• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உயிர்க் கொடியில் பூத்தவளே!

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
158
உயிர்க்கொடியில் பூத்தவளே!

அத்தியாயம் 1

அழகான மாளிகை ஒன்று கண்ணெதிரே தெரிந்தது. எழில்மிகு சிவப்பு நிறத்தில் கம்பீரமாகக் காட்சியளித்தது அந்த மாளிகை. இந்த மாளிகையைப் பார்த்தவுடன் மகாபாரதத்தில் வரும் அரக்கு மாளிகையே, மாதுரியின் நினைவில் எட்டிப் பார்த்தது, அரக்கு மாளிகைக்குள் உருவான சதித்திட்டங்களும், அரியணைப் போட்டிகளும், கோரமான ஒரு
தீவிபத்தும் சேர்ந்தே மாதுரியின் நினைவில் எழுந்தன.

சிறுவயதில் பெற்றோருடன் சென்று பார்த்த ஜெய்ப்பூரும் நினைவிற்கு வந்தது. மங்கலான நினைவுகளாக இருந்தாலும் அந்த நிறம் மறக்கவில்லை. அந்தச் சிவப்பு நிறக் கட்டிடங்களால் தான் ஜெய்ப்பூரை, " பிங்க் சிட்டி" என்று அழைப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறாள் அவள். மாதுரியின் அப்பா எந்த இடத்துக்குப் போனாலும் அந்த இடத்தைப் பற்றிய வரலாற்று உண்மைகளையும் அந்த இடத்தின் சிறப்பையும் எடுத்துச் சொல்லி விடுவார்.

'அப்பா, அப்பா, ஏம்பா இப்படி? நான் எவ்வளவு பாவம் செஞ்சிருக்கேனோ தெரியலையே? இவ்வளவு சின்ன வயசில் அம்மா, அப்பாவை இழந்து நிற்பது பெரிய கொடுமை இல்லையா? பிரியப் போறதுனால தான் அளவுக்கு அதிகமான பிரியத்தைக் காட்டினாங்களோ? கை நிறையப் பரிசுகளைத் தந்துட்டுத் தட்டிப் பறிச்ச மாதிரி இல்லை இருக்கு? எல்லாம் தலைவிதி தானோ? ஆண்டவன் போட்ட கோட்டை யாரால் மாத்த முடியும்?' என்று மனம் கிடந்து புலம்பியது.

மிகப்பெரிய இடத்தை வளைத்துப் போட்டுப் பணக்காரத்தனமாகக் கட்டப்பட்டிருந்த அந்தக் கட்டிடம் அந்தப் பகுதியிலேயே தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தது.

கண்முன்னே பிரம்மாண்டமாக நின்ற அந்த மாளிகையை ஒரு முறை வியப்புடன் பார்த்தாள் அந்த இளம்பெண். மனதில்
என்னென்னவோ சொல்லவொண்ணாத உணர்வுகள் கொந்தளித்து எழுந்து மேலே வந்தன.

' நான் எடுத்துக் கொள்ளப் போகும் பொறுப்பு சரி வருமா? யாரோ சொன்ன சொல்லை நம்பி இப்படிப்பட்ட வேலையில் இறங்கியிருப்பது புத்திசாலித்தனம் தானா? '' என்று மனம் ஒரு பக்கம் வாதம் செய்தது.

பெரிய இரும்புக் கதவு பாதுகாப்பு அரணாக நின்றது. அதில் சிறிய ஜன்னல் போன்ற அமைப்பு திறந்திருந்தது . அதற்குப் பின்னால் உட்கார்ந்திருந்த செக்யூரிட்டியின் முகம் மட்டும் தெரிந்தது. அருகில் சென்று லேசாகத் தொண்டையைக் கனைத்தாள் மாதுரி. செக்யூரிட்டி, தலையை நீட்டி அவளை ஏற இறங்கப் பார்த்தான்.

" யார் நீங்க? யாரைப் பாக்கணும்? "

" என் பேரு மாதுரி. இந்த வீட்டில் புதுசா வேலைக்குச் சேர வந்திருக்கேன். வெளியூரில் இருந்து வரேன். வீட்டு எஜமானர் கிட்ட என் பெயரைச் சொன்னா அவருக்கு விஷயம் தெரியும் " என்றாள் மென்மையான குரலில்.

' இந்த வீட்டில் வேலைக்கு வர யாரும் அதிக நாட்கள் தங்கறதில்லை. பாக்கலாம், இந்தப் பொண்ணு பாக்க ரொம்பச் சின்னப் பொண்ணாத் தெரியுது. பெரியவர்களுக்கே பொறுமை இல்லை. சின்னப் பெண்ணுக்கு எவ்வளவு பொறுமை இருக்கப் போகுது? எத்தனை நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கப் போகுதோ தெரியவில்லை' என்று மனதில் தாறுமாறாக உடனே ஓடிய சிந்தனையைக் கடிவாளம் போட்டு நிறுத்திய அந்த செக்யூரிட்டி கையில் இன்டர்காம் ஃபோனை எடுத்து மாதுரியின் காதில் விழாத அளவு மெல்லிய குரலில் யாரிடமோ பேசினான்.

" யெஸ் மேடம், ஓகே மேடம், கண்டிப்பா மேடம்" என்று பணிவான குரலில் பதில் சொன்னவன், ஃபோனை வைத்துவிட்டு மாதுரியைப் பார்த்தான்.

" எஜமானியம்மா உள்ளே இருக்காங்க. உங்களை உள்ளே வரச் சொன்னாங்க" என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தான்.

வாசல் கேட்டில் இருந்து நீண்ட நடைபாதை மாளிகையின் கதவு வரை சென்றது. நடைபாதையின் இரண்டு பக்கங்களிலும் அழகாகப் பராமரிக்கப்பட்டு வரும் அற்புதமான தோட்டம். ஒரு பக்கம் அழகான குளம். தாமரை மலர்கள் நடுவில் எழிலுடன் சிரித்துக் கொண்டிருந்தன. அதைச் சுற்றிலும் நேர்த்தியாக வெட்டப்பட்டுப் பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற காட்சி தந்தது, அழகாகப் பராமரிக்கப்பட்ட புல்வெளி.
நடுவில் தோட்ட நாற்காலிகள், டீப்பாய் போடப் பட்டிருந்தன. சுற்றிலும் காம்பவுண்ட் சுவரை ஒட்டி பெரிய பெரிய மரங்கள். அவற்றில் பூத்துக் குலுங்கிய மலர்களின் நறுமணம் காற்றில் கலந்து வந்து நாசியை எட்டியது. மரங்களுக்கு நடுவே மல்லிகை, முல்லை, ஜாதி மலர்களைச் சொரியும் கொடிகள் வேறு சேர்ந்து அழகுக்கு அழகு சேர்த்தன.

‘ இந்தத் தோட்டத்தைப் பராமரிக்க ஒரு தோட்டக்காரன் பத்தாது போல இருக்கு. கொறஞ்சது ரெண்டு, மூணு, பேரு வேணும் போல இருக்கு. பணம் கொட்டிக் கெடக்கறவங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா? எத்தனையோ ஏழை, பாழைங்க ஒரு வேளை சாப்பாட்டுக்கே ததிங்கிணத்தோம் போடறப்போ, இவங்க வாழ்க்கையோட தரம் என்னவோ மலை உச்சியில் உக்காந்திருக்கு! ‘ என்று எண்ணிப் பார்த்த மாதுரிக்கு ஏனோ, அந்த வீட்டைப் பார்த்து எரிச்சல்தான் வந்தது.

‘ சேச்சே, பணக்கார வீட்டுல பிறந்து வளந்தவங்க பேரில் தப்பு சொல்லமுடியாது. எத்தனையோ பணக்காரங்க இளகிய மனசோடு இருக்காங்களே? தங்களிடம் இருக்கும் பணத்தை ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்துபவர்களாக இருந்தால் நல்லதுதானே? அப்படி இல்லாமல் அந்தஸ்து , அதிகாரம், ஸுபீரியாரிடி காம்ப்ளெக்ஸ் இருக்கறவங்களா இருந்தால் கஷ்டம் தான்’ என்று ஏதேதோ சிந்தனைகளில் அலை பாய்ந்த மனதை அடக்கிக்கொண்டு அந்த பங்களாவின் நுழைவாயிற் கதவை அடைந்துவிட்டாள் மாதுரி.

அழைப்பு மணியை அடிக்கலாம் என்று கையை உயர்த்தியபோது கதவு திறக்கப் பட்டது. செக்யூரிட்டியிடம் இருந்து தகவல் வந்திருக்கும் என்று நினைத்தபடி கதவைத் திறந்த பெண்ணைப் பார்த்தாள். அந்தப் பெண்ணும் அதே வீட்டில் வேலை செய்பவளாகத்தான் இருக்கவேண்டும். முகம் ஏனோ சிடுசிடுவென்று இருந்தது.

“ ஏம்மா, சீக்கிரமா உள்ளே வரயா? அங்கேயே எவ்வளவு நேரம் நின்னுட்டு யோசிப்பே? எனக்கு கிச்சன்ல ஏகப்பட்ட வேலை குவிஞ்சி கெடக்கு” என்று சிடுசிடுத்தாள் அந்தப் பெண்.

‘ ஓ, சமையல் வேலை செய்யும் பெண்ணா? வேலைப்பளு அதிகம் போல இருக்கு. அதுதான் கோபம் கோபமா வருது போல ’ என்று நினைத்துக்கொண்டே அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தபடி உள்ளே வந்தாள்.

“ தேங்க்ஸ் அக்கா” என்று மாதுரி சொன்னவுடன் அந்தப் பெண்ணின் முகம் சட்டென்று மாறியது. தன்னை, “ ஆண்ட்டி ” என்று அழைக்காமல் அக்கா என்று புதிய பெண் அழைத்ததில் அவளுடைய மனம் குளிர்ந்து போயிருந்தது. முகத்தில் தெரிந்த சிடுசிடுப்பு சட்டென்று காணாமல் போனது.

லேசான முறுவல் கூட எட்டிப் பார்த்தது.

“ வாம்மா வா, அம்மா உனக்காக அந்தக் கடைசி ரூமில் காத்துட்டு இருக்காங்க. அவர்களைப் பாத்துப் பேசிட்டு கிச்சனுக்கு வா. உனக்குச் சாப்பிட ஏதாவது தரேன்” என்று பிரியத்துடன் பேசிவிட்டு உள்ளே சென்றாள் அந்தப் பெண்.

மாதுரி அவள் கைகாட்டிய அறையை நோக்கி நடந்தாள். மூடியிருந்த அறைக்கதவை மெதுவாகத் தட்டினாள்.

“ கதவு திறந்திருக்கு. உள்ளே வரலாம்” என்று குரல் கேட்டது. விசாலமான அறை. சென்னையில் ஒரு டூ பெட்ரூம் ஃப்ளாட் அளவு அந்த அறையே இருந்தது. அறையின் ஓரத்தில் நல்ல தேக்கு மரத்தாலான கட்டில். அதில் வயதானவர் ஒருவர் படுத்திருந்தார். அவருடைய கண்கள் மூடியிருந்தன. தூங்குகிறாரா இல்லை மயக்கத்தில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. கட்டிலுக்கு அருகில் சக்கர நாற்காலியில் ஒரு வயதான பெண்.

சிரித்த முகம். அந்த முதிய பருவத்தில் கூட முகத்தில் அழகும், கம்பீரமும் குறையவில்லை. சரித்திரக் கதைகளைத் திரைப்படமாக எடுக்கும்போது மகாராணி வேடம் போடடுவதற்குத் தகுந்த தோற்றம் .

“ வாம்மா. மாதுரி தானே உன்னோட பேர்? டிராவல் எப்படி இருந்தது? “ என்று இனிமையான குரலில் விசாரித்தார்.

“ வணக்கம் மேடம். டிராவல் எல்லாம் சௌகரியமாக இருந்துச்சு. ஒரு கஷ்டமும் இல்லை. டாக்டர். துகிலன் தான் இந்த இடத்தில் உனக்கு வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினாரு. என் பேரு மாதுரி. சென்னையில் இருந்து வரேன். வயசானவங்களைப் பாத்துகிட்ட அனுபவம் இருக்கு. ஆனா நான் நர்ஸ் இல்லை. அடிப்படையா சில முதலுதவிகள் தெரியும். அவ்வளவுதான். உங்களுக்கு நர்ஸிங் தெரிஞ்சவங்க வேணும்னா நான் இந்த வேலைக்குத் தகுதியானவளா இருக்க மாட்டேன். உங்களுக்கு அந்த மாதிரித் தேவை இருந்தால் நான் இப்பவே திரும்பிடறேன். எனக்கு எந்த வருத்தமும் இருக்காது” என்று மடமடவென்று தகவல்களைக் கொட்டினாள்.

அவள் பேசிய வேகத்தைக் கண்டு அந்தப் பெண் சிரிக்கத் தொடங்கினார்.

“ ஏம்மா அவசரப்படறே? உன்னைப் பத்தின எல்லா விவரமும் எங்களுக்குத் தெரியும். துகிலன் அப்படியே உள்ளது உள்ளபடி சொல்லிட்டான். எங்களைப் பாத்துக்க ஒரு வயசான நர்ஸ் ஏற்கனவே இருக்காங்க. ஒரு வாரம் லீவு போட்டுட்டுப் போயிருக்காங்க. எங்களுக்கு நர்ஸ் வேண்டாம். பட்டாம்பூச்சி மாதிரி எங்களைச் சுத்தி வந்துகிட்டு, பேச்சுத் தொணையாவும் இருக்கிற மாதிரி ஒரு சின்னப் பொண்ணு வேணுமுன்னு துகிலன் கிட்டச் சொல்லிட்டிருந்தேன். அதுக்காகத் தான் ஸ்பெஷலா உன்னை ரெகமண்ட் பண்ணி அனுப்பிருக்கான். ”

“ அப்படின்னா ஒரு வாரத்துக்கு மட்டும் தான் இங்க வேலையா? ” மாதுரியின் குரலில் ஏமாற்றம் நிரம்பி வழிந்தது.

“ பாத்தயா? இப்பத்தானே அவசரப்படாதேன்னு சொன்னேன். திரும்பவும் அவசரப்படறயே? லீவில போயிருக்கற நர்ஸ் தனக்கு பதிலா வேற ஒரு நர்ஸை ஒரு வாரத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டுத்தான் போயிருக்காங்க. மெடிசின் வாங்கறதுக்காக மெடிக்கல் ஷாப் போயிருக்கா அவ. இதோ வந்துடுவா” என்று அந்த முதியவள் சொல்லி முடித்ததும் மாதுரியின் முகத்தில் நிம்மதி படர்ந்தது.

“ அவங்க தனி. உனக்கும் அதுல சம்பந்தமே இல்லை. அவங்களோட வேலை ஒரு நர்ஸா எங்களோட மருத்துவத் தேவைகளைப் பாத்துக்கறது. அதுவும் என்னை விட என் கணவருக்குத்தான் அதிகமாத் தேவை. அவரோட நிலைமையைப் பாத்தா உனக்கே புரியும். பாரு எப்படிக் கெடக்கறாருன்னு. ரொம்ப சுறுசுறுப்பானவர். சுத்திகிட்டே இருந்தாரு. இப்போ அப்படியே படுக்கையில் மொடக்கிப் போட்டுருக்கான் ஆண்டவன்” என்று சொல்லும்போது அந்த முதியவளின் குரல் உடைந்து போயிருந்தது.

“ கவலைப்படாதீங்க மேடம். அவர் சீக்கிரம் குணமாயிடுவார்” என்று சொல்லும்போது மாதுரிக்கே தன்னுடைய சொற்களில் நம்பிக்கை இல்லை.

“ சரிம்மா, நீ போய்க் குளிச்சு ஏதாவது சாப்பிட்டுட்டு இங்கே வா. பயணம் செஞ்சு வந்திருப்பே. களைப்பா இருக்கலாம். கொஞ்சம் ரிஃப்ரஷ் ஆயிட்டு வா. அதுக்கப்புறம் உனக்கு இங்கே என்னவெல்லாம் வேலைகள்னு நான் விளக்கமாச் சொல்லறேன்” என்று கூறிவிட்டுத் தன் சக்கர நாற்காலியில் பொருத்தப்பட்டிருந்த அழைப்பு மணியை அடித்தார்.

“ யெஸ் மேடம்” என்று உடனடியாக அந்த அறைக்குள் வந்தாள் அந்தப் பெண். மாதுரிக்குக் கதவைத் திறந்துவிட்ட அதே பெண் தான்.

“ கண்மணி, இவங்க தான் மாதுரி. இன்னைலேந்து இங்கே வேலைக்குச் சேரப் போறாங்க. கூட்டிட்டுப் போய் இவங்க தங்கற அறையைக் காமி. அவங்க குளிச்சுட்டு வந்ததும் சாப்பிட ஏதாவது கொடு” என்று சொல்ல, கண்மணியும்,

“ யெஸ் மேடம்” என்று பணிவுடன் சொல்லி விட்டு மாதுரியை அந்த அறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்றாள் கண்மணி.

அந்தப் பெரிய மாளிகையில் மாதுரிக்கு என்னவெல்லாம் ஆச்சர்யங்களும், அதிர்ச்சிகளும் காத்துக் கொண்டிருக்கின்றனவோ, யார் அறிவார்!

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 
Top Bottom