• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஏகாந்த வீணை 10

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
ஏகாந்த வீணை

அத்தியாயம் 10

தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையில் தாங்கிக் கொண்டு வீணை மீட்டப்படும். சங்கீதத்தின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இதில் தெளிவாக வாசிக்கக் கூடியதாக இருப்பதால் வீணையை ” சங்கீத அளவுகோல்” என்றும் கூறுவர்.வீணையில் தேர்ச்சி அடைவது மிகவும் கடினம். பல வருடங்கள் பயின்றாலே, அதனை சீராகவும் முறை தவறாமலும் வாசிக்க முடியும். இது சற்று பெரிய வாத்தியமாக இருந்தாலும் இன்றும் நமது மாணவர்கள் வீணையை விரும்பி கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் நாம் பெருமை கொள்கின்றோம்.



சென்னையில் இருந்து கிளம்பியதில் இருந்து அதிகமாக வதைக்காத தலைவலி அன்று காலையில் எழுந்த உடனேயே எட்டிப் பார்த்தது ஈஸ்வரமூர்த்திக்கு. அதை மறப்பதற்காக அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என்று முடிவு செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். வலி அதிகமானால் போட்டுக் கொள்வதற்கு மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டார்.

முக்திபவனை விட்டு வெளியே வந்ததும் நிறைய ரிக்ஷாக்கள் நின்று கொண்டிருந்தன. வாரணாசி மிகவும் புனிதமான ஊர். ஆனால் தெருக்கள் மிகவும் குறுகலானவை. எங்கே பார்த்தாலும் மாடுகள் சுற்றிக் கொண்டிருக்கும். ஆகையால் மற்ற பெரிய வாகனங்களை விட ரிக்ஷாக்கள், ஆட்டோ, ஸ்கூட்டர் போன்ற சிறிய வாகனங்கள் உள்ளே புகுந்து புறப்பட சௌகர்யமானவை. ஈஸ்வரனின் தலையைப் பார்த்ததும் சைக்கிள் ரிக்ஷாவை ஓட்டும் ரிக்ஷா வாலாக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

" ஆயியே சாப், கஹாம் ஜானா ஹை? எங்கே போகணும்? நான் கூட்டிட்டுப் போறேன் வாங்க" என்று எல்லோரும் போட்டி போட, சிரித்த முகத்துடன் பளிச்சென்று இருந்த அந்த இளைஞனின் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டார்.

" எங்கே போகணும் ஸாப் ? " என்று துடிப்புடன் கேட்டவனைப் பார்த்து நட்புடன் சிரித்தார் அவர்.

" காலையில் இருந்து சாயந்திரம் நான் டயர்டாற வரைக்கும் வாரணாசியில் எங்கெல்லாம் போக முடியுமோ அங்கெல்லாம் போகணும். உன்னால முடியும் தானே? " என்று அவர் சொன்னதும் அவன் மகிழ்ந்து போனான்.

" அது என்ன ஸாப் அப்படிக் கேக்கறீங்க? நீங்க சொல்லற எடத்துக்கு எல்லாம் நான் கூட்டிட்டுப் போறேன். ஆனால் கூலி இவ்வளவு வேணும்னு நான் உங்க கிட்டக் கேக்கமாட்டேன். நீங்களாப் பாத்துக் கொடுக்கிறதை சந்தோஷமா வாங்கிக்கறேன் ஸாப்" என்றான் அவன். ஈஸ்வரனுக்கு உடனேயே அவனைப் பிடித்து விட்டது.

" எங்கெல்லாம் போகலாம்னு நீ தான் சொல்லணும். நான் இங்கே வரது இது தான் முதல் தடவை. நீயாவே கூட்டிட்டுப் போ. எல்லா இடமும் இன்னைக்கே பாக்கணும்னு அவசியம் இல்லை. கொஞ்ச கொஞ்சமாகப் பாக்கலாம். தினமும் காலையில் வந்து என்னை நீயே கூட்டிட்டுப் போ" என்று இனிமையாகப் பேசியவரை, அந்த இளைஞனுக்கும் பிடித்திருந்தது. தன்னையும் ஒரு மனிதனாக மதித்து மரியாதையோடும், பிரியத்தோடும் பேசும் மனிதர்களை அவனுடைய அனுபவத்தில் அபூர்வமாகத் தான் சந்திப்பான் அவன்.

" உன் பேர் என்ன பேட்டா( மகனே)? "

" என் பேர் அப்துல். எங்க அம்மா என்னை அப்பூன்னு கூப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே கூப்பிடலாம். அப்புறம் இங்கே நிறைய மந்திர்கள் இருக்கு. விசுவநாத்ஜி மந்திர், அன்னபூரணி மந்திர், விசாலாட்சி மந்திர், அப்புறம் சாயந்திரம் கங்கா ஆர்த்தி பாக்க நல்லாருக்கும். மஸ்ஜித், புத்த மதத்துக்காரங்க மந்திர், மியூசியம், சாரநாத் ஸ்தூபி, அப்புறம் பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி, நிறைய காட்( படித்துறை) எல்லாமே இருக்கு. இன்னைக்கு எங்கெல்லாம் போகலாம் சொல்லுங்க" என்றான் அப்துல்.

" இன்னைக்கு காசி விஸ்வநாதர் மந்திரும், அன்னபூரணி மந்திரும் போயிட்டு மதியம் எங்கேயாவது சாப்பிடலாம். எனக்கு சாத்வீகமான உணவு தான் வேணும். அதுக்கேத்த மாதிரி இடமாப் பாத்துக் கூட்டிட்டுப் போறயா? அப்படியே சாயந்திரம்
கங்கா மாதாவையும் கண்குளிரப் பாத்ததுக்கு அப்புறம், கங்கா ஆரத்தியையும் பாத்துட்டுத் திரும்பிடலாம்" என்று தானே முடிவு செய்து சொன்னார். கோயில்களை அடைந்ததும் அவரை வெளியே இறக்கி விட்டு விட்டு அங்கேயே பொறுமையாகப் காத்துக் கொண்டிருந்தான் அப்துல்.

" எங்கிருந்தோ வந்தான், இடைச் சாதி நான் என்றான், இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" என்று வாய்விட்டுப் பாடத் தோன்றியது ஈஸ்வரனுக்கு. அன்று மாலைக்குள் அவ்வளவு தூரம் இரண்டு பேரும் மனதளவில் நெருங்கி விட்டார்கள்.

இதே கதை தினமும் தொடர்ந்தது. இரண்டு இரண்டு இடங்களாக ஆற அமர சுற்றிப் பார்த்தார்கள். அந்த இடங்களில் செலவழித்த நேரத்தை விட கங்கைக் கரையில் அவர்கள் கழித்த நேரம் தான் அதிகம். கரையில் அமர்ந்தபடி கங்கையின் நீர்ப்பெருக்கின் ஆர்ப்பரிப்பில் தன்னை மறந்து மணிக்கணக்காக உட்கார்ந்து கொண்டு இருப்பது ஈஸ்வரனின் மனதிற்கு மிகவும் பிடித்தது. அவருடைய மனதில் இருந்த கவலைகள் குறைந்து மனம் அமைதிப்பட ஆரம்பித்தது.

அன்று அப்படித்தான் அதிக நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தார். அப்துல் பக்கத்திலேயே உட்கார்ந்து கையில் இருந்த சிறு கற்களைத் தண்ணீரில் விட்டெறிந்து சிறு குழந்தை போல விளையாடிக் கொண்டிருந்தான்.

" அங்கிள், உங்களை ஒண்ணு கேக்கலாமா? கோவிச்சுக்க மாட்டீங்களே? " என்று ஆரம்பித்தான். இப்போதெல்லாம் "ஸாப்" என்று அழைக்காமல் அங்கிள் என்றுதான் அழைக்கிறான். ஈஸ்வரனுக்கும் அதுதான் பிடிக்கிறது.

" கேளு, கேளு, என்னுடைய ஒவ்வொரு நாளின் பெரும்பான்மை நேரத்தையும் உன்னோட தான் கழிக்கிறேன். என்னுடைய ஒரே பேச்சுத்துணை நீ மட்டும்தான். உன் கிட்ட நான் ஏன் கோவிச்சுக்கப் போறேன் "

" உங்களைப் பாத்தா நல்லா இருக்கற மாதிரி தானே இருக்கீங்க? நீங்க எதுக்கு இந்த முக்திபவனில் வந்து தங்கியிருக்கீங்க? வேறு யாராவது ரொம்ப முடியாமல் இருக்கறவங்களுக்குத் துணையா வந்த மாதிரியும் தெரியலை. அப்படி வந்திருந்தா அவரைத் தனியா விட்டுட்டு இந்த மாதிரி நாள் முழுக்க வெளியே சுத்த மாட்டீங்களே? " என்று தன் மனதில் பல நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தை எடுத்து வெளியே வைத்தான்.

" நீ நெனைக்கறதுல தப்பே இல்லைப்பா. நான் தனியாத்தான் வந்திருக்கேன். எனக்கு மூளையில் கட்டி இருக்கு. ஆபரேஷன் பண்ணி சரி பண்ணலாம்னு டாக்டர் சொன்னார். ஆனாலும் ஆபரேஷனுக்கு
அப்புறமும் சரியாகுமான்னு கியாரண்டி தரமுடியாதுன்னும் டாக்டர் என் தம்பி கிட்ட சொல்லிட்டிருந்தது தற்செயலா என் காதில் விழுந்துருச்சு. நிறையப் பணமும் செலவழிச்சு, உடம்பும் சரியாகாம மத்தவங்களுக்கு பாரமா இருக்க வேண்டாம்னு கெளம்பி வந்துட்டேன்.

அப்பப்ப எனக்குத் தாங்கமுடியாத அளவு பயங்கரமாத் தலைவலி வரும். அதிக நாட்கள் உயிரோடு இருக்கமாட்டேன்னு தான் டாக்டர் என்னோட தம்பியிடம் சொல்லிட்டிருந்தாரு. அதனால தான் யாரிடமும் சொல்லிக்காம இங்கே வந்துட்டேன். இங்கே வந்ததில் இருந்து நிம்மதியா இருக்கு. தலைவலியும் ரொம்ப வரலை" என்று சொன்னார்.

" அதெல்லாம் சரியாகிடும் அங்கிள். சீக்கிரமே நீங்க குணமாயிடுவீங்க. உங்க ஊருக்குத் திரும்பிடுவீங்க. என் மனசுல அப்படித்தான் தோணுது" என்றான் அப்துல்.

" உன் மனசுக்குப் பிடிச்ச மாதிரி நீ யோசிக்கறே. ஏன்னா உன் மனசு நல்ல மனசு. சரி, எனக்கு வயசாயிடுச்சு. என்னை விடு. உன்னைப் பத்தி சொல்லு. நீ எவ்வளவு படிச்சே? உன் குடும்பத்துல எத்தனை பேரு? நீ ஏன் இந்தச் சின்ன வயசுல ரிக்ஷா ஓட்ட வந்தே? அதையெல்லாம் என் கிட்ட சொல்லு"

" அது வந்து அங்கிள், என் குடும்பம் ரொம்பப் பெருசு. எனக்கு மூணு தங்கச்சி, ஒரு தம்பி, எங்கப்பா தான் ரிக்ஷா ஓட்டிட்டிருந்தாரு. இப்போ அவரால முடியலை. ரொம்ப இருமல். உடம்பு கெட்டுப் போச்சு. அதுனால வீட்டுக்குப் பக்கத்துல அவருக்காக ஒரு கடை வச்சுக் கொடுத்துருக்கோம். அதை அப்பா பாத்துக்கறாரு. அம்மா முடிஞ்ச அளவு பெரிய வீடுகளுக்குப் போயி, வீட்டுவேலை, தோட்ட வேலை செய்யறதுல கொஞ்சம் வருமானம் வருது. இதெல்லாம் சேந்தும் எங்க குடும்பத்துக்குப் பத்தலை. தம்பி, தங்கச்சிங்க கவர்ன்மென்ட் ஸ்கூல் போறாங்க. அவங்களையாவது நல்லாப் படிக்க வைக்கணும் . நான் பத்தாவது வரை படிச்சேன். பத்தாவது முடிச்ச அந்த சமயத்தில் தான் அப்பாவுக்கு ரொம்ப முடியாமல் போச்சு. நான் படிப்பை நிறுத்திட்டு, ரிக்ஷா ஓட்ட ஆரம்பிச்சேன் " என்று தன்னுடைய சோகக் கதையைச் சொல்லி முடித்தான்.

" நீ குடும்பத்தைப் பாத்துக்கறது நல்ல விஷயம். படிப்பை நிறுத்தினதைக் கேட்டுத் தான் மனசு கஷ்டமா இருக்கு. பிரைவேட்டா எக்ஸாம் எழுதறயா? நான் உனக்கு உதவி செய்யறேன் " என்று சொல்லி விட்டுத் தன்னுடைய அறிவுரையை நினைத்துச் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தார்.

" நானே இன்னும் எத்தனை நாட்கள் இந்த உலகத்தில் உயிரோடு இருப்பேன்னு தெரியாமல் உனக்கு உதவி செய்யறதாச் சொல்லறேனே? எனக்கே இது அபத்தமா இருக்கு கேக்க" என்று சொல்லி விட்டு மீண்டும் சிரித்தார்.

" அப்படி சொல்லாதீங்க. உங்க மூலமா நான் படிக்கணும்னு இறைவன் நினைச்சா, நான் நிச்சயமாப் படிப்பேன் பாருங்க. அதுக்காகவே நீங்க நிறைய வருஷங்கள் உசுரோட இருப்பீங்க" என்றான்.

" சரி, ஜோக்கடிக்காதே. இன்னும் ஒரு முக்கியமான விஷயம். நான் வந்து முக்திபவனில் ரூமெடுத்து ஒரு வாரம் முடிஞ்சுருச்சு. இன்னும் ஒரு வாரத்துக்கு அப்புறம் உயிரோட இருந்தால் ரூமைக் காலி பண்ணனும். எனக்குத் தங்க எங்கேயாவது இடம் பாத்துத் தரயா? இந்த ஊர் எனக்குப் பிடிச்சிருக்கு " என்று அப்துலிடம் உதவி கேட்டார்.

" கண்டிப்பா நான் பாத்துத் தரேன். எங்க வீட்டுப் பக்கத்துலயே சின்னதா ஒரு ரூம் பாத்துத் தரேன். என்ன, ரொம்ப வசதியால்லாம் இருக்காது"

" அதெல்லாம் எனக்குத் தேவையும் இல்லை. தங்கற இடம் பத்தின கவலையும் இப்போதைக்கு விட்டது" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினார் ஈஸ்வரன்.

அங்கே சென்னையில் ஈஸ்வரனுக்கான தேடல் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்று நாமும் எட்டிப் பார்க்கலாம்.

மீண்டும் ஒருமுறை மனஸ்வி, நமஸ்வி, ஆயுஷ், தர்ஷன் நான்கு பேரும் சந்தித்துக் கொண்டார்கள். இந்த முறை ஈகா தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்த்து விட்டு அருகிலிருக்கும் பேரங்காடியில் அதாவது எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ( express avenue mall) தான் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள்.

" எவ்வளவு தூரம் நமக்கு ஸக்ஸஸ் கெடைச்சிருக்குன்னு பாக்கலாமா? " என்று ஆரம்பித்தான் தர்ஷன்.

" யெஸ், அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணி அடுத்து என்ன செய்யப் போறோம்னு இன்னைக்கு முடிவு எடுத்துரலாம். மனஸ்வி, நமஸ்வி சந்தேகப்பட்டது சரி தான். சைந்தவி நிச்சயமாக ஏழைப் பொண்ணு இல்லை. பிறக்கும் போதே பணக்காரப் பெற்றோருக்கு ஒரே மகளாகத் தான் பிறந்திருக்காங்க. ஸோ அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்த ஏழைப் பொண்ணு நிச்சயமாக சைந்தவியா இருக்க முடியாது " என்றான் தர்ஷன்.

" பின்ன பேரு எப்படி ஒரே பெயரா இருக்கு. தற்செயலான நிகழ்வுன்னு மனசு நம்ப மறுக்குது" என்று முணுமுணுத்தாள் நமஸ்வி.

" அது தான் குழப்பமா இருக்கு. ஏன்னா சைந்தவியைப் பத்தி நானும், ஆயுஷும் கஷ்டப்பட்டு நிறையத் தகவல்களைச் சேகரிச்சுட்டு வந்திருக்கோம். அந்தத் தகவல்களைக் கேட்டு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. சைந்தவியின் அம்மா, அப்பா ரெண்டு பேரும் டாக்டர்கள். அதுவும் இதய சிகிச்சை நிபுணர்கள், கார்டியாலஜிஸ்ட் ( cardiologist) போதுமா? சைந்தவி அவங்களுக்கு ஒரே பொண்ணு. படிச்சது ஊட்டி கான்வென்ட். அப்புறம் இஞ்சினியரிங் படிச்சுட்டு எம். பி. ஏ. பண்ணிருக்காங்க. அதுவும் புகழ்பெற்ற அஹமதாபாத் பி ஸ்கூலில் , இந்தியாவின் நம்பர் ஒன் பொஸிஷனில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட், அகமதாபாத்தில் படிச்சிருக்காங்க. இந்த கம்பெனியில் சேந்து பல தடவை ஆன் ஸைட், அதாவது வெளிநாட்டு போஸ்ட்டிங்கில் போயிருக்காங்க. பிறந்ததில் இருந்து எல்லாமே உயர்ந்த ரகம் தான். அவங்க எப்படி ஏழையா இருக்க முடியும்? அப்படிப்பட்ட பணக்காரப் பொண்ணு உங்க வீட்டுக்கு வந்து ஏழைப் பொண்ணா ஏன் நடிக்கணும்?

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் உங்க கம்பெனி எக்ஸிக்யூடிவான சைந்தவியோட அம்மா பேர் வைஜயந்தி இல்லை. டாக்டர்.காதம்பரி. போதுமா? " என்று நிறுத்தினான் தர்ஷன்.


தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: ஏகாந்த வீணை 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
அருமை அம்மா 🩵🩵🩵🩵🩵🩵🩵சைந்தவி யாரு பொண்ணுன்னு தெரிஞ்சாலும் ஏதோ ட்விஸ்ட் இருக்கனும் 🤔🤔🤔🤔🤔🤔
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
அருமை அம்மா 🩵🩵🩵🩵🩵🩵🩵சைந்தவி யாரு பொண்ணுன்னு தெரிஞ்சாலும் ஏதோ ட்விஸ்ட் இருக்கனும் 🤔🤔🤔🤔🤔🤔
நன்றி🙏💕
 

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
சைந்தவி ஏன் ஏழைப் பொண்ணு ன்னு சொல்லிட்டு வந்தா, ஏதோ இருக்கு🤔🤔🤔🤔
 
Top Bottom