• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இழைத்த கவிதை நீ! 12

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
20
இழைத்த கவிதை நீ! 12


றரை மணிக்கு அடித்த அலாரத்தை அணைத்த ருக்மிணி, எழ மனமின்றி கண்களை மூடிப் படுத்துக் கிடந்தாள்.

அவள் ஆசைப்பட்ட ஸ்லோ மார்னிங். கம்பெனி கொடுத்திருந்த ஃபர்னிஷ்ட் அபார்ட்மென்ட் இருந்த அந்த ஏரியாவை சுற்றிலும் ஏராளமான நடைபாதைகளும் பூங்காக்களும் இருந்தன. இவளது வீடு இருந்த கட்டிடத்தின் முதல் மாடியில்தான் பில்லியர்ட்ஸ் ரூம் இருக்கிறது. ருக்மிணிக்குதான் போக மனதில்லை.

ருக்மிணி சான் ஓஸே நகரத்திற்கு வந்து இன்றோடு முழுதாக இருபத்தியேழு நாட்கள் கடந்து விட்டன.

படித்து, வேலை பார்த்து, சௌமித்ரனைக் காதலித்து, கல்யாணம் செய்து கொண்டு, இருவரும் லட்சியத் தம்பதியாக வலம் வந்த கனவு தேசத்திற்கு இதுபோல் தனிமையைத் தேடி வந்ததை நம்புவது ருக்மிணிக்கே கடினமாக இருந்தது.

இதற்கு முன்பும் இதுபோல் அலுவலக ரீதியாக வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறாள்தான். சில தரம் சௌமித்ரனும் உடன் வந்திருகாகிறான். ருக்மிணி தனியாக வந்தால் இருபுறமும் எண்ணற்ற தகவல்களும் அழைப்புகளும் பறக்கும்.

இப்போதும் சௌமித்ரன் அழைக்கிறான்தான். இவள்தான் ஏற்பதுமில்லை, அப்படியே ஏற்றாலும் அத்யாவசியமான இரண்டொரு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதுமில்லை. தேவையெனில் தன் இருப்பை, நலத்தை, போக்கு வரத்தை புலனத்தில் தெரிவிப்பதோடு சரி.

முதல் நான்கு நாட்களுக்கு மனைவி தன்னைத் தவிர்ப்பதை ஏற்க முடியாது, தொடர்ந்து முயற்சித்த சௌமித்ரன், பிறகு அவளுக்கு அவகாசம் தேவைப்படுவதை உணர்ந்தோ, ஆயாசமாக உணர்ந்தோ தன்னை நிதானித்துக் கொண்டான்.

இன்னும் ஐந்து மணி நேரத்தில் சௌமித்ரனின் பிறந்த நாள். அவன் காதலை சொல்வதற்கு முன்பே அவனது பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கென்றே கேக் செய்யக் கற்றுக்கொண்டவள் ருக்மிணி.

எழுந்து அமர்ந்தவள், டீ ஷர்ட், வாட்ச், கூலர்ஸ், கேக் என இணையத்தில் கிஃப்ட்டை தேடியவள், ‘எதற்கு இது?’ என்ற கேள்வி எழவும், சலிப்புடன் மொபைலை விட்டெறிந்தாள்.

எழுந்து மூச்சுப் பயிற்சி மட்டும் செய்தவள், கீழே தண்ணீரை ஊற்றி, ஃபில்டரில் பொடியை போட்டு பெர்குலேட்டரை ஆன் செய்ய, தளதளவென கொதித்து மேலே வந்த காஃபி டிகாக்ஷனைப் போல் அனுமதி பெறாமலே நினைவுகளும் மேலெழுந்தது.

அன்று ஸ்வேதா குறிப்பிட்ட ‘ஆன்ட்டி’ யாரென்ற மைதிலியின் கேள்வியும், ரேகா மற்றும் குமாரின் தன்னை நோக்கிய சங்கடமும் பரிதாபமுமான பார்வையையும் கண்ட ருக்மிணிக்கு, பதில் ஏதும் கூறாமல் திகைத்து நின்ற சௌமித்ரனைப் பார்த்ததுமே, அன்றொரு நாள் அவனது மொபைலில் பார்த்த குறுஞ்செய்திகளும் பிரேர்ணா என்ற பெயரும் அதைவிட, அவளது மித்து என்ற அழைப்பும் பனிப்பாறை சரிவதைப் போல் ஞாபகத்தில் வந்து விழ, ‘அது பிரேர்ணா, காஸ்மோபாலிடன் க்ளப் மெம்பர்’ என பதிலளித்து இருந்தாள்.

உண்மையில் எல்லோர் முன்பும் இதை எதிர்பாராத கணவனின் சங்கடத்தைப் பார்க்கப் பிடிக்காது பதில் சொன்ன பிறகே, ரேகா ஆசுவாஸமடைவதைக் கண்ட ருக்மிணிக்கு , ரேகா அன்று ஸ்வேதாவின் பிறந்த நாளைக்கு அழைக்கத் தன்னிடம் பேசியதும் சௌமித்ரன் மொபைல் அழைப்புகளை ஏற்கவில்லை என்றவள், அவனை எங்கே என விசாரித்ததும் ஞாபகம் வரவும் ஒரு நொடியில் ரேகா தன்னை ஆழம் பார்த்ததும், அவளது அனுதாபமும் ஒரு வித அவமான உணர்வைத் தர ‘நான் வரேன்’ என வெளியே நடந்துவிட்டாள்.

வேகமாகப் பின் பற்றிய சௌமித்ரன் ரிமோட் சாவியால் காரைத் திறக்க, அமைதியாக அமர்ந்து கொண்டவள், அதன் பிறகு அன்றிரவு முழுவதும் அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

உண்மையில் ஸ்வேதாவின் பிறந்தநாளுக்கென வேலை செய்தது, அஸ்வின், ஸ்வேதாவின் சண்டைகள், குறும்புகள், குழந்தைகளின் கும்மாளம் என ஒரு மாதிரி, ஆசையும் ஆவலும் கொண்டாட்டமுமான இனம்புரியாத கலவையான மனநிலையில் இருந்தவளை சடாரென அம்பாரியிலிருந்து யானை தூக்கி எறிந்தது போல் உணர்ந்தவளால் பேச இயலவில்லை என்பதே நிஜம்.

பிரேர்ணாவுடைய மித்து என்ற அழைப்போ, வழக்கமான இடைவெளியில் அவர்கள் சந்திப்பதாகத் தொனித்த குறுந்தகவல்களோ, இருவரையும் நேரில் பார்த்த சௌமித்ரனின் சொந்த சகோதரியின் பார்வை மாற்றமோ கூட ருக்மிணியை சிறிதும் பாதிக்கவில்லை. சொல்லப்போனால், அவளுக்கு அவனைச் சந்தேகிக்கத் தோன்றவும் இல்லை.

இருவருக்கும் பொதுவாகவும், அலுவலக ரீதியாகவும், பள்ளி, கல்லூரி, அவரவர் ஊர் என தனித் தனி நட்புவட்டம் உண்டுதான். ஆனாலும் ஏதேனும் தகவலோ, யாரையாவது சந்திப்பதாக இருந்தாலோ இதுவரை அடுத்தவருக்குத் தெரியாமலோ அல்லது தெரிவிக்காமலோ இருந்தது இல்லை.

அப்படியே தற்செயலாக நிகழ்ந்தாலும், பின்னால் சொல்வதும், அவர்களைப் பற்றிப் பேசுவதும் அவ்வப்போது நடப்பதுதான். இது எதேச்சையான சந்திப்பாக, ஒரிருமுறை நிகழ்ந்தது போலவும் தெரியவில்லை.

தன்னிடம் சொல்லாததற்குத் தகுந்த காரணங்கள் இருக்குமோ என நினைத்த மறுகணமே ருக்மிணியை ‘என்னை மீறி இன்னொரு பெண்ணிடம் என்ன ரகசியம் இருக்க முடியும்?’ என்ற கேள்வி அலைக்கழித்தது.

அவள் மனதைக் குடைந்ததெல்லாம் ‘என்னிடம் ஏன் சொல்லவில்லை?’ என்ற கேள்விதான்.

இதுவே ஆணாக இருந்தால் வெறும் நட்புதான் என்றுதானே நினைப்போம், அது பெண் என்பதாலேயே தவறாக நினைத்து வார்த்தையை விட்டு விடுவோமோ என எண்ணி பேசவே தயங்கியதோடு, ருக்மிணிக்கு அவனிடம் எதுவும் கேட்கவோ பேசவோ தோன்றவும் இல்லை.

இரவெல்லாம் உறங்காமல் புரண்டவள் தன் மனப் பலகையில் கற்பனைகளையும் காட்சிகளையும் அழித்தழித்து எழுதினாள்.

நந்திவனுக்குக் கூட செல்லாது
மறுநாள் மாலை வரை மனைவியை நெருங்கிப் பேச யத்தனித்த சௌமித்ரனின் முயற்சிகள் யாவும் வியர்த்தமானது.

மௌனமாகவே இருவரும் வழக்கம் போல் எழுந்து ஜாகிங், வீட்டு வேலைகள், சமையல் என பகிர்ந்தே செய்தனர்.

நடுநடுவே பேச முயற்சித்து சோர்ந்து போன சௌமித்ரன் மலர்களை பறிப்பது, டெலிவரி, டெஸ்பேட்ச் என கோகுலை பார்க்கச் சொல்லி விட்டுத் தன் மொபைலைக் கூட அணைத்து வைத்து விட்டான்.

மாலை ஏழு மணி இருக்கும். OTTயில் ஓடிய எதோ ஒரு சீரீஸை இலக்கின்றி வெறித்தவாறு, ஜிஞ்சரைத் தடவியபடி சோஃபாவில் அமர்ந்திருந்தவளின் அருகே சென்று மண்டியிட்டுக் கீழே அமர்ந்தான் சௌமித்ரன்.

ருக்மிணி அமைதியாக இருக்க, அவளிடமிருந்த ஜிஞ்சரைத் தூக்கிக் கீழே விட்டு, அவள் நகர இயலாதபடி இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“...”

“ப்ளீஸ், பேசுடா முனீஸ்”

“...”

“பிரேர்ணா பத்தி நான் சொல்லாம இருந்தது தப்புதான்….”

கணவனிடம் கையை உயர்த்திப் பேசுவதை நிறுத்தச் சொன்னவள் அவனிடமிருந்து விலகப் போராட, அவன் இன்னும் இறுக்க, அழைப்புமணி ஒலித்தது.

“யாரிது, வேண்டாத நேரத்துல … ***ட்ச்” எனச் சபித்தபடி எழுந்து போய் கதவைத் திறக்க, அங்கு கையில் இரண்டு வயதுப் பெண் குழந்தையுடன் நின்றவளைத் தன் குருட்டுக் கற்பனையில் கூடத் தன் வீட்டில் எதிர்பாராத சௌமித்ரனை அயர்ச்சியும் அதிர்ச்சியும் தாக்கியதில், வந்தவளை வரவேற்கக் கூடத் தோன்றாமல் வாசல் நிலையை மறைத்துக் கொண்டு நின்றான்.

தன்னை சமாளித்துக் கொண்டு, சௌமித்ரனைத் தொட்டு நகர்த்தி “ஹாய், கம் இன்” என்ற ருக்மிணிக்கு அது யாரென்ற யூகம் இருப்பினும் கேள்வியாகப் பார்க்க, வந்தவள் “ஐ’ம் பிரேர்ணா” எனக் கை நீட்டினாள்.

“ஐ’ம் ருக்…”

“ஐ நோ, ஐ நோ. ருக்மிணி, மினி, முனீஸ் டார்லிங், மினி பேபி… ரைட்?” என்று புன்னகைத்தாள் பிரேர்ணா.

ருக்மிணியின் தலை தன்னைப்போல் ஆமோதித்தது,

“என்ன மித்து, பேச மாட்டியா?” என்று தொடங்கி, சிறிது ஆங்கிலமும் நிறைய கன்னடமும் கொடவாவும் கலந்து பிரேர்ணா பேசியதில் பாதிக்கு மேல் ருக்மிணிக்குப் புரியவில்லை.

பிரேர்ணா கூறியதன் சாராம்சம்: பிரேர்ணா லிவர்பூலில் குழந்தை மருத்துவராக இருக்கிறாள். அவளது தந்தை கூர்கில் காஃபி எஸ்டேட் ஓனர். அவர் திடீரென இறந்துவிட, தந்தையின் மறைவுக்கென இந்தியா வந்தவள், ஐந்து மாதங்கள் கழித்து சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டுத் தாயுடன் மறுநாள் அதிகாலை இங்கிலாந்து செல்கிறாள். பெங்களூர் வீடு மட்டும் வாடகைக்கு விடப்பட்டு இருக்கிறது.

இங்கு நல்ல நண்பனாக அறிமுகம் ஆன சௌமித்ரன் காலை முதல் அவளது அழைப்புகளை ஏற்காததில், விடை பெற்றுச் செல்வதற்காக நேரில் வந்ததாகச் சொன்னாள்.

ருக்மிணியின் எலும்பு முறிவு காரணமாக க்ளப்பில் அவளைச் சந்திக்க முடியாமைக்கு வருத்தம் தெரிவித்தாள்.

டீயும் பிஸ்கட்டும் தந்து உபசரித்த ருக்மிணி, தாயை விட அழகாக இருந்த குழந்தையிடம் பிஸ்கட்டை நீட்டி அழைக்க, உடனே அவளிடம் வந்து விட்டது. தூக்கி மடியில் வைத்துக் கொண்டு பேச்சுக் கொடுத்தவளை சௌமித்ரன் இமைக்காது பார்த்திருந்தான்.

“பை மித்து, தேங்க்ஸ் ஃபார் தி லவ்லி டைம், அண்ட் ஸ்குவாஷ் கேம். நைஸ் மீட்டிங் யூ ருக்மிணி”

என்றபடி எழுந்து நின்ற பிரேர்ணா மகளுக்குக் கை நீட்ட, ருக்மிணியின் தாலி செயினை ஆராய்ந்து கொண்டிருந்த குழந்தை போக மறுத்தாள்.

மனைவியின் அருகில் வந்து நின்ற சௌமித்ரனையும் ருக்மிணியையும் பார்த்த பிரேர்ணா “உங்க மூணு பேரையும் பார்க்க பர்ஃபெக்ட் ஃபேமிலி மாதிரி இருக்கு” என்றவள், இருவரையும் லிவர்பூலுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்து, மகளுடன் வெளியேறினாள்.

பிரேர்ணாவிற்குக் குழந்தை இருப்பதும், கணவன் தன்னைப் பற்றி அவளிடம் நிறைய பேசி இருப்பதும் தெரிந்ததில், ருக்மிணிக்கு இரண்டு நாளாக இருந்த இறுக்கம் குறைந்து தளர்ந்தாள்.

பிரேர்ணாவின் வரவு தன் வேலையை சுலபமாக்கியதிலும், மனைவியின் இளக்கத்திலும் பெருமூச்சு விட்ட சௌமித்ரன் “முனீம்மா” என அணைக்க முற்பட, ருக்மிணி மீண்டும் முருங்கை மரம் ஏறினாள்.

“முனீஸ், நீயும் ரேகாவும் நினைக்கற மாதிரி, தப்பா எதுவும் இல்லடா. ஷி ஈஸ் ஜஸ்ட் ஏ ஃப்ரெண்ட்” என்பதை விதம் விதமாகச் சொன்னான்.

பேச்சோடு பேச்சாக “பிரேர்ணாக்கு கல்யாணத்துலயே நம்பிக்கை கிடையாது. ஆனா, குழந்தைன்னா கொள்ளைப் பிரியம். அதனால டோனர் பிறந்த மூலமா IVF பண்ணி பொறந்த குழந்தை அது” என்றான்.


கேட்ட ருக்மிணிக்கு முதலில் என்னவோ போல இருந்தாலும், ‘நாணயத்தின் ஒரு பக்கம் நான் என்றால், அடுத்த பக்கம் அவள்’ என்றே தோன்றியது.

சூடான பாலை நீட்டிய சௌமித்ரன், தன் சமாதான முயற்சியைத் தொடர, ருக்மிணி

“எல்லாம் சரிதான் சௌ, ஆனா நீ நாலு மாசமா அவளைப் பத்தி எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே, ஏன்?”

“என்னை சந்தேகப்படறியா மினி?”

“சந்தேகப் பட்டா, அவளோட மெஸேஜைப் பார்த்தபோதே உங்கூட சண்டை போட்டிருப்பேன் சௌ”

“அவ ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்டு. நீ க்ளப்புக்கு வந்திருந்தா உனக்கே தெரிஞ்சிருக்கும்…”

“ஜஸ்ட் ஒரு ஃப்ரெண்ட்டோடதான், எங்கிட்ட சொல்லாம டின்னருக்குப் போனியா சௌ?”

“என்னை நீ நம்பலையாடா முனீஸ்?”

“தெரியல சௌ. ஆனா, நிச்சயமா உன்னை சந்தேகப்படலை. என் சௌ என்னைத் தாண்டி போக மாட்டான்னு எனக்குத் தெரியும். இப்படி பொதுவுல வெச்சு ஸ்வேதா மொதக்கொண்டு கேக்கற மாதிரி ஏன் சௌ செஞ்ச?”

“...”

“உனக்குள்ள எந்த உறுத்தலும் இல்லைன்னா, பிரேர்ணாவோட டின்னருக்குப் போறேன்னு எங்கிட்ட சொல்லிட்டே போய் இருக்கலாமே.”

“...”

“அன்னிக்கு உன்னையும் பிரேர்ணாவையும் பார்த்து , ஷாக் ஆன ரேகா, எனக்குத் தெரியுமான்னு பார்க்க கால் பண்ண, நான் நீ க்ளப்புக்கு போய் இருக்கன்னு, நீ சொன்னதை சொன்னேன்”

“...”

“ அவ பார்வைல நான் ஒரு லூஸரா, ஏமாளியா இருந்துருக்கேன், உனக்குப் புரியறதா சௌ?”

“அப்டியெல்லாம் இல்லடா மினி. நான் இருக்கும்போது….”

“நீதான் பிரேர்ணா கூட இருந்தியே சௌ”

“ஷட் அப் மினி, தப்பா பேசாத”

“எனக்கென்ன ஆசையா சௌ, எங்கிட்ட நீ சொல்லலையேங்கற ஆதங்கம்தான்”

“ஒன்னுமில்லாத விஷயத்தை ஊதிப் பெருசாக்காத மினி”

“ஒன்னுமில்லாத ஒரு விஷயத்தை எங்கிட்ட ஏன் சொல்லலைன்னுதான் கேட்கறேன்”

“...”

“இதுக்கு முன்னால உன்னோட ஃப்ரெண்ட்ஸ்ல பெண்கள் இல்லையா, அவங்களோடநீ பேசினது கிடையாதா, இல்ல நான் கூடாதுன்னு சொன்னேனா?”

“...”

“அந்த மெஸேஜ், குட் டைம்ஸ், கிரேட் ஈவினிங்ஸ் , ரெண்டு மாச பழக்கத்துலயே மித்துன்னு கூப்பிடறது…”

ருக்மிணியின் சரியான, கூர்மையான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத சௌமித்ரன் பொறுமை இழந்தான்.

“ஆமா, ரொட்டீனா ஒரே மாதிரி போற லைஃப்ல, என்னை விட , உன்னை விட சின்னப் பொண்ணோட பேசறதும், சிரிக்கறதும் எனக்குப் புடிச்சிருந்தது. ஒரு மாதிரி இன்னும் யங்கா,வயசு குறைஞ்ச ஃபீல் கிடைச்சது. இதைத் தாண்டி நிச்சயமா தப்பா எதுவும் இல்லை. இது எதுவும் பிரேர்ணாக்குத் தெரியாது. ச்சிலீர்னு ஜில் தட்டிப் போற அந்த ஃபீலை நான் உள்ளுக்குள்ள ரசிச்சேன். என்ஜாய் பண்ணினேன். தட்ஸ் இட்”

“...”

“சத்தியமா எங்கிட்ட தப்பான எண்ணமோ, பேச்சோ, பார்வையோ, நோக்கமோ கிடையாது. உங்கிட்ட சொல்லாம அவ கூட பழகறதுல ஒரு த்ரில் இருந்தது. அதே நேரம் உனக்குத் தெரியவே கூடாதுன்னு ரகசியமா வெச்சுக்கவும் நான் நினைக்கலை மினி, பிலீவ் மீ”

“...”

மௌனமாக எழுந்து படுக்கையறைக்குள் சென்ற ருக்மிணி, மறுநாள் காலை அலுவலகம் சென்றாள். மதியம் இரண்டு மணிக்கு வீடு வந்து, பேக் செய்தவள், மாலையில் வந்தவனிடம் “நைட் கலிஃபோர்னியா போறேன்”

“என்ன திடீர்னு?”

“வேண்டாம்னுதான் இருந்தேன். இப்ப எனக்கு வேற வழி தெரியலை”

“ப்ளீஸ் மினி, தப்பு செஞ்சது நான். உன்னை ஏன் பனிஷ் பண்ணிக்கற”

“இது பனிஷ்மென்ட் இல்லை சௌ. என்னோட ரொட்டீனையும் சுவாரஸ்யமாக்க யாராவது கிடைக்கறானான்னு…”

“ஸ்டாப் இட் மினி. என்னை வெறுப்பேத்தறதா நினைச்சு, உளறாத. நீயே நினைச்சாலும் உன்னால தப்பு பண்ண முடியாது”

"அப்ப நீ செஞ்சது தப்புதான்னு ஒத்துக்கறயா சௌ?"

தன் கை கன்னிப்போகுமளவு அழுத்தமாகப் பிடித்திருந்த கணவனின் பிடியை விலக்கியவள்,

“நீ வேற, நான் வேறன்னு நினைக்காதது என் தப்புதான் சௌ” என்றவள் கிளம்ப, ஏர்போர்ட்டில் கொண்டு வந்து விடும் வரை இருவருக்கும் இடையே இருந்தது மௌனம் மட்டுமே.

பிறகு இருவரும் பேசாமல் இல்லை. இப்போதும் அவள் அவனை சந்தேகிக்கவில்லை. தன்னிடம் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் மட்டுமே.

சலிப்பானதொரு வாழ்க்கையையா இருவரும் வாழ்கிறோம் என்ற எண்ணம் அலையாக எழுந்து ஆயாஸம் தந்தது. தனிமை தன்னை சமனமாக்கி, சமாதானம் தரும் என்று நினைத்தது போய், சௌமித்ரனைத் தவிர யாரிடமும் எதுவும் அதிகம் பகிராதவள் கணவனின் அண்மைக்கு ஏங்கித் தவித்ததில் ருக்மிணி உடல் சோர்ந்து காய்ச்சலில் விழுந்தாள்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ! 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
135
அவ சொல்றா போல ஜஸ்ட் ப்ரெண்டுன்னா அவ கிட்ட சொல்லி இருக்கலாமே
 

saki

New member
Joined
Nov 8, 2024
Messages
4
மாட்டிட்டு சமாளிக்கிறான் செள.. முனீஸ் கெத்து விடாத இருக்கணும்
 
Joined
Jun 19, 2024
Messages
16
😍😍😍

அவ போனது கலிஃபோர்னியாவுக்கு, ஆனா நியூயார்க் பாட்டு தான் கிடைச்சது...😁😁😁

 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
14
பிரோப்ளேம் இல்லாத life இருந்தா இப்படி தான் தானே பிரோப்ளேம் கிரேட் பண்ண சொல்லும் மனசு...
 

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
57
IVF donar சௌமித்ரனாக இருக்க வாய்ப்பு இருக்கா.
 
Top Bottom