• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 24 - PREFINAL 2

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 24


“சொல்லுடா ஜீவா”

“வைரவா, நீ குடுத்த லிஸ்ட்ல இருந்த அட்ரெஸுக்கு எல்லாம் ஐட்டம்ஸை அனுப்பியாச்சு. வேலையும் சரியா நடக்குது. நீ பசங்களுக்குன்னு டிஸைன் செஞ்ச ஓம், சூரியன், நாகர், தேள், முதலை, Anchor (நங்கூரம்), டாம், ஜெர்ரி, அந்த Anime கேரக்டர்ஸ் எல்லாமே நல்லா வந்திருக்குடா. இப்பவே சொல்லிட்டேன், எனக்கு ஒரு பெரிய சைஸ் சூரியன் வேணும்”

“அவ்ளோதானே, செயினோடயே செஞ்சுட்டா போச்சு”

“வைரவா, நீ எப்படா வள்ளலான?”

“கொழுப்புடா உனக்கு. அதை விடு, புது இடம் வசதியா இருக்கா. மார்கழிக்கு முன்னால பூஜை போடணும்னு போட்டு, சாலைக்கு பூஜை போட்ட மறுநாளே கிளம்பி வந்துட்டேன். குமரனும், ரமேஷும் என்ன சொல்றாங்க?”

“இடம் சூப்பரா, அமைதியா இருக்கு வைரவா. அவங்க வேலையை அவங்க பாக்கறாங்க. நான் பாட்டு படிக்கறேன்”

“ஸாரிடா ஜீவா, உன்னையும் இதுல இழுத்து வெச்சிருக்கேன்”

“ரொம்ப ஃபீல் பண்ணாத, மறக்காம நான் கேட்ட கூலர்ஸை வாங்கிட்டு வா. ஹவ் ஈஸ் அண்ணி?”

“ம்… ஃபைன். அங்க வீட்ல எல்லாரும்…”

“வீடும் நாங்களும் இங்கேயேதான் இருக்கோம். கோர்ஸ் முடிஞ்சதும் குடுகுடுன்னு ஓடி வராம ஒரு நாலுநாள் அங்கேயே இருந்து என்ஜாய் பண்ணிட்டு வாங்க, புரியுதா”

“சரிங்க பெரியவரே, பை”

வைரவனும் மேதாவும் தேவையான, கையில் இருக்கும் சாமான்களை புது இடத்தில் பொருத்தி, பூஜை போட்ட கையோடு மும்பை வந்துவிட்டனர்.

காலையில் சாலைக்கு செல்லும் முன் ஜீவாவுடன் போய் அன்றைய வேலைக்கான பொருட்களைத் தந்து கணக்குச் சொல்லிவிட்டு தணிகைநாதன் சென்றதும், ஜீவா நாள் முழுவத்ம் அங்கேயே இருந்து பார்த்துக்கொள்கிறான்.

சாலை திறப்புக்கு பெரிய வீட்டில் இருந்து தண்ணீர்மலை உள்பட எல்லோரும் வந்திருந்தனர். நந்தகுமார் வந்திருந்தான். ராமநாதன் மட்டும் தனியே வந்துவிட்டு, உடனேயே கோவை திரும்பி விட்டார்.

இன்னும் இரண்டு நாட்களில் வகுப்புகள் முடிந்துவிடும். CAD CAM தொழில் நுட்பத்தின் மூலம், நகைகளின் எடையைத் துல்லியமாக அளவிடவும், சேதாரத்தைக் குறைக்கவும், முப்பரிமாண வடிவத்தில், அதன் அமைப்பில் உள்ள பிழைகளை நீக்கவும் இயலும்.

அதோடு, Niche மார்க்கெட்டிங் எனப்படும் தனிப்பட்ட நபர்களுக்கோ, குழுவினருக்கோ நகைகளைச் செய்யவும், ஒரே நகையை வெவ்வேறு அளவுகளுக்கு மாற்றிக் கணிக்கவும் முடியும்.

உதாரணமாக, ஒரு நெக்லஸையோ, வளையலையோ மூன்று பவுனுக்கு செய்யச் சொல்லி ஆர்டர் கொடுத்தால், பொருள் நம் கைக்கு வருகையில் அநேகமாக கிராம் கணக்கில் எடை அதிகரித்துதான் வரும். இதில் அந்தக் குறைபாடை நீக்கி விடலாம்.

இவை அனைத்தையும் மீறி, கையால் செய்யும் வேலையும் நுணுக்கமும்தான் வாடிக்கையாளரை நம்மிடம் வரவும், தக்கவும் வைக்கும் என்பதுதான் நிஜம்.

பாரம்பர்யமாக நகைகளை செய்யத் தெரிந்த ஆசாரிகளுக்கு இது தேவையில்லை எனினும், தங்கள் நகைகளை பிராண்ட் செய்து விற்கும் கார்ப்பரேட் நகைக் கடைகள் இதை அதிக அளவில் உபயோகிக்கின்றனர்.

தங்களது ஆன்லைன் சிறுநகை விற்பனையின் நகைகளைத் துல்லியமாகப் படம் பிடிக்க, அதன் பரிமாணங்களைக் காட்ட உபயோகமான படிப்பு என்பதால் குறைந்தபட்ச பயிற்சியாவது வேண்டுமென மேதாதான் இதைத் தேர்ந்தெடுத்தாள்.

நேற்றோடு வகுப்புகள் முடிந்திருக்க, சான்றிதழ்களுடன் அவர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு வர, வைரவனின் நண்பன் அரிஸ்ட்டாட்டில் காத்திருந்தான்.

மும்பை என்றதுமே வைரவன் நண்பனைத் தொடர்பு கொள்ள “வாடா மச்சான், வா வா. ஆனா, நான் புனேல ஒரு மால் கட்டுற வேலைல இருக்கேன்டா”

“ஓ… அதில்ல, எங்களுக்கு சர்வீஸ் அபார்ட்மென்ட் மாதிரி…”

“உதை படுவ மச்சான். நான்தான் புனேல இருக்கேன். என் வீடு அங்கேயேதான் இருக்கு.
அபார்ட்மென்ட் மேனேஜர் கிட்ட சாவி இருக்கு. சமைக்கறதுக்கு மினிமம் சாமான் இருக்கு. ஒழுங்கு மரியாதையா வந்து சேரு. நான் அடுத்த வாரக் கடைசில வந்து பாக்கறேன்” என்றான் உரிமையாக.

“தேங்ஸ்டா மச்சான்”

“அதிருக்கட்டும், எங்களுக்குன்னியே, கூட யாரு?”

“என் ஒய்ஃப்டா “

“அடப்பாவி, சொல்லாம கல்யாணமே பண்ணிக்கிட்டியா, பொண்ணு யாரு?”

வைரவன் சிரிப்புடன் “எல்லாம் உனக்குத் தெரிஞ்ச பொண்ணுதான். அவளுக்காக எங்கிட்ட அஸிஸ்ட்டென்ட்டா சேர்றேன்னியே…”

“அப்டிப் போடு… சாய்ச்சுப்புட்டியா, அன்னைக்கே நெனைச்சேன். நல்லா இருங்கடா” என்றிருந்தான்.

மூவரும் டின்னருக்கு வெளியே சென்றனர். வாங்கி வந்திருந்த ஆலன் சாலி ஷர்ட்டைப் பரிசாகக் கொடுக்க, “என்னடா வைரவா இதெல்லாம்?” என்று
மறுத்தான்.

“சும்மாடா, ரெண்டு நாள்ல உன் பர்த் டே வருதுல்ல”

“ஏன்டா, சரி, நாளைக்கு என்ன பிளான்?”

“ரெண்டு மூணு இடத்தை சுத்தி பார்த்துட்டு, நைட் ட்ரெயின் ஏற வேண்டியதுதான்”

“ஓகே, என்ஜாய், பார்க்கலாம்” என்ற அரிஸ்டாட்டில் அங்கிருந்தே புனே சென்றுவிட, மறுநாள் காலையிலேயே நாள் முழுவதுக்கும் வாடகை கார் ஒன்றை எடுத்துக்கொண்டு, மஹாலக்ஷ்மி, சித்தி விநாயக்கை பார்த்துவிட்டு காலா கோடாவில் இருக்கும் சேத்னாவில் குஜராத்தி தாலி சாப்பிட்ட பின், கேட் வே ஆஃப் இந்தியாவில் நின்று சம்பிரதாயமாக செல்ஃபி எடுத்து, தாஜ் ஹோட்டலின் எதிரே மெரைன் டிரைவில் வந்து கடலைப் பார்த்து
அமர்ந்து கொண்டனர்.

வைரவன் முன்பே பார்த்திருக்க, முதலில் “நிறைய செலவாகுமே ராசு?” என்றாலும், தனக்கு வசதியான உடையில் (ஆயா வீட்டில் இருந்து கொண்டு வந்தது) அவனுடன் ஒட்டி, உரசியபடி சுதந்திரமாகச் சுற்றுவதிலும், திரையில் கண்டவற்றைத் தரையில் காண்பதிலும் மேதாதான் பரவசமாக இருந்தாள்.

நீண்ட தூரம் நடந்ததில் அன்லிமிடட் தாலி கூட செரித்திருக்க, சைக்கிளில் வந்த சாய்வாலாவிடமிருந்து ஆளுக்கொரு டீயும், சுக்கா பேலும் வாங்கிக்கொண்டனர்.

மாலைச்சூரியன் அரபிக்கடலில் இறங்கும் முஸ்தீபுகளைத் தொடங்கி இருக்க, காற்றில் டிஸம்பர் மாதத்தின் மிதமான குளிர். மேற்குக் கடற்கரை என்பதால் ஐந்தரை மணிக்கு மேலாகியும் வெளிச்சம் இருந்தது.

ரயில் இரவு பதினோரு மணிக்குதான் என்பதால் நிறைய நேரம் இருந்தது. மேலும், இப்போது சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் எனப்படும்
பழைய விக்டோரியா டெர்மினஸ் (VT) பக்கத்தில்தான் இருக்கிறது.
காரை பத்து மணிக்கு விடுவித்தால் போதும்.

கடல் போரடிக்கவும், சாலையைப் பார்த்து அமர்ந்தனர். லேசான இருள் கவியத் தொடங்கவும் விளக்குகள் எரியத் தொடங்கின.
பழமையும் பாரம்பரியமும் வாய்ந்த வானுயர்ந்த கட்டிடங்கள் முதல், பேல் பூரி வியாபாரி வரை அவரவர் பங்குக்கு விளக்கேற்றி க்வீன்’ஸ் நெக்லஸைப் (Queen's Necklace) பிரகாசிக்கச் செய்தனர்.

எத்தனை விதமான கார்கள், எத்தனை விதமான மனிதர்கள், சிலரை உச்சாணியில் வைத்து, சிலரது கனவுக்கு உயிர் கொடுத்து, சிலரது கனவுகளைச் சிதைத்து, பலரை வாழ வைக்கும் மும்பை மாநகரம், பிரமிப்போடு கூடவே சின்ன பயத்தையும் தந்தது.

கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்த பல ஜோடிகள், பலப்பல நிலைகளில் அமர்ந்தபடியே பரவசம் அடையும் முயற்சியில் இருக்க, எழுந்து சென்றவர்கள் பிரிய மனமின்றி சயாமிஸ் இரட்டையர்களைப் போல் ஒட்டிக்கொண்டே சென்றனர்.

“மோகீ, இந்த ஊர்ல லவ் பண்றதுக்கே தனியா நேரம் வேணும் போல, இல்ல?”

“ஏன்?”

“இந்நேரத்துக்கு மேல ரயிலையோ பஸ்ஸையோ பிடிச்சு இவங்கல்லாம் எப்ப வீட்டுக்குப் போவாங்க, நினைச்சாலே மலைப்பா இருக்குடீ”

“அதுக்காக எல்லாரும் நம்பள மாதிரியே இருக்க முடியுமா ராசப்பூ…?”

“அப்டி என்ன ஸ்பெஷல் நாம?”

“ஏன், எனக்கு என் ராசுக்குட்டி ஸ்பெஷல்தான்”

வந்ததில் இருந்து அவன் தோளில் இருந்து தலையை நிமிர்த்தாது சாய்ந்திருந்தவளை

“நிஜமாவா, என்னைப் பாருடீ”

“...”

“மோகீ, ரெண்டு மாசத்துக்குள்ள எத்தனை பிரச்சனை, ஒருவழியா உங்க வீட்ல சரியாகிட்டாங்க. எங்க வீட்டுப் பிரச்சனைல இருந்து தப்பிக்க, இடைக்கால நிவாரணமா இங்க வந்தோம். இப்ப திரும்பிப் போற நேரமும் வந்தாச்சு”

“ஏன், இவளை ஏன்டா கல்யாணம் பண்ணினோம்னு…ஸ்ஸ்ஸ்ஸாஆ, ஏன்டா கிள்ற”

“லூசு மாதிரி உளறினா, கொஞ்சுவாங்களா?”

கணவனின் குரலில் இருந்த கோபத்தில், விலகப் போனவளால், இம்மி கூட அசைய முடியாது, மேதாவின் தலை மீது தன் தாடையை வைத்து அழுத்தியதோடு, இடையிலும் கையை இறுக்கி இருந்தான்.

“திட்டறதையும் திட்டிட்டு… விடுங்க என்னை”

“அப்டிதான் திட்டுவேன். ஆனா, விடமாட்டேன்”

“எல்லாரும் பாக்கறாங்க”

“நல்லா பாரு, அவனவன் அப்படியே சாப்பிடறான்”


விளக்கிலும் வெட்கத்திலும் விழிகள் ஒளிர குலுங்கிச் சிரித்த மனைவி எப்போதும் போல் வைரவனுக்கு வியப்பளித்தாள்.

“மோகிம்மா, அம்மா ஏன் இப்படி ஆயிட்டாங்கன்னு எனக்குப் புரியலை. மீனா அக்காக்கு டெலிவரி ஆகணும். ஜீவாக்கு அடுத்த வாரம் கேம்பஸ் இருக்கு. செல்லி ப்ளஸ் டூல இருக்கா. அடுத்த வருஷம் காலேஜ்ல சேர்க்கணும்…”

“இப்ப ஏன் இந்த லிஸ்ட் வைரூ?”

“நாம தனியா போறது எந்த அளவுக்கு சரியா வரும்னு…”

“சரியா வராது”

“மோகீ”

“தனியா போணும்னு நானா சொன்னேன்?”

“அவங்க நம்மை அப்படிப் பேசறது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடா”

“நாம பார்த்த வேலை அப்படி”

முறைத்தவன் “அதுக்காக எத்தனை நாள்டீ, அது என் வீடுன்ற உரிமையே போயிட்டாப்பல இருக்கு”

“இப்படில்லாம் யோசிக்காத ராசு”

“ம்ப்ச்… போடீ”

“சரி, நாம தனியா போயிட்டா உன்னால நிம்மதியா இருக்க முடியுமா ராசு?’

“...”

“சும்மா அங்கேயும் இங்கேயுமா நீதான் அலைவ. உன்னை மயக்கி தனியா கூட்டிட்டு போய்ட்டேன்னு எனக்கும் கெட்ட பேரு, பொண்டாட்டியைப் பார்த்ததுமே பொறுப்பை உதறிட்டுத் போயிட்டான்னு உனக்கும் கெட்ட பேரு. காசையும் செலவழிச்சு, கஷ்டமும் பட்டு, கெட்ட பேர் வாங்குவானேன்”

“அடடா, மேதாவின்னா சும்மாவா”

“போடா”

“நீ சொன்னதுல ஒன்னு மட்டும் உண்மையோ உண்மைடீ”

“என்ன?”

“மோகினி என்னை மயக்கினதுதான்”

நேரமாகி விட, டிரைவருக்கு அழைத்து , ஒரு நல்ல இடத்தில் பாவ் பாஜியும், ஃப்ரைட் ரைஸும் சாப்பிட்டு, பிரட், ஜாம், தேப்லா, பேக்கர் வடி, பழங்கள், மோர் பாக்கெட் என பயணத்திற்குத் தேவயானதை வாங்கிக்கொண்டு ரயிலேறினர்.

நீண்ட தூர பயணம் என்பதால், செகண்ட் ஏசியில்தான் புக் செய்திருந்தான்.

டிடிஈ வந்து, ‘ஸீட்டை மாற்றிக்கொள்ள முடியுமா, குஜராத்தி ஃபேமிலி. கேட்கறாங்க’ என்றவர், மாற்றிக் கொடுத்தது இருவர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய கூபே கம்பார்ட்மென்ட்.

மேதா விசிலடிக்க, வைரவன் அவள் வாயைப் பொத்தினான். சிறிது நேரத்தில் வைரவன் மீண்டும் “மோகீ, பேசாம நாம தனியாவே போயிடலாம்”

“யோவ் டியூட்டி டயமண்டு, ஊர் போய் சேர்ற வரை அம்மா, ஆட்டுக்குட்டீன்ன, பாரு ”

“வேணும்னா மோகினி வசிய மந்திரம் சொல்லவா”

“சொல்லாத, செய்”

**********************

சக்கரை ஐயா கடைக்கு வந்திருக்க, அலுவலக அறையில் சிவானந்தன் உள்பட எல்லோரும் இருக்க, பெருமாள் ஆசாரியும் தணிகைநாதனும் உள்ளே நுழைந்தனர்.

முருகப்பன் கடுகடுவென இருக்க, ஐயா “உக்காருங்க, தணிகா, அரசு எப்ப வரான்?”

“நேத்து ராத்திரி ரயில் ஏறிட்டான் அப்புச்சி. ரெண்டு நாள்ல வந்துடுவான்”

தணிகைநாதனுக்கும், பெருமாள் ஆசாரிக்கும் சாலை விடுமுறையான ஞாயிறன்று தங்களை அழைத்திருப்பதன் காரணம் தெரிந்தாலும் அமைதியாக இருந்தனர்.

முருகப்பன் “நேரா விஷயத்துக்கு வாங்க அப்புச்சி”

தண்ணீர்மலை “ஐயா எப்ப வைரவனுக்கு எதிரா பேசி இருக்காரு? அவன் எது செஞ்சாலும் சரி…”

முருகப்பன் “கொஞ்சம் அமைதியா இரு தம்பி”

“எப்போதும் என்னைதான் சொல்லுவீங்க. நம்ம கிட்ட இருந்து வெளிய போய், நமக்கு போட்டியா சாலை வெச்சு, நம்ம ஆசாரிங்களையும் அங்கே இழுத்துக்கிட்டான். இதைச் சொன்னா, என்னை அடக்கறீங்க”


மகனின் கேள்வி சரிதானே என்றது முருகப்பனின் பார்வை.

வெள்ளியன்று மதியத்துக்கு மேல் சரவணனும் பழனிவேலும் தணிகைநாதனிடமும், பெருமாள் ஆசாரியிடமும் அவர்கள் அழகு நாச்சி வேலையை விட்டுவிட்டு வைரவனுடன் இணைந்து கொள்ளப் போவதாகச் சொன்னதும் தணிகைநாதன் உடனடியாக மறுத்தார்.

“வேணாம் பழனி, மகனை வெளியூர்ல இன்ஜினீயரிங் சேர்த்திருக்க. சலுகை போகவே செலவாகும். பொண்ணு படிக்கறா. சரவணா, உனக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு. இங்க குடுக்கற சம்பளத்தை வைரவனால தர முடியாது. இந்த நேரத்துல ஏன்”


“பணத்தை விடுங்கண்ணே, அன்னைக்கு போய் பார்த்தேன். சின்னச் சின்ன நகைதான், ஆனா நுணுக்கமான, சவாலான வேலை” என்றார், அனுபவித்து வேலை செய்யும் பழனி.

சரவணனோ “பரவால்லண்ணே, நான் இங்க வந்ததுல இருந்து வைரவனோட வேலை செஞ்சே பழகிட்டேன். அங்க ஆர்டர் நிறைய வருது. ஆள் பத்தலைன்னு ரமேஷ் சொன்னான். கொஞ்ச நாள்ல வைரவனும் நிறைய சம்பளம் தருவாண்ணே”

வைரவனிடம் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை தனக்குத் தன் மகனிடம் இருக்கிறதா என தணிகைநாதனே ஒரு நொடி அசந்துவிட்டார்.

பெருமாள் ஆசாரியிடம், “நீங்களாவது சொல்லுங்களேன்” என்ற தணிகைநாதனால் ‘எங்களைதான் தப்பா பேசுவாங்க’ என்று வெளியில் சொல்ல முடியவில்லை.

பெருமாள் ஆசாரி “நான் என்ன சொல்றது, எம் மவன் என்னையே அங்க வான்னு கூப்பிடுறான், நீ வேற தணிகா”

இருவர்ப் நேற்று முருகப்பனிடம் சென்று “நாங்க புது வருஷத்துல இருந்து வேலைக்கு வரலை” என்று விட்டனர்.

“ஏன், எங்க போகப் போறீங்க?”

சரவணன் “வைரவனோட சேரப்போறோம்”

சட்டென மூண்ட ஆத்திரத்தை அடக்கிய முருகப்பன், விறைப்பாகத் தலையசைத்தார்.

தணிகைநாதன், வைரவன் வந்தபிறகு சொல்லலாம் என எண்ணியவர், அவர்களிடமும் அதையே சொல்லி வைத்தார். கூடவே, மகனால் அழகுநாச்சி அளவுக்கு சம்பளம் தர முடியுமா என்ற ஐயமும் அச்சமும் எழுந்தது தந்தைக்கு.

வைரவன் வந்து பேசுவதற்குள், இருவரும் அவசரப்பட்டுவிட, முருகப்பனும் தண்ணீர்மலையும் மொச்சக்கொட்டையைப் போல் குதித்தனர்.

முருகப்பனுக்கு சரவணனைப் பற்றிக்கூடக் கவலை இல்லை. இளைஞன், வைரவனின் வயதையொத்தவன். ஆனால், தன் பதினாறாவது வயதிலிருந்து முப்பது வருடங்களாக சாலையில் வேலை செய்யும் பழனிவேல், பாரம்பரியமான செட்டிநாட்டு மற்றும் கெம்பு, வைர நகைகளைச் செய்வதில் நிபுணர்.

வைரத்தில் குறை, தோஷம், விரிசல், புள்ளி என எதையும் ஒரு பார்வையில் சொல்லிவிடக் கூடியவர். அவர் போகிறேன் என்றதுதான் முருகப்பனின் கோபத்தை விசிறி விட்டது. எங்கே, எப்போ எனக் காத்திருந்த தண்ணீர்மலை காற்றை வீணாக்காது தூபம் போட்டான்.

முந்தைய இரவு “அவன் என்ன பெரிய இவனா(!), அவனால அழகுநாச்சியோட போட்டி போட முடியுமா?” என இருவரும் மாற்றி மாற்றி ஐயாவிடம் கத்தினர். சிவானந்தன் வழக்கம்போல் வழுக்கினான்.

பார்வதி ஆச்சி “அழகுநாச்சிக்கு அரசு போட்டி இல்லைன்னு தெரியுதுல்ல, அப்புறம் என்ன, இந்த பழனி போனா, இன்னொரு மருதமலை வரான்”

சக்கரை ஐயா “வைரவனை வேலையை விட்டு நிறுத்தினா நஷ்டம்தான்னு சொன்னேன், நீங்க ரெண்டு பேரும் கேக்கலை. விடு முருகா, போறவங்க போகட்டும்”

முருகப்பன் “கடையோட ரூல்ஸ் படிதானேப்பா அவனை வேலையை விட்டு நிறுத்தினோம்?”

“ஏன், அந்த ரூல் உம்மகனுக்குக் கிடையாதா?”

“அப்புச்சி”

“விட்டா உங்க அப்புச்சியே அவனுக்கு ஆளை அனுப்பிவிடுவாரு போல” - தண்ணீர்மலை.

“தம்பி, வேணாம்”

“ஏன், அப்படி அனுப்பினாதான் என்ன தப்பு?” என்ற ஐயா,

“நாளைக்கு நானே வந்து விசாரிக்கறேன், இப்ப போங்க” என்று எழுந்து சென்றவர், வழியில் நின்ற ஜோதியைப் பார்த்துத் தன்னையே நிந்தித்தவராய், உள்ளே சென்றார்.

பார்வதி ஆச்சி “இந்த போட்டி, பொறாமைக்கு முடிவே இல்லையா? அவன்தான் சின்னப் பயல்னா இந்த முருகனும்ல சேர்ந்து துள்ளுறான்”

“...”

ஆச்சி “வேலைய விட்டு போன்னு சொன்னா, அரசுவும் என்னதான் செய்வான்? ஆத்தா, அக்கா, தங்கச்சின்னு பார்த்து படிப்பை விட்டான். கத்துக்கிட்டதை வெச்சுப் பிழைக்கறது கூட கண்ணை உறுத்துது போல” என்றார் மனம் நொந்து.

“...”

“செட்டியாரே”

படுத்துக் கண்களை மூடிக்கொண்ட ஐயா “ஆத்தாடீ, நாம தொடங்கி வெச்சதோட பலன் இது. இப்ப என்ன செஞ்சாலும் அடிச்சுக் குதிப்பானுக. என் காலத்துக்குள்ள சரி செய்யாம போக மாட்டேன். என்னைய நம்புத்தா. என்று மேல் நோக்கிக் விரலைச் சுட்டினார்.

இன்று…

முருகப்பன் “இப்படி திறமையான ஆளுங்களை உங்க பக்கம் இழுத்துக்கிட்டா என்ன அர்த்தம்?”

தணிகைநாதன் “இவங்க வரேன்னு சொன்னது இன்னும் வைரவனுக்கே தெரியாது முருகா”

தண்ணீர்மலை “இதை நாங்க நம்பணும்?” என்றான் நக்கல் தெறிக்க.

சாரதி ஐயாவைப் பார்க்க “முருகா, போறதுன்னு முடிவு செஞ்சவங்களை நிறுத்தவா முடியும், விடுடா” என்ற தந்தையை மீறி முருகப்பனால் எதுவும் பேச முடியவில்லை.

******************

வைரவனும் மேதாவும் ஊரில் இல்லாத சமயத்தில் வள்ளியம்மையின் அண்ணனும் அண்ணியும் வந்திருந்தனர்.

வைரவன் திடீர் திருமணம் செய்ததைக் கேள்விப்பட்டு, மறுநாள் ஐயாவின் மணவிழாவிற்கே வராதவர்கள், இப்போது திடீர் விஜயம் செய்தனர்.

அண்ணனைக் கண்டதும் அகமகிழ்ந்த வள்ளியம்மை, வைரவனைப் பற்றிக் கேட்டதுமே புலம்பித் தள்ளினார்.

“என்னவோ போண்ணே, எத்தனை செல்லமா, என்னையே சுத்தி வந்த பையன், வள்ளிக்கண்ணு, சக்கரவள்ளின்னு இஷ்டம்போல கொஞ்சிப் பேசிக்கிட்டு இருந்தவன், அம்மான்னு அழைச்சுப் பேசியே நாளாகுதுண்ணே”

“சொல்லாமயே செய்யிறவன், எதுவும் கேட்டா கணக்கு பாக்கறான்”

“அந்தப் பொண்ணை ஒரு வார்த்தை சொன்னா போதும், உடனே பரிஞ்சிக்கிட்டு வந்துடறான்”

“பணக்கார வீட்டுப் பொண்ணு, வெளிநாட்டுக்கெல்லாம் போய் படிச்சவ, முதல்ல கோவப்பட்ட அவங்க அம்மா, அப்பாவும் இப்ப ராசி ஆயிட்டாங்க. இவன் பிஸினஸ் தொடங்கி, பட்டறை போட இடமும் குடுத்துருக்காங்க. இங்க எதுக்கும் வழியில்ல. பெறகு அந்தப்பக்கம் ஏன் சாயமாட்டான்?”

“அதையெல்லாம் கூட விடு, கைக்கு அடக்கமா இருந்த புள்ளைய, தனி வீடு பாக்குற அளவுக்கு அந்தக் கைகாரி மாத்திட்டா”

“உம்மக திவ்யா எனக்கு மருமகளா வந்திருந்தா, இப்படிப் புலம்பாம, ஒண்ணுக்குள்ள ஒண்…”

அதுவரை அமைதியாகக் கேட்டவர்களின் முகம் சுருங்க, வள்ளியம்மையின் அண்ணி “ஒண்ணுமில்ல, மண்ணுமில்ல. திவ்யா மாப்பிள்ளை ஒரே பையன். அவரோட அப்பா, பேங்க்ல மேனேஜரா இருந்து ரிடையர் ஆயிட்டு பையனோட சேர்ந்து இருக்கலாம்னு போனாங்க. அவங்களை சொல்லித் தப்பில்ல, தங்கமான மனுஷங்க ”

“...”

“மாமனார், மாமியார் வந்த மூணாவது மாசமே, புருஷங்கிட்ட பிணங்கிக்கிட்டு ஒர்க் ஃபரம் ஹோம் கேட்டு வாங்கிட்டு, ரெண்டு மாசமா நம்ம வீட்லதான் இருக்கா. மாப்பிள்ளையும் ரெண்டு மூணு தரம் வந்து பேசிப் பார்த்துட்டு, இவ இணங்கலைன்னதும் இப்ப பேசறதே இல்லை”

“...”

“அவளால நம்ம வெங்கடேசனுக்கு வர்ற சம்பந்தமெல்லாம் தட்டிப் போகுது”

வள்ளியம்மையின் அண்ணன் “இத பாரு வள்ளி, எம் மருமவன் பொறுப்பான பையன். உன் பேச்சுல இருந்தே நீ அவங்க கல்யாணத்தை இன்னும் மனசார ஏத்துக்கலைன்னு புரியுது. அணைவா பேசிக் கொண்டு போவியா, அதை விட்டு நீ சலம்பினா, உம் பொண்ணுங்களும் முறுக்கிப்பாங்க”

தணிகை நாதன் “நல்லா சொல்லுங்க மச்சான். இப்பல்லாம் எம் பேச்சையும் கேக்கறதில்ல. கத்தி வீசறாப்போல பேசறா”

“வள்ளி, வைரவனுக்கு சின்ன வயசு, பொழைச்சுப்பான். வீட்டுச் சுமை குறைஞ்சா அவனால தொழில்ல இன்னுமே முன்னேற முடியும். அந்தப் பொண்ணும் அதையே படிச்சிருக்கான்னு வேற சொல்லுற”

வள்ளயம்மையின் அண்ணி “உடைச்சு சொல்லுங்களேன் மாமா, வள்ளி, அவனுக்கு நீ தேவையில்லை, உனக்குதான் அவன் தேவை. உம் பொண்ணுங்களுக்கும் பின்னால அவன்தான் பொறந்த வீடு. புரிஞ்சு, பரிஞ்சு நடந்துக்கங்க” என்றாள்.

மகளின் வாழ்க்கை நினைத்த பாங்கில் செல்லாததில், இருவரிடமும் நிறைய மாற்றம், வினயம்.

*******************

வைரவன் ஊர் திரும்பிய வாரம் அதிக உரசல்கள் இன்றிச் சென்றது. இடையில் நந்தகுமார் ஒரு முறை வந்து சென்றான்.

பொங்கலுக்கென அவன் கேட்ட புடவை டிஸைன்களை வைரவன் செய்து தந்தான்.

ஒரு நாள் அதிகாலையில் யுரேகா என்று வைரவனை எழுப்பிய மேதாலக்ஷ்மி, தன் ஸ்கெட்ச் புத்தகத்தை நீட்டினாள்.

“ம்ப்ச், குளுர்ல தூங்காம என்னடீ பண்ற?” என்றவன், எட்டி விளக்கையும் மேதாவையும் அணைக்க, பட்டென தோளில் அடித்தாள்.

“முதல்ல இதைப் பாரு ராசு”

விளக்கைப் போட, விதவிதமான காதணி, ஜிமிக்கிகளை வரைந்திருந்தாள்.

அன்னாசிப் பழம் போல் முத்துத் தோடு, திராட்சைத் தோடுகள், மாதுளை போல் தொங்கட்டான், கற்கள், மீனாகாரி வேலை செய்த ஜிமிக்கி, நுணுக்கமான வேலைப்பாடு நிறைந்த ஜிமிக்கி, மொழுக்கென்ற ஜிமிக்கி, தோடுடன் கூடியது, கம்பியில் தொங்குவது, கஷ்மீரிகளைப் போல் சங்கிலி கோர்த்தது, ‘சூயி தாகா’ எனப்படும் வடக்கத்திய பாணி தொங்கட்டான் என நாற்பதுக்கும் மேற்பட்ட டிஸைன்கள்.

வழக்கமாகக் கிடைப்பதுதான். ஆனாலும் ஒரு தெரிவிசும் நாகரிகமும் மிளிர்ந்தது.

“மோகிக் குட்டூஸ், செமையா இருக்குடீ. இருக்கற ஸ்டாக் பார்த்துட்டு, மூணு நாள்ல பத்து டிஸைனாவது செய்ய முடிஞ்சா, பொங்கலுக்கு முன்னால லாஞ்ச் பண்ணிடலாம்”

“பணம் வேணுமே?”

“அதான் சாலை திறக்க ஐயா, உங்கப்பா, நந்து மாமான்னு எல்லாரும் குடுத்த பணம் இருக்கே, பாத்துக்கலாம்”

“அது… அண்ணியோட டெலிவரி”

“அது அப்புறம். இதுக்கு என்ன பேர் வைக்கலாம், மோகினி?”

“வேணாம், வேணாம்”

“அது எனக்கு மட்டும்தான். பேசாம கல்புன்னே வைக்கலாம். அதான் நமக்கு ராசி”

“கல்பு’ஸ் கலெக்ஷன், செமையா சவுண்ட் ஆகுதே”

“சரி, நீ பட்ஜெட் போடு, நான் தூங்கறேன்”

“என்னை எழுப்பிட்டு நீ தூங்குவியா?” என்பதற்குள் மேதா உறங்கி இருந்தாள்.

*********************

சிவகங்கையில் இருக்கும் ஜோதியின் வீட்டிற்கு தண்ணீர்மலையும் ஜோதியும் மறுவீட்டுக்கு சென்று வந்ததோடு சரி.


இவர்கள் வீட்டு உணவுப் பழக்கத்தை மகளிடம் கேட்டுப் பார்த்துப் பார்த்து சமைத்திருந்தனர். சிவானந்தன் மட்டும் உடன் சென்றான். அதிக நேரம் தங்காது திரும்பி விட்டனர்.

ஜோதியின் சொந்த பந்தங்கள் எல்லோரும் “என்ன பங்காளி இது, கல்யாணமாகி ஒரு மாசம் முடியப் போகுது. அம்புட்டுப் பணக்காரங்க வீட்டுல ஒரு விருந்து கூடவா போட மாட்டாங்க, முறையாதானே கட்டிக் கொடுத்தோம், ஏதானும் பிரச்சனையா” என பேசத் துவங்கினர்.

ஜோதி கணவனின் காதைக் கடிக்க, ஒரு வழியாக போகிக்கு முந்தைய வாரம் ஒரு ஞாயிறன்று விருந்துக்கு அழைக்க முடிவு செய்தனர்.

நேரே தெய்வானையிடம் போய் நின்ற ஜோதி “அத்தை, விருந்துக்காவது அசைவம் சமைப்பீங்களா?” என தன் இருப்பை உணர்த்தினாள்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 24 - PREFINAL 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
ஹப்பாடா... கடைசியில் வள்ளியம்மைக்கும் யதார்த்தத்தைப் புரியவைக்க அவங்க அண்ணனும் அண்ணியும் வந்தாங்க... இனியாவது இனிய உறவாக இன்னாது கூறாமல் இருக்கட்டும்
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
வள்ளி உண்மையை.உடைச்சி.உங்க அண்ணி சொல்லிட்டாங்க
 

Storyreader

New member
Joined
Aug 12, 2024
Messages
3
Hi mam! Nice episode. I have few questions how vairavan accepted money from Iya, nandhakumar and medha father..is this what he used to make Meenakshi bangle..
 
Top Bottom