்லிங்க அவர் லவ் பண்ணி கல்யாணம் பண்ணினவர். அவங்க லவ் ஸ்டோரி கேட்டீங்கன்னா உங்களுக்கும் லவ் பண்ணத் தோணும். சச் எ லவ்லி கபுள். ஆனால் இப்போ ஜானுவ இந்த நிலையில் பார்த்தால் உடைஞ்சு போயிடுவார். நானே பேசறேன். இன் ஃபாக்ட், நான் கொடுத்த சர்ப்ரைஸ் தான் விபரீதமா போயிடுச்சு. என்னைத் திடீர்னு பார்த்த ஷாக்ல தான் இப்படி ஆகிடுச்சு. ஐ ஃபீல் வெரி பேட் அபவுட் தட்.”



சற்றே உணர்ச்சி வசப்பட்டவன், “அவங்களை இப்போ பார்க்கலாமா? தாத்தாவையும் கூட்டிட்டு வரேன்” என்று அனுமதி கேட்டு ரகுவரனை அழைத்து வந்தான்.



கண்மூடிப் படுத்திருந்த மனைவியைப் பார்த்தவருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. “சீக்கிரம் எழுந்து வா ஜானு. நான் இங்கே தான் வெயிட் பண்றேன்.” நெற்றியில் வருடியவாறு சொன்னவர் அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் எழுந்து விட்டார்.



அவரது தொடுகையை உணர்ந்தாற் போல ஜானகியின் நெற்றி சற்றே சுருங்கி விரிந்தது. கண்களைக் திறக்க முயன்ற. அதைக் கவனிக்காத ரகுவரன் அங்கே இருந்து நகர முயல, “ரகுத்தாத்தா! வெயிட். ஜானுவுக்கு கான்ஷியஸ்நெஸ் வருது பாரு. கண்ணைத் திறக்க ட்ரை பண்றாங்க பாரு. எதுக்கும் நீயே பக்கத்தில் நில்லு. என்னைப் பார்த்து திருப்பி மயங்கிடப் போறாங்க. இந்த ஜானு இப்படி என் அழகுல மயங்கி விழறதுக்கு பதிலா ஏதாவது யங் இறக்கை இல்லாத தேவதை மயங்கி விழந்தாலும் பரவாயில்லை. என் நேரம் அவங்களுக்கு எல்லாம் நான் இன்விஸிபிளா ஆயிடறேன்” என்று சூழ்நிலையை இலகுவாக்கி ரகுவரனை முன்னே நிறுத்தி வைத்தான்.



அவனது இயல்பான பேச்சைக் கேட்டு சுப்ரஜா, கண்ணிமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இது தெரிஞ்சு தானே நான் எக்ஸ்ட்ரா இரண்டு பிட்ட போட்டேன் என்று நினைத்தவன் அவளைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டுத் திரும்பிக் கொண்டான்.



மெதுவாகக் கண்விழித்த ஜானகி அருகில் நின்றிருந்த ரகுவரனைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றார். இருவரது கண்களிலும் நீர் நிரம்பி பார்வையை மறைத்தது. அழாதீங்க என்று தலையசைத்த ஜானகி வாய் திறந்து எதையோ கேட்க, ரகுவரனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மனைவியின் அருகில் குனிந்தவரை, “ராஜு எங்கே? அவன் வந்ததை நான் பார்த்தேனே!” என்று கேட்ட மனைவியை விடுத்துப் பேரனைத் திரும்பிப் பார்த்து முறைத்தார்.



எதற்காக அந்த முறைப்பு என்று புரியாத நீரஜ் கண்களால் கேள்வி கேட்க, “ரொம்ப நடிக்காத படவா! பக்கத்தில வா. கிழவிக்கு முழிப்பு வந்ததும் என்னையெல்லாம் கண்ணு தெரியுதா பாரு. மயக்கம் போட்டு விழுந்தாலும் ராஜு வந்தானே, எங்கேன்னு கேட்கறா?” என்று செல்லமாக அலுத்துக் கொண்டாலும் மனைவி கண் விழித்த உற்சாகம் அவரிடத்தில்.



“ஓ.. மை.. ஜானு! நான் முதல்லயே சொன்னேன், என் டார்லிங் முழிச்ச உடனே உன் மூஞ்சியைக் காட்டி பயமுறுத்தாதேன்னு. ரகுத்தாத்தா தான் என் பொண்டாட்டி முதல்ல என்னைத் தான் பார்க்கணும்னு இரண்டு கால்ல நின்னு பிடிவாதம் பிடிச்சாரு. பாவம் நம்ம ஓல்ட் மேன், ரொம்ப நேரம் வயலின் வாசிச்சிட்டே இருந்தாரா.. அதான் முன்னாடி நிறுத்திட்டேன்”



‘ஐசியுவில் நின்று கொண்டு இதெல்லாம் என்ன பேச்சு?’ என்று ஒரு மருத்துவராக சுப்ரஜாவுக்கு கோபம் வந்தது. விஐபிக்களுக்கான தனி ஐசியு அது. சீஃப் டாக்டரின் ஸ்பெஷல் பெர்மிஷனோடு சலுகைகளை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களை எதுவும் சொல்ல அவளுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் சீஃப் டாக்டரிடம் இது போன்ற விஷயங்களை அனுமதிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்ளும் உரிமை அவளுக்கு இருந்தது. ஆனால் அவரும் நீரஜைப் போலத் தான் நடந்து கொள்வார் என்பது அவளுக்குத் தெரியும்.



அதை அங்கே இருந்த சற்று நேரத்தில் தெரிந்து கொண்ட நீரஜ் தனது வாலைச் சுருட்டிக் கொண்டு நல்ல பையனாக இருக்க முயற்சி செய்தான்.. அவனால் முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது..



தனது வழக்கமான நேரத்தில் ஐசியுவில் நுழைந்த அந்த மருத்துவமனையின் சீஃப், டாக்டர். சிவானந்தன், ஜானகிக்கு நினைவு திரும்பியதை அறிந்து ஆச்சரியம் அடைந்தார்.



“ஹேய்! ராஜூ பேபி! வாட் எ மிராக்கிள்? நீ வைத்தியம் பார்த்தும் பேஷண்ட் கண்ணு முழிச்சிட்டாங்களா? ஒரு வேளை, இப்படி இருக்குமோ??” என்று அடுத்த வார்த்தையை அவர் தேடுவதற்குள், “டாடீடீடீடீ!!!” என்று பல்லைக் கடித்த சுப்ரஜா, அவரைப் பார்வையால் எரித்துவிட முயற்சி செய்தாள்.



‘டாடியா?’ என்று இருவரையும் பார்த்த நீரஜ், தனக்கொரு அழகான தங்கை இருப்பதைச் சொல்லாமல் விட்ட நண்பனை மனதுக்குள் நல்ல நல்ல (??) வார்த்தைகளால் வாழ்த்தினான்.



“ஜோக்ஸ் அப்பார்ட்! நீரஜ், இப்போ ஹேப்பியா? உங்க ஜானு டார்லிங் ரொம்ப நாள் தூங்காத தூக்கத்தை எல்லாம் ஒரே நாளில் தூங்கி முடிக்க ட்ரை பண்ணி இருக்காங்க. மத்தபடி ஷி இஸ் பர்ஃபக்ட்லி ஆல்ரைட்.”



அவர்கள் பேசிக்கொண்டு இருந்த வேளையில் நீரஜின் மொபைல் அழைத்தது.



“ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா” என்று ஒலித்த ரிங் டோனைக் கேட்டு ரகுவரன் பேரனை முறைக்க அவன், ”சும்மா சும்மா இப்படி ரொமாண்டிக் லுக் விடாதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். உன் அருமைப் புத்திரனும் என் தாய் ராஜராஜேஸ்வரியும் வந்தாச்சு. நான் போய் அவங்களைக் கூட்டிட்டு வரேன்” என்று மற்றவர்களிடம் ஒரு தலையசைப்புடன் கிளம்பி விட்டான்.



‘லைவ்லி கேரக்டர்!’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் சுப்ரஜா.



அனுபவசாலியான ரகுவரனின் பார்வை பேரனையும் அவளையும் கண்டுகொண்டு இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்கு போட்டது. அவரது போட்ட அதே மனக்கணக்கை பெண்ணைப் பெற்ற சிவானந்தனும் முன்னரே செய்து தான் மகளை ஜானகியைக் கவனிக்க அனுப்பி வைத்திருந்தார்.



கண்விழித்த ஜானகி தூக்கத்திற்கு செல்ல, மற்றவர்கள் வெளியே வந்து பேசிக்கொண்டிருந்தனர். இருபத்து நான்கு மணி நேர கண்காணிப்புக்குப் பிறகு, மறுநாள் இரவு ஜானகி நார்மல் ரூமிற்கு மாற்றப்பட்டார்.



அரவிந்தனைப் பார்த்ததும் ஜானகிக்கு தெம்பு வந்து விட்டது. “இளைச்சுப் போயிட்டியே அரவிந்தா! நம்ம சாப்பாடெல்லாம் அங்கே கிடைக்குதா இல்லையா? ஒரு மாசம் இங்கே இரு, என்ன வேணும்னு சொல்லு, நான் செஞ்சு தரேன்” என்று சமையல் ஐட்டங்களை அடுக்கினார்.



“திஸ் இஸ் டூ மச் ஜானு! என்னைப் பார்த்ததும் மயங்கி விழுந்துட்டு உன் பிள்ளையைப் பார்த்ததும் விருந்து சமைக்கிறேன்னு கிளம்பற.. உன் பேச்சு கா. அம்மா தாயே! ராஜராஜேஸ்வரி! உன் மாமியார் பண்ற அராஜகத்தை ஏன்னு கேட்க மாட்டியா?”



“டேய் என்னை அப்படி கூப்பிடாதேன்னு எத்தனை தடவை தான் சொல்றது? நீ சொல்லிச் சொல்லி என் ஒரிஜினல் பேரே எனக்கு மறந்து போயிடும் போல இருக்கு” நிரஞ்சனாவுக்கு அவளது கவலை.



“ஹை.. ஹை..‌பொய் சொல்லாத மம்மீ.. உன் ஒரிஜினல் பேரே ராஜராஜேஸ்வரி தான். எவ்வளவு அழகா, அம்சமா எங்க தாத்தா பாட்டி உனக்குப் பேர் வச்சிருக்காங்க. அதைப் போய் மாத்தியிருக்க” மகனும் விடுவதாக இல்லை. இது அடிக்கடி அவர்களுக்கு இடையே நடக்கும் அக்கப்போர் என்பதால் யாரும் கண்டுகொள்ளவில்லை. இத்தனை அக்கப்போரையும் மறக்காமல் சுப்ரஜா அந்த அறைக்குள் இருக்கும் போது நடத்திய நீரஜின் சாமர்த்தியம் யாருக்கு வரும்.



அடுத்த நான்கு நாட்கள் ஜானகி மருத்துவமனையில் இருந்த போது, அவர்களுக்கு ஜெட் லாக் இருக்கும் என்று சொல்லி விட்டு அவன் தான் பாட்டியுடன் தங்கினான்.



ஜானகி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பும் போது இருவரது மொபைல் எண்களும் அடுத்தவர் மொபைலில் குடியேறி இருந்தது.



அரவிந்தனுக்கு ரகுவரன் சில விவரங்களை சொல்லியிருக்க, சிவானந்தனின் விருப்பத்தையும் அறிந்து கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார்கள்.



மருத்துவமனையில் இருந்து வந்து பத்து நாட்கள் ஆகி இருந்தது. ஜானகியின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. எழுந்து நடமாட ஆரம்பித்து முயன்றவருக்குப் பேரன் தடை விதித்திருந்தான். அவரிடம் சிறு அசைவு தெரிந்தாலும், "என்ன வேணும் டார்லிங்?" என்று வந்து நின்றான். ஜானகிக்கு ஒரு பக்கம் பெருமிதமாக இருந்தாலும், இந்த கவனிப்பு எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கோ என்ற நினைப்பு மனதை அரித்தது. அது வார்த்தையாக வெளியே வராவிட்டாலும் அடுத்தது காட்டும் பளிங்காக அவரது முகம் காட்டிக் கொடுத்தது.



ஜானகி டிஸ்சார்ஜ் ஆன அன்று, ரகுவரனின் வீடு மகன்கள் மருமகள்கள் பேரன்கள் பேத்திகள் என்று நிறைந்திருந்தது. ரகுவரனின் செல்லப் புதல்வி மருத்துவமனையில் இருந்தே விடைபெற்றுக் கொண்டாள்.



"இந்த பைரவியைப் பார்த்தீங்களா? பக்கத்துல இருக்கான்னு தான் பேரு. அவளுக்கு ஏதாவது தேவை இருந்தால் தவிர, இத்தனை நாளும் இங்கே வந்ததே இல்லை. அது கூட பரவாயில்லை. இப்போ எல்லாரும் இருக்காங்களே.. கூடமாட ஒத்தாசையா இருக்கக் கூடாது? எல்லாரும் சேர்ந்து இருக்கலாம்னு நாம பேராசைப் படக் கூடாதுன்னு பல தடவை புரிய வச்சிருக்காங்க. ஆனாலும், இந்த மனசு கேட்க மாட்டேங்குதே!”



இடைவெளி இல்லாமல் புலம்பிய ஜானகியை வேதனையுடன் பார்த்தார் ரகுவரன். இதுவரை மகளைப் பற்றிய அவரது பார்வையே வேறு, யார் என்ன சொன்னாலும் மகளின் பக்கமே நிற்பார். அதற்காக‌ மகன்களின் மேல் பாசம் இல்லாதவர் என்று அர்த்தம் இல்லை. மகளா மற்றவர்களா என்று வரும் போது மகளது பக்கமே அவரது தராசு சாயும், எதிராளி யாராக இருந்தாலும் சரி. இதில் விதிவிலக்காக ஒருவர் உண்டெனில் அது ஜானகி மட்டுமே. மனைவி என்று வரும் போது ரகுவரனுக்கு மற்ற அனைவருமே இரண்டாம் பட்சம் தான்.



என் மனைவி என் உரிமை என்று யாரையும் மனைவியை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வார். “ஏன் மாமா இப்படி விவஸ்தையே இல்லாமல் நடந்துக்கிறீங்க? நாங்க லேடீஸ் சேர்ந்து எதையாவது பேசுவோம். நீங்க எதுக்கு அக்கா கூடவே சுத்துறீங்க?” என்று ஜானகியின் தங்கை நேரடியாகவே கேட்டிருக்கிறாள். அதையெல்லாம் ரகுவரன் காற்றோடு விட்டு விடுவார்.



சில வருடங்களாகவே மகளின் மறுபக்கத்தைக் கண்டிருந்த ரகுவரன், அவள் அடிக்கடி வராமல் இருப்பதே நல்லது என்று நினைக்க ஆரம்பித்து விட்டார். இருந்தாலும் பாசம் வைத்த மனது எதிர்பார்க்கிறது, என்ன செய்ய?



ரகுவரனுக்கு சதாபிஷேகமும் கொள்ளுப் பேரனின் கையால் கனகாபிஷேகமும் செய்ய சுந்தரமும் அரவிந்தனும் சேர்ந்தே முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக நீரஜ் பொறுப்பேற்றுக் கொண்டான். சிறியவர்கள் அனைவரும் கலந்து பேசி விழாவில் என்னென்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தார்கள். பைரவி இந்தப் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவளது மகன்கள் இருவரும் நீரஜுடன் இணைந்து ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.



சதாபிஷேக விழாவில் சந்திக்கலாம் என்று அனைவரும் கிளம்ப,

எல்லோருக்கும் முதலில் வந்த நீரஜிற்குக் கிளம்ப‌ மனமே இல்லை. ஜானகி மருத்துவமனையில் இருந்த இத்தனை நாட்களும் அவனது சிந்தனை யாவும் பெரியவர்களை மீண்டும் தனியே விட்டுச் செல்வதா என்பதிலேயே சுழன்று கொண்டிருந்தது. நடக்க இருக்கும் விழா வரைக்குமாவது அவர்களுடன் இருப்போம் என்று முடிவு செய்து விட்டுத் தனது விடுப்பை நீட்டிக்கக் கேட்டிருந்தான்.



இரண்டு மாதங்கள் கழித்துத் திரும்பி வந்து கொள்ளலாம் என்று அழைத்த பெற்றோரைச் சமாளித்து அனுப்பி வைத்தான். இதற்கிடையில் ஜானகி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் அவன் பார்த்த முகம் அவனை தொந்தரவு செய்து கொண்டிருந்தது.



அவனது மொத்த குடும்பமும் சேர்ந்து அவனுக்குத் தெரியாமல் அவனது விருப்பத்தை நிறைவேற்றக் காத்திருப்பது தெரியாமல், யாரிடம் எப்படி பேசுவது என்று யோசனை செய்து கொண்டிருந்தான்.



அனைவரும் ஆசையுடன் எதிர்பார்த்த நாளும் வந்தது. அழகான மோதிரத்துடன் லண்டன் ஸ்டைலில் ப்ரபோஸ் செய்யக் காத்திருந்த நீரஜுக்குப் பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது.



—----



அந்தப் பெரிய கல்யாண மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது. முதியோர் அனைவரும் மேடையில் இருக்க, இளையவர் பட்டாளம் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக அலைந்து ஆளுக்கொரு வேலையைச் செய்து கொண்டிருந்தனர். வரவேற்பில் ஆரம்பித்து சமையல் வரை அங்கே எல்லாமே பாரம்பரிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



மண்டப அலங்காரம் கூட ஐம்பது அறுபது ஆண்டுகள் பழமையான முறையில் இருந்தது.



அன்றைய விழா நாயகர்களான ஜானகியும் ரகுவரனும் தங்களது வயதையும் மீறிய உற்சாகத்துடன் புரோகிதர் சொல்வதைச் செய்து கொண்டிருந்தனர். நடந்து கொண்டிருந்த நிகழ்வு அவர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்திருந்தது.



குறித்த முகூர்த்தத்தில் ஜானகியின் கழுத்தில் மூன்றாவது முறையாக மாங்கல்யத்தை அணிவித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார் ரகுவரன். அதன் பிறகு, சுந்தரத்தின் பேரன், ரகுவரனின் கொள்ளுப் பேரனின் கையால் கனகாபிஷேகமும் நடந்தது. இருகரம் கூப்பி அமர்ந்திருந்த ரகுவரனும் ஜானகியும் தங்கள் திருமண காலத்தை நினைத்துக் கொண்டார்கள். எத்தனை தடைகள், எத்தனை மேடு பள்ளங்கள்.. அத்தனையும் தாண்டி இதோ நான்காம் தலைமுறையைச் சீராட்டும் பாக்கியமும் கிடைத்து விட்டது.



எங்கெங்கு காணினும் ஆனந்த வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பைரவி போன்ற மகளைப் பெற்றவர்கள் நூறு சதவீதம் மகிழ்ச்சியை என்றுமே எதிர்பார்க்கக் கூடாது. ஆனாலும் அவளால் இன்று ஒரு பத்து சதவீதத்தை மட்டுமே மாற்ற முடிந்தது.



பத்திரிகையில் என் பெயர் பெரிதாக இல்லை, என் கணவருக்கு உரிய மரியாதை தரவில்லை, கனகாபிஷேகம் செய்த தங்கக் காசுகளை எனக்குத் தரவில்லை, தந்தையின் சதாபிஷேகத்திற்கு ஒற்றை மகளான எனக்கு நிறைவாக சீர் செய்யவில்லை.. இப்படி பல இல்லைகள் சொல்லி தனது இருப்பை அவ்வப்போது காட்டினாள். அதைக் கண்டு கொள்ளத்தான் அங்கே ஆளில்லை.



இத்தனைக்கும் மேலாக, இன்று ஒரு விஷயத்தை உறுதி செய்துவிட வேண்டும் என்று அவள் நினைத்திருக்க, அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போன்ற நிகழ்ச்சி ஒன்று அங்கே நடக்க இருந்தது.



முறையான அழைப்பின் பேரில் சிவானந்தனும் விழாவில் கலந்து கொண்டார். அவரது நெருங்கிய சுற்றத்தினர் என்று சுமார் இருபது பேர் வரை வந்திருந்தனர்.



நீரஜின் கண்களுக்கு மற்றவர்கள் யாரும் தென்படவில்லை. அவன் தேடிய ஆளை அங்கே காணவில்லை. அவனும் சளைக்காமல் கண்களைச் சுழற்ற, அவன் தேடிய பாவை தாத்தா பாட்டியின் அருகே மேடையில் நின்றிருந்தாள். கிடைத்தது வாய்ப்பு என்று இவனும் அருகில் சென்று நின்று கொண்டான். சுற்றி இருந்தவர்களின் நமட்டு சிரிப்பை அவன் உணரவே இல்லை.



முகூர்த்தம் முடிந்து அனைவரும் ஆசிர்வாதம் வாங்கும் வேளையில் இவன் சுப்ரஜாவின் கைப்பிடித்து நிறுத்தினான். அவளைத் தன் முன்னே நிறுத்தி, நான் லண்டன் ரிட்டர்னாக்கும் என்று மேற்கத்திய பாணியில் அமர்ந்து, அவளிடம் மோதிரத்தை நீட்டி, “will you marry me?” என்று அவன் கேட்ட நொடியில் அவர்களின் மேல் பூமழை பொழிந்தது.



நடப்பது புரியாமல் கோபத்தில் எதையோ சொல்ல வந்தவன், அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்வதையும் அங்கே இருந்த வீடியோ கேமரா எல்லாம் இவர்களை ஃபோகஸ் செய்ததையும் கண்டு திகைத்து நின்றான். அப்போது தான் சுப்ரஜா பட்டுப் புடவையில் கூடுதல் அலங்காரத்தில் இருந்ததை உணர்ந்தான். ஒரு வழியாக அவனுக்கு விஷயம் புரிந்தது. இப்போது தைரியமாக மோதிரத்தை கையில் எடுத்தவன் சுப்ரஜாவை நோக்கிக் கையை நீட்டினான்.‌ அவளும் சின்ன சிரிப்புடன் கையை நீட்டினாள்.



ஜோடியாக காலில் விழுந்தான், “போதும் டா.. ரொம்ப அசடு வழியாதே” என்று கேலி செய்த ரகுவரன், பேரனை ஆரத்தழுவி தனது மகிழ்ச்சி வெளிப்படுத்தினார். அருகில் வந்த சிவானந்தன், “சர்ப்ரைஸ் எப்படி மாப்பிள்ளை?” என்று கேட்டு ஜோதியில் ஐக்கியமானார்.



பணக்கார சம்பந்தத்தைத் தேடிக் கொண்டனர் என்று வெளிநடப்பு செய்த பைரவியை அங்கே கண்டுகொள்வாரில்லை.



அன்றைய மாலையில் பழைய கால பாண்ட் வாத்தியத்தில் ஆரம்பித்து இன்றைய மாடர்ன் டிஜே வரை அரங்கேற, அனைத்திலும் குறிப்பாக ஒரு பாடல் முக்கியமான இடம் பெற்றிருந்தது. ஃபைனல் டச்சாக மேடையேறிய நீரஜ் சுப்ரஜாவைப் பார்த்துப் பாடிய அந்தப் பாடலைக் கேட்ட இளைஞர் பட்டாளம் சந்தோஷக் கூச்சலுடன் ஆட, முதிய ஜோடிகள் எல்லாம் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொள்ள, ஜானகியும் ரகுவரனும் இணைந்த கைகளுடன் தங்களது வாரிசுகளை வாஞ்சையுடன் பார்த்திருந்தனர்.



“எண்பதிலும் ஆசை வரும்… ஆசையுடன் பாசம் வரும்.. இதில் அந்தரங்கம் கிடையாதம்மா.. நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா…”
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -இறுதி அத்தியாயம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom