அத்தியாயம் – 12
சுனிலின் கன்னத்தில் துருவன் விட்ட அறையில் அனைவரும் திகைத்துப் போய்ப் பார்க்க, கீழே விழுந்தவனின் அருகில் குனிந்து, “நீயா சொல்லப் போறியா, இல்லை...” என துருவன் முடிக்காமல் நிறுத்த,
“என்னை ஏன் அடிக்கறீங்க? எதுக்கு என்னை மிரட்டறீங்க? நான் யார் தெரியுமா?” என இடது கன்னத்தில் கையை வைத்தவாறே சுனில் சீற்றத்துடன் கத்த, “அதைத் தான் நானும் கேட்டுட்டு இருக்கேன். சார் யாருன்னு விளக்கமாச் சொல்லுங்க” என துருவன் நக்கலாகச் சொன்னான்.
சுனில் எதுவும் பேசாமல் எழுந்து நிற்க, “சார், அவர் கொஞ்சம் வசதியான வீட்டுப் பிள்ளை. அவங்க குடும்பத் தொழில்ல அண்ணனுக்கும் இவருக்கும் பிரச்சனை வந்திடுச்சு. அதனால் கொஞ்ச நாள் என்கிட்டே வேலை செய்யறேன்னு ஒரு விழாவுல வந்து கேட்டார்.
அவர் சொன்ன விஷயங்கள் சரியா இருந்துச்சு. அதுவுமில்லாம புத்திசாலியா வேற இருந்தார். உடனே வேலைக்கு எடுத்துக்கிட்டேன்” என நேத்ரா அவனுக்காகப் பரிந்து பேசினாள்.
துருவன் அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்த முறைப்பில் ஓர் எட்டுப் பின்னால் நகர்ந்து கொண்டாள் நேத்ரா.
“நேத்ராவோட நல்ல மனசை உனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிட்ட இல்ல? சொல்லு நீ தானே அருணோட குளிர்பானத்துல ட்ரக்ஸ் கலந்த?” என துருவன் நேத்ரா சொல்வதைக் கண்டுகொள்ளாமல் சுனிலை மேலும் நெருங்க, “என்ன சொல்லறீங்க?” என நேத்ரா திகைத்து விழித்தாள்.
துருவன் சொன்னது உண்மையே. அன்று எடுத்துச் சென்ற பழச்சாறில் போதை மருந்தைக் கலந்தே அருணிடம் எடுத்துச் சென்றான் சுனில். பழச்சாறை எடுத்துக் கொண்டு போகையில் போதை மாத்திரையைப் போடுவது கூடத் தெரியாதவாறு கண்ணிமைக்கும் நேரத்தில் அதை உள்ளே போட்டுவிட்டான் சுனில்.
உற்று கவனித்தால் கூடத் தெரியாது. அதுவும் எந்தெந்த இடத்தில் சிசிடிவியின் கோணம் மற்றவர்களின் பார்வையில் படாது என்று தெரிந்து கொண்டு துல்லியமாகச் செயல்பட்டிருக்கிறான் சுனில்.
அன்று அருணும் அதைக் குடித்துவிட்டு நேத்ராவிடம் பேசி மன்னிப்பையும் வேண்டிவிட்டு உற்சாகமாகவே தன் அறையை நோக்கி நகர்ந்தான். சற்றுதூரமே சென்றிருப்பான். அதற்குமேல் அவனுக்குக் கால்கள் பின்ன ஆரம்பித்தன. நடை தள்ளாடியது.
ஏற்கனவே மதுபானம் குடித்துச் சேராமல் போன காரணத்தால் அவன் அதைத் தொடுவதில்லை. அப்படியிருக்கையில் தனக்கு என்ன ஆகிவிட்டது என்று பயந்து போனான். உள்ளே சென்ற போதை மருந்து அவனுக்குள் ஏதேதோ மாற்றங்களைக் கொண்டு வந்தது.
அவன் துரதிர்ஷ்டம் அந்த நொடியில் அவன் நீச்சல் குளத்தின் அருகில் சென்று கொண்டிருந்தான். ஆகவே போதையில் தள்ளாடியவன் அப்படியே குளத்தில் விழுந்துவிட்டான். அவன் கை கால்கள் எதுவும் அவன் கட்டுப்பாட்டில் இல்லாததால் அவனால் எதிர்த்துப் போராட முடியாமல் போனது.
“நான் எதுக்குக் கலக்கப் போறேன்? நான் என் லாயர் கூடப் பேசணும்” என சுனில் சொல்லிக் கொண்டிருக்க, கையை விசிறி மீண்டும் ஓர் அறை விட்ட துருவன்,
“உங்க செல்ஃபோன் நம்பரைக் கம்பெனில கொடுத்து செக் பண்ணிட்டோம். உங்களுக்கும் ஆராதனாவுக்கும் என்ன சம்மந்தம்?” எனக் கேட்க அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியின் விளிம்பை எட்டினர்.
விசாரிக்கையில் எதிராளியின் உடல்மொழியைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். சுனிலின் முகத்தில் வந்து போன ஒரு வினாடி மாற்றத்தைத் துருவன் மட்டுமல்ல, ஆதிநந்தனும் படித்துவிட்டான்.
“நீயும் ஆராதனாவும் ஒரே காலேஜ்ல படிச்சீங்க தானே? அங்கேயா பழக்கமாச்சு?” என துருவன் சரமாரியாகக் கேள்விகளை அடுக்க, சுனில் வாயைத் திறக்கவில்லை.
“இங்க பாருங்க சுனில், ஆராதனாவோட டிரஸ்ல வேணும்னு ஜூஸ் கொட்டியிருக்கீங்க. டிரெஸ்ஸை சுத்தம் செய்யற போர்வையில ஆராதனாவோட சிரிச்சுப் பேசிட்டு போன வீடியோ எங்ககிட்ட இருக்கு.
அதுவுமில்லாம அந்த டிரஸ்ஸை டிரைகிளீன் பண்ணி வாங்கிட்டுப் போகும் போது அந்த டிரஸ்ஸூக்கு முத்தம் கொடுத்திருக்கீங்க...” என துருவன் சொல்ல, இப்போது அதிர்வின் நேரம் கூடுதலாக நீடித்தது சுனிலின் முகத்தில்.
அங்கு சிசிடிவி வேலை செய்யவில்லை என்று நினைத்திருந்தானே.
“சிசிடிவி வேலை செய்யலை. ஆனா அதைப் பார்த்ததுக்கு எங்க கிட்ட சாட்சி இருக்கு. நீங்களா சொல்லப் போறீங்களா, இல்லை, போலீஸ் ட்ரீட்மெண்ட் கொடுக்கறதா?” என துருவன் சொல்லிக் கொண்டிருக்க, வேகமாகத் துருவனை நெருங்கி, அவனைத் தள்ளிவிட்டுவிட்டு ஓட ஆரம்பித்தான் சுனில்.
கப்பலில் இத்தனை பேர் இருக்கையில் அவனால் என்ன செய்துவிட முடியும் எனச் சிறிது கவனக்குறைவாக இருந்துவிட்டான். ஆகவே திடீரென்று தள்ளிய வேகத்தில் துருவன் சற்றுதள்ளி நகர்ந்து போய்த் தள்ளாடி நின்று சமாளிக்க வேண்டியிருந்தது.
ஆனால் அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிநந்தன் ஓடிப் போய்ச் சுனிலின் சட்டையைப் பிடித்துத் தன் பலம் முழுவதையும் உபயோகித்து அவனை அடித்துச் சாய்த்துக் கீழே தள்ளியிருந்தான்.
அத்துடன் அவன் மேலே ஏறியமர்ந்து, “ஏன்டா? அதற்கு அருண் என்ன துரோகம் செஞ்சான்? அவனைப் போய்” என அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். மேலும் அவனைக் குத்துவதற்குக் கையை ஓங்க, அதற்குள் சுதாரித்துவிட்டிருந்த துருவன் ஓடி வந்து அவன் கையைப் பற்றித் தடுத்திருந்தான்.
“ஆதி, நாங்க போலீஸ் பார்த்துக்கிறோம். நீங்க இதுல தலையிட்டு உங்களுக்கு இதனால் பிரச்சனையை இழுத்து வச்சுக்காதீங்க” என துருவன் நிலைமையை அவனுக்கு விளக்க,
“அருண்.. அருண்.. அவன் ரொம்ப நல்லவன் துருவ்..” எனக் கண்கள் கலங்கியவாறே சுனிலின் மேலிருந்து எழுந்த ஆதிநந்தன், சுனிலின் இடுப்பில் ஓங்கி ஓர் உதைவிட்டான். தன் இதயத்தை யாரோ கத்தியால் மீண்டும் மீண்டும் கீறியதைப் போல் உணர்ந்தான் ஆதிநந்தன்.
இவன் செய்ததற்குத் தேவையில்லாமல் சம்மந்தமேயில்லாத பெண் மீது தன் இயலாமையை வேறு கொட்டினானே. சட்டென்று அவன் நேத்ராவைத் திரும்பிப் பார்க்க, அவள் அந்த சுனிலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள் துருவனுடன் வந்திருந்த காவலர்கள் சுனிலைச் சுற்றியிருக்க, “அநாவசியமாப் பொய் சொல்லி என்மேலே அபாண்டமா பழியைச் சுமத்தினா..” என சுனில் எகிறிக் கொண்டிருக்க, அவன் கன்னத்தில் துருவன் மீண்டும் ஓங்கி ஓர் அறை விட்டான்.
“என்னைத் தள்ளிவிட்டுட்டுப் போனதிலேயே நீ தான் குற்றவாளி என நிரூபணம் ஆகுது. ஆராதனாகிட்ட விசாரிச்சதுல உண்மையை ஒத்துகிட்டாங்க, சுனில் கிருஷ்ணா. இப்போ நீங்க உண்மையைச் சொல்லிட்டா எங்களுக்கு வேலை சீக்கிரம் முடியும்” என துருவன் சொன்னதும் தான் வசமாகச் சிக்கிக் கொண்டது புரிந்தது சுனிலுக்கு.
அதற்குமேல் அவனால் மறைக்க முடியவில்லை. உண்மையைச் சொல்லிவிட்டான். ஆராதனாவும் அவனும் கல்லூரியில் இருந்தே காதலிப்பதாகவும், அவர்களின் காதலுக்கு அவள் வீட்டில் தடையெழுந்ததாகவும் சொன்னான்.
அருணுக்கும் ஆராதனாவுக்கும் திருமணம் முடிவாக, என்ன செய்வதென்று யோசித்து, திருமணத்துக்கு முந்தைய தினம் அருணைப் போதை மருந்து அருந்தச் செய்து, அவனுக்குப் போதை மருந்து பழக்கம் இருக்கிறது என்று ஊராரின் முன்னால் அவமானப்படுத்திவிட்டால் ஆராதனாவின் தந்தை, திருமணத்தை நிறுத்திவிடுவார் என்று இருவரும் திட்டமிட்டனர்.
அதன்படியே செயல்படுத்தவும் செய்தனர். ஆனால் அருண் இறந்து போனது யாருமே எதிர்பாராதது. அவர்கள் மேல் சந்தேகம் எழாமல் இருப்பதற்குப் பழியை ஆதிநந்தன் மேலே திருப்பிவிட முயன்றான் சுனில். அருணின் முகத்தில் குத்தியது ஆதிநந்தன் என ஆராதனாவைப் பேச்சு வாக்கில் துருவனிடம் சொல்ல வைத்தான்.
அருணும், ஆதிநந்தனும் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததை ஏதேச்சையாகக் கேட்க நேர்ந்த சுனில் அதன்பிறகு என்ன ஏதென்று விசாரித்து அதை வெற்றிகரமாகத் துருவனின் காதுகளுக்குப் போய்ச் சேருமாறு பார்த்துக் கொண்டான்.
எல்லாம் சரியான திசையில் போய்க் கொண்டிருந்தது என நினைத்ததற்கு மாறாக அருண் இறந்த நாளன்று ஆதிநந்தன் நேத்ராவின் அறைக்குச் சென்றது எதிர்பாராதது.
நேத்ரா மெதுவாகச் சுனிலிடம் சென்று, “ஏன் சுனில் இப்படிப் பண்ணினீங்க? உங்களை நம்பி நான் வேலையைத் தந்தேன். ஆனால் நீங்க இப்படி ஒரு திட்டத்தோட இருந்திருக்கீங்க? ச்சே...” எனப் புலம்பினாள். மேலும் பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது.
தொண்டையைச் செருமிக் கொண்டு, “அருண்கிட்ட போய் உங்க பிரச்சனையைச் சொல்லியிருக்கலாமே. கண்டிப்பா உங்களைச் சேர்த்து வச்சிருப்பார். இப்பப் பாருங்க, உங்க மூணு பேரு வாழ்க்கையும் வாழக் கூட இல்லாம நாசமாப் போயிடுச்சு. நீங்க ரெண்டு பேரும் எங்காவது ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணி இருக்கலாமே?” எனக் கேவினாள்.
சுனிலுக்கு அதில் சற்றும் விருப்பமில்லையே. “உங்களுக்கு ஆராதனாவோட சொத்தும் வேணும் இல்ல?” என நேத்ரா சரியாகப் பாயிண்ட்டைப் பிடித்தாள்.
சுனிலின் வீட்டிலும் சரி, குடும்பத்திலும் சரி அவனை யாரும் சரிவர மதிப்பதில்லை. அவன் செய்வது எல்லாம் நேர்மையற்ற செயல் என்று அவனைக் கடிந்து கொண்டனர். அதனால் அவர்களிடம் சண்டையிட்டுவிட்டு வெளியேறிவிட்டான்.
அவனுக்கு ஆராதனா இருக்கக் கவலையேன்? அவளைத் திருமணம் செய்து கொண்டு அவள் சொத்துக்களை வைத்துத் தன் குடும்பத்தினரை ஆட்டி வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். இப்போது எதுவும் நடக்காமல் போய்விட்டது.
அதற்குமேல் நேத்ராவால் அங்கே நிற்க முடியவில்லை. தன்னறைக்கு ஓட எத்தனிக்க, “நேத்ரா, உங்களை விசாரிக்க வேண்டியிருக்கும். அதனால் இந்தக் கேஸ் முடியற வரைக்கும் எங்கேயும் ஊரைவிட்டுப் போகாதீங்க” என்ற துருவனிடம் தலையசைத்துவிட்டு நகர்ந்தாள்.
செல்லும் அவளையே இமைக்காமல் நோக்கியிருந்தான் ஆதிநந்தன்.
அடுத்த அரைமணி நேரத்தில் துருவன் அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு, கப்பலில் இருந்த மீதி நபர்களையும் கிளம்பச் சொன்னான்.
வீட்டுக்குப் போக ஆதிநந்தனின் மூளை துடித்தாலும் அங்கிருந்து எங்கும் நகராமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். என்ன தான், ‘இனிமேல் நம்ம சந்திச்சுக்காமலேயே இருக்கலாம் எனக் கடவுளை வேண்டிக்கிறேன்’ என நேத்ரா அவனிடம் சொல்லியிருந்தாலும் அதை அவனால் கடைபிடிக்க முடியாது.
அதுவும் அருணின் மரணத்துக்கு யார் காரணம் என்று தெரிந்த பிறகு நேத்ராவிடம் மன்னிப்பை வேண்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நேத்ராவை எதிர்பார்த்து அங்கேயே சுற்றி வந்தான்.
அதுவுமில்லாமல் அருணின் மரணத்துக்குத் தானும் மறைமுகமாக ஒரு காரணமாக இருந்திருக்கிறோம் என்று எண்ணி மருகினான். பின்னே அவன் தானே ஆராதனாவைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவ்வளவு வற்புறுத்தினான்.
“என்ன ஆதி, கிளம்பலையா?” என துருவன் வந்து கேட்ட பின்னரே, நெடுநேரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தது உறைத்தது.
“இதோ...” என அறைக்குச் சென்றவன் அடுத்தப் பத்து நிமிடங்களில் கிளம்பியும் விட்டிருந்தான். அறையை விட்டு வெளியில் வந்தவனின் கண்களில் நேத்ரா படவேயில்லை. இவ்வளவு ஏன்? நேத்ரா இருந்த சுவடே தெரியவில்லை. அப்படியும் இப்படியும் நேரத்தைக் கடத்த முயன்றான்.
அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்ட துருவன் அங்கிருந்து கிளம்பினான். அவனே கிளம்புகையில் இனி தான் மட்டும் அங்கேயே இருந்து என்ன செய்வது?
மெதுவாகக் கப்பலை விட்டு வெளியில் வந்த ஆதிநந்தன், தன் ஆணவத்தை விட்டுவிட்டு இவனிடம் கேட்கலாம் என்ற முடிவுடன் மெள்ளத் திரும்பி, “நேத்ரா எங்கே?” எனக் கேட்டான்.
அவனைக் கூர்மையுடன் பார்த்த துருவன், “நேத்ரா அப்போவே கிளம்பிட்டாங்களே” என்றான்.
‘கிளம்பிட்டாளா?’ என அதிர்ந்த ஆதிநந்தனின் இதயக் கூடு முற்றிலும் காலியானதைப் போலிருக்க, இயங்காமல் அப்படியே நின்றிருந்தான்.
“ஆதி...” எனத் துருவன் அவனை இரண்டு முறை தோளைத் தட்டி உலுக்கிய பின்னரே இயல்புக்குத் திரும்பிய ஆதிநந்தன், “வந்து, அவங்க நம்பர்...” என ஒருவித எதிர்பார்ப்புடன் அவன் முகத்தை ஏறிட்டான்.
“மிஸ்டர் ஆதி, உங்களுக்கு அவங்க நம்பர் தரலைன்னா என்னாலேயும் தர முடியாது. தேவையில்லாமல் சிக்கல்ல நானே நேத்ராவை மாட்டிவிட முடியாது.” எதிர்மறையான துருவனின் பதிலில் அவன் தன்மானம் காயப்பட்டது.
‘போடா... நீயில்லை என்றால் என்னால் ஃபோன் நம்பரைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன?’ என நினைத்தவன், “வரேன்” என விடைப்பெற்றுக் கொண்டு விடுவிடுவென்று நகர்ந்துவிட்டான்.
சற்றுதூரம் சென்றவன் சட்டென்று திரும்பி நின்று, “மித்ரா எப்படி இருக்கா?” எனக் கேட்டான்.
வந்த புன்னகையை அடக்கிக் கொண்ட துருவன், “அநேகமா நம்ம குடும்பம் ஒண்ணு சேர்ந்துடும்னு நினைக்கிறேன்” என துருவன் கண்ணடிக்க, அவனை முறைத்தவன், “எப்ப தான் உருப்படியா பதில் சொல்லியிருக்க” எனச் சத்தமாக முணுமுணுத்தவாறே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
“வழக்கமான ஃபார்முலா படி நீ சித்தப்பா, இல்லை, பெரியப்பா ஆகப் போறேன்னா அடுத்து நம்ம ஒண்ணு சேர்றது தானே பாக்கி?” என்ற துருவனின் விளக்கத்தில் மீண்டும் சட்டென்று நின்ற ஆதிநந்தன் அவனை நோக்கித் திரும்பி வந்தான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஃபோன் பண்ணியிருந்தா மித்ரா. இந்த விசயத்தை முதல்ல உன்கிட்டே சொல்லறேன்” என்றதும் ஆதிநந்தன் நெகிழ்ந்து போனான். அவனையுமறியாமல் கண்கள் சற்று கலங்கி போயின.
“க... கங்க்ராட்ஸ்... எங்க வீட்டுப் பொண்ணை நல்லா பார்த்துக்கோ...” என அதற்குமேல் அவனால் அங்கே நிற்க முடியவில்லை. இருக்கும் நல்ல மனநிலையை மேலும் பேசி வீணாகக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற நினைப்பில் அங்கிருந்து நகர்ந்தான்.
ஆதிநந்தனின் நெகிழ்ந்து போன குரலில், “இங்க பார்றா” என துருவன் சொல்வது கேட்டது.
நெஞ்சக் கூடு காலியானதைப் போல் உணர்ந்தாலும், இந்த உலகில் அவனுக்கென்று யாரும் இல்லை என்று துடித்தாலும் துருவனின் இரத்தினச் சுருக்கமான வாக்கியம் அவனுக்குப் பற்றுக்கோலாக அமைந்தது உண்மை. சிறு புன்முறுவல் மலர அங்கிருந்து கிளம்பினான் ஆதிநந்தன்.
தொடரும்...
Author: laavans
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.