• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

என்றென்றும் வேண்டும்-17

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
என்றென்றும் வேண்டும்-17

தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் 'குசா' என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள். புனிதமானது தர்பை.



நமது உடலில் வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.எனவேதான் நாம் எந்த ஒரு செயல் (வைதீககார்யங்கள்) செய்ய ஆரம்பிக்கும் போதும் தர்பத்தில் உட்கார்ந்து,கையிலும் தர்ப்பவித்ரத்தை அணிகிறோம்.

பாணிணி முனிவர் கௌமுதியை எழுதும் போது "பவித்ர பாணியாக உட்கார்ந்து ஆலோசித்து எழுதினார்" என்று மஹாபாஷ்யத்தில் கூறப்படுகிறது.

தீய கதிர்களைத் தவிர்க்கும் தர்பை:

சந்திர,ஸூர்ய க்ரஹண
காலங்களில் வீடுகளில் பெரியவர்கள் தொன்று தொட்டு ஊறுகாய் போன்ற நீடித்துப் பயன்படுத்தும் உணவு பொருட்களில் தர்பையைக் கிள்ளி அதன் துண்டை உள்ளே போடுகிறார்கள்.

ஏனெனில் வெளியிலே அந்த நேரத்தில் வரும் தீய
கதிர்கள் வாயிலாக உணவு பொருட்களில் கெடுதல் ஏற்படாதவாறு தர்பை தடுக்கும். இவ்வாறு நமது மூதாதையர்கள் பயன்படுத்தி வரும் தர்பைக்கு பலப்பல விசேஷங்கள் உள்ளன.

உடல் வலிமையும் புத்திகூர்மையும் ஏற்படும் .

தர்ப்பையும் விருத்திராசுரனும்:

விருத்திராசுரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், பூலோக உயிர்களுக்கும் பெரும் கொடுமைகள் புரிந்து வந்தான். இதனால் கோபங்கொண்ட தேவேந்திரன் தனது வஜ்ஜிராயுதத்தை பிரயோகித்து அவனை அழிக்க முயன்றும் பலனில்லை, அசுரன் மீண்டும் மீண்டும் தேவேந்திரனை போருக்கு அழைத்தான், திகைத்தான் இந்திரன்.

இதைக் கண்ட பிரம்மா, வஜ்ஜிராயுதத்தை தனது கமண்டல தீர்த்தத்தில் நனைத்து கொடுத்து இப்போது பிரயோகிக்குமாறு கூற தேவேந்திரனும் அவ்வாறே செய்தான். தீர்த்தத்தின் மகிமையால் பலம் பெற்ற வச்சிராயுதம் விருத்திராசுரனின் அங்கங்களை கண்ட துண்டமாக வெட்டியது.

வஜ்ஜிராயுதத்தின் பலத்துக்கு காரணம் புனித தீர்த்தங்களே என்று அறிந்த விருத்திராசுரன், உலகிலுள்ள எல்லா தீர்த்தங்களுக்கும் சென்று, ரத்தம் வழியும் தனது உடலை நனைத்து தீர்த்தங்களின் புனிதத்தை மாசு
படுத்த முயன்றான். இதைக் கண்ட பிரம்மா தீர்த்தங்களை எல்லாம் தர்ப்பை புட்களாக மாற்றி விட்டாராம்.

தர்பையின் உபயோகங்கள்:

தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் (பாய்) மிகவும் விசேஷம். தர்பாஸனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பல
மடங்கு சக்தி உண்டு. கர்மாக்களின் துவக்கத்தில் கணவன் ஸங்கல்பம் செய்யும் போது மனைவி கணவனை நேரிடையாக தொட்டுக் கொள்வதில்லை.

தர்ப்பங்களினால் தான் கணவனை ஸ்பரிக்கச் சொல்லியுள்ளது. தர்ப்பங்கள் தான் அவர்களுக்கு அங்கே இணைப்பாக உபயோகப் படுத்தப்படுகிறது. க்ரஹண காலங்களில் (சூர்ய மற்றும் சந்திர) இல்லத்தில் ஏற்கெனவே பக்குவமாக்கி இருக்கும் பதார்த்தங்களிலும் குடிநீரிலும், தர்ப்பங்களைப் போட்டு வைத்தால் எந்த தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.

ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன, ச்ரா
ர்த்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன. குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) ப்த்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.

கலச ஸ்தாபனம் செய்யும்
போதும். மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது. கல்யாணத்தில் கல்யாண பெண்ணிற்கும், அதே மாதிரி உபநயனத்தில் விடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.

உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் (ஆஸனத்தைத் விர) உபயோகப்படுவதில்லை. தர்ப்ப முஷ்டியிலிருந்து (கட்டிலிருந்து) நமக்குத் தேவையான தர்ப்பங்களை எடுத்துக் கொள்ளும் போது மேலிருந்து (நுனி பக்கம்) எடுக்கக்கூடாது. மேலிருந்து எடுப்பது வசதியாக இருந்தாலும் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். கட்டின் அடியிலிருந்து தான் உருவ வேண்டும்.

தர்ப்பங்களைக் கீழே வைக்கும் போது (அல்லது சேமித்து வைக்கும் போது) அதன் நுனி மேற்கு அல்லது தெற்கு நோக்கி இருக்கக்கூடாது. கிழக்கு அல்லது வடக்கு நோக்கித்தான் நுனி இருக்கும்படி வைக்க வேண்டும். தர்ப்ப முஷ்டியையோ அல்லது தர்ப்பங்களையோ வெறும் தரையில் வைக்கக்கூடாது. தர்பையை காலில் மிதிபடும்படியாக வைக்கக்கூடாது.

காலில் மிதிபட்ட தர்பையை உபயோகிக்ககூடாது. தர்ப்பங்களை விரல் நகத்தினால் கிள்ளக்கூடாது. உபயோகத்திற்காக சேமித்து வைத்திருக்கும் தர்ப்பங்களை அலட்சியமாக பார்க்கக் கூடாது.

தர்ப்பையின் மகத்துவம் :

தர்பையில் செய்த பவித்ரம் நம்மை சுத்தமாக்குகின்றது. கர்மா நன்கு நடைபெற நமக்கு நல்ல பாதுகாப்பாகவும் செயல்படுகின்றது. பவித்ரபாணி சுத்தமானவன். இதில் சந்தேகம் வேண்டாம். தர்பையை கையில் தரித்துச் செய்த ஜபம், தானம், ஹோமம் ஆகியவற்றின் புண்யத்திற்கு கணக்கில்லை என்கிறார்கள் மகரிஷிகள். மேலும் 'இந்த்ரனின் கையில் வஜ்ரம் போலவம், பரமேஸ்வரனின் கையில் சூலம் போலவும், விஷ்ணுவின் கையில் சக்ராயுதம் போலவும், பிராஹ்மணன் கையில் தர்பை உள்ளது. பூதங்கள், பிசாசங்கள், ப்ரேதங்கள் வேறு ப்ரஹ்மராக்ஷசர்கள் என்ற எல்லோரும் ப்ராஹ்மணர் கைவிரலில் உள்ள தர்பையை பார்த்தால் தலைகுனிந்தவர்களாய்த் தூரத்தில் செல்லுகின்றனர்.

ஜோதிடத்தில் தர்ப்பை: ஜோதிடத்தில் தர்ப்பைபுல்லுக்கு காரகராக மூன்று கிரகங்களை கூறலாம். தர்ப்பையின் புனிதத்தன்மையின் காரணமாக குருவையும் பித்ரு
காரியங்களுக்கும் பயன்படுவதாலும் மருத்துதன்மையின் காரணமாகவும் சனியை காரகராகவும் புல்வகை தாவரங்களுக்கு கேது காரகர் எனவும் கூறலாம். ஆன்மீக உச்சத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் குரு சனி மற்றும் கேதுவின் சேர்க்கை இருக்கும். அதிகப்படியான பயன்பாடு பித்ருகாரியங்களில் வருவதால் தர்ப்பையின் முதன்மை காரகராக சனியை கூறலாம். மேலும் புகழ்பெற்ற சனைஸ்வர பகவான் பரிகார ஸ்தலமான திருநள்ளாரு அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தர்ப்பை காட்டில் அமைந்ததால் இப்பெயர் ஏற்ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருநள்ளாறு கோயிலுக்கு ஒரு காலத்தில் ஆதிபுரி என்றும், சிவனை வழிபட்டு பிரம்மா பரிகாரம் பெற்றதாக ஸ்தலபுராண வரலாறு சொல்கிறது. பிரம்மதேவர் பூஜித்த சிவனுக்கு 'தர்ப்பாரண்யேஸ்வரர்' என்பது பெயராகும். இங்குள்ள ஸ்தல விருட்சம் தர்ப்பை ஆகும

சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்.

அம்பாள் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்.

தீர்த்தம் : நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம்.

தலவிருட்சம் : தர்ப்பை.

தலச்சிறப்பு : சனி பார்வையில் உள்ள பக்தர்கள் இத்தலத்திற்கு சென்று எள்ளுடன் கூடிய தீபம் ஏற்றி அன்னதானம் செய்தால் சனிபகவான் அருள் பரிபூரணமாக கிட்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தர்ப்பையின் மகத்துவம் அறிந்து அதை போற்றி பாதுகாக்கவேண்டிது நம் அனைவரின் கடமையாகும்.

தர்ப்பைப்புல் எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்ப்பைப்புல் கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க தர்ப்பையை பயன்படுத்துகிறோம். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.




காயத்ரிக்கு ஏற்கனவே தலையில் எண்ணெய் வைத்து அழுத்தி தேய்த்ததில் தலை ஒரு பக்கம் எரிந்தது. அரப்பு தேய்க்கும் போது கொஞ்சம் கண்ணில் விழுந்ததில் கண் சிவந்து அது வேறு எரிச்சல்.

இப்போது தலையை அலச கொதிக்கும் நீரை ஊற்றவும் வெந்த புண்ணில் வெந்நீரை ஊற்றியது போலிருக்க அதற்கு மேல் ஜில்லென்ற பச்சைத் தண்ணீரை ஊற்றவும் மூச்சுத் திணறியது.

தன்னையும் மீறிய பயத்தில் பத்மாவைக் கட்டிக் கொள்ள அவர் புடவை முழுவதும் நனைந்து போனது. பத்மா அதையெல்லாம் கவனிக்கவில்லை.

"அடடா! தெரியாம சூடான ஜலத்தை விட்டுட்டேன்டா கோந்தே..!" என்றவர் அவளை அணைத்துக் கொண்டு தன் புடவைத் தலைப்பால் துடைத்து விட்டார்.

ஈரம் சொட்ட சொட்ட முன்னால் விழுந்த அவள் கூந்தலை ஒதுக்கி புரையேறி இருமியவளை முதுகில் தடவி சமாதானம் செய்தார்.

முகமெல்லாம் சிவந்து கண்களில் நீரோடு இருந்தவளை பார்க்க பார்க்க அவருக்கு குற்றவுணர்வு அதிகமானது. அதற்குள் இந்த சத்தம் கேட்டு அத்தையும் விஸ்வநாதனும் ஓடி வந்தனர் அத்தையும் உள்ளே போய் அவள் முதுகைத் தடவி ஆசுவாச படுத்தினார்..

காயத்ரியின் நிலைமையைப் பார்த்து விஸ்வநாதன் வேகமாய்ப் போய் தங்கள் அறையில் இருந்து அவளுக்கு காய்ந்த உடைகளும் துண்டும் கொண்டு வந்தான்.

"பத்மா! உன் புடவை பூரா நனைஞ்சு போயிடுத்து பாரு. போய் புடவையை மாத்திக்கோ. நான் கோந்தைய பாத்துக்கறேன்." என்று அத்தை பத்மாவை வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.

"அக்கா! இருக்கட்டும் கா. ஜலம் சூடு சரியா இருக்கானு பாக்காம நான் தான் கொதிக்க கொதிக்க விட்டுட்டேன். கோந்தே துடிச்சு பேட்டா!"

என்று பத்மா மனம் வருந்தி சொல்ல அத்தனை வேதனைகளுக்கு பிறகும் காயத்ரிக்கு அவர் மேல் துளிக் கூட கோபமோ வருத்தமோ தோன்றவில்லை.

இதே அவள் அம்மாவும் திருமணத்துக்கு முன் அவளுக்கு தலைமுடி நிறைய இருக்கிறது என்று தேய்த்து விடுவார் தான். அப்போதெல்லாம் அவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள்.

"அம்மா! இப்ப கொஞ்சம் தேவலாம்மா. நீங்க போய் வேற புடவை மாத்திக்கோங்கோ" என்று காயத்ரி வற்புறுத்தி சொன்ன பிறகே போனார். விஸ்வநாதன் உடையை கொடுத்து விட்டு போய் விட அத்தை இதமாக அவள் தலையை அலசி விட்டார்.

அதன் பிறகும் அவள் குளிக்கும் வரை உதவியவர் அவள் முதுகும் தோள்களும் சிவந்திருந்ததை பார்த்து துடித்துப் போனார்.

மெல்லிய உறுத்தாத பருத்தி துணியால் ஆன நைட்டி ஒன்றை அணிவித்தவர் அவளை வெளியே அழைத்து வர பத்மா அதற்குள் உடை மாற்றிக் கொண்டு சாம்பிராணி போட்டு தூபக்காலோடு காத்திருந்தார்.

"பத்மா! கோந்தே உடம்பு பூரா சூடச்சுட வெந்நீர் பட்டு வெந்து போயிருக்கு முதுகு தோளெல்லாம் சிவத்த நெறத்துக்கும் அதுக்கும் என்னமா செவந்து போயிருக்கு தெரியுமா? நீ பாத்து ஜலத்தை விடப்படாதோ?" என்று பத்மாவை கடிந்து கொண்டார்.

அத்தைக்கு அதட்டுவது கூட ஆதங்கமாய் தான் வெளிப்பட்டது. அவரின் மென்மையான இயல்பு அப்படி.

அத்தை பேசப்பேச பத்மாவின் முகம் வாடுவதைப் பார்க்கவும் காயத்ரிக்கு மனம் தாங்கவில்லை.

"அத்தை..! அம்மா மேல ஏதும் தப்பில்லை. இதோ இங்க நின்னுண்டு இருக்காரே? இவர் தான் காரணம்..அம்மா வெந்நீர் விளாவ சொன்னா. அதை செய்யாமையே போய்ட்டார். நானும் சீக்கா கண்ணுல விழுந்ததுல கவனிக்கல...."

காயத்ரி அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு விஸ்வநாதனை போட்டுக் கொடுக்க ஒரு ஓரமாய் அமர்ந்தபடி இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விஸ்வநாதனுக்கு இப்போது தனக்கு நன்றாக மண்டகப்படி கிடைக்கப் போகிறது என்று புரிந்து கொண்டான்.

அதே போல ஒரே நேரத்தில் பத்மாவும் அத்தையும் அவன் மேல் பாய்ந்தனர்.

"ஏண்டா விச்சு! அந்த தவலை கனமா இருக்குன்னு தானே உன்ன செய்ய சொன்னேன். பாவம் குழந்தை எப்படி கஷ்டப்படறா பாரு?"

அவனை திட்டியபடியே அவள் தலைமுடியை சாம்பிராணி புகையில் காட்டி ஆற்றினார்.

அத்தையும் தன் பங்குக்கு "அம்பி! சித்த நின்னு பாத்து பண்ணிருக்கப்படாதா? பாவம்டா கோந்தே!" என்றவர் கையில் கரைத்துக் கொண்டு வந்திருந்த சந்தனத்தை அவள் உடலில் சிவந்திருந்த பகுதிகள் குளிர மெல்ல தடவினார்.

விஸ்வநாதன் வாயே திறக்கவில்லை. அவன் மைனாரிட்டி கட்சி என்று தெரிந்த பிறகு பேசுவானா என்ன?

அவர்களின் அன்பிலும் அக்கறையிலும் காயத்ரிக்கு கண்கள் பனித்தது. ஆரம்பத்தில் பத்மாவின் அதிகாரமான தோரணையில் கொஞ்சம் பயமிருந்தாலும் இந்த கொஞ்ச நாட்களிலேயே அவரின் அன்பை நன்றாகவே புரிந்து கொண்டிருந்தாள்.

அவருடைய அன்பு தாய் பறவை தன் குஞ்சை இறக்கைக்குள் வைத்து காக்கும் அன்பு. அந்த அதிகாரத்தில் கூட அன்பு தான் இருக்கும்..

அத்தையைப் பற்றி கேட்கவே வேண்டாம். அன்பைத் தவிர வேறு எதுவும் தெரியாத மனுஷி அவர்.

'இப்படி ஒரு அன்பு கிடைக்க நான் ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கணும்...'

காயத்ரி மனதுக்குள் நினைக்க அவள் கண்ணீரை பார்த்து அதற்கும் பத்மா விஸ்வநாதனை தான் கடிந்து கொண்டார்.

"பாரு கோந்தே! எரிச்சல் தாங்காம கண்ணுல ஜலம் வருது." என்று மீண்டும் விஸ்வநாதனை திட்ட அவன் 'இது உனக்கே நியாயமா இருக்கா?' என்பது போல காயத்ரியை பார்த்தான்.

அவனுக்குமே சிவந்திருந்த அவள் முகமும் கண்களும் உடலும் பார்க்க பாவமாக இருந்தது. உண்மையிலேயே வலியில் அழுகிறாளோ என்று பார்த்தவன்

"காயத்ரி! ரொம்ப எரியறதா? நான் போய் மருந்து கடையில கேட்டு ஏதானும் ஆயின்மென்ட் வாய்ண்டு வரவா?" என்று கவலையோடு கேட்டான்.

எல்லோரும் அவள் மேல் கவனம் செலுத்தவும் அந்த சந்தோஷத்திலேயே காயத்ரிக்கு வலியோ எரிச்சலோ எதுவும் தெரியவில்லை.

"எதுவும் வேண்டாம்னா...இப்ப பரவாயில்லை..." என்று அவனுக்கு பதில் சொன்னவள் அத்தையை அணைத்துக் கொண்டு "என் செல்ல அத்தை குட்டி! இப்போ நீங்க சந்தனம் தடவினதும் எரிச்சல் போயிடுத்து ..." என்று சொல்லி அவர் கன்னத்தில் முத்தமிட அத்தை வெட்கத்தோடு சிரித்துக் கொண்டார்.

அவளுடைய செய்கை அனைவரின் முகத்திலும் சிரிப்பை வரவழைக்க பத்மா சிரித்துக் கொண்டே போய் காயத்ரிக்கு தானே ரசம் சாதம் பிசைந்து கொண்டு வந்தார்.

அவளுக்கு பிடித்த வாழைப்பூ பருப்புசிலியும் கூடவே கொண்டு வந்தவர் "காயத்ரி..! ஏற்கனவே இருக்கற எரிச்சல்ல ரசம் சாத்துல கை வெச்சேனா இன்னும் எரியும். நானே ஊட்டி விடறேன்..." என்றவர் அவள் பதிலை எதிர்பார்க்காமல் ஒரு வாய் ஊட்டினார்.

அதை சாப்பிட்டவளுக்கு உணவு அவ்வளவு பிடித்திருந்தது. மாமியாரையும் அணைத்துக் கொண்டவள் "என் அம்மா பட்டுக் குட்டி..! ரசம் சாதம் சூப்பர்..." என்றவள் பத்மாவையும் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட அவள் வாயில் இருந்த சாதம் அவர் கன்னத்தில் இருந்தது.

எல்லோரும் மறுபடியும் சிரிக்க காயத்ரி பத்து எச்சில் என்று நிறைய பார்க்கும் மாமியார் என்ன சொல்வாரோ என்று தயக்கத்துடன் "அம்மா! உங்க கன்னத்துல சாதம் ஒட்டின்டு இருக்கு மா..!" என்று சொன்னாள்.

அவள் சிரித்து பேசுவதிலேயே அவளுக்கு எரிச்சல் குறைந்திருக்கிறது என்று ஆறுதலடைந்த பத்மா "அதானே ..! போனா போறது விடு...இந்தா அடுத்த வாயை வாங்கிக்கோ...இந்த சாதம் பூரா காலியாகணும்...சொல்லிட்டேன்..." என்று அடுத்த வாய் உணவை கொடுத்தார்.

அன்று முழுவதும் காயத்ரிக்கு ராஜ உபச்சாரம் தான். பத்மா வற்புறுத்தி அவளை தூங்கச் சொல்ல விஸ்வநாதன் அவள் தங்கள் அறைக்கு வருவாள் என்று எதிர்பார்த்திருந்தான்.

மற்றவர்கள் எதிரில் அவனால் அவளுக்கு எந்த அளவு பாதிப்பு என்று கேட்க முடியவில்லை. அதனால் அவள் தனியாக தங்கள் அறைக்கு வருவாள் என்று மருந்தொடு காத்திருக்க அவள் வரவேயில்லை.

அத்தையோடும் மாமியாரோடும் கூடத்திலேயே படுத்துக் கொண்டாள். அத்தையின் முதுகில் முகத்தை புதைத்துக் கொண்டு தூங்கியவளைப் பார்த்த விஸ்வநாதன் அதற்கு மேல் தூக்கம் வராமல் போக அங்கேயே அமர்ந்து பூணூல் செய்ய ஆரம்பித்தான்.

மாலையில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போதே பால் வாங்குவதற்காக கிளம்பிய விஸ்வநாதன் காயத்ரிக்கு பிடித்த பாப்டி சாட்டும் சமோசாவும் வாங்கி வந்திருந்தான்.

அந்த கடைக்காரனுக்கு ஒரே ஆச்சரியம். தினமும் அந்த வழியில் போய் வந்தாலும் இத்தனை நாட்களாய் இந்த கடையை திரும்பிக் கூட பார்க்காதவன் இன்று கடைக்கு வந்து நின்று பாப்டி சாட்டில் வெங்காயம் தூக்கலாய் சாட் மசாலா கூட்டி என்று பக்குவம் சொன்னால் ஆச்சரியம் வரும் தானே?

காயத்ரிக்கு அதைப் பார்த்ததும் அவ்வளவு சந்தோசம். பத்மாவும் அத்தையும் ஒரு சிறு புன்னகையோடு காபி போடும் சாக்கில் சமையலறைக்கு போய் விட இவர்கள் மட்டுமே கூடத்தில் இருந்தனர்.

காயத்ரி மிகுந்த ஆவலோடு அதை சாப்பிட விஸ்வநாதன் தான் அவளை வம்பிழுத்தான்.

" காயத்ரி! வாங்கிண்டு வந்தேனே? என்னையோ இல்ல அம்மா அத்தை யாராவது கொஞ்சம் வேணுமான்னு கேட்டியா? கொஞ்சினதெல்லாம் எல்லாம் பேச்சோட சரியா?"

அவன் கேட்கவும் வேகமாய் இன்னும் கொஞ்சம் வாயில் அடைத்துக் கொண்டவள் "பாசம் எல்லாம் பாப்டி சாட்ல காட்டப்படாதுன்னா.. வேணும்னா உங்களுக்கு மட்டும் சமோசால கொஞ்சம் தரேன்..."

என்றவள் சமோசா ஓரத்தில் கொஞ்சம் பிய்த்து அவன் முகத்திற்கு நேரே நீட்ட அவள் கையை அவள் வாய்க்கே திருப்பினான்.

" இவ்ளோ பெரிய தியாகம் எல்லாம் வேண்டாம்மா...! நீயே சாப்பிடு..."

என்றவனை அதன் பிறகு எல்லாம் தீரும் வரை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

மூவரும் அவளை அன்று முழுக்க பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்டதில் காயத்ரிக்கு அப்படியொரு சந்தோசம். அந்த மகிழ்ச்சியோடு தங்கள் அறைக்கு இரவு வந்தவளை விஸ்வநாதன் கவலையோடு பார்த்தான்.

இன்னும் அவள் முகத்திலும் நைட்டியில் வெளியில் தெரிந்த அவள் உடலிலும் தெரிந்த சிவப்பு அவள் எவ்வளவு வேதனை பட்டிருக்க வேண்டும் என்று காட்டியது.

அவனருகில் வந்து அமர்ந்தவளை தன்னருகே மெல்ல அணைத்து ஒரு கையால் அவள் முகம் தோள் கழுத்து என பார்க்க அவள் சிவந்த நிறத்திற்கு அது நன்றாகவே தெரிந்தது.

"பாவம் டா பட்டூ! ரொம்ப பட்டுனுட்டியா..!" என்று வருத்தத்துடன் கேட்டவன் அங்கிருந்த மருந்து பாட்டிலையும் மயில் தோகை ஒன்றையும் எடுத்தான்.

காயத்ரிக்கு இப்போது அவன் இந்த அறையில் இருக்கும் போது காட்டும் நேசம் தான் பழகி விட்டதே..

அவள் ஆம் என்பது போல தலையசைக்க "இந்த மருந்து தீப்புண்ணுக்கு நன்னா கேக்கும். நானே என் கையால போட்டு விடணும்னு காத்திண்டு இருந்தேன். நீ அத்தையோட படுத்து தூங்கிட்டே.. இப்போ போட்டுக்கோ..."

என்றவன் மருந்தை அந்த தோகையில் நனைத்து அவள் காயம் பட்ட இடம் முழுதும் பூச அந்த மருந்தின் இதமோ அல்லது விஸ்வநாதனின் அன்போ எரிச்சல் முற்றிலும் மறைந்தது.

அந்த இடத்தை வேறு உணர்வுகள் ஆக்கிரமிக்க அவள் பார்வை மாறியதை சிரத்தையாக மருந்தை பூசிக் கொண்டிருந்த விஸ்வநாதன் கவனித்தான்.

தோகையை மீண்டும் பாட்டிலிலேயே வைத்தவன் "பட்டூ..! இன்னும் எங்கெங்கே பட்டிருக்குன்னு காட்டு...! அங்கேயும் மருந்து போடணும்...." என்று அவள் நைட்டியின் மேல் கை வைக்க அதன் பிறகு மருந்து இருவருக்குமே மறந்து போனது.
 

Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom