• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தொட்டுத் தொடரும் -4

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
173
அத்தியாயம்- 4

துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்

பின்பு உளது; "இடை, மன்னும் பிரிவு உளது" என, உன்னேல்;

முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா

அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்

(* நட்பின் சிறப்பு)



கனவினிலே சஞ்சரிப்பது போல் அமர்ந்து இருந்த ராகவியை அவளது கைபேசியில் வந்த அழைப்பு நடப்புக்குக் கொண்டு வந்தது. அழைத்தது சரண் என்று அறிந்த ராதா, "நீ மாப்பிள்ளை கூட பேசிட்டு இரு. மணி பதினொன்று ஆச்சு. நான் போய் பசங்களுக்கும் அப்பாவுக்கும் ஜுஸ் கொடுத்துட்டு, கண்ணம்மா கிட்ட என்ன சமையல் செய்யணும்னு சொல்லிட்டு வந்துடறேன்" என்று எழுந்து சென்றார்.



"உங்களை எல்லாம் திருத்தவே முடியாது மா" என்று சொல்லிக் கொண்டே கணவனது அழைப்பை ஏற்றாள் ராகவி. "என்னாச்சு கவி? பசங்களை அத்தை கிட்ட விட்டுட்டு வரேன்னு சொன்ன. இப்போ ஆஃப் வேணும், நான் வரலன்னு மெசேஜ் அனுப்பி இருக்க என்ன விஷயம்" என்று கேட்டான்.



"ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டீங்க சார்" என்றவள் "பசங்க காலைல சாப்பிடும் போது, எங்கேயாவது போகலாமான்னு கேட்டாங்க. பாவம் பசங்க, ரொம்ப நாளாவே நாம அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணவே இல்லை. மூணு வாரமா சன்டே கூட பிஸி. அதனால் எனக்குமே பசங்கள எங்கேயாவது கூட்டிட்டு போகணும்னு தோணிச்சு. அதான் ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணினேன். எனக்கு அப்பாயின்மென்ட் எதுவும் இல்லைன்னு சொன்னாங்க. சில்ட்ரன்ஸ் பார்க் கூட்டிட்டு போலாம்னு யோசிக்கும் போது, அம்மா ஃபோன் பண்ணி பசங்கள விடும் போது கொஞ்சம் பேசணும். ஒரு மணி நேரமாவது இருந்துட்டு போக முடியுமான்னு கேட்டாங்க. அது மட்டும் இல்லாம" என்று இடைவெளி விட்டவள்



"பசங்களோட நான் மட்டும் போனால், ஸ்நாக்ஸ் வேணும், லஞ்ச் செய்யணும், இதையெல்லாம் தூக்கிட்டு போகணும், பசங்களையும் என்கேஜ் பண்ணணும் இப்படி நிறைய இருக்கே. என்னால தனியா சமாளிக்க முடியாதுன்னு நேரா இங்க வந்துட்டேன்" என்று தயங்கித் தயங்கிக் கூறினாள். அவளது நீளமான பதிலில் கலகலவென சிரித்தவன் "அதானே பார்த்தேன். நீ சமையல் செஞ்சு... சோம்பேறி! சோம்பேறி! கிட்சன் எந்தப் பக்கம் இருக்குன்னாவது உனக்குக் தெரியுமா. எங்க ராதாம்மாவச் சொல்லி குத்தம் இல்ல. எல்லாம் உங்க மாமியாரச் சொல்லணும். செல்லம் கொஞ்சி கெடுத்து வச்சுருக்காங்க" என்று கேலியாக அலுத்துக் கொண்டவன்,


"நான் ஒரு எமர்ஜென்சி அட்டென்ட் பண்ணிட்டு வந்து இருக்கேன் கவி. எப்போ வேணும்னாலும் என்னைத் திரும்பி கூப்பிடுவாங்க. அதுக்குள்ள அத்தை எதுக்கு அவசரமா கூப்பிட்டாங்க, என்ன விஷயம் பேசினாங்கன்னு சீக்கிரம் சொல்லு. உன்னோட வழக்கமான எஸ்ஸே டைப்பா இல்லாம அப்ஸ்ட்ராக்ட் மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்லு பார்க்கலாம்" என்றான்.


அவனது கேலியில் சிணுங்கிக் கொண்டு பதில் சொல்ல வந்தவள், அடுத்து வந்த கேள்வியில் சிலிர்த்து "ம்ம் உங்க அத்தை என்ன சொல்றாங்கன்னா கேட்கிறீங்க? அதுவும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா? எல்லாம் உங்க ஃப்ரண்ட், என் கூடவே பிறந்தவனப் பத்தி தான். புலம்பிப் புலம்பி என் காதுல இரத்தம் வர வச்சுட்டாங்க. இன்னும் புலம்பல் முடியல. ஜுஸ் பிரேக் விட்டு இருக்காங்க. அபி ஏன் இப்படி இருக்கான், என்ற பண்றதுன்னு தெரியலை, மாப்பிள்ளைக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்கிறாங்க. என்ன பதில் சொல்லட்டும். உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு எனக்கு எப்படி தெரியும். தெரிஞ்சாலும் என் கிட்ட சொல்லிடுவீங்களா என்ன?" என்று படபடவென்று கொட்டினாள்.



அதற்கு பதில் சொல்லும் முன் அவனுக்கு நோயாளியைப் பார்க்க வேண்டும் என்ற அவசர அழைப்பு வர "அப்புறம் பேசலாம் கவி. நான் போகணும்" என்று பதிலுக்கு காத்திராமல் அழைப்பைத் துண்டித்தான்.


"அதானே இவங்க வாயில இருந்து ஒரு வார்த்தைய வரவழைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தானே தெரியும்" என்று முணுமுணுத்தவள் "நல்ல வேளை நான் வாங்க போங்கன்னு பேசினதை சரண் கவனிக்கலை" என்று சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.



ஒரே வயதுடையவர்கள், அதிலும் கூடவே வளர்ந்தவர்கள் என்பதால் அவனை நீ, வா, போ என்று ஒருமையில் தான் அழைப்பாள். மாமியார் வீட்டில் பழகி விட்டாலும், அவளது அம்மா வீட்டில் அதற்கு தடா போடப்பட்டதால் மரியாதை தானாக வந்து சேரும். சரணும் கூடவே அபியும் இருந்தால் அவளை ஒரு வழி செய்து விடுவார்கள். இன்று தப்பித்தோம் என்று நினைத்தாள்.ராதா இன்னும் வரவில்லை என்பதால், தனித்து விடப்பட்ட ராகவி பழைய நினைவுகளில் மூழ்கினாள். சரண், அபிமன்யு, ராகவி மூவரும் ப்ளஸ் டூ வரை ஒரே பள்ளியில் படித்தவர்கள். அதுவும் பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்து எல்லா ஆசிரியர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள். மூவரும் மிக நன்றாக படிக்கக் கூடியவர்கள் என்றாலும், அபிமன்யு எப்போதும் ஒரு படி மேலே இருந்தான்.


மற்ற இருவருக்கும் அவனைவிட ஒரு மதிப்பெண்ணாவது வாங்கிவிட வேண்டும் என்ற போட்டி இருக்கும். ஒவ்வொரு தடவையும் அது நடக்காமல் போக, ஆசிரியரிடம் போய் நிற்பார்கள், அவன் எழுதியதைத் தான் நாங்களும் எழுதி இருக்கிறோம். அதனால் ஒரு மார்க் போடவேண்டும் என்று.



கையெழுத்தைக் காரணம் காட்டி அவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டு விடும். அவர்களும் "விடா முயற்சி விஸ்வரூப வெற்றி" என்று ஆண்டு முழுவதும் முயன்றாலும், அந்த ஆண்டின் இறுதியில் நடந்த பொதுத் தேர்வில் அபிமன்யு அவர்களை விட பத்து மதிப்பெண்கள் அதிகம் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று இருந்தான்.



மூவருக்குள்ளும் படிப்பில் கடுமையான போட்டி இருந்தாலும், அது ஆரோக்கியமான போட்டியாக இருந்தது. மூவருக்குள்ளும் ஆழ்ந்த நட்பு இருந்தது. பொருளாதாரத்தில் சரண் இவர்களை விட மிக உயரத்தில் இருந்தாலும் , இவர்களின் நட்பை அது பாதிக்கவே இல்லை.


சரண் மற்றும் ராகவியின் குறிக்கோள் மருத்துவமாகவும் அபிமன்யுவின் குறிக்கோள் தொழில்நுட்பமாகவும் இருந்ததால் பதினோராம் வகுப்பில் வேறு வேறு பிரிவுகளுக்குச் சென்றார்கள். அப்போது அவர்களது பள்ளியில் புதிதாக வந்து சேர்ந்தார்கள் ஸ்ரீநிதியும் அவளது அண்ணன் ஸ்ரீவத்ஸனும்.


இவர்கள் பதினோராம் வகுப்பில் அடியெடுத்து வைத்த போது ஸ்ரீநிதி ஒன்பதாம் வகுப்பிலும் ஸ்ரீவத்சன் பதினோராம் வகுப்பில் சரண், ராகவியின் பிரிவிலும் அவர்களின் பள்ளியில் சேர்ந்தார்கள். தந்தையின் பணி காரணமாக இரண்டு மூன்று ஊர்களில் படித்துவிட்டு இப்போது ஸ்ரீவத்சன் பதினோராம் வகுப்பில் அடியெடுத்து வைக்கவும், சென்னையில் இருந்து படிக்க ஆரம்பித்தார்கள். தந்தையை விட்டு ஏன் இங்கு வந்தோம் என்பது இருவருக்குமே விளங்காத ஒரு விஷயம்.


அபிமன்யு, தனிக்காட்டு ராஜாவாக போட்டியின்றி இருக்க, சரணும் ராகவியும் தங்கள் போட்டியைத் தொடர்ந்தனர். இருவரில் ஒருவர் தான் முதலில் வருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தவர்கள், முதல் மாதத் தேர்வில் இவர்களை விட அதிக மதிப்பெண் பெற்ற ஸ்ரீவத்ஸனை அதிர்ச்சியாக பார்த்தார்கள். இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவன் படிப்பில் முதலிடம் பெற்றிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவர்கள், அபிமன்யுவிடம் இதைத் தெரிவித்தனர். இதுவரை ஏதோ புது மாணவன் என்ற அபிப்பிராயம் மட்டுமே வைத்திருந்தவர்கள், இப்போது அவனது திறமையை கண்டு வியந்து அவனுடன் பழக நினைத்தனர். ஆனால், அவனிடம் அதற்கான எதிரொலி இல்லை. எதிலும் ஒட்டாமல் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருந்தான்.


ஸ்ரீவத்சன் அமைதியானவனாக இருந்தாலும் அவனது தங்கை அப்படி இல்லை போலும். இளங்கன்று பயமறியாது என்பது போல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று பள்ளி வாழ்வை நன்றாக அனுபவித்தாள். இந்தப் பள்ளிக்கு அவள் புதிய மாணவி என்பது அவளுக்கு நினைவிலேயே இல்லை. எல்லா இடங்களிலும் தனது திறமையை பளிச்சென்று வெளிப்படுத்தினாள். இதுவரை போட்டியின்றி எல்லாவற்றிலும் முதல் ஆளாக இருந்த அபிமன்யு இப்போது ஆசிரியர்கள் ஸ்ரீநிதியை எல்லாவற்றிலும் இணைத்துக் கொள்ளவும் அவளைத் தனது முதல் போட்டியாக கருதினான்.


அவளோ இவனிடம் விகல்பம் இல்லாமல் பழகினாள். இவனது திறமைகளை அறிந்தவள், போட்டிகளில் கலந்து கொள்ளும் போது எல்லாவற்றுக்கும் இவனிடம் வந்து சந்தேகம் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள். நாளாக ஆக இருவருக்குள்ளும் புரிதலுடன் கூடிய ஒரு நட்பு மலர்ந்தது. போட்டிகளும் ஆரோக்கியமான போட்டியாக மாறி இருந்தது.

எல்லாவற்றையும் அண்ணனிடம் பகிர்ந்துகொள்ளும் ஸ்ரீநிதி அபிமன்யுவை பற்றியும் கூறினாள். அவனோ "நீ எப்பதான் திருந்தப் போறியோ நிதி. எங்கடா பாட்டு, டான்ஸ்னு போயிடற. அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாங்களோ, பயமா இருக்கு. எனக்குத்தான் திட்டு விழும் முதல்ல, அவளை சரியா பார்த்தியா இல்லையா, ஸ்கூல்ல என்னதான் நடக்குதுன்னு பிரச்சனை பண்ண போறாங்க. ஒழுங்கா படிக்கிற வழியைப்பாரு உன்னையும் அம்மா டாக்டர் ஆகணும்னு தான் சொல்வாங்க. மார்க் குறைஞ்சு போச்சுன்னா என்ன செய்வாங்க, எப்படி பேசுவாங்கன்னு நமக்கு தெரியாது, புரிஞ்சு நடந்துக்கோ, நீ இப்போ சின்ன பொண்ணு கிடையாது" என்று நீண்ட சொற்பொழிவு ஆற்றினான்.

அண்ணனது புலம்பல்களை எல்லாம் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்ட ஸ்ரீநிதி, வழக்கம் போல பள்ளி வாழ்க்கையை அனுபவித்தாள் அதற்காக அவள் சுமாராகப் படிப்பவள் என்பதில்லை. அனைத்து பாடங்களிலும் தொன்னூற்று ஐந்து மதிப்பெண்களுக்கு குறையாமல் வாங்குபவள்.



என்ன தான் லட்சியமாக இருந்தாலும், படிப்புக்கு இருக்கிற மதிப்பு பாட்டுக்கும் டான்ஸுக்கும் கிடையாது., அதுக்கெல்லாம் நிறைய கொடுத்து வச்சிருக்கணும் என்பது போலப் பேசும் தாயை வினோதமாகவே பார்ப்பது ஸ்ரீநிதியின் வழக்கம். அதோடு நில்லாமல் "அம்மா தான் பாட்டு டான்ஸ்னு ரிலாக்ஸ் பண்றதுனால தான் நைன்டி வைஃப் மார்க்ஸ் வாங்கறேன். இல்லேன்னா இன்னும் கம்மியா தான் வாங்குவேன். அதனால இதெல்லாம் விட்டுடுவேன்னு கனவுல கூட நினைக்காதீங்க" என்று அவர் வாயை அடைத்து விடுவாள்.



அப்போதெல்லாம் தாயின் முகத்தில் வந்து போகும் உணர்ச்சிக்கு என்ன அர்த்தம் என்று அவள் யோசித்ததே இல்லை. மகளின் கலை ஆர்வத்தைப் பிடிக்காதது போல கௌசல்யாவின் வார்த்தைகள் இருக்கும், ஆனால் செயல்கள் ஒவ்வொன்றும் அதற்கு நேர்மாறாக இருக்கும். அவளிடம் இருக்கும் விதம் விதமான நாட்டிய உடைகளே அதற்குச் சாட்சி, எந்த உடையையும் இது வரை ஒரு முறைக்கு மேல் அவள் பயன்படுத்தியதே இல்லை எனலாம். இந்த நிலையில் பள்ளியில் ஆண்டு விழா வந்தது.


ஸ்ரீநிதி தாயிடம் அழைப்பிதழைக் கொடுத்த போது, அவர் நிகழ்ச்சி நிரல் மீது நிதானமாகப் பார்வையை ஓட்டினார். “வரவேற்பு நடனம் - குமாரி ஸ்ரீநிதி” என்ற வார்த்தைகளைப் படிக்கும் போது அவரது முகத்தில் புன்னகை இருந்ததோ? அதற்கு நேர்மாறாகக் கண்கள் அவளை முறைத்தன. "இன்னும் எதுல எல்லாம் நீ கலந்துக்கப் போற?" என்ற கேள்வியை அவரது பார்வையில் படித்தவள், "வந்தா, தெரிஞ்சிடப் போகுது" என்றவள்,

"அம்மா நான் சொல்றத தான் நம்பமாட்டீங்க. நீங்க பார்த்துப் பார்த்து வடிகட்டி சேர்த்து விட்ட ஸ்கூலு. இந்த மாதிரி ஆட்டம் பாட்டத்தில எல்லாம் என்ன ரூல்ஸ் வச்சுருப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? நம்புங்கம்மா, நம்பிக்கை அதானே எல்லாம்" என்று ஓடிப்போனாள்.



ஆனால் அவளது தாயோ எந்த பதிலும் கூறவில்லை. இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீவத்ஸன், விழாவுக்கு கௌசல்யா வருவாரா? வந்தால் என்ன செய்வார்? என்று யோசனையில் ஆழ்ந்தான். அறைக்குள் சென்ற கௌசல்யா அந்த அழைப்பிதழைப் பொக்கிஷம் போல் பத்திரப்படுத்தியதை பாவம் அவரது பிள்ளைகள் அறியவே இல்லை.
 

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
173
கவுசல்யாவை எந்த கணக்குல சேர்க்குறது 🤔🤔🤔🤔🤔
அவங்க ஒரு வித்தியாசமான கேரக்டர்... 😁😁😁
 
Top Bottom