என்றென்றும் வேண்டும்- 25
காயத்ரிக்கு இப்போது நான்காம் மாதம். காலை எழுந்ததும் வாந்தி எடுப்பது ஓரளவு குறைந்திருந்தது. தினமும் விஸ்வநாதன் காலையில் அவளுக்கு பால் காபி குடித்தால் தான் வாந்தி வருகிறது என்று பழ ஜூஸை செய்து தருவான்.
அதன் பிறகு அவள் வாய்க்கு புளிப்பாக இருக்கும் உணவு வகைகள் தான் பிடிக்கிறது என்று கலந்த சாத வகைகளை செய்து தருவார் பத்மா.
புளிசாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம் என செய்து அதற்கு காய்கள் தான் கொடுத்து அனுப்புவார். இடையில் சாப்பிட சத்தாக சுண்டல் வகைகள் கொடுத்து அனுப்புவார். பழங்களை வெட்டி வைப்பார்.
மொத்தமாக கடையில் வாங்கி சாப்பிடுவதையே தடா போட்டிருந்தனர்.
அப்படியும் அவளுக்கு பிடிக்கும் என்று பத்மா அக்கம்பக்கம் கேட்டு சிலவற்றை செய்ய காயத்ரிக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. இனி அந்த பண்டங்கள் எதுவுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.
பிறகு பத்மா பாட்டி இவர்களின் ஆச்சாரத்திற்கு அவர்கள் உட்கார்ந்து பூண்டு உரிப்பது, வெங்காயம் அரிவது எல்லாம் எவ்வளவு கஷ்டம் என்று அவளால் உணர முடிந்தது.
இதையெல்லாம் சாப்பிட பழகிய அவளாலேயே அசைவம் சாப்பிடுபவர்கள் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட சில சமயம் கஷ்டமாக இருக்கிறதே.
குடும்பமே அவளுக்கு வேலை செய்வதை ஜானகி தன் கணவரை கவனித்தபடி மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பார்.
முன்பெல்லாம் மாப்பிள்ளை என்று மரியாதையுடன் விலகி நின்றவர் இப்போது விஸ்வநாதன் தனக்கு ம(ரு)று மகன் என்று அவன் மேல் அவ்வளவு பிரியம்.
வெங்கடேசன் அத்தையோடும் பத்மாவோடும் ஒரே ஊர்காரர்களாய் நெருங்கி விட இப்போது அந்த வீட்டில் புதிய கூட்டணி.
நளினா மீண்டும் பணியில் சேர்ந்து விட்டிருந்தாள். இப்போது நளினா அம்மா வீட்டில் இருக்க அவளுக்கு கணவனிடம் இருந்து டிவோர்ஸ் நோட்டீஸ் வந்திருந்தது.
அதை பார்த்ததும் நளினாவின் முகத்தில் ஏளனமாய் ஒரு புன்னகை. அதில் கையெழுத்திட்டு மறு தபாலிலேயே அனுப்பி வைத்தாள்.
அதை அனுப்பியதும் அவளுக்கு எதோ பெரிய சிறையில் இருந்து விடுதலையான உணர்வு.
நளினாவின் திருமண வாழ்க்கை எப்படி ஆரம்பித்து எப்படி முடிந்தது என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்த காயத்ரி தங்கள் அறையில் உடை மாற்ற செல்ல தரையில் ஒரு பைல் விழுந்திருந்தது.
அதில் அவள் அப்பா இருந்த மருத்துவமனையின் பெயர் போட்டிருக்கவும் அப்பாவின் உடல்நிலை பற்றி டாக்டர்கள் கொடுத்த ரிப்போர்ட் எதுவும் விஸ்வநாதன் தன்னிடம் இருந்து மறைக்கிறானோ என்று நினைத்தாள்.
வேகமாக அதை பிரித்துப் பார்க்க அத்தனையும் விஸ்வநாதன் அவருக்கு கட்டிய பணத்தின் ரசீதுகள்.
அனைத்தும் தொகுத்து வைக்கப் பட்டிருந்தது. விஸ்வநாதன் தன் உடையின் கீழே ஒளித்து வைத்திருந்த பைல் என்பதால் இதுவரை அது யாருக்கும் தெரியவில்லை.
அதுவரை அப்பாவின் உடல்நலனை பற்றியே யோசித்தவளுக்கு அப்போது தான் பணத்திற்கு என்ன செய்தான் என்ற சிந்தனை வந்தது.
அதுவரை அவளுக்கு கேட்கவும் தோன்றவில்லை. அவனும் எதுவும் சொல்லவில்லை.
அப்பாவை பெரிய மருத்துவமனையில் சேர்த்ததும் முதலில் அவர் உடல்நிலை அறுவை சிகிச்சையை தாங்குமா என்று மருத்துவர்கள் பார்க்க வேண்டியிருந்தது.
ஏகப்பட்ட பரிசோதனைகள் மருந்துகள் என்று அந்த ஒரு வாரத்திலேயே கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு மேல் செலவு ஆனது.
அதன் பிறகு அடைப்புகள் பெரிதாக இருப்பதால் ஆஞ்சியோ செய்தாலும் சரி வராது என்று மருத்துவர்கள் ஒரு மனதாய் சொல்லி விட்டிருந்தனர்.
பைபாஸ் ஆபரேஷன் செய்வது தான் ஒரே வழி என்றும் சொல்லி அதற்கு ஆகும் செலவு ஐந்து லட்சம் என்றும் விஸ்வநாதனின் தோற்றத்தை பார்த்து அவனால் கட்ட முடியுமோ என்ற ஐயத்தில் முன்கூட்டியே சொல்லியிருந்தனர்.
முதலமைச்சர் இன்சூரன்ஸ் திட்டத்தில் அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்து கொள்ளலாம் என்று கூட சொல்லியிருந்தனர்.
விஸ்வநாதன் அவர்கள் முகத்தில் இருந்தே புரிந்து கொண்டவன் அட்வான்ஸாக ஐந்து லட்சத்துக்கு ஆறு லட்சமே கட்டி விட அதன் பிறகு அவர்கள் பார்வையே மாறியிருந்தது.
அவன் எளிமையான வேட்டியும் குடுமியும் கழுத்திலும் கையிலும் எதுவுமில்லாமல் இருந்த எளிய நிலையை பார்த்து தவறாக எடை போட்டவர்கள் அதற்கு மேல் அவனை பார்த்த பார்வையே வேறு.
அவன் தோற்றமும் பேச்சும் அதன் பிறகு அவர்களை மரியாதையாய் நடத்த வைத்தது.
இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அப்போது காயத்ரி எங்கே இருந்தாள்?
அது மட்டுமா?
அந்த பெரிய மருத்துவமனையில் தன் கணவருக்கு நடக்கும் ராஜ வைத்தியத்தில் மாப்பிள்ளைக்கு எவ்வளவு கடனோ என்று கவலைப்பட்டு ஜானகி கழுத்தில் மஞ்சள் கயிறில் மஞ்சளை கட்டிக் கொண்டு தாலி முதற்கொண்டு அவிழ்த்து எல்லா நகைகளையும் கொண்டு வந்து விஸ்வநாதனிடம் கொடுத்ததும் அவளுக்கு தெரியாது.
அவன் மாமியாரை உரிமையாய் திட்டி அந்த நகைகளை அணிய வைத்ததும் அவளுக்கு தெரியாது. அவன் மனைவிக்கே அவன் வசதி தெரியாத போது மாமியாருக்கு எப்படி தெரியும்?
அவரை உரிமையோடு கையை பிடித்துக் கொண்டு
"சுமங்கலி இப்படி நகையில்லாம நிக்கப்படாதுன்னு அம்மா சொல்லுவா. நீங்க முதல்ல இதெல்லாம் போட்டுக்கோங்கோ, மாமா இருக்கறச்சே இப்படி மூக்குத்தி கூட இல்லாம நிக்கறேளே?
மாமாவை நல்லபடியா ஆக்கி உங்க கைல ஒப்படைக்கிறது என் பொறுப்பு. நீங்க கவலையே படாதீங்கோ." என்று சொன்னதும் தெரியாது.
அவள் அம்மாவும் சொல்லவில்லை. விஸ்வநாதனும் சொல்லவில்லை.
எங்கே எல்லோரும் தான் அவளை குழந்தையாக அல்லவா நினைக்கிறார்கள்?
அந்த பைலில் இருந்த பில்களை எல்லாம் கூட்ட பத்து லட்சம் பக்கம் வந்தது.
அது போக ஒரு மாதம் ஆஸ்பத்திரி தினமும் போனது சாப்பாடு மற்ற செலவுகள் அதோடு இன்று வரை தொடரும் செக் அப் டெஸ்ட் என செலவுகள் எல்லாம் சேர்த்தால் என்று காயத்ரி யோசிக்க அவள் அம்மாவின் கவலையே அவளுக்கும் வந்தது.
கிட்டத்தட்ட பதினோறு லட்சம் கூட இருக்குமே தவிர குறையாது.
அவ்வளவு தொகைக்கு என்ன செய்தார்?
அவள் அப்பா அவளுக்கு கல்யாணத்திற்கு போட்டதே இருபது பவுன் தான். அதற்கே எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று அவளுக்கு தெரியும்.
அம்மாவின் நகையை பாதி புதுப்பித்து போட்டு தானே ஒப்பேற்றினார். கல்யாண செலவுக்கு ஐந்து லட்சம் புரட்ட எவ்வளவு கஷ்டப்பட்டார்?.
இப்போது தான் அவள் சம்பளம் இந்த புது ப்ரொஜெக்ட்டில் சேர்ந்த பிறகு உயர்ந்திருக்கிறதே தவிர அதற்கு முன் அவள் சம்பளம் பதினைந்தாயிரம் தான்.
இப்போது இந்த பில்லை பார்த்ததும் அவள் கணவன் பணத்திற்கு எங்கு அலைந்தானோ என்ன வட்டி கட்டுகிறானோ என்று கவலை வந்து விட்டது.
அந்த பைலை அவன் ஷெல்பிலேயே அடியில் வைத்ததோடு சரி. அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவன் முகத்தில் எதாவது கவலையின் சுவடு தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்படி கடனை அடைப்பது என்று கவலைப்படுகிறானோ என்று அவன் முகத்தை யாரும் பார்க்காத போதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதை விஸ்வநாதன் கவனிப்பதை அவள் கவனிக்கவில்லை.
அன்று இரவு அவள் படுக்க வந்த போது அவளை பக்கத்தில் உட்கார வைத்தவன் செல்லமாய் அவள் தலையை வருடி "என்ன ஓடறது இந்த மண்டைக்குள்ள..?" என்று அன்பாய் கேட்க
அப்போதும் அவன் கவலையோடு இருக்கிறானா என்று அவன் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.
அவள் அப்பா என்னவென்றாலும் அம்மாவிடம் பகிர்ந்து கொள்வதை பார்த்திருந்தவள் விஸ்வநாதன் ஏன் தன்னிடம் இந்த கடனைப் பற்றி மூன்று மாதமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று யோசித்தாள்.
அதை நினைத்தவுடனே அவன் எப்போதும் தன்னை சரிபாதியாக நடத்தியதில்லையே; குழந்தையாக தானே எல்லோருமே அவளை நடத்துகிறார்கள் என்று வருத்தத்துடன் நினைத்தாள்.
இதற்கு ஒரு வழி தெரியாமல் அவனிடம் எதுவும் சொல்வது பயனில்லை என்று முடிவு செய்து கொண்டவள் "ஒண்ணும் இல்லன்னா..." என்று தலையசைத்தாலும் அவள் முகத்தில் இருந்த கலக்கம் விஸ்வநாதனுக்கு கவலையை அளித்தது.
முகத்தை சற்று தீவிரமாக வைத்துக் கொண்ட விஸ்வநாதன் சற்று அழுத்தமான குரலில்
"பட்டு..! என்ன பண்றது நோக்கு? உண்மையை சொல்லு..? எனக்கு பயந்துண்டு சொல்லாம இருக்காதே..? வயித்தை ஏதும் வலிக்கிறதா? இல்ல பசிக்கிறதா..? நான் போய் ஏதானும் சாப்பிட கொண்டு வரட்டுமா? இன்னிக்கி நீ சரியாவே சாப்பிடல..." என்று கவலையாய் முடித்தான்.
சின்ன குழந்தையை விட கைக்குழந்தையாய் பசியைக் கூட சொல்லத் தெரியாதவளாய் அவளை அவன் நடத்த கழிவிரக்கத்தில் அவளுக்கு கண்ணீர் வந்தது.
லேசாய் கண்ணீருடன் ஒன்றும் இல்லை என்பது போல அவள் தலையை இடம் வலமாய் ஆட்ட இப்போது விஸ்வநாதன் நிஜமாகவே பயந்து போனான்.
"பட்டூ..! .என்னடா பண்றது...? வாயைத் திறந்து சொல்லு..." என்று அவளை விட்டு விலகி இருக்க முடியாமல் தூக்கி அவளை மடியில் அமர்த்தி அரவணைத்துக் கொள்ள காயத்ரி எதுவும் சொல்லாமல் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"பட்டு..! என்னன்னாலும் என் கிட்ட பயப்படாம சொல்லு...நான் பாத்துக்கறேன்...நீ கவலைப்படாதே...." என்று சொல்ல காயத்ரிக்கு அவன் மேல் காதல் பெருகியது.
அவளுக்காக கடன் பட்டு அம்மா அப்பாவை தன் வீட்டில் வைத்துக் கொண்டு குடும்பமே அவளை தங்கத்தட்டில் தாங்கி……
இப்படி யார் செய்வார்கள்?
எதுவும் சொல்லாமல் அவனை இறுக்கி கழுத்தில் கட்டிக் கொண்டவள் எட்டி அவன் கன்னத்தில் முத்தம் அழுத்தமாக பதித்தாள்.
அவள் இறுகிய அணைப்பை வேறு விதமான தேடல் என்று நினைத்துக் கொண்ட விஸ்வநாதனுக்கு அப்போது தான் நிம்மதி வந்தது.
டாக்டர் அவளை முதல் முறை பரிசோதனை செய்த போதே அவள் உடல் பலகீனமாய் இருப்பதாய் சொல்லி கவனமாய் இருக்கும்படி சொல்லியிருந்தார்.
அதை நினைத்தவன் ஒரு சிறு முறுவலுடன் அவள் முதுகை வருடி விட்டு "இந்த குழந்தைக்கு அப்புறம் அடுத்ததையும் நாம சட்டுனு பெத்துண்டுடனும்...என்னடா பட்டூ சொல்றே..?
அப்ப தான் நாம பிரீயா இருக்கலாம். ஆத்துல ஒண்ணுக்கு நாலு தாத்தா பாட்டி இருக்கா. அவா பாத்துப்பா ..."
என்று மறைமுகமாய் சமாதானம் சொல்வதாய் நினைத்து அவன் சொல்ல காயத்ரி அவன் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இருந்ததால் தலையை ஆட்டினாள்.
"சரி...! இப்ப படுத்துக்கோ...நான் உன் மேல கை போட்டுண்டு தலையை வருடி விடறேன். தானே தூக்கம் வந்துரும்..."
என்று சொல்ல அதற்கு மேலும் கேள்வி கேட்டு குடைவானோ என்று பயந்தவள் டப்பென்று படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.
புன்னகைத்தபடியே அவள் பக்கத்தில் படுத்துக் கொண்ட விஸ்வநாதன் அவள் தலையை வருட சற்று நேரத்தில் அவன் தான் தூங்கிப் போனான். அவளுக்கு தான் தன் கணவனின் கடன் சுமையை நினைத்து தூக்கம் வரவில்லையே.
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் எதோ யோசனையிலேயே இருந்த காயத்ரி மூன்றாம் நாள் இரவு படுக்கும் போது விஸ்வநாதனிடம் ஒரு செக்கையும் ஒரு இரண்டாயிரம் ரூபாய் பணக்கட்டையும் நீட்டினாள்.
செக்கில் இரண்டு லட்சம் என்று எழுதியிருந்தது. கூடவே அவளுடைய நகைப்பெட்டியையும் கொண்டு வந்து வைத்தவள்
"இந்தாங்கோன்னா...இப்போ என் கிட்ட இவ்வளவு தான் இருக்கு. இத மொதல்ல கட்டினேள்னா கொஞ்சம் வட்டி கொறஞ்சிடும்.
மீதியை மாசாமாசம் எனக்கும் சம்பளம் வருமோன்னோ..? அதுல வெச்சு அடைச்சிடுவோம். ஆபிஸ்ல பர்சனல் லோன் தருவா..அதுக்கும் அப்ளை பண்ணிருக்கேன்..."
என்று பேசிக் கொண்டே போக விஸ்வநாதனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
"என்னது டா பட்டூ சொல்றே..? எதுக்கு இந்த பணம்...?" என்று புரியாமல் கேட்க காயத்ரி அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் பக்கம் திரும்பி சப்பளாங்கால் போட்டு திடமாய் அவனை பார்த்தாள்.
இந்த பணத்தை புரட்டியதிலேயே மீதி கடனை அடைத்து விடலாம் என்று துணிவு வந்து விட்டது.
"இதோ பாருங்கோன்னா...! யாருக்கா இருந்தாலும் இவ்வளவு கடன் இருந்தா ராப்படுத்தா தூக்கம் வராது. நீங்க எல்லாத்தையும் மனசுல வெச்சிண்டு மூணு மாசமா எப்படி சமாளிச்சேளோ..?
இனிமே கவலைப்படாதீங்கோ? நானும் உங்களுக்கு எல்லாத்துலயும் தோள் குடுப்பேன்...? நீங்க தைரியமா இருங்கோ.."
என்று சொல்ல இன்னும் என்னவென்று புரியாவிட்டாலும் காயத்ரி தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன விதத்தில் அவன் முகம் மலர்ந்தது.
தன் குழந்தை முதல் முறை ஒரு போட்டியில் பரிசு வாங்கின தகப்பனின் சந்தோசம்.அவன் மட்டும் அதை வெளியே சொல்லியிருந்தால் காயத்ரி அவனை தொலைத்துக் கட்டியிருப்பாள்.
அவள் பணம் வந்த நிம்மதியில் கணவன் புன்னகைக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.
அது தன்னால் என்பதில் பெருமிதம் கொண்டவள் "இங்க பாருங்கோன்னா! எங்கப்பாவுக்கு புள்ளைகள் கிடையாது. நான் ஒரு பொண்ணு தான். ஏற்கனவே அப்பா சம்பளம் கட்டை தான். இப்ப ஆபரேஷனுக்கு அப்புறம் அப்பா வேலைக்கும் போக முடியல. நீங்க அவாளை இங்க வெச்சுக்க ஒத்துண்டதே பெரிய விஷயம்னா. யாருக்கு மனசு வரும்..?
இதுல அப்பா ஆபரேஷனுக்கு நீங்க பதினோறு லட்சம் கடன் வாங்கிருக்கேள்னா எவ்ளோ பெரிய மனசுன்னா உங்களுக்கு? அந்த கடனை அடைக்க மூணு மாசமா நீங்க யோஜனை பண்ணிண்டு இருக்கறது கூட தெரியாம நான் பாட்டுக்கு இருந்திருக்கேன். என்ன பொண்டாட்டின்னா நான்?"
எட்டி அவன் கையைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டவளுக்கு உணர்ச்சிப் பெருக்கில் நா தழுதழுத்தது.
"உங்கள கல்யாணம் பண்ணிக்க நான் ரொம்ப குடுத்து வெச்சிருக்கணும். உங்கள எனக்கு தேடிக் குடுத்த என் அம்மா அப்பாக்கு எத்தனை நமஸ்காரம் பண்ணினாலும் போறாதுன்னா..நான் தான் எல்லா விஷயத்துலயும் மூடமா இருந்திருக்கேன் இத்தனை நாளா..? இனிமே நீங்க கவலைப்படாதீங்கோ. நான் வாங்கற சம்பளத்துல ஒரு பாதியை கடனை அடைக்க வெச்சிண்டுருவோம். இப்ப தான் சம்பளம் கூடிடுத்தோன்னோ? நாற்பதாயிரத்துல பாதி காட்டினா ஒரு நாலஞ்சு வருஷத்துல கடனை அடைச்சிடலாம்.. நான் பாத்துக்கறேன்னா.. நீங்க கவலைப்படாதீங்கோ..."
காயத்ரியின் நீண்ட பேச்சை கேட்டதும் தான் விஸ்வநாதனுக்கு விஷயமே புரிந்தது.
'ஓ! இவள் அப்பாவின் வைத்திய செலவுக்கு நான் கடன் வாங்கியிருக்கேன்ன்னு நினைச்சிண்டு இருக்காளா? அதுல நான் தூங்காம கவலையா இருக்கேனா? என் பட்டூக்கு ஒரு வழியா என்னை பிடிச்சிடுத்தா? நான் கஷ்டப்பட்டா அவளுக்கு தாங்காதா? இதையெல்லாம் விட என்னை கல்யாணம் பண்ணி வெச்சதால இருந்த கோபம் எல்லாம் போயிடுத்தா ?
ஒவ்வொன்றாய் அவன் நினைக்க நினைக்க அவன் முகம் மலர எட்டி அவளை தூக்கியவன் எப்போதும் போல அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
அவளை இறுக அணைத்துக் கொண்டு அவள் உச்சியில் முகம் புதைத்தவனுக்கு அவ்வளவு நிம்மதி.
சற்று நேரம் அசையாமல் தன் மகிழ்ச்சியை ஆழ்ந்து அனுபவித்தான்.
"ஐ லவ் யூ.." என்பதை இதை விட எப்படி அழகாக சொல்ல முடியும்? அவன் பட்டூ அவளுக்கே தெரியாமல் சொல்லி விட்டாளே..?
எனோ அந்த நொடியில் தான் அவர்களின் ஆன்மா சங்கமித்ததாக தோன்றியது.
"நான் இனி நீ...!
நீ இனி நான்..!"
அர்த்தநாரிஸ்வரர் சொல்வதும் இது தானே? ஒரு இனிய தாம்பத்யத்தின் தாத்பரியம் (பொருள்) இது தானே...!
‘க்ருப்ணாமிதே…” என்ற பாணிக்ரஹண மந்திரத்தினால் வதுவின் கையைப் பற்றி “பகன் அர்யமா ஸவிதா போன்ற தேவர்களால் என்னுடைய முதுமை வரையில் நான் க்ரஹஸ்தாஸ்ரம தர்மத்தை (இல்லற நெறி) கடைப்பிடித்து ஒழுகுவதற்காக எனக்களிக்கப்பட்ட கன்னிகையே! இன்று இந்த சுபமான வேளையில் இத்தனை தேவர்கள் தேவதைகள் அக்னிதேவன் மற்றும் இந்த சபை நிறைந்த நம் நலனை மனதார விரும்பும் பெரியோர்கள் நல்லோர்கள் முன்னிலையில் உன் கையைப் பற்றுகிறேன்! இக்கணம் முதல் நாம் இருவரும் நான் நீ எனும் வேற்றுமை மறந்து ‘நானென்றால் அது நீயும் நானும்; நீயென்றால் அது நானும நீயும்” என்ற தத்துவத்தில் வாழ்வோமென ப்ரதிக்ஞை செய்து கொள்வோம்” என்கிறான்.
குழந்தையாய் தான் நினைத்த தன் மனைவி ஒரு நொடியில் இதை புரிந்து கொண்டாளே!
அப்படியே தன்னில் மூழ்கியவனை காயத்ரியின் அசைவு நிஜத்துக்கு கொண்டு வந்தது..
லேசாய் அசைந்தபடி "மூச்சு முட்டறதுன்னா..." என்றவள் அவன் முகம் மலர்ந்திருப்பதை பார்த்து அது தன்னால் என்பதில் கர்வம் கொண்டாள்.
தன் இறுக்கத்தை தளர்த்திய விஸ்வநாதன் தான் இன்னும் அவளிடம் சொல்லாமல் விட்ட விஷயங்களாலேயே அவளுக்கு இந்த மன உளைச்சல் என்று எல்லாவற்றையும் பேசி விட முடிவு செய்தான்.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டவன் தன் பாதியை தன் மேல் சாய்த்துக் கொண்டு " பட்டூ...! நோக்கு ஏன் இப்படி தோணித்துன்னு இன்னும் நேக்கு புரியல. ஆனா நாம அவ்வளவு ஒண்ணும் ஏழையில்லைடா பட்டு..!" என்று ஆரம்பித்தான்.
அப்போதும் அவன் தான் கவலைப்படக்கூடாது என்று சமாதானம் செய்கிறான் என்றே நினைத்த காயத்ரி "ஏன்னா பதினோறு லட்சம் எவ்வளவு பெரிய தொகை...? அதை சம்பாதிக்க நீங்க எத்தனை வருஷம் ப்ரோஹிதம் பண்ணனும் ? எனக்காக சமாதானம் சொல்லாதீங்கோ..! நான் ஒண்ணும் குழந்தை இல்லை..." என்று பட்டென்று சொன்னாள். அவன் இன்னும் தன்னை ஏமாற்றுகிறான் என்று அவளுக்கு கோபம்.
அவளை கண்களால் வருடியவன் "ஆமாடா பட்டூ..! நீ குழந்தை இல்லை..." என்று சிரித்தபடி சொல்ல காயத்ரி "போங்கோன்னா ...நீங்க இன்னும் என்னை அப்படி தான் நடத்தறேள் ..." என்று அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக எழ முயன்றாள்.
அவளை விலக விடாமல் அணைத்துப் பிடித்தவன்
"சரிடி..! நீ குழந்தை இல்லை தானே? அப்போ நம்மாத்துக்கு தினம் ஒரு புது கார் எப்படி வந்தது? உனக்கு கல்யாணத்தும் போது வைர நெக்லஸ் போட்டேனே? அதோட விலை தெரியுமா?
பத்து லட்சம். அத்தனை கல்லும் ப்ளூ ஜாக்கர். ஒவ்வொன்னும் அரை கேரட். அது எப்படி வந்ததுன்னு யோசிச்சியா?" என்று அவள் தலையில் செல்லமாய் தட்டினான்.
அவன் கேள்வியில் 'ங்கே' என்று விழித்தவள் அப்படியும் தோற்றுப் போக விரும்பாமல் "அது..அது...யாரானும் பிரெண்ட் கிட்ட இரவல் வாங்கிருப்பேள்?" என்று பதில் சொன்னாள்.
"காரை வேணா இரவல் வாங்கலாம்..நெக்லசை நீ தானே வெச்சிண்டு இருக்கே...?" என்ற விஸ்வநாதனின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.
"ஆ..மாம்...!" என்று காயத்ரி இழுத்தாள்.
"கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆச்சு. எதுன்னா இந்த கார்? எப்படி உங்க வருமானத்துல வைர நெக்லஸ் வாங்கினேள்..? இப்படி ஏதானும் பொண்டாட்டியா லட்சணமா நிக்க வெச்சு கேக்க தோணித்தா நோக்கு..?" என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.
அவன் கேள்விக்கு திருதிருவென விழித்தவளை பார்த்தவன் "என் பட்டூ குட்டிக்கு அதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது..." என்று அவள் கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்தவன் அவனே பதிலும் சொன்னான்.
"அன்னிக்கி எங்கப்பா ஸ்ரார்த்தும்போது சொன்னேனே..? அதே மாதிரி அதுக்கப்புறம் நான் வெளிநாடு எங்கயும் போகல.
இங்க மாம்பலத்துலயே எங்களுக்கு அதாவது நமக்கு இன்னொரு ஆம் (வீடு) இருக்கு. நம்மாத்தை விட பெரிசா...அங்க ஒரு கம்பெனி நடத்தறேன்..."
என்று சாதாரணமாக சொன்னான்.
என்ன கம்பெனி தெரியுமா? சர்வதேச மொழிகளில் மொழி பெயர்த்து தரது தான் எங்க வேலை. நான் ஏற்கனவே சமஸ்கிருதம் தெரியும்னு சொன்னேனோனோ?
அப்போ ஜெர்மன், இங்கிலிஷ் ரெண்டும் கத்துண்டேன். பாஷை கத்துக்கறது எனக்கு நன்னா வந்தது.
அதை வெச்சுண்டு என்ன பண்ணலாம்னு பாத்தப்போ இது மாதிரி மொழி பெயர்த்து தரது நல்ல வருமானம் வரும்னு கேள்விப்பட்டேன்.
அந்த ஆம்(வீடு) பூட்டிக் கிடந்ததை தெறந்து ஆபிஸா மாத்தினேன். ஆரம்பத்துல என் கூட ரெண்டு பேர் தான் வெச்சிண்டேன். இப்போ இருபத்தி அஞ்சு பேர் இருக்கா.
இதுல பெரிய முதலீடு எதுவும் கிடையாது. எல்லோருக்கும் குறைஞ்சது ரெண்டு மூணு சர்வதேச பாஷை தெரியும்.
நாங்க ரெண்டு கம்பெனிக்கு நடுவில நடக்கற தகவல் பரிமாற்றங்கள்ல இருந்து அவா லீகல் டாக்குமெண்ட்ஸ்ல அதாவது கான்ட்ராக்ட், அப்புறம் சர்வீஸ் லெவல் அக்ரீமெண்ட் (service level agreement) இப்படி எல்லாம் மொழி பெயர்த்து தரோம்.
இதுக்கு ஒரு பக்கத்துக்கு இவ்வளவுன்னு யுரோல(euro) காசு வரும். இந்திய மதிப்புபடி ஒரு பக்கத்துக்கு ரெண்டாயிரம் வரை வாங்கறோம்.
இதை சுத்தமா தப்பிலாம செய்யறது ஒன்னும் ஈஸி இல்ல. மூணு வருஷமா பண்றதால இப்ப நம்ம கம்பெனிக்கு நல்ல பேரு.
இது தவிர உங்க கம்பனிக்கு பண்ற மாதிரி வேலையும் செய்வேன். இதெல்லாம் தெரிஞ்ச ஆளே இப்ப அதிகம் இல்ல. அதனால நிறைய வேலை வருது.
நானுமே தெனம் ப்ரோகிதத்துக்கு போறதில்ல. பிரதமை அஷ்டமி நவமி ஆடி மாசம் இப்படி பல சமயங்கள்ல எதுவும் ப்ரோஹிதம் இருக்காது. அன்னிக்கு எல்லாம் நானும் இந்த வேலை தான் செய்றேன்.
அதுல எனக்கு மாச வருமானம் எவ்வளவு வருது தெரியுமா? எல்லாம் போக இருபது லட்சம். உங்க அப்பாவுக்கு செலவழிச்சது ஒரு மாச வருமானம் கூட இல்ல."
எல்லாம் சொல்லி விளக்கியவன் அவன் பேச்சில் ஆவென்று வாயை பிளந்து கேட்டுக் கொண்டிருந்தவளை பார்த்து சிரித்தபடி அவள் தாடையை தன் பெருவிரலால் தூக்கி அவள் வாயை மூடினான்.
சத்தம் போடாமல் தன் சாதனைகளை செய்து கொண்டிருந்தவன் அன்று தான் எல்லாம் சொல்ல காயத்ரிக்கு தலை சுற்றிப் போனது.
அதை விட தான் மூன்று நாட்களாய் மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்தது ஒன்றுமில்லாததற்கு என்று யோசித்தவளுக்கு "அப்ப நான் தேடித் தேடி பணத்தை புரட்டினது எல்லாம் வேஸ்ட்டான்னா?" என்று சோகமாய் கேட்டாள்.
என்றுமே தான் அவனுக்கு ஈடாக முடியாதோ? என்றுமே அவனுக்கு தான் துணை நிற்க முடியாதோ? என்ற கழிவிரக்கம் தோன்ற அவள் முகம் வாடிப்போனது.
அவளையே பார்த்திருந்த விஸ்வநாதன் "இல்லைடா பட்டூ! அது தானே என் மனசை புரட்டிப் போட்டுது. இந்த பட்டூவை பார்த்தப்புறம் தான் இன்னும் இவளை சந்தோஷமா வசதியா வெச்சிக்கணும்னு ஆசை வந்து நிறைய வேலை செய்ய ஆரமிச்சேன்.
இப்போ இந்த பட்டுக் குட்டிக்கு ஒரு சுட்டி பொறக்குமோன்னோ? அதுக்கு அடுத்து ஒரு ப்யூட்டி பொறக்கணும்..அதுக்கும் சேத்து தீயா வேலை செய்ய வேண்டாமா..?"
என்று கேட்டவனாய் அதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவனுடைய எல்லா வேலைக்கும் உந்து சக்தியாய் சரிபாதியாய் இருப்பவளை நெருங்க காயத்ரி தானே ஆரம்பித்து வைத்தாள்.
Author: SudhaSri
Article Title: என்றென்றும் வேண்டும்- 25
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்றென்றும் வேண்டும்- 25
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.