• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை 2

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏகாந்த வீணை

அத்தியாயம் 2

சமஸ்கிருத மொழி 'வீணை' என்ற சொல்லைப் பெற்றது. பண்டைய மற்றும் இடைக்கால ஆங்கில இலக்கியங்களில் இது ஒரு பிரபலமான சொல்லாக மாறியது. ரிக் வேதம், சாமவேதம், சதபத பிராமணம் மற்றும் தைத்திரிய சம்ஹிதை உள்ளிட்ட பல்வேறு வேத இலக்கியங்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல இசைப் பேராசிரியரான சன்னேரா கஸ்லிவாலின் கூற்றுப்படி, வானாவின் இசைக்கருவி தற்காலத்தில் வீணை என்ற சொல்லாக உருவானது. உபநிடதங்கள், ரிக்வேதம் மற்றும் அதர்வ வேதம் அனைத்தும் இந்த இசைக்கருவியின் பயன்பாட்டைக் குறிப்பிட்டுள்ளன. பரத முனியால் எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திரமும் வீணையை ஓர் இசைக்கருவியாகக் குறிப்பிடுகிறது.





வாசற்கதவை அவர்கள் திறப்பதற்கு முன்னால், அந்த வீட்டில் அப்படி என்ன தான் கொண்டாட்டம் நடக்கிறது, உறவினர்கள் எல்லாரும் ஏன் கூடியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

வீட்டின் பெரியவர் ஈஸ்வர மூர்த்தியின் எழுபதாவது பிறந்தநாள், இரண்டு நாட்கள் கழித்து வருகிறது. அதாவது நாளை மறுநாள். அதைக் கொண்டாடுவதற்காக எல்லோரும் வேன் வைத்துக் கொண்டு திருக்கடையூருக்குக் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஈஸ்வரமூர்த்தி திருமணம் செய்து கொள்ளாமல், தம்பியின் குடும்பத்திற்குத் தூணாக நின்று கவனித்துக் கொண்டவர். ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று யாருக்கும் தெரியாது. ஈஸ்வரமூர்த்தியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். ஈஸ்வரமூர்த்தியின் தாய் கங்கா இறந்து போனதும், அந்தக் கால வழக்கப்படி அவளுடைய தங்கை நிர்மலாவையே திருமணம் செய்து கொண்டார். அவள் மூலமாக இரண்டு குழந்தைகள்.

நிர்மலா, தன்னுடைய அக்கா மகனான ஈஸ்வரைத் தன் மகனான ஏற்றுக்கொண்டு பாசத்தைக் காட்டித் தான் அரவணைத்தாள். அதுவும் அம்மாவை இழந்தபோது ஈஸ்வர் இரண்டு வயதுக் குழந்தை தான். நிர்மலாவை மனதாரத் தன் தாயாக ஏற்றுக் கொண்டு விட்டான். பெற்ற தாயான கங்காவை, புகைப்படத்தின் மூலமாகத் தான் அவனுக்குத் தெரியும். அம்மா என்றால் அது நிர்மலா தான் அவனுக்கு. அதே போலத் தன்னுடைய தம்பி, தங்கை மேல் அவ்வளவு பாசம். தம்பி சத்யமூர்த்தி, தங்கை அகிலா.

ஈஸ்வரமூர்த்தி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று அப்பா இறந்துபோனார். வங்கியில் வேலை பார்த்து வந்த அவருக்கு, திடீரென வந்த மேஸிவ் ஹார்ட் அட்டாக்கால் உயிர் பிரிந்தது. உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த நாற்காலியிலேயே உயிரை விட்டார். காலையில் சிரித்த முகத்துடன் வேலைக்குச் சென்ற அப்பா, பிணமாக மாலை வீடு வந்து சேர்ந்தார்.

அவருடைய வங்கியில் இருந்த முறைப்படி, மகனுக்கு, வேலை தர முன் வந்தார்கள். "கம்பேஷனேட் கிரௌன்ட்" என்று சொல்லப்படும் அனுதாப ரீதியான அந்த வாய்ப்பு, தலைவனை இழந்து தவித்த அந்தக் குடும்பத்துக்கு மிகப்பெரிய ஆறுதலாகக் கிடைத்தது. படிப்பை அப்படியே விட்டு விட்டு வேலையில் சேர்ந்தான் ஈஸ்வரன்.

" அப்பா இல்லாத இந்த ரெண்டு குழந்தைகளுக்கும் நீ தான்டா இனிமே அப்பா ஸ்தானத்தில் இருந்து வாழ்க்கையில் முன்னேற வைக்கணும் " என்று அடிக்கடி புலம்பி, அவனுடைய கடமைகளை அவனுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தாள் நிர்மலா.

ஈஸ்வரன் ஏற்கனவே நல்ல பொறுப்புள்ளவனாக இருந்தாலும், நிர்மலா என்னவோ பொறுப்பை மறக்க அவனை அனுமதிக்கவில்லை. கணவனை இழந்ததும் தன்னுடைய குழந்தைகளைப் பற்றிய கவலையும், மனதிற்குள் திடீரென்று முளைத்த பாதுகாப்பின்மை (insecurity) உணர்வுமாகச் சேர்ந்து அவளை வாட்டி வதைத்தன.

' என்ன இருந்தாலும் ஈஸ்வரன் அவள் பெற்றெடுத்த மகன் இல்லையே? தம்பி, தங்கை மீது அவன் இன்று வரை செலுத்தி வருகிற பாசம் குறைந்து போனால், அவர்களுடைய வாழ்வு என்னாகும்? 'என்ற தவிப்பு அவளுடைய மனதை அரிக்க ஆரம்பித்தது. அது வரை பத்தரை மாற்றுத் தங்கமாக இருந்த அவளுடைய குணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சு கலக்க ஆரம்பித்தது.

ஈஸ்வரனின் அப்பா இறந்தபோது சத்யன், அகிலா இரண்டு பேரும் பள்ளியில் தான் இருந்தார்கள். குடும்பச்சுமை சௌகரியமாக ஈஸ்வரனின் தலையில் சுமத்தப்பட்டது. குருவியின் தலையில் பனங்காயாக, இல்லை இல்லை பரங்கிக்காயாக அது வைக்கப்பட்டது. ஈஸ்வரனும் அதனை ஏற்றுக் கொண்டான். எப்போதும் சலித்துக் கொண்டதுமில்லை. முணுமுணுத்ததும் இல்லை. நிர்மலா நிம்மதியாக இருந்தாள்.

சில ஆண்டுகள் அப்படியே கழிந்தன. நிர்மலமாக இருந்த நிர்மலாவின் மனம் மீண்டும் கலங்க ஆரம்பித்தது. குழம்பிய குட்டையாக மாறிப் போனது. இப்போது சத்யன் கல்லூரியிலும், அகிலா பள்ளி இறுதி வகுப்புக்கும் வந்திருந்தார்கள்.

கல்யாணப் பருவத்தை எட்டிவிட்ட ஈஸ்வரனுக்கு வரன்கள் வர ஆரம்பித்தன. அக்கம் பக்கத்தில் வசித்த அரைகுறை அறிவாளிகளும், தொலைக்காட்சித் தொடர்களில் காட்டப்பட்ட தொல்லை தரும் கதாபாத்திரங்களும் அவளுடைய மனதைக் கலைப்பதில் வெற்றி கண்டன.

" நாளைக்கே அவனுக்குக் கல்யாணம் ஆனா, உடனே மனைவி, சில நாட்களில் குழந்தை என்று அவனோட குடும்பமும் பெருக ஆரம்பிக்கும் போது, நீங்க மூணு பேரும் சுமக்க முடியாத சுமைகள்னு அவன் நினைக்க ஆரம்பிக்கலாம். அட, நம்ம ஈஸ்வரன் ரொம்ப நல்லவன், அப்படில்லாம் சட்டுனு மாறமாட்டான்னு நீ சொன்னாலும், வரப்போறவ அதே மாதிரி இருப்பான்னு என்ன நிச்சயம்? தலையணை மந்திரம் போட மாட்டான்னு நம்ப முடியுமா என்ன? அப்படி ஒருவேளை வரப்போறவ தூபம் போட்டு அவன் மனசை மாத்திட்டான்னா, நீங்க மூணு பேரும் எங்கே போவீங்க? என்ன செய்வீங்க? என்ன தான் இருந்தாலும் ஈஸ்வரன், உன் வயத்துல பொறந்த பையன் இல்லையே? யோசிச்சு முடிவெடு.

அவன் கல்யாணத்தை எவ்வளவு நாட்களுக்குத் தள்ளிப் போட முடியுமோ, அவ்வளவு நாட்களுக்குத் தள்ளிப் போடப் பாரு. அதுக்குள்ள நம்ம சத்யன் தலையெடுத்து ஒரு நல்ல வேலைக்குப் போக ஆரம்பிச்சான்னா, நீ நிம்மதியா இருக்கலாம். அதே மாதிரி எப்படியாவது அகிலா கல்யாணத்தையும் அதுக்குள்ள முடிக்கப் பாரு. சீர், செனத்தியெல்லாம் செய்யறதுக்கு ஈஸ்வரனைக் கட்டிக்கப் போறவ மூஞ்சி சுழிக்கக் கூட சான்ஸ் இருக்கு "என்று சுற்றியிருந்த உளிகள், அவளுடைய கல் மனதைச் செதுக்கித் தங்கள் இஷ்டப்படி சிற்பமாக உருவாக்கித் தள்ளின.

அடி மேல் அடி வாங்கி வாங்கி நிர்மலாவும் , ஈஸ்வரனை மகனாகப் பார்க்காமல் தன் குழந்தைகளின் சுமையைத் தாங்கும் சுமைதாங்கியாக மட்டும் பார்க்கத் தொடங்கினாள். ஈஸ்வரனின் அம்மாவாக அதுவரை இருந்தவள், இப்போது ஒரு சாதாரண மாற்றாந்தாயாக மனதளவில் மாறிப் போனாள்.

" அந்தப் பொண்ணு ரொம்ப உசரம், இந்தப் பொண்ணு நிறம் மட்டு, இந்தப் பொண்ணு பேசின விதமே சரியில்லை, பெரிய வாயாடியா இருப்பா போல இருக்கு, இந்தப் பொண்ணு ரொம்ப மேக்கப் போட்டுக்கறா, உன் சம்பளம் எல்லாம் இவளோட பவுடர், க்ரீமுக்கே சரியாகப் போகும், இது நொட்டை, இது நொள்ளை" என்று விதவிதமாகச் சாக்கு, போக்குகளைச் சொல்லி, வந்த இடங்களை எல்லாம் தட்டிக் கழித்தாள். ஈஸ்வரனுக்குக் கொஞ்சம், கொஞ்சமாகப் ஏதோ புரிய ஆரம்பித்தது.

' நிர்மலா அம்மாவுக்கு என் மேல ரொம்ப அக்கறை இருக்கறதுனால எல்லா விதத்திலும் உசந்த பொண்ணா ஸெலக்ட் பண்ணனும்னு நினைக்கறாங்களா? இல்லை இது வேற ஏதாவது பிரச்சினையா? ' என்று எண்ணிக் குழம்பியவன், இப்போதைக்குக் கல்யாணப் பேச்சே வேண்டாம் என்று நிறுத்தி விட்டான்.

" அம்மா, கொஞ்ச நாள் கழிச்சு எனக்குத் தானா இன்ட்ரஸ்ட் வரும்போது பாத்துக்கலாம்மா. இப்போதைக்கு இந்தப் பொண்ணு தேடற விஷயத்தைத் தள்ளிப் போடுங்க" என்று ஈஸ்வரன் சொன்னதும், நிர்மலாவின் மனது நிம்மதியானது. ஆயிரம் மலர்கள் குப்பென்று மலர்ந்து மணம் வீசின.

நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளாகிக் காலச்சக்கரம் முன்னால் விரைந்து ஓடியது. அகிலாவுக்கு நல்ல இடமாகப் பார்த்துத் திருமணம் பேசி முடித்தார்கள். பேங்கில் போட முடிந்த
லோன்களை எல்லாம் போட்டு ஈஸ்வரன் பணத்தைப் புரட்டினான். ஈஸ்வரனின் அம்மாவின் நகைகள் புது மோஸ்தர் நகைகளாக உருமாறின.

சத்யமூர்த்தி படிப்பில் சுமாராக இருந்தான். எப்படியோ கஷ்டப்பட்டு டிகிரி வாங்கி விட்டான். நல்ல அரசாங்க வேலையோ, பேங்க் வேலையோ கிடைக்குமளவு தகுதிகளை வளர்த்துக் கொள்ளவில்லை. ஒரு தனியார் கம்பெனியில் கிளார்க்காக வேலைக்குச் சேர்ந்தான்.

அடுத்து சத்யமூர்த்தியும் கல்யாண வயதை எட்டி விட்டான். ஈஸ்வரமூர்த்தியின் தலையில் வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டது. திருமண வயதைக் கடந்துகொண்டிருந்தான். இப்போது நிர்மலாவின் மனதில் இலேசாக குற்ற உணர்ச்சி எழ ஆரம்பித்தது. அதே சமயத்தில் தான் பெற்ற மகனான சத்யனைத் திருமணக் கோலத்தில் பார்க்கும் ஆசையும் எழுந்தது. சிந்தித்துக் குழம்பியவள், சாமர்த்தியமாகக் காய்களை நகர்த்தினாள்.

" ஈஸ்வரா, நம்ம சத்யாவுக்குப் பொருத்தமான பொண்ணு நம்ம சொந்தத்தில் தயாரா இருக்கா. அந்தப் பொண்ணோட அப்பா எனக்கு ஒண்ணு விட்ட தம்பி. நல்ல பொண்ணு. அடக்க ஒடுக்கமாப் பாக்க லட்சணமா இருக்கா. வேலைக்கெல்லாம் போகலை. ஏதோ கொஞ்சம் படிச்சுருக்கா. குடும்பப் பாங்கான பொண்ணு. நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு. எனக்கும் இப்பல்லாம் கிச்சன்ல தொடர்ந்து நிக்க முடியலை. உதவி தேவைப்படுது. அவளோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. கண்ணை மூடறதுக்குள்ள பொண்ணு கல்யாணத்தை முடிக்கணும்னு ஆசைப்படறாரு" என்று ஈஸ்வரனின் முன்னால் உட்கார்ந்து பேச்சை ஆரம்பித்தாள்.

" நல்ல விஷயத்தை ஏம்மா தள்ளிப் போடணும்? பேசி முடிச்சிர வேண்டியது தானே? "

" அது எப்படிப்பா பெரியவன் இருக்கும் போது சின்னவனுக்குப் பேசறது? உனக்கும் நல்ல எடமா வந்தால் சேத்து செஞ்சிரலாம்னு யோசிச்சேன். "

" அப்படில்லாம் வெயிட் பண்ண வேணாம்மா. மொதலில சத்யாவோட கல்யாணத்தைப் பேசி முடிங்க" என்று க்ரீன் சிக்னல் கொடுத்தான். நிர்மலாவின் மனதில் மகிழ்ச்சி, மத்தாப்பின் வெளிச்சச் சிதறல்களாகத் தெறித்தன. பொங்கிய சந்தோஷத்தை அடக்கியபடி, அடுத்த தூண்டிலைப் போட்டாள்.

" அது வந்துப்பா, இதில் இன்னொரு சின்ன பிரச்சினை இருக்குப்பா. சத்யா எதிரில பேசினா அவனோட மனசு கஷ்டப்படும்னு தான் அவன் இல்லாத சமயமாப் பாத்துப் பேசறேன் " என்று பலத்த பீடிகையுடன் ஆரம்பித்தாள்.

" என்ன பிரச்சினைம்மா? நம்ம சத்யாவுக்கு என்ன? பாக்க நல்லா ராஜா மாதிரி இருக்கான். அவனுக்கென்ன கொறைச்சல்? எதுவா இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கம்மா"

" அது வந்துப்பா, அது வந்து சத்யா ரொம்ப சாதாரண வேலை தானே பாக்கறான் ? அவனோட சம்பளத்தில் என் பொண்ணு எப்படிக் குடும்பம் நடத்துவான்னு அந்தப் பொண்ணோட அப்பா யோசிக்கறாரு. அவரை எப்படி சமாதானம் செய்யறதுன்னு தான் எனக்குப் புரியலை"

" அதனால என்னம்மா? என் சம்பளம் நல்லா வருதே? நானும் ஆஃபீஸராயிட்டேன். என் சம்பளத்தையும் அப்படியே உங்க கிட்டத் தானே கொடுக்கிறேன். வீட்டுச் செலவுக்கு தாராளமா இருக்கு இல்லையா? அப்புறம் நம்ம வீடும் சொந்த வீடு தானே? மேல் வீட்டையும் வாடகைக்கு விட்டுருக்கோம். மத்த செலவுக்கு நம்ம கிட்ட இருக்கற பணம் தாராளமாப் போதுமே? "

" அதெப்படிப்பா நான் சொந்த வீடு இருக்குன்னு சொல்லமுடியும்? வீடு உன் பேரில் இருக்கு. அதில் எப்படி சத்யா உரிமை கொண்டாட முடியும்? "

" ஆமாம். வீடு என் பேரில் இருக்கு. பேங்கில் லோன் போட்டுக் கட்டினதால என் பேரில் பதிய வேண்டியதாயிடுச்சு. இல்லைன்னா உங்க பேரில் தான் பதியணும்னு நினைச்சேன். பரவாயில்லை, இப்போ லோன் கொஞ்சம் தான் பாக்கி. அட்வான்ஸ் போட்டு அதை அடைச்சுட்டு, வீட்டைத் தம்பி பேரில மாத்திடறேன். அவங்க வீட்ல நீங்க, சத்யா பேரில வீடு இருக்கறதாச் சொல்லிடுங்க"

நிர்மலாவின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. ' இதைத் தான், இதையே தான் நான் எதிர் பாத்தேன் " என்று மனதிற்குள் மகிழ்ந்து போனாள்.

மனதில் பொங்கிய மகிழ்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல் அடுத்த ஏவுகணையை ஏவினாள்.


தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: ஏகாந்த வீணை 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
பல வீடுகளில் இன்றளவும் நடைபெற்றுவரும் ஏற்றத்தாழ்வுகளை சரியாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். படிக்க பாவமாக இருந்தாலும் இன்றைக்கும் பல குடும்பங்களில் ஈஸ்வரன்களும் நிர்மலாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலைக் கைதியாகிப் போனாலும் மாற்றாந்தாய் நிலைக்கு தரம் தாழ்ந்துவிட்ட நிர்மலா மீது விசுவாசம் குறையாமல் தம்பி மகனுக்கு அவள் பெயரை வைத்திருப்பது ஈஸ்வரனின் பெருங்குணத்தையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது.

இந்தக்கதையில் வீணை எப்படி ஒரு கதாபாத்திரமாக நுழைந்து இடம் பெறப்போகிறது என்று காண ஆவல்.
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
பல வீடுகளில் இன்றளவும் நடைபெற்றுவரும் ஏற்றத்தாழ்வுகளை சரியாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். படிக்க பாவமாக இருந்தாலும் இன்றைக்கும் பல குடும்பங்களில் ஈஸ்வரன்களும் நிர்மலாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலைக் கைதியாகிப் போனாலும் மாற்றாந்தாய் நிலைக்கு தரம் தாழ்ந்துவிட்ட நிர்மலா மீது விசுவாசம் குறையாமல் தம்பி மகனுக்கு அவள் பெயரை வைத்திருப்பது ஈஸ்வரனின் பெருங்குணத்தையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது.

இந்தக்கதையில் வீணை எப்படி ஒரு கதாபாத்திரமாக நுழைந்து இடம் பெறப்போகிறது என்று காண ஆவல்.
நன்றி🙏💕
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
112
அட கடவுளே நிர்மலா வாழைப்பலத்துல ஊசி நுழைக்கறமாதிரி செய்றாளே 😳😳😳😳😳😳😳
 

Mahalakshmi Babu

New member
Joined
Aug 13, 2024
Messages
14
பாவம்.ஈஸ்வரமூர்த்தி.எல்லாம் புரிந்தும் தம்பி தங்கையை நினைத்து எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போகிறார்.நிர்மலா அம்மா என்ற உன்னத உறவுக்கு அவமானம்
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
பாவம்.ஈஸ்வரமூர்த்தி.எல்லாம் புரிந்தும் தம்பி தங்கையை நினைத்து எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போகிறார்.நிர்மலா அம்மா என்ற உன்னத உறவுக்கு அவமானம்
நன்றி
 
Top Bottom