• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்றென்றும் வேண்டும்-19

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
173
என்றென்றும் வேண்டும்-19
#கடவுளும்_கம்ப்யூட்டரும்



அனுபவித்து படியுங்கள், அதன் ஆழம் புலப்படும்....



#விஷ்ணு_சஹஸ்ரநாமமும்_கம்ப்யூட்டர்_ஆணைகளும்



விஷ்ணு சஹஸ்ர நாமம் தொன்று தொட்டு நமது
இல்லங்களில் அன்றாட பாராயணமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு அற்புத ஸ்தோத்ரம்.



இதை நன்கு ஆராய்ந்தவர் டாக்டர் ஆர்.வி.எஸ்.எஸ்.
அவதானுலு.



இவர் ஹைதராபாத்தில் வேதபாரதி என்னும் சம்ஸ்கிருதம் மற்றும் வேத அறிவைப் பரப்பும் ஸ்தாபனத்தின் தலைவராக இருந்து வருகிறார். வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் எப்படி அனைத்துத் தொழில்நுட்பமும் அறிவியலும் அடங்கி உள்ளன என்பதை விவரித்து ‘ஸயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன் வேதாஸ் அண்ட் சாஸ்த்ராஸ்’ Science and Technology in Vedas and Shastras என்று ஒரு நூலை எழுதியுள்ளார்.



அதில் கம்ப்யூட்டர் கோட்பாடுகள் எப்படி விஷ்ணு
சஹஸ்ரநாமத்தில் அடங்கியுள்ளன என்பதை பிரமிக்க வைக்கும் விதத்தில் தருகிறார்.



கம்ப்யூட்டரில் அடிப்படையாக உள்ளது #கமாண்ட் command எனப்படும் ஆணைகளே. கூட்டு, கழி, பெருக்கு போன்ற அனைத்துமே கமாண்ட் தான். இந்தக் கட்டளைகளைத் தந்தவுடன் கம்ப்யூட்டரில் உள்ள #சர்க்யூட்டுகள் circuits அந்த ஆணைகளைச் செயல்படுத்துகின்றன. இதில் தவறுதலே நடக்காது.



விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் #30ஆம்_ஸ்லோகத்தில் வருவது ‘ருத ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ர:’ என்பதாகும். ஸ்பஷ்டாக்ஷர என்றால் ஓம் என்ற அக்ஷரத்தால் அழைக்கப்படுபவன் என்பது பொருள். ஓம் என்பது ஆற்றல் வாய்ந்த அக்ஷரம். அதை எங்கு வேண்டுமானாலும் உரிய முறையில் உச்சரித்தவுடன் அது ஒரு கமாண்ட் போலச் செயல்பட்டு ஒரு அபாரமான சக்தியை எழுப்புகிறது. கம்ப்யூட்டரில் சொல்லப்படும் கமாண்டின் உண்மையான அர்த்தத்தை இந்த நாமத்தில் நாம் பார்க்க முடிகிறது.



#மெமரி memory யும் #சுமேதா நாமமும்

மெமரி எனப்படும் நினைவகம் கம்ப்யூட்டரில் மிகவும் முக்கியமான ஒன்று.ஒரு கிலோ பைட் என்பது 1024 பைட்டுகளைக் கொண்ட்து. இதற்கு மேலாக இருக்கும் அளவீடுகளான டெரா பைட் (Tera Byte) போன்றவை அதிக நினைவகத்தைக் கொண்டிருப்பவை. #400_வால்மீகி_ராமாயணங்களை (வால்மீகி ராமாயணத்தில் 24000 ஸ்லோகங்கள் உள்ளன) ஒரு கிகா பைட்டில் (Giga Byte) அடக்கி விடலாம். 1024 கிகா பைட் ஒரு டெரா பைட் ஆகும். #அழிக்க_முடியாத நான் – #எரேஸபிள்(non-erasable) குணாதிசயங்களையும் கம்ப்யூட்டர் கொண்டுள்ளது.



இந்த நினைவகம் பற்றிய கோட்பாட்டை #80வது_ஸ்லோகத்தில் வரும் நாமமான ‘சுமேதா மேதஜோ தன்ய: சத்யமேதா தராதர:’ என்பதில் காண முடிகிறது.



சுமேதா என்றால் அற்புதமான நினைவகத்தைக் கொண்டிருப்பவன் என்பது பொருள்.

சத்யமேதா என்பதில் அழிக்க முடியாத மெமரியைக் கொண்டிருப்பவன் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது! ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு கணத்திலும் எல்லா காலத்திலும் செய்யும் அனைத்துச் செயல்களையும் அவன் நினைவில் கொண்டிருக்கிறான்.



கீதையில் இதையே கண்ணன் அர்ஜுனனிடம்,” எனக்கும் உனக்கும் பல ஜன்மங்கள் கழிந்து விட்டன. அதை நீ அறிய மாட்டாய். ஆனால் நான் அவற்றை நினைவில் கொண்டிருக்கிறேன் (கீதை #நான்காம்_அத்தியாயம் ஸ்லோகம் 5 பஹூநி மே வ்யதீதாநி ஜன்மானி தவ சார்ஜுனI தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப II )” என்ற வார்த்தைகளால் கூறுகிறான்!



இப்படி நினைவகக் கோட்பாட்டையும் சஹஸ்ரநாமம் விளக்குகிறது.



கணினியின் வேகமும் கடவுளின் வேகமும்

இன்னொரு கோட்பாடு வேகம் பற்றியது. இந்த வேகத்தினால் தான் கம்ப்யூட்டரை இன்றைய நவீன உலகம் மதித்து அன்றாடச் செயல்பாடுகளுக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டரின் வேகத்தை #மெகா_ஹெர்ட்ஸ் (MHz) #கிகா_ஹெர்ட்ஸ் (GHz) என்ற அளவீடால் சொல்கிறோம்.இந்த கணினி வேகத்தை இன்னொரு முறையாலும் கூற முடியும். ஒரு வினாடிக்கு லட்சக்கணக்கான ஆணைகள் எனப்படும் மில்லியன்ஸ் ஆஃப் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பர் செகண்ட் என்ற முறையிலும் கணினி வேகம் கூறப்படும்.



பழைய தலைமுறை கணினிகள் ஒரு வினாடிக்கு பத்து லட்சம் ஆணைகளை மேற்கொள்ளும் திறன் உடையவை. இன்றோ இன்னும் அதிக வேகம்! இந்த வேகத்தை #40வது_ஸ்லோகத்தில் மஹாவிஷ்ணுவைத் துதிக்கும் நாமமான ‘மஹீதரோ மஹாபாகோ வேகவான் அமிதாஸன:’ என்பதில் காணலாம்.



இந்த ‘வேகவானின்’ வேகம் பற்றி #கஜேந்திர_மோக்ஷத்தில் ஆதிமூலமே என்று கூப்பிட்டு முடிவதற்குள் அவன் வந்து சேர்ந்ததை பாகவதம் சிறப்பாகக் குறிப்பிடுகிறது. #திரௌபதி_கூப்பிட்டவுடன் அவன் செய்த லீலையையும் நாம் மறக்க முடியாது.



#மைக்ரோ_ப்ராஸஸரும் micro processor நிர்ணயிக்கப்பட முடியாத வடிவம் உடையோனும் அடுத்து கம்ப்யூட்டர்களின் பயன்பாடு நம்மை பிரமிக்க வைக்கிறதல்லவா! எங்கும் கம்ப்யூட்டர், எதிலும் கம்ப்யூட்டர், எதற்கும் கம்ப்யூட்டர்!!!



ரிசர்வேஷனுக்கும், மருத்துவமனைகளில் அனைத்து சேவைகளுக்கும், ஏன் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கும் கூட என்று இப்படி எங்கு பார்த்தாலும் கணினியின் சேவை தான்! இது எதனால் என்று பார்த்தால் விடை மைக்ரோப்ராஸஸரினால் தான் என்று முடியும். கணினியின் மென்பொருளில் உள்ள மைக்ரோப்ராஸஸர்களின் நெகிழ்வுத் தன்மை பிரமிக்க வைக்கும் ஒன்று. அதை எந்த விதத்திலும் பயன்படுத்த முடியக்கூடிய அளவு அது ப்ளெக்ஸிபிளாக – நெகிழ்வுடன் கூடியதாக உள்ளது.



இந்த அற்புதமான தன்மையை #19ஆம்_ஸ்லோகத்தில் வரும் நாமத்தில் காணலாம்.

“அநிர்தேஷ்யவபு: ஸ்ரீமான் அமேயாத்மா மஹாத்ரித்ருத்” இதன் பொருள் அவன் வடிவம் நிர்ணயிக்கப்பட முடியாதது, அவன் நினைத்த வடிவத்தை எடுப்பவன் என்பதாகும்.



அவன் பல்வேறு #வடிவம் எடுப்பவன் என்பதை #29ஆம்_ஸ்லோகத்தில் வரும் நாமமான ‘நைகரூபோ ப்ருஹத்ரூபஹ சிபிவிஷ்டஹ ப்ரகாஷந:’ என்பது வலியுறுத்துகிறது.



#நாமங்கள்_பல;

#கணினியின்_பயன்பாடுகள்_பல!



இதே போல

#programming ப்ரொக்ராமிங் (மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக:-ஸ்லோகம் 72),

#மல்டி_ப்ரொக்ராமிங் (ஸ்வாபன: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத் ஸ்லோகம் -50),

#அலெர்ட்_டிபென்ஸ்_சிஸ்டம் (தனுர்தரோ தனுர்வேதோ தண்டோ தமயிதா தமஹ –ஸ்லோகம் 92),

#கேபிளிங் (சுபாங்கோ லோக சாரங்கஹ சுநந்து –ஸ்லோகம் 84)

ஆகியவற்றையும் அவதானுலு விவரிக்கிறார்;



வால்டேர் போற்றிய ஹிந்து மதம்

பிரபல தத்துவஞானியான வால்டேர், “ஜியாமெட்ரியைக் கற்க பிதகோரஸ் கங்கைக் கரைக்குச் சென்றார்” என்று எழுதியுள்ளதோடு, “நமக்கு எல்லாமே கங்கைக் கரையிலிருந்து தான் வந்திருக்கிறது” என்று கூறினார்.



‘ஹிஸ்டரி ஆஃப் மேதமேடிக்ஸ்’ என்ற நூலை ஆதாரபூர்வமாக எழுதியுள்ள ஆப்ரஹாம் செய்டன்பர்க் சம்ஸ்கிருதத்தில் உள்ள சுலப சூத்ரங்களே பாபிலோனிலிருந்து எகிப்து வரை அரேபியாவிலிருந்து கிரேக்கம் வரை உள்ள அனைத்து கணித மேதைகளையும் கவர்ந்து அவர்களை ஊக்குவித்தது என்கிறார்.



அனைத்துக் கலைகளும் தொழில்நுட்பங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது வேதங்கள் என்பதை நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் ஆதாரங்களுடன் எழுதி வருகின்றனர்.



அறிஞர்களைப் போற்றுவோம்

ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த சங்கராசார்யர், கணித சூத்ரம் அல்லது சுலப சூத்ரங்கள் என அழைக்கப்படும் சூத்திரங்களில் அனைத்துக் கணித முறைகளும் விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதர்வண வேதத்தை ஆராய்ந்து வேத கணிதத்தைக் கண்டு விளக்கினார்.



1965ஆம் ஆண்டு அச்சுக்கு வந்த வேத கணிதம் இன்று உலகம் முழுவதும் பரவி மேலை நாட்டு பல்கலைக் கழகங்களிலும் கூடப் பயிற்றுவிக்கப்பட்டு அனைவரையும் வியக்க வைக்கிறது..



ஸ்ரீ சங்கராசார்யர் காட்டிய வழியில் வேதம் கொண்டுள்ள ஏராளமான தொழில்நுட்பங்களை அறிந்து சமுதாயத்திற்கு அளிக்க இந்தியர்களான பல்வேறு இளம் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் முதிர்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் இப்போது முன் வந்திருப்பது மிகவும் போற்றிப் புகழவேண்டிய தொண்டாக அமைகிறது.





எப்போதும் கம்பீரமாய் கெத்தாய் இருக்கும் அவள் கணவன் கண்ணில் கண்ணீரா?

காயத்ரியால் நம்பவே முடியவில்லை. அதே நேரம் இப்படி கண்ணீர் விடும் அளவுக்கு என்ன ஆச்சு என்ற கேள்வியும் தோன்றியது.

அவன் கண்ணீர் பார்த்து அவளுக்கு வலிக்க அந்த நேரம் அதற்கான காரணத்தை கேட்பதை விட அவனை அரவணைக்க வேண்டும் என்பதே முக்கியமாய் தோன்ற அவன் தலையை தன் சிறு கரங்களால் பற்றி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

எப்போதும் குழந்தையாயிருந்த மனைவி அந்த நேரம் தாயாய் மாற அவளை பெரியவனாய் கவனித்துக் கொண்ட அவள் கணவன் ஆறுதல் தேடும் சேயானான்.

அவனும் ஆறுதல் தேடி அவளோடு ஒன்றிக் கொள்ள அந்த அறையில் முதல் முறையாய் அவர்களின் இயல்பில் மாற்றம்.

சத்தமில்லாமல் வந்த கண்ணீரை அவள் உடை நனைவதில் தெரிந்து கொண்ட காயத்ரி அவனே சமாதானம் ஆகட்டும் என்று அவன் தலைமுடியை வருடியபடி காத்திருந்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து விச்சு தலை நிமிர்த்தி "தேங்க்ஸ் டா. பட்டூ ..." என்றவன் தன் இயல்பாய் அவன் தலையணையில் தலை வைத்து அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

தன் மோவாயை அவன் நெஞ்சில் அழுத்தி அவன் முகத்தை இன்னும் சோகமிருக்கிறதா என்று உற்றுப் பார்த்தாள் காயத்ரி.

என்னவோ அந்த நேரம் அவன் கோபமாய் இருப்பதை விட சோகமாய் இருப்பது அவளுக்கு அவ்வளவு கஷ்டமாய் இருந்தது.

"ஏன்னா எதுக்கு அப்படி அழுதேள்? சொல்லலாம்னா சொல்லுங்கோ? அப்பா ஞாபகம் வந்துடுத்தான்னா?"

கண்களில் கவலையோடு அவன் பட்டூ கேட்டதும் மூன்று வருடங்களாய் அவன் மூடி வைத்திருந்த குற்றவுணர்வின் ரணம் குறைந்தது போல விஸ்வநாதனுக்கு தோன்றியது.

"ம்ம்ம்..அதுவும் உண்மை தான். அப்பா ஞாபகம் தான். ஆனா நினைவு மட்டும் இல்ல. குற்றவுணர்வும் தான். அதனால தான் வேதனை அதிகமா இருக்கு பட்டூ..."

என்றவன் அவளை வருடியபடி விட்டத்தை வெறித்தான். மீண்டும் அவன் சோகமானது காயத்ரியால் தாங்கவே முடியவில்லை.

"மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்ததுன்னா சொல்ல வேண்டாம் னா. விடுங்கோ..." என்று காயத்ரி அவன் கன்னத்தில் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்த கண்ணீரை துடைத்தாள்.

"எல்லாருக்கும் அவாவா அப்பா ஒசத்தி தான். எங்க அப்பாவும் எனக்கு அப்படி தான். அம்மாக்கு உலகமே நாங்களும் அடுப்படியும் தான்.

எங்க கிட்ட அன்பால அதிகாரம் பண்ணி தனக்குள்ள பொத்தி வெச்சுப்பாளே தவிர வெளியுலகம் பத்தி ஒண்ணுமே தெரியாது...."

அவன் சொல்வது உண்மை தானே? அவளும் இப்போது அந்த கபடமில்லா அன்பில் கட்டுண்டு இருக்கிறாளே? அவள் மாமியாருக்கு வெளியுலகம் தெரியாது என்பதும் அவள் அறிந்ததே.

வீட்டில் அதிகாரம் செய்பவர் வெளியே அவளோடு கடைக்கு வந்து விட்டு அவள் கையை பிடித்தபடி தான் வருவார். அவள் என்ன சொல்கிறாளோ அதை அட்சரம் பிசகாமல் கேட்பார்.

"இதை வாங்கவா அம்மா? ஒங்களுக்கு பிடிச்சிருக்கா?" என்று கேட்டால் "எனக்கு இதெல்லாம் ஒண்ணும் புரியலடி. மின்ன அப்பா இருந்தவரைக்கும் அவர் தான் எனக்கு புடவை முதக்கொண்டு வாங்கிண்டு வருவார்.

ஆத்துக்கும் அவர் வாய்ண்டு (வாங்கிக் கொண்டு) வரது தான். அவருக்கு அப்புறம் இப்ப விச்சு பாத்துக்கறான்.

அதனால இதெல்லாம் எதுவும் நேக்கு புரியவே மாட்டேங்கறது. இப்போ நீ வந்துட்டியோல்யோ? இனிமே நீயும் விச்சுவும் பாத்துக்கோங்கோ..."

அவள் சிந்தனையை விஸ்வநாதனின் பேச்சு கலைத்தது.

"அப்பா அம்மாவையும் அத்தையையும் நன்னா பாத்துப்பா. எங்க எல்லார் மேலயும் அப்படி ஒரு பிரியம்.

அம்மா சமைச்சா தான் ஒரு பெரிய ஆள் னு துளிக்கூட பந்தா இல்லாம அம்மாக்கு காய் நறுக்கித் தருவார். கூடமாட வேலை செய்வார்...

சமயத்துல அம்மா அவசரத்துல புடவைய தோச்சு உணத்த மறந்து போய்ட்டா அப்பாவே உணத்திடுவா. அம்மா பதறிப் போய் ஏன் இந்த வேலையெல்லாம் பண்றேள்னு தடுத்தா கூட விட மாட்டா.

அம்மா மேல மட்டும் இல்ல தன் அக்கா மேலயும் அவ்வளவு ப்ரியம். அத்தனை வயசுக்கும் அக்காவுக்கு கால் பிடிச்சு விடுவா.

என்னையும் அரவிந்தையும் கண்டா உயிர். எனக்கு பதினைஞ்சு வயசு வரைக்கும் நான் பாடசாலையில இருந்து வந்தா தூக்கி இடுப்புல வெச்சுப்பா..."

தன் இனிமையான இளமைப்பருவத்தை நினைவு கூர்வதில் அவன் முகத்திலுமே சிறு புன்னகை ஓட காயத்ரி தன் கணவனை ஆர்வமாய் பார்த்திருந்தாள்.

அவன் முகத்தில் சோகம் மறைந்து லேசாய் சிரிப்பு வந்த பிறகே அவள் மனதில் கனமாய் இருந்த பாரம் குறைந்ததைப் போல ஒரு உணர்வு.

ஆசையாய் அவன் முகத்தை பார்க்க அவனோ கடந்த காலத்தில் அவன் அப்பாவோடு இருந்தான்.

"தாரமங்கலம் சீனிவாச கனபாடிகள்னு சொன்னா வேத விற்பன்னர்கள் மத்தில அப்படி ஒரு மரியாதை. அதை பார்த்து தான் நான் பாடசாலையில் சேர்ந்தேன்.

அப்பா வேதமெல்லாம் கரைச்சு குடிச்சவா. சமஸ்க்ரிதத்துல அப்படி ஒரு பாண்டித்யம். அதெல்லாம் தான் எனக்கும் அது மேல ஈர்ப்பு வர காரணம்.

நான் பாடசாலையில படிச்சிண்டு இருக்கப்பவே தபால்ல சமஸ்க்ரிதம் படிக்க ஆரமிச்சேன். அதுல பிஏ, எம்ஏ இப்படி படிக்க படிக்க இதெல்லாம் எனக்கு கல்கண்டா இனிச்சது.

அதுல மேல மேல படிக்கணும்னு ஆசை..அப்பா தான் என்னை நீ அதுல பிஹச்டி பண்ணு...ஜெர்மனில எல்லாம் நம்ம பாஷையை கொண்டாடறா? நம்ம ஊருல அதோட அருமை எல்லாருக்கும் தெரியலன்னு என்னை ரொம்ப உற்சாகப்படுத்தினா..."

'எல்லாம் நன்னா தானே நடந்திருக்கு...இதுல வருத்தத்துக்கோ குற்றவுணர்வுக்கோ என்ன இருக்கு?'

காயத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை.

அவள் முகத்தை பார்த்தாலும் விஸ்வநாதன் தன் கடந்த காலத்தில் லயித்து பேசிக் கொண்டிருந்தான்.

"இருபத்தி அஞ்சு வயசுல பிஹச்டி முடிச்சு அங்க கும்பகோணத்துல கூடவே எல்லாம் கத்துண்டு ராஷ்ட்ரிய சன்ஸ்க்ரிட் சன்ஸ்தான்ல ஆராய்ச்சிக்கு உதவித்தொகை வாங்கி ஆராய்ச்சி எல்லாம் பண்ண பண்ண எனக்கு நிறைய காண்டக்ட்ஸ் நம்ம நாட்டுலயும் வெளிநாட்டுலயும் கிடைக்க ஆரமிச்சது..."

அதுவரை சந்தோஷமாய் பேசிக் கொண்டிருந்தவனின் முகத்தில் இருள் படிய ஆரம்பித்தது. காயத்ரி அதை உணர்ந்தாலும் காரணம் புரியாததால் புதிராய் அவன் முகத்தை பார்த்தபடி இருந்தாள்.

" கும்பகோணத்துல படிப்பு முடிஞ்சதும் அமெரிக்கால ஒரு வருஷத்துக்கு வேலை வாய்ப்பு வர அங்கே போனேன். அங்க சாஸ்திரிகளுக்கு எவ்வளவு மரியாதை? என்ன மாதிரியான சம்பாவனை?

இங்க ஒரு தெவசம் பண்ணி வெச்சா நானூறு ரூபா குடுக்க அப்படி அலுத்துப்பா. அங்க நிறைய பணம் வரவும் எனக்கு அங்க ரொம்ப பிடிச்சு போயிடுத்து.

ஒரு வருஷத்துலயே இங்க பத்து வருஷம் சம்பாதிக்கிறதை சம்பாதிச்சதும் அங்கேயே இருந்துறணும்னு முடிவெடுத்தேன்...

ஊருக்கு ஒரு வருஷம் கழிச்சு வந்த போதே என் முடிவை அப்பாட்ட சொன்னேன். அப்பா சின்ன வயசுல இருந்து எங்கள பிரிஞ்சு இருந்ததால இனிமே புள்ள தன்னோட இருப்பான்னு எதிர்பார்த்தார் போல இருக்கு.

நான் என் முடிவ சொன்னதும் ஒரு நிமிஷம் ஒண்ணுமே பேசல. முகத்துல மட்டும் அப்படி ஒரு வருத்தம்..

"ஏம்ப்பா ..எங்களோட இருக்கப்படாதா..?"

அப்பா கேக்கறப்போ அந்த குரல்ல அவ்வளவு ஏக்கம்.. அதெல்லாம் அப்ப நேக்கு புரியல..

“அப்பா! இந்த ஊர்ல என்ன இருக்கு..? குண்டு சட்டில குதிரை ஓட்டிண்டு இருக்கறத விட நீங்களும் என்னோட வாங்கோ. நாம அஞ்சாறு வருஷத்துல ஓஹோன்னு வந்துரலாம்னு அவாளையும் கூப்டேன்."

அப்பா ஒரு மாதிரி சிரிச்சிண்டார். மறுப்பா தலைய அசைச்சு "எனக்கு இங்க கிடைக்கிறதே போறும் பா..உங்க அம்மா அத்தை எல்லாரும் இந்த ஊருக்கு பழகிட்டா.

அவாளுக்கு அந்த ஊர்லாம் சரி வராது...அரவிந்த் வேற படிச்சிண்டு இருக்கான். நோக்கு அவசியம் போகணும்னா போயிட்டு வா..." அப்படின்னு சொல்லிட்டார்.

"நான் ஒரு மாசம் கழிச்சு கிளம்பறபோது மறுபடியும் கேட்டார்.."அம்பி! நன்னா யோசிச்சினுட்டியா? அவசியம் போகணுமா..?" வாய் சம்பிரதாயத்துக்கு கேட்டாலும் கண்ணுல 'இங்கயே இருக்கேன்னு சொல்ல மாட்டேனான்னு அப்படி ஒரு ஏக்கம்..

நான் பிடிவாதமா கிளம்பவும் என்ன தோணித்தோ..என்ன தோணித்தோ என்ன…? இதான் கடைசியா புள்ளய பாக்க போறோம்னு தெரிஞ்சுடுத்து.

என்னை இறுக்கி கட்டிண்டு கன்னத்துல முத்தம் குடுத்து "பத்திரமா போயிட்டு வா கண்ணா..!" அப்டின்னவர்

"எனக்கு அப்புறம் நீ தான் உங்க அம்மா அத்தை அரவிந்த் எல்லோரையும் பத்திரமா பாத்துக்கணும்.."

அப்டின்னு சொல்ற போதே அவர் கண்ணுல ஒரு துளி ஜலம்.

"நன்னா கை நிறைய சம்பாதிச்சிண்டு அஞ்சு வருஷத்துல இங்கயே வந்துடுவேன் பா...நாம எல்லாரும் வசதியா இருக்கலாம்.." ன்னு நான் சொன்னதுக்கு லேசா சிரிச்சிண்டார்.

நான் ஊருக்கு போய் ஒரு ஆறு மாசம் வரைக்கும் எல்லாம் நன்னா தான் போனது. அப்பா அம்மா அத்தை எல்லாரோடையும் போன்ல பேசுவேன். நான் வாங்கிக் குடுத்துட்டு போன லேப்டாப்ல பேச அவாளுக்கு தெரியல.

ஒரு மாசம் வேற ஊர்ல ஒரு கும்பாபிஷகத்துக்கு கூப்பிட்டானு போய்ட்டேன். பேச முடியாதபடி அப்படி ஒரு வேலை...."

அதை சொல்லும் போதே அன்றைய நாள் மீண்டும் வந்திருந்தால் நான் எல்லாம் தடுத்து நிறுத்தியிருப்பேனே...என்ற ஏக்கம் அவன் குரலில்.

"ஒரு மாசம் கழிச்சு நான் ஆத்துக்கு போன் போட அம்மா போனை எடுத்ததுமே ஓன்னு ஒரே அழுகை. அம்மா அழுகையை ஒரு மாதிரி சமாளிச்சு கேட்டப்போ தான் அந்த இடி என் தலை மேல விழுந்தது..."

அந்த கொடிய நாளின் நினைவில் மேலே பேச முடியாமல் ஒரு நிமிடம் விஸ்வநாதன் பேச்சை நிறுத்த கண்கள் வராத அழுகையில் சிவந்து விட்டிருந்தது.

காயத்ரிக்கு அவன் என்ன சொல்லப் போகிறான் என்று ஊகிக்க முடிந்ததால் அவன் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள். அவன் வேதனையில் அவள் கண்ணில் கண்ணீர் வர விஸ்வநாதன் அந்த நிமிடம் எப்படி உணர்ந்தான் என்று தெரியவில்லை.

ஒரு புறம் கடந்த கால வேதனை மனதை அறுத்தாலும் தான் விரும்பி மணந்தவள் தன் வேதனையை அவள் வேதனையாய் பார்ப்பது பெரும் ஆறுதலை தந்தது.

"அம்பி! அப்பாக்கு ரொம்ப முடியல பா. ஆஸ்பத்திரில சேத்திருக்கு. நேக்கு ஒண்ணும் புரியல.. நீ எங்க இருக்கே?"

அம்மா அழுத போது உடனே வரணும்னு நினைச்சாலும் என்னால ரெண்டு நாள் கழிச்சு தான் வர முடிஞ்சது. அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுடுத்து ..."

துக்கம் மென்னை அடைக்க விஸ்வநாதன் மிடறு விழுங்கினான். காயத்ரி அவன் அணைப்பில் இருந்து விலகியது கூட தெரியாமல் விஸ்வநாதன் விட்டத்தை வெறிக்க காயத்ரி ஒரு டம்ளரில் அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

மெல்ல எழுந்து உட்கார்ந்து அதை குடித்தவன் தன் துயரை முழுவதுமாய் தன் வாழ்க்கை துணையிடம் சொல்லி ஆறுதல் தேட விழைந்தான்.

"அப்பாக்கு ஹார்ட் அட்டாக். இது மூணாவது தடவையாம்..." அவன் சொன்னதும் அவன் குற்றவுணர்வு எதனால் என்று காயத்ரிக்கு புரிந்தது. அவனை நெருங்கி அவன் முகத்தை தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டாள்.

"அவ்வளவு ஆசை வெச்சிருந்தவரோட கொஞ்ச நாள் கூட இருக்கல. அவரே இருன்னு சொன்னப்போ கூட கேக்கல. இப்ப அப்பா வேணும் போல இருக்கு..ஆனா அப்பா வர மாட்டாளே..? எல்லாரையும் என்னை பாத்துக்க சொல்லிட்டு போய்ட்டா..?

அவளை உணர்ச்சி மிகுதியில் கட்டி அணைத்துக் கொண்டு அழுகையில் அவன் கம்பீரம் எல்லாம் காணாமல் போய் அப்பா காணும் என்று அழும் சிறுவனானான் விஸ்வநாதன்.

இதற்கு ஆறுதலாய் எந்த வார்த்தையும் சொல்ல முடியாது என்று தன் அணைப்பால் அவனுக்கு ஆறுதல் தர காயத்ரி அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

" அந்த ரெண்டு நாளும் வெளியுலகம் தெரியாம அம்மாவும் அத்தையும் பட்ட பாடு..."

அந்த இரு வார்த்தைகளில் அந்த உலகமறியா பெண்மணிகளின் கஷ்டம் காயத்ரிக்கு அவன் சொல்லாமலே புரிந்தது.

"அம்மாவும் அத்தையும் நான் ஆத்துக்குள்ள நுழையறப்போ என்னை கட்டிண்டவா அப்படி ஒரு அழுகை. ரொம்ப பயந்து போயிருந்தா...அதுக்கப்புறம் அம்மா ரொம்ப நாள் நான் சாயந்தரம் வர லேட்டானா கூட வாசல்லயே உக்காந்துண்டு இருப்பா. கூட அத்தையும் ..."

சற்று நேரம் அமைதியாக இருந்தவன் "இப்ப அவா ரெண்டு பேரும் அரவிந்தோட சேத்து என் குழந்தைகள். அப்பா போனப்போ சொல்லிட்டு போனாளோல்லியோ? இனிமே நான் தான் அவாளை பாத்துக்கணும். அதனால தான் நான் வெளியூர்ல கூப்பிட்டா கூட ஒத்துக்கறதில்ல..."

அவன் ஏன் தேனிலவு போக ஒத்துக் கொள்ளவில்லை என்று காயத்ரிக்கு இப்போது சொல்லாமலே புரிந்தது.

அவன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து "அப்பா போனதோ அம்மாவும் அத்தையும் கஷ்டப்பட்டதும் இனிமே மாத்த முடியாதுன்னா. இனிமே நாம ரெண்டு பேருமா பாத்துப்போம் னா. நீங்க கவலைப்படாதீங்கோ..."

என்ற அவள் வார்த்தைகளில் தனியாய் யாரிடமும் பகிர முடியாமல் இருந்த மனபாரம் சற்று குறைந்தது போல விஸ்வநாதனுக்கு தோன்றியது.

கட்டிலில் அமர்ந்த காயத்ரியின் மடியில் விஸ்வநாதன் படுத்துக் கொள்ள அவள் அவன் தலையை இதமாய் வருடினாள். மூன்று நாட்களாய் தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தவன் அன்று சற்று ஆறுதலாய் கண்களை மூடினான்.

அன்றைய இரவில் அவர்களின் உறவின் புதிய பரிமாணத்தை இருவருமே உணர்ந்தனர்.
 

Author: SudhaSri
Article Title: என்றென்றும் வேண்டும்-19
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
36
மிக அருமையான விளக்கம் .computer vs vishnu sahasranamum.
பெண்கள் கல்யாணம் ஆன பின் அவர்களின மாற்றங்கள் மக புதியவை.
 
Top Bottom