• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 15

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
56
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 15

ந்த அங்கணத்தில் விரவி நின்ற அகந்தை, தயக்கம், ஆர்வம், பயம், கவலை, தவிப்பு, குற்றவுணர்வு, விலகல், எரிச்சல், ஏமாற்றம், தர்மசங்கடம் என எது குறித்த கவலையுமின்றி உறவாடியது நிலா மட்டுமே.

உடன் பிறந்தவர்களும் வீட்டு மாப்பிள்ளையும் பெற்றவர்களின் அங்கீகாரத்திற்குக் காத்திருக்க,
பிறந்த தினத்தில் இருந்தே தூக்கிச் சீராட்டும் தன் வைரன் மாமாவின் மேல் மிகச் சலுகையாக சாய்ந்துகொண்டு, தான் எத்தனை பெரிய முன்னெடுப்பைச் செய்கிறோம் எனத் தெரியாமலே பலூனுக்கும், பைக் ரைடுக்கும் அச்சாரம் வாங்கிக்கொண்டிருந்தாள் குழந்தை.

“தங்கம், அம்மா கிட்ட போய் ட்ரெஸ் வாங்கிட்டு வா, போட்டுக்கலாம்”

லதா கொண்டு வந்து தந்த உடையை மருமகளுக்கு அணிவித்தவன் “புது ஃப்ராக்காடா தங்கம், பட்டுகுட்டியா இருக்கே” என்று சிலாகித்து முத்தம் கொடுக்க, மேதாவின் விழிகள் விரிந்தன.

‘எத்தனை கனிவாய் குழந்தையைக் கையாள்கிறான்?’

உடைமாற்றி, பூஜை பிரசாதத்தை உண்டு வந்த ஸ்வர்ணலதா கூட, சூழலின் இறுக்கம் புரிந்ததில், ஜீவாவின் அருகே சென்று அமைதியாக அமர்ந்துகொண்டாள்.

நேரம் மாலை ஐந்தரையை நெருங்க, மழைக்காலம் என்பதால் விரைவிவேயே அந்தி சாய்ந்து விட்டாலும், கண்ணாடி மௌனத்தினுள் கல்லெறியத் தயங்கியோ, மனமின்றியோ எல்லோரும் வாளாதிருந்தனர்.

அன்று கார்த்திகை மாதம் முதல் நாள். இம்மாதத்தில் மாலை நேரத்தில் பூஜையறையிலும் வாசல் மாடத்திலும் விளக்கேற்றுவது வழக்கம்.

மேதாலக்ஷ்மியை வீட்டின் மகாலக்ஷ்மியாக ஏற்றுப் புகுந்த வீட்டில் முதல் விளக்கை ஏற்றச் சொல்வார்களென விளக்குமே காத்துக் கிடந்தது.

நந்தகுமார் சிறிது எரிச்சலும் பொறுமையின்மையும் மேலிட மனைவியைப் பார்த்தான். நடந்த திருமணத்தை இனி மாற்ற முடியாது. அவர்களே முடிவு செய்த அவசரத் திருமணம் என்பதைத் தவிர, மேதாவுக்கு என்ன குறை?

ஒருக்கால் வீடு கொள்ளாத சீருடன் மருமகளை எதிர்பார்த்தானரோ? தங்கள் திருமணம்தான் அவர்களது வாழ்க்கை மாற்றத்திற்குப் பெரும் காரணம் என்பதாலேயே, நந்தகுமாருக்கு மீனாக்ஷியிடம் கூடுதல் அக்கறையும் பிரியமும்.

மீனாக்ஷியின் அனுசரிப்பும் பொறுப்பும் புகுந்தவீட்டினருக்கு அவளைக் குற்றம் சொல்லும் வாய்ப்பைத் தரவில்லை என்பது ஒருபுறம் என்றாலுமே, அவன் முன்னிலையில் அவனது அம்மா கூட மீனாக்ஷியை எதுவும் சொல்லிவிட முடியாது.

பார்வதி ஆச்சியின் உறவினரான அவனது குடும்பத்தினர், அவரது பேத்தி என்பதால்தான் பெண்ணே கேட்டனர். சீர் கேட்பதும் செய்வதும் வழமைதான் என்பதோடு, தணிகைநாதனிடமிருந்து எந்த வித மறுப்போ, சுணக்கமோ இல்லை.

சக்கரை ஐயாவின் பேத்திக்கு சீருக்கு என்ன குறை என்று புகழும் அளவிற்கு நடந்த திருமணம். மனைவியைப் போன்றே பொறுப்பான மைத்துனன் மீது நந்தகுமாருக்கு தனி மரியாதையும் வியப்பும் உண்டு.

வைரவனின் பெற்றோர்களின் மனநிலை புரிந்தாலுமே, இந்த அமைதியும் புறக்கணிப்பும் சற்று அதிகப்படியாகத் தோன்றியதில், சிறு எரிச்சல் மூண்டது.

எந்நேரமும் மழை வரலாம் போல காற்றில் ஈரப்பதம் கூடிக் குளிர்ந்தது.

காலை ஒன்பது மணிபோல் வீட்டை விட்டுக் கிளம்பிய மேதாவின் அடிவயிறு கனத்தது. வைரவனே அமைதியாக இருக்க, ஓய்வறை செல்லக் கேட்கத் தயங்கினாள். முன்பும் இதற்கெனவே இங்கு வந்திருக்க, இவளுக்கு இதே வேலைதான் என நினைப்பார்களோ என்று கூச்சமாக இருந்தது.


காலையும் மாலையும் உள்ளாடை மாற்றும் சுத்தக்காரியான மேதாவுக்கு தன்னிடம் மாற்றுடை இல்லாததே அப்போதுதான் உரைத்தது.

இதில் ‘இத்தனை நேரமா இவன் எப்டி… பாய்ஸ்க்கு எல்லாம் சீக்கிதந்துல பாத்ரூம் வராதா?’ என்ற யோசனை வேறு.

திடீரென குழந்தையைத் தூக்கியபடி எழுந்து நின்ற வைரவன் “நாங்க கொஞ்சம் பின்பக்கம் யூஸ் பண்ணிக்கலாமா?” என்றதில் மேலும் அடர்ந்தது அமைதி.

முதலில் சுதாரித்த மீனாக்ஷி “என்னடா இது, நம்ம வீட்லயே இப்படியெல்லாம் பர்மிஷன் கேக்கற?”

“இப்படி யாரோ மாதிரி உக்கார்ந்திருக்க அன்ஈஸியா (uneasy) இருக்குக்கா. என்னை என்ன செய்யச் சொல்ற?”

“...”

நிலமையைக் கையில் எடுத்துக்கொண்ட நந்தகுமார் “மச்சான், நீங்க ரெண்டு பேரும் முதல்ல போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க. நிலாம்மா, அப்பா கிட்ட ஓடி வாங்க” என்றதும், குடுகுடுவென ஒடினாள் குழந்தை.

புழக்கடைக்குச் சென்றதும், பாத்ரூமை நோக்கி நடந்தவளை நிறுத்தி “ஏய், கொஞ்சம் நில்லு, மனுஷனோட அவசரம் புரியாம” என்று ஒலிம்பிக்ஸ் நடைபோட்டியில் நடப்பவனைப் போல் சென்றவனைப் பார்த்து சிரிப்பும் முறைப்புமாக நின்றாள்.

வெளியில் வந்த வைரவன் கிணற்றில் இருந்து நேர் சேந்தி கை, கால் முகத்தைக் கழுவிக்கொண்டு கொடியில் கிடந்த துண்டை உருவித் துடைத்துக் கொள்ள, இடவலமாகத் தலையை ஆட்டி, ஊஃப் என ஊதியபடியே வந்தவளுக்குத் தண்ணீர் இறைத்துத் தந்தான். அங்கிருந்த சோப்பை காட்டினான்.

“ஒரே சோப்புதானா?”


மேதா கழுவிய வேகத்தில் முன்நெற்றி, காதோரம் இருந்த முடிகள், குர்த்தியின் முன் பகுதி, பின் கழுத்து என கணிசமாக நனைத்துக் கொண்டாள்.

மேதா முகத்தில் நீர் வழிய, ஒற்றைக் கண்ணை மூடியபடி “அர்ஸு, எனக்கொரு டவல் குடுங்க”

‘இவ என்னை ஒருவழி ஆக்காம விடமாட்டா போல, சர்ர்ரியான…’

அருகில் வந்து கையில் இருந்த துண்டை அவள் மேல் போட, மேதா

“நீங்க யூஸ் பண்ண அதே டவலா?”

“வெறியேத்தாதடீ, ராத்திரி இருக்க இடம் கிடைக்குமான்னு தெரியல, இதுல ஒரே சோப்பா, ஒரே டவலான்னு… அப்புறம் ஒரே அடிதான், உள்ள போயிடுவ பாத்துக்கோ”

முகத்தைத் துடைத்தபடி அவனை ஏறிட, வைரவன் அவள் கன்னத்தில் ஒட்டி இருந்த பொட்டை எடுத்து சரியாக வைக்க, நெற்றியின் மத்தியில் குறுகுறுத்தது.

“இது மாதிரி கடுகு சைஸ் பொட்டு எல்லாத்தையும் கடாசிட்டு, இனிமே டார்க் மெரூன்ல, பெருசா பொட்டு வெச்சுக்கணும், புரியுதா, சீக்கிரமா வந்து சேரு” என்ற வைரவன் உள்ளே சென்றுவிட, மேதாவிடம் யாரோ வேப்பிலையால், இல்லை, வேப்ப மரத்தாலேயே அடித்த எஃபெக்ட்.


‘இப்ப இவன் என்ன சொன்னான், என்ன செஞ்சான்’

*******************

மேதா உள்ளே சென்றபோது, வள்ளியம்மையை எழுப்பி அமர வைத்திருந்தனர். பெருமாள் ஆசாரி, சரவணன், செந்தில் மூவரும் வந்திருக்க, தணிகைநாதனுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

செய்தி அறிந்ததில், சாலை மூடியதும் விசாரிக்க வந்திருந்தனர். அவர்களது வாழ்த்தை வாங்கிக் கொண்ட வைரவன், மேதாவிற்குக் கண்ணைக் காட்ட, இருவரும் பெருமாள் ஆசாரியின் பாதம் பணிந்தனர்.

அவர் வைரவனின் கையில் எதையோ கொடுத்தார்.

செந்தில் “வைரவா, சரவணனை பெட்டுல ஜெயிக்க வெச்சிட்டியே. இப்ப நாங்க எல்லாரும் அவனுக்கு ஆளுக்கு நூறு ரூபா தரணும்”

“ஏன் செந்திலண்ணா?”

சரவணன் “நீயும் மேதா மேடமும் லவ் பண்றீங்கன்னு சொன்னா, இவங்க யாரும் கேக்கல. மாறி மாறி பேசினாங்க. அதான் பெட் கட்டினோம்”

தான் நினைத்தபடியே அவர்கள் ஜோடி சேர்ந்த மகிழ்ச்சியிலும் பந்தயத்தில் பணம் கிடைத்த உற்சாகத்திலும் சரவணன் பேசப் பேச, மேதா முகம் சிவக்க, வைரவனுக்கு முகத்தில் ஈ ஆடவில்லை.

‘நான் பாட்டு செவனேன்னுதானேடா கிடந்தேன். தனியாப் பாத்து பேசினது கூட அந்த உருப்படாத தண்ணீர் மலையப் பத்திதான். லவ்வு, அதுவும் சாலைல வெச்சாடா. கல்பு, இருக்குடீ உனக்கு’

‘ஆனாலும் சரவணா, நீ இதை சொல்றதுக்கு பாத்த நேரம் இருக்கே, அங்க சிரிக்குதுடா என் விதி’

‘அதுபோகட்டும், எங்க லவ்வு அவ்வளவு வெளிப்படையாவா தெரிஞ்சது?’

வைரவன் மேதாவைப் பார்க்க, ‘இதான் உன் லவ்வா, சொல்லவே இல்ல?’ என்று முகத்திலேயே எழுதிக் காட்டினாள்.

வைரவன் மீண்டும் அதே இடத்தில் அமர, மேதா அவனருகே செல்லப் போக, வள்ளியம்மை “மீனு, கூட்டிட்டுப் போய் விளக்கேத்தச் சொல்லு. ஜோடியா நமஸ்காரம் செய்யணும்”

அன்னை யாருக்கோ சொல்வது சொன்னதில், அசையாது அமர்ந்திருந்த வைரவனை, மீனா மெல்லிய குரலில் “தம்பி வாடா, நடந்ததை ஜீரணிக்க அவங்களுக்கும் டயம் வேணும்ல. இந்தப் பொண்ணை லவ் பண்றேன்னு முன்னாலயே சொல்லி இருந்தீன்னா கூட இத்தனை அதிர்ச்சியா இருந்திருக்காது. சொல்லேன் மேதா”

முதல் முறை வந்தபோது தனக்குக் கிடைத்த வரவேற்பையும் இன்றைய நிலையையும் எண்ணிய மேதாவுக்குத்
தன்னால்தானே வைரவனையும் இப்படி நடத்துகின்றனர் என்ற குற்றவுணர்வு எழ, அவனைப் பார்க்க முயல, எங்கே?

மேதா வைரவனைப் பார்க்க, அவன் வள்ளியம்மையைப் பார்க்க, அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

நந்தகுமார் “மேதா, நீ போம்மா, அவன் வருவான். போ மச்சான், உங்கக்கா இன்னும் ஒரு டீயைக் கூடக் கண்ணுல கட்ட மாட்டேங்கறா, தொண்டை வரளுது. தறில இருந்தேன்னா இந்நேரம் மூணு டீ உள்ள போயிருக்கும்” என்றதற்குப் பலன் இருந்தது.

எழுந்தவன் “ஏங்க்கா, என்னோட சண்டைன்னா, மாமாக்கு டீ போட்டுத் தர மாட்டியா, நானும் யோசிக்காம இருந்துட்டேன். ஸாரி மாமா. ஜீவா, நீயாவது போயேன்டா, செல்லி, ஜீவா கூட போ” என்றபடி பூஜையறையை நோக்கி விடுவிடுவென நடந்தவன், மேதாவிடம்

“ஏய், இங்க என்ன வித்தையா காட்டறாங்க, வா சீக்கிரம்” என, மீனா சிரித்தபடி மேதாவை அழைத்துச் சென்றாள்.

பெருமாள் ஆசாரி வேறு “வைரவன் எப்பவுமே இப்படிதான், யாரையும் விட்டுக்குடுக்க மாட்டான்” என கூடுதல் பிட்டைப் போட்டார்.

வள்ளியம்மையின் விழிகளில் நீர் நிறைந்தது.

இத்தனை பொறுப்பும் அக்கறையும் உள்ளவன், தன் முகம் பார்த்தே புரிந்து கொள்ளும் தன் மகன் இப்படி தடாலடியாகத் திருமணம் செய்து கொண்டு வருவான் என பகல்கனவு கூட கண்டதில்லை.

மகனின் திருமணம் குறித்து, தங்களது சக்திக்கு உட்பட்டு, மரபுப்படி ஒரு சடங்கையும் விடாது, சீரும் சிறப்புமாக நடத்த ஆசைப்பட்டவரால், இதை ஏற்க இயலவில்லை. மற்ற பொழுதுகளை விட, என் மகன் என்ற உரிமையுணர்வு பங்கப்பட்டதில் ஆற்றாமை மிகுந்தது.

பெரியவீட்டிலிருந்து வந்தபின் கிடைத்த தனிமையில் கணவரும் அதையே சொல்ல, இருவரும் வீம்பாக இருந்தனர்.

ஆனால், வைரவன் அனுமதி கேட்டுப் புழக்கடைக்குச் செல்லவும், நந்தகுமார், மனைவியைத் திட்டுவதுபோல்

“ இதென்ன மீனா, மூணு மணி நேரமா, அவங்களை ஒரே இடத்துல உக்கார வெச்சு, பாத்ரூம் போகக்கூட சங்கடப்படறாங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு?” என, கணவன் திடீரென தன் மேல் ஏன் பாய்கிறான் என விழித்தாள் மீனா.

“ என்ன பாக்குற, ஒண்ணு பால், பழம் கொடுத்து அவங்களை உள்ள சேர்த்துக்கணும், இல்லையா வெளிய போன்…”

“ஏன் மாமா?”

“ஏன்னா… நம்ம இஷ்டப்படி, நமக்கு சாதகமா, நமக்காகப் பார்த்துப் பார்த்து செஞ்சா வைரவன் நல்லவன், அவனுக்குப் புடிச்ச பொண்ணை, ஏதோ ஒரு சூழ்நிலைல சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டான். தப்புதான், இல்லைங்கல, அதனால இப்ப அவன் கெட்டவனாயிட்டானா?“

தணிகைநாதன் “நீங்க சொல்றது வாஸ்தவம்தான் மாப்ளை. ஆனாலும்…”

“மாமா, அட்ஜெஸ்ட் ஆக, முழு மனசோட ஏத்துக்க நேரமாகும்தான். எனக்கும் புரியுது. அதுக்காக, இப்படியா மாமா?”

“...”

“அந்தப் பொண்ணைப் பெத்தவங்க அதுக்கு மேல இருக்காங்க. இதேபோல போனா, வைரவன் வேற மாதிரி முடிவு செஞ்சிட்டா உங்களுக்குப் பரவாயில்லையா?”

மீனா “மாமா சொல்றது சரிதானேப்பா”

தணிகைநாதன் மனைவியைப் பார்க்க, வள்ளியம்மை தலையசைத்தார். ஜீவா நந்த குமாருக்குக் கட்டை விரலைக் காட்டினான்.

“எனக்கு வர்ற கோவத்துக்கு, நானே வைரவனை எங்கேயாவது போய் நல்லா இருடான்னு சொல்லிடப் போறேன்” என ஜீவாவிடம் முணுமுணுத்தவனை

‘எங்கிட்ட சொன்னதை சத்தமா சொல்லுங்க மாமா, நீங்க பேசினா பெரியப்பா கேப்பாரு” எனத் தூண்டிவிட்டதே ஜீவாதான்.

விளக்கேற்றி, பால், பழம் கொடுத்து, பெரியவர்களை வணங்கியபின் மீண்டும் அதே இடத்தில்தான் வாசம்.

சல்வார் குர்த்தி அணிந்து, காதில் சிறிதான வளையம், சின்னச் சின்ன தோடுகள், ரோஸ்வைர மூக்குத்தி, மெலிதாய் ஒரு செயின், புது மஞ்சள் கயிறு, கனமான கழுத்திரு, விளக்கேற்றும் சமயம் நெற்றியில் இட்டுக்கொண்ட குங்குமம், மீனாக்ஷி தம்பியிடம் சொல்லி வகிட்டில் வைக்கச் செய்த குங்குமம் என மேதாலக்ஷ்மி கலவையாக (fusion) இருந்தாள்.

ஜீவா பெரிய தாம்பாளத்தில் டீ தம்ளர்களுடன் வர, ஸ்வர்ணலதா விசேஷ வீட்டின் இனிப்புகளை ஆசாரிகள் மூவருக்கும் தந்தாள்.

அவர்கள் சென்றதும், வைரவன் பெருமாள் சாமி கொடுத்ததை தந்தையிடம் சென்று நீட்டினான்.

‘??’

“நீங்க ராகவி அண்ணிக்கு வளையல் வாங்கினீங்க. ஐயாக்கும் ஆச்சிக்கும் கொடுக்கறது என் பொறுப்புன்னு சொன்னேன்ல. அதான் இது”

அதில் பிளாட்டினத்தில் ஒற்றை வைரக் கல் பதித்த இரண்டு மோதிரங்கள் இருந்தன.

“மீனு, இதென்ன, பெரியவருக்கு தங்கம் வாங்க வேணாமா?” என,

“எழுபது வருஷத்துக்கு பிளாட்டினம்தான் கொடுக்கணும் கா. அவங்க ரெண்டு பேரும் இது வரை போட்டதில்லை”

வைரவன் “ஜீவா, என்னோட வா” என்றவன் மேதாவிடம் “இதோ வந்துடறேன்” என பைக் சாவியை எடுக்க, அவனுக்கு முன்னே கிளம்பி நின்றாள் நிலா.
நந்தகுமார் “நானும் வரேன், கார்ல போகலாம்”என்றான்.

மேதா திருவிழாவில் தொலைந்த பாஷை தெரியாத குழந்தைபோல் அமர்ந்திருந்தாள்.

*********************

லதா பிடித்துக்கொள்ள, மொபைலில் பேசிய வள்ளியம்மைக்குத் தன் கோபத்தை வெளியில் காட்ட முடியாத கோபம். பேசியது அவரது மாமியார் பார்வதி ஆச்சி.

“ரவைக்கு எல்லாருக்கும் சாப்பாடு அனுப்பி வெக்கறேன். அங்க எதுவும் சமைக்க வேணாம். அதோட, பூ, பழம், ஸ்வீட்டும் அனுப்பறேன். நம்ம கோவம், நம்மோட. புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு நல்ல நாளைக் குறைக்கக் கூடாது. நாளைக்கு எல்லாம் சரியாப் போயிடும். புள்ளைங்க மனசுல இது குறையா நிக்கும். பெறகு, உம் மருமக ஆயுசுக்கும் எம் பேரனை குத்திக் காமிப்பா, வெளங்குதா?” என ஆச்சி தூரத்து இடிமுழக்கமானார்.

“இவுக பேரனாம், எம் மருமகளாம்” முனகியவரிடம் தணிகைநாதன் “லதா, ஃபோன்ல யாரு?”

“அப்பத்தா”

“ஆத்தாவா, ஆத்தாவா பேசினாங்க, அம்மாடீ என்னவாம், ஆத்தா என்ன சொன்னாங்க” என மாரியாத்தா மேலேறியதைப் போல் படபடத்தவரிடம் வள்ளியம்மையால் தன் கோபத்தையா காட்ட முடியும்?

அப்படி ஏதாவது நடந்தால் தணிகைநாதன் தணியாதநாதனாகி விடமாட்டாரா?

அருகில் நின்றிருந்த லதாவை “போய் ஒரு சொம்பு தண்ணி கொண்டு வா, போ” என்று அனுப்பினார்.

“அவங்க பேரனுக்கும் உங்க மருமகளுக்கும்…. சடங்கு செய்ய ஏற்பாடு செய்யணுமாம்”


தணிகைநாதன் “இதெல்லாம் ஏன் எங்கிட்ட சொல்ற?” என்றதில் சற்றே எரிச்சலான வள்ளியம்மை “ஏன், நீங்க என்ன சாமியாரா?” என , மீனாக்ஷி பக்கெனச் சிரித்துவிட்டாள். மேதா புரிந்தும் புரியாமலும் அமர்ந்திருந்தாள்.

எட்டேகால் மணிபோல், இரண்டு ஆட்களுடன் சிவானந்தன் வந்தான். இட்லி, குழிப்பணியாரம், ரவா உப்புமா, சட்னி, சாம்பார் என கணிசமான அளவில் உணவும், ஒரு பையில் அல்வா உள்பட அளவான இனிப்புகள், பழங்கள், இன்னொன்றில் பூ, ஊதுபத்தி வரை இருந்தது.

சிவானந்தனைக் கண்டதும் மேதா எழுந்து நிற்க, மெலிதான புன்னகையுடன் சென்று விட்டான்.


“இப்டி திடுதிப்புனு சாந்தி செய், சடங்கு வைன்னா, நான் எங்கடீ மீனா போவேன்? உங்கப்பா பேசினதைக் கேட்டேல்ல? புது விரிப்பு, உறைனு என்ன இருக்குன்னு கூட வைரவனுக்குதான் தெரியும்”

“...”

“இங்க இருக்கறது ரெண்டு ரூம். மாடில ஒரு ரூம். இன்னைக்கு மாப்பிள்ளை வேற இங்க இருக்காரு. நீங்களே தரைலதான் படுக்க வேண்டி இருக்கு. மாடிலன்னா ஜீவாவும் கீழ வந்து படுக்கணும்” என்ற வள்ளியம்மையின் உரத்த சிந்தனையில் மேதாவுக்கு விஷயம் புரிந்து விட, தலையை நிமிர்த்தவில்லை.

திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த அவசரத்தில் இதெல்லாம் யார் யோசித்தார்கள்?

‘டேய் அரசு, என்னை தனியா விட்டு எங்கடா போன?’

வெளியே சென்ற ஆண்கள் மூவரும் நிதானமாக காஃபி குடித்து, கொப்புடையம்மன் கோவில் வாசலில் நிலாவுக்கு பலுன் வாங்கி, வரும்வழியில் ஜீவா ஐஸ்க்ரீம் வாங்க இறங்கிச் செல்ல, மெடிகல் ஷாப்புக்குப் போய் வந்த வைரவனைப் பார்த்த , நந்தகுமார் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.


வைரவன் எதுவும் புரியாமல் முழிக்க, நந்தகுமார் இப்போது சத்தமாகச் சிரித்தான்.

“என்ன மாமா, ஏன் சிரிக்கிறீங்க?”

“தயாரா இருக்க போல. உஷார் பார்ட்டிடா மாப்ள நீ”

“சத்தியமா எதுவும் புரியல மாமா”

“ஆமாண்டா, நீ ஒண்ணுமே தெரியாத ஈர மண்ணு பாரு. இந்தப் பூனை பால் இல்ல, ஸ்காட்சே குடிக்கும்னு இன்னிக்குதானே எனக்கே தெரிஞ்சுது”

“மாமா”

ஜீவாவும் நிலாவும் வர, நந்தகுமார் அமைதியாகக் காரை எடுத்தான். வீடு வர, மேதா வைரவனின் பார்வையைச் சந்திக்கவே மறுத்தாள்.


உணவு முடிந்து, எப்படிச் சொல்வதென அம்மாவும் அக்காவும் முழிக்க, நந்தகுமார், மீனாக்ஷியைத் தனியே அழைத்தான்.

“ஏன்டீ, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா, அந்தப் பொண்ணு பாவம் எத்தனை நேரம்தான் அங்கேயே இருக்கும்?”

“...”

குரலைத் தழைத்தவன் “நைட்டாவது தனியா விடுவீங்களா, இல்ல இந்த தூணோட தூணா… ஆ… மீனுக்குட்டி, என்னடீ கிள்ற?”

“நீங்க வேற மாமா” என்றவள் நடந்ததைச் சொல்ல, “அவ்ளோதானே, நீ போய் பாலைக் காய்ச்சு, நமக்கும் சேர்த்து”

“மாமா, எனக்கு இது அஞ்சாவது மாசம். நமக்கு ரெண்டாவது பேபி”

“அது பாட்டு அது, இது பாட்டு இது”

***********************

வைரவனும் மேதாவும் தர்மசங்கடத்தின் உச்சியில் இருந்தனர்.

நிலாவைத் தவிர, லதா, ஜீவா, நந்தகுமார் என எல்லோரும் விழித்திருக்க, கடவுளை, பெரியவர்களை வணங்கச் சொன்ன மீனாக்ஷி, தம்பியிடம் “கூட்டிட்டுப் போடா “ என்றாள்.

வைரவனைத் தவிர வேறெதையும் எண்ணாது திருமணம் செய்துகொண்ட மேதா, இதுபோன்றதொரு முதலிரவை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

இரண்டு பாய்களில் விரிப்பு விரிக்கப்பட்டு, நடுவே கதம்பத்தால் வட்டம் போட்டு, ஜவ்வந்திப் பூவை பிய்த்துப் போட்டு வைத்திருந்தனர்.

மாற்றுடை இன்றி அதே சல்வார் குர்த்தியுடன் அறைக்குள் நுழைந்தவளை விட, அதிக அவஸ்தையில் இருந்தான் வைரவன்.

‘ஒரு வீட்ல அக்கா, தங்கை, தம்பிக்கு நடுவுல பையனா மட்டும் பொறக்கவே கூடாதுடா சாமி’

மேதா வளர்ந்த விதத்திற்கும் அவளது வசதிக்கும் எத்தனையோ கனவுகளும் எதிர்பார்ப்புகளும் இருந்திருக்கும். தான் சம்மதித்து தாலிகட்டி அவள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டோமோ என்ற குற்றவுணர்வு மீண்டும் எழுந்தது.

கீழே பின்கதவைச் சாத்தி விட்டனரா என வெளிப்புற படிகள் வழியாகச் சென்று பார்த்தவன், தனக்கு மாற்றுடை எடுத்துக் கொண்டு வேகமாக கீழே சென்று குளித்து வந்தான்.

மேலேறி வந்து “அந்த அலமாரில என்னோட ஷார்ட்ஸ், டீ ஷர்ட்லாம் இருக்கு. டவல் இருக்கும். பரவா இல்லைன்னா யூஸ் பண்ணிக்கோ. மாமா கூட வந்ததுல ட்ரெஸ் வாங்க போக முடியலை. இன்னைக்கு உன்னைக் கூட்டிட்டுப் போனா சரியா இருக்காது”

“...”

“இந்தா உனக்கு சோப், பிரஷ், பேஸ்ட். இந்த வழியா இறங்கிப் போ. நான் இங்கதான் இருப்பேன். குரல் குடு” என எடுத்துக் கொடுத்துவிட்டு, மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டான்.

கீழே போய் நிம்மதியாகக் குளித்தாள், உடைகளைத் அலசிப் பிழிந்து எடுத்துக்கொண்டாள்.

வைரவனின் டீ ஷர்ட்டே நீளமாகத்தான் இருந்தது. அவனது எந்த ஷார்ட்ஸும் சரியாயில்லை. சத்தம் போடாமல், திரும்பி வந்து அறைக்குள் நுழைந்து கொண்டு, தேடிப்பிடித்து ஒரு லுங்கியைக் கட்டிக்கொண்டாள். அறை ஓரத்தில் இருந்த பழைய காலத்து மரத்துணி ஸ்டாண்டில் தன் துணிகளை உலர்த்தினாள்.

‘உள்ள வராம இன்னும் இவன் என்ன செய்யறான்?’

‘மிஸ்டர் ராஜாங்கம், உள்ள வரீங்களா?”

“...”

“ யோவ், என்னதான் உன் பிரச்சனை?”

“...”

“இப்ப என்னைப் பாக்கப் போறியா, இல்ல நைட் முழுசும் இங்கேயே நிக்கப் போறியா?”

அருகில் சென்றவள் ஒரு விரலால் அவன் தாடையைப் பிடித்து நிமிர்த்தி “வர்லாம் வர்லாம் வா, வைரவா” என்று கண்ணடித்தாள்

திரும்பிப் பார்த்தவன் அறையிலிருந்து கசிந்த வெளிச்சத்தில், அவனது லுங்கி, டீ ஷர்ட்டில் நின்றவளைப் பார்த்துத் தடுமாறினான்.

“இதென்ன?”

“நீங்கதானே போட சொன்னீங்க?”

உள்ளே ஜீவாவும் அவனும் கோலோச்சிய அறையில் அவளது உள்ளாடை வரை காய்வது விநோதமான உணர்வைத் தந்தது. அதற்கு மாற்று இல்லாதது வேறு நினைவுக்கு வர, கற்பனை விரிந்தது.

வைரவனுக்கு மாமா நந்தகுமாரின் கேலி இப்போது புரிய சிறிதாக உதடு வளைந்தது.

வைரவனின் தீர்மானங்களும் அந்த இரவிற்கே உரித்தான சாகசங்களும் மனதில் போட்டியிட, “நீ என்னை விட நல்ல…”

“அந்த முருங்க மரத்தை விடவே மாட்டீங்களா?”

“நான் சொல்றதை கேக்கவே மாட்டியா?”

“நீங்களே நல்ல பையனா பாருங்களேன்”

“அடிங்க, என்னைப் பாத்தா சும்பப் பயலாட்டம் தெரியுதா?”

“ராசுக்குட்டிக்கு கோவம் வருதுல்ல, இனிமே நோ தியாகி டயலாக், அன்டர்ஸ்டான்ட்?”

“என்னல்லாம் பேசறடீ நீ?”

“இத்தனை பேர் சொல்றேனே, என்னை இதுவரைக்கும் ஒரு தடவையாவது பேர் சொல்லிக் கூப்பிட்டு இருக்கீங்களா?”

“கூப்ட்டா போச்சு”

“...”

அருகில் அமர்ந்திருந்தவளின் தோளைத் தொட்டு சடாரெனத் தன்புறம் திருப்பியவன் இதழ் உரசும் நெருக்கத்தில்“மோகினி” எனவும், மேதாவின் விரிந்த விழிகளில் வீழ்ந்த அரசைக் கைப்பற்றினாள் மோகினிஆச்சி.

*****************

காலையில் சக்கரை ஐயாவின் வீட்டிற்குச் செல்ல, எல்லோரும் கிளம்பிக்கொண்டிருந்தனர். வள்ளியம்மை கூட புதுப்புடவை அணிந்திருக்க, அதே உடையுடன் நின்றிருந்தாள் மேதா. கண் விழித்தது முதலே வைரவனைக் காணவில்லை.

வள்ளியம்மையையும் ஜீவாவையும் தவிர, அனைவரும் சென்றுவிட, மணி ஒன்பதாகியும் வைரவனைக் காணவில்லை. ஃபோனையும் எடுக்கவில்லை.

இன்றும் வள்ளியம்மையை அழைத்து வரச் சொல்ல, நந்தகுமார் வந்து, ஜீவாவின் உதவியுடன் காரில் கூட்டிச் சென்றான்.

வள்ளியம்மை எதுவும் பேசாதிருக்க, ஜீவா தயங்கினான்.

“பரவால்ல ஜீவா, அவங்க வந்ததும் வரேன்” என்றாள் மேதா.

ஒன்பதரை மணிக்கு அவசரமாக ஓடி வந்தவன் “இந்தா இதுல ட்ரெஸ் இருக்கு. ஒரு பட்டுப்புடவை இருக்கு. ஒரு மாதிரி குன்ஸா அளவு சொல்லி பிளவுஸ் இருக்கு. மிச்சமெல்லாம் இதுல இருக்கு. போய் ரெடியாகிட்டு வா” என்றவன், கிணற்றடியிலேயே குளித்துத் தயாரானான்.

புடவையில் வந்தவளிடம்
தன் சட்டைப் பையில் இருந்து பொட்டு அட்டைகளை எடுத்து, அவளது நெற்றியில் ஒரு பொட்டு வைத்தவனை அணைத்துக் கொண்டு அழுத்தம் தாளாது அழுது கரைந்தாள் மேதா.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Manikodi

New member
Joined
Jun 19, 2024
Messages
12
புடவையில் வந்தவளிடம்
தன் சட்டைப் பையில் இருந்து பொட்டு அட்டைகளை எடுத்து, அவளது நெற்றியில் ஒரு பொட்டு வைத்தவனை அணைத்துக் கொண்டு அழுத்தம் தாளாது அழுது கரைந்தாள் மேதா.
இப்படி அழ வைக்கலாமா அரசு
 
Joined
Jun 19, 2024
Messages
26
என்ன பிரச்சனை ஓடினாலும்,யாருக்கு என்ன கவலை,வேதனை,வருத்தம் இருந்தாலும் கல்யாணம் முடிந்ததும் என்ன நடக்கணுமோ அது மட்டும் சிறப்பா நடந்துடுச்சே🙄
சரிதான்ப்பா வைரவா😉
 

vijaya mahesh

New member
Joined
Jun 20, 2024
Messages
24
Super sister. நிறைய இடங்களில் dialogues சிரித்து கொண்டே
படித்தேன்.
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
வள்ளியம்மை உங்க கிட்ட இருந்து இது எதிர்பார்க்கல என்னதான் கோவம் இருந்தாலும் ரெண்டு பொண்ணுக்கு அம்மாவா இருக்கிற நீங்க ஒரு பொண்ணு மாத்து துணி இல்லாம இருக்கிறத பார்த்துட்டு எப்படி சும்மா இருக்க முடியுது மீனு உனக்கு கூட தோனலையா
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
வீட்டுல 3 பொம்பளைங்க இருக்கீங்க ஒருத்தருக்கு கூட அவளுக்கு மாற்றுடை தரணும் தோணல
 

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
71
பல இடங்களில் அழுத்தம் வைரவனுக்கு..மேதா மட்டுமே அவனின் ஆறுதல்
 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

"கல்பு, உனக்கு இருக்குடி" வைரவனால கல்புவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு நான் சும்மா இருக்க மாட்டேன்...😎😎

மெடிகல் ஷாப்ல இருந்து புது பேஸ்ட், ப்ரஷ், சோப்பு தானே வாங்கினான்? 🤔🤔😛😛

"அது பாட்டு அது, இது பாட்டு இது" நந்து & மீனாவுக்கும் சம்பவம் ஏதாவது நடந்துச்சா? 🙈🙈
 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

மோகினி...❤️❤️

மனமோகினி என் மடியில் வந்தால்
அடி சுகம் காணும் உன் தாவணி
என் கூட்டணி அதில் இணைந்தாலே நீ
நம் பிள்ளைகள் வரும் பேரணி

 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
56
😍😍😍

மோகினி...❤️❤️

மனமோகினி என் மடியில் வந்தால்
அடி சுகம் காணும் உன் தாவணி
என் கூட்டணி அதில் இணைந்தாலே நீ
நம் பிள்ளைகள் வரும் பேரணி

Super💖💖
 
Top Bottom