• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இல்லற வீணை 5

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
இல்லற வீணையின் இனிய சங்கீதம்

அத்தியாயம் 5

கீழே மயங்கிச் சரிந்த அம்மாவை ஓடிப்போய்த் தாங்கிப் பிடித்த பத்மினி,

" மாதவி ஆன்ட்டி, ஓடி வாங்க. அம்மாவுக்கு ஏதோ ஆயிடுச்சு " என்று அவர்கள் வீட்டில் உதவிக்கு வந்திருக்கும் பெண்ணை அழைத்தாள். என்ன தான் அம்மாவோடு சரிக்கு சரி வாக்குவாதம் செய்து கொண்டு நின்றாலும், எதிர்த்து எதிர்த்துப் பேசினாலும் அம்மா மயங்கி விழுந்ததும் அரண்டு போனாள் பத்மினி. ' அம்மாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ? ' என்ற பதட்டத்தில் உடல் நடுங்கியது. கண்களில் நீர் பெருகியது. மூளை எதையும் யோசிக்க மறுத்தது.

சரியாக அந்த சமயத்தில் காமாட்சியின் ஃபோன் அலற ஆரம்பித்தது. மாதவி, பத்மினியைப் பார்த்தாள். அவள் அழைப்பை ஏற்றுப் பேசும் நிலையில் இல்லாததால் தானே எடுத்துப் பேசினாள்.

" யாரு பிரசாந்த் தம்பியா, அம்மா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. பத்மினி அம்மா பிரமை பிடிச்ச மாதிரி உக்காந்திருக்காங்க. எனக்கும் என்ன செய்யறதுன்னு புரியலை. நல்ல சமயத்தில் கூப்பிட்டீங்க தம்பி" என்று பிரசாந்திடம் நிலைமையைத் தெளிவாகச் சொன்னாள் மாதவி. அடிக்கடி அங்கே பிரசாந்த் வந்து போய்க் கொண்டிருந்ததால், பிரசாந்தை அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. பிரசாந்த், பத்மினிக்கு நடுவில் ஏதோ பிரச்சினை என்றும் புரிந்து கொண்டாள். ஆனால் தூண்டித் துருவி எதுவும் கேட்கவில்லை. எப்போதும் தான் வேலை செய்யும் வீடுகளில், தேவையற்ற பேச்சைத் தவிர்த்து விடும் நல்ல குணம் மாதவிக்கு.

" சரி, நீங்க பத்மினியையும் குழந்தையையும் பாத்துக்குங்க. நான் என் ஃப்ரண்ட் மூலமா ஏற்பாடு பண்றேன். வெளியூர் வந்திருக்கேன். நாளை காலையில் திரும்பி வந்துடறேன்" என்று சொன்ன பிரசாந்த், உடனடியாக செயல்பட்டான். தேவையான டேமேஜ் கண்ட்ரோல் நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்தான்.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. ஆம்புலன்ஸ் வரும் போதே பிரசாந்தின் நண்பன் அரவிந்த் வந்துவிட்டான். காம்னாவை மாதவியின் பொறுப்பில் விட்டு விட்டு, பத்மினியையும் உடன் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

காமாட்சிக்கு சிகிச்சை அளித்த டாக்டரை அரவிந்தும், பத்மினியும் சந்தித்துப் பேசினார்கள்.

" பிளட் பிரஷர் ரொம்ப அதிகமாக ஷுட் அப் ஆனதால் தான் மயங்கி விழுந்திருக்காங்க. இப்போ மெடிசன்ஸ் கொடுத்து கன்ட்ரோல் பண்ணிட்டோம். ஷி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் அஸ் ஆஃப் நௌ. இருந்தாலும் ரெண்டு, மூணு நாட்களுக்கு இங்கே வச்சு மானிடர் பண்ணனும். நாளைக்கு வேறு சில டெஸ்ட்களை எடுத்துட்டு டிஸ்சார்ஜ் பத்தி முடிவு செய்யலாம் " என்று சொன்னதும் தான் பத்மினியால் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.

வீட்டில் அம்மா மயங்கி விழுந்த போது என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போயிருந்த பத்மினி, மருத்துவமனையை வந்து அடைவதற்குள் தன்னைத் தானே ஒருநிலைப் படுத்திக் கொண்டு விட்டாள். அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்து அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டுமென்று அவளுடைய மூளை அவளுக்குக் கட்டளை இட ஆரம்பித்திருந்தது. அந்த சமயத்தில் அரவிந்தின் துணையும் அவளுக்கு வேண்டித் தான் இருந்தது. பிரசாந்தை மனதில் வைத்துக் கொண்டு அவனிடம் தவறாகப் பேசவில்லை. நன்றியுடன் தான் நடந்து கொண்டாள்.

" பத்மினி ஸிஸ்டர், நீங்க கொஞ்ச நேரத்தில் கிளம்பி வீட்டுக்குப் போயிடுங்க. உங்க குழந்தை ரொம்பச் சின்னக் குழந்தை. பிரசாந்த் மோஸ்ட்லி நாளை மதியத்திற்குள் வந்துடுவேன்னு சொன்னான். உங்க பிரதர் கூடக் கிளம்பி வரப்போறதாக் கேள்விப்பட்டேன். அவங்க யாராவது வந்து பொறுப்பெடுத்துக்கற வரைக்கும் நான் இங்கே மேனேஜ் பண்ணிக்கறேன். நீங்க கவலைப்படாமல் வீட்டுக்குப் போங்க. உங்களுக்கும் இப்போ ரெஸ்ட் தேவை" என்று சொல்ல, பத்மினிக்கு அவன் சொல்வதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

அம்மாவைப் போய் ஒருமுறை பார்த்துவிட்டு பத்மினி கிளம்பினாள். மருந்துகளின் தாக்கத்தால் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் காமாட்சி. கொஞ்ச நேரம் அம்மாவின் அருகில் அவளுடைய அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள். மானசீகமாக அம்மாவுடன் உரையாடினாள்.

'அம்மா, சீக்கிரமா எழுந்துருச்சு வீட்டுக்கு வந்துருங்க. நீங்க இல்லாத வீட்டுக்குப் போக எனக்கு மனசேயில்லை. குழந்தைக்காகத் தான் போறேன். ப்ளீஸ் மா, சீக்கிரம் உடம்பை சரி பண்ணிக்கிட்டு வந்துருங்க. வீட்டுக்கு வந்து நல்லாத் திட்டுங்க என்னை. என் கூடச் சண்டை போடுங்க. இப்படி படுத்து மட்டும் கிடக்க வேணாம்' என்றெல்லாம் பத்மினியின் மனது அரற்றியது.

வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது சாந்தனுவிடம் இருந்து அழைப்பு வந்தது.

" பத்மினி, அம்மாவுக்கு என்ன ஆச்சு? இப்போ எப்படி இருக்காங்க? "

" ஷி இஸ் பெட்டர் நௌ. பிளட் பிரஷர் அதிகமாயிட்டதா டாக்டர் சொன்னார். சரியான நேரத்தில் சிகிச்சை ஆரம்பிச்சுட்டதுனால பயமில்லைன்னு சொல்றாரு. இருந்தாலும் அம்மா இப்படிப் பேச்சுமூச்சில்லாமல் படுத்துக் கிடக்கறதைப் பாத்து பயந்து போயிட்டேன் அண்ணா நான் " என்று சொல்லும் போதே பத்மினி, அழ ஆரம்பித்து விட்டாள்.

" அழாதே பத்மினி. அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது. சீக்கிரம் சரியாயிடும். பயப்படாதே. தைரியமா இரு. நான் டிக்கெட்டுக்கு ட்ரை பண்ணிட்டே இருக்கேன். கிடைச்சதும் கிளம்பிடுவேன். பிரசாந்த் நாளைக்கு
வந்துருவான். நீ வீட்டில் போய் ரெஸ்ட் எடு. பாப்பாவைப் பாத்துக்கோ" என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வைத்தான்.

ஆயாசமாக இருந்தது பத்மினிக்கு. சாந்தனு வந்ததும் மெதுவாகத் தனது விவாகரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். சாந்தனு நிச்சயமாகப் புரிந்து கொள்வான். குழந்தையில் இருந்து பத்மினியின் மேல் அளவில்லாத பாசம் காட்டுபவன் தானே! அவனா புரிந்து கொள்ள மாட்டான்?

' அம்மா ஏதோ அனாவசியமாக பயப்படுறாங்க. கூடப் பிறந்த தங்கையை விடவா ஃப்ரண்ட் ஒசத்தி? அதுவும் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணும் ஸ்கூல் நாட்களில் இருந்து ஃப்ரண்ட்ஸாப் பழகலையே? எஞ்சினியரிங் முடிச்சு எம். டெக். படிக்கும் போது தானே ஃப்ரண்ட்ஸ் ஆகியிருக்காங்க?

நான் அப்போ சிங்கப்பூர் போயிட்டதுனால அந்த சமயத்தில் நான் பிரசாந்தைப் பாத்ததில்லை. ஆனா பிரசாந்தை நான் லவ் பண்ணற விஷயம் தெரிஞ்சதும் அவன் தானே முன்வந்து கல்யாணத்தை நடத்தி வச்சான். அம்மா தான் ஏதோ முட்டுக்கட்டை போட்டாங்க. அப்புறம் அம்மாவையும் அவன் தானே கன்வின்ஸ் பண்ணினான்?

கல்யாண விஷயம் மட்டுமா? குழந்தையில் இருந்து அவளுக்கு எப்பவும் சாந்தனுவின் ஸப்போர்ட் உண்டு. எது வேணும்னாலும் முதலில் அண்ணாவின் காதில் தகவலைப் போட்டால் போதும். மீதியெல்லாம் சாந்தனுவே சமாளித்து விடுவான். அம்மா, அப்பாவிடம் பேசி அவன் தானே ஒத்துக்க வைப்பான்? இப்பவும் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் உண்மைக் காரணம் தெரிஞ்சதும் பிரசாந்த் முகத்தில் காறித் துப்பப் போறான். அதுக்கப்புறம் நிச்சயமா என் பக்கம் தான் நிக்கப் போறான்' என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டே வீடு போய்ச் சேர்ந்த போது, விவாகரத்திற்காகத் தான் எடுத்த முடிவு சரியானது தான் என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.

அடுத்த நாள் பிரசாந்த், ஆஃபிஸ் வேலையை அந்தரத்தில் விட்டு விட்டு ஓடிவந்து விட்டான். பத்மினியும் இந்த சமயத்தில் அவன் செய்த உதவிகளை ஏற்றுக் கொண்டாள். அவன் மீது வெறுப்புப் பார்வையை வீசுவதையோ,
கடுஞ் சொற்கள் பேசுவதையோ தற்காலிகமாக நிறுத்திவிட்டாள். பிரசாந்துக்கே ஆச்சரியமாக இருந்தது.

காமாட்சிக்கு ஹை பிளட்பிரஷர் தவிர வேறு எந்தப் பெரிய பிரச்சினையும் இல்லாததால் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விட்டாள். சாந்தனுவும் இதோ நாளை காலை வரப் போகிறான். காமாட்சி மனதில் ஏதோ பதட்டத்துடன் மகனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். ஏதோ பெரிய எரிமலை வெடிக்கப் போகிறதென்று அவளுடைய உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. காமாட்சியின் வாடிய முகத்தைக் கண்டு பத்மினிக்கும் வருத்தமாகத் தான் இருந்தது.

' நான் என்ன பண்ண முடியும் அம்மா? உங்களுக்காக நான் முடிவை மாத்திக்கப் போவதில்லை. சில நாட்களில் நான் செய்யறது சரிதான்னு நீங்களே ஏத்துக்கப் போறீங்க! எனக்கு நம்பிக்கை இருக்கு. இது என்னோட வாழ்க்கை. இதில் முடிவெடுக்கற முதல் உரிமை எனக்குத் தான். நோ காம்ப்ரமைஸ்' என்று சமாதானப்படுத்திக் கொண்ட பத்மினியின் மனம் அலைபாய்ந்தபடி பழைய நினைவுகளை அசை போட்டது.

பிரசாந்தை முதலில் சந்தித்தது, அவனுடன் கழித்த இனிமையான நாட்கள் எல்லாமே நினைவுத் திரையில் திரைப்படமாக ஓடின.

பத்மினி, சாந்தனு இரண்டு பேருமே படிப்பில் பயங்கரச் சுட்டி. பெற்றோருக்கு அந்த விஷயத்தில் எப்போதும் பெருமிதம் உண்டு.
சாந்தனு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தான். பத்மினி பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறினாள். அத்துடன் வெளிநாட்டு அட்மிஷனுக்காக SAT பரீட்சை எழுதி நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததால், யு. எஸ். ஸில் ஒரு நல்ல யுனிவர்சிட்டியில் ஸ்காலர்ஷிப்போடு அவளுக்கு அட்மிஷன் கிடைத்தது. பத்மினி மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருந்தாள்.

" அதென்ன, இந்தச் சின்ன வயசுல வெளிநாட்டுக்குப் படிக்கப் போறது? அதுவும் பொம்பளைப் புள்ளையைத் தொலை தூரம் படிக்க யாராவது அனுப்புவாங்களா ? எல்லாம் உள்ளூரிலேயே அதுவும் சென்னையிலேயே எங்கே அட்மிஷன் கிடைக்குதோ, அதுவும் என்ன கிடைக்குதோ அதை மட்டும் படிக்கட்டும். போதும்" என்று படபடவென்று பொரிய ஆரம்பித்தாள் காமாட்சி.

" எவ்வளவு கஷ்டப்பட்டு அருமையான அட்மிஷன் வாங்கிருக்கேன்? இப்படிப் பொசுக்குன்னு சொல்லீட்டீங்களே அம்மா? ஊரு பூரா டமாரம் அடிச்சுப் பெருமைப் பட்டுக்கலைன்னாலும் அட்லீஸ்ட், என்னோட ஆசையில் மண்ணை வாரிப் போடாதீங்கம்மா? ப்ளீஸ், ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க"

" என்னத்தைடி புரிஞ்சுக்கறது? காலேஜ் முடிச்சுட்டுப் போனாலாவது தைரியமா அனுப்பலாம். இப்போ கொஞ்சம் பெரியவளா வளந்துட்டா, உலகத்தைப் புரிஞ்சுக்கற பக்குவம் இருக்கும்னு பயமில்லாமல் இருக்கலாம். இப்பத் தான் ஸ்கூல் முடிச்ச பொண்ணுக்கு என்ன விஷயம் புரியும்? கூட யாராவது வரலாம்னாலும் எக்கச்சக்கமாப் பணமும் ஆகும்? அதெல்லாம் ஒண்ணும் வேணாம் " என்று ஒரேயடியாக மறுத்தாள் காமாட்சி.

என்ன தான் அம்மாவுக்கும், மகளுக்கும் இந்த மாதிரி வாய்ச் சண்டை அடிக்கடி நடந்தாலும் மகளை விட்டுப் பிரிந்திருக்க முடியுமா தன்னால் என்று தான் காமாட்சிக்குப் புரியவில்லை. அது மட்டும் தான் அவள் தடை விதிக்க முதல் காரணம்.

" அப்பா, அப்பா, நீங்களாவது அம்மாவுக்குப் புரிய வைங்கப்பா. படிப்போட அருமை, அம்மாவை விட உங்களுக்குத் தான் இன்னும் நல்லாத் தெரியும். அம்மா இன்னும் பத்தாம்பசலியாவே இருக்காங்க. நீங்க அப்படி இல்லை. எனக்குப் பையனும், பொண்ணும் சரிசமம்னு எல்லார் கிட்டயும் சொல்வீங்களே? அது உண்மைன்னா இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டுத் தான் ஆகணும் " என்று அப்பா தலையில் ஒரு கூடை ஐஸ்கட்டிகளைப் போட்டதோடு, அவருடைய சிந்தனையில் இருந்த பெண்ணிய ஆதரவுக் கொள்கையையும் தொட்டுக் காட்டி அசைத்து விட்டாள்.

அப்பா யோசிக்க ஆரம்பித்த சமயத்தில் சாந்தனுவும் வந்துவிட இரண்டு பேருமாக, இல்லை மூன்று பேருமாக மாறி மாறி காமாட்சிக்கு மூளைச்சலவை செய்து ஒத்துக் கொள்ள வைத்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, காமாட்சியின் ஒன்று விட்ட அக்கா, பத்மினிக்கு அட்மிஷன் கிடைத்த யுனிவர்சிட்டியான, "தி ஒஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டி" ( The Ohio State university)யின் பக்கத்தில் தான் இருந்தாள். அவளுடைய கணவர் அதே பல்கலைக்கழகத்தில் புரஃபசராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அக்காவும், அவளுடைய குடும்பமும் பத்மினியை கவனித்துக் கொள்வதாக உறுதி அளித்தது வேறு பத்மினிக்கு சாதகமாக வேலை செய்தது.

பத்மினியும் ஒரு வழியாக யு. எஸ். சென்று தனது பட்டப்படிப்பை முடித்தாள். பத்மினி இறுதியாண்டு படிக்கும் போது தான், அவளுடைய அப்பாவிற்கு எதிர்பாராமல் விபத்து நடந்தது. அதில் அவர் இறந்தும் போனார். அந்த சமயத்தில், பத்மினிக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தாள்.

மெனிங்கைட்டிஸ் என்று சொல்லப்படும் மூளைக்காய்ச்சல் அவளுக்கு வந்திருந்தது. ஒருவிதமான மோசமான பூஞ்சைத் தொற்றால் பரவிய காய்ச்சல். வௌவால் மற்றும் பறவைகளின் எச்சங்களால் பரவும் பூஞ்சைத் தொற்றும், அதனால் வந்த மூளைக் காய்ச்சலும் அங்கிருந்த சில மாணவர்களை பாதித்திருந்தது. நல்லவேளையாக, சரியான சிகிச்சை கிடைத்து பத்மினி முழுவதுமாக குணமடைந்து கொண்டு வந்தாள்.

அந்த சமயத்தில், அப்பாவின் மறைவு பற்றிய செய்தியைத் தெரிவித்தால், அவளுடைய உடல்நலத்தில் பின்னடைவு ஏற்படலாம் என்று நினைத்து அவளிடம் அந்த செய்தியை மறைத்துவிட்டார்கள்.

ஒருவழியாக உடல்நலம் சரியாகி, பட்டப்படிப்பையும் முடித்து பத்மினி இந்தியா வந்தபோது தான் அப்பா இறந்து போய்விட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி அவளுக்கும் தெரிய வந்தது. அப்பாவின் செல்லமான பத்மினியால் அந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. துடித்துப் போய்விட்டாள். அழுது அழுது ஓய்ந்து ஒருவழியாக சமாதானம் ஆனாள்.

" அப்பா போன சமயத்தில் நீயும் ஹாஸ்பிடலில் இருந்தே. அப்பா போனதும் சாந்தனுவுக்கும் உடம்பு சரியில்லாமல் போய் நான் ரொம்பத் திண்டாடிப் போயிட்டேன். ரொம்ப மோசமான பீரியட் அது. நம்ப குடும்பத்தையே ஒட்டு மொத்தமாத் தாக்கிடுச்சு. அதிலிருந்து மீண்டு வெளியே வர முயற்சி செய்வோம். இனியும் அழுது புலம்பறதால எந்தப் பிரயோஜனமும் இல்லை" என்று காமாட்சி பல முறை ஆறுதல் சொல்லி, பத்மினியைத் தேற்றினாள்.

" எனக்குத் தான் மெனிங்கைட்டிஸ் வந்தது. அண்ணாவுக்கு என்ன ஆச்சு? " என்று பத்மினி கேட்டபோது, சாந்தனுவின் முகம் சட்டென்று வாடிப் போனது. அங்கிருந்து எழுந்து போய்விட்டான். பத்மினி திகைத்துப் போனாள்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: இல்லற வீணை 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
இவளுக்கு தெரியாத ஏதோ ஓண்ணு பிரசாந்த் சாந்தனு இடைல இருக்கு
 
Top Bottom