• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 14

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 14

வை
ரவனின் அமைதியில் பயந்த மேதா கவலையாக அவனைப் பார்த்தாள்.

“யாரு ஃபோன்ல, ஏன் பேசாம இருக்கீங்க?”

“...”

மேதா மெதுவாக அவனது கையைத் தொட, “ஐயா வீட்டுக்கு வரச்சொல்றாரு, உன்னையும் அழைச்சுக்கிட்டு”

“சரி, அதனால?”

“உனக்குப் புரியுதா, இல்லையா? அங்க பூஜை நடக்குது. சொந்தக்காரங்க எல்லாம் கூடி இருப்பாங்க. நாம இப்ப அங்க போய்…”

“எப்படியும் நாம வீட்டுக்குப் போகதானே வேணும்?”

“நான் சாயங்காலமா, எங்க வீட்டுக்குப் போகலாம்னு நினைச்சேன். இப்ப எல்லார் முன்னாடியும்…”

மேதா “அதுக்கென்ன, நாம சொல்லாம கல்யாணம் பண்ணியிருக்கோம். அவ்வளவுதானே, இது ஒண்ணும் ரகசியக் கல்யாணம் இல்லையே?”

“ம்ப்ச்”

“...”

“சரி, வா போகலாம்”

“இந்தக் கல்யாணம் நடந்தது உங்களுக்குப் பிடிக்கலையா வைரவன், தப்பு செஞ்சுட்ட மாதிரி ஃபீல் பண்றீங்களா?”

“வைரவன் கிய்ரவன்னேன்னா பாரு”

‘?!?!’

“இப்ப ஏன் தரைல உட்கார்ற, எந்திரி, போலாம்”

“நான் வரலை. நீங்க போங்க. யாராவது கேட்டா, என்னைப் பார்க்கவே இல்லைன்னு சொல்லிடுங்க”

“உங்கம்மா உன்னை அடிச்சதே எனக்குப் புடிக்கலை. என்னையும் அதையே செய்ய வைக்காத, இந்தா புடி, கெட் அப்” என்று கை கொடுத்தான்.

“எனக்கு பயமாயிருக்கு. என்னாலதான் இந்த பிரச்சனை, ஸாரி” என்றவளுக்கு சுய இரக்கம் மீதூறியது.

எதுவும் பேசாது, “இதோ வரேன்” என மீண்டும் கோவிலுக்குள் சென்று வந்தவன், மேதாவிடம் பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் மோதகத்தை நீட்டினான்.

“என்ன?”

“கல்யாணம் ஆனா ஸ்வீட் சாப்பிட வேணாமா” என்றவன், தயங்கியவளின் வாயருகே கொண்டு செல்ல “ராசு” என்றவளுக்கு உணர்ச்சி வேகத்தில் குரல் உடைந்தது.

வைரவன் “இப்ப ஏன் இந்த அழுகை, இத்தனை நேரம் தைரியமாதானே இருந்த? எனக்குப் புடிக்காம, நீ சொன்னா நான் தாலி கட்டிடுவேனா?”

“...”

“நாம கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு நம்மோட பிடித்தம், ஆசை, இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லாம போயிடுமோன்ற பயம்னு, எல்லாமே நம்ம பக்க நியாயம். ஆனா, நம்ம வீட்ல?”

“...”

“எனக்கும் பயமாதான் இருக்கு. நாம ரெண்டு பேரும் உடைச்சிருக்கறது, அவங்க நம்ம மேல வெச்ச நம்பிக்கையை”

மேதா மெலிதாக அழுதாள்.

“எங்க வீட்டு நிலமை உனக்கே தெரியும். ஆனா, இதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை”

“...”

“உங்க அப்பா, அம்மாவோட பார்வைல நான் உனக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத வரன். அது உண்மையும் கூட. அதனாலதான் நான்…. ப்ம்ச், அதை விடு. இன்னைய தேதிக்கு பெருசா சொல்லிக்கறா மாதிரி என்னோட நம்பிக்கையைத் தவிர எங்கிட்ட எதுவுமில்ல”

மேதாலக்ஷ்மி, தன் நாற்பது நிமிடக் கணவனின் கையோடு தன் கையைக் கோர்த்து அழுத்தினாள். வைரவன் புன்னகைத்தான்.

“இனி என்ன நடந்ததாலும், சேர்ந்துதான், சரியா?”

மேதா தலையைப் பலமாக ஆட்டினாள். இளநி வாங்கிக் குடித்துவிட்டுக் கிளம்பினர்.

******************

நேரே தன் வீட்டு வாசலுக்குள் வந்து பைக்கை நிறுத்திய வைரவன், வீடு பூட்டி இருக்கவும் திகைத்தான்.

‘அம்மா எங்க போனாங்க?’ என்ற கேள்வியை , மேதா ‘ஆன்ட்டி?’ என எதிரொலித்தாள்.

“தெரியலை” என்று ஜீவாவை அழைக்க, மொபைல் ஸ்விட்ச்ட் ஆஃப் என்றது. மாலைகள் பைக்கின் பெட்டியில் இருக்க, தெருவில் இறங்கி நடந்தனர்.

எதிர்சாரியில் மூன்றாவது வீடுதான் எனினும், நீண்ட பயணமாய் தோன்றியது. எதிர்ப்பட்ட ஓரிருவர் நலம் விசாரித்தனர்.

வீட்டை நெருங்கவும் வைரவன் “அங்க யார் என்ன சொன்னாலும், நீ வாயைத் திறக்கக் கூடாது”

“ஏன்?”

“எப்போதும் வார்த்தைலதான் பதில் சொல்லணும்னு இல்லை”

“அப்டி, ஓகே”

முகப்பில் யாருமில்லை. ஐயர் மந்திரம் ஓதும் சத்தமும், தூப, தீபங்களின் மணமும் வாசல் வரை வந்தது. இருவரும் படியேறியதுமே, கையில் மீனாக்ஷியின் மகளுடன் எதிர்கொண்ட ஜீவா திகைப்பு, அதிர்ச்சி, கோபம், மகிழ்ச்சி, ஆசுவாஸம், கலக்கம், பயம் என நவரசம் காட்டினான்.

“வைரவா, வேற லெவல் போ”

வைரவன் “நீ வேற ஏன்டா? ஜீவா, அம்மா…”

“ஐயாதான் பூஜை முடியுற நேரத்துக்கு வரட்டும்னு சொன்னார். நானும் நந்தா மாமாவும் அவரோட கார்ல கூட்டிட்டு வந்தோம்”

“வீல் சேர்?”

“அதுலதான் உட்கார வெச்சிருக்கோம்”

“நீ ஏன்டா ஜீவா ஃபோனை எடுக்கலை?”

“நான் கூப்பிட்டதா சொல்லி நீ வெளிய போனது தெரிஞ்சதுமே பெரியப்பா என் மொபைலை பிடுங்கி வெச்சுக்கிட்டார்”

“ஸாரிடா ”

“ஒன் ஸாரிய எங்கிட்ட வேஸ்ட் பண்ணாத. உள்ள நிறைய வேண்டி இருக்கும், வா” என்ற ஜீவா, மேதாலஷ்மியிடம் “வாழ்த்துகள் அண்ணி, வெல்கம் டு வைரவன் ஃபேமிலி, பிரைவேட் அன்லிமிடட்” எனவும், அந்த நேரத்திலும் மேதாவுக்கு சிரிப்பு வந்தது.

வைரவனைக் கண்டதுமே குழந்தை அவனிடம் தாவ, தயங்கினாலும் தூக்கிக்கொண்டான்.

“இந்த ஆன்ட்டி யாரு மாமா?”

“தங்கத்தோட அத்தைடா”

மேதா விழிகள் மின்ன வைரவனைப் பார்க்க, ஜீவா “தேறிட்டடா”

அந்த இடைகழி அறையைத் தாண்டி, கீழ்வாசலில் நுழைந்தனர். அறுபது பேருக்கு மேல் இருக்காது. பூஜை முடிந்து, பிரசாதங்களை நைவேத்தியம் செய்து, தீபாராதனை காட்டிக்கொண்டிருக்க, இருவரும் உள்ளே சென்று அமைதியாக நின்றனர்.

கற்பூர ஆரத்தி காட்டியதும், அதுவரை இருந்த அமைதியும் கவனமும் கலைந்து கலகலக்கத் தொடங்க, வைரவனின் அருகே நெருங்கி நின்றிருந்த மேதாவைக் கவனித்துவிட்ட நளினி, வேகமாக அருகே வந்து “எங்கடீ போன, இவனோட வந்து நிக்கற?” என்றவள், மகளின் கழுத்தில் மின்னிய மஞ்சள் சரடைப் பார்த்து, அவளது தோளைப் பற்றி உலுக்கி “என்னடீ இது?” என்று குரலை உயர்த்த, எல்லோரது கவனமும் அங்கே குவிந்தது.

நளினி போட்ட சத்தத்தில், இருவரையும் கவனித்து விட்ட குடும்பத்தினர் அதிர்ந்து நின்றனர்.


“யாரு வைரவனா?”

“இது நம்ம சிவா மகமிண்டியோட தங்கச்சி இல்ல?”

“தணிகா, இதென்ன உம்மவன் திடுதிப்புனு தாலிய கட்டிட்டு வந்து நிக்கிறான்?”

“தம்பி, என்னடா இது?” - மீனாக்ஷி.

“நேத்து அந்தப்பொண்ணு அம்புட்டுத் துணிவா பேசும்போதே நினைச்சேன், இப்படித்தான் ஏதோ நடக்குமுன்னு”

“உறவும் முறையும் இருக்கையில ஏன் இந்த அவசரக் கல்யாணம்?”

“என்ன காரணமோ, கருமமோ போ”

“என்ன இருந்தாலும் ஒரே வீட்டுல, நேத்து ஒருத்தனுக்குப் பொண்ணைக் கேட்டு, இன்னைக்கு ….”

அத்தனை கேள்விகளும் விமர்சனங்களும் காதில் விழுந்தும் விழாமலும் நின்றிருந்த வைரவனின் பார்வை முழுதும், வள்ளியம்மையிடம்தான் இருந்தது. அதில் தெரிந்த நம்பிக்கையின்மையும் நிராசையும், ஏமாற்றமும்…

எதிர்பார்த்ததுதான் என்றாலும், மற்ற உறவுகளின் உணர்வுகளை விட, அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட பிறரது உதவி தேவைப்படும் அம்மா, தன் மீது வைத்திருந்த அளவற்ற நம்பிக்கையை அறிந்தவனுக்கு நீண்ட வருடங்களுக்குப் பின் பெற்றவளைக் கண்டு தவறு செய்த குழந்தையாகப் பயம் வந்தது.

யாருடனோ பேசிக்கொண்டிருந்த ராமநாதன், வேகமாக அவர்களை நெருங்கியவர், வேறெங்கோ கவனம் வைத்திருந்த வைரவனின் சட்டையைப் பிடித்து உலுக்கியதில், வைரவன் தடுமாற, அவன் கையில் இருந்த நிலா பயத்தில் அழத்தொடங்க, ஜீவா ஓடி வந்து குழந்தையைக் கைமாற்றிக் கொண்டான்.

ராமநாதன், தன் மகளைக் கையில் வைத்திருந்த வைரவனை அடிக்கச் சென்றதில் கோபமடைந்த நந்தகுமார் “அதென்ன கைல புள்ளை இருக்கறது கூடத் தெரியாம அடிக்க வர்றது?” என்று சீறினான்.

“அவங்க பொண்ணை ஏமாத்தி, தனியா கூட்டிட்டுப் போய் திருட்டுத்தாலி கட்டி இருக்கான். அடிக்காம பின்ன கொஞ்சுவாரா?” என ராமநாதனுக்கு உடனடி வக்கீலானது, சாட்சாத் தண்ணீர்மலையேதான்.

மேதாவைப் பார்த்ததில் இருந்து, ஏதோ அவள் மீது தனக்கு உரிமை இருப்பதான கற்பனையில், சுலபமான இலக்கு என நினைத்தான்.


தாத்தா மேதாவை வைரவனிடம் வேலை பழகச் சொன்னதில் தொடங்கி, இருவரையும் சேர்ந்து பார்த்தாலே பொறாமையில் பொசுங்கியவன், சமயம் பார்த்து தன் விருப்பத்தைச் சொல்லி, பெற்றோரைப் பெண் கேட்க வைத்தான்.

தண்ணீர்மலை மேதாலக்ஷ்மியை சுலபமாகக் கையில் விழும் கனி என எண்ணியிருக்க, முன்தினம் இவனைத் தூக்கி எறிந்தவள், இன்று வைரவனைத் திருமணமே செய்துகொண்டு வந்து நின்றதில் அவனுக்கு அப்படி ஒரு ஆத்திரமும் பொச்சரிப்பும் எழுந்தது.

நேற்றிரவு அம்மா தெய்வானையே “இத பாரு தம்பி, உன்னை வேண்டாம்னு சொல்ற பொண்ணு கிட்ட போய் கெஞ்சவா முடியும்? சம்பந்தி வீடு. சிவாக்கு சங்கடத்தை உண்டு பண்ணாத. அந்தப் பொண்ணை மறந்துடு” என்று கண்டிப்பாகக் கூறி இருக்க, இப்போது கிடைத்த சந்தர்ப்பத்தில் வைரவன் மேல் கனன்ற வெறுப்பை உமிழ்ந்தான்.

தெய்வானை “நேத்தே தெரிஞ்ச கதைதானே. எப்படான்னு காத்திருந்துப்பாங்க போல. இது தெரியாம நாம போய் பொண்ணைக் கேட்டோம் பாரு”

பார்வதி ஆச்சி “தெய்வானை, பேசினது போதும். மேதா இப்ப சம்பந்தி வீட்டுப் பொண்ணு மட்டுமில்ல, நம்ம வீட்டு மருமகளும் கூட” என்றதில், முணுமுணுக்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் இப்போது பார்வைப் பரிமாற்றமாகியது.

அதற்கும் அடங்காத தெய்வானை “அதானே, எப்போதுமே எம்புள்ளையை விட உங்களுக்கு வைரவன்தானே ஒசத்தி?”

“நல்லாக் கேளும்மா. இதே தப்பை நான் செஞ்சா, நடுவீட்ல வெச்சு பஞ்சாயத்து நடக்கும்” - தண்ணீர்மலை.

தங்கையின் அதிரடியிலும், அவளை தன் மாமியாரும் கொழுந்தனும் நிந்தித்ததிலும், ராகவி கலங்கி நிற்க, சிவானந்தன் “கொஞ்சம் பேசாம இருங்களேம்மா” எனவும், தெய்வானை அவனை முறைத்தார்.

வைரவன் வெளியில் சென்றது மேதாவின் அழைப்பில்தான்
என்ற அனுமானம், மேதாவைக் காணவில்லையாம் என மீனாக்ஷி சொன்னபோது தீர்மானமாக மாறினாலும், இப்படித் தாலி கட்டி கூட்டி வருவான் என்பதை எதிர்பார்க்காத தணிகைநாதனின் குடும்பத்தினருக்கு, ஜீவா உள்பட எல்லோருக்குமே பலத்த அதிர்ச்சிதான்.

மகன் மீதான நம்பிக்கை தகர்ந்ததில், ராமநாதனின் குடும்பத்திற்கும் தங்களுக்கும் இருக்கும் அந்தஸ்து பேதம் புரிந்ததில், தவறு முழுவதையும் மகன் மீதே ஏற்றிய தணிகைநாதன், தந்தை முன் வழக்கம்போல் மௌனமாக இருக்க, கசகசவென கலந்தொலித்த குரல்களின் நடுவே, சக்கரை ஐயா “அரசு, ரெண்டு பேரும் இங்க வாங்க” என்றதில், சலசலப்பு அடங்கியது.

எதிரில் வந்து நின்றவனிடம், “என்னைய்யா இதெல்லாம்?” என்ற பெரியவரின் குரலில் யார் மீதும் இல்லாத நம்பிக்கையும் வாஞ்சையும் வெளிப்பட, வள்ளியம்மையிடமிருந்து கேவல் எழ, வைரவன் ஒரு கணம் உறைந்தான்.

“ஏம்மா மேதா, நேத்து உன் தம்பியைப் பத்தி பேசி அம்புட்டு அழகா நியாயம் கேட்ட உனக்கு, உங்க அம்மா, அப்பாவோட மனசு புரியலையா?”

“…”

“அரசுவைத்தான் கட்டிப்பேன்னு சொன்னது கூட சரி, இத்தனை பெரியவங்க இருக்கோம்ல கொஞ்சம் பொறுமையா…”

கோபத்துடன் இடையிட்ட ராமநாதன் “எத்தனை நாள் பொறுத்தாலும் ஒழுங்கான வேலை, தொழில், படிப்பு, வசதின்னு எதுவுமே இல்லாம, இந்த வயசுலயே பொறுப்பு, கடமைன்னு குடும்பத்தை கட்டிட்டு அழுதுக்கிட்டு, பொண்ணுங்க மாதிரி வீட்டு வேலை செய்யறவனுக்கு எம்பொண்ணைக் கொடுக்க ஒருநாளும் நான் சம்மதிக்க மாட்டேன்”

வைரவன் குறித்து பெற்றோர் சொன்ன எதையும் அவனிடம் சொல்லாத மேதா, தவிப்புடன் வைரவனைப் பார்க்க, மீனாக்ஷி “ஏன்டா தம்பி இப்படி செஞ்ச, உன்னை எப்படி பேசுறாங்க பாரு” என்றாள் அழுகையுடன்.

“வெறும்பயலை வேற எப்படிப் பேசுவாங்க?” - தண்ணீர்மலை.

மேதாவின் முகத்தில் இருந்த தீவிரத்தில், அவள் எதையாவது பேசிவிடப் போகிறாளே என்ற பதட்டத்தில் வைரவன் மிக மெதுவே முனகினான். ‘அமைதியா இரு’

நீண்ட நேரமாக அமர்ந்தே இருந்ததிலும், நிகழ்வின் பாதிப்பிலும் வள்ளியம்மை சோர்ந்து துவள, “அம்மா” என அருகே சென்ற வைரவனை, கையைக் காட்டி நிறுத்திய தணிகைநாதன்,


“அப்புச்சி, ஆத்தா, அவளுக்கு முடியல போல. நாங்க வீட்டுக்குப் போறோம். ஜீவா, வாடா” என்றதில், வைரவன் மனதளவில் பலமாக அடி வாங்கினான்.

“கொஞ்சம் பொறு தணிகா, அவங்களுக்கு சின்ன வயசு. நடக்காம போயிடுமோன்னு அவசரப்பட்டுட்டாங்க. நாமும் அப்படியே செய்யமுடியுமா?” என்ற பெரியவர், மனைவி பார்வதியிடம் ஏதோ சொல்லி அனுப்பினார்.

பார்வதி ஆச்சி திரும்பி வந்ததும், சக்கரை ஐயா “அரசு, ரெண்டு பேரும் இப்படி உக்காருங்க”

நந்தகுமாரிடம் ஒரு அங்கவஸ்திரத்தைக் கொடுத்து “மாப்பிள்ளை, இதை அரசு தலைல கட்டுங்க. மீனாம்மா, இங்க வா, அவங்க பின்னால நில்லு. சிவா, அங்க பூஜை செஞ்ச பூ இருக்கு பாரு அதை எல்லாருக்கும் குடு”

பார்வதி ஆச்சி “மங்கா, சாமி அறையில நேத்து வைரவன்கோவில்ல இருந்து கொண்டு வந்தாங்கள்ல, அதைக் கொண்டு வா” என்று உறவுப் பெண்ணைப் பணித்தார்.

சக்கரை ஐயாவின் மறுநாளைய விழாவிற்கென வைரவன்கோவிலில் இருந்து வந்திருந்த மாலைகளை மணமக்களிடம் கொடுத்து அணிவிக்கச் சொல்லி, பிரசாதத்தை நெற்றியில் இட்டார், ஆச்சி.

தட்சிணை வாங்கக் காத்திருந்த புரோகிதரிடம் “சாமி, தாலி கட்டற மந்திரத்தைச் சொல்லுங்க” என சக்கரை ஐயா கண்ணைக் காட்ட, பார்வதி ஆச்சி, தன் புடவைத் தலைப்பில் இருந்த

கழுத்திருவை வெளியில் எடுத்து, ஐயரிடம் தர, அவர் மஞ்சள், குங்குமம் வைத்து, பூ, அட்சதை போட்டு ஆச்சியிடமே தர, ஆச்சி வைரவனிடம் தந்தார்.

அந்தக் கழுத்திரு மேல்பாகம், கீழ்பாகம், உரு, ஏத்தனம், லட்சுமி ஏத்தனம், சரிமணி, திருமாங்கல்யம், தும்பு, குச்சி, வாழை, மேல், கீழ் பாகங்கள் என இரண்டு சரங்களாய், குறைந்தது நாற்பது சவரன் எடை இருக்கலாம். பழைய காலத்து (Antique) நகை என பார்த்தாலே தெரிந்தது.

மேதா மலைத்துப் போய் பார்க்க , ஐயா “அரசு, எல்லாரும் பார்க்க அவ கழுத்துல கட்டுடே” என, வைரவன் நீங்காத பிரமிப்புடன் மேதாவின் கழுத்தில் கௌரிசங்கம் எனப்படும் கழுத்திருவை அணிவித்தான்.

தணிகைநாதன், வள்ளியம்மை, ராமநாதன், நளினி, ராகவி, மீனாக்ஷி, ஜீவா, தெய்வானை என எல்லோருமே உறைந்து போய் நிற்க,

முருகப்பன் “அப்புச்சி இது…”

“என் ஆத்தா அழகுநாச்சியோடது. ஏன்?”

தண்ணீர்மலை “திருட்டுக் கல்யாணம் பண்ணிட்டு வந்தவனுக்குப் பரம்பரை நகையா, வாழ்வுதான்” என்றான்.

ஐயா “முருகா, திருட்டுத்தனமா கல்யாணம் செஞ்சுக்கிட்டா பரவாயில்லை. கல்யாணம் பண்ணாம திருட்டுத்தனம் மட்டும் செஞ்சாதான் தப்பு, சொல்லி வை”

ஆத்திரத்துடன் அங்கிருந்து தன் அறைக்குச் செல்லும் வழியில் இருந்த தூணை ஓங்கிக் குத்தியபடி மாடியேறிய தண்ணீர்மலையின் மனதில் எதற்கென்றே தெரியாது, கிளர்ந்தது பழி வாங்கும் வெறி.

வைரவனும் மேதாவும் ஆசி பெறவென பெரியவர்கள் காலில் விழ, இருவரது பெற்றோர்களுமே வாயைத் திறக்கவில்லை.

வைரவனின் தோளில் தட்டிய நந்தகுமார் “எல்லாம் சரியாகிடும்டா மச்சான். நல்லாயிருங்க” என மனதார வாழ்த்தினான்.

சாப்பாட்டுப் பந்தி தொடங்கி இருக்க, உணவுடன் சேர்த்து வம்பையும் அரைத்தனர்.


வள்ளியம்மையை ஜீவா நந்தகுமாரின் காரில் அழைத்துச் செல்ல, தணிகைநாதன் பேருக்கு உண்டுவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.

வைரவனின் தந்தைக்குத் தயக்கம் என்றால், மேதாவின் தந்தைக்கு வீம்பு. அவர்களது நிலைப்பாடு அவர்களுக்கு என்பதால்,

பார்வதி ஆச்சி “தணிகா, அரசு சின்னப் பையன். விட்டுப் புடி. வள்ளியை சமாதானப்படுத்து. நாளைக்கு எட்டு மணிக்கே வந்துடணும்” என வள்ளியம்மைக்கும் லதாவுக்கும் சாப்பாடு கொடுத்து விட்டார். வைரவனையும் மேதாவையும் தவிர மற்ற அனைவரும் உணவுக்குப் பின் வீடு திரும்பினர்.

பார்வதி ஆச்சியும் சக்கரை ஐயாவும் ஓய்வெடுக்கச் செல்ல, வைரவனும் மேதாவும் பின்னோடு சென்றனர்.

“சாப்பிட்டீகளா ?” - ஐயா.

“ஆச்சுங்கய்யா?” - வைரவன்.

ராகவி மட்டும் அங்கு இல்லையெனில் நளினியும் ராமநாதனும் எப்போதோ வெளியேறி இருப்பர். இன்னும் நாளை வேறு இங்கே வர வேண்டும். ராகவியை அழைத்துச் செல்வது குறித்துப் பேசவே வாய்க்கவில்லை. புத்தியே பேதலித்தது போல் இருந்தது.

மேதாவின் புண்ணியத்தில் இரண்டு நாட்களாக ஆயா பாலாவுடன் தனியே திண்டாடுகிறார். இதுவரை பாலாவின் பாலியல் தூண்டுதல் குறித்து ஆயாவுக்கு எதுவும் தெரியாது. இப்போது மருந்து எடுத்துக்கொள்கிறான். ஆனாலும்… நேரமாக, ஆக அது வேறு கவலையாக இருந்தது.

சொல்லிக் கொள்வதற்கென பெரியவரின் அறைக்குச் சென்றனர். கூடவே, ராகவியும். உள்ளே…

ஐயா “என்ன வேணும்?”

மேதா தயங்கினாலும் “ஐயா, நான்தான் அவரை இப்பவே கல்யாணம் செஞ்சுக்கலாம்னு வற்புறுத்தினேன்”

“சரி”

“...”

“இங்க பாரு பொண்ணே, அவனுக்குப் புடிக்காமலா தாலி கட்டினான். ஹும்… ஒத்துமையா இருங்க. அரசு, பத்திரமா பாத்துக்க. வார்த்தையை விடாம பொறுமையா இருங்க. நாளைக்கு இங்க வரணும், புரியுதா?”

இவர்களது உரையாடலைக் கேட்டபடி நின்றிருந்த ராமநாதன் “ஐயா, நாங்க புறப்படறோம்”

“சரி, ராமநாதன், கல்யாணத்தை ஓரளவு முறைப்படுத்தி இருக்கேன். உங்களுக்கு ஏத்துக்க நாளாகலாம். பார்த்துக்கோங்க. என்னால ஒண்ணு மட்டும் நிச்சயமா சொல்ல முடியும். உங்க பொண்ணு சந்தோஷமா இருப்பா. நாளைக்கு சீக்கிரம் வந்துடுங்க, பார்ப்போம்”

ராமநாதன் தம்பதியர் எதுவும் பேசாது, இவர்கள் புறமே திரும்பாது , கை கூப்பி விடை பெற்று வெளியேற, ராகவியும் அவர்களுடன் செல்வதை மேதா சற்றே வருத்தத்தோடு பார்த்தாள். பெற்றோராவது திட்டினர், ராகவி சுத்தம். ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

பார்வதி ஆச்சி பேரனுக்கு ஜாடை காட்ட, வைரவன் மேதாவிடம் “போலாமா?”

“பொண்ணே, வழக்கமான உன் தைரியத்தைக் கை விட்டுடாத, அரசு, கூட்டிட்டுப் போடா”

“சரிங்கய்யா”

“நாளைக்கு காலைல வெள்ளென இங்க இருக்கணும்”

“சரிங்கய்யா”

*******************

வள்ளியம்மை சோர்வு, அதிர்ச்சி, மருந்தின் வீரியம் எல்லாம் சேர, உறங்கி இருந்தார். தணிகைநாதன் உறங்கும் பேத்தியின் அருகே படுத்திருந்தார்.

மீனாக்ஷியின் காலில் சற்று நீர் கோர்த்திருந்ததில் நந்தகுமார் அவளுக்கு காலுக்கு வெந்நீர் கொண்டு வந்து ஊற்ற, ஜீவா “பாத பூஜையா மாமா?”

“ரொம்ப ஓட்டாதடா, எனக்காவது இது ரெண்டாவது புள்ளை. இப்ப வருவான் பாரு, உங்கண்ணன். போய் ஆரத்தி கரைச்சு வை, போ”

மீனாக்ஷி “ஆரத்தி ரெடி பண்ணிட்டுதான் மாமா புடவையே மாத்தினேன்”

குரலைத் தழைத்துக் கொண்ட ஜீவா “மாமா, பெரியப்பா…”

நந்தகுமார் “நீ போடா, தெருவுல வெச்சா சண்டை போட முடியும்? உப்புப் பெறாத விஷயத்துக்கு மூஞ்சியைத் தூக்கிட்டு. அந்தாளு வேற (ராமநாதன்), ஓவர் பேச்சு”

“நல்லவேளை மாமா, நீங்க வந்தீங்க”

மீனாக்ஷி கணவனிடம் “போதும் மாமா” என்றவள், “ஜீவா, ஓவரா புகழாதடா. உங்க மாமாவை நான்தான் வரச்சொன்னேன்”

“அப்போ வைரவன் கல்யாணம் செஞ்சுப்பான்னு உனக்கு தெரியுமாக்கா?”

“நீ வேற, நேத்து சண்டையே ரெண்டு நாள் ஓடும்போல இருந்தது. இன்னைக்குப் பார்த்தா… ஆனாலும் வைரவன் கிட்ட இப்டி ஒரு ரெமோ இருப்பான்னு நான் நினைக்கவே இல்லடா ஜீவா”

“ம்ஹுக்கும். உன் தம்பிய நீதான்க்கா மெச்சிக்கணும். ரெமோ இல்ல, ரெமி. எல்லாம் அண்ணியோட கைங்கர்யம்” என்றவன், முதல் நாள் இருவரும் சந்ததில் இருந்து, அவனுக்குத் தெரிந்ததை சொன்னான்.

நந்தகுமார் “பாவம்டீ அவன். உங்கப்பா மட்டும் ஏதாச்சும் சொல்லட்டும், வைரவனை நம்ம கூடவே கூட்டிட்டுப் போயிடலாம். இந்த தீபாவளிக்கு அவன் டிஸைன் செஞ்ச நெக்லஸ் பார்டர் செட்டி நாட்டு புடவைக்கு செம டிமாண்ட் தெரியுமா?”

ஜீவா “இதெல்லாம் செய்யறானா அவன்?”

“வித்தியாசமா ஏதாவது டிஸைன் வேணும்னு நான்தான் கேட்டேன்”

“சூப்பர் மாமா”

வாசலில் கதவுச் சத்தம் கேட்க, எட்டிப் பார்த்த ஜீவா “அவங்கதான்”

எழுந்த மீனாக்ஷி “மாமா, நைட்டில ஆரத்தி எடுக்கலாமா?”

“ஏன்டீ, எதானும் சொல்லிடப் போறேன்”

“வைரவா, அண்ணி, கொஞ்சம் நில்லுங்க” என்ற ஜீவாவும் மீனாக்ஷியுடன் சேர்ந்து ஆரத்தி சுற்ற, நந்தகுமார், “இவனுக்கும் ஒரு நைட்டியைக் குடுடீ” எனவும், மேதா புன்னகைத்தாள்.

அன்றுவரை தனக்கு உரிமையாக, தனக்கே உரியதாக, பாதுகாப்பாக, புகலிடமாக, சுதந்திரமாக, இளைப்பாறும் இடமாக நினைத்த தன் வீட்டிற்குள் நுழையவே தயங்கினான் வைரவன்.

ஆணுக்கு பயம், கோபம், தாள முடியாத தவிப்பு எல்லாமே உதாசீனம்தான். அப்பா, மேதாவின் தந்தையைப் போல் திட்டி, சட்டையைப் பிடித்து, ஏன் இரண்டு அறை விட்டிருந்தால் கூடத் தேவலை போல் இருந்தது.

அமைதியாக சென்று முற்றத்துக் குறட்டில் அமர்ந்தனர். பால், பழம் கொடுக்கவோ, விளக்கேற்றச் சொல்வதோ, வள்ளியம்மை சொல்லிச் செய்தால் நல்லது என நினைத்த மீனாவும் அமர்ந்து கொண்டாள். ஜீவா, நந்தகுமார் என எல்லோரும் அமைதியை குத்தகைக்கு எடுத்தனர்.

வைரவனுக்கு தனக்கும் தன் மனிதர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி விழுந்துவிட்டதான பிரமை எழுந்தது.

தனக்காகத் தன் பெற்றோரை, வீட்டை, வசதிகளை விட்டு வந்தவளை எண்ண, இன்னுமே வியப்புதான்.

‘ஒரு பெண்ணின் தந்தையாக அவளது அப்பா கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதானே?’

‘மகள் கூட வேண்டாம். என் செல்லிக்கு இப்படி ஒரு பையனை….”

ஜட்டியுடன் எழுந்து வந்த நிலா “வைரன் மாமா” என்று கழுத்தைக் கட்டிக் கொண்டாள். பின் அவனது முகத்தை, சட்டையை ஆராய்ந்தவள் “ஊ பட்ருச்சா மாமா, தாத்தா அடிச்சாங்கள்ல?”

“இல்லடா தங்கம். நீ சாப்பிட்டியா”

“ம், பருப் சாம், வத”

“மாமா நிலா தொப்பைக்குள்ள இருக்கான்னு பார்க்கட்டுமா?”

“ம்”

குழந்தையின் வயிற்றை அமுக்கியவன் “இதோ பருப்பு சாதம், இங்க இருக்கு வடை, இதென்னடா, லட்டுவா?”

வேகமாகத் தலையை ஆட்டிய நிலா “மாமா, அம்மா தொப்பைல வடை இல்ல. பாப்பா இருக்கு” எனவும் கலீரெனச் சிரித்த மேதா, உடனேயே “ஸாரி” என, நந்தகுமார் “நீ என்னம்மா சிரிச்சதுக்கெல்லாம் ஸாரி கேக்கற?”

படாரென வாசல்கதவு திறக்க, தடதடவென உள்ளே வந்த ஸ்வர்ணலதா “ஐ, ரத்னம் பெரியம்மா சொன்னதுபோல நிஜமாவே உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? அண்ணா, எனக்கு பட்டுல அனார்கலி சுடிதார் வேணும்” என்றாள்.

எத்தனை நேரம்தான் உறங்க அல்லது, உறங்குவதாக நடிக்க முடியும்?

லதாவின் சத்தத்தில் வள்ளியம்மை விழித்துக்கொள்ள, தணிகைநாதனும் எழுந்து அமர்ந்தார்.

மீனாக்ஷி “அப்பா, தம்பியும் மேதாவும்…”

“அம்மாடீ, நாம எல்லாம் வேண்டாம்னு, நம்ம கிட்ட சொல்லாம போனவன் இப்ப எதுக்கு இங்க வந்திருக்கான்?”

வைரவன் “அப்பா…”

“அது கூடத் தெரியுதா உனக்கு?”

ஒரு நொடி தயங்கி ஆழ்ந்து மூச்சிழுத்த வைரவன், தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கோர்த்தான்.

“சொல்லாம கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்புதான். என் அம்மா, அப்பா, அக்கா, செல்லி, ஜீவா, மாமா, தங்கக் குட்டியோட இப்ப அவளும் நம்ம வீட்ல ஒருத்தின்னு நம்பி கூட்டிட்டு வந்துட்டேன். இப்ப நீங்க என்ன சொன்னாலும் சரி”
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
112
சர்க்கரை ஐயா ஏதோ பெரிய பிளான் வச்சிருக்காருன்னு தோணுதே 🙄🙄🙄🙄🙄🙄🙄
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
சூப்பர்👌👌👌👌👌, ஐயா ப்ளானோடதான் இருந்தாரோ?
ஐயா சூப்பர் கௌன்டர் வாட்டர் பால்ஸூக்கு 😜😜😜😜😜
வைரவன் கேள்விக்கு பதில் என்ன?
 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

எப்பவுமே மேதாவே ரெமியா இருக்க முடியாது... 😒😒 அம்பியா இருக்குற வைரவன் எப்ப ரெமோவா மாற போறான்? 😎😎

 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
Ragaviஉண்ண மாதிரி ஒரு செல்பிஷ் யாருமே இல்ல...இப்போ கூட உன் தங்கைக்காக நிக்க மாட்டுற ... உனக்கு பிரச்னை வர கூடாது ... என்ன ஓரு நல்ல எண்ணம்
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
ஆத்திரமாக வந்தாலும் அதிகப்படியாக இருந்தாலும் ராமநாதன் சொன்ன சொற்கள் நூற்றுக்கு நூறு சரியே. பெண்ணைப்பெற்றவராக அவரது மன ஓட்டம் புரிந்துகொள்ளக்கூடியதே

மேதா - வைரவன் - பின்விளைவுகளை இன்னும் கொஞ்சம் தீர ஆராய்ந்து பொறுமையுடன் செயல்பட்டிருக்கலாம்.
 
Top Bottom