• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உயிர்க் கொடியில் பூத்தவளே! 5

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
157
உயிர்க் கொடியில் பூத்தவளே!

அத்தியாயம் 5


இப்போது என்ன சொல்லப் போகிறார் ராஜேஸ்வரி என்று கவனமாகக் கேட்டாள் மாதுரி.

“ இந்த மந்திரா ரொம்பச் செல்லமா வளந்த பொண்ணு. எங்களுக்கு உறவுங்கறதுனால எங்க மேலே அதிக அக்கறை இருக்கறதாக் காட்டிக்குவா. அதிகமா உரிமையும் எடுத்துக்குவா. ஆனால் கொஞ்சம் படபடப்பு அதிகம். நல்ல பொண்ணு தான். ஆனாலும், நிறைய நேரங்களில் சிறுபிள்ளைத்தனமா நடந்துக்குவா. உன் கிட்டயே இன்னைக்கு ரெண்டு, மூணு தடவை கடுமையாப் பேசினதை நான் கவனிச்சேன். ஒரு தடவை கண்டிக்கவும் செஞ்சேன். அதுக்கு மேல என்னால அவளை ஒண்ணும் சொல்ல முடியாது. அதிகமாக் கடிந்து பேசினால் போச்சு. ரொம்ப ஆர்ப்பாட்டம் செஞ்சுடுவா. அதுனால நீ கொஞ்சம் பொறுமையாப் போயிக்கோம்மா. இன்னும் ஒரு வாரம் தான் இங்கே இருப்பா. அதுக்கப்புறம் எங்க நர்ஸ் வாணி வந்துருவாங்க. அவங்க வந்துட்டா இவ கெளம்ப வேண்டியதுதான். அதுவரை பொறுத்துக்கோ” என்று கெஞ்சுவது போலப் பேசினார் ராஜேஸ்வரி.

மாதுரிக்கா தெரியாது மந்திராவைப் பற்றி? அவளைப் பற்றி அணு அணுவாக அறிந்தவள் அவள். மேடத்திடம் அதைப் பற்றி இப்போது வெளியிட முடியாது. இவர் சொல்வதைக் கேட்டு நடப்பதாகத் தற்போதைக்கு உறுதியளித்து விடலாம் என்று முடிவு செய்த மாதுரி தலையசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

ராஜேஸ்வரியும் மாதுரியின் கரங்களைப் பிடித்து நன்றி தெரிவித்தாள்.
அவர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தபோது இன்னும் கொஞ்சம் நெருங்கியிருந்தார்கள்.

சிரித்த முகத்துடன் அறைக்குள் நுழைந்த மாதுரியின் தலையைக் கண்டதும் மந்திராவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தன.

அவளால் சேதுபதி ஐயாவைத் தனியாக விட்டுவிட்டு வெளியே வந்து இவர்களுடன் சேர்ந்து கொள்ள முடியவில்லை.

‘ நீயாத் தேடிக்கிட்ட சங்கடம் தானே இது? நல்லா அனுபவி. யானை தன்னோட தலையில தானே மண்ணை வாரி வாரிக் கொட்டிக்கற மாதிரி ஏன் இங்கே வந்து நர்ஸ் டியூட்டி பண்ண ஒத்துக்கிட்டே? பெரிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்னு நெனைப்பு மனசுல? கையில் விளக்கோடு இந்த வாய் பேச முடியாத கிழவனுக்குத் தொண்டு பண்ணிட்டே கெட. அங்கே மாதுரி, ராஜேஸ்வரி ஆன்ட்டியைச் சிரிச்சுப் பேசி மயக்கிட்டா பாரு’ என்று அவளுடைய அறிவு அவளிடம் கூறியது.

மந்திராவின் எரிச்சல் கூடிக் கொண்டே போனது. அவளுடைய எரிச்சலைக் கூட்டுவது போல் அடுத்த நிகழ்வும் அமைந்தது. மாதுரியின் முகத்தைப் பார்த்து, சேதுபதி ஐயாவின் முகமும் மலர்ந்துபோனது.

பல்லைக் கடித்து மனதில் மாதுரியின் மீது எழுந்த வெறுப்புணர்வை விழுங்கினாள் அவள்.
அடுத்ததாக இரவு உணவும் மாதுரியின் கையாலேயே உண்டார் சேதுபதி. வேறு யாரையும் தர விடவில்லை அவர். மந்திரா, கோபத்துடன் கதவைப் படாரென்று சாத்திவிட்டு உணவு உண்ணச் சென்றாள். அவளுடைய செயலைக் கண்டு சிரித்தார் ராஜேஸ்வரி.

சின்னக் குழந்தை போலவே நடந்துகொள்ளும் மந்திரா, எப்படி நர்ஸாகத் தனது கடமைகளைப் பொறுமையாக நிறைவேற்ற முடியும் என்று நினைத்துச் சிரிப்புத்தான் வந்தது அவருக்கு. இந்த இலட்சணத்தில் படிப்பது வேறு மருத்துவப்படிப்பு!

மருத்துவராகப் பணி புரியும்போது விதவிதமான மனிதர்களை எப்படித்தான் சமாளிக்கப் போகிறாளோ என்று நினைத்தாள்.

“ துகிலன் தான் இவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இவள் அடங்குவது என்னவோ அவன் ஒருத்தனுக்குத் தான். அவன் எதிரில் பெட்டிப் பாம்பாகச் சுருண்டு கிடப்பாள் பாவம்! அவன் மீது கொள்ளை ஆசை வைத்திருக்கிறாள். சீக்கிரமே துகிலனுக்கும், மந்திராவுக்கும் கல்யாணம் நடந்தால் நன்றாக இருக்கும் ” என்று தன்னிடம் கூறிய ராஜேஸ்வரி மேடத்தை ஆச்சரியத்துடன் பார்த்தாள் மாதுரி.

‘ இது என்ன புதுக் கதை? இவ்வளவு நாட்களாக எனக்குத் தெரியலையே? துகிலனுக்கும் மந்திராவுக்கும் நடுவில் காதல் நாடகம் வேற நடக்குதா? அதுக்குத்தான் அவனை இம்ப்ரஸ் பண்ணனும்னு நெனைச்சு இங்க வந்து ஸீன் போடறாளா இவ? சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? ’ என்று நினைத்து மந்திராவின் செயல்களை அலசிப் பார்த்த
மாதுரிக்கும் சிரிப்பு வந்தது.
சிரிப்பை அடக்கியபடி சமையலறைக்குள் நுழைந்தவளை, கண்மணி வரவேற்றாள்.

“ என்ன மாதுரி, இன்னைக்குப் பொழுது நல்லாப் போச்சா? ஒரே நாளில ஐயாவையும், அம்மாவையும் க்ளீன் பௌல்ட் பண்ணிட்ட போல இருக்கே? அப்புறம் எனக்கு ரொம்ப சந்தோஷமான இன்னொரு விஷயத்தை உங்கிட்ட சொல்லியே ஆகணும்? அந்த மந்திரா பயங்கர அப்செட்டா இருந்தா தெரியுமா? நீ வந்துருக்கறதும், மேடத்துக்கு உன்னைப் பிடிச்சுப் போனதும் அந்த உராங் உடான் மூஞ்சிக்குப் பிடிக்கவே இல்லை போலிருக்கு. என்னவோ முணுமுணுத்துக்கிட்டே சாப்பிட்டா இன்னைக்கு. எனக்குப் பாக்கப் பாக்க மஜாவா இருந்துச்சு தெரியுமா? ” என்று சொன்ன கண்மணியின் முகம் மலர்ந்து போயிருந்தது.

“ அக்கா..” என்று இழுத்த மாதுரியின் முகத்தைப் பார்த்த பின்னர் இந்த மாதிரிப் பேச்சு அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டு கொஞ்சம் அடங்கினாள் கண்மணி.

“ சரி, சரி, இனிமேல் அடக்கி வாசிக்கறேன். ஆனால், அவ என்னை என்ன பாடு படுத்துவான்னு நீ பாத்ததில்லை இல்லையா? பாத்திருந்தாத் தானே உனக்குப் புரியும்? உன்னை மாதிரி ரொம்ப ரொம்ப குட் கேர்ள் நான் இல்லைப்பா. சரி வா, பசியோட இருப்பே. சாப்பிடலாம் வா” என்று அழைத்து, சப்பாத்திகளையும், குருமாவையும் ஒரு தட்டில் வைத்து நீட்டினாள்

கண்மணி, மாதுரியிடம்.
“ அக்கா, நீங்களும் வாங்க. சேந்தே சாப்பிடலாம் ” என்று மாதுரி சொல்லிவிட கண்மணியிடம் உற்சாகம் தொற்றிக்கொண்டது மீண்டும்.

“ பாருடா கண்ணா, இது, இதுதான் உங்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த வீட்டில் வேலைக்குச் சேந்து எவ்வளவு நாளாச்சு தெரியுமா? இதுவரைக்கும் ஒருத்தர் கூட என்னச் சாப்பிட்டயான்னு கேட்டதேயில்லை . ஆனாலும், வயறு பசிக்குதே? வேளாவேளைக்கு எதையாவது போட்டாத்தானே வேலை செய்ய முடியுது? நானும் கடனேன்னு சாப்பிடறேன். நீ என்னை உன் கூடவே உக்காந்து சாப்பிடச் சொல்லற பாரு, இதுக்காக நான் உனக்கு உசுரையே கொடுப்பேன்” என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாள் கண்மணி .

இரண்டு பேருமாக அரட்டை அடித்தபடி தரையில் அமர்ந்து சாப்பிட்டு முடித்தார்கள்.
வயறு நிறைந்ததோடு இருவரின் மனங்களும் அக்கா, தங்கை பாசத்தால் நிரம்பி வழிந்தன.

“ அக்கா, தினம் தினம் நீங்களே சமைக்கறீங்களே? ஒரு நாளைக்கு நான் வந்து உங்களுக்கு சமைச்சுப் போடறேன்”

“ உனக்கு சமைக்கத் தெரியுமா கண்ணு? ”

“ ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும் ”

“ என்ன கொஞ்சம், இந்த மேகி, பிரெட் இந்த மாதிரியா? ”

“ இல்லைக்கா, அவ்வளவு மோசமில்லை. சாதம், ரசம் வைக்கத் தெரியும். அப்புறம் காரக்குழம்பு செய்யத் தெரியும். அப்புறம் மாங்காப் பச்சடி எங்கம்மா ரொம்ப நல்லா செய்வாங்க. அதுவும் தெரியும் ”
என்று பெருமையுடன் சொன்னாள்.

“ சரி, நாளைக்கே மார்க்கெட்டில் இருந்து மாங்கா வாங்கிட்டு வரேன். மாங்காய்ப் பச்சடி செஞ்சு காமி பாக்கலாம் “ என்று கண்மணி சொல்ல, அவர்களுடைய உரையாடல் அதோடு முடிந்தது.

மாதுரி, பெரியவர்களின் அறைக்குத் திரும்பியபோது மந்திரா, அவர்கள் இருவருக்குமான மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

ராஜேஸ்வரியின் படுக்கையைத் தயார் செய்த மாதுரி, சக்கர நாற்காலியில் இருந்து மந்திராவின் உதவியுடன் அவரைப் படுக்கைக்கு மாற்றினாள்.

சேதுபதி ஐயா ஏற்கனவே கண்களை மூடியபடி படுத்திருந்தார். ராஜேஸ்வரி, மாதுரியைத் தன்னருகில் அழைத்தாள்.

“ மாதுரி, உன்னோட ரூம் எங்க ரூமுக்கு அடுத்தே இருக்கு. இரண்டுக்கும் நடுவில் ஒரு கதவும் இருக்கு. இதோ பார்” என்று சுவரில் இருந்த கதவைக் காண்பித்தார்.

“ ராத்திரி ஏதாவது தேவைன்னா இந்தப் படுக்கையில் தலைமாட்டில் இருக்கற காலிங் பெல்லை அழுத்துவேன். உனக்கும் கேக்கும். மந்திராவுக்கும் கேக்கும். யார் முதலில் கேக்கறீங்களோ, வந்து என்னன்னு கேளுங்க” என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டார்.

“ குட்நைட் மேடம்” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள் மாதுரி. புதிய இடம் என்பதால் தூக்கம் வருமா என்று தெரியவில்லை. அழைப்பு மணிச்சத்தம் கேட்டால் எப்படியும் உடனே விரைந்து வரவேண்டும். ஆனால், ராஜேஸ்வரிக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரைகளில் தூக்க மாத்திரையும் இருந்ததைப் பார்த்தாள் மாதுரி.

‘நிச்சயமாக மேடம் நன்றாகத் தூங்கிவிடுவார். நம்மை அழைக்க வாய்ப்பு இல்லை. இருந்தாலும் எதுக்கும் அலர்ட்டாகவே இருக்கணும்’ என்று நினைத்தபடி படுக்கையில் சாய்ந்தாள்.

தனக்குப் பிடித்த ராபின் குக் நாவல் ஒன்றைக் கையில் ஏந்தியபடி படுக்கையில் சாய்ந்தாள். ராபின் குக் மெடிக்கல் த்ரில்லர் எழுதுவதில் கில்லாடி. கோமா போன்ற அவருடைய கதைகள் பல, திரைப்படங்களாகவும் வந்துள்ளன என்பதை நினைவு கூர்ந்தாள்.

மருத்துவ உலகம் பற்றிய கதைகள் என்பதால்தான் தனக்குப் பிடிக்கிறது போல என்று வியந்தபடி பக்கங்களைத் திருப்பினாள்.
உடலில் இருந்த களைப்பாலும், அன்றைய அனுபவங்களின் சுமையால் மனதில் இருந்த பாரத்தாலும் அப்படியே தூங்கிப் போனாள்.

இரண்டு அறைகளுக்கும் நடுவில் இருந்த கதவைத் தாழ் போடாமல் சிறிது இடைவெளி விட்டு மூடியிருந்தாள் மாதுரி. திடீரென்று பக்கத்து அறையில் யாரோ நடக்கும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள்.

கையில் மொபைலில் இருந்த டார்ச் லைட்டை எரியவிட்டபடி நடுக்கதவைத் திறந்து பக்கத்து அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.

சேதுபதி ஐயாவின் படுக்கையின் அருகில் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தது ஒரு மர்ம உருவம். ஐயாவின் முனகல் சத்தம் பலவீனமாகக் கேட்டது. கத்த முயற்சி செய்து குரல் எழும்பாமல் உள்ளடங்கியது போன்ற சத்தம். திடுக்கிட்டுப் போனாள் மாதுரி.

“ யார் அது? என்ன பண்ணறீங்க? ” என்று கத்திக்கொண்டே உள்ளே ஓடிவந்தாள் மாதுரி. அவளைப் பார்த்துவிட்டு அந்த உருவம், கிடுகிடுவென்று கதவைத் திறந்து ஓடிவிட்டது. அந்த உருவத்தைப் பின்தொடர்வதை விட ஐயாவை கவனிப்பது முக்கியம் என்று நினைத்த மாதுரி அவரருகில் சென்றாள். அவருடைய நிலைமையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 
Top Bottom