• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 20

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 20

ந்து தலைமுறைகளைக் கடந்து, சிறிதும் பெரிதுமான மனத்தாங்கல்கள், அர்த்தமில்லா சண்டைகள், சகோதரர்களின் சச்சரவுகள், சதிபதியின் ஊடல்கள் என எத்தனையோ உள் நாட்டுக் குழப்பங்களைக் கண்டிருந்தாலும், வியாபார ரீதியாகக் கடையில் கூட இது போன்ற பெரிய கூட்டத்தின் கூச்சலை, ஆர்ப்பரிப்பை எதிர்கொள்ளாத அழகுநாச்சி இல்லம் பதட்டத்தில் இருந்தது.

வெளி வேலைகளுக்கு ஆண்கள் மூவர் இருப்பினும், அநேகமாக வீட்டினுள் புழங்குவது, கணவனை இழந்து வீட்டோடு இருக்கும் தூரத்து உறவினளான மங்காவும் இன்னும் ஓரிரு பணிப்பெண்களுமே.

காலை நேரமென்பதால் எல்லோரும் அவரவரது பணியில் இருக்க, சக்கரை ஐயா தினத்தந்தியிலும், ஆச்சி சிவபுராணத்திலும் மூழ்கி இருக்க, வாசலில் எழுந்த கூச்சலில், தோட்டவேலை செய்யும் கணேசனும் அன்புவும் விரைந்து வாசல் கதவை அடைத்து விட்டு உள்ளே வந்து நின்றனர்.

அவர்களது பதட்டத்தில் நிமிர்ந்த ஐயா “என்னடா கணேசா, ஏன் இப்படி ஓடி வர, அங்க என்ன சத்தம்?”

“ரெண்டு பெரிய வண்டி நிறைய ஆளுங்கய்யா. தண்ணி போட்டு, நம்ம முருகனய்யாவையும் சின்னத்தம்பியையும் வெளிய வரச்சொல்லி கத்துறாங்க. கேட்டை உடைச்சிடுவாங்க போல. அதோட…”

“அதோட…”

“ஏதேதோ தப்புத் தப்பா சொல்லி கண்ட கண்ட வார்த்தையில, வாய்க்கு வந்தபடி…”

இப்போது அத்தனை தொலைவைத் தாண்டி பட்டாலை வரை கூச்சல் கேட்க, அவர்கள் பெரிய இரும்புக் கிராதி கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே வந்திருப்பது புரிந்தது.


பார்வதி ஆச்சியும் மற்ற பெண்களும் கூடிவிட, ஆச்சி
“என்ன பிரச்சனை?”

ஐயா “நம்ம குடும்ப மானம், மரியாதை எல்லாம் வாங்கிட்டுப் போறதுக்கு வண்டில ஏறி கூட்டமா வந்திருக்காங்க”

தடதடவென கனத்த பர்மா தேக்குக் கதவுகள் தட்டப்பட, முருகப்பனின் குடும்பம் இங்கில்லாத நிலையில், ஐயா உடனடியாக வைரவனை அழைத்துவிட்டார்.

கூடவே சாரதிக்கு அழைத்து
“கடையைப் பார்த்துக்கோ சாரதி. ஏஜென்ஸில சொல்லி செக்யூரிட்டி ஆட்களை அதிகப் படுத்தச் சொல்லு”

“...”

“ஆமா, அதே கேஸ்தான்”

பின் கதவைத் தட்டி, உள்ளே வர வைரவன் எடுத்துக்கொண்ட பன்னிரெண்டு நிமிடங்களும் யுகமாகக் கழிய, அதற்குள் மங்கா பெரியவர்கள் இருவருக்கும் பிரஷர் மாத்திரை கொடுத்தாள்.

முருகப்பனுக்கு அழைக்க “இன்னும் முக்கா மணில வந்துடுவோம் அப்புச்சி”

வைரவன் வர, சத்தமும் அதிகமாக, இரண்டு வீடு தள்ளி இருந்த சிவநேசன் மாளிகையிலிருந்து அழைத்து “என்ன பிரச்சினை, போலீஸை கூப்பிடுங்க” என்றனர்.

வைரவன் வாசல் கதவைத் திறக்கச் செல்ல, ஆச்சி பதறினார்.

“சும்மா இரு அப்பத்தா. பேசத்தானே வந்திருக்காங்க. முதல்ல என்ன சொல்றாங்கன்னு கேப்போம்”

“இல்லடா அரசு, அடிதடின்னு…”

“இந்தப் பூட்டை நீ உம் பேரனுக்கு போட்டிருக்கலாம்”

பாட்டியும் பேரனும் பேசியதில் அந்நேரத்திலும் ஐயாவுக்கு சிரிப்பு வந்தது.

ஆண்கள் நால்வரும் வாசலை நோக்கி நடந்தனர். கதவைத் திறந்ததுமே காதில் வந்து விழுந்த கெட்ட வார்த்தைகளில் காதே கருகிவிடும் போலிருந்தது.

ஆளாளுக்குக் கத்திக் கூச்சல் போட, சிவகங்கைக் கடையில் ஜோதியின் தாய்மாமனையும், தந்தையையும் முன்பே பார்த்திருந்த வைரவனுக்கு, யார் என்ன உறவு என்று தெரியாவிட்டாலும் அவர்களை அடையாளம் தெரிய, அருகில் செல்லப் போக,

“அடிங்கடா அவனை, வயித்துல புள்ளையக் கொடுத்துட்டு, தாலியக் கட்றான்னா, கலைச்சு வுடப் பணமா கொடுக்கற, தூக்கு போட்டு சாகப் போயிடுச்சுடா எம்பேத்தி. பத்தொம்போது வயசு பச்சப் புள்ளைய ஏமாத்தி இருக்கியே, எங்க குடும்பத்துக்கே ஒத்தப் பொம்பளப் புள்ளைடா அவ. அவ மட்டும் செத்திருந்தா, மவனே, இந்நேரம் பேசிட்டு இருக்க மாட்டோம், கூண்டோட கொளுத்தி இருப்போம்”

“நீ என்ன மாமா, ஒரு கீசு கீசாம பேசிக்கிட்டு நிக்கிற” எனாறது ஒரு குரல்.

“பையன் நல்லாத்தான் இருக்கான், அதான் தம்ம பொண்ணு ஆசைப்பட்ருச்சு”

அவரவருக்குத் தோன்றியதைப் பேச, அறுபதுகளில் திடமாக இருந்த அந்த மீசை வைத்த மனிதர், கையில் அரிவாளுடன் வைரவனின் சட்டையைப் பிடிக்க, சக்கரை ஐயா “முதல்ல அவனை விடுங்க, நீங்க தேடி வந்த ஆள் அவன் இல்லை” என சத்தம் போட, மகனைத் திரும்பிப் பார்த்து, அவர்கள் ஆமோதிக்கவும்தான் மனிதர் வைரவனை விட்டார்.

வைரவன் “இப்படி சத்தம் போட்டு கலாட்டா செய்யாம, முக்கியமான நாலைஞ்சு பேர் மட்டும் பேச வாங்க. மத்தவங்க, தயவு செஞ்சு கேட்டுக்கு வெளில போயிடுங்க”

“உங்களை எப்படி நம்புறது?”

“எங்க வீட்டுக்குதானே பேச வந்திருக்கீங்க, அப்ப நம்பித்தான் ஆகணும்”

“நீ யார்றா, பொடிப் பய…”

“...”

பேசுவதற்கு யார் யார் போவதென அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ள, கவுன்சிலருக்கு கோபம் வந்து விட்டது.

“நீங்களே பேசுவீங்கன்னா, என்னை எதுக்குடா கூட்டிட்டு வந்தீங்க. இருக்குற சோலிய விட்டு உங்க கூட வந்ததுக்கு…” எனவும், ஒரு வழியாக ஜோதியின் தாத்தா, அப்பா, மூன்று தாய்மாமன்கள், இரண்டு சித்தப்பாக்கள், கவுன்சிலர், அவரது அல்லக்கை ஒன்று என ஒன்பது பேர் பேச வந்தனர்(!)

அப்போது பின்னிருந்து உள்ளே வந்திருந்த தணிகைநாதன் “கணேசா, அன்பு, இங்கனயே, அஞ்சாறு நாற்காலியும் ரெண்டு பெஞ்சும் கொண்டு வந்து போடுங்க” என்றபடி ஒரு மர நாற்காலியுடன் வந்தவர் “அப்புச்சி, உக்காருங்க” என்றார், ஐயாவிடம்.

சக்கரை ஐயா தண்ணீர்மலை செய்த தவறை மறுக்கவில்லை. ஆனால், அவனும் முருகப்பனும் இல்லாதபோது ஒரு பட்சமாக எதையும் ஏற்கவும் இல்லை. அவர்கள் பேசிய பேச்சில், உள்ளே ஒளிந்திருக்கும் பேரனைக் கொன்றுபோடும் அளவு ஆத்திரமும், கூடவே இந்த நிலைக்குக் கொண்டு வந்ததில் ஆயாசமும் எழுந்தது.

கணேசனும் அன்புவும் மங்கா கலந்து கொடுத்த டீயையும் குடிக்கத் தண்ணீரையும் , தெருவில் காத்திருப்போருக்கும் சேர்த்தே கொடுத்தனர்.

அதற்குள் நேரம் சென்றிருக்க, முருகப்பனின் கார் வரவும், கூடாடம் வாங்கிய காசுக்கு விசுவாசமாய் கூச்சலிட்டது.

முருகப்பன் “ஏதோ, சின்னப்பையன் தப்புப் பண்ணிட்டான்…” என மேம்போக்காய் தொடங்க,

ஜோதியின் சிதத்தப்பாக்களில் ஒருவர் “யாரு சின்னப் பையன். உம் மவனோட பவுசு அத்தனையும் தெரிஞ்சுதான்டீ வந்திருக்கோம். அவன் ஊர் மேயறதும், நீ காசு கொடுத்து மேக்கரிக்கறதும்… த்தூ, அப்பனாய்யா நீ. அதுசரி, மவனே இப்படி இருந்தா, உம் பவுசு என்னவோ, யாருக்குத் தெரியும்?” எனவும் எகிறிக் கொண்டு சென்ற சிவானந்தன் அவரை அடித்துவிட, இருவரும் கட்டிப் புரள, கணேசன், வைரவன், தணிகைநாதன் மூவரும் சிரமப்பட்டு விலக்கினர்.

கவுன்சிலர் “முதல்ல உங்க பையனை வரச்சொல்லுங்க. எங்க ஒளிச்சு வெச்சிருக்கீங்க, கடைலயும் இல்லயாம்” என உருப்படியாக ஒன்றைப் பேசினார்.

அவர்களை அமர வைத்து, அமைதிப்படுத்தி, தண்ணீர்மலையை அழைத்தனர்.

அவன் என்னவோ உத்தமன் போலவும், பெண்கள்தான் அவனைத் தேடுவது போலவும் பேசியவன் லேசில் ஒத்துக்கொள்ளவில்லை.

தண்ணீர்மலை ஜோதிக்கு அனுப்பிய தகவல்கள், இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எனக் காட்டினர்.

“நான் எத்தனையோ பேரோட செல்ஃபி எடுத்துருக்கேன். ஏன், காரைக்குடி கடைல வேலை பாக்குற பொண்ணுங்க கூட…” என்றவனின் முதுகில் ஓங்கி அடித்து, மேலும் அழுக்குத் தண்ணீர் பாயாதபடி நிறுத்தினான் சிவானந்தன்.

நன்கு படித்தவனைப் போலிருந்த ஒரு இளைஞன் “உங்க கடை சிசிடிவில பார்த்தாலே கடைல வேலை இருக்குன்னு சொல்லிட்டு எந்தங்கச்சி எத்தனை நாள் வீட்டுக்கு லேட்டா வந்தான்னு தெரியும்”

தண்ணீர்மலை “அதான் சொல்றேன், உங்க தங்கச்சி பொய் சொன்னா, நான் என்ன செய்யிறது? தப்பை உங்க பக்கம் வெச்சுக்கிட்டு…”

அந்தப் பையன் “நிறுத்துடா, நீதான் அப்பன்னு நிரூபிக்க, ஒரு DNA டெஸ்ட் போதும். கர்ப்பமா இருந்தாலும் டெஸ்ட் செய்ய முடியும், தெரியும்ல?” என்றவன், தன் மனிதர்களிடம் திரும்பி

“முதல்லயே போலீஸுக்குப் போவோம்னு சொன்னேன், யாராச்சும் கேட்டீங்களா?” எனக் கத்தினான்.

தொண்டையைக் கனைத்துக் கொண்ட சக்கரை ஐயா “பேசினது போதும். மங்கா, அந்த பஞ்சாங்கத்தை எடுத்து வந்து ஆச்சி கிட்ட குடு. வர்ற முதல் முஹூர்த்தத்தை பாத்து சொல்லுத்தா”

பார்த்த ஆச்சி “நாளான்னைக்கே நல்ல முஹூர்த்தம்தான்”

“நாளை மறுநாள் புதன் கிழமை. நல்ல முஹூர்த்தம். இங்க வீட்ல வெச்சே கல்யாணம் பண்ணிக்கலாம். பொண்ணை அழைச்சிக்கிட்டு வந்து சேருங்க. எத்தனை பேர் வருவீங்கன்னு சொல்லுங்க”

ஒரு நிமிட அமைதிக்குப் பின், ஜோதியின் தாத்தா “நாங்க என்ன செய்யணும்னு…”

சண்டை நடந்தவரை அமைதியாக இருந்துவிட்டு இப்போது நக்கலாக “உங்க பொண்ணு வரும்போதே வயித்துல வாரிசோட வரா, வேறென்ன வேணும்?” என்ற தெய்வானை, மாமியாரின் முறைப்பில் கப்பென்று அடங்கினார்.

மேலும் சில விஷயங்களை முடிவு செய்துகொண்டு, சத்தமாக வந்தவர்கள், சம்பந்திகளாகித் திரும்பிச் செல்கையில் மாலை நான்கு மணி.

ஒரே நடையில் பஞ்சாயத்து பிசுபிசுத்துப் போய் கலெக்ஷன் குறைந்ததில் கவுன்சிருக்குதான் கொஞ்சம் வருத்தம்.

ஆனால், உண்மையான சண்டையே அவர்கள் சென்ற பிறகுதான் தொடங்கியது.

தெய்வானை “நேர்ல போய் பேசுடா, காலத்தைக் கடத்தாதன்னு எத்தன முறை சொன்னேன், கேட்டியா, இப்ப பாரு, என்ன ஜாதியோ, என்ன கருமமோ, நம்ம வீட்டுக்கு மருமகளா வரத்துக்கு அருகதை இல்லாதவளெல்லாம்…”

சக்கரை ஐயா “பார்வதி” என உறும, எண்பத்தாறு வயதில் மதிய உணவு கூட உண்ணாமல், பிரச்சினையை எதிர்கொண்டவருக்கு தேகமே ஆடியது.

“உம் மவனுக்கும் மருமவளுக்கும் படிச்சுப் படிச்சு எத்தனை முறை சொன்னேன். பெண் பாவம் பொல்லாதது, தப்பு செஞ்சா ஒத்துக்கச் சொல்லி. எத்தனை பேரை எத்தனை நாள் ஏமாத்த முடியும். காசைக் குடுத்து கடமையைக் கழிக்கலாம், செஞ்ச பாவத்த எங்க போய்த் தொலைக்கிறது?”

“...”

“புள்ளை வரம்ங்கறது எத்தனை ஒசத்தின்னு, அது இல்லாதவங்களுக்குதான்டா தெரியும். எவ்வளவு சுலபமா காலங் கடத்தாமப் போய் கலைக்க சொல்றா மகமிண்டி? அதுக்காக உங்காத்தா எத்தனை பேச்சு கேட்டிருக்கான்னு உனக்குத் தெரியுமா?”

முருகப்பன் “அப்புச்சி…”

“பேசாதடா, வலிக்கு பயந்து புண்ணை கவனிக்காம விட்டா இப்படித்தான் சீ(ழ்) கோத்துக்கிட்டு ரணமா நாறிப் போகும். நாம பெத்த பையன்தான். அதுக்காக என்ன செஞ்சாலும் சரின்னு தடவிக்குடுக்க, அவன் என்ன நாயா?”

தாத்தா தன்னை நாயுடன் ஒப்பிட்டதில் தண்ணீர்மலை “ஐய்யா” என்றான் கோபத்துடன்.

சிவானந்தன் “சும்மாயிருடா”

மாமனாரின் முடிவை மீற முடியாத தெய்வானைக்குத் தன் பிறந்த வீட்டினரையும் உறவுகளையும் நினைத்துக் கண்ணைக் கட்டியது.

“சொந்த பந்தமெல்லாம் என்ன நினைப்பாங்க? கல்யாணமாகி ஆறாம் மாசமே புள்ளை பொறந்தா அந்தப் பொண்ணைப் பத்தி தப்பா பேச மாட்டாங்களா?”

“அந்தப் பொண்ணு தன்னை யாரும் தப்பா பேசிடக் கூடாதுன்னுதான் தூக்கு மாட்டிக்கப் போயிருக்கா. ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்ச தப்புக்கு ஏச்சும் பேச்சும் அந்தப் பொண்ணுக்கு மட்டுமா? ஏன், உம்மவனுக்கு தப்பு செய்யத் தைரியம் இருக்குல்ல, அதையே இது என் குழந்தைன்னு சொல்றதுல காட்டுறது?” - ஆச்சி.

முருகப்பன் “அப்படியில்ல ஆத்தா, அந்தப்பொண்ணு ஏற்கனவே நம்ம இனமும் இல்லை…”

பார்வதி ஆச்சி “ஏன் முருகா, உம்மவனை நம்ம ஜாதில இருக்கற பொண்ணா பார்த்து தப்பு செய்யச் சொல்ல வேண்டியதுதானே?”

தண்ணீர்மலை “பாத்தீங்களாப்பா, இதுக்குதான் அப்பவே சொன்னேன், அந்த மேதாவைக் கல்யாணம் செஞ்சு வைங்கன்னு. அவ இவன்கிட்ட என்னத்தைக் கண்டாளோ, இவன் பின்னாடி போயிட்டா. இப்பவும் ஒன்னும் குறைஞ்சு போகல. இதோ, நம்ம மங்காக்காவோட மக சீதாவை…”

பேச்சு தடைப்பட்டதோடு, வாயிலிருந்து ரத்தம் தெறிக்கும் அளவிற்கு வைரவனிடம் பேயறை பட்டிருந்தான் தண்ணீர்மலை.

தன் ஆத்திரம் தீர இடை விடாது முகம், தோள், முதுகு என மாறிமாறி அடித்தவனை தணிகைநாதனும் சிவானந்தனும் தடுத்து விலக்கிய பின்னும் அடிக்கப் பாயந்தான்.

பார்வதி ஆச்சி “அரசு, என்னடா நீயும் ஆத்திரப் படற…?”

“ஆத்திரப்படாம, என்ன செய்ய சொல்ற அப்பத்தா? அவ வேலைக்கு வந்தபோதுதான் நாய் மாதிரி துரத்தினான். இப்ப அவ என் பொண்டாட்டி. இன்னும் அவளைப் பத்தி பேசறான், பார்த்துக்கிட்டு விரல் சூப்ப சொல்றியா?”

தணிகைநாதன் “வைரவா, என் ஆத்தா கிட்ட இப்படியா பேசுவ?”

“நான் என் அப்பத்தா கிட்ட பேசறேன். நீயே சொல்லு அப்பத்தா, மங்காக்கா முகத்தைப் பாரு. எவ்வளவு ஷாக்காகி நிக்கறாங்கன்னு. அவன் ஒழுங்கா இருந்தா சீதாவை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லுவானா, அதைக் கேட்டுட்டு சித்திதான் சும்மா இருப்பாங்களா?”

“ஏழைன்னா அத்தனை இளக்காரம், அப்படிதானே?”

“...”

“நல்லவேளை, சீதா ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கறா. இங்க இருந்தா அவளையும் சீண்டி இருப்பான்”

முருகப்பன் “பார்த்துப் பேசு, வைரவா”

“பாத்ததுனாலதான் சித்தப்பா பேசறேன். இவன் குடுத்த மூக்குத்திக்கும் கொலுசுக்கும் ஆசைப்பட்டு வந்த பொண்ணுங்களை விடுங்க… இவனோட இம்சையைத் தாங்க முடியாம அழகுநாச்சில வேலையை விட்ட பொண்ணுங்க எத்தனைன்னு உங்களுக்குத் தெரியாதா?”

“...”

“தொரைக்கு அட்ஜஸ்ட் பண்ணாத பொண்ணுங்களை நேரத்துக்கு சாப்பிடப் போக விடாம வேலை கொடுக்கறது, வீக்லி ஆஃப் அன்னிக்கு வரச் சொல்றது, பத்து நிமிஷம் லேட் ஆனாலும் லீவு, சம்பளம் கிடையாதுன்னு பயமுறுத்தறது…”

“பாவம், அந்த பத்தாயிரம், பன்னிரெண்டாயிரத்தை சேர்த்து வெச்சு எத்தனையோ வீட்டு, செலவுகளை, தன் கல்யாணத்தை நடத்திக்கணும்னு நினைக்கற அந்தப் பொண்ணுங்க, வேற வழி இல்லாம இவங்கிட்ட பல்லை இளிச்சுட்டு, வெளிய காரித் துப்பறதை எங் காதாலயே கேட்டிருக்கேன், ஏன், சிவாண்ணா, உனக்குத் தெரியாதா இதெல்லாம்?”

“...”

“அது சரி, நீ எதுக்கு வாயைத் திறந்திருக்க, இதுக்குத் திறக்க? உன் வேலை சரியா நடந்தா போதாதா?”

தணிகைநாதன் “போதும்டா வைரவா”

“நானாப்பா போய் பேசினேன், இவன் கூடல்லாம் மனுஷன் பேசுவானா?”

“...”

“கல்யாணமாகி, ரெண்டு மாசமான இதே வீட்டு மருமகளைப் பத்திப் பேசறான், அப்பவும் அமைதியா போனா, நான் சோறுதான் திங்கறேனா, இல்ல… எம் பொண்டாட்டிப்பா அவ…”

தண்ணீர்மலையைச் சொடுக்கிட்டு அழைத்தவன் “எங்கிட்ட என்னத்தைக் கண்டாளோன்னு கேட்ட இல்ல, அதை அவளைதான் கேக்கணும். ஆனா, உன்னை ஏன் வேணாம்னு சொன்னான்னு சொல்றேன், கேட்டுக்க…”

“…”

“எங்கிட்ட மட்டுமில்ல, என்னைத் தவிர சாலைல இருக்கற இருபத்தஞ்சு ஆசாரிங்க, அத்தனை பேரும் ஆம்பளைங்க, அவங்க நடுவுல பாதுகாப்பா, இயல்பா இருந்தவளால, அத்தனை பொண்ணுங்களும் ஆட்களும் வேலை செய்யற, சொந்த அக்கா புருஷன் கல்லால உக்கார்ந்து இருக்கற கடைல, உன் ஒருத்தனால நிம்மதியா வேலை பார்க்க முடியாம, ரெண்டு தரம் அவ கோயமுத்தூரைப் பாக்கப் போய்ட்டா”

“...”

“நான் சிவகங்கை போனபோதும் அந்த ஜோதியோட வீட்ல இருந்து பேச வந்திருந்தாங்க. பாவம், பார்த்தாலே ஸ்கூல் படிக்குற சின்னப் பொண்ணு மாதிரி இருந்துச்சு. ஐயா சொன்னாப்பல, நாளன்னைக்குத் தாலி கட்டி அந்தப் பொண்ணோட ஒழுங்கா குடும்பம் பண்ணாம, ஊர் மேய்ஞ்சன்னு வைய்யி.. அண்ணன்னு கூட பார்க்க மாட்டேன். நானே போலீஸ்கிட்ட போயிடுவேன்”

“...”

தணிகைநாதன் “வைரவா, இப்ப நிறுத்தப் போறியா, இல்லையா, வா, நாம போவோம் ” என மகனின் கையைப் பிடித்து இழுத்தவர் “ஆத்தா, அப்புச்சி, இவனுக்கு என்னவோ ஆயிடுச்சு. கொண்டு போய் வீட்ல விட்டுட்டு வரேன்”

“நான் என்ன சின்னப்பையனா, நீங்க ஒண்ணும் வரவேணாம், நானே போறேன்” என்றவன் ஆச்சியின் அருகில் சென்று “கொஞ்சம் அதிகமா பேசிட்டேனோ?” என்றான் தாழ்ந்த குரலில்.

சக்கரை ஐயா “அங்க என்னடா ரகசியம், அதான் எல்லாருக்கும் சேர்த்து நீயே பேசிட்டியே”

“ஸாரிங்கய்யா”

தண்ணீர்மலையின் அருகில் சென்றவன் “கோவத்துல அடிச்சிட்டேன், கல்யாணப் பையன், போய் ஃப்ரெஷ் ஆகிட்டு, ரெஸ்ட் எடு” என்று அவனது ஷர்ட்டை சரி செய்ய, தண்ணீர்மலை அசையவில்லை.

தெய்வானை “அடிக்கறதையும் அடிச்சிட்டு, சமாதானம் என்ன வேண்டிக் கிடக்கு?”

“இது நீங்க செஞ்சிருக்க வேண்டியது சித்தி”

“...”

“சித்தப்பா, கல்யாணத்துக்கு என்ன வேலைன்னாலும் சொல்லுங்க, செஞ்சுடலாம்”

“...”

மீண்டும் தண்ணீர்மலையிடம் திரும்பிய வைரவன் “இதெல்லாம் விட்டுட்டு, அந்தப் பொண்ணை புடிச்சுப் போய், அவ வேணும்னு கொஞ்சநாளாச்சும் நினைச்சிருப்பல்ல, அதை யோசனை செய். ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்க. செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டுப் பொறுப்பேத்துக்க தனி தைரியம் வேணும். அது உங்கிட்ட இருக்குன்னு நிரூபிச்சுக் காட்டு. ஜாதிக்காக உன் குழந்தையை அனாதையா விடுவியாடா?

“சரியான நேரத்துல அவங்க காப்பாத்தலைன்னா, வயத்துல உன் புள்ளையோட, அந்த ஜோதி செத்து போயிருப்பாடா”

அத்தனை நேரம் எல்லோரிடமும் முறைத்தபடி, வைரவனின் அடிகளைத் தாங்கி, விறைத்துக்கொண்டு அசராது நின்ற தண்ணீர்மலை, சட்டெனத் தொய்ந்துபோய் மடங்கி உட்கார்ந்தான்.

முருகப்பன் பதற, தெய்வானை “தம்பி” என அருகில் செல்ல நகர்ந்தாள்.

“அவனை ஃப்ரீயா விடுங்க சித்தி. தானே சரியாயிடுவான்”

ஐயாவின் அருகில் சென்று “நான் வரேங்கய்யா, என்ன செய்யணும்னு சொல்லுங்க”
என்றவன், மிக மெல்லிய குரலில் “சிவாண்ணா கிட்ட சொல்லி தண்ணீர்மலை எங்கேயும் ஓடிடாம பாத்துக்கங்க,” என்றவன், உரக்க “அப்பத்தா, நான் வரட்டா”

ஆச்சி “சீக்கிரமா போடா, எனக்கே ஏழு கால் பண்ணிட்டா பேரம்பிண்டி”

“முன்னாலயே சொல்ல மாட்டியா அப்பத்தா” என்றவன், ‘கல்பு, என்னைக் காப்பாத்துடா’ என்ற வேண்டுதலோடு தந்தையுடன் தன் வீட்டை நோக்கிச் சென்றான்.

*******************

காலை எட்டு மணிக்கு முன்பே இட்லி, காஃபியுடன் கிளம்பிய கணவனும் அவனது பெற்றோர்களும் குறிப்பிட்ட நேரம் கடந்தும் ஊர் போய்ச் சேர்ந்ததைத் தெரிவிக்காததில் டென்ஷனான ராகவி, மீண்டும், மீண்டும் முயற்சித்தும் யாருமே அழைப்பை ஏற்காததில் கவலையானாள்.

ராமநாதனும் தன் பங்குக்கு சக்கரை ஐயா வரை முயற்சித்தார். ஐந்து மணிவரை காத்திருந்தும் செய்தி எதுவும் வராததோடு, யாருமே திரும்ப அழைக்காததில், செய்தியில் வரும் விபத்துகளும் விபரீதங்களும் ஒன்று விடாது நினைவுக்கு வர, அழுத்தம் கூடி, ராகவி அழத் தொடங்கினாள்.

நளினி “மாமா, மேதாவைக் கூப்பிட்டு பேசிப் பாருங்களேன். எதிர் வீடுதானே?”

ஆயா “ஆமா தம்பி” என, ராகவி எப்படியாவது பதில் வந்தால் போதுமென ஆமோதித்தாள்.

மேதாவின் திருமணத்தன்று மாலை தடை செய்திருந்த அவளது எண்ணை விடுவித்ததுமே முதலில் அவர் பார்த்தது, அவளது ஸ்டேட்டஸில் கற்பகத்தின் லிங்க்கைதான்.

தனக்கான மகளின் தகவல்களைத் தேடிய மெத்தப் படித்த அந்தத் தந்தைக்குத் தடை செய்த எண்ணிலிருந்து வரும் தகவல்கள் டெலிவரி செய்யப்படாதென்று தெரியவில்லை.

தடை செய்த முதல் மூன்று நாட்களில் மட்டுமே எண்ணற்ற அழைப்புகள் இருக்க, அவரது ‘அகம்’ நிறைந்தது.

மேதாவை அழைத்தார்.

*****************

மேதாவிற்குப் பசித்தது. ஆனாலும், வைரவன் சொன்ன பிறகும் கூட தன் பிடிவாதத்திலிருந்து இறங்கும் வழி தெரியாது உண்ணாவிரதம் இருந்த மாமியாருக்கு எதிரில் உண்பதற்கு அவளது மனமும் நாகரிகமும் இடம் தரவில்லை.

லேப்டாப்புடன் அமர்ந்து, காலையிலிருந்து வந்திருந்த ஆர்டர்கள், விசாரணைகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தவள், ஒருவர் கனடாவிற்கு டெலிவரி செய்வீர்களா என, செக் செய்து சொல்கிறேன் என்று பதில் அனுப்பினாள்.

நடுவில் ஒருமுறை மீனாக்ஷி அழைக்க, மேதா மொபைலை வள்ளியம்மை பேசுவதற்கு வாகாக பிடித்துக் கொள்ள, “மீனு, நல்லா இருக்கதானே, சும்மாதானே பேசின, சரி, நாம அப்புறமா பேசலாம்” என அவர் வைத்துவிட, மேதாவிற்கு முகத்தில் அறைந்ததுபோல் இருந்தது.

காலையில் இட்லிக்கு செய்த புதினா துவையலும், நேற்றைய காரக் குழம்பு சிறிதும் இருக்க, வைரவன் சொல்லிக் கொடுத்த அளவில் எலெக்ட்ரிக் குக்கரில் (சமீபத்திய வரவு!) சாதம் மட்டும் வைத்திருந்தாள்.

உணவு நேரம் தாண்டி மூன்று மணித்யாலம் கடந்திருக்கப் பசியிலும், குடிக்கத் தண்ணீர் கூடக் கேட்காது படுத்திருந்த வள்ளியம்மையின் பிடிவாதத்திலும், அலட்சியத்திலும் சிறிது கோபமும் எரிச்சலும் எழுந்தது.

நான்கு மணிக்குப் பள்ளியிலிருந்து ஸ்வர்ணலதா வந்ததும், அம்மாவும் மகளும் சாப்பிட்டனர்.

‘நான் வடிச்ச சோறு மட்டும் பரவாயில்லையா?’ என்ற கேள்வி எழுவதை மேதாவால் தடுக்க முடியவில்லை.

நேரம் ஐந்தாகியும் இன்னும் வைரவனைக் காணோம். எழுந்து பின்பக்கம் சென்று முகம் கழுவி வந்தவள், லேப் டாப்பில் லதா எதையோ செய்து கொண்டிருப்பதைக் கண்டாள்.

“லேட்டாப்பை விடு லதா, நான் ஆன்லைன்ல இருக்கேன்”

“எங்கண்ணனோட லேப்டாப்தானே. பாரும்மா, இப்பல்லாம் எனக்கு மொபைல், லேப்டாப் எதுவுமே கைல கிடைக்க மாட்டேங்குது”

மேதா செய்வதறியாது நிற்க, அவளது மொபைல் ஒலித்தது. எடுக்க, அப்பா!

லேப்டாப்பை மறந்தவளாக, மீண்டும் புழக்கடைக்குச் சென்று “ஹலோ டாடி”

“ம்ஹ்க்கும்… சிவா, அவங்க அம்மா, அப்பா எல்லாரும் பத்திரமா வந்துட்டாங்களா, பிரச்சனை எதுவுமில்லையே?”


அவர் கேட்டதை உள்வாங்கிவள், சிறிது நிதானித்து, பிறகு “மதியமே வந்துட்டாங்க”

“...”

“டாடி”

“அவங்க போய் சேர்ந்ததுக்கு தகவலே சொல்லலை. ராகா டென்ஷனாயிட்டா. அம்மாதான் உன்னைக் கேட்கச் சொன்னா” என ஒப்பித்தார்.

“ஓகே டாடி”

“...”

“...”

மொபைல் துண்டிக்கப்பட்ட சத்தம் கேட்டது. உடனடியாக பிளாக் செய்யப்படுமோ என மேதா நினைக்க, அது நடக்காததில் ஒரு அல்ப சந்தோஷம்.

‘நீ ஏன் டாடி பேசல, அம்மாவே பேசி இருக்கலாமே’ போன்ற இயல்பான உரையாடல்களே நினைவில் இல்லை.

வீட்டினுள் ஜீவாவின் குரல் கேட்டது. அவர்கள் மூவரும் பெரிய வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று யூகித்தபடி இருந்தனர்.

பாலையும் தண்ணீரையும் அளந்து டீ தயாரித்தாள். முற்றத்தில் தணிகைநாதனும் வைரவனும் பேசும் சத்தம் கேட்டது.

பசி மீறிப்போய் டீயைக் குடித்ததில் வயிற்றுக்குள் அமிலக் குழிழ்கள் வெடித்தன.

*****************

“சுடு தண்ணி போட்றா ஜீவா” என்ற வைரவன், நிதானமாகக் குளித்தான். மதியம் வடித்த சோறும், துவையலும், தோசையுமாக இரவு உணவு செல்ல, சீக்கிரமே மேலே வந்து விட்டனர்.

கீழே ஜீவாவும் லதாவும் உறங்கிய பின், தணிகைநாதன் “அம்மாடீ, அவன் யாரைக் கட்டிக்கிட்டாலும் உன் மகன்தான். அந்தப் பொண்ணு மேல உசிரையே வெச்சிருக்கான். அந்தப் பய தண்ணீர்மலை மகமிண்டி பேரை எடுத்ததுமே, அடி வெளுத்துட்டான்”

“...”

“நீ இன்னைக்கு மாதிரி புடிவாதம் பிடிச்சு பட்டினி கெடந்துன்னு செஞ்சா, யாருக்கும் கோபம்தான் வரும், சொல்லிட்டேன்”

“...”

“அவனுக்கு அவளைப் புடிச்சிருக்கு. நல்ல பொண்ணாத்தான் தெரியுது. சந்தோஷமா இருக்கட்டுமே. விட்டுக் கொடுத்துப் போனோம்னா, நமக்கும் மகனா இருப்பான். இதுக்கு மேல உன்னிஷ்டம்”

********************

“மோகிக் குட்டூஸ், அந்த எருமையை அடிச்சதுல கை, தோளாப்பட்டையெல்லாம் யெல்லாம் வலிக்குதுடீ. ப்ளீஸ், புடியேன்”

“அந்த வாட்டர்பிக்கை (waterpig) நீ ஏன் தொட்ட, போய்க் கை கழுவிட்டு வா”

“அதான் வெந்நீர் ஊத்திக் குளிச்சேன்ல”

குப்புறப் படுத்திருந்தவனின் தோள், கை, முதுகு என அமுக்கியவள் “எனக்காக அவனை அடிச்சியா ராசு”

“எத்தனை தரம்டீ கேப்ப?”

“சொல்லேன்டா”

“சிறப்பு”

சிரித்தாள்.

“மோக்ஸ், இதம்ம்மா இருக்குடீ”

“இருக்கும், இருக்கும்” என்றவள், கணவனிடமிருந்து சத்தம் வராது போக, அதற்குள் ஆழ்ந்து உறங்கி இருந்தான்.

*******************

மறுநாள் காலை வள்ளியம்மைக்குப் பொங்கலை ஊட்டிய வைரவன், சாலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த தணிகைநாதனிடம் “அப்பா, முன்னால பட்டறைக்கு இடமும், பின்னால சின்னதா வீடுமா ஒரு இடம் வாடகைக்கு வந்திருக்கு. பார்க்கப் போகலாமா?”

“வீடு எதுக்குடா?”

“கல்யாணமும் பண்ணிக்கிட்டு எத்தனை நாள்ப்பா நான் வீட்லயே இருக்க முடியும்? அம்மாவும் எத்தனை நாள் இப்படி பட்டினி கிடந்து நேரத்துல மருந்து சாப்பிடற மிஸ் பண்ணுவாங்க? அதனால…”

“???”

“எங்களுக்குதாம்ப்பா வீடு”
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 20
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Manikodi

New member
Joined
Jun 19, 2024
Messages
12
வள்ளியம்மை க்கு இம்புட்டு பிடிவாதம் ஆகாது
 

Manikodi

New member
Joined
Jun 19, 2024
Messages
12
இந்த ராசு இப்ப மோகினியோட தனி குடித்தனம் போனா என்ன செய்வீர்கள்
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
வைரவா இன்னிக்கு எபில புல் புளோல வெளுத்து வாங்கிட்டான் 👌👌👌👌👌
 
Joined
Jun 19, 2024
Messages
26
என்ன ஒரு அடி சிறப்பு மிக சிறப்பு திருந்தி தொலைடா தண்ணீர் வண்டி
 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

"எங்கிட்ட என்னத்தை கண்டாளோன்னு அவளைத்தான் கேட்கணும்" - ஒருவேளை இதையெல்லாம் கண்டு இருப்பாளோ? 😉😉😉

 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
😍😍😍

"எங்கிட்ட என்னத்தை கண்டாளோன்னு அவளைத்தான் கேட்கணும்" - ஒருவேளை இதையெல்லாம் கண்டு இருப்பாளோ? 😉😉😉

😍😍😍

"எங்கிட்ட என்னத்தை கண்டாளோன்னு அவளைத்தான் கேட்கணும்" - ஒருவேளை இதையெல்லாம் கண்டு இருப்பாளோ? 😉😉😉

இருக்கலாம்🙈😍
 
Joined
Jun 19, 2024
Messages
33
இருக்கலாம்🙈😍
வீரபாண்டி தேரு போல
பேரெடுத்த சிங்கம் தான்
ராமா் என்ன தர்மரென்ன
மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு
ஏழு ஜென்மம் தான்..😍😍


மருத அழகரும் மாமருத சொக்கரும்…
வள்ளி மயில அள்ளி எடுத்து…
வடிவேல கையில் புடிச்சு…
புள்ளி மயில் மேல் வந்த புருஷனும்…🙈🙈


வரம் தரும் உயர்ந்தவன்...
கரம் கரம் இணைந்தவன்...
இவன் தலைவி நாயகன்...❤️❤️

 
Last edited:

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
வீரபாண்டி தேரு போல
பேரெடுத்த சிங்கம் தான்
ராமா் என்ன தர்மரென்ன
மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு
ஏழு ஜென்மம் தான்..😍😍


மருத அழகரும் மாமருத சொக்கரும்…
வள்ளி மயில அள்ளி எடுத்து…
வடிவேல கையில் புடிச்சு…
புள்ளி மயில் மேல் வந்த புருஷனும்…🙈🙈


வரம் தரும் உயர்ந்தவன்...
கரம் கரம் இணைந்தவன்...
இவன் தலைவி நாயகன்...❤️❤️

இசையருவி😍😍❤️❤️
 
Top Bottom