• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இல்லற வீணை 4

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
இல்லற வீணையின் இனிய சங்கீதம்

அத்தியாயம் 4

நாட்கள் நகர்ந்து முன்னேறின. குழந்தையுடன் ஓரளவு பழகிக் கொண்டாள் பத்மினி. வீட்டில் உதவிக்கு வந்திருந்த மாதவியின் உதவியுடன் காமாட்சியும் வீட்டு வேலைகளையும் புதிய பொறுப்பையும் அழகாகவே சமாளித்தாள்.

' என்ன ஆச்சுன்னே தெரியலையே? பிரசாந்த் ரெண்டு நாளா இந்தப் பக்கம் வரலையே? ஏதாவது கோபமா? நான் பக்கத்தில் இல்லாத சமயம் பார்த்து பத்மினி ஏதாவது தப்பாப் பேசிருப்பாளோ? ' என்று யோசித்துக் கொண்டிருந்தாள் காமாட்சி. அவளுக்கு பதில் தருவது போலவே மொபைல் சத்தம் போட்டது.

" அத்தை, நான் தான் பிரசாந்த். திடீர்னு ஆஃபீஸில் எக்கச்சக்க வேலை. புராஜெக்ட் ஒண்ணு முடியற சமயம். நான் அதில நல்லா மாட்டிக்கிட்டேன். நாளை அதிகாலையில் கிளம்பி மும்பை போறேன். வர எப்படியும் நாலஞ்சு நாட்களாயிடும். என் ஃப்ரண்ட் அரவிந்த் கிட்ட சொல்லி வச்சிருக்கேன். ஏதாவது ஹெல்ப் வேணும்னா அவனைக் கூப்பிட்டுக்கங்க. தயங்கவே வேண்டாம். ரொம்ப நல்ல ஃப்ரண்ட் அவன். உங்களைப் பத்தி, பத்மினி, சாந்தனு பத்தின எல்லா விஷயமும் அவனுக்குத் தெரியும். அவனோட நம்பர் உங்களுக்கு அனுப்பியிருக்கேன். ஸேவ் பண்ணி வச்சிக்கோங்க. திரும்பி வந்ததும் வந்து உங்களைப் பாக்கறேன்" என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான் பிரசாந்த்.

" என்னம்மா, யார் கிட்டயிருந்து ஃபோன்? முகமெல்லாம் மலர்ந்து நீ பேசினதைப் பாத்தா உன்னோட அருமை மாப்பிள்ளைன்னு நினைக்கிறேன். சரியா? அதுதான் அப்படியே அட்டென்ஷனில் நின்னயே? என்னவாம்? ரெண்டு, மூணு நாளா அவர் வரலைங்கறதால நான் நிம்மதியா இருக்கேன்னு சொல்லிட்டே இல்லையா? "

" போடி போக்கத்தவளே! அதெல்லாம் நீயே சொல்லிக்கோ. அவர் வரும்போது முகத்துக்கு நேராவே சொல்லிக்கோ ஆசை தீர "

" சொல்லாமயா? சொன்னாப் போச்சு. எப்ப வருவார்னு சொல்லு. இதைத் தவிர இன்னும் கொஞ்சம் சேத்து நல்ல காட்டமாப் பேசறேன்"

" ராக்ஷஸி, ராக்ஷஸி, என் வயத்துல இப்படி ஒரு பொண்ணு பிறந்திருக்கே! ஆண்டவனே! அவரே பாவம் வேலை ஜாஸ்தி, வரமுடியலைன்னு புலம்பினாரு. ஆஃபீஸ் வேலையா வெளியூர் போறாராம். திரும்பி வர ஒரு வாரமாகலாமாம். அதைச் சொல்லத் தான் ஃபோன் பண்ணினாரு. போதுமா? " என்று சொல்லி விட்டு நகர்ந்தாள் காமாட்சி.

' ஆஹா, அருமையான சந்தர்ப்பம். அம்மா கிட்டப் போட்டு வாங்கி விஷயத்தைக் கறந்தாச்சு. அந்த மனுஷன் ஊரில் இல்லாத சமயத்தில் நம்ம வேலையை கவனிக்க வேண்டியது தான்' என்று மகிழ்ச்சி அடைந்த பத்மினி, மனதுக்குள் திட்டத்தைத் தீட்டினாள்.

சிறிது நேரத்தில் தயாராகி வெளியே கிளம்பிய மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் காமாட்சி.

" பச்சை உடம்புக்காரி. இப்படி படக்குன்னு போயி அலங்காரம் பண்ணிட்டு வந்து நிக்கறயே? எங்கே கிளம்பிப் போறேன்னு கேக்கக் கூடாது. ஏதாவது முக்கியமான வேலையா? என் கிட்டச் சொல்லு. நான் போய்ப் பாக்கறேன். பேங்க் போறயா? இல்லை ஆஃபீஸில் ஏதாவது லீவைப் பத்தி விசாரிக்கணுமா? "

" அதெல்லாம் வீட்டில் இருந்தே செஞ்சிடுவேனே? இது அதையெல்லாம் விட அதிமுக்கியமான வேலை. என் ஃப்ரண்ட் வித்யாவோட ஆஃபிஸுக்குப் போய் அவளோட டிஸ்கஸ் பண்ணிட்டு வரேன்" என்று சொல்லி விட்டு, அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிய மகளைப் பார்த்தபடி விக்கித்துப் போய் நின்றாள் காமாட்சி.

வித்யா ஒரு லாயர். தனியாக ஆஃபிஸ் வைத்திருக்கிறாள். விவாகரத்து, வரதக்ஷிணை, புகுந்த வீட்டில் வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தாக்கல் செய்யும் டொமஸ்டிக் வயலன்ஸ் இத்யாதி, இத்யாதி கேஸ்கள் தான் அவளுடைய ஸ்பெஷாலிட்டி.

' குழந்தை பிறந்ததும் புரிஞ்சுக்குவா. குழந்தை தான் பெத்தவங்களைச் சேத்து வைக்கும்னு நெனைச்சுட்டு இருந்தேனே, என் நெஞ்சுல நெருப்பை அள்ளிக் கொட்டறாளே இவ' என்ற அதிர்ச்சியுடன் மகள் திரும்பி வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

' இன்னைக்கு அவ வீட்டுக்கு வரட்டும். நல்லா நாலு திட்டு திட்டணும். திருந்தவே மாட்டேன்னு இப்படி அடம் பிடிக்கறாளே? ' என்று புலம்பியவளுக்கு பிளட் பிரஷர் ஏறியது தான் மிச்சம்.

வித்யாவின் அலுவலகத்தை அடைந்து அவள் எதிரே அமர்ந்தாள் பத்மினி. வேலையில் பயங்கர பிஸியாக இருந்தாலும் தோழிக்காக நேரம் ஒதுக்கி அவளுடன் பேச முன்வந்தாள் வித்யா.

" ஹலோ பத்மினி, எப்படி இருக்கே? முதலில் கங்கிராட்ஸ். குழந்தை எப்படி இருக்கா? பெயர் என்ன வச்சிருக்கே? "

" நல்லா இருக்கேன். குழந்தைக்கு காம்னான்னு பேர் முடிவு பண்ணினோம். பர்த் ஸர்ட்டிஃபிகேட்லயே போடலாம்னு அம்மா பேர் மாதிரியே இருக்கற இந்தப் பேரை சூஸ் பண்ணினேன். இவ்வளவு ஷார்ட் நோட்டீஸ்ல என்னைச் சந்திக்க டயம் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் வித்யா "

" அதெல்லாம் ஃப்ரண்ட்ஸுக்கு நடுவிலே சொல்லத் தேவையில்லை. வந்த விஷயத்தைச் சட்டுன்னு சொல்லு. எனக்கு ஒரு கேஸ் ஹியரிங் மதியம் லஞ்சுக்கு அப்புறம் இருக்கு. அதுக்காகக் கிளம்பணும். ஏதாவது சட்டபூர்வமான உதவி வேணுமா? "

" ஆமாம். டைவர்ஸ் அப்ளை பண்ணனும். என்ன ப்ரொஸீஜர்னு சொல்லு" என்று சொன்ன பத்மினியை அதிர்ச்சியுடன் பார்த்தாள் வித்யா. என்ன தான் வெற்றிகரமாக விவாகரத்து வழக்குகளைக் கையாண்டு விவாகரத்து வாங்கத் தன்னுடைய கிளையண்டுகளுக்கு உதவி செய்தாலும், தனது நெருங்கிய தோழிக்கு என்று வரும்போது மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

விவாகரத்து என்று வருபவர்களை முடிந்தவரை சேர்த்து வைக்கத் தான் முயற்சி செய்வாள் வித்யா. ஏனென்றால் விவாகரத்தால் பெற்றோர் பிரியும்போது அவர்களுடைய குழந்தைகள் பாதிக்கப்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறாளே தினமும்?

" உனக்கு எதுக்கு டைவர்ஸ்? என்ன காரணம்? நல்லாத் தானே போயிட்டிருந்தது? தேடித் தேடி அவர் பின்னாலே ஓடினே? பிடிவாதம் பிடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டே? லவ் மேரேஜ் தானே? கல்யாணமாகி என்ன ரெண்டு வருஷம் ஆயிருக்குமா? "

" இரண்டு வருஷம் முடிய இன்னும் ரெண்டு மாசம் இருக்கு"

" அப்படி என்ன அவசியம் வந்தது உனக்கு? திடீர்னு எதுனால இந்த முடிவு? "

" பிரசாந்தைப் பிடிக்கலை எனக்கு. இனிமேல் அவனோட என்னால வாழமுடியாது"

" என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா? ஒரு ஃப்ரண்டா உன்னோட பிரைவஸியில் தலையிட விரும்பலைன்னாலும் உன்னோட லாயராக் கேக்கறேன். சொல்லு. உன்னை அடிச்சுத் துன்புறுத்தறானா? இல்லை வேறு யாரோடயாவது அஃபேர் இருக்கா? வீட்டுச் செலவுக்குப் பணம் தராமல் கஞ்சத்தனம் பண்ணறானா? இல்லை உன் பிறந்த வீட்டைக் கேவலமாப் பேசறானா? வேற ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா? "

" இல்லை, அதெல்லாம் ஒண்ணுமே இல்லை"

" பின்னே என்ன காரணம்? உண்மையை மனம் திறந்து என் கிட்ட சொல்லு. அப்பத் தானே என்னால விவாகரத்தை நியாயப்படுத்த முடியும் ? "

" அது வந்து, அது வந்து, என் கிட்ட ஒரு மிகப் பெரிய உண்மையை மறைச்சுட்டான்"

" அப்படி என்ன உண்மை அது? உன் மனசை இவ்வளவு தூரம் பாதிச்சு டைவர்ஸ்னு உன்னை முடிவெடுக்க வச்சிருக்கு? "

" அதுவா , அது வந்து" என்று சொன்ன பத்மினி, மெல்லிய குரலில் வித்யாவின் செவிகளில் மட்டும் விழும்படியாக அந்த உண்மையைச் சொன்னாள். அதைக் கேட்ட வித்யா, அதிர்ச்சியுடன் அப்படியே உறைந்து போனாள்.

" நிஜமாவா சொல்லறே? எதுவும் தப்பாப் புரிஞ்சுக்கலையே நீ? "

" இல்லை, நிச்சயமா இல்லை. நாலைஞ்சு மாசத்துக்கு முன்னால தான் எனக்குத் தெரிய வந்தது. அவன் கிட்ட நேரடியாவே கேட்டேன். அவனும் ஆமாம்னு ஒத்துக்கிட்டான். நீயே சொல்லு, இனிமேல் எப்படி என்னால அவன் கூடக் குடும்பம் நடத்த முடியும்? "

" புரியுது. ஆனா ஒருவேளை அவன் வேணும்னு செய்யாமல் தவறுதலா நடந்திருக்கலாம் இல்லையா? "

" இருக்கலாம். அப்படி இருந்தாலும் ரொம்பப் பெரிய குற்றம் இல்லையா? அவன் மூஞ்சியைப் பாத்தாலே எனக்கு அந்த விஷயம் தானே ஞாபகம் வருது? என்னாலே இனிமேல் அவனோட மனைவியா கன்டினியூ பண்ண முடியாது. நோ சான்ஸ்"

" சரி, இந்தக் காரணத்தை வச்சு டைவர்ஸ் வாங்க முடியுமான்னு முயற்சி செய்யறேன். பெரிய பிராசஸ். டயம் எடுக்கும். குடும்ப நீதிமன்றத்தில் ஹியரிங்குக்குக் கூப்பிட்டு கவுன்சிலிங் தருவாங்க. உங்களை எப்படியாவது சேத்து வைக்க முயற்சி செய்வாங்க. ஆனா ரெண்டு பேரும் டைவர்ஸ் தான் வேணும்னு உறுதியா நின்னாச் சீக்கிரம் கிடைக்கலாம்.

அப்புறம் ஒரு வருஷ காலமாகவாவது பிரிஞ்சு இருந்திருக்கணும். நாம அப்ளை பண்ணி, கேஸ் ரிஜிஸ்டர் பண்றதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடும்னு நினைக்கிறேன். ஏற்கனவே ஆறேழு மாசமா அம்மாவோடத் தானே இருக்கே?

குழந்தை வேற இருக்கா இப்போ? குழந்தை பத்தி வேற முடிவெடுப்பாங்க. சின்னக் குழந்தைங்கறதால மோஸ்ட்லி அம்மாவுக்குத் தான் குழந்தையோட கஸ்டடி கிடைக்கும். ஆனா பிரசாந்தும் குழந்தை வேணும்னு சொன்னா என்ன ஆகும்னு தெரியலை. நீயும் வீட்டுக்குப் போய் நல்லா யோசி.

நான் அப்ளிகேஷன் ஃபார்ம் ரெடி பண்ணிட்டு உன் அட்ரஸுக்கு அனுப்பறேன். நீயும் கையெழுத்து போட்டு, பிரசாந்த் கிட்டயும் கையெழுத்து வாங்கி அனுப்பு. பாக்கலாம். ம்யூசுவல் கன்ஸென்ட் அதாவது ரெண்டு பேருக்கும் இதில் சம்மதம்னா கேஸைச் சீக்கிரம் முடிக்கப் பாக்கலாம்" என்று உறுதியளித்து பத்மினிக்கு விடை கொடுத்தாள் அந்தத் தோழி.

குழம்பிய மனத்துடன் வீடு திரும்பிய பத்மினிக்காக, பயங்கர டென்ஷனுடன் காத்துக் கொண்டிருந்தாள் காமாட்சி.

" என்ன தான் நினைச்சிட்டிருக்கே பத்மினி? எல்லா விஷயங்களிலும் நீயாவே முடிவெடுப்பயோ? படிப்பு விஷயத்திலும் சரி, கல்யாண விஷயத்திலும் சரி, நினைச்சதை சாதிச்சே? எல்லாம் உங்கப்பா உனக்குக் குழந்தையில் இருந்து கொடுத்த இடம். எங்கம்மாவை மாதிரியே இருக்கான்னு தலையில இல்லை தூக்கி வச்சுட்டு ஆடினார் அந்த மனுஷன். எங்க மாமியார் மாதிரி இருக்கேன்னு அவர் சொன்னதால் நீ எங்கிட்ட மாமியாராவே நடந்துக்கப் பாக்கறயோ? "

" என்னம்மா இது? மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் ஏன் முடிச்சு போடறீங்க? இது என் வாழ்க்கைப் பிரச்சினைம்மா. இதில் முடிவெடுக்கற உரிமை எனக்கிருக்கு. நீங்க தலையிடாதீங்க"

" நான் தலையிடாமல், வேற யார் தலையிடுவாங்க? உன்னோட வாழ்க்கை சின்னாபின்னமாவதைப் பாத்துட்டு நான் சும்மாக் கையைக் கட்டிட்டு உக்காந்திருக்க முடியுமா? சரி, உன் இஷ்டப்படியே டைவர்ஸ் கிடைக்குதுன்னே வச்சுப்போம். இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கப் போறயா? "

" இல்லைம்மா. காம்னா தான் இனிமேல் எனக்கு எல்லாம். அவளோட நிம்மதியா வாழ்ந்திருவேன்"

தனியா ஒரு சிங்கிள் பேரன்டாக் குழந்தையை வளக்குறது எவ்வளவு கஷ்டம்னு உனக்குத் தெரியுமா? சரி, குழந்தையை அப்படியே உனக்கு பிரசாந்த் மாப்பிள்ளை விட்டுத் தருவார்னு என்ன நிச்சயம்? அதுக்கும் நீ போராடித் தான் ஜெயிக்கணும். அப்படியே குழந்தை உனக்கே கிடைச்சாலும், நாளைக்கு வளந்ததும் அப்பாவைப் பத்திக் கேட்கும் போது என்ன பதில் சொல்லுவே? அதையும் யோசிச்சுப் பாத்தயா? "

" அதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்பவே என்ன அவசரம்? நிறைய டயம் இருக்கு"

" அப்படின்னு நீ நெனைக்கறே. ஆனா டயம் உனக்காகக் காத்துட்டு இருக்காது. காலம் றெக்கை கட்டிப் பறக்கும். திரும்பிப் பாக்கறதுக்குள்ள காம்னா வளந்து நிப்பா. இந்தக் காலக் குழந்தைகளுக்கு அறிவுக் கூர்மையும் ஜாஸ்தி. எக்ஸ்போஷரும் ஜாஸ்தி. உன்னை மடக்கி மடக்கிக் கேள்வி கேக்கும் போது திண்டாடிட்டு நிக்கப் போறே?"

" ஏம்மா எல்லாத்தையும் நெகடிவாகவே பாக்கறீங்க? காம்யாவை எல்லாம் நான் ஈஸியாக சமாளிச்சுடுவேன். நீங்க அனாவசியமா மனசைப் போட்டு உழப்பிக்க வேணாம். என் பொண்ணை நான் எப்படியாவது சமாளிச்சுக்குவேன்"

" சரி, உன் பொண்ணை நீயே சமாளிச்சுக்குவே, நான் ஒத்துக்கறேன். என் பையனைப் பத்தி நான் தானே கவலைப்படணும்? அவன் கிட்ட நான் என்ன சொல்லப் போறேன்? நடக்கிற விஷயத்தை எல்லாம் எத்தனை நாளைக்கு என்னால மறைக்க முடியும்? அவனுக்குத் தெரிஞ்சா என்ன ஆகுமோன்னு மனசு பதைபதைக்குதுடி. என்னோட பயம் உனக்குப் புரியாது, புரியவே புரியாது. எப்படி இருந்தவனை நான் எப்படியெல்லாம் போராடி மீட்டு எடுத்து இப்போ வெற்றிகரமா நடமாட விட்டுருக்கேன்னு எனக்குத் தானே தெரியும்? ஆமாம், எனக்கு மட்டும் தான் தெரியும். பிரசாந்தை அவன் உசுரை விட மேலா மதிக்கறான், தெரியுமா உனக்கு? "

" என்னல்லாமோ புதுசு புதுசாப் பேசறீங்க இன்னைக்கு. அண்ணாவுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சதுனா என் பக்கம் ஈஸியாத் தாவிடுவான், நீங்க வேற. போங்கம்மா போங்க. என்ன பேசறீங்கன்னு உங்களுக்கே புரியலை. குழம்பிப் போயிருக்கீங்க. என்ன போராடினீங்க? எதிலிருந்து மீட்டு எடுத்தீங்க? புரிஞ்சு தான் பேசறீங்களா? எதுவானாலும் தெளிவாச் சொல்லுங்க" என்று அலட்சியமாகப் பேசிய மகளை நெற்றிக்கண் திறந்து கனல் தெறிக்கப் பார்த்தாள் காமாட்சி.

காமாட்சியின் உடல் உணர்ச்சிப் பெருக்கால் நடுங்க ஆரம்பித்திருந்தது. முகமெல்லாம் ஜிவு ஜிவுவென்று சிவந்து போயிருந்தது. செங்குழம்பை முகத்தில் ஊற்றியது போல இருந்தது அவளுடைய தோற்றம்.

" சொல்லிடுவயா நீ? சொல்லிடுவயா சாந்தனு கிட்ட? எல்லா உண்மைகளையும் சொல்லிடுவயா? நிலைகுலைஞ்சு போயிடுவானே என் பையன்? பெரிய எரிமலை வெடிக்கப் போகுது. அந்த எரிமலைக் குழம்பில் என் பையன் வெந்து சாம்பலாயிடுவானே? " என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதை எதையோ உளறிக் கொட்டிய காமாட்சி
அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

காமாட்சியின் வாயிலிருந்தும், மூக்கிலிருந்தும் சூடான ரத்தம் வடியத் தொடங்கியிருந்தது. பத்மினிக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.


தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: இல்லற வீணை 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
112
பிரசாந்த், சாந்தனு இடைல நல்ல புரிதல் இருக்கும் போல, ஏதோ விஷயம் பத்மினிக்கு தெரியாமல் நடந்திருக்கு 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
பிரசாந்த், சாந்தனு இடைல நல்ல புரிதல் இருக்கும் போல, ஏதோ விஷயம் பத்மினிக்கு தெரியாமல் நடந்திருக்கு 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
நன்றி🙏💕
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
பத்மினிதான் ஏதோ பொடி வெச்சு பேசுறாள்னு பார்த்தால், காமாட்சியுமே ஏதோ ரகசியம் வெச்சிருக்காங்க போலேயே! What's in the Pandora's box
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
பத்மினிதான் ஏதோ பொடி வெச்சு பேசுறாள்னு பார்த்தால், காமாட்சியுமே ஏதோ ரகசியம் வெச்சிருக்காங்க போலேயே! What's in the Pandora's box
நன்றி🙏💕
 
Top Bottom