• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தொட்டுத் தொடரும் - 2

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
173
தொட்டுத் தொடரும் -2

காறை பூணும் கண்ணாடி காணும்* தன் கையில் வளை குலுக்கும்*

கூறை உடுக்கும் அயர்க்கும்* தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்*

தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்* தேவன் திறம் பிதற்றும்*

மாறில் மா மணிவண்ணன்மேல்* இவள் மால் உறுகின்றாளே.*

(*தலைவனின் நினைவுகளில் ஒரு தலைவி)


என்னை உடனே கவனிக்காவிட்டால் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல என்று வயிறு கூவிய நேரத்தில் "இதுக்கு மேல தாங்காது" என்று எழுந்த ஸ்ரீநிதி "அம்மா சாப்பாடு ரெடியா. எனக்கு ரொம்ப பசிக்குது மா" என்றாள். "இன்னும் பத்து நிமிஷம் ஆகும். நீ போய் குளிச்சிட்டு வா" என்ற அம்மாவின் குரலில் கட்டிலில் பார்வையை ஓட்டியவள், இதுவே குளிக்க சரியான நேரம் என்று எழுந்து குளிக்க ரெடி ஆனாள்.

"அம்மா நான் குளிக்க போறேன், இங்க வந்து இருங்க" என்று சொல்லிவிட்டு குளிக்கப் போனாள். "சமையல் வேலை இன்னும் முடியல, பத்து நிமிஷத்துல ஒண்ணும் ஆயிடாது, நான் பார்த்துகிறேன், நீ குளிக்க போ" என்ற பதிலில் மீண்டும் கட்டிலைப் பார்த்தவள், "இந்த அம்மாவைத் திருத்தவே முடியாது, நாம வேகமாக குளித்து விட்டு வருவோம்" என்று போனாள்.



குளியலறையில் நுழைந்தவளை "கீசர் போட்டு இருக்கேன். ஞாபகமா வெந்நீர்ல குளி, வெயிலா இருக்குன்னு பச்சைத் தண்ணில குளிக்காத.. அப்புறம் உடம்புக்கு ஏதாவது வந்தா, நான் தனியா எத்தனை பேரைத் தான் பார்க்கிறது" என்ற தாயின் புலம்பல் துரத்தியது.


குளியலறையில் இருந்த போது அவளது கைபேசி ஒலி எழுப்பியது போலத் தோன்றியது. "அச்சோ! அம்மா கூட வாக்குவாதம் பண்ணிட்டு இருந்ததுல டைம் பார்க்காம வந்துட்டோமே. இப்போ என்ன பண்றது" என்று யோசித்து கொண்டு இருந்த போது கைபேசி ஒலியை நிறுத்தி இருந்தது. "நல்ல வேளை அம்மா கவனிக்கலை" என்ற நிம்மதியோடு குளித்து விட்டு வந்தாள்.


ஆனால் அந்த நிம்மதியை குறைக்கும் வகையில், வந்த கைபேசி அழைப்பைத் தாய் ஏற்றதோ, பேசியதோ பின்னர் அந்த அழைப்பு வந்ததற்கான அடையாளத்தை அழித்ததோ அவளுக்கு தெரியும் போது அவளின் மனநிலை எவ்வாறு இருக்கும்.



புத்திசாலித்தனமாக திட்டமிட்டு இந்த அழைப்பு வரும் நேரத்தைக் கணக்கிட்டே அவளைக் குளிக்க அனுப்பிய ஸ்ரீநிதியின் தாய் கௌசல்யா, கைபேசி முதல் ஒலி எழுப்பும் போதே அதைக் கைப்பற்றி பேச நினைத்ததை எல்லாம் பேசிவிட்டே வைத்திருந்தார். குளியலறையில் தண்ணீர் சத்தமும் அடுப்பில் இருந்து வந்த குக்கர் சத்தமும் அவரது வேலைக்கு உறுதுணையாக இருந்ததால், ஸ்ரீநிதிக்கு எதுவும் தெரியாமலே போய் விட்டது.

குளித்து விட்டு நேரே கைபேசியை எடுக்கச் சென்ற ஸ்ரீநிதியை "எத்தனை தடவை தான் உனக்கு சொல்றது? நீ எல்லாம் என்னன்னு தான் பசங்களுக்கு கிளாஸ் எடுக்கிறயோ. குளிக்கிறதுக்கு முன்னால தாங்க முடியாத பசின்னு சொன்ன, இப்போ என்ன பண்ணிட்டு இருக்க, மொபைல பார்த்ததும் பசி அடங்கிடுமோ?" என்ற அம்மாவின் குரல் அமைதியாக உணவு மேசையை நோக்கி நகர வைத்தது. பகாசுரனைப் போல கிடைத்ததை எல்லாம் சாப்பிடும் அளவுக்கு அவளது பசி இருந்ததும் ஒரு காரணம். இல்லை என்றால் "கூப்பிட்ட உடனே வந்துட்ட. நீ அப்படி எல்லாம் வரும் ஆளில்லையே, என்ன விஷயம்?" என்ற அம்மாவின் கேள்விக்கு வேறு மாதிரி பதில் கொடுத்திருப்பாள்.

தட்டில் சூடாக இருந்த சாதமும், நெய் மற்றும் மிளகு ரசத்தின் மணமும் அவளுக்குப் பசியை ஞாபகப்படுத்த, பேசாமல் சாப்பிட துவங்கினாள். சாப்பிட்டு முடித்ததும் "அம்மா! என்ன தான் இருந்தாலும் மிளகு ரசத்துக்கு பருப்புத் துவையல் தான் பெஸ்ட் காம்பினேஷன். நீ ஏன் அப்பளம் மட்டுமே சுட்டு வைக்கிற" என்ற கேள்வியுடன் நிமிர்ந்தவள் தாய் நெற்றிக்கண்ணைத் திறக்கக் தயாராக இருப்பதைக் கண்டவுடன்" இதுவும் நல்லா தான் மா இருக்கு.. ஆனாலும் ஏதோ ஒண்ணு மிஸ்ஸான மாதிரி ஒரு ஃபீல், அதான்" என்று அப்பாவியாக முழித்தாள்.



இல்லை என்றால் அவள் பருப்புத் துவையல் என்று பேசியதற்கு
"நீ பிறந்ததுல இருந்து நான் தான் உனக்கு வக்கணையா சமைச்சு போட்டு இருக்கேன். ஆனா உனக்கு நேத்து பழகின ருசி தான் பிடிச்சிருக்கு. உன்னை சொல்லி என்ன பிரயோஜனம். எல்லாம் நான் வாங்கி வந்த வரம். எனக்கு எதுவும் சரியா அமையாது. அப்படி ஒரு தலையெழுத்தை எழுதிட்டான் எனக்கு" என்ற வழக்கமான பதில் கிடைத்திருக்கும்.
என்ன செய்தாலும் தாயை திருப்திப் படுத்த முடியாது என்று அலுப்பாக உணர்ந்தாள். பெண்ணுக்கு பெண்ணாக முடிந்தவரை தாய்க்கு ஆதரவாக பேசுபவளை, இப்போது தாயிடம் காணப்பட்ட மாறுதல்கள் வருத்தப்பட வைத்தன.



கௌசல்யா எப்போதுமே அமைதியானவர் அல்ல. வீட்டில் எப்போதுமே அவரது குரல்தான் ஓங்கி ஒலிக்கும். ஸ்ரீநிதிக்கும் அவளது அண்ணன் ஸ்ரீவத்ஸனுக்கும் இது பழகிப்போன விஷயம்தான் என்றாலும் வயது ஏற ஏற அம்மா ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கவலை வந்தது. அவர்களால் தந்தையிடம் குற்றம் காண முடியவில்லை.



மத்திய அரசின் தொல்லியல் துறையில் உயர்ந்த பொறுப்பு வகிக்கும் அவர் சில வருடங்களாக, விடுமுறை நாட்களில் மட்டுமே வீட்டுக்கு வந்து போவார். இப்போதைய அவரது பதவி அதையும் அரிதாக்கி விட்டிருந்தது. இவர்களும் குறிப்பிட்ட வயது வரை அவருடனே பயணித்துக் கொண்டு இருந்தனர் பின்னர் படிப்பையும் கௌசல்யாவின் மனநிலையையும் காரணம் காட்டி இவர்கள் சென்னையிலேயே தங்கி விட ஸ்ரீதரன் மட்டும் ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தார்.



கௌசல்யாவின் பெற்றோரும் உடன் பிறந்தோரும் சென்னையிலேயே வசிப்பதும் ஒரு காரணம். சரியாகச் சொன்னால் அவர்களின் முன்னே தன் வளமையான வாழ்க்கையை நிலைநாட்ட வேண்டும் என்ற கௌசல்யாவின் எண்ணமும் முக்கியக் காரணம். குடும்பத்தில் மூத்த பெண்ணாக, தம்பி, தங்கை என்று வளர்ந்த கௌசல்யாவுக்கு பிறந்த வீட்டு சூழ்நிலை எப்போதும் பிடித்ததே இல்லை. தனது திறமைகளைக் கண்டுகொள்ளாமல் தன் கனவுகளையும் ஆசைகளையும் மண்ணோடு மண்ணாக்கிவிட்டு, தம்பியை மருத்துவராகவும் தங்கையை பொறியாளராகவும் ஆக்கி வைத்த தாய், தந்தை மேல் அபார கோபம். தனக்கென்று எதையுமே தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் தன் திருமணமாவது தன்னிஷ்டப்படி தான் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். பேரழகியான கௌசல்யா தனது அழகுக்கேற்றபடி கணவன் வரவேண்டும் என்று எதிர்பார்த்தில் தவறேதும் இல்லையே.



ஆனால் சொந்தத்தை காரணம் காட்டி அவரது அத்தை மகன் ஸ்ரீதரனுடன் அவரது திருமண ஏற்பாடுகளை செய்யவும் கொதித்துப் போனார். ஸ்ரீதரன் அவரது தாய் தந்தைக்கு ஒரே மகன் பெரிய வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவரது தந்தை அரசாங்க உத்தியோகத்தில் இருந்ததால் மகனை நம்பி அவர்கள் இல்லை. ஸ்ரீதரனும் இருபத்தியாறு வயதிலேயே தனது துறையில் நல்லதொரு நிலையில் இருந்தார்.



ஸ்ரீதரன் ஆறடி உயரத்தில் கம்பீரமாக இருப்பார் என்றாலும் சற்றே மாநிறமானவர். அதுவும் போக ஸ்ரீதரனின் வேலை அவருக்குப் பிடித்தமே இல்லாமல் இருந்தது. பிறந்த வீட்டில் சிதைக்கப்பட்ட தனது கனவுகளுக்குப் புகுந்த வீட்டிலாவது ஆதரவு கிடைக்கவேண்டும் என்பது அவரது ஆழ்மனதின் ஆசையாக இருந்தது. கணவர் இப்படி ஒவ்வொரு ஊராக சுற்றினால் இவரது கனவுகள் என்னாவது.



தொல்லியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் ஒரு ஆராய்ச்சி நடக்கும் இடத்தில் பணியில் இருக்க வேண்டும். ஆராய்ச்சி முடிந்துவிட்டால் அடுத்த ஆராய்ச்சிக்கு தேர்வு செய்யும் வரை அலுவலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டும். பின்னர் புதிய ஆராய்ச்சி நடக்கும் இடத்திற்கு போக வேண்டும். எதுவுமே குறிப்பிட்ட கால அளவுகள் இல்லாமல் நடக்கும். மொத்தத்தில் இந்திய நாட்டின் எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் , எவ்வளவு காலம் ஆனாலும் பணி செய்யத் தயாராக இருக்க வேண்டும்.



எனக்கு போய் இப்படி ஒருவருடன் திருமணமா என்ற எண்ணம் ஏற்கனவே நொந்து போயிருந்த அவரைத் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைக்கத் தூண்டியது. ஆனால், திருமணத்திற்க்கு முன் அவரைச் சந்தித்த ஸ்ரீதரனின் பேச்சால் சந்தோஷமாகவே திருமணத்திற்குத் தயாரானார். அந்த திருமணம் அவரது ஆசைகளை நிறைவேற்றியதா இல்லை மண் தோண்டிப் புதைத்து விட்டதா தெரியவில்லை.



தாயின் எண்ணங்களைப் பார்வையால் படித்துக் கொண்டு இருந்தவளை, அறையில் இருந்து வந்த அழுகுரல் கலைத்தது. அதற்கு மேல் நின்று வம்பு வளர்க்க விரும்பாமல் வேகமாகத் தனது அறைக்கு சென்றாள். தாயைப் பற்றிய யோசனையில் இருந்தவள் கடந்த ஆறு மாதங்களாக நாள் தவறாமல் காலை ஒன்பது மணிக்கு வரும் கைபேசி அழைப்பை மறந்து போனாள். தானாக நடந்ததா? இல்லை அவளது தாய் திட்டமிட்டு செய்த சதியா?? பெண்ணின் நிம்மதியைக் கலைக்கும் வகையில் தாய் செய்த வேலை தெரிந்தால் என்ன ஆவாள்??



"என் செல்ல குட்டீஸ் முழிச்சிட்டாங்களா?" என்று கேட்டபடி அவசரமாக அறைக்குள்ளே வந்தாள் ஸ்ரீநிதி. கட்டிலின் மேல் ரோஜாக்கள் பூத்தது போல் இரு பூஞ்சிட்டுகள், கைகால்களை உதைத்தபடி படுத்து இருந்தன. தங்கள் திராட்சை விழிகளை நாலா பக்கமும் உருட்டிய வண்ணம் தாயின் குரல் எங்கிருந்து வருகிறது என்று அறிய முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.



"அம்மாவைத் தேடறாங்களே என் பட்டுக் குட்டீஸ். அம்மா இங்கே இருக்கேன், பாருங்க" என்று குரல் கொடுத்தபடி கட்டிலில் அவர்களின் பார்வையில் படும் படியாக அருகில் வந்து அமர்ந்தாள். அவர்களது பார்வை வட்டத்தில் அவள் விழுந்த நொடியில், மகள் குரலெடுத்துப் பெரிதாக அழ, மகனோ அவளைப் பார்த்து மோகனமாய் ஒரு புன்னகை சிந்தினான். அந்தப் புன்னகை அவளுக்குக் கணவனை நினைவூட்ட, அவனது சிறிய பிம்பமாய் இருந்த, சின்னக் கண்ணனின் மாயப் புன்னகையில் அந்த அன்னை மதி மயங்கிப் போனாள்.



அவர்களது தேவையைக் கவனித்த படி, "உங்க அப்பா சொன்னதை ஒரு தடவை கூட மறக்காம அப்படியே இம்ப்ளிமென்ட் பண்றீங்கடா செல்லக் குட்டீஸ். அப்படி டிரைனிங் கொடுத்து இருக்கார் உங்க அப்பா" என்று செல்லமாக அலுத்துக் கொண்டவள், சில நிமிடங்கள் அந்த இனிமையான நினைவுகளில் மூழ்கினாள்.



தந்தையாகப் போகிறோம் அதுவும் இரண்டு குழந்தைகள் என்று தெரிந்தது முதல், நாள் தவறாமல் மனைவியின் மடியில் படுத்து அவளது மணி வயிற்றில் இரண்டு முத்தங்களிட்டு வந்தான் அவன். ஐந்து மாதங்கள் கடந்த பின் இந்த வழக்கத்தில் மாற்றம் வந்தது. அவளைப் பின்னிருந்து அணைத்தபடி, மேடான வயிற்றின் இருபுறமும் கை வைத்து "என் பட்ட்டுக் குட்டீஸ்! செல்ல்லக் குட்டீஸ்! இப்படி சத்தம் போடாம இருந்தா அம்மா நம்மளை கவனிக்கவே மாட்டாடா. சோ, நான் இருக்கேன் அப்படின்னு சொல்ற மாதிரி அம்மாவுக்கு ஸ்ட்ராங்கா ஒரு பஞ்ச் குடுங்க பார்ப்போம்" என்ற அவனது குரலில் அவளது வயிற்றில் வலப்பக்கம் ஒரு பலமான உதை கிடைக்கும்.



"தேட்ஸ் மை கேர்ள்" என்றவன் "பாத்தியா என் பொண்ணை, அப்படியே என் ஸ்ரீ மாதிரி! என்ன செஞ்சா காரியம் ஆகும்னு தெரிஞ்சு கரெக்ட்டா பண்றா பாரு. ஆனால் குட்டி பையன் கிட்ட இருந்து ஒரு ரெஸ்பான்ஸும் இல்லையே? குட்டி பையா நீ அம்மா மாதிரி இல்லையோ?" என்றவனுக்கு பதிலாக, வலப்பக்கம் வந்த உதையோடு இடப்புறம் வந்த குறுகுறுப்பையும் உணர்ந்து கொண்டவளாய் "ம்ம் அவன் அப்படியே அப்பாவ மாதிரி இரண்டு முத்தம் கொடுத்து, கொஞ்சூண்டு சிரிச்சே ஆளை மயக்கிடுவான் போல. இப்பவும் அது தான் பண்றான். உங்களுக்கு தான் தெரியல" என்றாள் வெட்கத்துடன் மனைவி. அதோடு நில்லாமல் "பையன் ஒன்னு பொண்ணு ஒன்னுன்னு முடிவே பண்ணிட்டீங்களா? இல்லை எனக்குத் தெரியாம ஆன்ட்டி சொன்னாங்களா?" என்று கேட்டாள்.



தன் கேள்விக்கு பதில் வராமல் போகவும், தொடர்ந்து பேசியவள் "அதென்ன பசங்க கூடவே பேசிட்டு, அவங்களையே கொஞ்சிட்டு இருக்கீங்க? என்னை எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுதா இல்லையா? வயித்துக்குள்ள இருக்குற பசங்க கூட இப்போவே என்ன பேச்சு? இதுல அவங்க உங்க பேச்சைக் கேட்கிறாங்கன்னு பில்டப் வேற. இப்பவே இப்படின்னா அவங்க வெளிய வந்ததுக்கு அப்புறம் என்னைக் கண்டுக்கவே மாட்டீங்களோ?" என்று செல்லமாகச் சிணுங்கினாள்.



அவனோ, "ஹேய்! என்ன ஸ்ரீ இப்படி சொல்லிட்ட? வயித்துக்குள்ள இருக்கிற குழந்தைகளுக்கு நாம சொல்றது எல்லாமே கேட்கும். அதுக்காகத்தானே நல்லதே நினைக்கணும், நல்லதையே படிக்கணும்னு பெரியவங்க பெரிய லிஸ்ட் போட்டு வச்சுருக்காங்க. இந்த வளைகாப்பு மேட்டர் கூட அதை பேஸ் பண்ணி தானே பண்றாங்க..



அதுவுமில்லாம முக்கியமான ஒரு விஷயத்தை நீ எப்பவும் மறந்து போயிடறே ஸ்ரீ. இவங்க ரெண்டு பேரும் இந்த அபிமன்யுவோட பசங்கம்மா. மகாபாரத அபிமன்யு பத்தி உனக்கு தெரியுமா இல்லையா? அவன் அம்மா வயித்துக்குள்ள இருக்கும் போது கேட்ட விஷயத்தை பல வருஷம் கழிச்சும் கூட ஞாபகம் வச்சு போரில் இம்ப்ளிமெண்ட் பண்ணி இருக்கான் யூ நோ. அதே மாதிரி இந்த அபிமன்யுவோட பசங்களும் இருப்பாங்க. காட் இட்" என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.



"அதெப்படி... நான் எப்படி உன்னை கண்டுக்காம போவேன்னு நினைக்கிற? நாலைந்து மாசமா கம்பெனிய கூட ஒழுங்கா கவனிக்காம, உன்னைத் தான் சுத்தறேன்னு எல்லாரும் சொல்றாங்க தெரியுமா? நீ என்னடான்னா இப்படி சொல்லிட்டியேம்மா சொல்லிட்டியே?" என்று சிவாஜி மாடுலேஷனில் கூறியவாறு அவளைத் தன் புறம் திருப்பி அவளது நெற்றியோடு நெற்றி வைத்து அழுத்தினான்.



"ரொம்பத்தான்" என்று வெட்கத்துடன் நொடித்தாலும் அவள் முகத்தில் குழப்ப ரேகைகள் தெரிய, "குட்டீஸ் வந்தாலும் நீ தான்டா முதல்ல. உனக்கு என்ன அடிக்கடி இந்த டவுட்டு வருது? யாராவது ஏதாவது சொன்னாங்களா?" என்றான். சில நாட்களாகவே, குறிப்பாக ஐந்தாம் மாதம் ஏதோ சம்பிரதாயம் என்று அம்மா வீடு சென்று வந்த பிறகு, ஸ்ரீநிதி தனது இயல்பை தொலைத்து நிறைய விஷயங்கள் செய்து கொண்டிருந்தாள் என்பது இந்த நேரத்தில் அவனுக்கு ஞாபகம் வந்தது.



வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் "பசங்க வந்தா என்னை மறந்து போய்டுவீங்களா?" என்ற கேள்வியை மறக்காமல் விதம் விதமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். வழக்கமாக எல்லோருக்கும் வரும் சந்தேகம் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தவன், இப்போது அவளது கேள்விகள் மாறிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். இரண்டு நாள் முன்பு அவள் கேட்ட கேள்வி, இந்த நேரத்தில் ஞாபகம் வந்தது.



"அபிஈஈஈ" என்று இழுத்தவளை "ஏன்டா இவ்வளவு நீளமா இழுக்கிற? நீ ஒரு பார்வை பார்த்தாலே நான் பக்கத்துல வந்திடுவேன். என்ன விஷயம்? சிணுங்கல் ஜாஸ்தியா இருக்கு. ம்ம்" என்று கண்சிமிட்டியவனிடம், "ம்ம்ச்ச், சும்மா இருங்க. இப்படி எல்லாம் செஞ்சா நான் கேட்க வந்ததை மறந்து போயிடுவேன். நான் ...ஒண்ணு கேட்பேன். கோபப்படாமல் பதில் சொல்லணும்" என்று பீடிகையுடன் ஆரம்பித்தவள், "இல்ல ஒரு குழந்தைன்னாலே இந்த வயசுல டெலிவரி கஷ்டமா இருக்கும்ன்னு சொல்றாங்களே? எனக்கு எப்படி இருக்கும்? பசங்களை நீங்க நல்லா பாத்துப்பீங்க தானே?" என்றவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்.



இரண்டு குழந்தைகள் என்பதாலும், இருபத்தியேழு வயதில் முதல் குழந்தை என்பதால் பிரசவத்தில் சிக்கல் வரலாம் கவனம் தேவை என்று, அறிந்தவர் தெரிந்தவர் என்று பலரும் கொடுத்த இலவச அட்வைஸ் மழையாலும் (?) அவள் பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட போதே, அவள் கேட்காமல் விட்ட கேள்வியும் அவனுக்குப் புரிந்தது.



அவளைத் தோளோடு அணைத்து உச்சியில் ஒரு முத்தம் வைத்தவன். "அறிவுக் களஞ்சியம் தான் போ, ஃப்யூச்சர்ல பசங்க கிட்ட இதை எல்லாம் பேசி வைச்சுடாதே. அப்புறம் அவங்க கிண்டல் பண்றாங்கன்னு என் கிட்ட வரக் கூடாது சொல்லிட்டேன்" என்று கேலி செய்து அவளது பயத்தைப் போக்கும் முயற்சியில் ஈடுபட்டவன், அவளது முகம் தெளியாதது கண்டு, அவளைத் தன் அன்னையிடம் அழைத்துச் சென்றான்,



"மா! உங்க ஸ்டுடன்டுக்கு என்ன தான் சைக்காலஜி சொல்லிக் கொடுத்து இருக்கீங்க? இந்த பயம் பயப்படறா. லூசு மாதிரி கேள்வி வேற கேட்டு வைக்கிறா. இவளை என்னன்னு கேளுங்க" என்று ஸ்ரீநிதியின் பயத்தைப் போக்கும் பொறுப்பைத் தாயிடம் ஒப்படைத்தான்.



கூடவே, "இந்த லட்சணத்தில இந்த மேடம் லெக்சரர், அதுவும் சைக்காலஜி லெக்சரர். இவகிட்ட கூட பல பேர் பாடம் கத்துக்கிறாங்கன்னு நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கே. ஒருவேளை இவளுக்கு சொல்லித்தந்தவங்க தான் சரி இல்லையோ" என்று சொல்லி ஒரே நேரத்தில் தாய் மனைவி இருவரின் முறைப்பையும் பெற்றுக் கொண்டான். இதற்கு மேல் பேசினால் உதை விழும் என்று அறிந்தவன், தன் வாய் மேல் ஒரு விரலை வைத்து தாயைப் பார்த்து "மீ கப்சிப். யூ ப்ரோசீட்” என்று சொல்லிவிட்டு அமைதியானான்.



ராதாவின் சமாதானங்கள் எதுவும் ஸ்ரீநிதியின் காதில் ஏறுவதாக தெரியவில்லை என உணர்ந்தவன், மீண்டும் வாயைத் திறந்தான் "கிரிஜா ஆன்ட்டி கிட்ட கூட்டிட்டு போயிடலாம் மா. இவளுக்கு அவங்க தான் லாயக்கு" என்று அவளை ஓரப் பார்வை பார்த்தபடி அவன் சொல்ல, அதற்கு நல்ல பலன் இருந்தது. "அச்சோ! நான் வரல, ஆன்ட்டி கூட பரவால்ல, கவி என்னை ஓட்டித் தள்ளிடுவா. நான் ரொம்பவே தெளிவாகிட்டேன், இனி எந்த கேள்வியும் கேட்க மாட்டேன். என் பயம் எல்லாம் போயே போச்சு, போயிந்தி.. இட்ஸ் கான்.." என்று அவள் போலியாக அலறியதில் தாயும் மகனும் "அது!" என்றவாறு கலகலத்து சிரிக்க, "சின்ன பொண்ண என்னடா பண்றீங்க இரண்டு பேரும் சேர்ந்து?" என்றவாறு வந்து சேர்ந்தார் கிருஷ்ணன்.



"வந்துட்டாரு நாட்டாமை சொம்போட" என்று முணுமுணுத்த அபிமன்யு பதில் சொல்லும் முன், அவனது வாயைத் தன் கையால் மூடியவள் "ஒண்ணுமே இல்ல மாமா சும்மா தான் பேசிட்டு இருந்தோம்" என்று தானே முந்திக்கொண்டு அவள் பதில் சொல்லிய விதத்தில் கிருஷ்ணனுக்கு ஏதோ புரிய, அவருமே கலகலத்து சிரிக்க அவளும் அந்த ஜோதியில் ஐக்கியமானாள்.
 

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் - 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
199
ஸ்ரீநிதி அம்மா எதனால அபிமன்யு போன் calls எல்லாம் மறைக்குறாங்க 🤔🤔🤔🤔🤔🤔
 
Top Bottom