• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 17

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 17


ஞா
யிறு காலை ஜீவாவின் நேயர் விருப்பப்படி வைரவன் பூரியும் கிழங்கும் செய்ய, தணிகைநாதன் அவர் பங்கிற்கு மதியத்திற்கு பச்சரிசி சோறும் வெண்டைக்காய் புளி மண்டியும் அப்பளமும் வேண்டுமென்றார்.

வெளியில் செல்ல நினைத்திருந்த வைரவன் சமையலறையிலேயே நேரம் சென்றதில் சற்றே எரிச்சலுற்றான்.

தெரிந்து செய்கிறாளா, பிறர் சொல்லிச் செய்கிறாளா என்று தெரியவில்லை. ஆனால், கடந்த இரண்டரை வாரங்களில் லதாவை அவனே அழைத்து வேலை சொன்னால் கூட பல சமயங்களில் செய்வதில்லை. பெற்றோர்களும் அவளைக் கண்டு கொள்ளவில்லை. மேதாவே செய்யட்டுமே என்று நினைத்தார்களோ என்னவோ?

மேதாவை யாரும் எதுவும் சொல்லவில்லைதான், அதே நேரம் அவளிடம் வலிந்து பேசவும் இல்லை. ஜீவா மட்டும்தான் இயல்பு மாறாது இருந்தான்.

புது மருமகளுக்கே உண்டான தயக்கங்களோடு, வீட்டினர் அவளை இன்னும் முழுமனதாக ஏற்காத நிலையில், மேதாவே உணர்ந்தும் உணராததுமான சங்கடமான தருணங்கள் ஏராளம்.

மூன்று நாட்களாக வெளுத்து வாங்கிய மழை நின்று ,
இன்று சூரியனார் வெளியில் தலைகாட்டியதுமே, தணிகைநாதன் “லதா, கலர் துணியை எல்லாம் மிஷின்ல போட்டு ஓட்டு” என்றதில் ஒரு மணி நேரமாக ஒடிய துவைக்கும் இயந்திரம் மணியடித்து அழைத்தது.

கடாயில் சற்று தாராளமாகவே நல்லெண்ணெய் விட்டு, கடுகு, ஜீரகம், வெந்தயம், சோம்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய்கள், நீளவாக்கில் அறிந்த பச்சை மிளகாய்கள், இரண்டு கை சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், கறிவேப்பிலை, தக்காளி, வெண்டைக்காய் என ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கிய வைரவன், முன்பே ஊறவைத்து, வேக வைத்திருந்த மொச்சைக் கொட்டையையும் சேர்த்து வதக்கி, மஞ்சள், மிளகாய், தனியா, உப்பு என பொடிகளைச் சேர்த்து, கெட்டியாகக் கரைத்த புளிக் கரைசலை ஊற்றினான்.

ஒரு அச்சு வெல்லத்தைப் போட்டுத் தளதளவெனக் கொதிக்கையில் சிட்டிகை பெருங்காயத்தையும், இரண்டு பல் பூண்டோடு சிறிது மிளகையும் நசுக்கிப் போட்டான்.

கத்தி, மணையைக் கழுவியபடி வேடிக்கை பார்த்த மேதா “இது ஏன் தண்ணியா இருக்கு?”

“அரிசி களைஞ்ச ரெண்டாவது தண்ணீலதான் புளியே கரைப்பாங்களாம். இப்ப இருக்கற கெமிகல் போட்ட அரிசில சத்து ஏது? அதான் கொஞ்சமா அரிசி மாவைக் கரைச்சு ஊத்தறேன் பாரு”

“ஓ… இப்பதான் எங்கம்மா செய்யுற மாதிரி சரியா இருக்கு” என்றவளை முறைத்தவன்,


“புருஷனா லட்சணமா மூணு வேளையும் சமைச்சுப் போடறேன்ல, ஏன்டீ சொல்ல மாட்ட?”

“கோச்சுக்காத ராசா, நான் என்ன சமைக்க மாட்டேன்னா சொல்றேன், அன்னைக்கு நைட் கூட செஞ்சேனே”

“எது, சான்ட்விச்சுன்ற பேர்ல எங்களைக் கொல்லப் பாத்தியே அதுவா?”

“அந்த பிரட் நல்லா இல்லாதது என் தப்பா?”

“வைரவா, உன் எதிர்காலம் ஒளிமயமா கண்ணைக் கூசுதுடா”

வெளியே தணிகைநாதன் “துணியை காயப் போடுங்க” என்றதற்கு, ஜீவாவும் லதாவும் நீ, நான் என சண்டை போடுவது கேட்டது.

“நீ போய் காயப்போடுடா, ரொம்ப நேரம் நாம சேர்ந்தே நின்னா சரியா இருக்காது” என்றவனை மேதா மறுக்கவில்லை.

வைரவன் சமையலை முடித்து வெளியில் வந்த பின்னும், மேதாவைக் காணாது தேடிச் செல்ல, துணிகளை உலர்த்தி விட்டுப் பின்கட்டுப் படியில் அமர்ந்திருந்தவளின் முகமே சரியில்லை.

அருகில் சென்று அவளை இடத்தபடி அமர்ந்தவன் “வாட் மேடம்?”

“...”

“மோகி”

“ஒன்னுமில்ல”

“சரி, வா போகலாம்”

“...”

“என்னடீ?”

“நான் என் துணிய ஊற வெச்சிருக்கேன். அலசிப் போட்டு வரேன். நீங்க போங்க”

“அப்ப ஓகே, அதுக்கேன் இத்தனை சோகம், சீக்கிரமா வா” என உள்ளே வந்து விட்டான்.

ஜீவா “அண்ணி எங்க?”

“துணி தோய்க்கறா”

“மிஷின்தான் முடிஞ்சாச்சே”

“அவ துணியை அவ தோய்க்கறா..” என்ற வைரவனுக்கு பல்ப் எரிய மீண்டும் வேகமாக மனைவியிடம் சென்றான்.

மேதா பிழிந்து வைத்திருந்த துணிகளை எடுத்து உலர்த்தி, கிணற்றில் நீர் இறைத்து கை, கால், முகம் கழுவியவன், “ஸாரிம்மா, இதையெல்லாம் நானும் எதிர்பார்க்கல”

“பார்க்காம விட்டா கூட பரவாயில்லங்க. ஒரே பக்கெட்ல கிடந்த உங்க ட்ரெஸ்ஸை மட்டும் எடுத்திருக்கா. அதான் கொஞ்சம் அப்ஸெட்டா…”

“...”

என்ன சொல்லுவான், என்ன சொல்ல முடியும்? சாலைக்கு செல்லத் தொடங்கியதில் இருந்தே, வழக்கமான வீட்டுச் செலவுகளை தணிகைநாதனும், வள்ளியம்மையின் மருத்துவச் செலவும், தனிப்பட்ட திடீர் செலவுகளும் வைரவனுடையது என்று பிரித்துக்கொண்டவன்.

பைக், எல் ஈடி டீவி, ஜீவாவிற்கும் தனக்கும் லேப் டாப், வாஷிங்மெஷின் , எல்லாரது செல்ஃபோன் என வாங்கியதெல்லாம் வைரவன்தான்.

ஒன்பது கிலோ துணிகளைத் துவைக்கக்கூடிய பெரிய இயந்திரத்தில் மேதாவின் உடைகளுக்கு மட்டும் இடமில்லாமல் போயிற்றா?

இந்த செல்லி! இருவருக்கும் நாலைந்து வயதுதானே வித்தியாசம்? பெரியவர்களின் மனநிலையை இவள் பிரதிபலிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

முன்பு சாலையிலிருந்து வைரவன் வர மாலை ஏழு மணி ஆனாலும், நேரத்தோடு விளக்கேற்றச் சொல்லி வள்ளியம்மை மகளுடன் போராடுவதை எத்தனையோ நாள் பார்த்திருக்கிறான். இப்போது அவன் வீட்டிலேயே இருந்தும், மேதாவை செய்ய விடக் கூடாதென்ற ஒரே காரணத்தால் காலை, மாலை இரண்டு வேளையும் பூ மாற்றி, விளக்கேற்றி, வீடே ஊதுபத்தியிலும் கம்ப்யூட்டர் சாம்பிராணியிலும் மணக்கிறது. அடிக்கடி இது போல் ஏதோ ஒன்று…

இத்தனைக்கும் முந்தைய வார இறுதியில் நந்தகுமாரும் மீனாக்ஷியும் இவர்களை மதுரைக்கு விருந்துக்கு அழைத்தனர்.

அவசரத் திருமணத்தில் செய்யாமல் விட்டதை சரி செய்யவென, வள்ளியம்மை, மீனாக்ஷிக்குப் பட்டுப் புடவையும், ஸ்வர்ணலதா கேட்ட அனார்கலி சுடிதாரும், நிலாவுக்கு ஃப்ராக்கும், தணிகைநாதன், நந்தகுமார், ஜீவாவிற்கு சட்டைகளும் வாங்கி வந்தான்.

வள்ளியம்மை “அவளுக்கு வாங்கிக் கொடுத்ததை கேக்காம இருக்க நம்ம வாயை அடைக்கிறானா?” என தணிகைநாதனிடம் சொன்னதைக் கேட்ட வைரவனுக்கு எங்கேயாவது முட்டிக்கொள்ளலாம்போல இருந்தது.

கொடுத்ததை வாங்கிக் கொண்டவர் “பார்த்து செலவு செய்டா, வேலை வேற இல்லை” என வார்த்தையால் அடித்தார்.

அன்னையின் அன்பை நன்கறிந்தவனுக்கு அவரது அரசியல் சத்தியமாகப் புரிவில்லை.

மீனாக்ஷியின் கணவன் என்பதற்காகவே நந்தகுமாரிடம் இருக்கும் அன்பும் மரியாதையும் மேதாவிடம் ஏன் இல்லை?

எனக்குப் பிடித்த, நானே தேர்ந்தெடுத்த பெண் என்பதாலா?

தன் திடீர் திருமணத்தால் விளைந்த அதிர்ச்சி, என்மேல் உள்ள உரிமையுணர்வு போன்ற சுயசமாதானங்கள் அனைத்தும் விரைவில் நீர்த்துப் போய்விடுமோ என்று வைரவனுக்குத் தோன்றியது.

யோசனையுடன் நின்றவனைப் பார்த்த மேதா, அவன் செய்ய நினைத்து, தொடங்கி இருக்கும் முயற்சிகளுக்கு இது போன்ற உணர்வுச் சிக்கல்கள் பெரும் அழுத்தம் தரும் என்பது புரிய,

‘அவங்களைச் சொல்லிட்டு, நானும் அதேயே செய்யறேன் பாரு’

“வைரூ, ஸாரி. சின்ன விஷயம், எமோஷனலாயிட்டேன், விட்ருங்க”

“நான் பாத்துக்கறேன்டா, ட்ரெஸ் எல்லாம் ஈரமாயிடுச்சு பாரு, நீ போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வா”

மாடியேறச் சென்றவளை வேகமாக நெருங்கி, அவள் முழங்கையை இறுகப் பிடித்தவன் “மோக்ஸ், இந்த வீட்ல நீ தனின்னா, நானும் தனிதான், போ”

சாப்பாடு ஆனதும் வைரவன் “செல்லி, இனிமே என் துணியையும் உங்க அண்ணியே துவைப்பா. நீ விட்டுடு”

தணிகைநாதன் புரியாது விழிக்க, ஜீவா, கேள்வியாகப் பார்த்தான். புரிந்த இருவரும் கமுக்கமாக இருந்தனர்.

******************

பௌர்ணமி நெருங்குவது கூடத் தெரியாத அளவில் இருளும் மழையும் இரவைப் போர்த்தி இருக்க, நல்ல தேக்கு மரத்தினால் ஆன, இழுப்பறையுடன் கூடிய சிறு மேஜையில் (writing desk) ஒளியை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விளக்கில் அமர்ந்து வைரவன் தீவிரமாக வரைந்து கொண்டிருந்தான்.

மேதாலக்ஷ்மி அவனுக்கு எதிர்ப்புறத்தில் தலைக்கு இரண்டும், பக்கத்தில் ஒன்றுமாகத் தலையணைகளை வைத்துப் படுத்தபடி, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

வைரவன் தலை நிமிராது “எவ்வளவு நேரம்டீ என்னையே பார்ப்ப, போரடிக்கலையா உனக்கு, கூச்சமா இருக்குடீ.
நீயும் டிஸைனர்தானே, உருப்படியா ஏதாவது செய்யலாமில்ல?”

எழுந்து அவனருகில் அமர்ந்தவள் “வெயிட்டீஸ் வைரவ், ஒரு ஒரு கேள்வியா போவோம். சாலைல சைடுல உக்கார்ந்துகிட்டு அத்தனை பேருக்கு முன்னால உன்னைப் பாக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”

“அடடா, என்னைப் பார்க்கதான் அழகுநாச்சில உனக்கு சம்பளம் குடுத்தாங்களா?”

கணவனுடைய டீ ஷர்ட்டின் கையை மேலே சுருட்டியவள், அவனது புஜத்தையும், அதில் இருந்த வளையத்தையும் வருடி அழுத்தமாக முத்தமிட்டு “நீ என்ன வேணா சொல்லிக்கோ, எனக்குக் கவலையில்ல” என்று தோளில் சாய்ந்து கொண்டாள்.

“மோகினி, வேலையைக் கெடுக்காதடீ” என்று சிரித்தவன், சீரியஸான குரலில் “நீ இந்த டெஸ்க்கும் லைட்டும் வாங்கிட்டு வந்தபோது, மத்தவங்களை மாதிரி பணத்தை ஏன் வேஸ்ட் செய்யறன்னுதான் எனக்கும் தோணிச்சு. ஆனா ரொம்ப வசதியா இருக்குடா. தேங்க்ஸ்” என்றவனுக்கு பலமான கடி கிடைத்தது.

“ஆ… எதுக்குடீ கடிச்ச?”

“தேங்க்ஸ், கீங்ஸ்ன பாரு. நானே கல்யாணத்துக்கு பின்னால வர ஹஸ்பண்டோட முதல் பர்த் டேக்கு இதைப் போய் வாங்கினேன்னு சோகமா இருந்தா…”

“சோகத்தைப் போக்க கொஞ்சம் வேலை பாக்கறது?”

“நீங்க சொன்ன வேலையெல்லாம் செஞ்சாச்சு. பாக்கறீங்களா?”

“ஒரு பத்து நிமிஷம் என்னை ஃப்ரீயா விடு, வரேன்”

அவனை வேடிக்கை பார்ப்பதைத் தொடர்ந்தவளுக்கு, அழகுநாச்சியில் வேலை இல்லை என்றவுடன், அவனது வீட்டினரைப்போல் அதிர்ச்சி அடையாவிட்டாலும், அவனது வருமானம் எவ்வளவு அவசியம் என்பது தெரிந்ததால், மேதாவிற்குக் கவலையாக இருந்தது.

வாயைத் திறந்து சொல்லாவிட்டாலும் ‘உன்னால், உன்னைத் திருமணம் செய்துகொண்டதால்’ என்ற குற்றப்பத்திரிக்கை வள்ளியம்மையின், தணிகைநாதனின், ஏன் லதாவின் முகத்தில் கூட அச்சடிக்கப்பட்டிருந்தது.

வைரவன் உற்சாகம் குறையாது வழக்கம்போல் தன் வேலைகளைச் செய்ய, மேதா எதுவும் கேட்கவில்லை.

அழகுநாச்சியை விட்ட இரண்டே நாட்களில் காரைக்குடியிலேயே
இருந்த, அதே போன்ற வேறு சில பெரிய நகைக் கடைகளில் இருந்து வைரவனுக்கு அழைப்பு வர, மறுத்துவிட்டான்.

மகனைப் புரிந்தவராக தணிகைநாதன் அமைதியாக இருக்க, வள்ளியம்மை “கல்யாணமும் கட்டிக்கிட்டு வீட்லயே இருந்தா சரியா வருமா?” என்றதை யாருமே ரசிக்கவில்லை.

தணிகைநாதன் “அம்மாடீ, இதென்ன பேச்சு?”

“அழகுநாச்சில உரிமை இல்லாம என்னை வெளிய தள்ளி இருக்கலாம். ஆனா, சக்கரை ஐயா பேரன்னு ஊருக்கே தெரியுமே. இப்ப நான் உள்ளூர்லயே வேற இடத்துல வேலைக்குப் போனா சரியா வராது” - வைரவன்.

தணிகைநாதன் “சரியா சொன்னடா. நானும் இதையேதான் நினைச்சேன்”

“இங்கேயும் இடமில்லை, வேற எங்கேயும் போக மாட்டேன்னா எப்படி?”

வைரவன் எதுவும் பேசும் முன், அல்லது அவன் எதுவும் விபரீதமாக சொல்லிவிடாதபடி, நீண்ட வருடங்களுக்குப் பிறகு தணிகைநாதன் “வள்ளி” எனக் கடுமையாகக் குரலை உயர்த்தினார்.

இருவரது பெற்றோர்களும் தங்கள் பெண்ணின் காதலை கௌரவக் குறைவாக, ஆணின் காதலை பண, அதிகார இழப்பாக, மொத்தத்தில் நம்பிக்கை துரோகமாகப் பார்த்தனர்.

அன்றிரவு தன்னை சமன் செய்து கொள்ள, புதிதாக டிஸைன் வரைவதில் ஈடுபட்டவன் வரைந்ததைக் கண்ட மேதா, அயர்ந்தாள்.

இரட்டை அல்லது மூன்று வட சங்கிலியில், செட்டிநாட்டு வீடுகளின் புகழ்பெற்ற வளவு பகுதியை, தூண்களுடன் கூடிய மண்டபம் போல் பதக்கமாக வரைந்திருந்தான். அதையே இரு அளவுகளில், முகப்பாகவும் அணிந்து கொள்ளும்படி மாற்றிக் காட்டி இருந்தான்.

தூண்கள், இடைவெளி, செவ்வகம் என தேவையான இடங்களில் கற்களின் நிறங்களை வரைந்திருக்க, மேதாவால் ஒரு சக டிஸைனராக அதன் வடிவத்தைக் கற்பனை செய்ய முடிந்தது.

“அரசரே, சூப்பரா இருக்கு “

“ம்…”

மடியிலிருந்த ஸ்கெட்ச் பேடையும் இதர பொருட்களையும் நகர்த்தி வைத்துக் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான்.

“மோகினி, கிட்ட வாயேன்”

“என்ன?”

இரண்டு கைகளாலும் மேதாவின் கன்னங்களைப் பிடித்து, அவள் கண்களை ஊடுருவியவன் “டெஸ்ட்டா வைக்கிற?”

“என்ன டெஸ்ட், பரீட்சைன்னு…”

“ஓ… ஒனக்கு ஒன்னும் தெரியாது, அப்டியா?”

“ஆமா, நானே ஒரு அப்பாவி”

“அடியே, நீ ஒரு மேதாவி மட்டுமில்ல, மேல் தாவின்னு எனக்குத் தெரியும். சின்னப் பையனை கெடுத்துப்புட்டு அப்பாவியாம்ல”

“என்னை என்ன செய்யச் சொல்ற, மேதாவிங்கறதும், மேடம்னு சொல்றதுமா இருந்துட்டு, ராத்திரியானா மோகினியாட்டம் ஆடுறதும், பகல்ல பேரைச் சொல்லாம பம்முறதுமா இருக்க, அதான் அப்டி செஞ்சேன். பரவால்ல, என் ராசப்பு என்னை ஏமாத்தலை”

“மோகினியாத்தா, அப்போ நான் பாஸா?

“ம்.. ம்”

“அப்ப சரி, மோகினியாட்டத்துக்கு நேரமாச்சு வா”

“எதே?”

பிறர் முன் தன்னைப் பெயர் சொல்லாது ஜாடையிலேயே அழைப்பவன், அன்று மாலை எங்கோ சென்று வர, பைக் சத்தம் கேட்டு மாடியிலிருந்து இறங்கி வந்த மேதா, மேல் படிகளிலேயே கண்மறைவாக நின்று கொண்டாள்.

சற்று நேரம் பொறுத்தவன், லதாவிடம் “செல்லி, அண்ணி எங்க?”

“தெரியாதுணா”

“எங்க போவா, கூப்பிட்டா வரப்போறா” என்ற வள்ளியம்மையின் பதிலில் இருந்த அலட்சியம்!

தன் தாயால் தன்னிடம் இப்படிப் பேச முடியும் என்பதையே இன்னும் வைரவனால் நம்ப முடியவில்லை. தாயும் பிள்ளையும் வேறு என்பதை அடிக்கடி நிரூபித்தவரின் வார்த்தைகளைக் கடப்பது அத்தனை எளிதாக இல்லை.
பல சந்தர்ப்பங்களில் சொற்களுக்கு எதிரான உணர்வுகளின் எதிர்வினையை முயன்று கட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது.


“மோகீ” என்ற உரத்த ஒற்றை அழைப்பில் மேதாவின் வயிற்றில் பாலை வார்த்த வைரவன், மாதாவின் வயிற்றில் புளியைக் கரைத்திருந்தான்.

“ஹலோ, தூங்கிட்டியா?”

“இல்ல”

நேரத்தைப் பார்த்தவன் “நாளைக்குப் பேசலாம், இப்ப தூங்கு” என விளக்கை அணைத்தான்.

******************

KARPAGAM என்ற வார்த்தையின் மேல் நட்சத்திரங்கள் மின்ன, தனிப்பட்ட அனுபவத்திற்கு அழைத்தது குரல். வைரத்தில் தொடங்கி, semi precious stones எனப்படும் செயற்கை ரத்தினங்கள் வரை மோதிரங்கள், பிரேஸ்லெட்டுகள், டாலர்கள், மூக்குத்தி, ஜிமிக்கி, ஹூப்ஸ் (hoops) எனப்படும் கொக்கியிலிருந்து தொங்கும் ஜிமிக்கி, மெட்டி என தங்கத்திலும், வெள்ளியிலும் செய்யப்பட்ட சிறு நகைகளின் படத்தோடு, அதன் விலை, முதல் வணிகத்துக்கான சலுகை, பதிவு செய்யும் விதம், பணம் செலுத்தும் வழிகள், திருப்தி இல்லையெனில் திருப்பி அனுப்ப வேண்டிய முறையும் நிபந்தனைகளும் என எளிமையும் அழகும் கூடிய பக்காவான வெப்சைட்டை மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்து, குறை ஏதும் இருக்கிறதா, இன்னும் சிறப்பாக்க இயலுமா என்ற் பார்த்தபடி அந்த டெஸ்க்கைச் சுற்றி வைரவன், மேதா, ஜீவா மூவரும் அமர்ந்திருந்தனர்.

அதிலிருந்து சிலவற்றைத் தொகுத்து ரீல்ஸாகவும் ஷார்ட்ஸாகவும் எடுத்திருந்தான் ஜீவா.

கொஞ்ச நாட்களாகவே முன்னெடுத்திருந்த முயற்சியை வைரவன் இபபோது துரிதப்படுத்தி இருந்தான்.

மேதாவிற்கு முதன் முதலில் அவன் வரைந்தவற்றைப் பார்த்த தினம் நினைவு வந்தது.

வைரவன் இதுவரை டிஸைன் செய்த விதவிதமான நகைகளின் படங்கள் அடங்கிய ஸ்கெட்ச் புத்தகங்கள் மட்டுமே ஆறைத் தாண்டியது.

ஒற்றைக் கல் வைரத்திலேயே அத்தனை டிஸைன்கள் வைத்திருந்தான்.

முதல்முறை அதைப் பார்த்தவளுக்குத் தன்னிடம் ஆர்வம் இருக்கும் அளவுக்குத் தன் முனைப்பு இல்லை என்பதை உணர்ந்த மேதாவின் முகம் வாடிவிட்டது.

“என்ன லண்டன் மேடம், என்னாச்சு?”

“...”

“இப்டி உக்கார்ந்து பொறாமைப்படறதுக்கு பதிலா, உருப்படியா ஏதாவது செய்யலாம்தானே, இதையெல்லாம் இதுல ஃபோட்டோ எடு”

“ஐ, ஏது இந்த canon காமெரா?”

“நந்தகுமார் மாமாவோடது. இரவல் வாங்கி வெச்சிருக்கேன்”

எடுத்த படங்களை அடர் சிவப்பு, கறுப்பு, பச்சை நிறப் பின்னணி கொடுத்து, ஃபோட்டோஷாப் செய்து மெருகற்றினாள்.

“நல்லா மேக்கப் போடறடீ”

“நக்கலு…, காளியாத்தா பொட்டு வெச்சுக்கிட்டு ஒரு காஜல் கூட இல்லாம இருக்கேன்…”

“கேட்க வேண்டியதுதானே, இல்ல, நீயே கூட வெளிய போய் வாங்கிட்டு வரலாம்”

“அதெல்லாம் வாங்கலாம். இந்த சைட்டுக்கு பணம்?”

“அதெல்லாம் இருக்கு. ஆனா உன்னோட சில டிஸைனை செய்யச் சொல்லி இருக்கேன். வெள்ளி பிரச்சனை இல்ல. தங்கம்தான் பிரச்சனை”

“என் கிட்ட இருக்கற பணத்தை யூஸ் பண்ணிக்கலாம்ல, சொன்னா கேக்கறீங்களா?”

“இருக்கட்டும்டா மோக்ஸ், தேவைப்பட்டா நானே எடுத்துப்பேன்” என்றிருக்க, இப்போது எத்தனை செலவழித்திருக்கிறான்?

“அண்ணி, ஃபைனல் பண்ணிடலாமா” என்ற ஜீவாவின் குரல் காதில் விழாமல் சிந்தனையில் இருந்தவளின் தோளில் பட்டென அடி விழுந்தது.

மேதா “ஏன்டா அடிச்ச?” என, ஜீவா விழுந்து புரண்டு சிரிக்க, அவனிடமும் “என்ன சிரிப்பு?” எனவும் வைரவன் நக்கல் சிரிப்பை மறைத்தான்.

ஜீவா “வைரவா, இவ்ளோ வரைஞ்சு வெச்சிருக்கியே, இதெயெல்லாம் செஞ்சு விக்கணும்னா நிறைய பணம் வேணுமே, பேசாம இதையே ஃபோட்டோ எடுத்து போட்டா?”

மேதா “போட்டா, உங்கண்ணன் கஷ்டப்பட்டு வரைஞ்சதை வேற எவனாவது ஈஸியா காப்பி அடிச்சு, அடுத்த வாரமே நகைய லான்ச் பண்ணிடுவான்”

“அப்ப இதையெல்லாம் எப்படி மார்க்கெட் பண்றது?”

“நிறைய டிஸைனுக்கு பேடன்ட் வாங்கி இருக்கேன். சிலதுக்கு அப்ளை செஞ்சிருக்கேன். அழகுநாச்சி மாதிரி யாராவது பெரிய கடைகள்ல கேட்டா டிஸைனை ஒப்பந்தத்துக்கு தரலாம். அவங்க பிராண்ட்ல நம்ம டிஸைன் வரும்”

ஜீவா “அப்ப அழகுநாச்சிக்காக, அங்க வர்ற கஸ்டமர்களுக்காக நீ செஞ்ச டிஸைன்லாம் தர்மத்துக்குதானா?”

“அங்க வேலை பாக்கறோம். செய்னு சொன்னா மாட்டேன்னா சொல்ல முடியும்? ஆனா, அப்படி கேட்டவங்களுக்குத் தகுந்த மாதிரி தனிப்பட்ட டிஸைன் செஞ்சதாலதான் இப்ப மத்த கடைங்கள்ல இருந்து கூப்பிடறாங்க “

“அதென்ன தனிப்பட்ட டிஸைன்?”

“சில பேர் கிட்ட வைரம், ரூபின்னு கல்லு மட்டும் இருக்கும். அம்பத்தாறு கல்லு இருக்கு. அதுக்குள்ளதான் நகை செய்யணும்னு நிப்பாங்க. இருக்கறதுக்கு ஏத்த மாதிரி டிஸைன் பண்ணணும்”

மேதா “இதுக்கு நீங்க பேசாம AI ல டிஸைன் செஞ்சிருக்கலாம்”

ஜீவா “அதானே”

இருவரையும் முறைத்த வைரவன் “நீ ஒரு கம்பயூட்டர் இன்ஜினீயரிங் ஸ்டூடன்ட், அடுத்த வாரம் உனக்கு கேம்பஸ் வேற. மேதாவி மேடம் ஒரு டிஸைனர், லண்டன் ரிட்டர்ன்ட். வெளில சொல்லிடாதீங்க ரெண்டு பேரும்”

மேதா “ஏன்?” என்றாள் ரோஷத்துடன்.

“முதல்ல நான் எதிர் பாக்கற துல்லியத்தை AI தரணும். ஏன்னா, நம்ம ஊர் நகைங்களோட வேலைப்பாடு அப்படி. இரண்டாவதா, இப்ப நான் செயின், ஸ்பைரல், ரிங் ஹுக், S ஹுக், ட்வென்ட்டி ரெட் ஸ்டோன் லெய்ட் இன் ஏ ரோ ன்னு குறிப்பு கொடுத்தா, அது பதிவாகும்.

ஆர்ட்டிஃபீஷியல் இன்டலிஜென்ஸ்ங்கறதே மனுஷனோட மூளையைப் படிச்சு அதே போல இயந்திரம் சிந்திக்கறதுதான்.
இதுல நான் கொடுக்கற கட்டளைகளை (commands) சேமிச்சு வைக்கற AI யார் எப்ப கேட்டாலும் அவங்க எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகற வரை என்னோட, அல்லது வேற யாரோட குறிப்புகளை வரைந்ததைதான் காட்டும். அதனாலதான் நிறைய AI இமேஜஸ் ஒண்ணு போலவே இருக்கு. அதுல நம்மோட தனித்தன்மை, திறமை எங்க இருக்கு?”

மேதா “நாம காப்பிரைட் வாங்கிட்டா?”

“மனுஷ மூளை உருவாக்கின விஷயங்களுக்குதான் உரிமை கேட்க, கொண்டாட முடியும். குறிப்பு கொடுக்கறது நாமதான்னாலும், வரிசைமாற்றம் மற்றும் சேர்க்கை வரையறை மூலம் (Permutation combination) ஏற்கனவே விதைக்கப்பட்ட குறிப்புகளைதான் AI ஜெனரேட் செய்யும்”

“ஸோ?”

“ஸோ, இயந்திரம் உருவாக்கின கன்டென்ட்டை பதிப்புரிமை அதாவது காப்பிரைட் செய்ய முடியாது”

"வாட்டர்மார்க்...?"


"நீ தண்ணிய ஊத்தினாலும், பாலை ஊத்தினாலும் திருடறவனுக்கு கவலையில்லை"

ஜீவா “அதானே”

மேதா “என்ன, எல்லாத்துக்கும் அதானே?”

ஜீவா வைரவனைப் பரிதாபமாகப் பார்க்க, வைரவன் “உனக்கு இது தேவைதான்டா”

மீண்டும் ஒரு முறை சரி பார்த்தனர். அடுத்த நாள் பெற்றோரிடம் காட்டினான், பெரிய வீட்டுக்குச் சென்று ஐயாவிடமும் ஆச்சியிடமும் காட்டியவன், மாலையில் மேதாவுடன் பிள்ளையார்பட்டிக்குச் சென்றான்.


பிள்ளையாரைப் பார்த்ததும் தலையில் குட்டிக்கொண்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டு, கண்களை மூடிக் கை கூப்பி வேண்டிக்கொண்டு, நடுநடுவே சுற்றி இருந்தவர்களைப் பார்த்துக்கொண்டு, குருக்கள் கொடுத்த விபூதியை இட்டுக்கொண்ட மேதாவிற்கு, விநாயகரையே இமைக்காது பார்த்தபடி நின்ற வைரவனைக் காண வியப்பாக இருந்தது.

வெளியில் வந்ததும் “கோவிலுக்கு வந்துட்டு சாமியைக் கும்பிடாம நின்னா என்ன அர்த்தம்?” என்றாள்.

“நான் கும்பிடலைன்னு உனக்குத் தெரியுமா, நீ பார்த்தியா?”

“ஆமா”

“எது, உன்னை மாதிரி பட்டுபட்டுனு கன்னத்துல போட்டுக்கிட்டு, மத்தவங்களைக் கவனிக்கணுமா?”

“...”

“எதிர்ல சாமி இருக்கும்போது கண்ணை மூடிக்கவா கோவிலுக்கு வர்றோம். இங்க வந்து கண்ணும் மனசும் நிறைய உள் வாங்கிக்கிட்டா, எங்க இருந்தாலும் கண்ணை மூடினா கண்ணுக்குள்ள கல்பு வருவார். அப்பப்ப தோண்றதை அவர்கிட்ட சொல்லுவேன். அவ்ளோதான் எனக்குத் தெரியும்”

“நம்ம பிஸினஸுக்காகக் கூட நீங்க வேண்டிக்கலையா?”

“யாருடீ இவ, இந்த வெப்சைட்டே கல்பு பேர்லதான் இருக்கு. எல்லாம் அவர் பார்த்துக்குவார்”

அடுத்த நாள் கார்த்திகை. நல்ல நேரத்தில் KARPAGAM லாஞ்ச் செய்யப்பட்டு, கூகுள், இன்ஸ்டா, ஃபேஸ்புக், யூ ட்யூப் என அனைத்து சமூக வளைத் தளங்களிலும் விளம்பரங்கள் வரத் தொடங்கியது.

மீனாக்ஷிக்கு சொல்லி இருந்ததில், மெட்டிகள், மோதிரம், தோடுகள் என வாங்கி முதல் கணக்கைத் தொடங்கி வைத்தாள்.

ஜீவா தன் இன்டர்ன்ஷிப்பில் வந்த ஸ்டைஃபன்டில், ஸ்வர்ணலதாவுக்கு ஹூப்ஸ் ஜிமிக்கி வாங்கிக் கொடுத்து, ஹோமிலேயே ஹோம் டெலிவரி பெற்றுக்கொண்டாள்.

பொரி, பழம், பூ என வாங்கி வைத்துவிட்டு மாலையில் விளக்கேற்றத் தயாராகி வந்து தயங்கி நின்ற மேதாவிடம் ஒன்றும் சொல்லாத வள்ளியம்மை

“ஜீவா, விளக்கேத்துடா, லதா ஏத்தக்கூடாது” என்றதைக் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்த வைரவன்,

“இன்னைக்கு கார்த்திகை. இப்பக் கூட அவ விளக்கேத்தக் கூடாதுன்னா நாங்க இந்த வீட்ல இருக்கறதுல ஏதாவது அர்த்தம் இருக்காம்மா?”

**********************


நளினியும் ஆயாவும் கார்த்திகைக்குப் பொரியும் கந்தரப்பமும் செய்ததில் வீடெங்கும் வெல்லப்பாகு மணக்க, காலையில் எழுந்தது முதலே சோர்வாக இருந்த ராகவிக்கு சுளீர், சுளீரென அடுத்தடுத்து வலி வர, சாஸ்திரத்திற்கென நாலு மணிக்கே பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றி விட்டு மருத்துவ மனைக்குச் சென்றனர்.

பிரசவத்திற்கென குறித்த தேதிக்குப் பதினோரு நாள் முன்பே, கார்த்திகை தீபத்தன்று ராகவி, சிவானந்தனுக்குப் பெண் குழந்தை பிறந்தது.

இரண்டு மணி நேரத்திற்குள் வலி வந்து, ஹாஸ்பிடல் வந்து, குழந்தையும் பிறந்துவிட்டதில், பெரியவர்கள் மூவரும் திகைப்பும் மகிழ்ச்சியுமாக நிற்க, எந்தக் குழந்தைக்காகப் பிரசவம் வரை பாலாவைப் பார்க்கவே கூடாதென்றனரோ, அந்தக் குழந்தையை , செவிலியின் கையிலிருந்து முதலில் வாங்கிய அதே பாலா, ஒரு மாதமாகச் சொல்லிக் கேட்ட பழக்கத்தில், மருமகளிடம் “மாமா பாரு” என்றான்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

மோகினியாட்டத்தோட சேர்த்து நடுவுல நடுவுல கதகளியும் ஆடலாம்...;);)🙈🙈

 
Last edited:

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
112
சூப்பர் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️ஆன்லைன் பிசினஸ் அருமை
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
வாவ், ஆன்லைன் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணியாச்சா, கல்பு பார்த்துப்பார்.👌👌👌👌👌
பொண்ணு பிறந்தாச்சு, சூப்பர்,
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
வெண்டை காய் மண்டி recipe Super... பாலா கிட்ட பிள்ளை செம்ம...
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
வயதானாலும் உலக விவரம் அறியாத லதா செய்வதும் நன்றாக இல்லை
வயது, விவரம், மனமுதிர்ச்சி எல்லாம் அடைந்துவிட்ட வள்ளியம்மை செய்வதும் நன்றாக இல்லை

பாலாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார்களா? ஹ்ம்ம்....
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
வயதானாலும் உலக விவரம் அறியாத லதா செய்வதும் நன்றாக இல்லை
வயது, விவரம், மனமுதிர்ச்சி எல்லாம் அடைந்துவிட்ட வள்ளியம்மை செய்வதும் நன்றாக இல்லை

பாலாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார்களா? ஹ்ம்ம்....
எல்லாரும் போனா, அவன் தனியா எப்படி இருப்பான்🤔
 
  • Like
Reactions: VPR
Top Bottom