• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தொட்டுத் தொடரும் - 5

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
173
தொட்டுத் தொடரும்-5
விழா நாளும் வந்தது. அபிமன்யு ராகவி சரண் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். எப்போதும் சரணும் ராகவியும் இந்த மாதிரி ஆட்டம் பாட்டம் எதிலும் கலந்து கொள்ளாமல் அபிமன்யுவை உற்சாகப்படுத்தும் வேலையை மட்டுமே செய்வார்கள். இப்போதும் அதையே செய்ய முடிவெடுத்து முன்வரிசையில் அமர்ந்து இருந்தார்கள். அவர்களின் அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீவத்ஸனோ மிகுந்த பதட்டமாக அமர்ந்திருந்தான். காரணம் அவர்களது தாயும் இந்த விழாவிற்கு வந்திருந்தது தான். இன்னும் சொல்லப்போனால் தாய்க்கு பயந்து தான் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தான். கௌசல்யாவைப் பொருத்தவரை முதல் வரிசையில் அமர்பவர் தான் முதல் மதிப்பெண் வாங்க முடியும் என்ற உயரிய(!) சிந்தனை உடையவர்.



விழாவிற்கான அழைப்பு அனைத்து பெற்றோருக்கும் சென்று இருந்தது. ராதாவும் கிருஷ்ணனும் எப்போதும் வருபவர்கள். அபிமன்யுவின் பெற்றோர் என்ற பெருமையை அனுபவிக்கும் தருணங்களை அவர்கள் இழந்ததே இல்லை. சரணின் பெற்றோர் பணியின் காரணமாக எப்போதுமே வரமுடிந்ததில்லை. அதனைப் பற்றி அவன் கவலைப் பட்டதும் இல்லை. தாய் தந்தையின் பொறுப்புகளை உணர்ந்தவன். ராதாவும் கிருஷ்ணனும் வந்தாலே சந்தோஷமாகி விடுவான்.



ஆண்டு விழாவில், ஸ்ரீநிதி வரவேற்பு நடனம் ஆட வேண்டும் என்று எல்லோரும் ஏகமனதாக முடிவு செய்திருந்னர். அதுபோக ஒரு நாடகத்திலும் அவள் கலந்து கொள்வதாக இருந்தாள். அபிமன்யு அந்த நாடகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தான். நாடகம் ஆண் பெண் என்று இரு பாலாரும் கலந்து கொள்ளும் விதமாக இருந்தாலும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்றார் போல் அமைக்கப்பட்டு இருந்தது. வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் அபிமன்யு கலந்து கொள்ளவில்லை. இன்னும் ஒரு வருடத்தில் பள்ளியை விட்டு சென்று விடுவோம் என்பதால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஒதுங்கிக் கொண்டான்.



ஸ்ரீநிதி நடனத்தைப் பற்றி மட்டுமே தாயிடம் கூறியிருந்தாள் நாடகத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் அவள் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்று எண்ணியதால், வந்தால் பார்த்துக் கொள்ளட்டும் என்று இருந்தாள். ஆனால், அவள் தந்தையிடம் மறக்காமல் விவரமாகக் கூறியிருந்தாள். இது போன்ற விஷயங்களை எப்போதுமே ஆதரிப்பவர் என்பதால் தந்தை இதற்கு மறுப்பு சொல்லவில்லை.



பிள்ளைகள் இருவருமே தாயின் அருகில் இருந்தாலும் மனம் விட்டு பேசுவது என்பது தந்தையிடம் தான். கௌசல்யா எதையுமே நல்லவிதமாக எடுத்துக்கொள்ளாமல் பேசுவதால் இவர்கள் எதையுமே தாயிடம் கூற மாட்டார்கள். ஸ்ரீநிதி எப்போதுமே தன் மனதுக்கு சரி என்று பட்டதை சட்டென்று சொல்லிவிடுவாள். அதனாலேயே கௌசல்யாவுக்கு அவளுக்கும் எப்போதும் ஒரு உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டே இருக்கும். அதுவே வீட்டை உயிர்ப்புடன் வைத்திருந்த்தோ?



"சின்ன பொண்ணா லட்சணமா இருக்கியா பாரு? எப்பப் பாரு எதிர்த்து பேசிக்கிட்டே இரு. உனக்கு இருக்கிற வாய்க்கு யார் கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்க போறியோ" என்று எப்போதும் தாயின் அர்ச்சனையை வாங்கிக் கொள்வாள்.



அப்போதும் சும்மா இருக்காமல் "பேச வேண்டிய இடத்துல பேசணும்மா. இல்லேன்னா தான் தப்பு" என்று பதிலடி கொடுப்பாள். கூடவே அண்ணனிடம் "நீ எல்லாம் இப்படி பேசாம இருந்தா எப்படி தான் டாக்டராக போறியோ? வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும்னு கேட்டு இருக்கியா இல்லையா. நீ எதுக்கு எடுத்தாலும் ஊமை மாதிரி இருக்காதண்ணா ஏதாவது பேசு" என்று பெரிய மனுஷியாக அறிவுரை கூறுவாள்.



அவளுக்கு அண்ணன் அம்மாவிடம் எப்போது பார்த்தாலும் திட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறான் என்று ரொம்ப வருத்தமாக இருந்தது. தாய்க்கு பதில் பேசாவிட்டாலும் ஸ்ரீவத்ஸன் அந்த நேரங்களில் ரொம்பவே தளர்ந்து போவான். அவனது முகம் அதை அப்படியே காட்டிக் கொடுக்கும். அதை மாற்றும் முயற்சியாக அவ்வப்போது ஏதாவது செய்து கொண்டே இருப்பாள் அவன் தங்கை.



ஆனால், ஸ்ரீவத்சன் தாயின் போக்கு தெரிந்து எப்போதோ தனக்குள் ஒடுங்கிவிட்டான். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. "என் கடன் படிப்பது ஒன்றே" என்று இருக்க பழகிக் கொண்டான். தாய் பேசுவதை சில நேரங்களில் அவனால் தாங்க முடியாமல் போய்விடும். எப்பாடு பட்டாவது அவன் டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் அவனது தாயின் கனவு. அதுவும் இதயநோய் வல்லுநர் ஆக வேண்டும்.



அவனது மாமா, அதாவது கௌசல்யாவின் தம்பி, சென்னையில் பெயர் சொல்லும் படியான இதய நோய் வல்லுநராக இருந்தது தான் காரணம். அவரது பையனையும் பெண்ணையும் கூட மருத்துவம் படிக்க தயார் செய்து கொண்டு இருந்தார். சென்னையில் பெயர் பெற்ற பயிற்சி வகுப்பு ஒன்றில் அந்தப் பிள்ளைகள் பயின்று வந்தனர். இப்போது தான் அவர்கள் ஏழாம் வகுப்பிலும், ஒன்பதாம் வகுப்பிலும் படிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



அந்த வகுப்பில் இவனையும் சேர்க்க வேண்டும் என்று கௌசல்யா நினைத்தார். ஆனால், பள்ளியிலேயே பயிற்சி வகுப்புகள் கட்டாயமாக்கப் பட்டு இருந்ததுடன், பொதுத் தேர்வு முடியும் வரை அவர்கள் வேறு எங்கும் சேரக்கூடாது என்ற விதியும் இருந்தது. அதனால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தார். கவனம் வேறு எதிலும் சென்றால் மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற அச்சத்திலேயே எப்பொழுதுமே படிப்பு படிப்பு என்று இருந்தான் ஸ்ரீவத்ஸன். இந்த ஆண்டு விழாவில் இவ்வளவு கொண்டாட்டங்கள் தேவையா என்றே அவனுக்குத் தோன்றியது.



விழாவின் ஆரம்பத்தில் முக்கிய விருந்தினர் அனைவரும் பேசி முடித்தபின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. படிப்பு பாட்டு நடனம் என்று பல்வேறு பிரிவிலும் முதலிடம் என்று பரிசு பெற்ற அபிமன்யுவை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனான்.



ஒருவகையில் இந்த விழாவுக்கு தாய் வந்தது நல்லதே என்று நினைத்தான். ஆட்டம் பாட்டம் என்று இருப்பவர்கள் படிப்பிலும் முதலிடம் வரலாம் என்று அபிமன்யுவை உதாரணமாக தாயிடம் கூறலாம். இதனால் ஸ்ரீநிதி அவற்றில் கலந்து கொள்வதில் தடையேதும் இருக்காது என்று நம்பினான். ஆனால், கௌசல்யா பெண்ணின் கலை ஆர்வத்தைப் பாராட்டியதில்லையே தவிர, அதற்கு எதிர்ப்போ மறுப்போ எப்போதும் தெரிவித்ததில்லை என்பது அவனுக்கு ஞாபகம் வரவே இல்லை.



கௌசல்யாவும் மகளது திறமைகளை மற்றவர் புகழ்வது கேட்டு பெருமிதம் அடைந்தார். ஆனால் எந்த விதத்திலும் அதனை பிள்ளைகள் அறிய விடவில்லை. அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ராதாவும் கிருஷ்ணனும் ஸ்ரீநிதியின் திறமைகளை பாராட்டிப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அபிமன்யுவின் மூலம் அறிந்தவர்கள் அவளைப் பார்க்க ஆவலாக இருந்தனர்.



கௌசல்யாவிற்கு, அவர்கள் யாரென்று தெரியா விட்டாலும் "அபி சொன்னது ரொம்பவே சரிங்க. இந்த பொண்ணுக்குள்ள எத்தனை வித்தையை ஒளிச்சு வச்சிருக்கு. கண்டிப்பா அவளைப் பார்த்து பேசிட்டு தான் வீட்டுக்கு போகணும்" என்ற ராதாவின் பேச்சு உவப்பானதாக இல்லை. ஸ்ரீநிதியும் தாயிடம் அபிமன்யுவை அறிமுகப் படுத்த நினைத்தாள்.



தாயின் வருகையை அறிந்ததுமே "அம்மா, ஃபங்ஷன் முடிஞ்ச உடனே போயிடாதீங்க. நான் என் புது ஃபரண்டுக்கு உங்கள இன்ட்ரோ பண்ணனும்" என்று சொல்லி இருந்தாள். இரண்டையும் இணைத்துப் பார்த்தவர், விழா முடியும் நேரம் யாரிடமும் பேச விடாமல் பிள்ளைகளை அழைத்துச் சென்று விட்டார். அவரைப் பொறுத்தவரை ஆணோ, பெண்ணோ பள்ளி வயதில் நட்பு என்பது நல்லதற்கல்ல. பிள்ளைகளை தவறான பாதையில் திருப்பி விடும் என்று உறுதியாக இருப்பவர். அதனாலேயே அந்த அபி ஆணா பெண்ணா என்பதைக் கூட அறிய முற்படவில்லை



ஆனால் ஸ்ரீவத்ஸன், சரணும் ராகவியும் போட்டி மனப்பான்மை இன்றி அபிமன்யுவை உற்சாகப் படுத்தியதையும் கண்டு வியந்தான். இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியின் மூலம் அவர்களது நட்பைப் பற்றியும் தெரிந்து கொண்டான். தனது தயக்கத்தை விடுத்து அவர்களுடன் இயல்பாகப் பழக தொடங்கினான்.



இவர்களது நட்பு வட்டத்தில் ஸ்ரீநிதியும் இணைந்து கொண்டாள். அந்த ஐவர் குழுவில் இளையவளாக இருந்தாலும் அவள் தான் அனைவரையும் கலகலப்பாக வைத்து இருந்தாள். சரண் சற்று அமைதியானவன் என்றாலும் பேச வேண்டிய நேரத்தில் கலகலப்பாக பேசுவான். இரட்டையர்கள் இருவரில் அபிமன்யு வாய் வலிக்கும் வரை பேசுவான். ராகவி இவர்களுக்கு பதில் கொடுக்க மட்டுமே பேசுவாள். ஆனால் அந்த நீளமான பதிலில், கேள்வி கேட்டவரை ஏன் கேட்டோம் என்று யோசிக்க வைத்து விடுவாள்.



நாளாக நாளாக இவர்களது நட்பு நல்ல புரிதலுடன் வலுவாக வளர்ந்தது. அபிமன்யு அந்த ஆண்டு விழாவின் போது தான் ஸ்ரீவத்ஸனிடம் முதன் முதலாகப் பேசுகிறான். ஐந்து நிமிடப் பேச்சிலேயே மனதளவில் அவன் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தோன்றியது.



ஸ்ரீவத்ஸனை தனது அன்னையிடம் அழைத்துச் சென்று பேச வைக்க வேண்டும் என்று யோசித்தான். எப்படி செயல்படுத்துவது என்று புரியாததால் தானே பேச்சு கொடுத்து, ஸ்ரீவத்ஸனின் தயக்கத்தை போக்கி அவனது கூட்டிலிருந்து வெளியே வருவதற்கான முயற்சிகளைச் செய்ய வைத்தான். இதனால் ஸ்ரீவத்ஸன் பள்ளி அளவில் அனைவரிடமும் சகஜமாக பேசத் தொடங்கினான்.



தாயிடம் இவர்களின் நட்புக்கான எதிரொலி எப்படி இருக்கும் என்று இவர்களால் ஊகிக்க முடியாத காரணத்தால் இவர்களின் நட்பைப் பற்றி கௌசல்யாவிடம் தெரிவிக்கவே இல்லை. அவராகவே தெரிந்து கொள்ளவும் ஒரு நாள் வந்தது.


நாட்கள் விரைந்தோடியதில், அந்த ஐவர் குழு அடுத்த வகுப்பில் காலடி எடுத்து வைத்தது. ஸ்ரீநிதி பத்தாம் வகுப்பிலும் மற்ற நால்வரும் பன்னிரண்டாம் வகுப்பிலும் நுழைந்தனர். அவர்களது நட்பு பள்ளி அளவிலேயே இருந்தது. பாடங்கள், விளையாட்டு, சினிமா என்று மற்ற விஷயங்களையெல்லாம் பேசும் ஸ்ரீவத்ஸன், வீட்டு விஷயங்கள் பற்றிய பேச்சைத் தவிர்த்து விடுவான். அவன் தங்கையையும் பேச விடமாட்டான். நண்பர்கள் இதைப் புரிந்து கொண்டு பேச்சை மாற்றினாலும், மனதோரம் என் குடும்பம் மட்டும் ஏன் இப்படி என்ற எண்ணமும் வராமல் இல்லை.

அபிமன்யு ராகவி மற்றும் சரண் ஆகியோர் அவ்வப்போது அடுத்தவர் வீட்டுக்குச் சென்று வருவது வழக்கம். அதுவும் பெற்றோர் வீட்டில் இருக்கும் நாட்களில் மட்டுமே செல்வார்கள். இரு பெற்றோருமே அவர்களின் நட்பைப் புரிந்தவர்கள். பதின் வயதில் இருந்த அவர்களுக்கு தேவையான அறிவுரைகளையும் அவ்வப்போது கூறுவார்கள். இப்போது இந்த அண்ணன் தங்கையும் நட்பு வட்டத்தில் இணைந்ததால் அவர்களையும் வீட்டுக்கு அழைக்க வேண்டும் என்று ஆசைப் பட்டனர்.



அவர்களுக்குள் பேசிய போது அபிமன்யு "இது வரைக்கும் அவங்க ஃபேமிலி பத்தி நமக்கு எதுவும் தெரியாது. அவங்க பேசினதுல ஆன்ட்டி மட்டுமே இங்க இருக்காங்க, அங்கிள் வேற எங்கேயோ இருக்காங்கன்னு மட்டும் தான் நமக்கு தெரியும். அவங்களுக்கு அதைப் பற்றி பேசறதுக்கே பிடிக்கலைன்னு நினைக்கிறேன். நம்ம வீட்டுக்கு வந்தா நல்லா தான் ஃபீல் பண்ணுவாங்க. ஆனா நம்மள அவங்க வீட்டுக்கு கூப்பிட முடியலையேன்னு சங்கடப்படலாம். இல்லை நம்ம பேரண்ட்ஸ் இப்படி இல்லையேன்னு வருத்தப் படலாம். நல்லா யோசிச்சு செய்யலாம்" என்று தனது நீண்ட ஆலோசனையைப் பட்டியல் இட்டான்.



"டேய், நீ என்ஜினியர் ஆகிறதுக்குப் பதிலா இப்பவே ஆன்ட்டிக்கு அஸிஸ்டென்டா சேர்ந்திடு. ஒரு வேளை இன்ஜினியரிங் முடிச்சிட்டு வெட்டியா இருந்தா கைவசம் வேற தொழில் வச்சிருக்க. நல்ல எதிர்காலம் இருக்கு உனக்கு" என்று நக்கலாகக் கூறிய சரண் "எதுன்னாலும் நம்மளா முடிவு எடுக்கக் கூடாதுடா. அவங்க கிட்ட பேசிப் பார்ப்போம். அவங்களுக்கு கண்டிப்பா ஒரு சேன்ஞ் வேணும்" என்றான். இவர்களின் பெற்றோரிடம் பேசினாலே ஒரு மாற்றம் கிடைக்கும் என்று திடமாக நம்பியதால் ஸ்ரீநிதியையும் ஸ்ரீவத்ஸனையும் வீட்டுக்கு அழைக்க முடிவு செய்தனர்.



அடுத்து வந்த ஒரு ஞாயிறன்று சரணின் பெற்றோர் வீட்டில் இருப்பார்கள் என்பதால் சரண் தன் வீட்டுக்கு அழைத்தான். உடனே "வாங்க வாங்க ஸ்ரீ ஸ்கொயர், ஆன்ட்டியும் அங்கிளும் ரொம்ப ஜாலியா இருப்பாங்க. அதோட ஆன்ட்டியோட சாப்பாடு கண்டிப்பா நீங்க டேஸ்ட் பண்ணியே ஆகணும்" என்று உற்சாகமானாள் ராகவி.



"அதான பார்த்தேன், சாப்பாட்டு ராமி கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும். பூசணிக்கா! பூசணிக்கா! இதுக்குத் தான் எங்க வீட்டுக்கு வரியா? இரு இரு எங்க அம்மா கிட்ட சொல்லி கத்தரிக்காய் சாம்பாரும், பாவக்காயும் செஞ்சு வைக்க சொல்றேன்" என்று அவளுக்குப் பிடிக்காத பதார்த்தங்களைப் பட்டியல் இட்டான் சரண்.



"டேய் கொன்னுடுவேன் உன்ன. ஆன்ட்டி இந்த வாரம் எனக்கு சேப்பங்கிழங்கு ஃப்ரையும் அதிரசமும் செய்து வைக்கிறேன்னு சொல்லி இருக்காங்க. எனக்கே எனக்கு தான். உனக்கு பங்கு கிடையவே கிடையாது" என்று செல்லச் சண்டையிட்டாள் ராகவி.



கூடவே "டேய் கூட பிறந்தவனே! இவன்கிட்ட சொல்லுடா நமக்கு சோறு தானே முக்கியம். உணவே மருந்துன்னு டாக்டராக போறவனுக்குத் தெரியல பாரேன் நீயாவது சொல்லு" என்று அபிமன்யுவையும் பேச்சில் இழுத்தாள்.



இவர்களின் கலகலப்பான பேச்சை ஏக்கத்துடன் பார்த்த அண்ணன் தங்கை இருவருமே என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க, அதில் அவர்களைப் புரிந்து கொண்டவனாக "ஆமா இந்த உலகத்திலேயே நீ ஒருத்தி தான் புத்திசாலி மத்தவங்க எல்லாம் லூசு. என்னடா சரண், நீ கூட புரியாமல் பேசிட்டு இருக்க. நம்ம வீட்டுக்கு வரணும்னா முதல்ல ஆன்ட்டி கிட்ட பர்மிஷன் கேட்க வேண்டாமா? அவங்க கிட்ட சொல்லாமல் எப்படி வரமுடியும்?" என்று எடுத்துக் கொடுத்தான் அபிமன்யு.



"இது பாயிண்டு, பாத்தியா என் கூடவே பிறந்ததாலதான் நீ இவ்வளவு புத்திசாலியாக இருக்க. நான் கூட யோசிச்சு இருக்கேன் டா, அந்த ஒரு மார்க் எக்ஸ்ட்ரா ஏன் வாங்க முடியலைன்னு. இதுதான் காரணம் போல. ஆனாலும் நம்ம அம்மா இப்படி ஓரவஞ்சனையா இருந்திருக்க வேண்டாம். ரெண்டு பேரையும் ஒண்ணாவே வயித்துக்குள்ள வெச்சிருந்தாங்களே. எல்லாத்தையும் ஈக்வலா ஷேர் பண்ணனும்னு தோணிச்சா பாரு. உனக்கு மட்டும் அந்த ஆறாவது அறிவ ஜாஸ்தியா கொடுத்திருக்காங்க" என்று அலுத்துக் கொண்டாள் ராகவி.



செல்லமாக அவளது தலையில் தட்டிய அபிமன்யு ஸ்ரீநிதியைப் பார்த்து "என்ன ஸ்ரீ? எனக்குத் தெரிஞ்சு நீங்க இரண்டு பேரும் யார் வீட்டுக்கும் போயிருக்க மாட்டீங்க. எனக்கு என்ன தோணுதுன்னா நீங்க இன்னும் எங்களைப் பத்தி ஆன்ட்டி கிட்ட சொல்லியே இருக்க மாட்டீங்க." என்று சொன்னதைக் கேட்டு அண்ணனும் தங்கையும் திருதிருவென முழித்தனர்.



"என்னோட கெஸ் கரெக்டுனு உங்க முழியே சொல்லுதே. இப்போ என்ன பண்றதா பிளான் பண்ணி இருக்கீங்க?" என்று கேட்டான்.



"அது ரொம்ப ஈஸி அபி, ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லிட்டு வரவேண்டியது தான்" என்ற ஸ்ரீநிதியின் குரலுக்கு



"அடிப்பாவி பொய் சொல்லப் போறியா? அறிவுக்களஞ்சியமே! உங்க அம்மா சன்டே என்ன ஸ்பெஷல் கிளாஸ்னு கேட்க மாட்டாங்களா" என்று உடனே எதிர்ப்பு தெரிவித்தான் அபிமன்யு.



"வேற வழி, உண்மையைச் சொன்னா என்ன ஆகும் தெரியுமா? அப்படித்தான் ஆனுவல் டே டிராமால..." என்று ஆரம்பித்தவளை "நிதி, சும்மா அதையே நினைச்சுட்டு இருக்காதன்னு எத்தனை தடவை சொல்றது. இப்போ எதுக்கு அதைப் பத்திப் பேசற?" என்று வாயைத் திறந்தான் அவளது அண்ணன்.



"உனக்கு என்னடா அண்ணா, நம்ம ஃப்ரண்ட்ஸ் கிட்ட தானே சொல்றேன். அப்படி என்ன சினிமாவிலயா நடிச்சேன். ஸ்கூல் டிராமா, அதுவும் புராணக் கதை, ஸ்கூல்ல சொல்லி தந்ததத் தானே நடிச்சேன். பசங்களோட நடிச்சா என்ன தப்பு? வலிச்சது எனக்கு தானே. எப்படி அடிச்சாங்க தெரியுமா?" என்று அழ ஆரம்பித்து விட்டாள்.



"அடிச்சாங்களா!" என்று மூவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, "அதுக்கு தான் அப்பா கிட்ட சொல்லலாம்னு இருக்கோம்ல டா, ஃபோன்ல இதைப்பத்தி பேச முடியாது. அப்பா நேரில வரும் போது சொல்லுவோம்" என்ற அண்ணனின் சமாதானம் அவள் காதுகளில் விழுந்தது என்பதை அழுகையினூடே "நாளாச்சுன்னா நான் மறந்து போயிடுவேனே" என்ற பதில் குரல் தெரிவித்தது. இதனைக் கேட்ட ஸ்ரீவத்ஸன், பரிதாபமாகப் பார்க்க மற்ற மூவரும் வயிறு வலிக்கச் சிரித்தனர்.



சிரிப்பின் ஊடே "ஓ உனக்கு மறந்து போயிடும்னு தான் கவலையா, கவலையே படாத! நான் ஞாபகப்படுத்தறேன்" என்ற அபிமன்யு "ஆமா, உங்க அண்ணன மட்டும் அண்ணான்னு கூப்பிடற, டேய், அண்ணான்ற மரியாதை எல்லாம் எங்களுக்கு வேண்டாம். ஆனாலும் எங்களை மட்டும் ஏன் பேர் சொல்லிக் கூப்பிடறன்னு தெரியணும்" என்று தன் அதிமுக்கியமான சந்தேகத்தை கேட்டான். இதைக் கேட்ட அண்ணன் தங்கை இருவருமே கைகள் கோர்த்து உணர்ச்சி வசப்பட்ட நிலைக்கு சென்றார்கள்.



அதைக் கண்ட ராகவி "ஓகே ஓகே டாபிக் சேஞ்ச் ஆகி எங்கேயோ போயிட்டு இருக்கு. ஒரிஜினல் டிஸ்கஷனுக்கு வாங்க. அபி, நாட்டாமை, வழக்கம் போல நீயே தீர்ப்புச் சொல்லிடு" என்றாள்.



தீவிர யோசனைக்குப் பிறகு "இப்போதைக்கு இந்த ஐடியாவை மறந்துடுங்க. அங்கிள் வரும் போது யோசிக்கலாம். இவங்க சொல்றத பார்த்தா ஆன்ட்டி கண்டிப்பா நோ தான் சொல்வாங்கன்னு தெரியுது. எதுக்கு அவங்க டென்ஷனை ஏத்தணும். நாம ஏதாவது செய்து பிரச்சினை ஆகிடக்கூடாது" என்று அந்தப் பேச்சிற்கு அப்போதைக்கு முற்றுப் புள்ளி வைத்தான் அபிமன்யு. நேரில் பார்க்கவில்லையே தவிர, அலைபேசி மூலம் இரு பெற்றோருடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர்.



அபிமன்யு, ராகவி, சரண், ஸ்ரீவத்ஸன் ஆகிய நால்வரும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து அடுத்து வரப் போகும் தகுதித் தேர்வுகளுக்காகத் தயாராகிக் கொண்டு இருந்தனர். அபிமன்யு ஏற்கனவே எழுதிய ஐஐடி நுழைவுத் தேர்வில் போதிய மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவனது குறிக்கோளான சென்னை ஐஐடியில் "மெக்கானிக்கல் இன்ஜினியரிங்" என்ற இலக்கை அடைய இன்னும் மதிப்பெண் தேவை என்று படித்துக் கொண்டு இருந்தான்.



மற்ற மூவரும் பல்வேறு மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாரானார்கள். தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் இல்லாவிட்டாலும், இந்திய அளவில் பேர் பெற்ற கல்லூரிகள் பலவற்றில் தேர்வுகள் நடத்தவே செய்தார்கள். அதனால், மூவரும் சேர்ந்து ஒரு அட்டவணை போட்டு படிக்க ஆயத்தமானார்கள். ஏற்கனவே அவர்களது பள்ளியில் அதற்கான பயிற்சி கொடுத்து இருந்ததால் புதியதாக வகுப்புகளுக்கு செல்லாமல் இவர்களே "க்ருப் ஸ்டடி" செய்ய முடிவு எடுத்து அதனைப் பற்றி அவரவர் பெற்றோரிடம் சொன்ன போது, ஸ்ரீவத்ஸன் தன் தாயின் இன்னொரு முகத்தைப் பார்த்தான்.
 

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் - 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
202
கௌசல்யா பையன விட்டுட்டு தான் வேற வேலை பார்ப்பா🥺🥺🥺
 
Top Bottom