• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தங்கச்சிலை போல் வந்து மனதை…! 13

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
தங்கச்சிலை போல் வந்து மனதை…! 13


கற்பக விநாயகர் கோவிலின் பிரகாரத்து மண்டபத் தூண் ஒன்றின் அருகே சம்மணமிட்டுத் தனியே அமர்ந்திருந்த மேதாலக்ஷ்மியின் முகத்தில் இறுக்கமும் பிடிவாதமும் தெரிந்தது.

ஒரு நீண்ட விவாதத்துக்கும் விளக்கத்துக்கும் பின்பும், கோபமாக வெளியேறி இருந்தான் வைரவன்.

‘போயேன், எனக்கென்ன?’

அலட்சியத்தைக் கைக்கொண்டு தன் இயல்புக்கு மீள நினைத்த மேதா, இயலாது தவித்தாள்.

‘வைரவனிடம் நான் இதை எதிர்பார்த்திருக்கணுமோ?’

‘அவன் எப்பவும் அவனோட எல்லையிலயேதான் இருக்கான். நான்தான் என் மனசை கைல புடிச்சுக்கிட்டு திரிஞ்சிருக்கேன்’

‘அவனுக்கு அம்மா, அப்பா, தங்கைன்னு குடும்பம், பொறுப்பு, கடமை ப்ளா, ப்ளா எல்லாம் இருக்காம். ஏன், எனக்கு குடும்பம் இல்லையா? அம்மா, அப்பா, அக்கா, தம்பி எல்லாம் கிடையாதா?’

‘உனக்காக அவங்களை எல்லாம் விட்டு வந்தேன் பாரு. என்னைச் சொல்லணும். இந்நேரம், நான் வீட்ல இல்லன்னு ஆயா கண்டு பிடிச்சிருப்பாங்களா?’

‘என்னடா, நம்பளை நம்பி நடுவீட்ல வெச்சு இவனைத்தான் கட்டிக்குவேன்னு சொன்னாளேன்னு கூடவா உனக்குத் தோணலை?’

‘இப்ப கிஃப்ட் குடுத்தது, அவனோட பேசணும்னு கூப்பிட்டது, சிவகங்கைக்கு வரவான்னு கேட்டு கூடப்போனது, இவன்தான் வேணும்னு சொன்னது, இப்ப வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டது, எல்லாமே நான்தான். அதான் உனக்கு இளக்காரமா போச்சு’

‘இந்த அப்பா, எப்போதும் குட்டிம்மா, குட்டிம்மான்னு சொல்றவர், நான் பேசறதை காது கொடுத்து கேக்கவே தயாரா இல்ல’

முந்தைய இரவில் சீக்கிரமே உறங்கிவிட்ட மேதா அதிகாலையிலேயே விழித்து விட்டாள். பசித்தது. இன்னும் யாரும் எழவில்லை என்பதால், அமைதியாக தன் மொபைலுடன் அமர்ந்துகொண்டாள்.
வைரவனின் குறுஞ்செய்தி மனதுக்கு அத்தனை ஆறுதலாக இருந்தது.

ஆயா, அவளது பெற்றோர் என ஒவ்வொருவராய் எழுந்து வந்தனர். இவளது “குட்மார்னிங் டாடி” க்கு வெறும் தலையசைப்புதான் பதிலாகக் கிடைத்தது.

அம்மா நளினிக்குக் கோபமா, குற்றவுணர்வா என்று தெரியவில்லை, ஆனால், இவளிடம் இயல்பாகப் பேசவில்லை. மேதா வழக்கம்போல் தன் வேலைகளைப் பார்த்தாள். பாலாவை மொட்டை மாடியிலேயே வாக்கிங் அழைத்துச் சென்றாள்.

அவளது தந்தை மார்க்கெட்டுக்குச் சென்று, சம்பந்தி வீட்டு பூஜைக்கு எடுத்துச் செல்ல பூ, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழங்கள் என வாங்கி வந்தார்.

ஆயா ஏழரை மணிக்கெல்லாம் இட்லியும் மல்லி சட்னியும் பரிமாறினார். உண்ணும் நேரமும் அமைதிதான்.

மேதாவைப் பொறுத்தவரை, அவள் பேசியது தவறில்லை. அப்படியே தவறாக இருந்தாலும், அதற்கான தண்டனையும் அனுபவித்தாகிவிட்டது. இன்னும் எத்தனை நேரம் இந்த மௌன நாடகம், என்றிருந்தது. இது அவளறிந்த பெற்றோர் இல்லை.

எதிரில் அமர்ந்துகொண்டு அவர்களுடன் பேசாமல் இருப்பது கடினமாயிருக்க, அவளது அறைக்குள் சென்று விட்டாள். சிறிது நேரத்திலேயே ராமநாதன் அழைத்தார்.

“எஸ் டாடி”

“நாளைக்கு ஃபங்ஷன் முடிஞ்சதும், நீ, நான், பாலா மூணு பேரும் கோயம்புத்தூருக்குப் போயிடலாம்”

“...”

“காரைக்குடிலயே டெலிவரி வெச்சிக்கலாம்னு அவங்க வீட்ல சொல்லி, ராகாவை இங்கேயே கூட்டிட்டு வரத்துக்கு கேட்போம். டெலிவரி நேரத்துல நான் மட்டும் இங்க வந்துக்கறேன்”

“...”

“நீயும் ராகவி வீட்டு ஆள்களைப் பாக்க வேண்டி இருக்காது. கொஞ்சநாள் பாலாவை நீ பார்த்துக்க. டெலிவரிக்குப் பிறகு என்னன்னு அப்புறம் யோசிக்கலாம்”

“...”

அதுவரை அமைதியாக இருந்த நளினி “அதோட, இதுவரை இவளைக் கேட்டு வந்த வரனையெல்லாம் யாரு, என்னன்னு பார்த்து, சட்டு புட்டுனு ஒரு கல்யாணத்தைப் பண்ணிடணும்”

“...”

“என்னடீ, நேத்து எல்லார் முன்னாலயும் அத்தனை பேச்சு பேசின, இப்ப பதில் சொல்ல முடியலையோ?”

ஆயா “அமைதியா பேசு நளினி, ஏன் அநாவசியமா கோபப்படற? சொல்ற விதத்துல இதமா சொன்னா, கேட்டுக்கப்போறா, அவ என்ன புரியாதவளா?”

தன்னை வைரவனிடமிருந்து விலக்கி வைக்க மூவரும் துல்லியமாகத் திட்டம்போட்டு சேர்ந்திசைப்பது (well orchestrated) புரிந்தது.

மேதா “நான் என்னம்மா சொல்லணும், நம்ம வீட்டுக்குப் போய் பாலாவோட இருக்கணும். அவ்ளோதானே, டன்”

மேதாவின் உடனடி சம்மதத்தை எதிர்பார்க்காத மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். முதலில் சுதாரித்த தந்தை,


“அக்கா, என் ஃப்ரெண்டு அருணாச்சலம் அவன் பையன் செந்திலதிபனுக்கு மேதாவைக் கேட்டான். நல்ல வசதியான இடம். பையன் ஐடில இருக்கான். இப்ப ஆன்சைட்ல கனடா போய் இருக்கான். அங்கேயே செட்டில் ஆகவும் வாய்ப்பிருக்கு. எனக்கு
பார்க்கலாம்னு தோணுது”

“நல்லது தம்பி, செய். நேரத்தோட நடந்தா நல்லதுதான்”

நளினிக்கு இனிமேல் வரப்போகும் மேதாவின் திருமணத்தை விட, ராகவியின் பிரசவ நேரம் நெருங்கிவிட்ட நிலையில், நேற்றைய நிகழ்வின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதே தலையாய கவலையாக இருந்தது.

மேதா மௌனமாக வேடிக்கை பார்த்தது, நளினியை உறுத்த, உள்ளே இரு வேறு யோசனைகள் ஓடியது.

மகளின் அமைதி ஏடாகூடமாக எதையாவது செய்து வைப்பாளோ என்ற பயத்தையும், தாங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கிறாள் எனில், வைரவனைக் கை காட்டியது, தண்ணீர்மலையைத் தவிர்க்கச் செய்த அந்நேரத்து உத்தியோ என்ற சந்தேகமும் எழுந்தது.

“மாமா, எது செய்யறதுனாலும் உங்க பொண்ணைக் கேட்டு செய்ங்க. பின்னால நாலு பேருக்கு நடுவுல மானத்தை வாங்கிட்டான்னா நமக்குதான் அசிங்கம்”

“ஆமா தம்பி, நளினி சொல்லுறதும் சரிதான். எதுக்கும் கண்டிச்சு கேட்டுக்க” - ஆயா.

யோசிக்க, யோசிக்க , கோவையில் நடந்த ஷர்மியின் திருமணத்திற்கு வைரவன் வந்தது கூட திட்டமிட்டு நடத்ததோ என்ற ஐயம் எழ, அதன் முன் பின்னான மகளின் செய்கைகளை, செய்திகளை தொடர்புபடுத்திக் கொண்ட ராமநாதன், தன் சம்மதத்தோடு, தன் கண்களை மறைத்து மேதா காரியம் சாதித்ததுபோல், தான் முட்டாளாக்கப்பட்டது போல் உணர்ந்தார்.

அடங்கி இருந்த ஆத்திரம் மேலெழுந்ததில், திருட்டுத்தனம் செய்பவள், சொல்லிவிட்டுச் செய்வாளா என்று யோசிக்க மறந்தார்.

தொண்டையைச் செருமிக்கொண்ட ராமநாதன் “நாங்க சொல்ல வர்றது என்னன்னு உனக்குப் புரியும்னு நினைக்கிறேன். அந்த வைரவனோட சகவாசத்தை விட்டு ஒழி. காதலிக்கறேன், அவனைத்தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு உளறாம, ஒழுங்கா இரு”

“...”

நளினி “நேத்து இவ செஞ்சதுக்கே, இன்னைக்கு அவங்களை எப்படிப் பார்க்கன்னு இருக்கு. இதுல காதல் ஊதல்னு…”


மேதா “ஏம்மா, ராகாவோட லவ்வை நீங்க ஏத்துக்கலையா?”

“அதுவும் இதுவும் ஒண்ணா? சிவா மாப்பிள்ளையையும் வைரவனையும் சமமா வெச்சுப் பேசறதே தப்பு” - நளினி.

ராமநாதன் “சும்மா இரு நல்லி, இங்க பாரு மேதா, இன்னைய தேதிக்கு வைரவனுக்கு படிப்பு, தொழில், பின்னணின்னு எதுவும் கிடையாது. அவங்கப்பாக்கு சாமர்த்தியம் பத்தாது. படுத்த படுக்கையா கிடக்குற அம்மாக்கு, ஸ்கூல் படிக்கிற தங்கச்சிக்கு, ஆயா வேலை பார்க்க எவனாவது படிப்பை விடுவானா, போதாக்குறைக்கு அந்த ஜீவா பய வேற”

‘வைரவனின் நகை டிஸைன் செய்யும் திறமையை எவ்வளவு தூரத்திற்கு அழகுநாச்சியில் அவர்களது லாபத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் (expliot) என்று சொன்னால், இவர்களால் புரிந்து கொள்ளவா முடியும்?’

“ஏதோ ஒன்னுமில்லாததுக்கு, ஸ்வீகாரமாச்சேன்னு குடும்ப கௌரவத்துக்காக கடைல வேலைக்கு வெச்சு, பணம் கொடுக்கறாங்க போல. இல்லைன்னா குடும்பமே சோத்துக்கு சிங்கியடிக்க வேண்டியதுதான்”

“அவுக அப்பா பிள்ளை கூட்டி வந்தவருன்னா சொத்து வரணுமே தம்பி”என்றார் ஆயா.

“நீ வேறக்கா, இவுகளை விட பெரிய பெரிய குடும்பங்கள்ல எல்லாம் சொந்தமா பிள்ளை இல்லாதபோதே தத்து ரத்துன்னு அறிக்கை விடறாங்க… வேறெதுவும் வேணாம். இப்படியே அமைதியா போய், ‘என் தத்து புத்திரனை அந்த பந்தத்துல இருந்து விடுவிக்கறேன்’ னு பெரியவர் உயில் எழுதிட்டா போதும், ஓட்டைக் காலணா கூட கிடைக்காது. இருக்கற வீட்டைப் பிடுங்கினாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்”

தன் பெற்றோர்களால் ஒருவரை இத்தனை நிந்தித்துப் பேச முடியும் என்பதையே மேதாவால் நம்ப இயலவில்லை. அதுவும் அது வைரவன் எனும்போது மிகுந்த வருத்தமளித்தது.

படிப்பும் பட்டமும் மதிப்பெண்களும் சான்றிதழ்களும் முக்கியம்தான். அவள் என்ன கல்வியின் மகத்துவம் புரியாதவளா?

‘ஆளுக்கொரு டிகிரியைக் கையில் வைத்திருக்கும் சிவா மாமாவும் அந்த நீர்க் கரடியும் என்னத்தைக் கிழிச்சாங்களாம்? ஒருத்தருக்கு முதுகெலும்பைக் காணும். இன்னொருத்தனுக்கு மூளையவே காணோம்’

ஆயா “அதெல்லாம் விடுங்க. அவங்க வீட்டுல ஒரு பையனுக்குப் பொண்ணைக் கேட்டு, இன்னொருத்தனை இவ கட்டிக்கிட்டா, நம்ம ராகாவோட நிலமை? அக்காவும் தங்கையுமே முறைச்சிக்கிட்டு நிப்பாங்க”

ராமநாதன் “நம்ம கிட்ட பொண்ணு கேட்டு வர்ற அளவுக்கு அந்த வைரவனுக்கும் அவன் அப்பனுக்கும் தகுதியும் தைரியமும் இருக்கா என்ன?”

நளினி “அதைச் சொல்லுங்க, ஒரு டம்ளரைக் கூட நகர்த்தாத உங்க பொண்ணு, அங்க போன அடுத்த நிமிஷம் கரண்டி ஒரு கையில, பெட்பேன் (Bedpan) ஒரு கையிலன்னு நிக்கணும்”

‘வைரவனைப் பற்றிய எதிர்மறைப் பட்டியல்தான் இன்னும் எத்தனை?’


‘பணம் மட்டும் இருந்தால் இத்தனை நெகட்டிவும் பாஸிடிவாக மாறிவிடும், தராதரம் உயர்ந்துவிடும் போலும்’

வைரவனின் பின்னணி, குடும்பம், படிப்பு என எதுவும் தெரியாதபோதே அவனை விரும்பத் தொடங்கிய மேதா இதுவரை அவனது தோற்றத்தைக் கூட அதிகம் யோசித்ததில்லை. அவனை விட அவனது வரையும் திறமையும், அந்நேரம் இறுகும் புஜமும், கவனக் குவிப்பும், அவனது அளவு மீறாத அக்கறையும் ஆலோசனைகளும்தானே அவன்பால் அவளை ஈர்த்தது?

இவர்களுடன் போராடும் சக்தி தனக்கில்லை என்பதை உணர்ந்தவளுக்கு, அவர்கள் மூவரும் சொன்னவற்றில் ஒரு விஷயம் சரியாகப்பட்டது.

தகுதி, தராதரம், தைரியம் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். வைரவன் தன் கடமைகளை விட்டு எனக்காக ஒருநாளும் தானே வரமாட்டான் என்றுதான் தோன்றியது.

பெற்றோர் இருவரும் தயாராகி ராகவியின் வீட்டை நோக்கிச் செல்ல, சட்டென முடிவெடுத்த மேதாலக்ஷ்மி, அடுத்த அரை மணிக்குள் வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.

*****************

பைக்கில் அமர்ந்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்த வைரவன் இருந்த சூட்டிற்கு
கார்த்திகை மாத வெயிலே தகித்தது.

‘ஆத்தாடீயாத்தா, இவ கிட்ட மாட்டினேன், எப்ப என்ன செய்வான்னே புரியாம, நெஞ்சு வலி வர வெச்சிருவா போல’

‘கத்தி முனைல நிக்க வெச்சு கல்யாணம் கட்டிக்கலமான்னு கேட்ட கையோட “ஒனக்கு நான் வேணாமா ராசப்பு” வேற’

‘பிசாசு, பேய், ராட்சசி. சொன்னா கொஞ்சமாச்சும் புரிஞ்சிக்கறாளா? எங்க, நான் பேசறதைக் காதுல வாங்கினாதானே?’

‘அந்தப் பயலுக்கு பொண்ணு கேக்கலைன்னா கூட பரவாயில்ல, இப்ப எங்கப்பாவே என்னை நம்பலை’

‘என் நிலமை புரிஞ்சும் வீட்டை விட்டு வந்துட்டேன், கல்யாணம் பண்ணிக்கலாம்னா என்ன அர்த்தம்?’

‘இதுக்கு பயந்துக்கிட்டுதானே இந்தப் பிரச்சினையே வேணாம்னு தள்ளி நின்னேன். கடைசில எங்க கொண்டு போய் விட்ருக்கா பாரு. டேய் கல்பு, உன்னை நம்பினதுக்கு, நல்லா செய்யிறடா நீ’

‘சரி, எனக்கும்தான் அவளப் பிடிச்சிருக்கு. இல்லைங்கல. அதுக்காக? கொஞ்ச நாள் பொறுமையா இருக்கலாம்னா, அதுக்குள்ள அவங்கப்பா ராவோட ராவா கனடால இருந்து புதுசா ஒரு வில்லனைக் கண்டுபுடிச்சிட்டாராம். எனக்குன்னே கிளம்பி வருவீங்களாடா?’

இருவரும் மாற்றி மாற்றிக் குற்றம் சொன்ன பிறகு “இப்ப விட்டா, என்னை காரைக்குடி பக்கமே வர விடமாட்டாங்க வைரவ்” என்றவளின் குரலே உள்ளே போய்விட்டது.

மேதாலக்ஷ்மி சொன்னது அனைத்தும் நிஜம்தான். அவளது தந்தை சொன்னதுபோல், இவனாகப் போய் பெண் கேட்கும் நிலை கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லை.

அதைவிட, தணிகைநாதன் தன் தந்தையின் குடும்பத்துக்கு எதிராக விரலைக் கூட அசைக்கமாட்டார் என்பது ஊருக்கே தெரியும்.

அந்நியன் போல் ‘உங்களை நம்பி வெளில வந்ததுக்கு எனக்கு நல்லா வேணும்’ என்ற மேதா, அடுத்த கணமே
“ராசப்பு, நிஜமாவே ஒனக்கு நான் வேணாமா?’ என்று ரெமோவைப் போல் பேசினாள்.

‘சாவடிக்கிறடீ’

“இப்ப என்னங்கற?”

“நத்திங், நேத்து எல்லார் முன்னாலயும் உங்களைதான் கட்டிப்பேன்னு சொல்லிட்டேன். ஏதோ ஒரு வேகத்துல, நம்பிக்கைல வீட்டை விட்டும் வந்துட்டேன். நான் குடுத்த ஆர்ம்லெட்டை நீங்க இன்னும் கழட்டாம இருக்கவும் உங்களுக்கும் என்னை… ம்ப்ச்… நீங்க கிளம்புங்க சொல்றேன்”

“ஏய்… இரு இரு, நான் அந்த வளையத்தைப் போட்டிருக்கேன்னு உனக்கு யார் சொன்னா?”

“அன்னைக்கு டீ கடைல மழை பெய்யும்போது தெரிஞ்சுக்கிட்டேன்”

‘அதனாலதான் அதுக்கப்புறம் இவ அமைதியாயிட்டாளா? ச்ச், நான்தான் என் கதையைக் கேட்டு விலகிப் போயிட்டான்னு தப்பா நினைச்சுட்டேனா’

யோசனையுடன் பார்த்தவனை “என்ன பாக்கறீங்க, போய் உங்க குடும்ப கௌரவத்தைக் கட்டிக் காப்பாத்துங்க, போங்க”

“நான் சொல்றதைக் கேளு, நீ முதல்ல கிளம்பி வீட்டுக்குப் போ. வேணாம், நானே கொண்டு போய் விடறேன் வா”

“அரசுன்னு பேர் வெச்சா, மாசம் மும்மாரி பொழிகிறதான்னு கேப்பீங்களோ? நான் இப்ப உங்க கூட பைக்ல வந்தா உங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்களா?”

“ஏன், இதுக்கு முன்ன நீ என்னோட வெளில வந்ததே இல்லையா?”

“An elephant in the room’ னு சொல்லுவாங்க. அறைக்குள்ள பெரிய யானையை வெச்சுக்கிட்டு உதவாத விஷயத்தை பெருசு படுத்தறது. தனியா வந்த எனக்கு தனியா போகவும் தெரியும்”

அவளை முறைத்தவனை, அயராது பார்த்தவளிடம் “என்னவோ செய்” என்று கோவிலை விட்டு வெளியே வந்து, பதினோரு மணி வெயிலில், காஸ்கெட் போடாத பழைய குக்கர்போல் எல்லாப் பக்கமும் புகைந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறான்.

தலையை உலுக்கிக் கொண்டவன், உதைத்த உதையில், பைக் துள்ளிக்கொண்டு நகர்ந்தது.

‘டேய் வைரவா, அவ சாதாரண மோகினி இல்லடா, ஜகன்மோகினி’ என்று நினைத்தவனுக்குப் புன்னகை விரிந்தது.

*******************

பணிப்பெண் வீட்டை சுத்தம் செய்ய, அவளுக்குக் காபி, பலகாரம் கொடுத்த ஆயா, பாலாவுடன் பேச்சுக் கொடுத்தபடி அமர்ந்திருந்தார்.

மனதில் விசேஷ வீட்டிற்குச் சென்றிருக்கும் மகளும் மருமகனும் சங்கடமின்றி இருக்கிறார்களா, ராகவியின் பிரசவம் குறித்தான தங்களது திட்டத்தை அவர்கள் ஏற்பார்களா, என்ற சிந்தனை ஓடியது.

காலையில் நடந்த பேச்சுவார்த்தை மனதில் ஓட, அப்போது அறைக்குள் சென்ற மேதா நீண்ட நேரமாகத் திரும்பி வராததை உணர்ந்து, வீட்டை மெழுகிக் கொண்டிருந்தவளிடம் “சித்ரா, மேதாவைக் கூப்பிடு” என்றார்.

“அவுகளை ரூம்ல காணலியே ஆச்சி”

“நல்லா பாரு, போத்திகிட்டு தூங்கி இருக்கப்போறா”

“இல்லையே, நான் வேணா பின் பக்கமும், மொட்டை மாடிலயும் பார்த்துட்டு வரேன்” என்றவள், மூச்சிறைக்கத் திரும்பி வந்து “ஆச்சி, அவுக எங்கயுமே இல்ல” எனவும், ஆயாவைப் பதட்டம் சூழ்ந்தது.

‘ஐயோ, இவ எங்க போயிட்டா, அவ அப்பன் வந்து கேட்டா என்ன பதில் சொல்லுவேன், கொப்புடையம்மா, உனக்கு மாவிளக்கு போடறேன், விபரீதமா எதுவும் நடக்காம காப்பாத்து தாயே’ என்று அவசர விண்ணப்பம் அளித்தவர், தானே போய் தேடிப் பார்த்தும் பலன் பூஜ்ஜியம்தான்.

சில நிமிடங்கள் அமைதியாக யோசித்தவர், மேதாலக்ஷ்மியின் எண்ணுக்கு அழைக்க ‘ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என்றது குரல். வேறு வழியின்றி தம்பிக்கு அழைத்துவிட்டார்.

****************

சக்கரை ஐயாவின் வீட்டில், பூஜைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விரிவாக செய்யப்பட்டிருக்க, ஐயர் தான் வர சிறிது நேரமாகும் என்றிருந்தார்.

இரண்டு விழாக்கள் என்பதால், இதை சுமங்கலி பூஜை, பிள்ளையார் பூஜை, சாந்தி ஹோமம் என கலந்துகட்டியாக ஏற்பாடு செய்திருந்தனர். விருந்தினரின் வசதி கருதி நடு நாளில் முஹுர்த்தம் இருக்கவே, இன்று வைத்திருந்தனர்.

குறித்த நேரத்திற்கு வந்துவிட்ட நளினியையும் ராமநாதனையும் இயல்பாகவே வரவேற்றனர். தெய்வானை கூட நன்றாகவே பேசினாள். தண்ணீர்மலை மட்டுமே முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

நளினி ராகவியை விசாரித்த அளவில் ‘இதுவரை ஒன்னும் பிரச்சனை இல்லம்மா, அவங்க என்ன பேசிக்கிட்டாங்கன்னு எனக்குத் தெரியாது’ என்றாள்.

மேதா சொன்னது போல் பெண் கேட்கப் போவது ராகாவிற்குத் தெரிந்திருக்குமோ என நினைத்தவள், மகளிடமே கேட்டாள்.

“சிவாதான் உங்ககிட்ட சொல்ல வேணாம்னு சொன்னார் மா, ஏன்?” என்றவள் யாரோ அழைக்க, “அப்புறம் பேசலாம்மா” என்றவாறு நகர்ந்தவள், மேதாவைப் பற்றி எதுவுமே கேட்காதது நளினிக்கு என்னவோ போல் இருக்க, அமைதியாக அமர்ந்தாள்.

தணிகைநாதனின் வீட்டில், புழக்கடையில் இருந்து வந்த ஜீவாவைக் கண்டதுமே, வைரவனின் குட்டு வெளிப்பட்டு விட, வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார் தணிகைநாதன்.

“தம்பி அப்படியெல்லாம் செய்யறவன் இல்லைப்பா” என்று மீனாக்ஷி சொல்வதையோ, வள்ளியம்மையின் அழுகையையோ சிறிதும் பொருட்படுத்தாது பதட்டமாகக் கத்தினார்.

‘ஏன்டா, ஒரு மெஸேஜ் குடுத்துட்டுப் போய் இருந்தீன்னா, நான் பாட்டு பின்பக்கமாவே வெளிய போயிருப்பேன்ல’ என்று எண்ணிய ஜீவாவுக்கு, பெரியப்பாவின் வார்த்தைகள் அனைத்தும் அநியாயமாகப்பட்டது.

தன் பத்தொன்பதாவது வயதிலிருந்து ஆறு வருடங்களாக இந்த வீட்டையும் சாலையையும் தவிர எங்கும் போகாமல் சுற்றி வருபவனை தியாகி என்று போற்ற வேண்டாம். திட்டாமலாவது இருக்கலாமே?

அப்படியே வைரவன் அந்த மேதாவை விரும்பினால்தான் என்ன? வேறு இனமா, மதமா எதுவுமில்லையே. முறை கூட சரிதானே?

அந்தப் பெண்ணே கை காட்டியும் சூழ்நிலை கருதி, சிறிதும் தடுமாறாது அமைதியாகத்தானே வந்தான்? நானா இருந்தா, எப்பவோ கரெக்ட் பண்ணி, கல்யாணமே பண்ணி இருப்பேன்’

முகப்பில் நிழலாட, மீனாக்ஷியின் கணவன் உள்ளே நுழைந்தான்.

‘ஆண்டவா, நல்ல நேரத்துல இவரை அனுப்பி விட்டிருக்க, ரொம்ப தேங்க்ஸ்’

ஜீவா “வாங்க மாமா, மீனாக்கா, யாரு வராங்கன்னு பாரு. தங்கக்கட்டி, அப்பா பாருடா” என சத்தமாக வரவேற்கவும், மாப்பிள்ளையின் வரவில் தணிகைநாதன் சற்று அடங்கினார்.

“அப்பாவும் அம்மாவும் நாளைக்கு வேற ஒரு இடத்துக்கு போறாங்களாம். நீ போய் ரெண்டு நாள் இருந்துட்டு வான்னு சொன்னாங்க” என்றபடி மகளைத் தூக்கியவன், மனைவியைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான். பின்னே, வரச்சொன்னதே அவள்தானே?

ஜீவாவையும் வள்ளியம்மையும் தவிர, மற்ற மூவரும் பெரிய வீட்டுக்குச் சென்றனர்.

முதலில் மீனாக்ஷியின் கணவனை வரவேற்ற பார்வதி ஆச்சி “என்னடா தணிகா, ஆடி அசைஞ்சு விருந்தாளி மாதிரி வர, ஏன் மீனா, வள்ளியாலதான் இருந்து செய்ய முடியல, நீயாவது சீக்கிரமா வரக்கூடாதா, போய் சித்தியைக் கேட்டு வந்தவங்களுக்கு என்ன குடுக்கணும்ணு பார்த்து தட்டை அடுக்கு போ” என வரவேற்று வேலை கொடுத்ததில், இயல்பாக உணர்ந்தனர்.

பேத்தியை அருகில் அழைத்த சக்கரை ஐயா “அரசுவும் செல்லியும் எங்க?” என்றார்.

லதா பிறந்ததுமே வைரவன் செல்லி என்று அழைக்கத் தொடங்க, அவனது கோபத்தைக் கிளறுவதற்கென்றே, ஐயாவும் அப்படியே அழைக்க, அதுவே பழகிவிட்டது.

“லதா ஸ்கூலுக்குப் போயிட்டா. வைரவன் வந்துடுவாங்கய்யா”

“சரி, நீ போ. மாசமா இருக்கவ, அசங்காம வேலை செய்த்தா” என்றார் அக்கறையுடன்.

அப்படியும் இப்படியுமாக பூஜை தொடங்கவே பதினோரு மணியாகி விட்டது. வயதானவர்களுக்கு சத்துமாவுக் கஞ்சி போடச்சொல்லி, வாழைப்பழத்துடன் கொண்டு வந்து கொடுத்த மீனாக்ஷியை கவனித்தாள் நளினி.

அன்று பாலாவை அழைத்து வந்த வைரவனிடமும் இதே பணிவும் கனிவும் இருந்தது, இப்போது தேவையின்றி நினைவுக்கு வந்தது.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, பூஜை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ராமநாதனின் அலைபேசி மீண்டும் மீண்டும் ஒலிக்க, கீழ்வாசலில் இருந்து நகர்ந்து, மீனாக்ஷியும் இன்னொரு பெண்ணும் சாமான் அடுக்கிக்கொண்டிருந்த அறை வாயிலின் அருகே வந்து நின்றவரின் “என்னக்கா சொல்ற, இந்நேரத்துக்கு மேதா வீட்ல இல்லாம எங்க போவா?’ என்றதைக் கேட்ட மீனாக்ஷிக்குப் படபடத்து வந்தது.

******************


“மேதாவி மேடம், தியானமா, தூக்கமா?”

கண்களை மூடி அசையாது அமர்ந்திருந்தவள், மனதளவில் சோர்ந்து, பயந்திருப்பது புரிய, வைரவன் தன்னையே நொந்து கொண்டான்.

கண் திறந்தவள் “நீங்க இன்னும் போகலையா, இங்க ஏன் வந்தீங்க?”

“வா, கல்யாணம் பண்ணிக்கலாம்”

“...”

“நிஜமாதான்டீ, வா…ஆஆஆஆ”

அவனை நம்பாது மேதா அவனது இடது முழங்கைக்கு மேல் நறுக்கென்று கிள்ளியிருக்க, அலறியவனிடம் “ஷ்…” என்றவள், அவனைப் பிடித்துக்கொண்டு குதித்துக் கீழே இறங்க, வைரவன் சிரித்தான்.

“என்ன சிரிப்பு?”

“நீ நிஜமாவே கல்யாண வாழ்க்கைல குதிச்சியா, அதான்”

பேசியபடியே கற்பக விநாயகரின் சன்னதிக்கு வர, அர்ச்சகர், வைரவன் முன்பே கொடுத்திருந்த மாலையையும், தடியான மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட, சிறிதாக, ஆனால் அழுத்தமாக இருந்த செட்டிநாட்டுத் தாலியையும் விநாயகரின் பாதத்தில் வைத்துக் கொண்டு வந்து கொடுக்க ‘கல்பு, உன்னை நம்பிதான், என்னை நம்பி வந்தவளுக்கு தாலி கட்டறேன். நீதான் பொறுப்பு, பார்த்துக்கோ’ என பிள்ளையாரைக் கூட்டு சேர்த்துக் கொண்டான்.

நாதஸ்வரம், மேள, தாளம் என இல்லாமல், அவர்களது வழக்கமான பிரம்மாண்ட ஏற்பாடுகள், சீர் வரிசைகள் ஏதுமின்றி, வைரவன் ஜீன்ஸ், டீ ஷர்ட்டிலும், மேதா சல்வார் குர்த்தியிலும் இருக்க, கற்பகக் களிறு சாட்சியாய், தாலி கட்டி, மாலை மாற்றிக்கொண்டு இருவரும் சதிபதிகளாயினர்.

கோவிலைச் சுற்றிவந்து வணங்கிவிட்டு, வெளியே வர, இருவரது முகமுமே பதட்டத்துடன்தான் இருந்தது.

மேதாவின் இரண்டு மணி நேரத்துக்கு முன் “நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், அதே சொந்தக் காரங்கதான். அங்கேயேதான் போகணும். உங்க அப்பா செஞ்சு வெச்சாலும், நாமே செஞ்சுக்கிட்டாலும், நீ எங்கய்யா வீட்டுக்குப் போகாம இருக்க முடியாது, உனக்குப் புரியுதா இல்லையா? என்று வைரவன் சொன்னது ஒலித்தது.

தந்தையின் கோபம், அன்னையின் உடல்நிலை, தம்பி, தங்கை, தன் வீட்டின் பொருளாதாரம், இந்தத் திருமணத்திற்குப் பின்னான உறவுச் சிக்கல்கள், தன் வேலை நீடிக்குமா என்ற கவலை, மேதா துறந்து வந்த வசதியான வாழ்வு, நாளை நடக்கவிருக்கும் ஐயாவின் எழுபதாவது திருமண நாள், என வைரவனின் சிந்தனை நீள, அவனது அலைபேசி ஒலிக்க, சக்கரை ஐயா.

“ஐயா”

“எங்கடா போன, எங்க இருந்தாலும் உடனே வீட்டுக்கு வா. அந்தப் பொண்ணையும் கூட்டிட்டு வா”

வைரவனின் ‘ஐயா’ காற்றில் கரைந்தது.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: தங்கச்சிலை போல் வந்து மனதை…! 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Manikodi

New member
Joined
Jun 19, 2024
Messages
12
கல்யாணத்த இப்பட சட்டுபுட்டுனு முடிச்சுட்டியே அரசு
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
அடேய், இப்படி படக்குழு கல்யாணத்தை முடிச்சிட்டியே ராசா, ஐயா க்கு ததெரியுமோ?
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
26
மோகினி பேசி பேசியே காரியம் சாதிஜிகிட்டா.. ரென்டு அப்பாவும் உஷ்ண நிலையில் இருக்க என்ன ஆக போகுதோ
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
கல்யாணம் சட்டுபுட்டுன்னு ஆகிடிச்சு. After marriage rituals(!?!?) Ambani வீட்டு கல்யாணத்துக்கு குறைவில்லாமல் ஜகஜ்ஜோதியாக நடக்கட்டும்😂😀
 
Joined
Jun 19, 2024
Messages
33
😍😍😍

கல்பு முன்னாடி வச்சு அமோகமா கல்யாணம் நடந்தாச்சு... அடுத்து என்ன பெரிய வீட்டுல வச்சு மேள, தாளத்தோட கச்சேரி தானே? 😜😜

 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
57
😍😍😍

கல்பு முன்னாடி வச்சு அமோகமா கல்யாணம் நடந்தாச்சு... அடுத்து என்ன பெரிய வீட்டுல வச்சு மேள, தாளத்தோட கச்சேரி தானே? 😜😜

நல்ல தாள வாத்தியக் கச்சேரி😍
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
43
வைரவன் எப்படி கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தான்.கல்புவின் மேல் உள்ள நம்பிக்கையோ.
 
Top Bottom