• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை 12

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏகாந்த வீணை

அத்தியாயம் 12

வீணைகளில் முழு அளவு வீணை, நடு அளவு வீணை, சின்ன வீணை என்று மூன்று அளவுகள் உண்டு. இவற்றில் ஒட்டு வீணை, ஏகாந்த வீணை என்ற இரு வகைகள் உண்டு.

ஒட்டு வீணை

இது இரண்டாம் தரம் என்றாலும் சில சமயம் நன்கு செய்த ஒட்டு வீணை ஏகாந்த வீணை மாதிரி நன்றாகவே இருக்கும். ஒட்டு வீணை தனித்தனியாகப் பிரித்துச் சேர்க்கும் வகையில் இருக்கும். இது ஓர் அளவுக்குச் சுலபமாக வீணையை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும். ஆனால் ஒன்றோடு ஒன்று இணைந்து நன்கு பொருந்தி இருக்கவேண்டும்.



உறைந்து போய் நின்றிருந்த சைந்தவி, உள்ளேயிருந்து வந்து அவளுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த பெற்றோரை கவனிக்கவில்லை.

" என்ன நடக்குது இங்கே? ஏன் இவ்வளவு சத்தம்? எதுக்கு இந்தப் பொண்ணு அழுதுட்டு நிக்குது? " என்றார் சைந்தவியின் அம்மா.

" இவங்க பேரு பார்கவி தானே? சைந்தவின்னு எதுக்கு மாத்திகிட்டாங்க? அதுவும் ஸ்கூல் ரெகார்ட், காலேஜ் ரெகார்ட் எலாலாத்துலயும் பார்கவின்னு இருக்கும் போது சில வருடங்களுக்கு முன்னால் அஃபிஷியலா எதுக்குத் தன் பேரை சைந்தவின்னு மாத்திகிட்டாங்க? கெசட் நோட்டிஃபிகேஷன் கூடக் கொடுக்கற அளவு என்ன அவசியம் வந்தது அவங்களுக்கு? அதைப் பத்தித் தெரிஞ்சுக்க வந்தோம்" என்று தர்ஷன் தனக்குக் கிடைத்த துருப்புச்சீட்டை அவர்கள் முன்னிலையில் எடுத்து வைத்தான். சைந்தவியும் அவளுடைய பெற்றோரும் தர்ஷனை அதிர்ச்சியோடு பார்த்தபோது அவன் கூறிய அனைத்தும் உண்மை என்று நிரூபணம் ஆகிவிட்டது.

தர்ஷன் ஏதோ யூகத்தில் தான் அடித்து விட்டான். சில ஆண்டுகளுக்கு முன்பு சைந்தவி தனது பெயரை அதிகாரபூர்வமாக மாற்றிக்கொண்ட விஷயம் அவனுக்குத் தெரியவந்தது. அவனுக்காக விசாரித்துத் தகவல்கள் திரட்டி வந்த நண்பர்களின் புத்திசாலித்தனத்தால் தான் இந்தத் தகவல் கிடைத்திருந்தது. அதை இப்போது எடுத்து பயன்படுத்திக் கொண்டான். தர்ஷன் குருட்டாம்போக்கில் எய்த அம்பு, இலக்கைச் சென்று தாக்கிவிட்டது.

" என்ன நடந்தது? என் பொண்ணு என்ன செஞ்சா? அதுனால யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது? எங்களுக்குப் புரியற மாதிரி யாராவது எடுத்துச் சொல்றீங்களா? " என்று கேட்டார் சைந்தவியின் அம்மா.

" அம்மா, இவங்களுக்கு சமமா உக்காந்து நீங்க பேசத் தேவையில்லை. இவங்களை உடனே வெளியே அனுப்புங்க" என்று கத்தின சைந்தவியை அவளுடைய அப்பா சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.

" ப்ளீஸ் பார்கவி, கீப் கொயட். லெட் அஸ் ஹேன்டில் திஸ் இஷ்யூ" என்று அவளிடம் சற்று கடுமையாகப் பேசி அவளுடைய வாயை அடைத்தார் அவர். வந்திருந்த விருந்தாளிகளின் பக்கம் திரும்பி, அவர்களை மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தார்.

நமஸ்வி, மனஸ்வி இரண்டு பேரும் தங்கள் வீட்டில் நடந்த நிகழ்வுகளை எடுத்துச் சொல்லி, சைந்தவி செய்த செயலால் அவர்களுடைய பெரியப்பா எப்படி வீட்டை விட்டு எங்கோ போய்விட்டார் என்பதை அவர்களிடம் விளக்கினார்கள். டாக்டர். பிரபாகரன், தனது மகளின் பக்கம் கோபத்துடன் திரும்பினார்.

" பார்கவி, சைந்தவி உன் ஃப்ரண்ட் தான். எங்களுக்கு நல்லாத் தெரியும். அதுவும் பெஸ்ட் ஃப்ரண்ட். அதுவும் தெரியும். அவ மேல இருக்கற பிரியத்துனால பேரை மாத்திகிட்டே. ஓகே, நாங்களும் உன்னோட ஃபீலிங்ஸைப் புரிஞ்சுகிட்டு அதுக்கு அனுமதி தந்தோம். அதோட நீ நிறுத்திருக்கணும். உன் ஃப்ரண்டுக்கு நியாயம் கேக்கறேன்னு ஒரு குடும்பத்தோட நிம்மதியையே பாழாக்கி இருக்கயே? இது சரியா? இந்த மாதிரி தடாலடியாக எதுவும் செய்யாதேன்னு உனக்கு எவ்வளவோ நாங்க அட்வைஸ் பண்ணியும் நீ கேக்கலை இல்லையா? நீ நெனைக்கற மாதிரி இவங்களோட பெரியப்பா குற்றவாளியே இல்லைன்னா அது எவ்வளவு பெரிய தப்பு? அவரோட உயிருக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு? " என்று தன் மகளிடம் எடுத்துச் சொன்னார் அவர்.

பின்னர் வந்திருந்த நால்வரையும் பார்த்துக் கை கூப்பினார்.

" என் பொண்ணு அவசரப்பட்டு செஞ்ச தப்புக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். உணர்ச்சிவசப்பட்டு யோசிக்காமல் என்னெல்லாமோ செஞ்சிட்டா. நீங்க எல்லோரும் படிச்சவங்களாத் தெரியறீங்க. ஆல் ஆஃப் யூ ஆர் குரோன் அப் அன்ட் மெச்சூர்டு. உங்க எல்லோருக்கும் சைந்தவியைப் பத்தி நான் சொல்லறேன். அப்போது தான் அவளோட பக்கம் இருக்கற நியாயம் உங்களுக்குப் புரியும். இன்னும் கொஞ்ச நேரம் எங்களோட இருந்து சைந்தவியைப் பத்தித் தெரிஞ்சுக்க விரும்பறீங்களா? " என்று கேட்க, அவர்கள் எல்லோருமே தலையசைத்தார்கள். சைந்தவியாக மாறிய பார்கவி ஏதோ சொல்ல வந்தாள். டாக்டர்.பிரபாகரன் அவளைத் தடுத்து விட்டார்.

" சைந்தவி என் பொண்ணு பார்கவியோட பெஸ்ட் ஃப்ரண்ட். ஹைதராபாத்தில் இருக்கும் அனாதை ஆசிரமத்தில் வளந்த பொண்ணு. அவளோட படிப்புக்கு நானும், என் மனைவியும் உதவி செஞ்சதுனால நன்றி சொல்ல ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்திருந்தா. அந்த சமயத்தில் பார்கவியும் லீவுக்கு வந்திருந்தா. முதல் தடவை சந்திச்சபோதே இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நல்ல ஃப்ரண்ட்ஷிப் உருவாயிடுச்சு. பார்கவியும் ஒரே குழந்தைங்கறதுனால தனிமையா ஃபீல் பண்ணிட்டிருந்தா. அதுனால நாங்களும் அவங்களோட நட்பை என்கரேஜ் பண்ணினோம்.

சைந்தவி ரொம்ப நல்லாப் படிச்சா. பயங்கர இன்டலிஜன்ட். ஸ்கூல் முடிக்கும் போது ஸ்டேட் லெவல் ரேங்க் வாங்கி பாஸ் பண்ணினா. அவளை இஞ்சினியரிங் காலேஜ்ல நானே சேத்து அவளோட படிப்புச் செலவை நாங்களே ஏத்துக்கிட்டோம். அவளுக்கு மெரிட் ஸ்காலர்ஷிப் கூடக் கிடைச்சது. அவளை ஒரு கட்டத்தில் நாங்களே சட்டப்படி தத்து எடுத்துகிட்டோம். எங்களுக்கு ரெண்டு கொழந்தைகள்னு தான் நாங்க நெனைச்சோம். எங்களோட ரெண்டு கண்களாத் தான் இரண்டு பேரும் இருந்தாங்க. இரண்டு பேருக்கும் அஹமதாபாதில் எம். பி. ஏ. படிக்க அட்மிஷன் கிடைச்சது. அதையும் படிச்சு முடிச்சிட்டு வந்தாங்க. அந்த சமயத்தில் தான் திருஷ்டி பட்ட மாதிரி அந்த விபத்து நடந்தது" என்று சொன்னபோது அவருடைய கண்களில் குளம் கட்டியது.

பார்கவியின் அம்மா, அவரருகில் வந்து நின்று கொண்டு அவரை சமாதானப் படுத்தினார். அவரும் சிறிது நேரத்தில் குரலையும் மனதையும் சரிப்படுத்திக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.

" ரெண்டு பேருக்கும் கேம்பஸ் இன்டர்வ்யூல நல்ல வேலை கிடைச்சது. கொஞ்ச நாட்கள் ஜாலியா ஊர் சுத்திட்டு வேலையில் சேரணும்னு சொல்லிட்டு அக்கம்பக்கத்தில் இருக்கும் இடங்களுக்குப் போயிட்டு வந்தாங்க. அன்னைக்கு அப்படித்தான் கோல்கொண்டா ஃபோர்ட்டுக்குப் போயிட்டுத் திரும்பி வர வழியில் ஒரு பஸ்ஸில் அவங்க கார் மோதிடுச்சு. பார்கவி தான் காரை ஓட்டிட்டுட்டுப் போயிருந்தா. சைந்தவி அவ பக்கத்தில் உக்காந்திருந்தா. ரெண்டு பேருக்கும் பயங்கர அடி. சைந்தவியோட தலை ஏதோ ஹெவியான பொருள் மேல மோதினதுல மூளையில் இரத்தக் கசிவு. பார்கவிக்குக் கண்ணில் பெரிய பிரச்சினை ஆயிடுச்சு. கார் கண்ணாடி உடைஞ்சு அந்தத் துண்டுகள் எல்லாம் கண்ணில் ஏறிடுச்சு.

நாங்க விஷயம் தெரிஞ்சு ஹாஸ்பிடல் போனபோது ரெண்டு பேரும் மோசமான நிலைமையில் இருந்தாங்க. சைந்தவி கோமால போயிட்டா. பொழைக்கறது கஷ்டம்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. பார்கவிக்குக் கண்பார்வை போயிடுச்சுன்னு சொன்னாங்க. அந்த சமயத்தில் தான் அங்கிருந்த டாக்டர் என்னிடம் அந்த முக்கியமான விஷயத்தைச் சொன்னார். சைந்தவி, பிரெய்ன் டெத் ஸ்டேஜை நெருங்கிட்டிருக்கா. நீங்க அனுமதிச்சா அவளோட ஆர்கன்ஸை ( உடலின் பாகங்களை), தேவையுள்ள நோயாளிகளுக்கு டொனேட் பண்ணலாம்னு சொன்னார். சைந்தவி ரொம்ப நல்ல பொண்ணு. கருணை அவளோட உள்ளத்தில் மிகவும் அதிகம். அவளோட இறப்பு மத்தவங்களுக்கு உதவட்டுமேன்னு சரின்னு சொல்லிட்டோம்.

ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் வச்சோம். சைந்தவியின் கண்களை பார்கவிக்குக் வைக்கச் சொல்லிக் கேட்டோம். சாதாரணமா யாராவது கண்தானம் செஞ்சா, அதுக்காகக் காத்துட்டிருக்கறவங்களுக்கு அதே வரிசையில் தான் தரணும். ஆனா நாங்க பார்கவிக்கு அந்தக் கண்களைப் பொருத்தச் சொல்லிச் சொன்னோம். பார்கவியின் கண்களா சைந்தவியும் எங்களோடயே இருப்பான்னு ஆசைப்படறோம்னு சொன்னோம். அவங்களும் புரிஞ்சுகிட்டு ஒத்துகிட்டாங்க" என்று சொல்லி நிறுத்தினார்.

உணர்ச்சிவசப்பட்ட அவரால் மேலே பேச முடியவில்லை. பார்கவியின் அம்மா மீதி விஷயங்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். பார்கவி விசும்பிக் கொண்டே அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

" சர்ஜரி நல்லபடியாக முடிந்து பார்கவிக்கு சைந்தவியின் கண்கள் பொருத்தப்பட்டன. பார்வையும் திரும்பக் கிடைச்சது. சைந்தவியோட கண்கள், இதயம் , கிட்னி இவற்றால் தேவையான நோயாளிகளுக்கு புனர்ஜன்மம் கிடைத்தது. பார்கவியோட கண்கட்டு பிரிக்கப்பட்ட தினம், முதலில் சைந்தவியைத் தான் பாக்கணும்னு அடம் பிடிச்சா. அந்த சமயத்தில் வேறு வழியே இல்லாமல் அவளிடம் உண்மையைச் சொல்ல வேண்டியதாச்சு. அழுது புரண்டாள். கதறித் தீர்த்தாள். ஒருவழியா அவ தன்னோட மனசைத் தேத்திட்டு எழுந்து வரதுக்கு இரண்டு, மூன்று மாதங்கள் ஆச்சு. வேலையிலும் சேந்துட்டா. கடுமையா வேலை செஞ்சு தன்னுடைய மனதில் இருந்த வெறுமையைப் போக்கிக்க முடிவு செஞ்சா " என்று சொல்லி விட்டு அவர் நிறுத்தினார்.

" மீதியை நானே சொல்லறேன்மா " என்று சொன்ன பார்கவி தானே பேச ஆரம்பித்தாள். இப்போது அவளுடைய குரல் நல்ல தெளிவாகியிருந்தது.

" என்னோட மனநிலை உங்களுக்கு இப்போ நல்லாப் புரியும்னு நினைக்கிறேன். சைந்தவி தான் என்னோட உலகம்னு வாழ்ந்தவ. குழந்தை கையில விளையாட ஒரு பொம்மையைக் கொடுத்துட்டுப் பிடுங்கிக்கற மாதிரி ஆண்டவன், சைந்தவியை என்னிடம் இருந்து பிடுங்கித் தன்னருகிலேயே அழைச்சுக்கிட்டார்னு தோணுச்சு. ரொம்ப நாளைக்குப் பைத்தியம் பிடிச்சா மாதிரிதான் இருந்தேன். அப்பத்தான் பேரை மாத்திக்கிட்டேன். எத்தைத் தின்னால் பித்தம் தெளியுங்கற நிலைமை தான் இருந்தது. அவளுக்காக ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அவளோட அம்மா, அப்பா அதாவது பயலாஜிகல் பேரன்ட்ஸ் யாருன்னு கண்டுபிடிக்கணும்னு மனசில் விபரீத ஆசை வந்துச்சு. அம்மா, அப்பா தடுத்தும் கேக்கலை. அவங்களுக்குத் தெரியாமல் முயற்சிகளில் இறங்கினேன்" என்று சொல்லி விட்டு நமஸ்வி, மனஸ்வியின் முகங்களைப் பார்த்தாள்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: ஏகாந்த வீணை 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
அழுத்தமான பதிவு! சைந்தவி / பார்கவி திருப்பங்கள் எதிர்பாராதது!!
 
Top Bottom