• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இல்லற வீணை 12

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
இல்லற வீணையின் இனிய சங்கீதம்

அத்தியாயம் 12

சிறிது நேரத்தில் பத்மினியின் எதிரே வந்து உட்கார்ந்து மனதில் இருந்ததைக் கொட்டத் தொடங்கினாள் காமாட்சி.

" உன் கிட்ட நடந்த உண்மைகளை மறைக்காமல் சொல்லற நேரம் வந்துடுச்சு. பாவம் பிரசாந்த் மாப்பிள்ளை, இந்தக் குடும்பத்துக்காக, தன்னோட நண்பனுக்காக நிறைய விட்டுக் கொடுத்துட்டாரு. நானும் என் மகனைப் பத்தி மட்டும் யோசிச்சேனே ஒழிய, அவரைப் பத்தி அதிகம் யோசிக்கலை. ஒரு சுயநலவாதியாத் தான் நானும் இது நாள் வரை நடந்துட்டு வந்துருக்கேன்.

நீ வெளிநாட்டில் இருந்த போது, நீயும் உடம்பு சரியில்லாமல் இருந்த நேரம் அது. நம்ம குடும்பத்துக்கு மோசமான பீரியடாவே அமைஞ்சுடுச்சு. பிரசாந்த், சாந்தனு ரெண்டு பேருக்கும் படிப்பு முடியும் டயத்தில் தான் அந்த விபத்து நடந்தது . சாந்தனுவுக்கு கேம்பஸ் இன்டர்வ்யூவில் ரொம்ப நல்ல கம்பெனியில் வேலை கிடைச்சது. பிரசாந்த், ' வேலைக்குப் போக இஷ்டமில்லை; எனக்கு ஐ. ஏ. எஸ். க்ளியர் பண்ணனும்னு அதை மட்டும் இலக்கா வச்சு வெறித்தனமாப் படிச்சுட்டிருந்தார். பிரிலிமினரி பரீட்சை முடிச்சு அதில் தேர்வாகி, மெயின் எக்ஸாமும் எழுதியாச்சு. ரிசல்டுக்காகக் காத்துக்கிட்டிருந்தார்.

அப்போது தான் கூடப் படிக்கற ஒரு ஃப்ரண்ட் பார்ட்டி தரான்னு பிரசாந்தும், சாந்தனுவும் போயிருந்தாங்க. பிரசாந்தோட காரில் வீட்டுக்குத் திரும்பி வந்துட்டுருந்தாங்க. பார்ட்டியில் குடி, டிரக் எல்லாம் இருந்திருக்கு. பிரசாந்த் எதையும் எடுத்துக்கலை. கவனமா அவாய்ட் பண்ணிட்டாரு. ஆனா சாந்தனுவுக்கு யாரோ ட்ரிங்க்ஸில போதை மாத்திரையை விளையாட்டுத்தனமாக் கலந்து கொடுத்துட்டாங்க. அவனுக்கே தெரியாமல் குடிச்சிருக்கான். பிரசாந்துக்கு உடம்பு சரியில்லாமல் காய்ச்சலா இருந்ததுன்னு சாந்தனு காரை ஓட்டிருக்கான். காரை ஓட்டும்போது அவன் ஏதோ உளறிக்கிட்டே வந்ததைப் பாத்து பிரசாந்துக்கு சந்தேகம் வந்திருக்கு. ' டிட் யூ ட்ரை ஸம் ஸ்டஃப்? ஆர் யூ ஃபீலிங் ஹை? 'ன்னு கேட்டதுக்கு சிரிச்சுக்கிட்டே ஏதோ மழுப்பிருக்கான்.

' சரி, நீ காரை ஓட்ட வேணாம். நகரு'ன்னு சென்னப்ப, ' அதெல்லாம் முடியாது. போடா. ஐ ஆம் பெர்ஃபெக்ட்லி ஃபைன்' அப்படின்னு சொல்லிட்டுக் கன்னாபின்னான்னு காரை ஓட்டிருக்கான். நம்ம வீட்டுக்குப் பக்கத்தில தான் ஆக்ஸிடன்ட் ஆச்சு. பக்கத்துத் தெருவில் இருந்த சின்னப் பெட்டிக் கடைக்குப் போயிட்டு உங்கப்பா திரும்ப வந்துட்டு இருந்தார். அவர் மேல கார் மோதிடுச்சு. அந்த சமயத்தில் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. கொஞ்சம் லேட் நைட்.

பிரசாந்த் காரிலிருந்து இறங்கி ஓடிப் போய்ப் பாத்தான். யாருக்கோ அடிபட்டுருச்சுன்னு புரிஞ்சுடுச்சு. 'சாந்தனு மேல கேஸ் புக் ஆனா, அவனோட வேலை, அவனோட எதிர்காலம் எல்லாமே பாழாயிடும், அதுவுமில்லாம அவனுக்கு டெஸ்ட் எடுத்துப் பாத்தாங்கன்னா டிரக் எடுத்தது தெரிஞ்சுடும். நல்லா மாட்டிக்குவான்'னு பயந்துட்டாரு. உடனே இன்னொரு ஃப்ரண்டைக் கூப்பிட்டு, அவனோட சாந்தனுவை வீட்டுக்கு அனுப்பிட்டு, போலீஸுக்கு விபத்தைப் பற்றின தகவல் கொடுத்திருக்கார். விபத்துக்குள்ளானது உங்கப்பாங்கறது அவங்களுக்கு அப்போ தெரியாது. அடுத்த நாள் தான் தெரிஞ்சது. பலத்த காயங்களோட ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன உங்கப்பா. ரெண்டு நாட்கள் கழிச்சு இறந்து போனார்.

அடுத்த நாள் சுயநினைவுக்கு வந்த சாந்தனு விஷயம் தெரிஞ்சு துடிச்சுப் போனான். அதுக்குள்ள பிரசாந்தைக் கைது பண்ணிட்டாங்க. ஆனாலும் பெயில் கிடைச்சது. அவருக்கு டெஸ்ட் எடுத்துப் பாத்தாங்க. ஆனால் ரிப்போர்ட்ல க்ளியர்னு வந்ததால், பெயில் ஈஸியாக் கிடைச்சுடுச்சு. ஆனாலும் கோர்ட், கேஸ்னு அலைஞ்சதில அவரோட ஐ. ஏ. எஸ் கனவு நிறைவேறாமப் போயிடுச்சு. சாந்தனு, குற்றத்தை ஏத்துக்கத் தயாரா இருந்தாலும் பிரசாந்த் அவனைத் தடுத்துட்டார்.

' இந்த சமயத்தில் அம்மா கூட நீ இருக்கிறது அவசியம். எனக்கு இந்த உலகத்தில் வேற யாரும் இல்லை. எனக்குத் தெரிஞ்ச லாயர் மூலமா நான் ஈஸியா வெளியே வந்துருவேன்'ன்னு சொல்லிட்டாரு. அதே மாதிரி சில மாதங்கள் கழிச்சு, தற்செயலா நடந்த விபத்துன்னு கேஸில் தீர்ப்பாகி, காம்பன்சேஷன், அதோட கூடவே மினிமம் பனிஷ்மென்டுன்னு ஜட்ஜ்மெண்ட் கொடுத்தாங்க. அதுக்குள்ள சாந்தனுவோட மனநிலை பாதிக்கப்பட்டுருச்சு. தன்னால தான் அப்பா இறந்தார்ங்கற குற்ற உணர்ச்சியில் இருந்து அவனால வெளியே வர முடியலை. பயங்கர டிப்ரஷன் ஆகி, கவுன்சிலிங் கொடுத்துக் கஷ்டப்பட்டு நார்மலாக்கினோம்.

என்னோட கணவர் விபத்தில் இறந்ததை என்னால தடுக்க முடியலை. விதிவசத்தாலன்னு ஏத்துக்கிட்டேன். ஆனா கண் முன்னால் இரத்தமும் சதையும் இருக்கற புள்ளையை இழக்க நான் தயாராயில்லை. அந்தக் காரணத்துக்காக, பிரசாந்த் சந்திச்ச அவமானங்களை, இழப்புகளை எல்லாம் ஈஸியா ஒதுக்கி வச்சு மறந்துட்டேன்.

பிரசாந்தும் நீயும் விரும்பின விஷயம் தெரிஞ்சதும், எனக்கு மனசுக்கு முதலில் பிடிக்கலை. அதுக்குக் காரணம் பிரசாந்தை எனக்குப் பிடிக்கலைங்கறதுனால இல்லை. அவர் மூலமா உனக்கு விஷயம் தெரிஞ்சு, நீ ஏதாவது சாந்தனுவைச் சொல்லி, அவன் திரும்பவும் டிப்ரஷனுக்கு ஆளாயிடுவானோங்கற பயம். என் பையனை நினைச்சு பயம். ஆனா சாந்தனு உங்க கல்யாணத்துக்கு ரொம்ப ஸப்போர்ட் பண்ணினான். அவனுக்காகத் தான் நானும் கடைசியில் சம்மதம் சொன்னேன்.

இப்போ நீயே சொல்லு. நீ டைவர்ஸுக்கு அப்ளை பண்ணறது நியாயமா? நம்ம குடும்பத்தால, பாவம் பிரசாந்துக்கும் எவ்வளவு கஷ்டங்கள்? சரி, போகட்டும், நல்லது தான். இனிமேலாவது அவர் நிம்மதியாக இருக்கட்டும். வேற ஒரு நல்ல பொண்ணாப் பாத்து நானே அவருக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன். அவர் பட்ட கஷ்டமெல்லாம் இன்னையோட தீரட்டும்" என்று சொன்ன காமாட்சி, பத்மினியை வெறுப்போடு பார்த்து விட்டு, சாந்தனுவை கவனிக்க உள்ளே போனாள்.

சிறிது நேரம் கழித்து சாந்தனு கண் விழித்துப் பார்த்தவுடன் காமாட்சியின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

" அம்மா, இன்னமும் நீங்க என்னைப் பத்தியும் என்னோட மனநிலை பத்தியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. நான் கம்ப்ளீட்டா நார்மலாயிட்டேன். இதுக்கு எனக்கு உதவி செஞ்சது கேத்தரின் தான். ஆமாம்மா, அவ ஒரு கிளினிக்கல் ஸைகாலஜிஸ்ட். அவ தான் கவுன்சிலிங் கொடுத்துக் கொடுத்து என்னை முழுமையா சரி பண்ணினா. என்னோட பிராப்ளம் எல்லாமே அவளுக்குத் தெரியும். அந்த கவுன்சிலிங் ஸெஷன் அட்டன்ட் பண்ணும் போது தான் எங்க ரெண்டு பேருக்கு நடுவில் காதல் வந்தது. அவ என் கூட இருக்கும் போது என்னை நல்லா மேனேஜ் பண்ணிடுவா. நாம இப்போ கவலைப்பட வேண்டியது பத்மினியைப் பத்தித் தான். பிரசாந்த் எனக்காக எவ்வளவோ தியாகம் செஞ்சுட்டான். அவனோட வாழ்க்கையை அவனுக்கு மீட்டுத் தர வேண்டியது நம்ம கடமைம்மா" என்று சொல்ல, இரண்டு பேரும் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தார்கள்.

" என்னடா, இங்கே தானே இருந்தா பத்மினி? காணோமே? மாதவி, மாதவி, பத்மினி எங்கே? குழந்தையோட ரூமில இருக்காளா ? " என்று மாதவியை அழைத்துக் கேட்டாள்.

" இல்லைம்மா, இப்பத் தான் குழந்தையைத் தூக்கிக்கிட்டு வேகமா எங்கயோ வெளியே போனாங்க" என்றாள் மாதவி.

" அவ எங்கே போயிருக்கான்னு என்னால கெஸ் பண்ண முடியுது. வாங்க, நாமும் அங்கேயே போகலாம் " என்று சொன்ன சாந்தனு அம்மாவைக் கூட்டிக் கொண்டு அதே இடத்துக்குக் கிளம்பினான்.

பிரசாந்த்தின் வீட்டில் ஒரு சிறிய சூட்கேஸில் தனது சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் பிரசாந்த். அவனுடைய மொபைல் அடிக்க, எடுத்துப் பேசினான்.

" ஆமாம், நீ கேள்விப்பட்டது நிஜம் தான். புனே ஆஃபிசுக்கு ஆட்கள் வேணும்னு ஹெட் ஆஃபீஸில் இருந்து போன வாரம் மெயில் வந்ததே? நான் அந்த ஆஃபரை அக்ஸெப்ட் பண்ணிட்டேன். இன்னைக்கு ராத்திரி ஃப்ளைட்டில் பாம்பே போறேன். எதுனால இந்த முடிவா? சென்னையே வேண்டாம்னு தோணிடுச்சு. அது தான். எனக்கு ஒரு சேஞ்ச் தேவை. சரி, நேரமாச்சு, நான் கிளம்பணும். புனே போயிட்டுப் பேசறேன். பை. டேக் கேர்" என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

" எல்லாம் பேக் பண்ணியாச்சா? எதையும் மறக்கலையே? " என்று பின்னாலிருந்து குரல் வரத் திரும்பிப் பார்த்தான். பின்னால் பத்மினி, கையில் குழந்தையுடன்.

" என்ன பத்மினி? என்ன வேணும்? அது தான் நீ ஆசைப்பட்டபடி கையெழுத்து போட்டுட்டேனே? இன்னும் என்ன வேணும்? ஓ, நான் கிளம்பறதை வேடிக்கை பார்க்க வந்தயா?" என்றவனின் குரலில் அதீத வலி தெரிந்தது.

" ரெண்டு சாமான்களை மறந்துட்டீங்களே? "

" என்ன? எனக்குத் தெரியலையே? "

" இதோ, உங்க முன்னால் இருக்கற ரெண்டு சாமான்கள். நானும், இந்தக் குழந்தையும் "

பத்மினியின் வார்த்தைகளைக் கேட்டதும் முதலில் திருதிருவென்று விழித்த பிரசாந்த், அவள் பேசியதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டதும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தான்.

" என்ன சொல்லறே பத்மினி? நெஜமாத் தான் சொல்லறயா? என்னை மன்னிச்சு ஏத்துக்க முடிவு பண்ணிட்டயா? " என்று கேட்க, பத்மினி ஓடிவந்து குழந்தையுடன் அவன் கைகளில் தஞ்சம் புகுந்தாள்.

" ஏன் பிரசாந்த், அநியாயத்துக்கு நல்லவனா இருக்கே? தப்பே செய்யாத உன்னை நான் எப்படி மன்னிக்கறது? நீ தான் என்னை மன்னிக்கணும். உன்னை மாதிரி உலக மகா நல்லவனுக்கு என்னை மாதிரி அவசரக் குடுக்கை பொண்டாட்டியைச் சேத்து வச்சிருக்காரு ஆண்டவன். என்ன கொடுமை இது? எனக்கு எல்லா உண்மைகளும் தெரிஞ்சாச்சு. ஏன் இத்தனை விஷயங்களை என் கிட்ட இருந்து மறைச்சிருக்கே? "

" உனக்கு, உனக்கு எப்படித் தெரியும்? என்ன தெரியும்? " தயங்கியபடி கேட்டான் பிரசாந்த்.

" ஆமாம் பிரசாந்த், அவளுக்கு எல்லாம் தெரிஞ்சுடுச்சு. அம்மா சொல்லிட்டாங்க. இவ்வளவு நாட்கள் ஒரு நல்ல நண்பனா, தியாகத்துக்கு மேல தியாகம் செஞ்சிருக்கே! இனிமேல் ஒரு நல்ல கணவனாவும், ஒரு நல்ல அப்பாவாகவும் உனது கடமையைச் செய்ய வேண்டாமா? என்னோட சண்டைக்காரத் தங்கச்சியை மன்னிச்சு ஏத்துக்குவயா? " என்று சொல்லியபடி சாந்தனு உள்ளே நுழைந்தான். அவன் பின்னாலேயே காமாட்சியும் நுழைந்தாள்.

" என் பொண்டாட்டியை இனிமேல் யாராவது ஒரு வார்த்தை தப்பாப் பேசினாலும், நான் சும்மா விடமாட்டேன். ஆமாம், சொல்லிட்டேன்" என்று பிரசாந்த் அவர்களை மிரட்ட, எல்லோருமாகச் சேர்ந்து சத்தமாகச் சிரித்தார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அங்கே இறுக்கம் நீங்கிக் கலகலப்பான சூழல் உருவாக, குழந்தை காம்னாவும் புரிந்து கொண்டது போல முகமலர்ந்து சிரித்தாள்.

குழந்தையின் சிரிப்பு, சுற்றியுள்ள இடத்தையும் தொற்றிக் கொள்கிறது.



நிறைவு.

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: இல்லற வீணை 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
அருமையான நிறைவு. இல்லம் சங்கீதம் 👌👌👌👌
 

Mahalakshmi Babu

New member
Joined
Aug 13, 2024
Messages
14
இந்த மாதிரி குடும்ப கதைகள் எழுதுவதில் நீங்கள் expert.அருமையாக இருந்தது எப்போதும் போல்
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
உணர்ச்சி போராட்டங்கள் நிறைந்த கதை. அவரவர் தரப்பில் அவரவர் செய்தது நன்றாகவே நியாயப்படுத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்!
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
உணர்ச்சி போராட்டங்கள் நிறைந்த கதை. அவரவர் தரப்பில் அவரவர் செய்தது நன்றாகவே நியாயப்படுத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்!
நன்றி🙏💕
 
Top Bottom