• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை 7

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏகாந்த வீணை


அத்தியாயம் 7

தமிழ்நாட்டின் தஞ்சாவூரைக் கவனியுங்கள். இங்கே, கைவினைஞர்கள் மரத்தைப் பாட வைக்கிறார்கள். பழங்கால இசைக்கருவிகளில் ஒன்றான வீணை, இங்கு கைவினைப்பொருளாகக் கிடைக்கிறது, இது கடினமான வேலை எடுக்கும்.

தஞ்சாவூரில் இருந்து உருவாக்கப்பட்ட வீணை 'தஞ்சாவூர் வீணை' அல்லது 'தஞ்சை வீணை' என்று அழைக்கப்படுகிறது.தஞ்சாவூரில் உள்ள கைவினைஞர்களுக்கு வீணை தயாரிப்பதே ஒரு கலை.

நல்ல டோனல் தரம் மற்றும் சுத்தமான , மிருதுவான குறிப்புகளுடன் வீணையை வடிவமைக்க அபாரமான கைவினைத்திறன் தேவை. திறமையை விரைவாகக் கற்கவோ அல்லது முழுமையாக்கவோ, தலைசிறந்த கைவினைஞர்கள் வீணை தயாரிப்பில்
ஈடுபட்டுள்ளனர்.

மனஸ்வியின் அலுவலகத்தில் ஒரு பரபரப்பான காலைநேரம். அனைவரும் தங்களுடைய க்யூபிகிளுக்குள் ( cubicle)
உட்கார்ந்து கொண்டு எதிரில் இருந்த கணினித் திரையில் மூழ்கியிருந்த சமயத்தில், அந்த ஹாலின் நட்ட நடுவில் வந்து நின்ற அவர்களுடைய டீம் லீடர், அவர்களுடைய கவனத்தைக் கலைத்தான். அனைவரும் தாங்கள் மாட்டியிருந்த ஹெட்ஃபோனைக் கழற்றி வைத்துவிட்டு அவன் பக்கம் திரும்பினார்கள்.

" லிஸன் ஃப்ரெண்ட்ஸ், இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லோரும் கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு வந்துருங்க. நம்ம ஹெட் ஆஃபீஸில் இருந்து டாப் லெவல் ஆஃபிஸர் வந்து உங்களை எல்லாரையும் அட்ரஸ் பண்ணப் போறாங்க. சீக்கிரமா அங்கே வந்து சேருங்க. அவங்க உங்களோட இன்டராக்ட் செஞ்சதுக்கு அப்புறமா ஹை டீ இருக்கு. டோன்ட் மிஸ் இட் ஃப்ரெண்ட்ஸ். திஸ் இஸ் கோயிங் டு பீ அ வெரி இம்பார்டன்ட் லெக்சர் " என்று அறிவித்து விட்டுப் போனார்.

" யாராக இருக்கும்? நமக்குப் புதுசாக் கெடைச்சுருக்கற புராஜெக்ட் ரொம்ப பிரஸ்டீஜியஸ்னு சொன்னாங்க. அதை வெற்றிகரமா முடிச்சா நம்ம கம்பெனி பேர் இன்னமும் அதிகமா பாப்புலராகும் சொன்னாங்க. அதைப் பத்தித் தான் இருக்கும் " என்று அங்கேயிருந்த அனைவரும் தங்களுக்குள் பேசியபடி தயாரானார்கள்.

சிறிது நேரத்தில் கான்ஃபரன்ஸ் ரூமில்
நீள்வட்டவடிவ டேபிளைச் சுற்றி அவர்களுடைய டீம் மெம்பர்கள் உட்கார்ந்திருக்க, அவர்களுடைய டீம் லீடர் மற்றும் கம்பெனியின் சென்னைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சீஃப் ஆஃபிஸருடன் சேர்ந்து உள்ளே நுழைந்த அல்ட்ரா மாடர்ன் பெண்ணைப் பார்த்ததும் அனைவரின் விழிகளும் பிதுங்கின என்றால் மனஸ்விக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஏனென்றால் அவள் எதிரில் நின்று கொண்டு அவர்களைப் புன்னகையுடன் எதிர்கொண்டது வேறு யாருமல்ல, சைந்தவியே தான்.

' முதல் தடவை பார்த்தபோது எப்படி இருந்தாள்? இப்போது அதற்கு எதிர்மறையான தோற்றம். அன்று மிகவும் சாதாரணமான ஸல்வார் கமீஸ்; அதுவும் தோய்த்துத் தோய்த்து நிறம் மங்கிப் போயிருந்தது; மருண்ட விழிகள்; ஏழ்மையான தோற்றம். இன்று என்னவோ ஆண்கள் அணியும் காற்சராய், மேலே கோட், விரித்த கூந்தல், காதுகளில் கண்ணுக்குத் தெரியாத சிறிய கோடுகள். நடுவில் இருக்கும் ஒற்றைக்கல், வைரமாகத் தான் இருக்க வேண்டும், பளீரென்று வர்ணங்களை அள்ளி வீசியது. கழுத்தில் மிகவும் மெல்லிய நூல் போன்ற ஒரு பிளாட்டின செயின். தன்னுடைய கண்களையே மனஸ்வியால் நம்ப முடியவில்லை. கண்களை மீண்டும் மீண்டும் கசக்கிப் பார்த்தாள். எதிரில் நின்றது
சைந்தவியே தான்.

கம்பீரமாக நின்று கொண்டு தன் விழிகளைச் சுழற்றி, அங்கே கூடியிருந்தவர்களை ஒருமுறை பார்த்தாள் அந்தப் பெண் அதிகாரி. மனஸ்வியின் மீது அவளுடைய பார்வை படிந்தபோது ஒரு நொடி தாமதித்தது போல மனஸ்விக்குத் தோன்றியது. அந்தப் பார்வையின் தகிப்பைத் தாங்கமுடியாமல் அவளுடைய தலை தானாகவே கவிழ்ந்து கொண்டது. நிமிர்ந்து பார்த்தபோது சைந்தவி அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பளிச் முகத்தில் ஒரு கேலிப் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

சென்னைப் பிரிவின் ஹெட் அவளை அறிமுகம் செய்து வைத்தார்.

" மீட் மிஸ்.சைந்தவி ஃப்ரம் அவர் புனே ஆஃபிஸ். ஷி இஸ் வெரி டேலன்டட் அன்ட் வெல் குவாலிஃபைட். அவருடைய அசாதாரணத் திறமைகள் தான் அவரை இந்தச் சின்ன வயசுல இவ்வளவு டாப் பொஸிஷனில் அமர வைத்திருக்கிறது. இவருடைய உழைப்பும், இவருடைய முடிவெடுக்கும் திறனும் ரொம்பவே ஸ்பெஷல். இவங்க நம்ப கம்பெனிக்கு மிகப் பெரிய அஸெட். ஷி வான்ட்ஸ் டு அட்ரஸ் யூ ஆல் அபௌட் தி நியூ புராஜெக்ட். உங்களுக்கு அதைப் பற்றி சில அறிவுரைகள் தரப் போறாங்க. ஓவர் டு மிஸ்.சைந்தவி " என்று அவள் பக்கம் திரும்பினார்.

அவர்களுடைய புதிய புராஜெக்டைப் பற்றியும், அதனை வெற்றிகரமாக முடிப்பது அவர்களுடைய நிறுவனத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும், அதில் முழுமையாக ஈடுபட வேண்டிய அவசியத்தையும், கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தையும் அவர்களுக்கு எடுத்துச் சொன்னாள்.

" உங்களுக்குத் தேவையான ஸப்போர்ட் எங்களிடமிருந்து கிடைக்கும். என்ன ஹெல்ப் வேண்டுமானாலும் எங்களைத் தயங்காமல் அப்ரோச் பண்ணுங்க. இதை வெற்றிகரமாக உங்க டீம் முடிச்சதும் உங்க எல்லோருக்கும் தகுந்த ரிவார்ட் நிச்சயமாக உண்டு. குட் லக் ஃப்ரெண்ட்ஸ்" என்று சொல்லி முடித்தாள்.

தன்னுடைய ஸ்பீச்சை முடித்த பின்னரும் கையில் தேநீர்க் கோப்பையுடன் அந்த இடத்தைச் சுற்றி வந்து எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசினாள். சிரித்த முகத்துடன் ஒரு தோழி போல இயல்பாக நடந்து கொண்ட விதத்தில் எல்லோர் மனங்களிலும் இடம் பிடித்து விட்டாள். அவளிடம் ஒரு கம்பீரமும், ஆளுமையும் கண்டிப்பாக இருந்தன.

எல்லோரும் அங்கிருந்து திரும்பி வந்த பின்னரும் சைந்தவியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தபோது, மனஸ்வி மட்டும் அமைதியாக இருந்தாள். மற்றவர்களைப் போல அவளுடைய புகழைப் பாட , மனஸ்வியின் மனம் இடம் தரவில்லை.

' அது எப்படி? இவ்வளவு நல்லாப் படிச்சு நல்ல வேலையில் இருக்கறவங்க எதுக்காக அன்னைக்கு ஏழை மாதிரி, பரிதாபமான வேஷம் போட்டு நம்ம வீட்டுக்கு வந்தாங்க' என்று யோசித்து யோசித்து அவளுடைய மண்டை காய்ந்தது.

" என்ன மனஸ்வி? நாங்க எல்லாரும் சைந்தவி மேடத்தோட புகழ் பாடிட்டு இருக்கோம். பாடாமல் இருக்கமுடியுமா? ஷி இஸ் லைக் தட். என்ன ஒரு பர்ஸனாலிட்டி!
ஆமாம், நீ மட்டும் ஏன் வாயே திறக்கலை? முகமே வாடியிருக்கு? ஏதோ மனசுக்குள்ள தீவிர சிந்தனை ஓடுது போல இருக்கே? " என்றாள் ஒருத்தி.

" அதுவா? தன்னை விட அழகா, தன்னை விட ஸ்மார்ட்டா ஒருத்தியைப் பார்த்த இஃபெக்ட் தான். வேற என்ன? பரவாயில்லை மனஸ்வி, நீயும் சில வருஷங்களில் அவங்க பொஸிஷனுக்கு வந்துருவே. அவங்களை மனசுல ரோல் மாடலா வச்சுக்கிட்டு முன்னேறு " என்று கண்ணடித்தாள் இன்னொரு வாயாடி.

" நோ வே" என்று ஒரு கத்து கத்திவிட்டுக் கோபத்துடன் அங்கிருந்து நகர்ந்து சென்ற மனஸ்வியை எல்லோருமே வியப்புடன் திரும்பிப் பார்த்தார்கள். மனஸ்வியின் மனதில் ஓடிக்கொண்டிருந்த தாறுமாறான சிந்தனைகளை அவர்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? பட்டால் தானே தெரியும் வலியும், வேதனையும்?

அந்த வார இறுதியில் வேளச்சேரியில் இருந்த ஒரு வணிக வளாகத்தில் இருந்த காஃபி ஷாப்பில் நான்கு பேர் உட்கார்ந்து பெரிய காஃபிக் கோப்பையைக் கையில் வைத்தபடி அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தார்கள். வெட்டி அரட்டை என்று சொல்ல முடியாது. முக்கியமான விஷயங்களை அலசி சில முடிவுகளை எடுக்கத் தான் அந்த இளைஞர், இளைஞிகளின் கெட் டு கெதர்.

பெரிய கெட் டு கெதர் என்று சொல்லும்படியாக நிறையப் பேர் ஒன்றும் இல்லை. நான்கே நான்கு பேர் தான். இரண்டு பேர் ஏற்கனவே நமக்குத் தெரிந்தவர்கள் நமஸ்வியும், மனஸ்வியும் தான். மற்ற இரண்டு பேரை அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய தருணமிது.

நல்ல உயரமாக ஒல்லியாகக் கட்டுக்கோப்பான உடலோடு இருப்பவன் தான் தர்ஷன். அவனுக்கு அருகில் அவனை விட சற்றே குள்ளமாகக் கொஞ்சம் ஹெல்த்தியாக இருக்கும் கொழுக் மொழுக் அமுல் பேபி ஆயுஷ். இரண்டு பேரும் நண்பர்கள். மனஸ்வி, நமஸ்விக்கும் கூட நண்பர்கள்.

ஆயுஷ், மனஸ்வியின் அதே ஸாஃப்ட்வேர் கம்பெனியில் அவளுக்கு ஸீனியர். ஒரே டீம் தான். ஆயுஷின் அண்ணா தான் நியூரோ சர்ஜன். ஈஸ்வரனை மருத்துவமனையில் வந்து பார்த்துத் தன்னுடைய கருத்தைத் தெரிவித்த எக்ஸ்பர்ட்.

தர்ஷன் ஒரு ஜர்னலிஸ்ட். இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம் அதாவது புலனாய்வு இதழியல் படித்தவன் என்று தூய தமிழில் கூறலாம். அரசியல் ஊழல்கள், பெரிய குற்றங்கள் இவற்றின் பின்னணியை ஆராய்ந்து அவற்றைப் பற்றிய கட்டுரைகளைத் தங்களுடைய இதழ்களில் அதாவது மேகஸின்களில் வெளியிடுவது. நிறைய துணிச்சல், சாகசம் புரியும் ஆர்வம், தெளிவான திட்டமிடுதல் எல்லாமே இவற்றிற்கு அவசியம். பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்து விட்டு மனதிற்குப் பிடித்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறான்.

இவர்களில் தர்ஷன், மனஸ்வியின் பாய் ஃப்ரண்ட். ஆயுஷ், நமஸ்வியின் பாய் ஃப்ரண்ட். அந்த அளவிலேயே நிற்கிறது அவர்களுடைய உறவு. விரைவில் அடுத்த லெவலுக்கு முன்னேறலாம். இல்லை நடுவில் முறிந்தும் போகலாம். இன்றைய இளைய தலைமுறையின் விருப்பு, வெறுப்புகளைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டமான செயல் தான்.

நால்வரும் சந்தித்துக் கொண்டது யதேச்சையாக நடந்தது. ஆனால் நட்புத் தீ அன்றே குப்பென்று பற்றிக் கொண்டது. அவர்களை ஆக்கிரமித்தும் கொண்டது.
நமஸ்வி, மனஸ்வி இரண்டு பேரும் திருவான்மியூர் பீச்சில் இருந்து பெசன்ட் நகர் பீச்சுக்கு நடந்து வந்தபோது தான் இவர்கள் இரண்டு பேரையும் பார்த்தார்கள்.

" நீங்க மனஸ்வி தானே? ஹலோ, நைஸ் டு ஸீ யூ ஹியர்! இது என்னோட ஃப்ரண்ட் தர்ஷன்" என்று ஆரம்பித்தான் ஆயுஷ்.

" ஓ, தெரியுமே உங்களை? ஆயுஷ் தானே நீங்க? ஆஃபிஸில் பாத்திருக்கேன். அதிகம் பேசினதில்லை. பை த வே இது என்னோட ட்வின் ஸிஸ்டர் நமஸ்வி. ஸ்கூலில் வொர்க் பண்ணறா. ஐ. ஏ. எஸ். எக்ஸாமுக்குத் தயார் பண்ணிட்டிருக்கா" என்று அறிமுகம் செய்து வைத்தாள் மனஸ்வி.

" வாவ், இன்ட்ரஸ்டிங். ஐ. ஏ. எஸ். கோச்சிங் எங்கேயாவது போறீங்களா? " என்று கடலை போட ஆரம்பித்தான் ஆயுஷ். அவனுக்கு என்னவோ நமஸ்வியைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது. திரும்பிப் பார்த்தால் மனஸ்வி, தர்ஷனுடன் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அப்புறம் என்ன? அவர்களுடைய நட்பு வளர்பிறை நிலவாக வளர, சந்திப்புகளின் எண்ணிக்கை வானத்து நட்சத்திரங்களாக உயர்ந்தன. சேர்ந்து மூவி பார்த்தார்கள், மியூசிக் புரோகிராம் போனார்கள். விடுமுறை நாட்களில் அக்கம்பக்கத்து இடங்களுக்கு பிக்னிக் போலப் போனார்கள்.

நமஸ்வி, மனஸ்விக்கு வீட்டில் ஓரளவு சுதந்திரம் இருந்ததால் பிரச்சினை எதுவும் வரவில்லை. தங்களுடைய குழந்தைகள் தவறு செய்ய மாட்டார்கள் என்று பெற்றோரும் நம்பினார்கள். அதற்கு மேலே பெரியப்பாவிடம் அவர்களுக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் அவர்களைத் தவறு செய்ய அனுமதிக்காது. ஆயுஷ், தர்ஷன் இரண்டு பேரும் திருவான்மியூரில் அவர்கள் வீட்டுக்கும் வந்திருக்கிறார்கள். திருக்கடையூரில் நடக்க இருந்த ஈஸ்வரனின் பீமரத சாந்தி நிகழ்ச்சிக்கும் வருவதாக இருந்தார்கள்.

" சரி, இன்னைக்கு மீட்டிங்குக்கு என்ன அஜென்டா? ரெண்டு பேரும் ஏன் இப்படி அழுது வடியறீங்க? உங்க பெரியப்பா ஒண்ணும் குட்டிப் பாப்பா இல்லை தொலைந்து போறதுக்கு. தானாகவே வீட்டை விட்டுப் போன மாதிரி தானாவே திரும்பி வருவாரு. அதையே நினைச்சுப் புலம்பிட்டே இருக்காதீங்க" என்று ஆரம்பித்தான் ஆயுஷ்.

" அது ஒண்ணும் பிரச்சினை இல்லை ஆயுஷ். இப்போ புதுப் பிரச்சினை சைந்தவி மேடம் தான் " என்ற மனஸ்வியை வியப்புடன் பார்த்தார்கள் இரண்டு பேரும். தர்ஷன் புரியவில்லை என்று உதட்டில் பிதுக்கினான்.

" நான் புரியற மாதிரி சொல்லறேன். பெரியப்பாவோட பிறந்த நாள் கொண்டாட்டம் ஏன் கேன்ஸலாச்சுன்னு உண்மையான காரணம் உங்களுக்குத் தெரியாது" என்றாள் நமஸ்வி.

" பெரியப்பாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப் போச்சு. அது தானே? " என்றான் தர்ஷன். இல்லையென்று தலையசைத்த நமஸ்வி அவர்களுக்கு நடந்தவற்றை விளக்க ஆரம்பித்தாள். ஆண்கள் இரண்டு பேரும் நடந்தவற்றைக் கேட்டு அதிர்ந்து போனார்கள்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: ஏகாந்த வீணை 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
சைந்தவி ஏன் அன்னிக்கு சாதாரணமா வந்து அவங்க வீட்ல கலாட்டா பண்ணா?
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
112
சைந்தவி entry கொஞ்சம் நெருடல் தான் 🤔🤔🤔🤔🤔🤔🤔ரெண்டு இடத்தில் ரெண்டு அவதாரம்
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
ஆஹா, களத்தில் இன்னும் இருவர் குதித்திருக்கிறார்களா!

சைந்தவி விஷயத்தில் ஏதோ மர்ம முடிச்சு இருக்கிறது என்று ஆரம்பத்திலேயே நினைத்தேன். சரியென்றாகிவிட்டது. தொடர்ந்த அத்தியாயங்களில் என்னவென்று விளங்கும் என்று நம்புகிறேன்.
 
Top Bottom