• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இல்லற வீணை 8

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
இல்லற வீணையின் இனிய சங்கீதம்

அத்தியாயம் 8

பார்த்தேன் சிரித்தேன்
பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத்தேன்
என நான் நினைத்தேன்
அந்த மறைத்தேன் இதுவென
மலைத்தேன்


பாடலை விசிலடித்தபடி வந்தான் பிரசாந்த்.

" பட்டப் பழைய பாட்டு. வேற புதுப்பாட்டே கெடைக்கலையா உனக்கு? "

" பழைய பாட்டோட இனிமை புதுப்பாட்டில இல்லையே கண்ணம்மா? ஒயின் பழசாக ஆக அதுக்கு விலையும் மதிப்பும் ஜாஸ்தி. அது தருகிற போதையும் கிறக்கமும் ஜாஸ்தி தெரியுமா? அது மாதிரித் தான் பழைய தமிழ்ப் பாடல்களின் இனிமையே தனி தான் "

" சரி, ஒயின் பத்தில்லாம் பயங்கரமா ரிசர்ச் பண்ணிட்டிருக்கே! இது நல்லதுக்கில்லை, ஆமாம் சொல்லிட்டேன் "

" நடமாடும் மதுக் கோப்பையா நீ என் முன்னால் நிக்கும் போது வேறு போதை எனக்கெதுக்கு கண்ணம்மா "

" போதும் போதும், ஓவர் டோஸாயிடப் போகுது. ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னாயே? அது என்ன, அதை முதலில் சொல்லு ராஜா"

" அதுவா சொல்லறேன், சொல்லறேன். என்னோட காலேஜ் புரஃபசர் இன்னைக்கு ஃபோன் பண்ணினார். நான் படிக்கும் போது எனக்கு அவர் தான் மென்டர். எதுக்கெடுத்தாலும் அவர் கிட்டத் தான் ஓடுவேன்"

" அப்படியா? நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தாரா? நான் மீட் பண்ணிருக்கேனா என்ன? " ஆர்வம் கொப்பளித்தது பத்மினியின் குரலில்.

" இல்லைம்மா, அவர் வரலை. அவரால் வரமுடியலை. அவங்க வீட்டில் ஏதோ அசம்பாவிதம். ஃபோன் பண்ணி வாழ்த்து சொன்னதோடு சரி. இப்போ ரிடர்யாகிட்டாரு. சொந்த ஊருக்குப் போய் செட்டில் ஆயிட்டாரு. எனக்கும் அதுக்கப்புறம் அவரை மீட் பண்ணற சான்ஸே கெடைக்கலை. இப்போ அவரோட பொண்ணு கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணிருக்காரு. நான் கண்டிப்பாப் போகணும். ரெண்டு, மூணு நாட்களுக்கு லீவு எடுத்துட்டுப் போணும். போயி அவருக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணனும். நீ என்ன பண்றேன்னா , நான் திரும்பி வர வரைக்கும் அம்மாவோட போய்த் தங்கு. இல்லைன்னா அம்மாவை இங்கே வரச் சொல்லிடலாமா? " என்று கேட்டான்.

கொஞ்ச நேரம் கண்களை மூடிய படி யோசித்தாள் பத்மினி. பட்டென்று கண்களைத் திறந்தவள் துள்ளியெழுந்து உற்சாகத்துடன் படுக்கையில் உட்கார்ந்தாள்.

" எந்த ஊரு உங்க புரஃபசருக்கு? "

" மதுரை அருகில் இருக்கும் தேனி தான் அவர் ஊரு. தேனியில் தான் கல்யாணமும். இங்கிருந்து மதுரைக்கு ஃப்ளைட்டிலயோ, டிரெயினிலயோ போயி, அங்கிருந்து வாடகை காரில் போகணும். கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆகும்."

" அப்படின்னா நானும் வரேன். அங்கிருந்து பக்கத்தில் தேக்கடி, சுருளி, கொடைக்கானல் எல்லாம் பாத்துட்டு வரலாம். நல்ல சான்ஸ்"

" அவ்வளவு அலைச்சல் எல்லாம் உனக்கு உடம்புக்கு ஒத்துக்காது. நீ பேசாமல் இங்கே ரெஸ்ட் எடு. நான் மட்டும் சட்டுன்னு போயிட்டுப் பட்டுன்னு வந்துடறேன். "

" அதெல்லாம் முடியாது. நானும் வருவேன். டாக்டர் கூட சொல்லிட்டாங்க. இனிமேல் எந்தப் பிரச்னையும் இல்லைன்னு சொன்னார்கள்! இயல்பா இருக்கலாம்னு சொன்னாங்களே? "

" என்ன தான் டாக்டர் சொன்னாலும் ரிஸ்க் எடுக்கணுமான்னு யோசி கண்ணம்மா. பிடிவாதம் பிடிக்காதே! அத்தை கூட ஜாலியா இரு. நான் மட்டும் போயிட்டு ரெண்டு நாட்களில் திரும்பிருவேன். ப்ளீஸ்மா. இந்த ஒரு விஷயத்தில் நான் சொல்லறதைக் கேளும்மா" என்று கெஞ்சினான். பத்மினி மசியவில்லை. இரவு உணவைச் சாப்பிடாமல், அவளுடைய மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடாமல் சத்தியாக்கிரகம் செய்து அவனைக் கட்டாயப்படுத்தினாள். அவனுடன் பேசாமல் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

பிரசாந்திற்கோ அவளுடைய சின்னச் சண்டைகளும், செல்ல மனஸ்தாபங்களும் நன்றாகவே பழகிப் போயிருந்தன. ஆனால் இந்த முறை பத்மினி கையாண்ட மௌனம் என்ற பெரிய ஆயுதத்தின் தாக்குதலை அவனால் சமாளிக்க முடியவில்லை. அவளுடன் அதிக நேரம் பேசாமல் இருக்க முடியவில்லை அவனால்.

" பயங்கரமா டார்ச்சர் பண்ணறயே கண்ணம்மா? சரி , நாளைக்கு டாக்டரைப் போய்ப் பாக்கலாம். அப்புறம் அத்தை கிட்டயும் ஒபீனியன் கேட்கலாம். அதுக்கப்புறம் முடிவு பண்ணிக்கலாம். ப்ளீஸ் இப்ப சாப்பிடு. சாப்பிடாமத் தூங்கினால் உனக்கும் நல்லதில்லை. குழந்தைக்கும் நல்ல தில்லை" என்று சொல்லியபடி, தட்டில் சாதத்தையும், குழம்பையும் போட்டுப் பிசைந்து கொண்டு அவளிடம் கெஞ்சினான்.

" இங்கே பாரு. அம்மா சொன்னால்லாம் பத்தாது. அம்மா உனக்குத் தான் எப்பவும் ஜால்ரா போடுவாங்க. அவங்க எனக்கு சப்போர்ட் பண்ணறதுக்கு சான்ஸே இல்லை. டாக்டர் கிட்ட என் எதிரில் தான் நீ பேசணும். ஃபோனில கருத்துக் கேக்கறதை எல்லாம் நான் ஏத்துக்க மாட்டேன். அதுவும் நாளை காலையில் நாம டாக்டரைப் போய்ப் பாக்கறோம். ஓகேயா? " என்று எதிர் நிபந்தனை போட, வேறு வழியின்றி பிரசாந்த் அதை ஏற்றுக் கொண்டான். அதன் பிறகு தான் தட்டையே அவள் கையில் வாங்கிக் கொண்டாள்.

உணவைத் தானே எடுத்து அவளுக்கு ஊட்டி விட்ட பிரசாந்த், " சரியான ராக்ஷஸிடி நீ! எனக்குன்னு ஒரு தீவிரவாதி தான் பொண்டாட்டியா வந்து வாச்சிருக்கு! " என்று செல்லமாக அலுத்துக் கொண்டான். பத்மினியோ அவனுடைய அவஸ்தையைக் கண்டு சிரித்து இரசித்தாள்.

அடுத்த நாள் காலையில் காமாட்சியிடம் பேசிய போது அவர்கள் எதிர்பார்த்தது போலத் தான் பேசினாள்.

" எதுக்கு இப்படி அலைஞ்சு ஸ்ட்ரெயின் பண்ணிக்கணும்? அதெல்லாம் வேணாம். மாப்பிள்ளை, டாக்டர் கிட்டக் கேக்கவே அவசியம் இல்லை. அவளை விட்டுட்டு நீங்க மட்டும் கிளம்புங்க. நான் பாத்துக்கறேன். அங்கே எல்லாருக்குமா சமைக்கற விருந்துச் சாப்பாடும் இவளுக்கு ஒத்துக்குமோ என்னவோ? " என்பதில் ஆரம்பித்து, பத்மினி போகாமல் இருக்க நூற்றியெட்டுக் காரணங்களை அடுக்கினாள்.

" நான் அப்பவே சொன்னேன் இல்லை? அம்மா இப்படித் தான் பேசுவாங்கன்னு எனக்கு நிச்சயமாத் தெரியும். எங்க அம்மா எந்த இடத்தில் எப்படிப் பேசுவாங்கங்கறது எனக்கு அத்துப்படி. நாம டாக்டர் கிட்ட டிஸ்கஸ் பண்ணலாம். மனசை சந்தோஷமா வச்சுக்கணும்னு டாக்டர் சொன்னாங்க இல்லையா? ஒரே இடத்தில் அடைஞ்சு கிடக்காம, புது இடங்களுக்குப் போய்ப் புது மனுஷங்களை மீட் பண்ணறது எவ்வளவு எக்ஸைட்டிங்கா இருக்கும். குழந்தைக்கும் அந்த சந்தோஷம் நல்லது தானே செய்யும் " என்று பத்மினி குதித்துக் கொண்டிருக்க, அவளுடைய கைனகாலஜிஸ்டும் போகலாம் என்று க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாள். மனம் போல் மாங்கல்யம். ஐஸ்க்ரீமுக்கு மேல் செர்ரி வைத்தது போல பத்மினிக்குக் குதூகலமோ குதூகலம்!

"வெளியூர் போகலாம். ஆனா கவனமா இருந்துக்கோங்க. ரொம்பக் கடினமான டிராவல் வேண்டாம். ஹில் ஸ்டேஷன் கூட வழியெல்லாம் பல இடங்களில் நல்லா இருக்காது. நிறையக் குலுக்கல் இருக்கும்னா அவாய்ட் பண்ணுங்க. அதர்வைஸ் இட் ஈஸ் பெர்ஃபெக்ட்லி ஓகே டு டிராவல். எக்ஸ்ட்ரா கவனம் பிளஸ் அப்பப்ப நடுவில் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. உணவு விஷயத்திலும் ஜாக்கிரதையா இருங்க. வாய்க்குப் பிடிக்குதுன்னு ரொம்ப ஸ்பைஸியால்லாம் சாப்பிட வேணாம்" என்று சில, பல அறிவுரைகளுடன் டாக்டர் விடை கொடுக்க, இரண்டு பேரும் சந்தோஷமாகத் தான் கிளம்பினார்கள்.

இனிமையும், உற்சாகமும் சேர்ந்து மனங்களில் ஆனந்தக் கூச்சலிட இரண்டு பேரும் பயணத்தைத் தொடங்கினார்கள். கொடைக்கானல் போகவேண்டாம் என்று முடிவு செய்தார்கள். சுருளி அருவியை மட்டும் சென்று பார்க்கலாம் என்றும், முடிந்தால் தேக்கடி, இல்லை களைப்பாக இருந்தால் அதையும் தவிர்க்கலாம் என்று பிரசாந்த் சொன்னபோது பத்மினியும் சரியென்று ஏற்றுக் கொண்டாள்.

' கூட அழைச்சுட்டுப் போக பிரசாந்துக்கு இஷ்டமே இல்லை. இவ்வளவு தூரம் போராடி ஒரு வழியா சாதிச்சிருக்கேன். இதுக்கு மேல ஆசைப்படாதே பாலகுமாரி. கிடைச்சது போதும். ரொம்பச் சீண்டினா, உள்ளதும் போச்சு லொள்ளைக் கண்ணான்னு ஆயிடப் போகுது' என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்ட பத்மினி, அமைதியாகவே பிரசாந்த்தின் முடிவை ஏற்றுக் கொண்டாள்.

அமைதியாகத் தொடங்கிய அந்தப் பயணம் அனர்த்தமாகவே முடியப் போகிறதென்று காமாட்சிக்கு உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ அவளால் தன்னுடைய மனக்கலக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை. பிரசாந்திடம் புலம்பித் தள்ளினாள்.

" கவலைப்படாதீங்க அத்தை. நான் ஜாக்கிரதையாப் பாத்துக்கறேன். கூட்டிட்டுப் போகலைன்னா அவளுக்கு ஏமாற்றமா இருக்கும். கோவிச்சுட்டுக் கத்துவா. சண்டை போடுவா. எரிச்சல் படுவா. அதுவும் அவ இப்போ இருக்கற நிலைமையில் நல்லதில்லையே? டாக்டர் கிட்ட விவரமாப் பேசியாச்சு. பயப்படற அளவுக்கு ஒண்ணும் ஆகாது" என்று காமாட்சியிடம் விளக்கம் சொல்லி ஆறுதலாகப் பேசிவிட்டுத் தான் கிளம்பினான் பிரசாந்த். அவனுக்கும் நடக்கப்போகும் விபரீதங்கள் தெரிந்திருந்தால் காமாட்சியின் வார்த்தையைக் கேட்டிருக்கலாம் என்று புரிந்திருக்கும். ஆண்டவனின் லீலைகளை யாரால் தடுக்க முடியும்?

நடக்கப் போகும் விபரீதங்கள் பற்றிய சங்கேதங்கள் மனிதனுக்கு எப்படியாவது தெரிய வந்தாலுமே அவனால் நடக்கப் போவதைத் தடுக்க முடியாது. விதி எனும் மாய வலை தனது பின்னலை அவ்வளவு நேர்த்தியாகப் பின்னி வைத்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் அந்த மாயவலையில், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் சிக்கி விடுகிறான்.

பத்மினியும், பிரசாந்தும் மதுரைக்கு விமானத்தில் சென்று இறங்கினார்கள். மதுரையில் அன்று தங்கி மதுரை அரசியான மீனாட்சியை தரிசனம் செய்து விட்டு, அடுத்த நாள் காலையில் தேனிக்கு வாடகை வண்டியில் கிளம்பினார்கள். கோயிலைச் சுற்றியிருந்த கடைகளில் தனக்குப் பிடித்த கண்ணாடி வளையல்களையும், தாழம்பூக் குங்குமத்தையும் அம்மா காமாட்சி சொன்னபடி வாங்கி வைத்துக் கொண்டாள் பத்மினி. மதுரைக் கோயிலுக்குப் போகும் பெண்கள் மீனாட்சியம்மனின் பிரசாதமாக இவற்றை வாங்குவது ஐதீகம்.

ஓய்வு பெற்ற பேராசிரியரான அருளானந்தம் தேனியில் தனது பூர்விக வீட்டில் சுற்றம் புடைசூழ நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார். தங்களது பரம்பரைச் சொத்தான வயல்களையும், தோட்டங்களையும் பராமரித்துக் கொண்டு அமைதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தார்.

தேனி நகரம், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மடியில் உல்லாசமாக அமர்ந்திருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த இடம். குளுகுளுவென்று உடலைத் தொட்டுத் தழுவித் தாலாட்டும் காற்று சுற்றுச் சூழலை ரம்யமாக்கி மனதையும் அசைத்து விடுகிறது.

அருளானந்தத்திற்குத் தனது வளர்ப்பு மகனான பிரசாந்தைப் பார்த்ததும் கொள்ளை மகிழ்ச்சி. தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. ஆகாசத்துக்கும் பூமிக்குமாக ஆனந்தத்துடன் குதித்துக் கொண்டிருந்தார்.

" அருள் ஸார், நீங்க கூப்பிட்டதும் நான் ஓடி வந்துட்டேன். கூடவே என் மனைவியையும் கூட்டிட்டு வந்துட்டேன். எங்க கல்யாணத்துக்கும் நீங்க வரலையா? அது தான் உங்களை நேரில் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக்கலாம்னு அவளையும் கூட்டிட்டு வந்துட்டேன் "

" நல்ல காரியம் செஞ்சே பிரசாந்த்? அகிலா, இங்கே வா. யாரு வந்திருக்காங்க பாரு" என்று தன் மனைவியையும் அழைத்துத் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார். அகிலாம்மாவோ கணவரை விட அதிகம் சந்தோஷப்பட்டாள். கழுத்தில் இருந்த தங்க செயினைக் கழட்டி, பத்மினியின் கழுத்தில் போட்டுவிட்டாள். காலில் விழுந்த அந்த இளம் ஜோடிக்கு ஆசிகள் தந்ததோடு, கல்யாணத்திற்காக வாங்கி வைத்திருந்த பட்டுப்புடவை, பட்டுச்சட்டை, வேட்டியையும் பெரிய தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்தார்கள்.

" இங்கே என்னல்லாம் வேலை இருக்குன்னு சொல்லுங்க புரொஃபசர்? நானும் கொஞ்சம் ஓடியாடி உதவி செய்யறேன் "

" அதுக்கெல்லாம் நிறைய ஆளுங்க இருக்காங்க. நீ பத்மினியைக் கூட்டிட்டு அக்கம்பக்கம் சுத்திப் பாரு. சுருளி, மேகமலை, கும்பக்கரை அருவிகளைப் பாக்கலாம். வீரபாண்டி, குச்சனூர் கோயில் பாக்கலாம். தேக்கடி, கொடைக்கானல் கூட அதிக தூரம் இல்லை. போடி மெட்டு பக்கம் போனா ஏலக்காய் எஸ்டேட்லாம் விசிட் பண்ணலாம். வந்ததுக்கு மருமகப் பொண்ணையும் நாலு இடம் கூட்டிட்டுப் போ. மலைப்பக்கம் சிலுசிலுன்னு வீசற காத்தை நல்லா என்ஜாய் பண்ணுங்க" என்று அன்புக் கட்டளை இட்டார்.

" நீங்க வாட்டுக்கு அங்கே இங்கே அலையறதுக்கு ஐடியா கொடுக்கறீங்க. வயத்துல குழந்தையைச் சுமந்துட்டிருக்கற பொண்ணு எம்புட்டு எடத்துக்குச் சுத்த முடியும்? புரியாமப் பேசாதீங்க. நீங்க சுருளி அருவி மாத்திரம் போயிட்டு வாங்க தம்பி. மூலிகைகள் கலந்த காத்து உடம்பில பட்டால் நல்லதுன்னு சொல்லுவாங்க. ரொம்ப அலைய வேணாம். கல்யாண வீட்டில் உக்காந்து விசேஷத்தை நல்லா என்ஜாய் பண்ணட்டும் என் மருமக. வாய்க்கு ருசியாச் சாப்பிடட்டும் " என்று அகிலாம்மா சொல்லிவிட்டார்.

" இங்கே பாருப்பா. இந்த வீட்டைப் பொருத்தவரை இவ தான் பெரு மதிப்பிற்குரிய யுவர் ஆனர்! இவ சொன்னதைத் தான் நாம் கேட்டாகணும்" என்று அருள் சாரும் பின்வாங்கி விட்டார்.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருந்ததால் அடுத்த நாள் காலையில் வாடகை வண்டி எடுத்துக் கொண்டு சுருளி அருவிக்குப் போய்வந்தார்கள். ஆரவாரம் அதிகம் இல்லாத அற்புதமான அந்த இயற்கை எழில் மனதைக் கொள்ளை கொண்டது. போகும் வழியில் கண்ணில் தென்பட்ட திராட்சைத் தோட்டங்கள், சற்று தூரத்தில் இருந்தே கேட்ட கொல்லென்ற நீர்வீழ்ச்சியின் ஓசை, வண்டு, பூச்சி இனங்களின் ரீங்காரம், காட்டுச் செடிகளின் இலைகள் மற்றும் மலர்களில் இருந்து கிளம்பிய புதுமையான பசுமையான மணம், அங்குமிங்கும் தாவிக் கொண்டிருந்த வானரங்களின் கொண்டாட்டம் அனைத்துமாகச் சேர்ந்து அவர்களுடைய மனங்களைக் கொள்ளை கொண்டன.

இனிமையான அனுபவத்தை அவர்களுக்குத் தந்தது அந்தப் பயணம். அடிவாரத்தில் இருந்த சுருளியாண்டவரை தரிசனம் செய்து விட்டு, காமாட்சிக்காகச் சில தைலங்களையும் வாங்கிக் கொண்டு திரும்பினார்கள்.

மனதில் அந்த இனிமையை நிறைத்துக் கொண்ட பின்னர் அசை போட்டபடியே தான் தேனிக்கு வந்து சேர்ந்தார்கள். எல்லையற்ற காதலுடன் பயணத்தை முழுமையாக அனுபவித்து விட்டு வந்த இரண்டே நாட்களில் சண்டை போட்டுப் பிரிந்து விட்டார்கள். இனிமையான இல்லற உறவு அதற்குப் பிறகு கசந்து போனது.

தொடரும்,
புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: இல்லற வீணை 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom