• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை 11

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏகாந்த வீணை

அத்தியாயம் 11


"இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்"
(திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி பாடல் எண் 4 )

"மாசில் வீணையும் மாலை மதியமும்வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்மூசு வண்டறை பொய்கையும் போன்றதேஈசன் எந்தை இணையடி நீழலே"
(திருநாவுக்கரசர். தேவாரம்)

இவற்றிலிருந்து வீணை வாத்தியம் மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் காலத்தில் வழக்கில் இருந்துள்ளதனை அறிய முடிகின்றது.

"வீணையும் நாதமும் போல நீவிர் வாழ்க" என புதுமணத் தம்பதியினரை வாழ்த்தும் முறையும் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது.



நம்பமுடியாத அந்தத் தகவல்களைக் கேட்டு இடிந்து போய் உட்கார்ந்திருந்தார்கள் மனஸ்வியும், நமஸ்வியும்.

" தர்ஷன், சைந்தவியோட அப்பா பேரென்ன? அவங்க பெற்றோர் இப்போ எங்கே இருக்காங்க? " என்று கேட்ட மனஸ்வி மிகவும் அதிகமாகக் குழம்பிப் போயிருந்தாள்.

" அப்பா பேரு டாக்டர்.பிரபாகரன், அம்மா பேரு டாக்டர்.காதம்பரி, இரண்டு பேரும் ஹைதராபாத்தில் புகழ்பெற்ற டாக்டர்கள். டாக்டர்.தேவி ஷெட்டி பத்தி நீங்க கேள்விப்பட்டிருக்கீங்க இல்லையா? இந்தியாவின் தலைசிறந்த இதய சிகிச்சை நிபுணர். நிறைய பொதுநல சேவை செஞ்சு ஏகப்பட்ட அவார்டெல்லாம் வாங்கினவர். அவர் நடத்தி வரும் நாராயணா ஹ்ருதயாலயாவில் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்களாக வேலை பாக்கறாங்க. இப்படிப்பட்ட பின்புலம் இருக்கறவங்க சைந்தவி. அவங்க எதுக்காக ஏழைப் பொண்ணா நடிச்சு எங்கேயோ இருக்கற உங்க பெரியப்பா மேல பழி போடணும்? நல்லா யோசிச்சுப் பாருங்க. என்னவோ எங்கயோ இடிக்குது" என்று நிறுத்தினான் தர்ஷன்.

" எங்கே போனாலும் முட்டுச்சந்தா வருதே?
இப்போ என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க. எங்களால ஒண்ணும் யோசிக்க முடியலை" என்று அவர்களிடம் சரண்டர் ஆனார்கள் நமஸ்வியும், மனஸ்வியும்.

" நான் ரெண்டு நாட்களில் தில்லி கிளம்பறேன். ஆக்சுவலி தில்லியில் இருந்து வாரணாசி போறேன். வாரணாசியின் இன்றைய நிலையைப் பத்தி ஒரு பெரிய ஆர்ட்டிகிள் எழுதணும். அதுக்காக அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து தகவல்கள் சேகரிக்கணும். அதில ரொம்ப பிஸியாயிடுவேன். அதுக்கு முன்னால இந்த விஷயத்தில் ஏதாவது தெளிவான பிக்சர் கெடைச்சா நல்லாருக்கும்னு நினைக்கிறேன் " என்றான் தர்ஷன்.

" ஐடியா திலகம் ஆயுஷ், உன்னுடைய திருவாய் மலர்ந்து நல்ல ஐடியா ஒன்றை வரமாக அருள்வாயா?" என்று ஆயுஷைப் பார்த்துக் கை கூப்பினான் தர்ஷன்.

" பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று மனமிரங்கி வரமருள முடிவு செய்து விட்டார் இந்த ஐடியானந்தா சுவாமிகள் " என்று இரண்டு கைகளையும் உயர்த்தி அவர்களை ஆசீர்வதிப்பது போல எழுந்து நின்றான் ஆயுஷ்.

" சீக்கிரம் சொல்லித் தொலைடா லூசுப் பயலே! பெரிய சாமியார்னு மனசுக்குள்ள நெனைப்பு. விட்டா அங்கே கைலாசாவில் இருப்பவர்க்கு டஃப் ஃபைட் கொடுப்பே போல இருக்கே? சீக்கிரமாச் சொல்லித் தொலைடா, இல்லைன்னா உன்னை இங்கேயே விட்டுட்டு நாங்க மூணு பேரும் கிளம்பிப் போயிட்டே இருப்போம். நீ மட்டும் தனியா இங்க பைத்தியம் மாதிரி புலம்பிட்டே உக்காந்துருக்க வேண்டி வரும், பாத்துக்கோ. யாராவது கொண்டு போய் கீழ்ப்பாக்கத்துல உன்னை அட்மிட் பண்ணிடுவாங்க " என்று மிரட்டினான் தர்ஷன்.

" ஓகே, ஓகே, பொறுமை, பொறுமை பக்தகோடிகளே, இந்த ஐடியானந்தாவின் அற்புதமான ஐடியா என்னவென்றால் " என்று நீட்டி முழக்க, தனது இடத்தில் இருந்து எழுந்து நின்ற தர்ஷன், " மனஸ்வி, நமஸ்வி எழுந்துருங்க ரெண்டு பேரும். இவன் நமக்கு சரிப்படமாட்டான். இது திருந்தாத ஜென்மம்" என்று உறும ஆரம்பித்தான்.

"ரொம்பத் தான் குதிக்காதே தர்ஷா, நீங்க எல்லாரும் ரொம்ப ஸீரியஸாப் பேசிட்டு இருந்ததால கொஞ்சம் மூடை மாத்த முயற்சி பண்ணினேன். அவ்வளவுதான். இப்போ என்னோட ஐடியாவைக் கேளுங்க. நாம நாலு பேருமாச் சேந்து போயி சிங்கத்தை அதோட குகையிலயே நேருக்கு நேர் சந்திச்சா என்ன? " என்றான் ஆயுஷ்.

" உளறாமல் கொஞ்சம் புரியற மாதிரி பேசறயா ? " என்றான் தர்ஷன் எரிச்சலுடன்.

" அதாவது சைந்தவியை அவங்க வீட்லயே போய் சந்திக்கலாம்னு சொல்லறேன். "

" என்ன இது உளறல்? இதுக்காக நாம நாலு பேரும் கெளம்பி புனே போகணும்னு சொல்லறயா? நடக்கிற காரியமா? நாலு பேருக்கும் லீவு கிடைக்கணும். ஒரே ஃப்ளைட்ல டிக்கெட் கிடைக்கணும். எவ்வளவோ இருக்கு நண்பா" என்ற தர்ஷனின் குரலில் கேலி தெரிந்தது.

" எதுக்கு புனே போகணும்? சைந்தவி நாளையில் இருந்து சென்னை ஆஃபிஸுக்கு டிரான்ஸ்ஃபரில வராங்க. என்னுடைய ஸீக்ரெட் ஸோல்ஜர்கள் மூலமாக விஷயத்தைக் கறந்துருக்கேன். அவங்களுக்காக பெசன்ட் நகரில் தனி வீடு பாத்துருக்காங்க. ஏன்னா ஒரு மாதத்துக்கு அவங்க அம்மா, அப்பாவும் கூட வந்து தங்கப் போறாங்களாம். தமிழ்நாடு முழுவதும் டூர் பண்ணப் போறாங்களாம். எல்லா விஷயங்களையும் கண்டுபிடித்து விட்டார் இந்த ஞானி" என்று பெருமையடித்துக் கொண்டான் ஆயுஷ்.

" அதெல்லாம் சரி. நாம அவங்க வீட்டுக்குப் போனா முகம் கொடுத்துப் பேசுவாங்களா? கெட் லாஸ்ட்னு மூஞ்சிக்கு நேராக் கத்திட்டாங்கன்னா நாம என்ன செய்வோம்? " என்று பயந்தாள் நமஸ்வி.

" அது மட்டுமில்லை. எனக்கும், ஆயுஷுக்கும் வேலையில் இருந்து கல்தா கொடுக்கவும் நல்ல சான்ஸ் இருக்கு. ஆயுஷ், ஒளிமயமான எதிர்காலம் கண்ணுக்குத் தெரிகிறது" என்று சொல்லிச் சிரித்தாள் மனஸ்வி.

" புது புராஜெக்ட் படு வேகமாக ஓடிட்டிருக்கு. பழகின ஆளுங்களை அவ்வளவு ஈஸியா வேலையில் இருந்து தூக்க மாட்டாங்க. அப்படி ஒருவேளை தூக்கினாலும் வேற வேலை நமக்கு ஈஸியாக் கெடைக்கும். டோன்ட் வொர்ரி. கெடைக்கலைன்னா, நாம ரெண்டு பேருமா ஒரு ஸ்டார்ட் அப் ஆரம்பிச்சுட்டலாம். நம்ம தர்ஷன் ஃபைனான்ஸ் பண்ணுவான். ஃப்ரண்டுன்னா உசுரையே கொடுப்பான். இல்லையா தர்ஷா? " என்று சொன்னபடி தர்ஷனைப் பார்க்க, தர்ஷனோ அவனை நெற்றிக்கண் பார்வை பார்த்தான்

" வேற ஒரு லீடும் கிடைக்காததுனால இந்தக் கண்றாவி ஐடியாவையே உடனடியாக செயல்படுத்துவோம். வாங்க கிளம்பலாம்" என்ற தர்ஷனின் அறிவிப்பைத் தொடர்ந்து நான்கு பேரும் பெசன்ட் நகருக்கு விரைந்தார்கள்.

ஆயுஷ், சைந்தவியின் சரியான அட்ரஸ், வீடு இருந்த இடத்தின் லேண்ட் மார்க் எல்லாவற்றையுமே விவரமாக விசாரித்து வைத்திருந்ததால், அதிக நேரம் வீணாகவில்லை. சைந்தவியின் வீட்டை எளிதாகக் கண்டுபிடித்து நெருங்கியும் விட்டார்கள்.

நமஸ்வியும், மனஸ்வியும் தயங்கியபடி பின்னால் நிற்க, தர்ஷன் துணிச்சலுடன் முன்னேறி அழைப்பு மணியை அழுத்தினான். கம்பீரமான உருவத்துடன், மூக்குக் கண்ணாடி அணிந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து கதவைத் திறந்தார்.

" யார் நீங்க? யாரைப் பார்க்கணும்? "

" மிஸ். சைந்தவியை மீட் பண்ணனும். இவங்க ரெண்டு பேரும் அவங்க கம்பெனியில் வேலை பாக்கறாங்க. நாங்க ரெண்டு பேரும் அவங்க ஃப்ரண்ட்ஸ். புதுசா இந்த வீட்டுக்கு வந்திருக்கிறதாக் கேள்விப்பட்டோம். ஏதாவது உதவி வேணுமான்னு விசாரிக்க வந்தோம்" என்று கொஞ்சம் உண்மை, கொஞ்சம் பொய் கலந்து உப்புமாவாகக் கிளறி அவர் முன்னே வைத்தான் தர்ஷன். அவரோ அதைக் கேட்டு நம்பிய மாதிரி தெரியவில்லை. அவர்களை சந்தேகத்துடன் ஏற இறங்கப் பார்த்தார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை,

" உள்ளே வந்து உக்காருங்க. சைந்தவியை வரச் சொல்லறேன் " என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.

சிறிது நேரத்தில் சைந்தவி வந்தாள். அவர்களைப் பார்த்து விட்டு ஆச்சர்யத்தை முகத்தில் காட்டினாள். டிப்டாப்பாக ஆஃபீஸில் பார்த்தவளை வீட்டில் சாதாரண டிரஸ்ஸில் பார்க்க ஒரு மாதிரி இருந்தது.

" யெஸ் , என்ன விஷயம்? வீட்டைத் தேடிக் கண்டுபிடிச்சு வந்து மீட் பண்ணற அளவு என்ன எமர்ஜென்சி? " என்று மனஸ்வியைப் பார்த்துக் கேட்டாள். அவர்கள் வந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது அவளுடைய பேச்சில் காட்டிய எரிச்சலில் இருந்து நன்றாகத் தெரிந்தது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள்.

" எதுக்கு வந்திருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியலையே? ஐ ஆம் வெரி பிஸி. இப்பத் தான் சாமான்களை ஸெட் பண்ணிட்டிருக்கோம். உதவி செய்யலாம்னு வந்ததா அப்பா கிட்ட சொன்னீங்களாம்? நிஜமாவே உதவி செய்யணும்னா இங்கேருந்து கிளம்புங்க. எனக்கு நிறைய வேலையிருக்கு" என்று சொன்னபோது கழுத்தில் கை வைத்துத் தள்ளாத குறை தான். கடுகடுப்பாகத் தான் பேசினாள்.

" இங்கே இருக்கிறது உங்கப்பான்னா, எங்க வீட்டுக்கு வந்து எங்க பெரியப்பாவை, நீங்க ஏன் அப்பான்னு கூப்பிட்டீங்க? " என்று துணிச்சலுடன் நமஸ்வி கேட்டே விட்டாள்.

" உங்களுக்கு எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. உடனடியாக் கிளம்புங்க இங்கிருந்து " என்று ஆணித்தரமான குரலில் அவர்களுக்குக் கட்டளையிட்டாள். அவளுடைய விரல், வாசற்கதவைச் சுட்டிக் காட்டியது.

" பார்கவி , என்ன பிராப்ளம் அங்கே? உள்ளே வந்துட்டுப் போ கொஞ்சம் " என்று மென்மையான ஒரு பெண்குரல் கேட்க, சைந்தவி, " இதோ வரேன்" என்று குரல் கொடுத்தபடி உள்ளே சென்றாள்.

" இவங்க பேரு பார்கவியா, சைந்தவியா" என்று அவர்கள் தங்கள் மனங்களுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், நாயகன் படத்தில், வேலு நாயக்கரின் பேரன், " அம்மா, தாத்தா நல்லவரா, கெட்டவரா " என்று கேட்டது சம்பந்தமே சம்பந்தம் இல்லாமல் நினைவுத் திரையில் எட்டிப்பார்த்தது. பார்கவி என்ற பெயரைக் கேட்டதும், தர்ஷனின் முகம் பளிச்சென்று மலர்ந்து போனது. ஏதோ ஒரு முக்கியமான விஷயம், அதுவும் சைந்தவியைப் பற்றிய விஷயம், அவனுக்குப் புரிந்துவிட்டது.

' இது போதும் எனக்கு' என்று அவனுடைய உள்ளம் துள்ளியது. சின்ன நூல் கிடைத்தால் போதும் அவனுக்கு. கோடு போடச் சொன்னால், கோலமே போட்டு விடுவான். கெட்டிக்காரத்தனம் நிறைய கொட்டிக் கிடந்தது அவனிடம். தனது மேகஸினுக்காகத் தகவல் சேகரிக்கப் போகும் இடங்களில், கையில் கிடைக்கும் சிறிய துரும்பை வைத்துக் கொண்டு, மாளிகையே எழுப்பி விடுவான். எதிராளியின் கண்ணில் விரலைப் போட்டு ஆட்டி, தேவையான விஷயங்களைக் கறந்துவிடுவதில் எத்தன் தான் தர்ஷன்.

தன்னுடைய நண்பர்களை அவன் அந்தத் துணிச்சலுடன் ஒரு வெற்றிப் பார்வை பார்த்தான். ' நான் இருக்கிறேன், கவலைப்பட வேண்டாம். வந்த வேலையை முடித்துவிட்டே போகலாம்' என்று அந்தப் பார்வை அவனுடைய நண்பர்களுக்கு அபயம் அளித்தது.

சைந்தவி கோபத்துடன் திரும்பி வந்தாள்.

" நீங்க இன்னும் கெளம்பலையா? " என்று கத்தினாள்.

" மேடம், எங்க கேள்விக்கு விடை தெரிஞ்சுக்காம நாங்க கெளம்பறதா இல்லை" என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டு சைந்தவியை முறைத்துப் பார்த்தாள் நமஸ்வி.

" அநாவசியமா என் வீட்டுக்கு வந்து எதுக்கு இப்படி டார்ச்சர் பண்றீங்க? நீங்களாக் கிளம்பிப் போகலைன்னா, நான் போலீஸைக் கூப்பிட வேண்டி வரும்" என்றாள். அதைக் கேட்டு உடனே எழுந்த மனஸ்வி, சைந்தவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச ஆரம்பித்தாள்.

" மேடம், ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க. உங்களுக்கும் எங்க பெரியப்பாவுக்கும் இடையில் என்ன உறவு, நீங்க எதுக்காக எங்க வீட்டுக்கு வந்து பெரியப்பாவை அப்பான்னு கூப்பிட்டீங்க இதையெல்லாம் கூட நீங்க சொல்லவேண்டாம். ஆனா எங்க பெரியப்பா ரொம்ப நல்லவர். அது மட்டும் எங்களுக்கு நல்லாத் தெரியும். அவர் யாரையும் ஏமாத்தற டைப் இல்லை நிச்சயமா. ஏதோ பெரிய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆயிருக்கு. நீங்க அவரைத் தப்பாப் புரிஞ்சுட்டு இருக்கீங்க. நீங்க வந்துட்டுப் போனதும் பெரியப்பாவை ஹாஸ்பிடலில் சேக்க வேண்டியதாயிடுச்சு. அவருக்கு பிரெயின் டியூமர்னு டயக்னைஸ் பண்ணினாங்க. அந்த உடம்போட திடீர்னு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டுப் போயிட்டாரு. அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கறோம் மேடம். ப்ளீஸ் ஹெல்ப் அஸ். நீங்க சொல்லற தகவலை வச்சு அவர் இருக்கற இடத்தைக் கண்டு பிடிச்சுடலாங்கற நப்பாசையோடு வந்திருக்கோம்" என்று படபடவென்று தான் சொல்ல நினைத்ததைச் சொல்லி விட்டாள்.
சொல்லி முடித்ததும் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டாள்.

சைந்தவி இதை எதிர்பார்க்கவில்லை. மனஸ்வி கூறிய விஷயங்களும், அவள் அழுததும் அவளுடைய மனதை வெகுவாக பாதித்தன. என்ன பேசுவது, எப்படி சமாளிப்பது என்று புரியாமல் அதிர்ச்சியுடன் நின்ற இடத்திலேயே உறைந்து போனாள் சைந்தவி.



தொடரும்,

புவனா சந்திரசேகரன்.

 

Author: Puvana
Article Title: ஏகாந்த வீணை 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
சூப்பர் சூப்பர் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️பெரியப்பா மீது இருக்கும் பாசமும் நம்பிக்கையும் மனஷ்வியை துணிச்சலாக கேட்க வச்சுருச்சு சூப்பர்
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
சூடு வைத்த ஆட்டோ மீட்டர் போன்ற அப்டேட்!
 
Top Bottom