அத்தியாயம் – 9
மிடுக்காக நடந்து வந்த துருவனைப் பார்த்து முறைத்தவாறே ஆதிநந்தன் நின்று கொண்டிருந்தான். துருவன் நேராகச் சென்று அருணின் பெற்றோர்களிடமும், ஆராதனாவின் தந்தையிடமும் தன்னை ‘துருவன் ஐ. பி. எஸ்.’ என அறிமுகப்படுத்திக் கொண்டான்.
அவனைப் பார்த்த நேத்ராவுக்கோ மனதில் அப்படி ஒரு நிம்மதியுணர்வு தோன்றியது. துருவனைப் பல வருடங்களாக அவளுக்குப் பழக்கம். நெருங்கிய தோழியின் அண்ணன் வேறு.
அவன் நேத்ராவைப் பார்த்ததும், “கண்மணி நீ எங்க இங்க?” என வியப்புடன் வினவ, அவள் கப்பலுக்கு வந்த காரணத்தைச் சொன்னாள். அத்தோடு அருணையும் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல நண்பனாகத் தெரியும் என்று தகவல் தந்தாள்.
அருணின் இறப்புக்கு நியாயம் கிடைத்துவிடும் என நம்பியே தனக்குத் தெரிந்த அனைத்தையும் துருவனிடம் ஒப்புவித்தாள் நேத்ரா.
“கவலைப்படாத... சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன் கண்மணி” என்ற துருவனின் பேச்சு ஆதிநந்தனின் காதில் பட, ‘கண்மணியா?’ என விலுக்கென்று நிமர்ந்தான். அவன் கண்களில் வெறுப்பு பெருகிற்று.
இந்தத் துருவனை நம்ப முடியுமா? ஆதிநந்தனின் மாமா பெண், மித்ராவின் கணவன் தான் இந்தத் துருவன். இருவரும் காதலித்த விஷயம் வெகுநாட்களுக்குப் பின்னரே ஆதிநந்தனுக்குத் தெரிய வந்தது. மித்ராவின் வீட்டில் எதிர்ப்புக் கிளம்ப, ஆதிநந்தனும் அதற்குத் தூபம் போட்டான்.
அவனுக்குத் துருவனைக் கல்லூரி காலத்தில் இருந்தே பிடிக்காது. எதிலும் போட்டி, எல்லாவற்றிலும் போட்டி. இளங்கலை மற்றும் பட்டப்படிப்பில் இருவரும் ஒரே துறையில் படித்தனர். அதனாலேயே அடிக்கடி முட்டிக் கொள்ள நேர்ந்தது.
அதன்பிறகு இருவரும் இந்திய குடிமைப்பணிக்கான பரீட்சை எழுதி துருவன் காவல்துறையிலும், ஆதிநந்தன் வருமானவரித் துறையிலும் சேர்ந்தனர்.
அப்படிப்பட்ட துருவனைத் தன் குடும்பப் பெண்ணொருத்தி விரும்பினால் சும்மா இருப்பானா ஆதிநந்தன்? அதுவும் அதுவரையில் மித்ராவுக்கு ஆதிநந்தன் தான் பெரிய ஹீரோ. எப்போது துருவன் நுழைந்தானோ இவன் ஜீரோவாகிப் போனான்.
மித்ராவின் வீட்டில் பலத்த எதிர்ப்புக் கிளம்ப, அவளின் காதலும் வலுப்பெற்றது. ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல் வீட்டுக்குத் தெரியாமல் துருவனும், மித்ராவும் திருமணம் செய்து கொண்டனர்.
இது நடந்து ஒரு வருடம் இருக்கும். இன்னுமே அவர்களுக்குள் பேச்சு வார்த்தையில்லை. அப்படியிருக்கையில் அந்த துருவன் தன் நண்பனுக்காக நியாயமாக நடந்து கொள்வானா என்றிருந்தது ஆதிநந்தனுக்கு.
அதுவும் நேத்ராவுக்குத் தெரிந்தவன் என்றால் தன் நண்பனின் இறப்புக்கு நிச்சயம் நியாயம் கிடைக்காது. ஏனெனில் அவனின் முதல் சந்தேகமே நேத்ராவின் மேலல்லவா விழுந்திருக்கிறது.
அவர்கள் பேசுவதை இடையிட்டு, “எனக்கு என்னவோ நீ..” என ஆரம்பித்து, “நீங்க கண்டுபிடிப்பீங்க என்கிறதுல நம்பிக்கையில்லை” எனத் தொடர்ந்து சொன்னவாறே அவர்கள் முன்னால் போய் நின்றான் ஆதிநந்தன்.
‘ஏன்?’ என்பதை போல் உயர்த்திய புருவங்களுடன் துருவன் அவனைத் துளைக்கும் பார்வை பார்க்க, “நீங்க பாரபட்சம் பார்க்க நிறைய வாய்ப்பிருக்கு” எனத் தயங்காமல் பதில் தந்தான் ஆதிநந்தன்.
அதற்குள் நேத்ராவின் அலைபேசி இசைத்தது. ஒளிர்ந்த எண்ணை பார்த்தவள், ‘அதற்குள்ள மூக்கு வேர்த்திடுச்சா? ச்சை...’ என நொந்து கொண்டவாறே, “ஒரு நிமிஷம்” என அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் பதட்டத்துடன் நகர்வதைப் புருவ மத்தியில் கேள்வியுடன் துருவன் பார்க்க, “அவங்களைப் பார்த்து முடிச்சுட்டா, நம்ம அருணைப் பத்திப் பேசலாம்” எனச் சிடுசிடுத்தவாறே அவன் கவனத்தைத் தன்புறம் திருப்பினான் ஆதிநந்தன்.
துருவன் தன் அதிகாரத்தை அங்கே காட்டியிருக்கலாம். ஆனால் எதிரில் இருப்பவனின் வேதனையை உணர்ந்தவன் போல், “சொல்லுங்க ஆதி. உங்களுக்கு அருணை எத்தனை வருஷமா பழக்கம்?” என மென்மையான குரலில் தன் விசாரணையை ஆரம்பித்தான்.
அவனைத் தீப்பார்வை பார்த்த ஆதிநந்தன், அவன் கேள்விக்குப் பதிலளிக்காமல், “உங்களுக்குத் தெரிஞ்சவங்களை எல்லாம் சரியா விசாரிக்க மாட்டீங்க என எனக்குப் பெரிய சந்தேகம்” என்றான்.
‘நீயே மேலே பேசு’ என துருவன் அவனையே ஊடுருவி பார்க்க, “நேத்ரா மேலே எனக்குச் சந்தேகமா இருக்கு” என்ற ஆதிநந்தன், இப்போது எதிரில் இருந்தவனைத் துளைக்கும் பார்வை பார்த்தான்.
துருவனின் முகத்தில் இருந்து எதையும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“ஏன்?” ஒற்றை வார்த்தையில் துருவன் கேள்வியை முன் வைக்க, “அருண் அவங்களைக் காதலிச்சான். நேத்து நைட் இவங்க ரெண்டு பேரும் தான் கடைசியாப் பேசிட்டு இருந்தாங்க. காலையில பார்த்தா அவன் உயிரோட இல்லை” என்றான் ஆதிநந்தன்.
அவனால் துக்கத்தை மறைக்க முடியவில்லை. கண்கள் கலங்கிப் போயின. அருணும், ஆதிநந்தனும் இணைபிரியா நண்பர்கள் என்று துருவனுக்கும் தெரியும். அருணும் அதே கல்லூரியில் வேறு பிரிவில் படித்தது அவனுக்குத் தெரியுமே.
ஆதிநந்தனுக்கு ஒன்று என்றால் அருண் அல்லவா கொடியை உயர்த்திக் கொண்டு சண்டை போட அவனுக்காக வருவான்? அப்படிப்பட்டவன் இன்று உயிரோடு இல்லை. வேதனை கண்டிப்பாக இருக்கவே செய்யும்.
“நேத்ரா காதலிச்சாங்களா?” என துருவன் கூர்மையாக அவனைப் பார்க்க, “அது... இல்ல.. இவன் தான் லவ் பண்ணினான். ஆனா அவங்ககிட்ட சொல்லலை” என்றவனின் குரல் பிசிறு தட்டியது.
“ஏன் சொல்லலை?” எனப் போலீஸ் மூளையைக் கசக்கி துருவன் அடுத்தக் கேள்வியை முன்வைக்க, ‘அவள் மோசமானவள்... தப்பானவள்’ என்று அவனிடம் சொல்ல நா சற்றும் ஆதிநந்தனுக்குப் புரளவில்லை.
“அது... “ என வாய் திறந்துவிட்டு, “எனக்குத் தெரியலை. ஆனால் இவங்க ஒரு பெண் கஷ்டப்பட்டப்போ ஹெல்ப் பண்ணாம போனதை நானே பார்த்தேன். கொஞ்சமும் இரக்கமில்லை” என்றான்.
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? சும்மா ஆதாரமில்லாம ஒருத்தர் மேலே புகார் சொல்லக் கூடாது” என துருவன் கண்டிப்பான குரலில் சொல்லவும்,
“சார், நீங்க போலீஸ் எல்லோருக்கும் பொதுவானவங்க.. உங்களுக்குத் தெரிஞ்சவங்க எனப் பாரபட்சம் பார்க்கக் கூடாது. எனக்கு அவங்க மேலே சந்தேகம் இருக்குன்னு சொன்னா விசாரிக்க வேண்டியது உங்க கடமை” என்றான் ஆதிநந்தன்.
“ சார் சொல்லிட்டீங்க இல்ல? தீவிரமா விசாரிக்கிறோம்” என நக்கலாக அவனிடம் சொன்ன துருவன் அங்கிருந்து நகர்ந்தான்.
சில அடிகள் நடந்தவன் மீண்டும் அவனிடம் வந்து, “நேத்ராவை எவ்வளவு நாளா உங்களுக்குத் தெரியும்? உங்க பழைய பகையைத் தீர்த்துக்கப் பார்க்கறீங்களா என்ன?” என அவன் கேள்விகளை அடுக்க, ஆதிநந்தனுக்குக் கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
பதில் சொல்லாமல் முறைக்க, “கோபப்படாதீங்க சார். போலீஸ் மூளை அப்படி இப்படின்னு தான் இருக்கும்” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்ற துருவன் மீண்டும் அவனருகில் வந்து, “ஐ யேம் ரியலி சாரி ஆதி” என அருணின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு அகன்றான்.
‘இவன் நல்லவனா? கெட்டவனா?’ எனச் செல்பவனையே பார்த்துக் கொண்டு அங்கேயே வெகுநேரம் நின்று கொண்டிருந்த ஆதிநந்தனைத் தேடிக் கொண்டு ஸ்வப்னா வந்து சேர்ந்தாள்.
அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்திருந்தாள். ஆதிநந்தனிடம் ஒட்டிக் கொண்டிருந்த சலிப்பு விழிப்புத் தட்டியது.
“சாரி ஆதி... இப்படி ஆகும் எனத் தெரியலை. அருண் உங்களுக்கு ரொம்பப் பழக்கமோ?” எனக் கேட்க, “ஆமா, ஸ்வப்னா...” எனச் சுருக்கமாக அவர்களின் நட்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தவனின் கண்களில் நேத்ரா பட்டாள்.
அதுவரையில் ஒட்டிக் கொண்டிருந்த சலிப்பு தூக்க மாத்திரையை உட்கொண்டதைப் போல் நித்திரை கொண்டது.
“ஸ்வப்னா, நீங்க போய் வேலையைப் பாருங்க. எனக்குக் கொஞ்சம் தனிமை வேணும்” என நாசுக்காக அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான்.
அவளோ அவன் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், “இந்த மாதிரி நிலைமையில நீங்க தனியாக் கஷ்டப்படூவீங்கன்னு வந்தேன்” என அவனை மேலும் நெருங்கி நிற்க,
“இல்லைங்க ஸ்வப்னா, எனக்கு இப்போ கண்டிப்பாத் தனிமை வேணும். பிளீஸ்...” என நேத்ரா சென்று கொண்டிருந்த திசையில் அவன் பார்வை பயணித்தது.
அவனை ஒரு கணம் புருவச் சுழிப்புடன் ஏறிட்டுப் பார்த்த ஸ்வப்னா, “ஓகே டேக் கேர் ஆதி. அப்புறம் பார்க்கலாம்” என நகர்ந்தாள்.
அடுத்தக் கணமே நேத்ரா சென்ற திசையில் ஆதிநந்தன் வேகமாக எட்டுகள் எடுத்து வைத்தான். சற்றுத் தூரத்தில் அவள் ஓர் ஓரமாக நின்று கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவளை நெருங்கி, “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படிப் பண்ணுவ?” எனச் சீற்றத்துடன் ஆரம்பித்தான்.
திடுமென ஒலித்த அவனது குரலில் திடுக்கிட்டுப் பார்த்த நேத்ரா, ‘உனக்கு இப்போ என்ன தான்டா வேணும்?’ என அவனைக் கண்டதும் சலிப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு மீண்டும் கடலை வெறிக்க ஆரம்பித்தாள்.
“நான் உன்கிட்டே பேசிட்டு இருக்கேன்” என்ற ஆதிநந்தனின் குரல் இன்னும் பலமாக, நெருக்கமாக ஒலிக்க, “உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை? என்ன வேணும் உங்களுக்கு?” என அவனைப் பார்க்காமல் வினவினாள்.
“மித்ராவோட கல்யாணத்துக்குச் சாட்சி கையெழுத்துப் போட்டு அவ வாழ்க்கையை நாசம் பண்ணினது நீ தானே?” சீற்றத்துடன் வெளிவந்த அவன் கேள்வியில் கண்கள் விரிய அவனை நோக்கித் திரும்பினாள்.
“என்ன பார்க்கிற? என்ன ஆனாலும் உன்னை நா சும்மா விட மாட்டேன். எனக்குச் சொந்தமான மித்ராவையும் என்கிட்ட இருந்து பிரிச்சுட்ட... அருணையும் பிரிச்சுட்ட” என வேகமாக அவளை நெருங்கி அவள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவளைக் கடலில் தள்ளிவிடும் வேகத்தோடு அவளைத் தோளோடு இரு கைகளாலும் பற்றி அப்படியே கடலை நோக்கித் வளைத்தான்.
அவனின் திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து போனாள் நேத்ரா. இடது கையோ பிடிமானத்துக்கு அவனின் சட்டை காலரையே பற்றிக் கொண்டது. வலது கை அவள் உடலுக்குப் பின்னால் நகர்ந்து பிடிமானத்துக்கு என்ன கிடைக்கும் எனக் காற்றில் துழாவ ஆரம்பித்தது.
அவனும் அப்படி ஒன்றும் பிடியை விட்டுவிடவில்லை. அவளைப் பயமுறுத்தவென்றே அப்படிச் செயல்பட்டான். பற்றியிருந்த கைகளில் அவள் உடலில் தோன்றிய நடுக்கத்தை ஆதிநந்தனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
கூடவே அவள் கண்கள் பயத்தில் அங்கும் இங்கும் சூழன்றதையும் கண்டுகொண்டான். எப்படியாவது இந்த நிலையிலிருந்து தப்பித்தால் போதும் என்ற பதட்டம் அவள் உடல்மொழியில் நன்றாகவே தெரிந்தது.
ஆதிநந்தனின் மூளை பட்டென விழித்துக் கொள்ள, ‘என்னடா செய்து கொண்டிருக்கிறாய்? உனக்கு என்னவாகிவிட்டது இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொல்கிறாய்?’ என அதட்டல் போட்டது.
சட்டென்று பிடித்திருந்தவளை நேர்படுத்தி நிறுத்த முயல, அவளது வலது கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட் கழன்று அப்படியே கடலுக்குள் விழுந்தது.
விழுந்துவிட்டதை என்ன செய்ய முடியும்? அவன் என்ன சினிமாவில் வரும் ஹீரோவா உடனே கடலில் குதித்து அதைக் கை பற்றிக் கொண்டு வருவதற்கு? ஒரு நொடி தயங்கி அவள் முகத்தைப் பார்த்தவன் அதற்குமேல் அங்கே நிற்காமல் நகர்ந்துவிட்டான்.
‘இப்போ இங்கே என்ன நடந்தது? இவனுக்கும் மித்ராவுக்கும் என்ன சம்மந்தம்?’ அப்படியே திகைத்துப் போய் அவன் சென்ற திசையைச் செய்வதறியாது பார்த்தவாறே நின்றுவிட்டாள் நேத்ரா.
தொடரும்..
Author: laavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் -9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் -9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.