அத்தியாயம் – 15
இரவு எட்டு மணியளவில் காரைப் புதுச்சேரியில் உள்ள தன் பாட்டியின் வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்தாள் நேத்ரா. பக்கத்து இருக்கையில் இதழ் பிரித்து ஒரு குழந்தையைப் போல் உறங்கும் ஆதிநந்தனை எழுப்பவே அவளுக்கு மனம் வரவில்லை.
எத்தனை நாட்கள் உறக்கமில்லாமல் கஷ்டப்பட்டானோ? கண்டிப்பாக அருணின் இறப்பு அவனுக்கு மிகப் பெரிய வலியைத் தந்திருக்கும். உள்ளுக்குள் இன்னுமே வேதனைப்பட்டுக் கொண்டிருப்பான்.
சற்றுநேரத்துக்கு முன்னர் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் வண்டியை நிறுத்தவே நினைத்தாள். ஆனால் அயர்வில் தன்னை மறந்து உறங்குபவனைத் தட்டி எழுப்பித் தொல்லை செய்ய அவளுக்கு இஷ்டமில்லை. அதனால் நேரத்தை விரயம் செய்யாமல் நேராகத் தன் பாட்டியின் வீட்டுக்கு வந்து விட்டாள்.
பங்கஜம்மாள் அவள் தந்தை வழிப் பாட்டி. அவர் மட்டும் தனியாக வீட்டுப் பணி செய்யும் பெண்ணுடன் அங்கே தனித்து வசிக்கிறார். அடிக்கடி வருகை புரியும் பேத்தியின் வரவு அவருக்கு மிகுந்த உற்சாகமளிக்கும்.
சென்னையில் வசிக்கும் மகனுடன் போய்த் தன்னால் இருக்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். நேத்ராவும் தன்னுடன் வந்து இருக்கச் சொல்லி அவரிடம் பலமுறை சொல்லிப் பார்த்தும் அவர் கேட்பதாகயில்லை.
அத்துடன் அவள் வேறு அடிக்கடி கப்பலில், இல்லை, வெளியூர் என்று பணி நிமித்தம் கிளம்பிவிடுவாள். அப்போதும் அவர் தனியாக அல்லவா இருக்க வேண்டும். எங்கோ போய்த் தனித்திருப்பதற்குப் பதிலாகத் தன் கணவர் வாழ்ந்த வீட்டில் தன் ஆயுட்காலம் வரையில் இருக்க விரும்புவதாகச் சொல்லவும், நேத்ராவுக்கும் அதுவே சரியென்று பட்டது. அதனால் பாட்டி கூறியதற்கு மறுத்துப் பேசவில்லை.
ஆனால் முடிந்தவரையில் அடிக்கடி பாட்டியைப் பார்க்க புதுச்சேரிக்கு வந்துவிடுவாள். மனது சரியில்லை என்றாலும் இங்கே தான் வருவாள். கோபம் அதிகம் வந்தாலும் இங்கே தான் வருவாள். அதிக உற்சாகம் என்றாலும் இங்கே தான் வருவாள். எல்லாவற்றுக்கும் தீர்வு இங்கே மட்டும் தான் அவளுக்குக் கிடைக்கும்.
இன்று அவளுக்குக் கட்டுக்கடங்காமல் கோபம் பெருகவே விமான நிலையத்திலிருந்து அப்படியே புதுச்சேரிக்குக் கிளம்பிவிட்டாள். ஆனால் ஒன்று. கிளம்புகையில் இருந்த கோபம், எரிச்சல் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. எல்லாம் இவனால் என மீண்டும் ஆதிநந்தனைத் திரும்பிப் பார்த்தாள் நேத்ரா.
அவனும் அதே சமயத்தில் பட்டென்று கண் முழித்தான். சற்றுநேரம் என்ன நடக்கிறது என்று கூட அவனுக்குப் புரியவில்லை. கண்களைப் பலமுறை திறந்து திறந்து மூடியவனுக்கு நடந்தது எல்லாம் புரிய, சுற்றும் முற்றும் பார்த்தவன், “சாரி தூங்கிட்டேன்” என அசடு வழிந்தான்.
கார் வந்து நின்று வெகுநேரமாகியும் பேத்தி இறங்கவில்லை என்றதும் பங்கஜம்மாளும் பணியாளரும் என்ன, ஏது என்று பார்க்க வெளியில் வந்துவிட்டனர்.
அவர்கள் வரும் அரவம் கேட்டு காரிலிருந்து இறங்கி, “பாட்டி...” எனத் துள்ளலுடன் அவரிடம் ஓடினாள் நேத்ரா. அவளைப் பின்பற்றி ஆதிநந்தனும் இறங்க, பங்கஜம்மாளின் பார்வைக் கூர்மையடைந்தது.
இறங்கியவனை எடைபோடும் விதத்தில் தன் கண்ணாடியை சரி செய்தவாறே அவனை மேலும் கீழும் ஆராய்ந்தார். பாட்டியின் பார்வை சென்ற திசையை உணர்ந்து கொண்ட நேத்ரா, “பாட்டி, இவர் என்னோட ஃப்ரெண்ட் ஆதி” என அவனை அறிமுகப்படுத்தி வைக்க, “வணக்கம்” என இரு கைகளையும் கூப்பி வணங்கினான்.
“இவரைப் பஸ் ஸ்டண்ட்ல இறக்கிவிட நினைச்சேன் பாட்டி. ரொம்ப அசந்து போய்த் தூங்கிட்டு இருந்தார். அதான் அப்படியே இங்கே கூட்டிட்டு வந்துட்டேன்” எனப் பாட்டியிடம் இலகுவாக அவள் விளக்கமளிப்பதைக் கண்ட ஆதிநந்தன்,
“சாரிங்க நேத்ரா. நீங்க என்னை அங்கேயே எழுப்பியிருக்கலாமே?” என மனவருத்தத்துடன் சொல்ல, மனசாட்சியோ, ‘டேய் மானங்கெட்டவனே... அவ எழுப்பினப்போ தூங்குற மாதிரி ஸீனைப் போட்டுட்டு...’ என அவன் முகத்தில் காறி உமிழ்ந்தது.
மனசாட்சியிடம் அசடு வழிந்தவாறே, ‘நேத்ரா கூட இனி எப்போ இப்படி ஒண்ணா இருக்கிறதுக்கு நேரம் கிடைக்குமோ? இதெல்லாம் கண்டுக்காம ஓரமா நில்லேன்’ என விளக்கவுரை தந்தான்.
எவ்வளவு எழுப்பியும் அவன் எழவில்லை என்று சொல்ல அவளுக்குப் பிடிக்கவில்லை. “பரவாயில்லைங்க ஆதி. என் பாட்டி வீட்டுச் சாப்பாடு பிரமாதமாக இருக்கும்., சாப்பிட்டுத் தெம்பா கிளம்புங்க” என்றாள்.
“ரெண்டு பேரும் உள்ள வாங்க...” என பங்கஜம்மாள் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
அவர்கள் இருவரும் போய்க் கை கால் அலம்பி, முகம் கழுவிவிட்டு வரவும், “நீ மட்டும் வர்றதா சொன்ன கண்மணி. இவரும் கூட வர்றார்னு சொல்லியிருந்தா ஸ்பெஷலா ஏதாவது செஞ்சிருப்பேனே” என பங்கஜம்மாள் பேத்தியிடம் குறைப்பட்டுக் கொள்ள,
“எனக்கே அவர் வர்றது தெரியாதே பாட்டி” எனத் தட்டில் சாப்பிடுவதற்கு எடுத்து வைத்துக் கொண்டவாறே நடந்ததை விளக்கினாள்.
‘இவளுக்கு நெருக்கமானவர்கள் இவளைக் கண்மணி என்று அழைக்கின்றனர்’ எனப் புரிந்து கொண்டான். துருவனும் அவளை அப்படித் தானே அழைத்தான்.
“அப்போ அவரை அங்கேயே இறக்கி விட்டிருக்கலாமே?” எனப் பேத்தியைப் பங்கஜம்மாள் கூர்ந்து நோக்க, “எங்க பாட்டி? நடுவுல இவர் இறங்க மாட்டேன்னு சொல்லிட்டார். வேற எங்கேயும் நிறுத்தறதுக்கு வழியில்லாமல் உங்க மருமகள் எனக்குப் பாடிகார்ட்டா ஆளுங்களை அனுப்பிட்டாங்க” எனக் கலகலவென்று சிரித்தாள் நேத்ரா.
அவள் தாமரையாய் மலர்ந்து போய்ச் சிரிப்பதை இன்று தான் முதல் முதலில் பார்க்கிறான் ஆதிநந்தன். இப்படியே அவள் முகத்தில் சிரிப்பை உறைய வைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவனால் கண்டிப்பாக முடியும். ஆனால் அவள் ஒத்துக்கொள்ள வேண்டுமே? ஒத்துக் கொள்வாளா? மனம் ஜிவ்வென்று மேலே பறக்க ஆரம்பித்தது.
பங்கஜம்மாளின் முக மாறுதல்களைக் கவனித்தவாறே, “பாட்டி... உடனே போராடறேன்... தேரோட்டறேன் எனக் கிளம்பிடாதீங்க. எனக்கு உங்களோட சேர்ந்தாற் போல நாலு நாள் இருக்க வாய்ப்புக் கிடைச்சிருக்கு. மிஸ் பண்ணிடாதீங்க” என அவள் கேலியாகப் பேசிக் கொண்டிருக்க ஆதிநந்தனுக்கு அப்போது ஒன்று உறைத்தது.
‘இவளுக்கு அம்மா இல்லையோ? அதனால் தான் அப்பாவோட வொய்ஃப் எனத் தன்னிடம் சொன்னாள். இவரிடமும் மருமகள் என்கிறாள்’ என மனதுக்குள் அசைப்போட்டுக் கொண்டிருந்தான்.
“அவளை நான் அப்புறம் வச்சுக்கிறேன்” எனக் கோபமாக உரைத்த பங்கஜம்மாள், “எத்தனை தடவை இப்படித் துரத்த வேண்டாம் எனப் படிச்சு படிச்சு அவகிட்ட சொல்லறது? ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடுச்சுன்னா” எனப் பொருமியவர்,
ஆதிநந்தனிடம் திரும்பி அவனைப் பற்றியும், அவன் குடும்பத்தைப் பற்றியும் பேச ஆரம்பித்துவிட்டார். அவன் இயல்பாகப் பேசவும் நேத்ராவும் அவர்களின் உரையாடலில் கலந்து கொண்டாள்.
பங்கஜம்மாளுக்கு இப்போது ஆதிநந்தனின் மேல் மரியாதை வந்திருந்தது. ஏனெனில் அவன் அருணின் பேச்சால் அவர் பேத்தியைத் தவறாக நினைத்துச் சற்று அதிகமாகவே அவளைத் துன்புறுத்திவிட்டதாகக் கூறி அவரிடமும் மறைக்காமல் மன்னிப்பை வேண்டினான்.
பேத்தி மற்றும் பாட்டியின் விழிகள் ஏதோ இரகசியம் பேசிக் கொண்டன. அதை அவன் பெரிதாகக் கருதவில்லை. முதலில் அவன் மேலிருக்கும் களங்கத்தை நீக்க வேண்டும். பிறகு தான் அவனை இவள் குடும்பத்துக்குப் பிடிக்கும் என எண்ணிக் கொண்டான் ஆதிநந்தன்.
எதற்காக இவ்வளவு மெனக்கெடுகிறான் என்று அவனுக்குப் புரிய அவனைக் குறுகுறுப்பு வந்து சேர்ந்து கொண்டது. அவன் வருமான வரித்துறையில் இருப்பதாகச் சொல்லவும், “எங்களுக்கு வேண்டிய பையன் போலீஸ்ல இருக்கான்” என பங்கஜம்மாள் துருவனைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள,
“பாட்டி, அவருக்குத் துருவன் அண்ணாவைத் தெரியும். ஒரே காலேஜ்ல படிச்சவங்க” என்றாள் நேத்ரா.
முகம் மலர்ந்த பங்கஜம்மாளின் முகம், “நம்ம துருவ் அண்ணனோட வொய்ஃப், மித்ரா இவரோட அத்தைப் பொண்ணு” என்றதும் சுருங்கிப் போனது.
“உங்க வீடு காதலுக்கு எதிரியா என்ன?” பங்கஜம்மாள் பட்டென்று இப்படிக் கேட்பார் என இளையவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. ஆதிநந்தனுக்குப் புரையேறியது. சட்டென்று தண்ணீரை அவன் முன்னால் நகர்த்தி வைத்தாள் நேத்ரா.
தண்ணீரை எடுத்துப் பருகியவனுக்குக் கண்கள் கலங்கிப் போனது. அன்று கப்பலில் நடந்த நிகழ்வுகள் தொடர்ந்து அவனுக்கு ஞாபகம் வர நேத்ராவை விழிகளால் கூர்ந்து பார்த்து, “சாரி” என உதடுகளை அசைத்தான்.
“பாட்டி... என்ன பேச்சு பாட்டி இது?” என நேத்ரா பெரியவரிடம் குறைபட, “அதில்லடா கண்மணி, துருவன் எவ்வளவு கஷ்டப்படறான் தெரியுமா? அதுவும் மித்ராவுக்கு இப்போ அஞ்சு மாசம். இன்னும் யாரும் அவங்க வீட்ல வந்து பார்க்கலை” என அவர் வருத்தப்பட,
“பாட்டி...” என ஆரம்பித்து, “உங்களை அப்படிக் கூப்பிடலாம் தானே?” என அவர் அனுமதி பெற்றுக் கொண்ட ஆதிநந்தன், “நான் அத்தைகிட்ட பேசிட்டேன் பாட்டி. அவங்க ஓரளவுக்குச் சமாதானம் ஆகிட்டாங்க” என்றவன்,
கடந்த மூன்று மாதங்களில் அவன் அத்தையின் மனதைப் பேசியே கரைத்துவிட்டதாகச் சொன்னான். இன்னும் அவன் மாமா மட்டும் கோபத்தில் பொருமிக் கொண்டிருக்கிறார். அவரையும் கூடிய சீக்கிரம் வழிக்குக் கொண்டு வந்துவிடுவதாகச் சொன்னான்.
“ரொம்பச் சந்தோஷம் ஆதி. இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு. என் கண் முன்னாடி வளர்ந்த பையன் அவன்” என்றதும், “இங்க மாடி வீட்ல தான் அவங்க இருந்தாங்க. அப்படித் தான் எனக்கும் துருவ் அண்ணா பழக்கம்” என்றாள் நேத்ரா.
“ஒரு காலத்தில காதலுக்கு நானும் எதிரியா இருந்தேன். அதனால் நிறையப் பேர் பாதிக்கப்பட்டுட்டாங்க. முக்கியமா என் கண்மணி” எனப் பங்கஜம்மாளின் விழிகளில் குளம் கட்ட, ஆதிநந்தன் திடுக்கிட்டான்.
‘நேத்ராவுக்கு ஏற்கனவே ஒரு காதல் இருக்கிறதா? அது தோற்றுவிட்டதா, இல்லை, இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறதா?’ ஆதிநந்தனின் சுவாசம் தடைபட்டதைப் போலிருந்தது.
‘ஐயோ!’ எதை எதையோ யோசித்தவன் அவளுக்கு வேறொரு காதல் இருக்கக் கூடும் என ஏன் நினைக்கவில்லை? அதனால் தான் இவளுக்கு அவன் மேல் எந்தப் பிடிப்பும் வரவில்லையோ? அவனை ஆர்வமாகக் கூட அவள் பார்க்கவில்லையே.’ மனம் தவிக்க ஆரம்பித்தது.
“இவளோட அப்பா ஒரு பெண்ணை விரும்பறது தெரிஞ்சும் வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்... ஆனா அவன் மனசொன்றி வாழலை. இவ அம்மாவும் உண்மை தெரிஞ்சு விட்டுக் கொடுத்திட்டா. கடைசில போய்ச் சேர்ந்துட்டா. என் மகன் அவன் பாட்டுக்குத் தன் வாழ்க்கையைப் பார்த்துட்டுப் போயிட்டான். இவ தான் நடுவுல சிக்கிட்டுக் கஷ்டப்படறா” என்ற பங்கஜம்மாள் சில நொடிகள் நிறுத்தி அவனையே கூர்ந்து பார்த்தார்.
“இதெல்லாம் உங்ககிட்ட ஏன் சொல்லறேன்னா நான் பிடிச்ச வீம்பை உங்க வீட்டு ஆளுங்களைப் பிடிக்க வேண்டாம் என நீங்க எடுத்துச் சொல்லணும். இனி என்ன நடந்தாலும் பாதிக்கப்படப் போறது பிறக்கப் போற துருவனோட குழந்தை” என்ற பெரியவரின் கண்களில் இருந்த நீர் இப்போது கன்னத்தில் வழிந்தோடியது.
“பாட்டி.. என்ன பாட்டி இது, இப்படி அழுகாச்சி நாடகம் பார்க்கவா சேசிங் எல்லாம் தாண்டி ஓடி வந்திருக்கேன்?” என நேத்ரா கேலியாக வினவ,
“பாட்டி, நீங்க கவலைப்படாதீங்க. அத்தை சமாதானம் ஆகிட்டாங்க. மாமா மட்டும் தான் கொஞ்சம் அடம் பிடிக்கிறார். செல்ல பொண்ணு மேலே அளவு கடந்த நம்பிக்கை வச்சிருந்தார். அத்தை எப்படியோ பேசி இந்த வாரம் மித்ரா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறதா என்கிட்ட சொன்னாங்க. நான் திரும்பவும் பேசறேன் பாட்டி” என அவரிடம் நம்பிக்கையளிக்கும் விதத்தில் பேசினான்.
தொடர்ந்து, “நீங்க என்னை நீ வா போன்னு கூப்பிடுங்க பாட்டி.. பிளீஸ்” என முடித்தான்.
அதன்பிறகு பொதுவான விஷயங்களைப் பேசியவாறே சாப்பிட்டு முடிக்கவும் இருக்கையில் இருந்து எழுந்த ஆதிநந்தன் அப்படியே தட்டையும் உடன் எடுக்க, “என்ன பண்ணற? அப்படியே வச்சிடு ஆதி” என பங்கஜம்மாள் பதட்டமடைந்தார்.
“என் அம்மா மட்டும் சாப்பிட்ட தட்டை அப்படியே வச்சுட்டுப் போறதைப் பார்த்தாங்க அவ்வளவு தான். அடுத்தவேளை சாப்பாடு கிடைக்காது” எனப் பெரியவர் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை.
“பாட்டி, அவர் நாளைக்குக் காலையில இங்க வந்து சாப்பிடறேன் என நமக்கு மறைமுகமாகத் துப்பு கொடுக்கிறார். நீங்க வேற” என உடன் எழுந்தவாறே நேத்ரா சொல்லவும், “கண்டுபிடிச்சிட்டீங்களா?” எனப் பற்கள் தெரியப் பளீரென்று புன்னகைத்தான்.
அவன் தட்டை உரிய இடத்தில் வைத்துவிட்டுக் கை கழுவி கொண்டு வர, அங்கிருந்த பணிப் பெண்ணை அழைத்த பங்கஜம்மாள், “தாமுவை வரச் சொல்லு. தம்பியைப் போய்ச் சென்னையில விட்டுட்டு வரட்டும்” என அவர்களின் கார் ஓட்டுநரை வரச் சொன்னார்.
“பாட்டி, உங்க மாடி வீட்ல இப்போ யாராவது குடி இருக்காங்களா? ஒரு நாலு நாளைக்கு எனக்கு வாடைக்குத் தருவீங்களா?” எனப் பட்டென்று ஆதிநந்தன் கேட்க, மீண்டும் பேத்தியும், பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“இல்லை, வர்றப்போ மேலே லைட் எரியலை... அதான் கேட்டேன். எப்படியும் ஃப்ரீயா கூட்டிட்டு வந்துட்டாங்க. அப்படியே சுத்திப் பார்த்துட்டுப் போறேனே” என அவன் மீண்டும் பளீரென்று சிரிக்க, “கலா, போய்ச் சாவியை எடுத்துட்டு வாம்மா” என மீண்டும் பணிப் பெண்ணிடம் சொன்னவர்,
ஆதிநந்தனிடம் திரும்பி, “மேலே வீட்ல குடியிருக்கறவங்க வெளியூர் போயிட்டாங்க. அது போக ஒரு ரூம் எக்ஸ்ட்ரா இருக்கு. அதுல போய்த் தங்கிக்கோப்பா” என்றவர், “சுத்தமா இருக்கு இல்ல கலா” எனப் பணிப் பெண்ணிடம் வினவ, “இருங்குங்க அம்மா... காலையில தான் கூட்டித் துடைச்சேன்” என்றாள்.
“கண்மணி, நீ போய் மேலே ரூமைக் காட்டிட்டு வா” எனப் பேத்தியிடம் சொன்னார். அவரிடம் நன்றியுரைத்துவிட்டு ஆதிநந்தன் கிளம்ப, அவனுக்கு மேலே இருந்த அறையைக் காட்டுவதற்கு மாடிப் படிகளில் ஏற ஆரம்பித்தாள் நேத்ரா.
“தேங்க் யூ நேத்ரா, என்னை நம்பி இங்க இடம் கொடுத்ததுக்கு” எனச் சொல்ல, அப்படியே நின்று திரும்பிப் பார்த்தவள், “என் தாத்தா போலீஸ்ல இருந்தவர். அதனால் என்னோட பாட்டிக்கு யாரை நம்பறது, யாரை நம்பக் கூடாதுன்னு என்னை விட நல்லாவே தெரியும்” என உரைத்துவிட்டு மேலே ஏறிப் போய் அறைக் கதவைத் திறந்தாள்.
படுக்கையறையுடன் கூடிய குளியலறை அது. வெகு சுத்தமாக இருந்தது. பார்த்ததுமே அவனுக்கு அந்த அறைப் பிடித்துப் போனது. அதுவும் அவனருகில் மனதுக்கு இனியவள் வேறு ரம்மியத்தைப் பரப்பிக் கொண்டிருக்க, அவனுக்குச் ‘சுவர்க்கமே என்றாலும் இந்த நிமிடம் போல் வருமா?’ எனப் பாடத் தோன்றியது..
“ஹலோ, ஆதி, என்ன நின்னுட்டே தூங்கிட்டீங்களா?” என நேத்ராவின் குரல் எங்கோ கிணற்றில் இருந்து கேட்பதைப் போலிருக்க, மலங்க மலங்க முழித்தான் ஆதிநந்தன்.
கையைச் சொடுக்கிட்டு அழைக்க, தலையைக் குலுக்கிக் கொண்டு, “என்ன சொன்னீங்க?” என அவன் வினவ, “போய் நல்லாத் தூங்குங்க. காலையில பார்க்கலாம். குட் நைட்” எனக் கதவைச் சாத்திவிட்டுச் சென்றாள்.
‘போகாத... போகாத.. இங்கேயே இருந்துவிடேன்’ என அவன் மனம் கூப்பாடு போட, “உங்களுக்கு வேலை எதுவும் இல்லைன்னா நாளைக்கு வெளில போகலாமா?” எனக் கேட்டே விட்டான்.
சாத்திய கதவைத் திறந்து நேத்ரா வியப்புடன் எட்டிப் பார்க்க, “அதில்ல, ஊரைச் சுத்திப் பார்க்கப் போகலாமா?” என உள்ளே போன குரலில் வினவ, “காலையில போகலாம். ஒன்பது மணிக்கு ரெடியா இருப்பேன்” என இளநகையுடன் சொல்லிவிட்டு மீண்டும் கதவைச் சாத்திக் கொண்டு சென்றாள்.
வலது கையை முஷ்டியாக்கி, ‘எஸ்’ எனச் சாதித்துவிட்டதைப் போல் செய்ய, மீண்டும் கதவைத் திறந்து, “காலையில சாப்பிட வந்துடுங்க” எனச் சொன்னவள், அவன் செய்வதைப் பார்த்து வியப்புற்றாள்.
‘இவனுக்குத் தன்னுடன் நேரம் செலவழிக்கப் பிடித்திருக்கிறதா என்ன?’ முதல் முறையாகச் சந்தேகம் எழுந்தது அவளுக்கு.
“அது... கை கொஞ்சம் சுளுக்கின மாதிரி இருந்தது. அதான் நீட்டி எக்ஸர்சைஸ் பண்ணினேன்” என ‘ஈ...’ எனச் சிரித்து மழுப்பினான்.
“பண்ணுங்க... பண்ணுங்க...” என ஏற்ற இறக்கத்துடன் சொன்னவள், “எதற்கும் கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க. எக்ஸ்ட்ராவா சுளுக்கிக்கப் போகுது” என மொழிந்தவாறே மீண்டும் கதவைச் சாத்த முயல,
“நேத்ரா, இப்படியே கொஞ்சம் ‘வாக்’ போயிட்டு வரேன். வர்றப்போ கடைகள் எல்லாம் இருந்ததைப் பார்த்தேன். போடறதுக்கு டிரஸ் வாங்கணும்” என ஆதிநந்தன் சொல்ல, ‘சரி’ எனத் தலையாட்டிவிட்டு கீழே இறங்கினாள்.
அவள் உண்மையில் கீழிறங்கிப் போய்விட்டதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறான் ஆதிநந்தன் என்பதைத் திறந்து மூடும் கதவு அவளுக்குப் பறைசாற்றியது. அத்தோடு அவனது செய்கைகள் அனைத்தும் இன்று மதியத்திலிருந்து விசித்திரமானதாகவே இருக்கிறதே!
தன் நினைவுகளில் மூழ்கிக் கொண்டு சென்றவளுக்கு அப்பொழுது தான் வேறொன்றும் உறைத்தது. அவன் இங்கே வருகையில் உறங்கிக் கொண்டிருந்தானே. பிறகு எப்படி வருகையில் சற்றுத் தள்ளியிருந்த கடைகளைப் பார்த்திருக்க முடியும்?
‘தூங்குவதைப் போல் நடித்தானா? இவன் எதற்காக இங்கேயே தங்கி கொண்டான்?’ என மனம் படபடவென்று அடிக்க ஆரம்பித்தது நேத்ராவுக்கு. அவள் வாழ்நாளில் இப்படியொரு உணர்வில் அவள் சிக்குண்டதில்லை.
கனவுலகில் சஞ்சரிப்பதைப் போல் யோசித்தவாறே அவள் வீட்டினுள் நுழைய, “கண்மணி, உனக்கு ஆதியைப் பிடிச்சிருக்கா?” என்ற கேள்வியோடு காத்திருந்த பங்கஜம்மாள் அவளைத் திகைப்பில் ஆழ்த்தினார்.
தொடரும்...
Author: laavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.