என்றென்றும் வேண்டும்-14
யஜ்’ – வழிபடுவது – என்ற தாதுவிலிருந்து யஜுஸ், யக்ஞம் என்ற இரண்டும் வந்திருக்கின்றன. ‘ரிக்’ என்றாலே எப்படி ஸ்தோத்திரம் என்று அர்த்தமோ, அதே மாதிரி ‘யஜுஸ்’ என்றாலே யக்ஞ ஸம்பந்தமான வழிபாட்டுக் காரியக்ரமத்தை விவரிப்பது என்று அர்த்தம் ஆகிறது. இதற்கேற்றாற்போல் ரிக்வேதத்திலுள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் என்கிற காரியத்தில் பொருத்திக் கொடுப்பதே ( practical application ) யஜுர்வேதத்தின் முக்கியமான லக்ஷ்யமாக இருக்கிறது.
ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் இதிலும் கூறப்படுகின்றன. அதோடு கூட உரை நடையில் யக்ஞம் முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக் வேதம் உதவுவது போல காரியத்தில் வழிபாடு பண்ண யஜுர்வேதம் முக்கியமாக உபகாரம் செய்கிறது.
யஜுர் வேதம் தனக்குள்ளேயே நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது. இந்தப் பிரிவுகளுக்கு சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று பெயர். ‘சுக்லம்’ என்றால் வெளுப்பு. ‘கிருஷ்ணம்’ என்றால் கறுப்பு. சுக்ல யஜுர் வேத ஸம்ஹிதைக்கு “வாஜஸநேயி ஸம்ஹிதா” என்றும் பெயருண்டு. “வாஜஸநி” என்பது சூரியனுடைய பெயர். சூரியனிடமிருந்தே யாக்ஞவல்கிய ரிஷி இந்த ஸம்ஹிதையை உபதேசிக்கப் பெற்று, லோகத்துக்குக் கொண்டு வந்ததால், இதற்கு வாஜஸநேயி ஸம்ஹிதா என்று பேர் ஏற்பட்டது.
இதைப்பற்றி ஒரு பெரிய கதை உண்டு. சுருக்கமாகச் சொன்னால், யாக்ஞவல்கியருக்கு முன்னால் யஜுர் வேதம் ஒன்றாகத்தான் லோகத்துக்கு வெளி வந்திருந்தது. அந்த யஜுர் வேதத்தை வைசம்பாயனரிடமிருந்து யாக்ஞவல்கியர் கற்றுக்கொண்டார். அப்புறம் வைசம்பாயனருக்கும் யாக்ஞவல்கியருக்கும் மனஸ்தாபம் உண்டான போது, குருவானவர் சிஷ்யரிடம், “நான் கற்றுக் கொடுத்ததை எல்லாம் திரும்பக் கக்கி விடு” என்றார். அவர் சொல்வது நியாயம்தான் என்று அப்படியே யாக்ஞவல்கியர் கக்கிவிட்டு, சூரியனை குருவாக ஏற்றுக்கொண்டு சரணாகதி செய்தார். அனந்தமான வேதங்களில் அதுவரை லோகத்துக்கு வராதிருந்த இன்னொரு வித யஜுர் வேதத்தை சூரிய பகவான் அவருக்கு உபதேசித்தார். அது வாஜஸநேயி என்றும், சுக்ல யஜுஸ் என்றும் பேர் அடைந்தது. இது ‘சுக்லம்’ என்பதால் ஏற்கெனவே வைசம்பாயனர் உபதேசித்தது இதற்கு மாறாக ‘கிருஷ்ண’ யஜுர்வேதம் என்று பெயர் பெற்றது.
கிருஷ்ண யஜுர் வேதத்தில் ஸம்ஹிதை, பிராம்மணம் என்று முழுக்கத் தனித்தனியாகப் பிரிக்காமல், ஸம்ஹிதா மந்திரங்களுக்கு இடையே அங்கங்கேயே ப்ராம்மண பாகங்களைச் சேர்த்திருக்கிறது. கலந்து போனதை ‘கிருஷ்ண’ என்று சொல்வது வழக்கமாதலாலேயே இந்த வேதத்திற்கு அப்படிச் பெயர் வந்ததாகவும், கலக்காமல் தனித்தனியே ஸ்வச்சமாயிருப்பதை ‘சுக்லம்’ என்று சொல்லும் வழக்கப்படி மற்றது அந்தப் பேர் பெற்றதாகவும் சொல்கிறார்கள்.
அத்தனை தேவதைகளுக்குமான ஸ்தோத்திர மயமாக இருப்பது ரிக்வேதத்தின் பெருமை. அதோடு சமூக வாழ்க்கை முறைகளையும் அதுவே நன்றாக எடுத்துச் சொல்கிறது என்று அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக ஸூரியனுடைய புத்திரியின் கல்யாணத்தைப்பற்றி அது சொல்லியிருப்பதை அனுஸரித்துத்தான் விவாஹச் சடங்கே உருவாகியிருக்கிறது. புரூரவஸ்- ஊர்வசி ஸம்வாதம் [உரையாடல்] போன்ற பல நாடக விசேஷமுள்ள பகுதிகளும் ரிக்வேதத்தில் உண்டு. பிற்காலத்தில் காளிதாஸர் இவற்றை விஸ்தரித்து எழுதியிருக்கிறார். உஷஸ் [விடியற்காலையின் அதிதேவதை] பற்றிய வர்ணனை போன்ற ரிக் வேதப் பகுதிகளை, மிக உத்தமமான கவிதை என்று ரஸிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
இரண்டு நாட்களாக காயத்ரி விஸ்வநாதனிடம் பேசவே இல்லை. விஸ்வநாதனும் சமாதானம் செய்ய முயலவில்லை. நாள் முழுவதும் விஸ்வநாதனுடன் கண்ணாமூச்சி விளையாடினாள்.
அவன் கூடத்தில் இருந்தால் அவள் சமையலறையில் இருந்தாள். அவன் அங்கே வந்தால் இவள் கூடத்துக்கு போய் அங்கிருக்கும் நாற்காலியில் பொத்தென்று உட்கார்ந்து கொள்வாள்.
இரவில் அவர்கள் அறையில் அவன் வருமுன்பே கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு போர்வையையும் தலை வரை போட்டுக் கொண்டு அவனுக்கு முதுகை காட்டி படுத்துக் கொள்வாள்.
கோபமாக இருக்கிறாளாம்.
பத்மாவும் சொல்லிப் பார்த்து விட்டு விஸ்வநாதன் கேட்கிற வழியாய் இல்லை என்று தெரிந்ததும் 'எப்படியோ போங்க' என்று விட்டு விட்டார்.
எல்லாம் பால் கொடுத்த ஹனிமூன் பேக்கேஜால் வந்த வினை.
காயத்ரி மறுநாள் காலையிலேயே விஸ்வநாதன் ப்ரோஹிதத்திற்கு கிளம்பும் போதே ஆரம்பித்து விட்டாள்.
"அம்மா! நேத்திக்கு நாங்க ஆபிஸ் பார்ட்டிக்கு போனோமோல்லியோ? அங்க எங்க பாஸ் நாங்க மூணு நாள் கோவா போறதுக்கு கூப்பன் குடுத்திருக்கா. அங்க போக வர தங்க எல்லா செலவும் கம்பெனிலேயே ஏத்துன்ட்றுவா. அடுத்த வாரம் நான் ஜாயின் பண்ணனும். நாங்க எப்பம்மா போய்ட்டு வரட்டும்?"
விஸ்வநாதன் அம்மாவின் பேச்சுக்கு தான் கட்டுப்படுவான் என்று அனுபவத்தில் கண்ட உண்மை அவளை அவனிடம் கூட கேட்காமல் நேராக மாமியாரிடம் பேச வைத்தது.
பின்னே?
உள்ளூரில் நடக்கும் பார்ட்டிக்கே வர மாட்டேன் என்று முறைத்தவன் நிச்சயம் கோவா வர மாட்டான் என்று நேராக மேலிடத்தில் முறையிட்டு விட்டாள்.
விஸ்வநாதன் ஏற்கனவே கிளம்பி போவதற்கு முன்னால் சில விவரங்கள் கேட்பதற்காக வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான். காயத்ரி அவன் முகத்தைக் கூட பார்க்காமல் பத்மாவிடம் தான் பேசினாள்.
பேசிவிட்டு 'இப்ப அம்மா ஆர்டர் போடுவா. தன்னாலே கோவா என்ன அண்டார்டிகாவுக்கே கூப்பிட்டா கூட நீங்க வருவேள்னா..!' என சிறிது அலட்சியத்துடன் அவனைப் பார்த்தாள்.
விஸ்வநாதன் ஒரு சிறு ஏளன சிரிப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க பத்மா காயத்ரி எதிர்பார்த்த மாதிரியே
"ஏன்டா அம்பி! குழந்தை சொன்னதை கேட்டுண்டு தானே இருந்தே? ரெண்டு பேருமா போய்ட்டு வாங்கோளேன்."
பேச்சை எளிதாய் முடித்து விட்டார்.
விஸ்வநாதன் காயத்ரியை ஒரு பார்வை பார்த்து விட்டு "அம்மா! அவ என்ன சொன்னாலும் ஏத்துண்டு வருவியா? இந்த மாசம் நிறைய முஹூர்த்தம் இருக்கு. நிறைய இடத்துல ஒத்துண்டுருக்கேன். அதெல்லாம் இப்போதைக்கு என்னால எங்கயும் போக .முடியாது. நான் கிளம்பறேன்."
என்று பட்டென்று சொன்னவன் அப்படியே கிளம்பிவிட காயத்ரிக்கு ரோஷத்தில் கண்களில் நீர்.
பத்மா அவளை அரவணைத்துக் கொண்டார்.
"விடு காயத்ரி. அவனுக்கு நிறைய வேலை இருக்கோ என்னவோ? அப்புறமா அழைச்சிண்டு போவான்.சரியா?"
ஆனால் காயத்ரி தான் விடுவதாக இல்லை. தன் கோபத்தை அவனைக் கண்டாலே ஓடி ஒளிவதில் காட்டினாள். விஸ்வநாதன் எல்லாம் கவனித்தாலும் கண்டுகொள்வதாக இல்லை. பத்மா மறுபடியும் சிபாரிசுக்கு வந்த போதும் விஸ்வநாதன் வேலை இருக்கிறது என்று மறுத்து விட்டான்.
விஸ்வநாதனுக்கு இந்த முறை காயத்ரி தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் நேராக அம்மாவிடம் போனதில் கொஞ்சம் கோபம் தான். அதற்கு பழி வாங்குவதாக அவள் நடந்து கொண்ட விதத்தில் அவனுக்கு சிரிப்பு வர கோபம் கொஞ்சம் குறைந்தது.
ஆனாலும் அவள் செய்தது போலவே அம்மாவிடம் மட்டுமே அதற்கு விளக்கம் கொடுத்தவன் அவளிடம் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளை சமாதானம் செய்யவும் முயலவில்லை.
இரவில் அவனுக்கு முன்பே போய் படுத்து போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு பூனை போல சுருண்டு கொள்பவளை ஆசையாய் பார்த்து "என் பட்டூ..நீ க்யூட் பொண்டாட்டி டி' என்று சொல்லிக் கொண்டான்.
தொண்டையை லேசாக கனைத்து "போர்வையை தலை வரைக்கும் மூடிண்டா அப்புறம் மூச்சு விட முடியாது..." என்று சத்தமாக சொல்ல காயத்ரியின் போர்வை தானே முகத்தில் இருந்து இறங்கியது.
விஸ்வநாதன் பேசாமல் அவளுக்கு மண்டையே வெடித்து விடும் போலிருந்தது. ஆனால் தான் போய் பேசவும் வீராப்பு விடவில்லை.
'பட்டூன்னுண்டு இப்ப பக்கத்துல வரட்டும். பட்டுனு குடுக்கறேன்..' என்று முதுகை அவன் புறம் திருப்பிக்கொண்டு படுத்து காத்திருந்தவளை விஸ்வநாதன் நெருங்கவே இல்லை. கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு லேசாய் திரும்பிப் பார்க்க விஸ்வநாதனும் அவளுக்கு முதுகைக் காட்டி மறுபக்கம் படுத்திருந்தான்.
கண்ணைத் திறந்து பார்த்தால் இருளில் சுற்றிலும் இருந்த நிழல்கள் பேய் போல தெரிய "நிஜமாவே இந்த ரூம்ல என்னவோ இருக்கோ" என்று மெல்லிய குரலில் சொல்லியபடி சுற்றிலும் பார்த்தாள். கண்ணை மூடினாலும் பயமாக இருக்க கொஞ்ச நேரம் புரண்டு படுத்தாள்.
அப்போதும் பயமாக இருக்க மெள்ள தூக்கத்தில் நகர்வது போல நகர்ந்து அவன் முதுகை தொடுவது போல படுத்துக் கொண்டவளுக்கு அதன் பிறகே தூக்கம் வந்தது.
விஸ்வநாதனும் தூங்காமல் அவள் புரண்டு படுப்பதை கவனித்துக்கொண்டு தான் இருந்தான். அவள் ரூமைப் பற்றி சொன்னதும் அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
புன்னகையுடனே படுத்திருந்தவன் கொஞ்ச நேரத்தில் அவள் உறங்கி விட்டாள் என்று அவளின் சீரான மூச்சில் தெரிந்ததும் மெல்ல அவள் பக்கம் திரும்பினான்.
உண்மையில் இந்த ஒரு வாரமாய் அவளை தன் கையணைப்பிலேயே வைத்திருந்து விட்டு இன்று அவனாலும் தூங்க முடியவில்லை.
"ஆமாண்டா பட்டூ..இந்த ரூம்ல என்னவோ இருக்கு..." என்று சின்ன குரலில் முணுமுணுத்தான். அவன் பட்டூ தூங்கி விட்டால் அதன் பிறகு அவளுக்கு தூக்கத்தில் எது நடந்தாலும் தெரியாது என்று தெரியும்.
அதனால் துணிவுடன் அவள் இடையில் கை போட்டுக் கொள்ள காயத்ரிக்கு தூக்கத்தில் தான் விஸ்வநாதனுடன் டூ விட்டது காலையில் அதிசயமாய் காயத்ரி முதலில் கண் விழிக்க அவள் வழக்கம் போல விஸ்வநாதனின் மார்பில் முகம் புதைத்திருந்தாள்.
வசதியாய் அவன் கையில் படுத்து அவன் இடையில் கையைப் போட்டுக் கொண்டு படுத்திருந்தவளுக்கு சில நொடிகளுக்குப் பிறகே தான் விஸ்வநாதன் மேல் கோபமாய் இருப்பது நினைவுக்கு வந்தது.
'என்னதிது கட்டிண்டிருக்கேன்..?'
என்று தூக்கி வாரிப் போட விஸ்வநாதனைப் பார்க்க அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை பார்த்தவள் 'அப்பாடி' என்று வேகமாய் அவள் கையை உருவிக் கொண்டு அவசரமாய் எழுந்தாள்.
மேலே அங்கே நின்றால் மானம் போகுமென்று அவசர அவசரமாய் அறையை விட்டு வெளியே போக அதுவரை கண்ணை மூடியிருந்த விஸ்வநாதன் கண்களை ஒரு புன்னகையோடு திறந்தான்.
கண்ணை மூடியிருந்தாலும் காயத்ரியின் பதட்டம் உணர்ந்தே இருந்தான். இரவில் தான் தான் அவளை அணைத்தது என்று கூட தெரியாமல் தூங்கிவிட்டு இப்போது ஓடுபவளை நினைத்து சிரித்தவன் மெல்ல எழுந்து படுக்கையை சரி செய்து விட்டு மெல்ல அவளை பின்தொடர்ந்தான்.
காயத்ரி சமயலறையில் அத்தையோடு பேசிக் கொண்டு காபி குடித்துக் கொண்டிருந்தாள். டம்ளரை வைத்து பாதி முகத்தை மறைத்துக் கொண்டவள் கண்களை மட்டும் மேலே உயர்த்தி அவனை பார்த்தவள் அவன் பார்ப்பது தெரிந்ததும் படக்கென்று கண்களை தாழ்த்திக் கொண்டாள்.
அவளை பார்த்தவன் வேண்டுமென்றே அம்மாவிடம் வம்பிழுத்தான்.
"சின்ன வயசுல நாங்கல்லாம் டம்ளரை வாயில வெச்சு குடிச்சா எச்சை பண்ணாதேனு முதுகுலேயே ஒண்ணு போடுவே..இப்ப உன் மாட்டுப்பொண்ணு என்ன பண்ரா பாரு.."
பத்மா அவன் சொன்னதும் காயத்ரியை பார்க்க அவள் பாவமாய் "காபி கொதிக்கிறது மா..அதான்..." என்று இழுக்க "என் கிட்ட சொல்ல வேண்டியது தானே காயத்ரி? கொண்டா ஆத்தி தரேன்..." என்று ஒரு கிண்ணத்துடன் போனார்.
அவளிடமிருந்து டம்ளரை வாங்கி காப்பியை ஆத்த விஸ்வநாதனை நக்கலாக ஒரு பார்வை பார்த்தாள்.
"அம்மா! இதெல்லாம் கொஞ்சம் கூட நன்னாயில்லை..."
என்று விஸ்வநாதன் மீண்டும் அம்மாவிடம் சண்டைக்கு போக
"டேய்! கலங்காத்தாலயே உன் சேஷ்டையை ஆரம்பிச்சிட்டியா? சும்மா அவளை ஏதானும் சொல்லிண்டு? போய் ஏதானும் வேலை இருந்தா பாருடா.." என்று அதட்ட விஸ்வநாதன் சிரித்தபடியே போனான்.
அன்றும் கண்ணாமூச்சி தொடர விஸ்வநாதனும் கண்டுகொள்ளவே இல்லை.
மாலையில் அவன் வீட்டுக்கு வரும் போது வழக்கத்துக்கு மாறாக கூடத்தில் யாருமே இல்லை. என்னவோ என்று கவலையுடன் "அம்மா! அத்தை..!" என்று குரல் கொடுக்க பத்மா பின்கட்டில் இருந்து குரல் கொடுத்தார்.
"நாங்க இங்க பின்னால இருக்கோம்...இங்க வா.."
விஸ்வநாதன் என்னவோ என்று பின்னால் போக பாதி தூரத்திலேயே யாரோ ஓங்கரித்துக்கொண்டு வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. பதறிப்போய் வேகமாய் நடந்தான்.
அங்கே காயத்ரி வாந்தி எடுத்துக் கொண்டிருக்க அத்தை அவளை அணைத்து பிடித்துக் கொண்டிருந்தார். பத்மா கையில் செம்பில் தண்ணீரோடு அவள் தலையை பிடித்துக் கொண்டிருக்க அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
கண்களில் நீரோடு தலை கலைந்து முகமே சிவந்திருக்க காயத்ரி அவன் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் பார்வையில் தெரிந்த சோக பாவத்தில் தன் கொள்கையையும் மீறி "காயத்ரி..! என்ன ஆச்சு?" என்று பதறிக் கொண்டு கிட்டே போக "அவ மேலே படாதேடா! அவ ஆத்துல இல்ல.." என்று பத்மா அவசரமாய் குரல் கொடுத்தார்.
அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் விஸ்வநாதன் விழித்தாலும் கேட்க அது நேரமில்லை என்று தள்ளியே நின்றான்.
பார்வை அவன் பட்டூவை பரிதாபமாய் வருடியது.
"அம்மா! நான் போய் சோடா ஏதானும் வாங்கிண்டு வரவா?"
"காத்தாலேந்து வெறும் வயித்தோட இருக்கா. இதுல சோடா குடிச்சா இன்னும் வயித்த வலிக்கும் டா..வேண்டாம்.."
அதற்குள் காயத்ரி சோகமாய் "அத்தை வாந்தி எடுத்ததுல மூக்குலலாம் ஏறிண்டு எரியறது..?" என்று சோர்வாய் சொல்ல விஸ்வநாதனுக்கு அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு "அழாதேடா பட்டூ .." என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.
அத்தைக்கும் பத்மாவுக்குமே அவளை பார்த்து அப்படி தோன்றியது போலும்.
"அழாதே கோந்தே! பொம்மனாட்டிகளா பொறந்தாலே இந்த அவஸ்தையெல்லாம் பட்டு தான் ஆகணும்.." என்று அத்தை அவள் முதுகை வருட பத்மா ஜில்லென்று தண்ணீரால் அவள் முகத்தை துடைத்தார்.
லேசான தள்ளாட்டத்துடன் எழுந்தவளை இருவரும் இரு பக்கமும் பிடித்துக் கொள்ள விஸ்வநாதன் அவசரமாய் கேட்டான்.
"அம்மா! நீங்க ரெண்டு பேரும் நகந்துக்கோங்கோ. நான் அவளை தூக்கிண்டு வரேன்.."
"அம்பி! அவளைத் தொட்டா தீண்டல் டா. பூணல் போட்டுண்ட ஆம்பளை தொட்டா காயத்ரி சொல்றதுக்கே பலன் இல்ல.."
என்றவர் அதற்கு மேல் விளக்காமல் காயத்ரியை அழைத்துக் கொண்டு சமையல் அறைக்கு பக்கத்தில் இருந்த அறைக்கு போனார்.
விஸ்வநாதனுக்கு தெரிந்தவரை முன்பு எப்போதாவது பாடசாலையில் இருந்து வரும் போது அம்மா அந்த மூன்று நாட்களில் அந்த அறையில் உட்கார்ந்திருப்பார்.
சமீப காலமாக காலியாகவே இருந்த அறையை அவசர அவசரமாக சுத்தம் செய்திருந்தது தெரிந்தது.
அங்கே தரையில் பாய் விரித்திருக்க ரெக்ஸின் தலையணை ஒன்று இருந்தது.
"அம்மா! இதுல படுத்துண்டா முதுகு குத்தறது..." என்று காயத்ரி முனக பத்மா
"சித்த பொறுத்துக்கோ காயத்ரி. விச்சு வந்துட்டான். அவனைப் போய் உனக்கு கட்டில் மெத்தை எல்லாம் வாங்கிண்டு வந்து போட சொல்றேன்.
அதுவரைக்கும் நீ அத்தை மடில தலை வெச்சி படுத்துக்கோ. நான் உன் காலை அமுக்கி விடறேன். விச்சு போயிட்டு வரியா?"
என்று விஸ்வநாதனுக்கு கட்டளை இட்டார்.
விஸ்வநாதன் போய் கட்டில் ரெக்சின் மெத்தை வாங்கி வண்டியில் ஏற்றிக் கொண்டு வீடு வரும்போது வீடே அமைதியாய் இருந்தது.
விஸ்வநாதன் நேராக காயத்ரி இருந்த அறைக்கு போக அங்கே காயத்ரி அத்தையின் மடியில் படுத்து அவர் கையை தன் வயிற்றில் வைத்துக் கொண்டிருந்தாள். கண்கள் மூடியிருக்க பார்க்கவே பாவமாக இருந்தது.
ஒரே நாளில் வாடியிருந்தாள் காயத்ரி.
அவன் கட்டில் மெத்தை வாங்கி வந்திருப்பதை சொல்லவும் அத்தை "அவாளை வெளிலயே வெச்சுட்டு போக சொல்லு. இப்ப தான் அவ சித்த அசந்திருக்கா. கொஞ்ச நேரம் கழிச்சு அவ எழுந்ததும் எடுத்து உள்ள போட்டுக்கலாம் அம்பி!" என்று விட்டார்.
சொன்னது போலவே காயத்ரி கொஞ்ச நேரம் கழித்து கண் விழிக்கவும் பெண்கள் இருவருமாக கட்டிலை எடுத்து உள்ளே போட்டு சரி செய்தனர்.
விச்சு எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. பழமையில் ஊறியவர்களுக்கு இத்தனை வருடம் கழித்து அதை மாற்றிக் கொள்ள மனம் வரவில்லை.
ஆறு மணிக்கு மேல் பத்மா போய் தலைக்கு குளித்து விட்டு வர அத்தை அப்போதும் காயத்ரியோடு தான் உட்கார்ந்திருந்தார்.
விஸ்வநாதனை பார்த்ததும் காயத்ரி பாவமாய் பார்த்துவிட்டு தலையை குனிந்து கொள்ள விஸ்வநாதனே பேசினான்.
"காயத்ரி ..! என்ன பண்றது நோக்கு? ரொம்ப முடியலியா? டாக்டர் கிட்ட வேணா போயிட்டு வரலாமா?" என்று மனம் தாங்காமல் கேட்டான்.
அதற்குள் பத்மா "விச்சு..!" என்று சமையல் அறையில் இருந்து அழைக்க "இதோ வரேன் இரு.." என்று அம்மாவிடம் போனான்.
"விச்சு! எல்லா பொம்மனாட்டிகளுக்கும் இது வரது தான். இதுக்கெல்லாம் மாசா மாசம் மாத்திரை சாப்பிட்டுண்டே இருந்தா அவ உடம்பு தான் வீணா போகும். வயசானாவிட்டு அவஸ்தை. அத்தை அவ வயித்து வலிக்கு வெளக்கெண்ணை வெச்சு தேச்சு விட்டா. நான் அமிர்தாஞ்சனம் வெச்சு அவளுக்கு கால் வலிக்கு அமுக்கி விட்டேன். இப்போ கொஞ்சம் கஷாயம் போடப் போறேன். ஜானகிக்கு போன் பண்ணி கேட்டேன். அவளுக்கு எப்பவுமே இப்படி தான் படுத்துமாம்...சொல்றா."
"ஏம்மா! ஒரே நாள்ல ஓஞ்சு போய்ட்டாளே.. நீ வேற காத்தாலேருந்து சாப்பிடலைனு சொல்றே. மயங்கி கியங்கி விழுந்துடப் போறா மா..?"
விஸ்வநாதன் கவலையாய் கேட்டான்.
"காத்தால காயத்ரி ஆத்துல இல்ல. எனக்கு வயத்தை வலிக்கிறது அப்படின்னு சொன்னதுமே பயந்து போய் ஜானகிக்கு தான் போன் போட்டேன். அவ தான் சொன்னா. அவா பாக்கற டாக்டர் கிட்ட கேட்டதுக்கு எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாளாம்.
ரெஸ்ட் எடுத்தா போறும். மேலாக ஏதானும் வேணா போடுங்கோ. முடிஞ்சவரை மாத்திரை ஒண்ணும் வேண்டாம்னு சொல்லிட்டாளாம். ரொம்ப முடியலைன்னா போட்டுக்க சொல்லி மாத்திரை சொன்னா. அதையும் வாங்கியாச்சு. காயத்ரி அதையும் சாப்பிட்டு வாந்தி எடுத்துட்டா.
அத்தையும் காத்தால சாப்டது தான். நோக்கே தெரியுமே. அவா மடி ஆஜாரம் பத்தி. அப்படியும் அவளோடேயே உக்காந்துன்னுட்டா. காயத்ரியும் விடவே இல்ல. அவா கைய பிடிச்சிண்டு அன்னண்ட இன்னண்டை நகர விடல. அதான் நானும் கூடவே போய் உக்காந்துனுட்டேன்.
நீ சாப்பிடு. நான் அவளுக்கு புழுங்கலரிசி கஞ்சி வெச்சு எடுத்துண்டு போறேன்.."
என்றவர் அவன் சாப்பிடுவதற்குள் கஞ்சி போட்டார்.
வீட்டில் யாரும் சாப்பிடவில்லை என்றதும் விஸ்வநாதனுக்குமே சாப்பிட பிடிக்கவில்லை. கொஞ்சம் ரசம் சாதம் மட்டும் சாப்பிட்டு எழுந்து கொண்டான்.
அம்மா கஞ்சி கொண்டு போகும் போது கூடவே போனான்.
காயத்ரி ஒரு வாய் கஞ்சி குடிக்கவே பயந்தாள். பத்மா வெளியிலேயே கஞ்சியும் டம்ளரும் வைக்க அத்தை எடுத்துக் கொடுத்தார்.
"வேண்டாம் அத்தை..! மறுபடியும் வாந்தி வரும். எனக்கு மூக்கெல்லாம் எரியறது. தொண்டை எரியறது..." என்று அழவே ஆரம்பித்து விட பத்மா தான் அதட்டினார்.
"இப்ப நீ அத்தை குடுக்கற கஞ்சிய குடிக்கலைனா நான் தான் உள்ள வந்து போட்டப் போறேன். என்ன சொல்றே?"
காயத்ரிக்கு எப்போதுமே மாமியாரிடம் கொஞ்சம் பயம். அத்தையை ஏய்ப்பவள் மாமியாரிடம் அடங்கி விடுவாள்.
அரை மணி நேரம் கெஞ்சி கூத்தாடி அரை டம்ளர் கஞ்சியை மூவருமாக குடிக்க வைத்தனர். அதற்கு மேல் முடியவே முடியாது என்று காயத்ரி மறுத்து விட இருவரும் களைத்துப் போய் விட்டு விட்டனர்.
"அத்தை..! நீங்க போங்கோ. நான் இங்க வெளில தான் உக்காந்துண்டு இருக்கேன். நீங்களும் அம்மாவும் ஏதானும் சாப்பிட்டு வாங்கோ.." என்று விஸ்வநாதன் சொல்லிப் பார்த்தான்.
அத்தை அதை கேட்கிற வழியாய் இல்லை.
"அம்பி! ஏகாதசிக்கு எத்தனை நாள் உபவாசம் இருந்திருக்கேன். கோந்தே படற பாட்டை பாத்தா எனக்கு விட்டுட்டு போகவே மனசில்லை. ஒரு நாள் தானே, பரவாயில்ல. விடு..."என்று மறுத்து விட்டார்.
அன்று இரவு அத்தையையும் அம்மாவையும் வற்புறுத்தி பழங்களை சாப்பிட வைத்தவன் ஜூஸ் வாங்கி காயத்ரியையும் வந்து குடிக்க வைத்தான்.
அத்தை அவளோடு அந்த அறையிலேயே தங்கி விட வெளியே பத்மா படுத்துக் கொண்டார். விஸ்வநாதனை அறையில் படுத்துக்கொள்ள சொல்லியும் அவனுக்கு தான் மனம் கேட்கவில்லை.
ஒரு ஈஸி சேர் கொண்டு வந்து போட்டுக் கொண்டவன் அதிலேயே படுத்து விட்டான். அடுத்த இரண்டு நாட்களும் தான் ப்ரோஹிதத்துக்கு போக வேண்டிய இடங்களுக்கு மற்றவர்களை அனுப்பி விட்டு வீட்டிலேயே இருந்தான்.
மூன்று நாட்களும் இப்படி வீட்டில் இருந்தவர்களை எல்லாம் கலக்கி விட்டு ஒரு வழியாக காயத்ரிக்கு உடம்பு சரியானது.
மூன்று நாட்களாய் சரியான தூக்கமில்லாமல் விழித்த பெரியவர்கள் அன்று ஏழு மணிக்கே படுக்கப் போய்விட காயத்ரி தங்கள் அறைக்கு வந்தாள்.
மூன்று நாட்களாய் இருவரும் தனிமையில் சந்திக்க வாய்ப்பில்லாமல் போக பேசியதே ஓரிரு வார்த்தைகள் தான். அதனால் விஸ்வநாதன் என்ன சொல்வானோ என்று யோசித்துக் கொண்டே வந்தாள்.
விஸ்வநாதன் அவள் உள்ளே நுழைந்ததும் எழுந்து வந்தவன் தன் இரு கைகளாலும் அவளை தூக்கினான்.
கட்டிலில் அமர்ந்தவன் அவளை மடியில் அமர்த்திக் கொண்டு "பட்டூ .." என்று அழைத்தான்.
அந்த ஒரு வார்த்தையிலேயே அத்தனை அன்பும் காதலும் ஆதுரமும் இருந்தது.
காயத்ரி ஆச்சரியமாய் அவனைப் பார்க்க
"நான் பாடசாலையில் பசங்களோடவே வளந்தவன். கூட யாரும் பொம்மனாட்டிகள் கிடையாது. கூட பொறந்தவனும் பையன் தான். அதனால பொண்களோட கஷ்டத்தை பக்கத்துல இருந்து பாத்ததே கிடையாது.
அம்மா எதையும் வெளில காமிச்சுக்க மாட்டா. அந்த வயசுல எனக்கு கேட்கவும் தோணினதில்ல. ஆனா இந்த மூணு நாளா நீ படற கஷ்டத்தை பாத்துட்டு.."
என்று உணர்வு பூர்வமாக பேசியவன் அவளைத் தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
அவள் இதழ்களில் மென்மையாய் ஒரு முத்தம் வைத்தவன் "மூணு நாளா நீ தூங்கவே இல்லடி பட்டூ. தூங்கு.." என்று அவளை தூக்கி மெத்தையில் அவள் இடத்தில் படுக்க வைத்தவன் தானும் படுத்து கொண்டான்.
எப்போதும் போல அவள் இடையில் அவன் கை போட்டாலும் அதில் கூட ஒரு மென்மை. இதுவரை விஸ்வநாதன் இப்படி மென்மையாய் பேசி பார்த்தேயிராத காயத்ரி ஒரு பிரமையில் இருக்க அதிலிருந்து வெளியே வரும் போது இருவரும் இன்னும் கொஞ்சம் மனதளவில் நெருங்கி விட்டது போல தோன்றியது.
Author: siteadmin
Article Title: என்றென்றும் வேண்டும்-14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்றென்றும் வேண்டும்-14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.