• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இல்லற வீணை 6

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
இல்லற வீணையின் இனிய சங்கீதம்

அத்தியாயம் 6


" என்னம்மா ஆச்சு அண்ணாவுக்கு? நான் ஏதாவது தப்பாக் கேட்டுட்டேனா? ஏன் சட்டுனு எழுந்து உள்ளே போயிட்டான்? " என்று பத்மினி கேட்டபோது, காமாட்சியும் அதிர்ச்சியுடன் உறைந்து போயிருந்தாள்.

" அது ஒண்ணுமில்லைம்மா. அவன் படிப்பு முடியும் டயத்தில் எங்க கிட்ட, 'நான் வேலைக்குப் போய் உங்க ரெண்டு பேரையும் நல்லா கவனிச்சுக்குவேன். உங்களோட சின்னச் சின்ன ஆசைகளைக் கூட எங்களுக்காகத் தியாகம் பண்ணிட்டுக் குழந்தைகளான எங்களுக்காகவே இதுவரை வாழ்ந்திருக்கீங்க? இனிமேல் நீங்க வாழ்க்கையில் எந்தவிதமான காம்ப்ரமைஸும் செய்ய வேணாம். எனக்கும் படிப்பு முடியப்போகுது. நிச்சயமா நல்ல வேலை கிடைக்கும். நான் உங்களை நல்லாப் பாத்துக்குவேன். வெளியூர், வெளிநாட்டுக்கு டூர் அனுப்புவேன். உங்க ஆசைகள் எல்லாத்தையும் ஒவ்வொண்ணா நிறைவேத்துவேன்' அப்படின்னு சொல்லிட்டே இருந்தான்.

ஆனா அப்பா இப்போ திடீர்னு இறந்து போயிட்டாரே? நம்மால அப்பாவுக்கு ஒண்ணுமே செய்ய முடியலையே? ஒரு மகனா நின்னு அப்பாவுக்கு என் கடமையைச் செய்ய ஆண்டவன் எனக்கு சந்தர்ப்பம் கொடுக்கலையேன்னு புலம்பிட்டே இருந்தான். பயங்கர டிப்ரஷன் ஆயிடுச்சு. கவுன்சிலிங் கொடுத்து சரி செஞ்சோம். அந்த டாபிக்கையே அவன் முன்னால் பேசாம அவாய்ட் செஞ்சுட்டு வரேன். இப்போ நீ வந்ததில் இருந்து அதையே பேசிட்டு இருக்கோமா? அதுனால இப்படி வினோதமா நடந்துக்கறான். வேற ஒண்ணுமில்லை" என்று சொன்னதும் பத்மினியும் வருத்தப்பட்டாள்.

" சரிம்மா. நானும் இனிமேல் அப்பாவைப் பத்தி அண்ணன் எதிரில் அதிகம் பேசாமல் இருக்கப் பாக்கறேன்" என்று உறுதியளித்தாள். காமாட்சியும் அந்த விஷயம் அத்தோடு முடிந்ததென்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

சாந்தனு இப்போது படித்து முடித்து ஒரு நல்ல கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆஸ்திரேலியாவில் அடிலைட் அருகில் இருக்கிறான். இப்போது பத்மினியைச் சந்திப்பதற்காகவே இந்தியாவிற்கு விடுமுறையில் வந்திருக்கிறான்.

பத்மினி, படிப்பு முடியும் சமயத்தில் வேலைக்கு முயற்சி செய்ததில் அவளுக்கும் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. எந்த இடத்தில் போஸ்ட்டிங் என்பது மட்டும் தெரியவில்லை. பட்டம் வாங்குவதற்கு முன்னால் யுனிவர்சிட்டியில் சில இறுதிக்கட்ட வேலைகள் பாக்கி இருந்தன. அவற்றை முடித்து விட்டு, அங்கிருந்து சென்று புதிய வேலையில் சேர வேண்டும். அதற்கு முன்னால் தனது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக வந்திருந்தாள். விடுமுறை முடிந்து
அங்கிருந்து சென்று புதிய வேலையில் சேர வேண்டும். அதற்கு முன்னால் தனது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக வந்திருந்தாள். விடுமுறை முடிந்து பத்மினி கிளம்பினாள். சாந்தனுவும் கிளம்பி விட்டான்.

டிகிரி வாங்கிய பின் ஸியாட்டலில் இருக்கும் அந்தப் பிரபலமான ஐடி கம்பெனியில் பத்மினி வேலைக்குச் சேர்ந்தாள். வேலையில் சேர்ந்ததும் முதல் நாளே பிரசாந்தை சந்தித்தாள். அவளுடைய டீம் லீடர் அவன் தான். வேலையில் டிரெயினிங் கொடுத்ததும் அவனே.

முதல் சந்திப்பிலேயே லேசாக அவளுடைய மனதை அசைத்து விட்டான். குறுகுறுவென்ற பார்வையும், துறுதுறுவென்ற முகஜாடையும், பெண்களிடம் அசட்டுத்தனமாக வழியாமல் தெளிவாகப் பேசும் விதமும், முகத்தை நேரடியாக அதுவும் கண்களைப் பார்த்துப் பேசும் பண்பும் அவனை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக்கிக் காட்டியது. அவன் வயதொத்த இளைஞர்களிடம் இருந்து நிச்சயமாகத் தனித்து நின்றான். உடன் வேலை பார்த்த பெண்கள், அவனைப் பார்த்த பார்வையிலேயே அவன் பெண்களிடம் நல்ல பெயர் வாங்கியிருந்தது தெரிந்தது.

" ஹாய் பத்மினி! ஹௌ வாஸ் யுவர் ஃபர்ஸ்ட் டே எக்ஸ்பீரியன்ஸ்? டிட் யூ லைக் தி என்விரான்மென்ட்? " என்று தானாகவே வந்து முதல் நாள் மாலையில் விசாரித்தது அவளுடைய டீமில் இருந்த மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது. எல்லோரையும் புருவங்களை உயர்த்தி ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தது. சாதாரணமாக யாரிடமும் வலியப் போய்ப் பேசுபவன் அல்ல அவன் என்பதால் தான் அவர்களுக்கு ஆச்சரியம்.

" எங்கேயாவது காஃபி குடிச்சுட்டே பேசலாமா? " என்றாள் பத்மினி. தன்னைச் சுற்றி நின்றவர்களின் பார்வையில் இருந்து தப்பிக்கத் தான் அப்படிச் சொன்னாள் பத்மினி.

' எவ்வளவோ படிச்சு நல்ல வேலைக்கு வந்தாலும் மத்தவங்க பேசறதை கவனிக்கறதையும், மனசுக்குள் ஜட்ஜ் பண்ணி மத்தவங்களைப் பத்தி வம்பு பேசறதுக்கும் மனுஷங்க என்னைக்குமே தயங்கறதே இல்லை' என்று மனதுக்குள் அவர்களைத் திட்டியபடி பிரசாந்திடம் பேசினாள்.

" ஓ யெஸ், போலாமே! " என்று சிரித்த முகத்துடன் அருகிலிருக்கும் காஃபி ஷாப்புக்கு அழைத்துச் சென்றான் பிரசாந்த்.

" உங்களைப் பாத்ததும் அதிகமாகப் பேச மாட்டீங்க, ரொம்ப ரிசர்வ்டு டைப்னு தான் நினைச்சேன். இப்படி முதல் தடவை மீட் பண்ணின பொண்ணோட, அவ கூப்பிட்ட உடனே காஃபி ஷாப்புக்கு வருவீங்கன்னு நெனைக்கவேயில்லை. யார் கூப்பிட்டாலும் உடனே வந்துருவீங்களோ? " என்று நக்கலாகக் கேட்டாள்.

" மத்தவங்களும் நீங்களும் ஒண்ணா என்ன? "

" என்ன? வாட் டு யூ மீன்? " எரிச்சலுடன் கேட்டாள் பத்மினி. ' பாக்க டீசன்டா இருக்கான்னு நினைச்சா, இவனும் மத்தவங்க மாதிரி மனசுக்குள்ள பொறுக்கி தானே? இப்படி வழியறானே? ' என்று தான் அவள் நினைத்தாள்.

" ஸாரி, நீங்க ஏதோ தப்பா யோசிக்கற மாதிரி எனக்குத் தோணுது. நீங்க எனக்கு ஏன் ஸ்பெஷல்னா, நீங்க என் பெஸ்ட் ஃப்ரண்ட் சாந்தனுவோட செல்ல சிஸ்டர்" என்று பிரசாந்த் சொல்ல, பத்மினியின் முகம் லாலிபாப் கிடைத்த குழந்தையின் முகமாக மலர்ந்து போனது.

" வாவ், நீங்க அண்ணனோட நண்பரா? வாட் எ ஸர்ப்ரைஸ்! "

" யெஸ், நானும் சாந்தனுவும் எம். டெக். ஒரே காலேஜில் தான் படிச்சேன். வி ஆர் குட் ஃப்ரண்ட்ஸ். நீங்க இங்கே வேலையில் சேரப் போறதா ஏற்கனவே சொல்லிருந்தான். உங்க கிட்ட சொல்லலயா? தகவல் கிடைச்சதில் இருந்து உங்களை மீட் பண்ண ஆவலோடு வெயிட் பண்ணிட்டிருந்தேன்" என்று சொல்ல, அவர்கள் இருவருக்கு நடுவில் நட்புப்பூ உடனேயே மொட்டவிழ்ந்தது.

" நீங்க எப்போ இந்த கம்பெனியில் சேந்தீங்க? "

" நான் இந்தியாவில் ஹைதராபாத்தில் இதே கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். இப்போ கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தான் ஆன் ஸைட் சான்ஸ் கிடைச்சுது ஸியாட்டல் வந்தேன். போன வாரம் தான் நீங்க வரப்போற விஷயம் சாந்தனு மூலமாக் கிடைச்சது"

எதிர்பாராத கோணத்தில் இணைந்தாலும் இரண்டு புள்ளிகள் அழகாகவே இணைந்தன. மெல்ல மெல்ல அவர்களுடைய நட்பு, காதலாக உருமாற அதிக நாட்கள் எடுக்கவில்லை. காதலாகிக் கசிந்து உருகினார்கள்.

சாந்தனுவுக்கு விஷயம் தெரிந்ததும் சந்தோஷப்பட்டான். அம்மா தான் எளிதில் ஒத்துக் கொள்ளவில்லை.

" நல்ல பையன் தான். ஆனா ரெண்டு பேரும் வெளிநாட்டில் இருக்கீங்க. அங்கேயே ஸெட்டில் ஆக முயற்சி பண்ணுவீங்க! "

" அப்படில்லாம் ஒண்ணும் ஐடியா இல்லைம்மா.கண்டிப்பாத் திரும்பி வந்துருவோம். அண்ணனும் வெளிநாடு. நீங்களும் இந்தியா விட்டு வர மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். அதனால நாங்க நம்ம நாட்டுக்கே திரும்பற முடிவில் தான் இருக்கோம்"

" அது சரி, பிரசாந்துக்கு உறவுன்னு அதிகமாக யாரும் இல்லை. அப்பா, அம்மாவோ, இல்லை நெருங்கிய உறவுகளோ யாரும் இல்லை. தனியாவே வளந்தவன். எனக்கென்னவோ உன்னை ஒரு பெரிய குடும்பத்துல கட்டிக் கொடுக்கணும்னு ஆசை. இந்தப் பக்கம் நானும் சாந்தனுவும் மட்டுமே உறவு. புகுந்த வீட்டிலயாவது நிறைய உறவுகள் இருந்தாத் தானே நாளைக்கு உங்களுக்குக் குழந்தைங்க பொறக்கும் போது நிறைய சொந்தபந்தங்கள் இருக்கும் " என்று காமாட்சி சொன்ன போது, பத்மினி பக்கென்று சிரித்து விட்டாள்.

" என்னம்மா இது? இந்தக் காலத்தில் பொண்ணுங்களோட அம்மாக்கள், என் பொண்ணு தனியாக் கணவனோட மட்டும் தனிக்குடித்தனமா விழணும்னு ஆசைப்படறாங்கன்னு பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருக்கு. நீங்க என்னடான்னா இப்படி இருக்கீங்களே? ஆச்சரியமாக இருக்கு. பெரிய குடும்பம்னா அதுக்கேத்த மாதிரி நிறைய பிரச்சினைகளும் குழப்பங்களும் வரலாம். இதையெல்லாம் ஒரு காரணமாக வச்சு என் கல்யாணத்தை நீங்க முடிவு பண்ணலாமா? எனக்கு பிரசாந்தைப் பிடிச்சிருக்கு. அவருக்கு என்னைப் பிடிச்சிருக்கு. இது மட்டுமே முக்கியமான விஷயம். மீதி நீங்க சொல்லற சப்பைக்கட்டுக் காரணங்களை எல்லாம் நான் தள்ளுபடி செய்யறேன். இன்னமும் உங்களால இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியலைன்னா, நீங்க ஒத்துக்கற வரைக்கும் நாங்க வெயிட் பண்ணறோம். வேற வழியேயில்லை" என்று உறுதியாக பத்மினி சொல்லி விட, காமாட்சி குழம்பிப் போனாள்.

கொஞ்சம் கொஞ்சமாக மனம் இளகி வந்த காமாட்சி, இறுதியில் பத்மினியின் பிடிவாதத்திற்கு அடிபணிந்தாள். பிரசாந்தின் விருப்பப்படி மிகவும் எளிமையான திருமணம். சென்னையில் தான் நடந்தது. ரிஜிஸ்டர் ஆஃபீஸில் பதிவு செய்து விட்டு , வீட்டிற்கு அருகிலிருந்த கோயிலில் சுவாமி சந்நிதியில் மாலை மாற்றிக் கொண்டார்கள். மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

முதியோர் இல்லத்தில் முதியோருடன் சேர்ந்து உட்கார்ந்து விருந்துச் சாப்பாடு உண்டார்கள். உணவு எளிமையாக, முதியோருக்கு ஏற்றபடி தான் தயாரிக்கப்பட்டது. இந்த விருந்து விஷயத்தில் கூட காமாட்சி அவர்களுக்காக விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. பத்மினி, பிரசாந்த் இருவரின் சேமிப்பில் இருந்து ஒரு கணிசமான தொகை, ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.

சாந்தனு தங்கையின் திருமணத்திற்காக வந்தபோது கேத்தரினை உடன் அழைத்து வந்திருந்தான். அம்மாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான்.

" அம்மா, கேதரினும் நானும் கடந்த ஒரு வருஷமா லிவிங் டுகெதர். கேதரின் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவள்" என்று சொன்னபோது, அதிர்ச்சியில் உறைந்து போனாள் காமாட்சி. ஆனால் கேத்தரினுடன் பழகப் பழக அவளை என்னவோ காமாட்சியின் மனதிற்குப் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

" பத்மினியே தேவலை போல இருக்கு. ஒருத்தனை அதுவும் எனக்கு நல்லாத் தெரிஞ்சவனைத் தான் விரும்பினா. என் கிட்ட சொல்லிட்டு, நான் க்ரீன் சிக்னல்
கொடுத்ததுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா. இவன் என்னான்னா, ஒரு பொண்ணோட குடித்தனம் நடத்தறான். தைரியமா என் கிட்ட வந்து சொல்லறான். ஆனா பத்மினியோட ஆர்க்யூ பண்ணின மாதிரி இவன் கூட என்னால பண்ண முடியாது. ஒருவேளை அது தெரிஞ்சு தான் அட்வான்டேஜ் எடுத்துக்கறானோ? ஆனா இந்தப் பொண்ணு வேற்று நாட்டைச் சேர்ந்தவள்னாலும் நல்ல மாதிரியா இருக்கா. சாந்தனுவை நிச்சயமாக நல்லபடியாப் பாத்துக்குவா போலத் தான் தோணுது" என்று கணவரின் புகைப்படத்துக்கு முன்னால் நின்று புலம்பியபோது, அதைக் கேட்டுக் கொண்டே வந்தாள் பத்மினி.

" ஆனாலும் நீங்க இவ்வளவு பார்ஷியாலிட்டி காமிக்கக் கூடாது. அண்ணனுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? எனக்கு மட்டும் ஆயிரத்தெட்டு அப்ஜெக்ஷன் சொன்னீங்க? இப்போ அண்ணனை ஒண்ணுமே சொல்லலை. அடுத்த ஜன்மம்னு ஒண்ணு இருந்து, மனுஷ ஜன்மமாப் பொறந்தாலும் இந்தியால மட்டும் பொறக்கக் கூடாது. அப்படியே பிறந்தாலும் பொண்ணாப் பொறக்கவே கூடாது " என்று சலித்துக் கொண்டாள் பத்மினி.

" பத்மினி, மாப்பிள்ளை எதிரில் கண்டதையும் உளறாதே. அவர் என்னைப் பத்தி ஏதாவது தப்பா நெனைச்சுக்கப் போறாரு. சினிமால, ஸீரியல்களில் வரும் வில்லிகள் போலத் தான் என் மாமியாரும்னு நினைக்கப் போறாரு"

" அப்படியெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டார். உங்களைப் பத்தி எப்பவும் ரொம்ப உயர்வாய்த் தான் பேசுவாரு" என்று அம்மாவை சமாதானம் செய்தாள் பத்மினி. அவர்களுடைய உரையாடலைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள் பிரசாந்தும், சாந்தனுவும்.

" ஆரம்பிச்சாச்சா அம்மாவும் பொண்ணும்? பிரசாந்த், உன் பொண்டாட்டி பயங்கர சண்டைக்காரி, தெரியுமா? அதுவும் குழந்தையில் இருந்து அம்மாவும் அவளும் சண்டை போடாத நாளே இருக்காது. டாம் அண்ட் ஜெர்ரி தான். நானோ அப்பாவோ வந்து தான் சரி பண்ணுவோம். ஆனா ஜெயிக்கறதென்னவோ பத்மினி தான் எப்பவும்! " என்று சொல்லிக் கண்ணடித்தான் சாந்தனு.

" அவ சொல்லறதை மத்தவங்க ஏத்துக்கலைன்னாத் தானே சண்டை போடுவா? நான் தான் பிரச்சினை ஆரம்பிக்கும் போது சரணாகதி ஆயிடுவேனே? நோ நீட் ஆஃப் எனி பிக் ட்ரிக் " என்று பிரசாந்த் சொல்ல, எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

" பரவாயில்லையே! இந்த டெக்னிக்கை எனக்கும் கத்துக் கொடு நண்பா! " என்று பிரசாந்தின் முன் மண்டியிட்டு வேண்டினான் சாந்தனு.

" வாயே திறக்காம மௌன சாமியாரா இருந்த என் மகனை இவ்வளவு தூரம் கலகலப்பா மாத்தியிருக்காளே கேத்தரின்? எல்லாப் புகழும் கேத்தரினுக்கே" என்று காமாட்சி புகழ, பத்மினி அவளை முறைத்தாள்.

" சாந்தனு, உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் " என்று காமாட்சி ஆரம்பிக்க, பிரசாந்த், " எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லிக் கொண்டே வெளியே போவதற்காக எழுந்திருந்தான்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: இல்லற வீணை 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mahalakshmi Babu

New member
Joined
Aug 13, 2024
Messages
14
எல்லோருமே நல்லவர்களாக இருந்தும் எப்படி பெண் மாப்பிள்ளைக்கு இடையே தகராறு வந்தது.
 
Top Bottom