• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இல்லற வீணை 2

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
இல்லற வீணையின் இனிய சங்கீதம்

அத்தியாயம் 2

அடுத்த நாள் காலை நேரம். பத்மினி மயக்கம் தெளிந்து எழுந்து படுக்கையில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள்.

" ஸாரிம்மா, உங்களுக்கு நிறைய டென்ஷன் கொடுத்துட்டேன் இல்லையா? என்னவோ திடீர்னு ஐஸ்க்ரீம் சாப்பிடற ஆசை, அதுவும் கஸாட்டா ஐஸ்க்ரீம் என்னோட வீக்னஸ் உங்களுக்குத் தெரியுமே? என்னால ஆசையை கன்ட்ரோல் பண்ண முடியலை. டெலிவரி ஆச்சுன்னா நீங்க சாக்லேட், ஐஸ்க்ரீம், கேக்லாம் சாப்பிட முடியாதுன்னு சொல்லிட்டே இருந்தீங்களா, அது தான் மனசை அடக்க முடியாமச் சட்டுன்னு வண்டியில் இருந்து இறங்கிட்டேன்" என்று அசடு வழிந்தாள்.

" வேளை கெட்ட வேளையில் ஐஸ்க்ரீம் சாப்பிடப் போனதுமில்லாம, தெருவில் கவனமில்லாமல் நடக்க வேண்டியது! எவ்வளவு ரிஸ்க்கான வேலை பாத்திருக்க நீ? வயித்தில அடி பட்டுக் குழந்தைக்கு ஏதாவது ஆயிருந்தாத் தாங்க முடியுமா உன்னால? " கோபமாகப் படபடவென்று பொரிந்தாள் காமாட்சி.

" சரிம்மா, அது தான் ஒண்ணும் ஆகலையே? என்னை மன்னிச்சுடுங்க, இதை இத்தோட மறந்துடுங்க. ப்ளீஸ்மா, ப்ளீஸ், சரி, என்னோட பாப்பாவை எப்போ என் கிட்டக் காட்டப் போறீங்க? " என்று செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள் அம்மாவிடம்.

" இதோ நான் உங்க பிரின்ஸஸை உங்க கிட்டக் காமிக்கக் கொண்டு வந்துட்டேன். பிடிங்க இவளை. இனிமே குழந்தையை நீங்க இங்கே இந்த ரூமிலேயே வச்சுக்கலாம்." என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் அந்த ஸிஸ்டர். ஒரு தொட்டில் கொண்டு வந்து அந்த ரூமில் பத்மினியின் படுக்கை அருகில் வைத்து விட்டு பத்மினியிடம் திரும்பினாள்.

" அக்கா, குழந்தைக்கு நீங்க இனிமே ஃபீட் பண்ண ஆரம்பிக்கலாம். தவறாமல் பண்ணுங்க. கஷ்டமா இருந்தா என்னைக் கூப்பிடுங்க. நான் வந்து ஹெல்ப் பண்ணறேன். அது தான் அம்மா இருக்காங்களே? உங்கம்மாவே கூடச் சொல்லித் தருவாங்க?" என்று சொல்லி விட்டுக் குழந்தையைக் கொஞ்சினாள்.

" என்ன பாப்பா? அப்பாவைக் காணோமே? பாவம் அவரும் நேத்து எவ்வளவு டென்ஷனில் இருந்தார்! வீட்டுக்குப் போய்க் குளிச்சுக் கிளிச்சு ரெடியாகி வருவாரா இருக்கும்! அவரும் பாவம் ராத்திரி தூங்காம இங்கயும் அங்கயும் ஓடிட்டே இருந்தாரே? சீக்கிரம் வந்துருவாரு, நீ கவலைப்படாதே செல்லம்" என்று போகிற போக்கில் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டு விட்டுத் தான் போனாள் அந்த ஸிஸ்டர்.

எள்ளும், கொள்ளும் வெடித்தன பத்மினியின் முகத்தில். கோபத்தால் சிவந்த முகத்தில் அனல் வீசியது. உதடுகள் உணர்ச்சி மிகுதியால் துடித்தன.

" என்னம்மா? என்ன நடக்குது இங்கே? அவனைப் போயி எதுக்குக் கூப்பிட்டீங்க? ஓ, பொண்ணு டெலிவரியைச் சமாளிக்க முடியலையா? பணமில்லையா இல்லை பலமில்லையா? "

" அநாவசியமாக் கத்தாதடி. இந்தச் சமயத்தில் உணர்ச்சி வசப்பட்டுக் கத்தி உடம்பைக் கெடுத்துக்காதே! நான் ஒண்ணும் பிரசாந்தைக் கூப்பிடலை. யதேச்சையா மாப்பிள்ளை தான் இங்கே என்னைப் பாத்துட்டு வந்து விசாரிச்சாரு. அவரோட ஃப்ரண்டோட அம்மாவுக்கு ஆபரேஷனாம். இங்கே அட்மிட் ஆயிருக்காங்க. ஃப்ரண்டுக்கு உதவி செய்ய வந்தவர் என்னைப் பாத்து ஆச்சரியப்பட்டு விசாரிச்சாரு. அதுக்கப்புறம் நான் தனியாக் கஷ்டப்படறதைப் பாத்து உதவிக்கு நின்னாரு. ஆமாம், அவரு என் கூட இருந்தது எனக்கு ரொம்ப ரொம்ப ஒத்தாசையா இருந்தது. அது உண்மை தான். திண்டாடிப் போய்த் தான் நின்னுட்டிருந்தேன் நான் " என்று படபடவென்று பேசி மகளின் வாயை அடக்கப் பார்த்தாள் காமாட்சி.

" உதவி வேணும்னா உலகத்தில வேற யாருமே கெடைக்கலையா உங்களுக்கு? "

" எங்கேடி , எங்கேடி போவேன்? நட்ட நடு ராத்திரியில் சாப்பிடாமக் கூடப் பரிதவிச்சு நின்னேன். கையில பணம் அதிகம் இல்லை. நடு ராத்திரியில் யார் கிட்டப் போய்க் கெஞ்சுவேன்? உங்களை மாதிரி லேப்டாப்பில்லியோ இல்லை ஃபோனில லொட்டு லொட்டுன்னு தட்டியோ எனக்குப் பணம் எடுக்கத் தெரியலை. ஹாஸ்பிடல் காரங்க கொடுத்த ஃபார்மை ஃபில் பண்ணத் தெரியலை. என்ன பண்ணியிருக்க முடியும் அந்த சமயத்தில்? தானா வந்த உதவியை மறுக்க முடியுமா? ஆண்டவனே பாத்து அனுப்பின மாதிரி மாப்பிள்ளை வந்து வயத்துல பாலை ஊத்தினாரு. போடி, போடி போக்கத்தவளே? "

" ஏன் ஜானு ஹெல்ப் பண்ணலையா உங்களுக்கு? "

" அவ என்னடி பண்ணுவா? வயசான மாமனார், மாமியார் வீட்டில. ஏற்கனவே நேரமாயிடுச்சுன்னு பதறியடிச்சுட்டு ஓடினா. நான் வர வரைக்கும் அவ இருந்ததே பெரிசு. நல்ல பொண்ணுடி அவ. புகுந்த வீட்டில் எல்லாரையும் அனுசரிச்சுப் போறா அவ . உன்னை மாதிரி சண்டைக்கோழி இல்லை"

" ஊர் உலகத்துல இருக்கற எல்லாரும் நல்லவங்க. உங்களைப் பொருத்தவரை நான் ஒருத்தி தான் கெட்டவ. நான் எதுக்கு அவரோட சண்டை போட்டுட்டுப் பிரிஞ்சு வந்தேன்னு தெரிஞ்சும் இப்படிப் பேசறது நியாயமா இருக்கா உங்களுக்கு? உங்களுக்குத் தான் மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவும் இல்லைன்னா எனக்கும் இல்லாம இருக்குமா? "

" என்னடி பேசறே நீ? என்ன தெரியும் உனக்கு? முழுசா விஷயம் எதையும் புரிஞ்சுக்காம எடுத்தேன் கவுத்தேன்னு முடிவு எடுக்க வேண்டியது! என்னையும் வதைக்க வேண்டியது? பொறந்த ரெண்டுமே சரியில்லை. மூத்தவன் எங்கேயோ தொலைதூரத்துல. ஆறுதலா நாலு வார்த்தை பேசறதுமில்லை. பணம் வேணுமான்னு கேட்டு அனுப்பறதுமில்லை. சரி, எங்கயோ நல்லா இருந்தால் சரின்னு நானும் நினைச்சுக்கறேன். இங்கே என் கூட இருக்கிறதோ என் பேச்சைக் கேட்காமல் தைய்யாத் தக்கான்னு குதிக்குது! எல்லாத்தையும் என் பொறுப்பில விட்டுட்டு அந்த மனுஷனும் நிம்மதியாப் போய்ச் சேந்துட்டாரு. என்ன தான் பண்ணுவேன் நான்? " உணர்ச்சி மிகுந்ததால் தொண்டை கப்பென்று அடைத்தது அவளுக்கு. அழ ஆரம்பித்து விட்டாள் காமாட்சி.

" சரி, சரி, அழுகையை நிறுத்து. எதுக்கெடுத்தாலும் இப்படி அழுது அழுது காரியத்தைச் சாதிக்க வேண்டியது. வேற வேலையே இல்லை. ஆமாம், ஹாஸ்பிடலில் பணம் உன்னோட மதிப்பிற்குரிய மாப்பிள்ளை, மோப்பிள்ளை தான் கட்டினாரா? அதை மட்டும் தெளிவாச் சொல்லு"

" ஆமான்டி, அதைத் தானே இவ்வளவு நேரமா உனக்கு எடுத்துச் சொல்லறேன். என் கையிலயும் அவ்வளவு பணமில்லை. உங்க அண்ணனுக்கு ஃபோன் பண்ணிப் பேசிக் கேக்கவும் தெரியலைன்னு சொல்லிட்டே இருக்கேனே? இன்னுமா புரியலை உனக்கு? "
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிரித்த முகத்துடன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் பிரசாந்த்.

" என்ன செய்யறா என்னோட பிரின்ஸஸ் இப்போ? குட் மார்னிங் கன்னுக்குட்டி" என்று கூறியபடி தொட்டிலின் அருகே சென்று குழந்தையின் முகத்தைப் பார்த்து ரசித்தபடி நின்றான்.

" மிஸ்டர், நீங்க எப்படி உள்ளே வந்தீங்க?
என் விருப்பமில்லாமல் நீங்க என் குழந்தையைப் பாக்க முடியாது. இங்கே வந்ததே தப்பு" என்ற தன் மனைவியை அலட்சியமாகப் பார்த்தான் பிரசாந்த்.

கணவன், மனைவிக்கு நடுவே தர்ம சங்கடமான நிலைமையில் நிற்க விரும்பாத காமாட்சி அறையை விட்டு வெளியே செல்ல நினைத்துக் காலடி எடுத்து வைத்தாள்.

" அத்தை, நீங்க வெளியே போக வேணாம். நான் ஒண்ணும் என் பொண்டாட்டியைக் கொஞ்சவோ, கெஞ்சவோ வரலை. நான் என் குழந்தையைப் பாக்க வந்திருக்கேன். பாத்துட்டு இதோ போயிட்டே இருக்கேன். உங்க பொண்ணு பெத்துப் புழைச்சு வந்திருக்கா. உடம்பும் மனசும் கூட பலவீனமாத் தான் இருக்கா. நீங்க இங்கே நகராமல் கூடவே இருக்கறது அவசியம். நீங்க இருங்க. நான் கெளம்பறேன் " என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து கிளம்பியவன், பத்மினியை நேருக்கு நேர் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.

" இங்கே பாரு, நான் யதேச்சையா உங்க அம்மாவை நேத்து பார்த்தது நல்லதாப் போச்சு. தனியாத் தவிச்சுக்கிட்டு இருந்தாங்க. சாப்பிடாம இருந்தாங்க. ஷுகர் பேஷன்ட் வேற அவங்க. நான் செஞ்சது மனிதாபிமானமான செயல். என் இடத்தில் யார் இருந்தாலும் செஞ்சிருப்பாங்க. நீ அதுக்காக அவங்க கூட சண்டை போடாதே. அப்புறம் பணத்தைப் பத்திக் கேட்டு அவங்களைக் கஷ்டப்படுத்தாதே. இது உனக்கு மட்டுமில்லை. எனக்கும் குழந்தை. உனக்குப் பிடிக்குதோ, பிடிக்கலையோ இந்தக் குழந்தையோட தகப்பன் நான். என் மகளுக்கு நான் செலவு செய்யறதுக்கு எனக்கு ஹன்ட்ரன்ட் பர்ஸன்ட் ரைட் இருக்கு. அதை நீ மறுக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது. நீ உடம்பு தேறி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் மத்த விஷயங்களைப் பத்தி ஆற அமரப் பேசி முடிவெடுக்கலாம். நௌ கெட் வெல் ஸுன் மை டியர் செல்லப் பொண்டாட்டி " என்று சொல்லி அவளைப் பார்த்துக் கண்ணடித்து விட்டுச் சென்றான்.

கோபத்துடன் தலையணையைத் தூக்கி, அவன் மேல் எறிய முயற்சி செய்தாள் பத்மினி. அவள் கையில் வலு இல்லாததால் அவள் படுக்கையிலேயே விழுந்தது அந்தத் தலையணை. அவன் மேல் கோபம் பயங்கரமாக வந்தாலும், அவன் பேசிய வார்த்தைகளின் உண்மை அவளைச் சுட்டது; பாதித்தது. ஆத்திரத்தைக் கிளப்பி விட்டது.

கையாலாகத் தனத்துடன் காமாட்சியிடம் சரணடைந்தாள் பத்மினி. தாயும், மகளும் அதன் பின்னர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் காமாட்சியின் அண்மை, பத்மினிக்குத் தேவையாகத் தான் இருந்தது. அம்மாவிடம் பேசா விட்டாலும், அம்மா செய்த சிசுரூஷைகளை முழுதாக ஏற்றுக் கொண்டாள். ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம். உணவைப் பார்த்துப் பார்த்து எடுத்து ஊட்டாத குறையாகத் தந்தாள் காமாட்சி. வேளாவேளைக்கு மாத்திரைகளை எடுத்துத் தந்தாள். பாத்ரூம் போக உதவி வேண்டியிருந்தது. ஏன் குழந்தையைத் தூக்கி அவளருகில் போட்டுப் பாலூட்டச் சொல்லித் தர வேண்டியிருந்தது.

குழந்தையின் முகத்தைப் பார்த்துத் தன் மனக்கவலைகளை மறக்க முயற்சி என்னவோ செய்தாள். தாய்ப்பால் சுரக்கும் அந்தச் சமயத்தில் மனம் நெகிழ்ந்து தான் போனது. தாய்மை என்ற அற்புதமான உணர்வு, மனநிறைவையும் பரவசத்தையும் சேர்த்து அள்ளி வழங்கியது அவளுக்கு. ஆனாலும் குழந்தையின் முகத்தைப் பார்க்கும் போது பிரசாந்தின் நினைவுகள் மனதில் எட்டிப் பார்ப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.

பத்மினி குழந்தையைக் கொஞ்சுவதற்காகக் கையில் எடுக்கும் போதெல்லாம், பிரசாந்தின் முகமும் அவளுடைய மனத்திரையில் எட்டிப் பார்க்கத் தொடங்கி விடும். முகம் சுருங்கிப் போகும். கையில் எடுத்த உடனேயே பட்டென்று குழந்தையைக் கீழே விட்டு விடுவாள். அம்மாவிடமும் சகஜமாகப் பேசாமல் இருந்த காரணத்தால் தன்னுடைய மனப் போராட்டத்தை அவளுடனும் விவாதிக்க முடியவில்லை. காமாட்சியோ தனது மகளின் தவிப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். சாமியாடி ஓய்ந்த மகள், தானாகவே ஆடிக் களைத்து மலையிறங்கட்டும் என்று முடிவு செய்து முறைப்பாகவே இருந்தாள்.

பத்மினி குழந்தையில் இருந்தே அப்படித் தானே? மகளின் குறுக்கு புத்தி எப்படியெல்லாம் வேலை செய்யும் என்று அவளுக்கா தெரியாது? தாய் அறியாத சூலும் இல்லை. பேய் அறியாத ரகசியமும் இருப்பதில்லை.

'பிறந்ததில் இருந்து எதற்கெடுத்தாலும் பிடிவாதம் தான். டிரஸ் வாங்க மார்க்கெட்டிற்குப் போனால் ரகளை தான். அதுவும் அப்பா செல்லம் எப்போதும். சாந்தனு கொஞ்சம் பயந்த சுபாவம். மூத்தது மோளை, இளையது காளை என்பது இவர்கள் இரண்டு பேர் விஷயத்திலும் மிகவும் சரியாகத் தான் இருந்தது.

படிப்பிலும் சரி, கல்யாண விஷயத்திலும் சரி, தான் நினைத்ததைச் சாதித்தாள். விழுந்து விழுந்து காதலித்து அவனையே கல்யாணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக் கால் தவமிருந்து திருமணம் செய்து கொண்டவளுக்கு இப்போது அவனைக் கண்டால் ஆகவில்லை.

குரங்கு மனசு. கிளை கிளையாகத் தாண்டும் தான். அதற்காகத் திருமண விஷயத்திலும் அப்படி நடந்து கொள்ள முடியுமா என்ன? அந்தக் காலம் மாதிரி கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், மண் ஆனாலும் மணவாளன் என்று ஏற்றுக் கொள்ளச் சொல்லிப் பெரியவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. கொஞ்சம் நிலைமைக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்து கொண்டு போனால், பெருகி வரும் டைவர்ஸ் கேஸ்களைக் குறைக்கலாமே?

மோசமானது என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், வேண்டாத கிளையை வெட்டி எறிவதில் தவறில்லை. புரையோடிய உடல் பகுதியைத் துறப்பது போல அகற்றி எடுத்து உயிரைக் காப்பாற்றலாம். ஆனால் சின்னச் சின்ன விஷயங்களை ஏன் பூதாகரமாக்க வேண்டும்? அப்படிச் சொன்னாலும் உடனே எதிர்வாதம் செய்வாள் பத்மினி.

"சின்ன விஷயம்னு உனக்குத் தோணலாம். என்னைப் பொருத்தவரை ரொம்பப் பெரிய விஷயம்" என்று சொல்லிப் பிரச்சினையை பூதாகரமாக்கி என் வாயை அடைத்துத் தான் விடுவாள் பத்மினி! பிரசாந்தும், 'நீங்கள் தலையிட வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லி விடுகிறான்!

பெரியவள், வயதில் மூத்தவள் என்பதெல்லாம் வெறும் பேச்சுக்குத் தான் ஒரு கடுகுக்கும் பிரயோஜனமில்லாத முதுமைப் பருவம் என்பது தான் இன்றைய கசப்பான உண்மை' என்று புலம்பியபடி பல திசைகளிலும் தறிகெட்டு ஓடிய மனதைக் கடிவாளம் போட்டு நிறுத்தத் தான் முடிந்தது காமாட்சியால். அவ்வப்போது அவளுடைய சிந்தனைக் குழப்பங்கள், பெருமூச்சுகளாக வெளியேறிக் காற்றோடு கலந்தன.

பத்மினியின் மனதை மாற்றி, காமாட்சியிடம் மீண்டும் சமரசமாகி இயல்பாகப் பேச ஆரம்பிக்கும் சூழ்நிலையை அவளுடைய பேத்தியே உருவாக்கிக் கொடுத்தாள். உடல் ஒத்துழையாமையும், குழந்தைப் பாசமும் சேர்ந்து பத்மினியை வாட்டி வதைக்க ஒரு வழியாக அம்மாவிடம் முழுமையாக சரணாகதி அடைந்தாள் பத்மினி.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: இல்லற வீணை 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom