• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உருகியோடும் 1

Sungudi

Moderator
Joined
Apr 6, 2025
Messages
9
வணக்கம் நண்பர்களே சுங்குடி என்ற புனைப்பெயருடன் எழுத வந்திருக்கும் நான், இதோ என் கதையின் முதல் அத்தியாயத்தைப் பதிவு செய்கிறேன். படித்துவிட்டுக் கருத்துக்களைக் கூறுங்கள். நன்றி.

அத்தியாயம் 1

சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள்


விளக்கு முன்னால், அஞ்சறைப் பெட்டியில், கைப்பையில், மேஜை டிராயரில் எங்கும் தேடிச் சலித்துப் போனாள் சித்திரை வடிவு. காலையிலிருந்து செய்யும் வேலைகளில் படபடப்பாகவே செய்தாள்.

அம்மாவைக் கேட்க மனமில்லை. சரி இருக்கட்டும் என்று புதுப் புடவையை எடுத்துக் கொண்டு அறையில் நுழைந்து கதவைத் தாளிட்டாள். அரக்குக் கலரில் கம்பி ஜரிகை வைத்து பட்டுச் சேலை போல் பளபளத்தது புடவை. ஆனாலும் அது பட்டு அல்ல, கைத்தறிச் சேலை தான்.

“டீ சித்தூ.. நாளைக்குக் கைத்தறி தினம்ல. அன்னைக்கு எல்லார்கிட்டயும் முன்னூறு ரூபா வாங்கினாங்கல்ல.. சேலைங்க வந்துடுச்சு பாரு.. இந்தா, உனக்கு என்ன கலர் வேணும்னு பாரு” மூன்று வண்ணங்களை மணிமேகலை காட்டிய போது, இந்த அரக்கைத் தான் தேர்ந்தெடுத்தாள் சித்திரை வடிவு‌.

‘கல்யாணத்துக்கு வழக்கமா அரக்கு தானே கட்டுவாங்க’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். ஏற்கனவே புடவைக்கு மஞ்சள், குங்குமம் இரண்டும் வைத்து, தங்கக் கலரில் போன தீபாவளிக்குத் தைத்த பிளவுஸை இரவே எடுத்து வைத்திருந்தாள்.

புடவையைக் கட்டத் துவங்குகையில் அவள் அம்மா படபடவென கதவைத் தட்டி, “சித்ரா! ஏ சித்ரா! இந்தாடி.. என்ன பெரிய பந்தா பண்ணிக்கிட்டு சில்லறைக் காசு கேட்காமப் போற?” என்றபடி தங்க நாணயம் போல பளபளத்த புதிய பத்து ரூபாய் நாணயம் ஒன்றை நீட்ட, கதவைத் திறந்த சித்ரா, “தேங்க்யூ அம்மா! லவ் யூ” என்று பெற்றுக் கொண்டாள்.

இடுப்பில் செருகக் கூடிய புடவை நுனியை எடுத்து அதில் பத்திரமாக அந்த பத்து ரூபாய் நாணயத்தை வைத்துச் சுற்றி முடிச்சிட்டுக்கொண்டவள், அதை அப்படியே இடுப்பில் செருகினாள். அன்று என்னவோ புடவைக் கட்டு வழக்கத்தை விட நன்றாக வந்தது. தோளில் பின் குத்தும் இடத்திலாகட்டும், முன்னால் கொசுவம் வைக்கும் இடத்திலாகட்டும், மடிப்புகள் சீராகவும் நேர்த்தியாகவும் அமைந்தன.

“முத முதல்ல சேலை கட்டுறப்ப கரெக்டா மடிப்பு வந்துருச்சுன்னா, அதுக்கப்புறம் என்னைக்கு அந்த சேலையைக் கட்டினாலும் அதே மடிப்பு வரும்” தனக்கு முதன் முதலில் சேலை கட்ட சொல்லி தந்த அர்ச்சனாக்கா அன்று சொன்ன வார்த்தைகளை நினைத்துக் கொண்டாள்.

இப்படித்தான் சித்திரை வடிவுக்குப் பல வினோதப் பழக்கங்கள். சேலை கட்டும்பொழுது அது கட்டச் சொல்லித் தந்தவளை நினைத்துக் கொள்வது, ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கும் போது ‘முதல்ல கொஞ்சம் போல ஷாம்பு போட்டு தலை ஃபுல்லா தேச்சிட்டு அலசி விட்ரு, அதுக்கு அப்புறமா இரண்டாவது தடவை போடும் பொழுது நிறைய போட்டு அலசினால் தல பூவா வந்துரும்’ என்று எப்போதோ பிச்சம்மாள் பெரியம்மா சொன்னதை ஒவ்வொரு முறை தலைக்குக் குளிக்கும்போதும் நினைத்துக் கொள்வது என்று பலப் பலப் பழக்கங்கள்.

ஏழாம் வகுப்பில் ஒன்றாகப் படித்த ஜுலி, ‘நான் எப்பவும் தலைக்குக் குளிக்க போகும் போது ஒரு கிண்ணத்தை எடுத்துட்டுப் போயிடுவேன். இத்துனூண்டு ஷாம்பு ஊத்திட்டு ஒரு கை தண்ணி விட்டு நல்லா கலக்கி தேய்க்கணும்” என்று சொன்னதையும் ஒரு முறை கூட நினைக்க மறந்ததில்லை.

வேண்டுமென்றே நினைவு படுத்துகிறார் என்பதில்லை, ஆனால் இதெல்லாம் அவளுக்குத் தானாகவே நினைவுக்கு வந்து விடுகிறது. அவளும்தான் என்ன செய்வாள்?

நினைவுகள் மட்டுமல்லாமல், வினோதமான பழக்கங்களும் சித்திரை வடிவுக்கு நிறைய. “லூசாடி நீ? இதெல்லாம் செய்யலேன்னா உலகம் மாத்தி சுத்துமா?” என்று மணிமேகலை கேட்டால்,

“இதெல்லாம் சின்ன சின்ன ஆசை! முத்து ஆசை!” என்று பேச்சாகத் தொடங்கி பாட்டாக முடிப்பாள். குரலில் ஒரு குழைவும் துள்ளலும் இருக்கும். அந்தக் குழைவு அவளுக்கு மட்டுமே வாய்க்கும். அதே போல் சொல்லிச் சொல்லிப் பார்ப்பாள் மணிமேகலை. அவளுக்கு வரவே வராது.

“உனக்கு சந்தோஷமே இதுல தான் இருக்கு போல டி.. சரி சரி, பாக்க லூசுத்தனமா இருந்தாலும் நீ அப்படியே இரு” என்று அவளது கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டுக் கொள்வாள் மணிமேகலை. அது என்னவோ அவர்களது கார்மென்ட் யூனிட்டில் வேலை செய்யும் அத்தனை பெண்களிலும் மணிமேகலைக்கு சித்ராவைத் தான் ரொம்பவும் பிடிக்கும்.

புதுச் சேலை என்றால் கட்டாயம் ஒரு நாணயத்தை அதில் வைத்து கட்டிக் கொள்வது, குங்குமம், விபூதி சந்தனம் மூன்றும் குட்டிக்குட்டியாக நெற்றியில் வெளியே கிளம்புவது, சாப்பாடு கட்டினால் கடைசியில் சமையலில் சேர்க்காத தனி கருவேப்பிலை ஒன்றே ஒன்றை எடுத்து உணவின் மேலே வைத்துக் கொள்வது எப்படி விதவிதமாக பல பழக்கங்கள். சராசரியாக மாதந்தோறும் ஒரு புதிய பழக்கத்தை தத்தெடுத்துக் கொள்வாள்.

“இது என்னடி புதுப் பழக்கம்?” என்று அம்மா கேட்டால், “சும்ம்ம்மா!” என்று சொல்வாள்.

அன்றும் எப்போதும் போல் கிளம்பியவள், “அம்மா டாட்டா!” என்றும், “அப்பா படத்திற்கு பை அப்பா!” என்று ஒரு பறக்கும் முத்தத்தையும் கொடுத்தாள்.

“என்னடி மாத்தி செய்ற?”

“ஆமாம் சாரி மறந்துட்டேன்!” என்று அப்பா படத்திற்கு டாட்டாவையும், அம்மாவுக்கு பறக்கும் முத்தத்தையும் மாற்றி வழங்கிவிட்டுக் கிளம்பினாள்.

மனது இன்னும் படபடவென்று தான் அடித்துக் கொண்டு வந்தது. மூன்று பிள்ளைகள் இருந்தும் தன் முகத்தையே பார்த்துப் பார்த்து எல்லாம் செய்யும் அம்மாவை ஏமாற்றப் போகிறோமோ என்று குற்றவுணர்வு.

“அதெல்லாம் இல்ல.. அம்மா ஒன்னும் நினைச்சுக்க மாட்டா. கொஞ்ச நேரம் அழுதாலும் அடுத்து நார்மல் ஆகிடுவா” தனக்குத் தானே சொல்லியபடி செருப்பில் கால் நுழைத்தாள் சித்ரா.

-தொடரும்
 
Joined
Mar 21, 2025
Messages
56
சின்ன சின்ன விஷயங்கள்
சிறுபிள்ளைதனம் கொண்ட
செல்லம் கொஞ்சி
சிரித்து பேசும் மகள்....
சிட்டாக செல்லும்
சித்திரை செய்யும்
செயல் என்னவோ???🤩
 
Top Bottom