• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்றென்றும் வேண்டும் -6

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
19
என்றென்றும் வேண்டும்-6

தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் 'குசா' என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசன் பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள்.

தர்ப்பை புல்
, இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது. தர்ப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும், நுனியில் ருத்ரனும் இருப்பதாக ஐதீகம். தர்பை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது.

இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது. நமது உடலில்
, வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.

தர்பைக்கு அக்னி கற்பம் என்பது பெயர். இந்த புல்
, தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர்.

அக்கிரஸ்தூலமுடையது பெண் தர்பை
, மூலஸ்தூலம் உடையது அலி தர்பை, அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது, ஆண் தர்பை.

ஹோம குண்டங்களில்
, யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும்.

விஷேஷ காரியங்கள் நடத்தும் போது வலது கை மோதிர விரலில் பவித்திரம் என தர்பை புல்லை அணிவிப்பார்கள் மோதிர விரல் மூளையுடன் சம்பந்தப்பட்டது .



ஆகவே தர்பை பவித்ரம் போடும் பொது
, பிரபஞ்ச சக்தி, விரல் மூலம் மூளைக்கு செல்கிறது; உடலிலும் பரவும். கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தர்பையை போடுவது வழக்கம்.



தர்ப்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும்
, பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்த வேண்டும்,

தர்ப்பை, உஷ்ணமும் அதிக வேகமும் உடையது. அதற்கு மின்சாரத்தை கடத்தும் சக்தி உண்டு, எல்லா ஆசனங்களை காட்டிலும், தர்பாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலனை தரும். அசுப காரியங்கள் ஒரு தர்ப்பையாலும், சுப காரியங்களுக்கு இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களாலும், தேவ காரியங்களுக்கு 5 தர்ப்பைகளாலும், சாந்தி கர்ம காரியங்களுக்கு 7 தர்ப்பைகளாலும் மோதிரம் முடிய வேண்டும்.



தர்ப்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில் தான் வளரும். தர்ப்பை கதிர் வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹண காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க
, தர்ப்பையை பயன்படுத்துகிறோம். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.



தர்ப்பையில் மருத்துவ குணங்கள் பல உள்ளன.
தர்ப்பைப் புல்களின் காற்று பட்ட இடங்களில் தொற்று நோய் ஏற்படாமலிருக்கும்



இந்தப் புல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. குடிநீரில் தர்ப்பைப் புல்லை துண்டாக்கிப் போட்டு குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும்
, எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆற வைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.

சிறுநீரகம்
, கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்ப்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் அந்தப் பிரச்னைகள் நீங்கும். அதோடு, சிறுநீரகக் கற்களையும் வெளியேற்றும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்ப்பைப் புற்களைப் போட்டு வைத்தால் அவை கெட்டுப் போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.தர்ப்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல் சூடு தணியும்; மன உளைச்சல் நீங்கும்; நல்ல உறக்கம் கிடைக்கும்; ஆரோக்கியம் நீடிக்கும்.



விஸ்வநாதனின் 'உனக்கு என்ன தேவையோ அதை நீயே பாத்துக்கோ' என்ற வார்த்தைகளை கேட்டதில் இருந்து காயத்ரிக்கு கோபமும் அழுகையும் பொங்கிப் பொங்கி வந்தது.

'என்னமோ நேத்திக்கு நான் உன்னை அப்படி லவ் பண்றேனாக்கும். உன்னை உயிர் போற வரைக்கும் பாத்துப்பேனாக்கும் அப்படி இப்படின்னு சொல்லிட்டு இன்னிக்கி இப்படி சொல்றதென்ன? எல்லாம் அவாவா காரியத்துக்கு தான் போல இருக்கு...'

அந்த நேரத்தில் தான் அவன் கைகளில் நெகிழ்ந்திருந்தது வசதியாக மறந்து போய் விட்டது அவளுக்கு.

அதுவும் அவளை நகர்ந்து உட்கார் என்று சொன்னது தாங்கவேயில்லை அவளுக்கு. நினைக்க நினைக்க கண்ணீர் பொங்கி வர அவன் எதிரில் அழுது விடக் கூடாதென்று ரோஷத்தில் கண்ணீரை அடக்கி கொள்ள முகமெல்லாம் சிவந்து போனது.

விஸ்வநாதன் ஓரிரு முறை அவளைப் பார்த்தாலும் சமாதானம் செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

வாசலை அவ்வப்போது எட்டிப் பார்த்தபடி டிவியில் ஆழ்ந்து விட்டான். இருவரும் தனித்தனியாய் ஆளுக்கொரு திக்கில் உட்கார்ந்து இருக்க அம்மாவும் அத்தையும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

பத்மாவுக்கு இருவரின் முகத்தையும் பார்த்ததுமே என்னவோ சரியில்லை என்று தோன்றியது.

"என்னமா! ஏன் என்னவோ போல இருக்கே? உடம்பு கிடம்பு சரியில்லையா? அம்மா அப்பா ஞாபகம் வந்துடுத்தா?"

அத்தை கனிவாய் விசாரிக்க காயத்ரிக்கு கஷ்டப்பட்டு அடக்கி வைத்த கண்ணீர் வெளியே வந்து விடும் போல இருந்தது.

மௌனமாய் 'ஒன்றும் இல்லை' என்பது போல தலையாட்ட பத்மா விஸ்வநாதனை முறைத்தார்.

"ஏண்டா! புதுசா கல்யாணம் ஆனவானா அங்க இங்க போயிட்டு வருவா? குழந்தையை எங்கயும் கூட்டிண்டு போகல நீ..! நாளைக்கு அவளை அவ அம்மா ஆத்துக்கானும் அழைச்சிண்டு போ. ஜானகியும் வெங்கடேசனும் அன்னிக்கே ஆத்துக்கு அழைச்சிட்டு போனா."

பத்மா உத்தரவிட்டதும் விஸ்வநாதன் காயத்ரியை 'உனக்கு தான் என்னோட வெளில வரது பிடிக்காதே...' என்பது போல பார்க்க

"குழந்தையை ஏண்டா முறைக்கிறே? நான் தான் சொல்றேன். நாளைக்கு நீங்க ரெண்டு பேருமா போய்ட்டு வாங்கோ. காயத்ரி..! நீ இப்பவே உங்க ஆத்துக்கு நாளைக்கு வரோம்னு போன் பண்ணி சொல்லிடு." என்று சொன்னவர் அதோடு பிரச்சனை தீர்ந்தது என்று சமையல் அறைக்கு போய் விட்டார்.

காயத்ரியும் அதன் பிறகு விஸ்வநாதனின் பக்கத்தில் நிற்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு மாமியாரின் பின்னால் போய் விட அதைப் பார்த்த விஸ்வநாதன் புன்னகைத்துக் கொண்டான்.

இரவும் டிபன் சாப்பிடும் போது அத்தைக்கும் மாமியாருக்கும் நடுவில் தற்செயலாய் செய்வது போல உட்கார்ந்து கொண்டாள்.

விஸ்வநாதன் அதைப் பார்த்தும் கவனிக்காதவன் போல அலட்டிக் கொள்ளாமல் சாப்பிட்டான்.

பத்மா அன்று ரவா உப்புமா செய்திருந்தார். ஏற்கனவே துக்கத்தில் இருந்த காயத்ரிக்கு ரவா உப்புமாவைப் பார்த்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது.

அரவிந்த் அன்று அவன் பிரெண்டோடு சினிமா போய் விட்டு வெளியே சாப்பிட்டு விட்டு வந்து விடுவதாக சொல்லியிருந்ததால் அவளுக்கு கை கொடுக்க ஆளில்லை.

அவள் விழிப்பதை பார்த்ததும் விஸ்வநாதனுக்கு சிரிப்பு வந்து விட சாப்பிடுவது போல பாவனையில் தலையை குனிந்து கொண்டான்.

காயத்ரி மாமியாரைப் பார்த்து "அம்மா! நீங்க இந்தாத்துல இந்த பூரி, சப்பாத்தி, மசால் தோசை இதெல்லாம் பண்ண மாட்டேளா?" என்று சோகமாய் கேட்க பத்மாவுக்கே பாவமாய் இருந்தது.

"கல்யாண வேலைல மாவு அரைக்கல. இன்னிக்கி சாப்டுடு (சாப்பிட்டு விடு) என்ன? நாளைக்கு நான் உனக்கு பிடிச்சதா பண்றேன். சரியா?" என்று தன்மையாய் சொல்ல காயத்ரி தலையாட்டிக் கொண்டாள்.

புதிதாய் திருமணம் முடித்து புகுந்த வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு அந்த சூழல் பழக சில நாட்களாவது ஆகும். அந்த நேரம் எவ்வளவுக் கெவ்வளவு புகுந்த வீட்டில் புரிதலும் அனுசரணையும் கிடைக்கிறதோ அவ்வளவு வேகமாக அவள் புகுந்த வீட்டோடு ஒன்றி விடுவாள்.

இந்த சின்ன ஆனால் முக்கியமான புரிதல் பத்மாவிடம் இருந்ததால் அவரால் காயத்ரியிடம் அன்பாக பேச முடிந்தது.

பெரியவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்து படுக்கப் போய் விட அரவிந்த் வரும் வரை கூடத்திலேயே டிவி பார்த்தபடி அமர்ந்திருந்தான் விஸ்வநாதன்.

அரவிந்த் வந்த பிறகு அவனை சாப்பிட்டானா என்று கேட்டு அவனும் படுக்கப் போன பிறகே தங்கள் அறைக்கு வந்தான்.

காயத்ரி எப்போதோ அவர்கள் அறைக்கு போய் விட்டிருந்தாள். படுக்கையில் தன்னுடைய இடத்தில் படுத்துக் கொண்டவளுக்கு என்னென்னவோ சிந்தனைகள். அவளால் விஸ்வநாதனை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு நேரம் அன்பைப் பொழிகிறான். இன்னொரு நேரம் என்னடாவென்றால் கண்டு கொள்வதே இல்லை.

அவன் கோபித்துக் கொண்டால் கூட பரவாயில்லை என்று தோன்றியது.

நேற்று உனக்காக உயிரையே விடுவேன் என்று சொல்லி விட்டு இன்று உன் அக்கௌன்ட்ல பணம் போடறேன். எதுக்கும் என்னை எதிர்பாக்காதே என்கிறான்.

பலவற்றையும் யோசித்துக் கொண்டு ஒருக்களித்து படுத்திருந்தவள் விஸ்வநாதன் உள்ளே வந்து கதவை சாத்தி தாழ் போட்ட பிறகும் திரும்பவே இல்லை. அவன் வந்து கட்டிலில் அமர அப்போதும் முதுகைக் காட்டியபடி படுத்திருந்தாள்.

விஸ்வநாதன் வரும் போதே இதை எதிர்பார்த்திருந்ததால் கட்டிலில் அமர்ந்து படுத்திருந்தவளை அப்படியே தூக்கி தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டான்.

தான் தூக்கியதும் திமிறுவாள். கத்துவாள் என்று அவன் நினைத்திருக்க காயத்ரி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஓவென்று அழுதாள்.

விஸ்வநாதனுக்கே ஒரு மாதிரியாகி விட ஒரு கையால் அவளைத் தாங்கி கொஞ்சம் சமாதானம் ஆகும் வரை முதுகில் தட்டிக் கொடுத்தான்.

காயத்ரி கொஞ்சம் அழுகை குறைந்ததும் "இந்த ரூம்ல என்னவோ இருக்குன்னா." என்று விசும்பியபடி சொல்ல விஸ்வநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"இல்ல அத்தை இன்னிக்கி விக்ரமாதித்தன் கதை சொன்னா. அவரோட சிம்மாசனத்துல உக்காந்துண்டா அவரோட பரோபகார குணம் அதுல உக்காந்துக்கறவாளுக்கும் வந்துடுமாம்.

அது மாதிரி நீங்க இங்க வந்தா மட்டும் தான் என் மேல பாசமா இருக்கேள்..."

உதட்டை பிதுக்கியபடி அவள் விசும்ப விஸ்வநாதன் வாய் விட்டே சிரித்து விட்டான்.

"என் பட்டூ குட்டிக்கு இப்ப என்ன கோபம்?" என்று அவள் கண்ணீரை துடைத்து கன்னத்தை வருடியபடி புன்னகையுடன் கேட்க "பாத்தேளா! சாயந்தரத்துலேருந்து சும்மா இருந்துட்டு இங்க வந்தோன்னே (வந்த உடனே) தானே உங்களுக்கு கேக்கணும்னு தோணறது. அதான் சொன்னேன்.." என்று காயத்ரி குறைபட்டுக் கொண்டாள்.

"சரி.. இப்ப என்ன கோவம் நோக்கு..? அதை முதல்ல சொல்லு?" என்று விஸ்வநாதன் அவள் கோபத்தின் காரணம் புரிந்தும் அவளிடமே தெரியாதது போல கேட்டான்.

அவனுக்கு அவளிடம் சில விஷயங்களை தெளிவு படுத்த வேண்டியிருந்தது.

"நீங்க இந்த ரூமுக்கு வந்தா என்னை விடறதே இல்லை. மடில வெச்சுண்டோ கட்டிண்டோ என்னை கொஞ்சிண்டு இருக்கேள். அன்னிக்கி தூக்கத்துல நான் புரண்டு சித்த தள்ளி படுத்துண்டப்போ கூட நீங்களா கிட்ட வந்து என்னை கட்டிண்டேள்..."

அவள் பட்டியல் இட அவன் அவளை அணைத்து "ஆமாண்டா பட்டு..! உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும் மொக்கள குட்டி...." என்று கொஞ்சினான்.

"அப்போ ஏன் நீங்க சாயந்திரம் உங்க பக்கத்துல உக்காந்தப்போ தள்ளி உக்காரு. உன் பாட்டை நீயே பாத்துக்கோன்னு நிஷ்டூரமா சொன்னேள்? அன்னிக்கும் இப்படி தான். பைக்ல போறச்சே தோளிலருந்து கையை எடுன்னு சொன்னேள் ..?"

சொல்லும் போதே காயத்ரிக்கு துக்கம் பொங்கியது.

பெண்கள் எதையும் லேசில் மறக்க மாட்டார்கள். அதுவும் அவர்களை நோகடிக்கும் விஷயத்தை குறிப்பாக கணவன் செய்தால் அப்பாவியான பெண்டாட்டியாக இருந்தாலும் கேட்பாள். அப்படியிருக்க காயத்ரி மட்டும் விதிவிலக்கா என்ன?

அவளை யாரும் இதுவரை இப்படி சொன்னதில்லை. அதுவே அவள் ஈகோவை காயப்படுத்தியது.

அவள் குற்றச்சாட்டில் விஸ்வநாதனின் முகம் ஒரு நிமிடம் சுருங்கியது. அவளுக்கு தன்னோடு வெளியே வருவது அவ்வளவு பிடித்தமில்லை என்பது அவனுக்கு நன்றாக தெரியுமே..!

பிறகு எப்படி அவளோடு மாலோ சினிமாவோ போவான்? சரி நீயே போயிட்டு வா என்றாலும் குற்றம் கண்டு பிடித்தால் என்ன தான் செய்வது?

ஆனாலும் அதைப் பற்றி புது மனைவியிடம் பேச மனம் வரவில்லை. அதனால் அவன் சொல்ல வந்த இன்னொரு விஷயத்தை மட்டும் அவளிடம் சொல்ல முடிவு செய்தான்.

"பட்டூ! நீ நடுக்கூடத்துல ட்ரெஸ் மாத்திப்பியோ..?"

காயத்ரிக்கு அவன் கேள்வி எதற்கு என்று புரியவில்லையென்றாலும் அவன் கேள்வியில் முகம் சுளித்தாள்.

"அய்ய! என்னன்னா இப்படி கேக்கறேள்? யாராவது நடுக்கூடத்துல ட்ரெஸ் மாத்திப்பாளா என்ன?"

"ஏன் செய்ய மாட்டே?"

விடாமல் கேள்வி கேட்டவனை ஏற இறங்க பார்த்து "எதையெதை எங்க செய்யறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையான்னா..?" என்று காயத்ரி அவன் எதிர்பார்த்த பதிலை சொல்லியிருந்தாள்.

"அப்ப எதையெதை எங்க செய்யணும்னு விவஸ்தை இருக்கோன்னோ? அப்போ கூடத்துல உக்காந்து நாம கொஞ்சிண்டு இருந்தா நன்னாருக்குமா சொல்லு?"

காயத்ரி அவன் கேள்வியில் திருதிருவென்று விழிக்க விஸ்வநாதன் முகம் இப்போது தீவிரமானது.

"பட்டூ..! எங்க அப்பா இல்லாத நிலைமைல எனக்கு நெறய பொறுப்பு இருக்கு. அம்மாவும் அத்தையும் வயசானவா. என்னை நம்பி தான் இருக்கா.

தம்பிய அப்பா ஸ்தானத்துல இருந்து நான் தான் பாத்துக்கணும். எந்த நேரம் வேணாலும் யார் வேணாலும் என்னை தேடிண்டு வருவா.

நான் செய்யற வேலைக்கு நடுக்கூடத்துல உன்னோட நெருக்கமா உக்காந்து பேசிண்டு இருக்க முடியாது. அது நன்னாவும் இருக்காது."

காயத்ரி அவன் சொன்னதை யோசித்தபடி அமர்ந்திருக்க விஸ்வநாதன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு

"நம்மளோட உறவும் அந்தரங்கம் தான் பட்டூ. எப்படி மத்தவா எதிர ட்ரெஸ் மாத்திக்க முடியாதோ அதே மாதிரி நம்ம அன்பையும் காட்டிக்க முடியாது. காட்டிக்கவும் நேக்கு பிடிக்கல.

எல்லார் எதிர்க்கையும் கையைப் பிடிச்சுண்டாலோ பேஸ்புக்ல ஐ லவ் யூன்னு சொன்னாலோ தான் உன் மேல அன்பிருக்குன்னு அர்த்தமில்ல.

பொது இடத்துல கட்டிண்டு செலஃபீ எடுத்து போஸ்ட் போட்டா தான் உன்னை எனக்கு பிடிக்கும்னும் அர்த்தமில்ல. நம்ம அந்தரங்கம் புனிதமானது. அது நமக்கு மட்டும் புரிஞ்சா போறும்.."

அவன் மாலையில் இருந்து சொல்ல நினைத்ததை சொன்னான்.

"எல்லாரும் அப்படித்தானே பண்றா..? நீங்க மட்டும் புதுசா சொல்றேள்?"

காயத்ரி இந்த காலப் பெண்ணாக வளர்ந்தவள். இதிலென்ன தப்பிருக்கு என்ற எண்ணம் கொண்டவள்.

"பட்டூ.. கை மூடி இருக்கிற வரைக்கும் தான் அது மேல கவர்ச்சி. நாம நாள் பூரா இப்படி ஈஷிண்டு இருந்தா கொஞ்ச நாளுல அலுத்துப் போய்டும்.

முன்னெல்லாம் ஆம்படையானும் பொண்டாட்டியும் தனியா பேசிக்கணும்னா கூட ராத்திரில தான் முடியும். நாள் முழுக்க அவா கவனிக்க வேண்டிய வேலைகள் மேல தான் அவா கவனம் இருக்கும்.

ஆம்பளைக்கு சம்பாதிச்சிண்டு வர வெளி வேலை இருந்தா பொம்மனாட்டிகளுக்கு ஆத்துல காரியம் சரியா இருக்கும்.

எப்போ பாத்தாலும் எல்லாம் அவா இழைஞ்சிண்டு இருக்க முடியாது. அதனால அந்த ஈர்ப்பு நீடிச்சு இருந்தது.

இது தெரியாம இப்ப எல்லாம் வெட்டவெளிச்சமா போனதால தான் டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசல்ல கியூ நிக்கறது...”

"இதை நீங்க அப்பவே சொல்லியிருக்கலாமோனோ? ஏன் சொல்லாம இருந்து என்னை அழ விட்டேள்?"

காயத்ரியின் முகம் இன்னும் தெளியவில்லை.

அவள் கேள்வியில் விஸ்வநாதன் புன்னகைத்து

"சொல்லியிருக்கலாம் தான். ஆனா இப்படி உன்னை கட்டிண்டு மடில உக்கார வெச்சு சொல்லிருக்க முடியுமா? கோவத்துல சுருங்கி இருக்கிற இந்த கண்ணை இப்படி விரிய வைக்க முடியுமா..?" என்று அவள் கண்ணில் உதடுகளை பதித்து

"நுனில நிக்கற இந்த கோவத்தை இப்படி கிள்ளி எடுக்க முடியுமா..? என்று அவள் மூக்கை லேசாய் கடித்து

"உம்முனு இருக்கிறதால குவிஞ்சுண்டு இருக்கிற இந்த உதட்டை இப்படி கவனிக்க முடியுமா..?"

என்று கேட்டு அவள் உதடுகளில் தன் உதடுகளை வைக்க அதற்கு மேல் தனக்கு கோபம் இருந்ததா என்றே காயத்ரிக்கு மறந்து போனது.
 

Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும் -6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom