• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இல்லற வீணை 10

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
இல்லற வீணையின் இனிய சங்கீதம்

அத்தியாயம் 10


" ஹாய் பத்மினி! எதுக்கு என்னை இங்கே அவசரமாக் கிளம்பி வரச் சொன்னே? அப்படி என்ன தலை போற காரியம் உனக்கு? முக்கியமான மீட்டிங்கை மதியத்துக்கு மாத்தி வச்சுட்டுக் கஷ்டப்பட்டு ஓடி வந்திருக்கேன்"

" ரொம்பத் தான் அலட்டிக்காதே அருண். உலகத்திலேயே நீ தான் பெரிய வேலை பாக்கறயோ? ஃப்ரண்டுக்காக இந்தச் சின்ன ஹெல்ப் கூடப் பண்ண முடியாதா உன்னால்?"

" அம்மா தாயே, அந்தக் காலத்தில் இருந்தே உன்னோட ஆர்க்யூ பண்ணி ஜெயிக்க ஆட்கள் இல்லை. இன்னைக்கு நான் ஜெயிக்க முடியுமா? சீக்கிரமாச் சொல்லு"
என்று பத்மினியின் முன்னால் கைகளைக் கூப்பித் தலை குனிந்து பவ்யமாக நின்றான். கண்களில் குறும்புச் சிரிப்பு வழிந்தது.

அருண், பத்மினிக்குப் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பன். இலக்கியம், கவிதை, கட்டுரை, பட்டிமன்றம் என்று திரிந்த அருண் பத்திரிகைத் துறையில் ஆர்வம் இருந்ததால் அதைச் சார்ந்த படிப்பை எடுத்துப் படித்தான். ஜர்னலிசத்தில் பட்டம் வாங்கிய பின் தமிழகத்தின் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையில் இன்று வேலை பார்க்கிறான்.

" என்ன ஹெல்ப்பா? பழைய
நியூஸ் பேப்பர் ஒண்ணை எடுத்து அதில் ஒரு குறிப்பிட்ட நியூஸ் வந்திருக்கான்னு எனக்கு செக் பண்ணனும். இந்த லைப்ரரியில் ஆர்ச்சிவ்ஸ் பகுதியில் கிடைக்கும்னு நெட்டில் பாத்தேன். திடுதிப்புனு நான் போய்க் கேட்டேன்னா, இவங்க எனக்கு அனுமதி கொடுப்பாங்களான்னு தெரியலை. அப்படியே கொடுத்தாலும் எங்கே தேடணும், எப்படிப் போகணும்னு ஒண்ணும் புரியாது. ஆபத்பாந்தவனா நீ தானே இருக்கே? என்னோட ஞாபகத்தில் பளிச்சுன்னு நீ வந்து குதிச்சே. உன்னோட ஜர்னலிஸ்ட் இன்ஃப்ளுயன்ஸை உபயோகிச்சு எனக்கு பெர்மிஷன் வாங்கித் தருவே, கைட் பண்ணுவேன்னு நெனைச்சுக் கூப்பிட்டேன்"

" அவ்வளவு தானே? இதெல்லாம் அய்யாக்கு ஜுஜுபி மேட்டர்! ஃபாலோ மீ" என்று ஸ்டைலாகப் பேசியபடி உள்ளே புகுந்தான். பத்மினியும் அவனைப் பின்தொடர்ந்தாள்.
அருணுக்கு எப்போதுமே நல்ல பேச்சுத் திறமை உண்டு. வாயாலேயே பந்தல் போட்டு மேடை அமைத்து நினைத்ததை சாதித்துக் காட்டும் வாய் சாதுரியம். யாரிடம் போய் என்ன சொன்னானோ, அனுமதி கிடைத்துவிட்டது. பத்மினியை அழைத்துப் போய், அவளுக்குப் பலன் தரக்கூடிய சரியான இடத்தில் பொறுப்பாகக் கொண்டு சேர்த்தான்.

" இதோ பார் பத்மினி. இந்த இடத்தில் தான் பழைய நியூஸ்பேப்பர்கள் இருக்கு. எந்தத் தேதின்னு சொன்னா இங்கே இருக்கறவங்க உனக்குக் காட்டுவாங்க. இனிமே நீயே மேனேஜ் பண்ணிக்க முடியுமா, ப்ளீஸ்? நான்
கெளம்பறேன். நிஜமாவே எனக்கு மீட்டிங் இருக்கு" என்று கெஞ்ச, பத்மினி, " தேங்க்ஸ் அ லாட் அருண், இனிமேல் நான் பாத்துக்கறேன்" என்று சொல்லி அவனை அனுப்பி விட்டாள்.

' ஒருவிதத்தில் இவன் கெளம்பறதே எனக்கு நல்லது தான். அவன் எதிரில என்னால என் விருப்பம் போலத் தேட முடியாது. என்ன, ஏதுன்னு தொளைச்சு எடுத்துடுவான்' என்று யோசித்தபடி வேலையில் இறங்கினாள்.

அப்பாவின் விபத்து நடந்த தேதியை ஒட்டித் தேடினாள். தேடிய செய்தி கிடைத்து விட்டது.
" குடிபோதையில் வண்டி ஓட்டிய கல்லூரி மாணவனின் கார் மோதியதில் வேளச்சேரியைச் சேர்ந்த நடுத்தர வயது மனிதர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் "
என்ற செய்தி அச்சாகியிருந்தது. பத்மினியின் அப்பாவின் படமும், பிரசாந்தின் படமும் தெளிவாக அச்சில் வந்திருந்தன.

அதைத் தொடர்ந்து இந்தச் செய்தியுடன் தொடர்புடைய மற்ற செய்திகளையும் ஆராய்ச்சி செய்த பின்னர், விபத்து பற்றிய செய்தியைத் தனது மொபைலில் படம் பிடித்துக் கொண்டாள். அங்கிருந்தவர்களிடம் நன்றி தெரிவித்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினாள். மனம் எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்தது. அந்தத் திருமணத்தில் உறவுக்காரப் பெண்கள் பேசியது அனைத்தும் உண்மை என்று புரிந்தது.

" புரஃபசர் அருளுக்கு என்ன தான் பிரசாந்தை அவ்வளவு பிடிச்சாலும், அவன் போலீஸ், விபத்து, அரெஸ்டுன்னு வந்தபோது தன் பொண்ணைத் திருமணம் செஞ்சு தரவேணாம்னு முடிவு செஞ்சு பின்வாங்கிருக்கார். ஆனா நான், என்னைப் பெத்த அப்பாவைக் கொன்னவனைக் கல்யாணம் பண்ணிட்டுக் குடித்தனமும் நடத்திருக்கேனே? சே, எனக்கே என் மேலே வெறுப்பு வருது. என்ன தான் அவன் மேல் குத்தம் இல்லைன்னு தீர்ப்பு வந்திருந்தாலும், குடிச்சுட்டுக் கண்ணு மண்ணு தெரியாம காரை ஓட்டி ஒருத்தரைக் கொன்னது, அதுவும் என்னோட அப்பாவைக் கொன்னதை எப்படி என்னால் ஏத்துக்க முடியும்? ' என்று நினைத்து நினைத்து உடலெல்லாம் நடுங்கியது பத்மினிக்கு.

மதிய உணவை அவசர அவசரமாக முடித்து விட்டுத் தன்னறைக்கு ஓய்வெடுக்கச் சென்ற பத்மினி, நிதானமாக உட்கார்ந்து என்ன செய்ய வேண்டும் என்று மனதிற்குள் திட்டம் தீட்ட ஆரம்பித்தாள். பத்மினி திடீரென அம்மா வீட்டிற்கு வந்ததால் அவளுடைய மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆடைகள், மடிக்கணினி எதுவுமே எடுத்து வந்திருக்கவில்லை.மாலையில் பிரசாந்த் அவற்றை எடுத்துக் கொண்டு வந்து தருவதாகச் சொல்லியிருந்தான். அவனுடைய வருகைக்காகப் படபடப்புடன் காத்துக் கொண்டிருந்தாள்.

பிரசாந்த் வீட்டிற்குள் நுழைந்தது தெரிந்தவுடன் தனது அறையில் இருந்து புயலாகக் கிளம்பி வந்து அவனெதிரே நின்றாள்.

" இது என்ன பிரசாந்த்? இதுக்கு என்ன விளக்கம் சொல்லி என்னை ஏமாத்தப் போறே? " என்று கத்திக் கொண்டே, தனது மொபைலில் படம் பிடித்து வந்த பழைய செய்தியை அவனிடம் காட்டினாள்.

அதைப் பார்த்த பிரசாந்தின் முகம் வெளுத்துப் போனது. மனம் சுக்குநூறாக உடைந்து வேதனையில் தவித்தது. அந்த விபத்தின் நினைவு வந்து கூர்மையான ஆயுதமாகப் பழைய காயத்தைத் தாக்கிக் குத்திக் குதறி வலியைக் கூட்டியது. பேச வார்த்தை வராமல் இடிந்து போய்ப் பரிதாபமாக நின்றான்.

பத்மினி கத்துவதைக் கேட்டு காமாட்சி, சமையலறையில் இருந்து வேகமாக வெளியே வந்தாள். பத்மினி கையில் இருந்த மொபைலை வாங்கிப் பார்த்தாள். வாடிய முகத்துடன் பதில் வார்த்தை எதுவும் பேசாமல் தலைகுனிந்து பரிதாபமாக நின்ற பிரசாந்தை ஏறிட்டுப் பார்த்தாள்.

" என்ன நடந்துடுச்சுன்னு இப்படி ராக்ஷஸியாக் கத்தறே? மாப்பிள்ளை பேரில் எந்தத் தப்பும் இல்லை. நீயோ அந்த டயத்தில் இங்கே இல்லை. நடந்தது என்னன்னு உனக்கு முழு விவரமும் தெரியுமா? " என்று பத்மினியைப் பார்த்து காமாட்சி கத்தினாள்.

காமாட்சி பேசியதைக் கேட்டு சட்டென்று தலை நிமிர்ந்த பிரசாந்த், " அத்தை, ப்ளீஸ், எங்க ரெண்டு பேருக்கு நடுவில் நடக்கற சண்டையில் நீங்க தலையிடாதீங்க. நான் பாத்துக்கறேன். தப்பா நினைச்சுக்காதீங்க" என்று சொல்லி விட்டுக் கை கூப்பினான்.
காமாட்சியின் மனம் அடி பட்ட பறவையாக வேதனையில் விம்மியது.

' உங்களுக்கு ஸப்போர்ட்டா நான் பேசினா, நீங்க என்னையே தலையிட வேண்டாம்னு தடுக்கறீங்களே? ' என்று அடிபட்ட பார்வையை அவன் மீது வீசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் காமாட்சி. அவள் பின்னாலேயே போன பிரசாந்த், அவளிடம் ஏதோ பேசி விவாதித்து விட்டு, சிறிது நேரம் கழித்துத் தான் வந்தான். வந்ததும் பத்மினியின் எதிரே கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான்.

'இப்போ நான் வந்துட்டேன். உன் முன்னால் நிக்கறேன். உன்னோட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நான் ரெடி. என்ன கேக்கணுமோ கேளு. என்ன திட்டணுமோ திட்டு' என்ற பாவனையுடன் நின்றான்.
' இவ்வளவையும் பண்ணிட்டு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாம நிக்கறானே? இவன் பக்கா கிரிமினலா இருக்கணும். தேர்ந்த நடிகனாவும் இருக்கணும்' என்று நினைத்த பத்மினி, ஒரு விஷ ஜந்துவைப் பார்ப்பது போல அருவருப்புடன் அவனைப் பார்த்தாள்.

" ஏன் இப்படிப் பண்ணினே? எங்க அப்பாவைக் கொன்ன கொலைகாரன் நீ. நீதிமன்றம் உனக்கு சாதகமாத் தீர்ப்பு வழங்கி இருக்கலாம். என்னைப் பொருத்தவரை நீ கொலைகாரன் தான் "

" அது ஒரு விபத்து பத்மினி. வேணும்னு செய்யலை. இருட்டில் வண்டி ஓட்டினபோது திடீர்னு அவர் குறுக்கே வந்துட்டாரு. நான் எவ்வளவோ முயற்சி செஞ்சும், அவர் மேல மோதறதை என்னால தடுக்க முடியலை"

" என்ன பெரிய முயற்சி செஞ்சே? குடிச்சுட்டு நிதானமில்லாமல் வண்டி ஓட்டிருக்கே! இதுல விபத்துன்னு சப்பைக்கட்டு வேறயா? "

" இல்லை பத்மினி, நியூஸ் பேப்பர்ல போட்டிருக்கறதை நம்பாதே. நான் குடிக்கலைன்னு அவங்க எடுத்த டெஸ்ட்டோட ரிசல்ட் சொல்லிடுச்சு. "

" ஓஹோ, அது வேறயா? அந்த மாதிரி ரிப்போர்ட் வாங்க எவ்வளவு செலவு செஞ்சே? பணம் இருக்கற திமிர் இல்லையா? பணம் இருக்கற பவிஷு தானே எல்லாரையும் பிரைப் ( bribe) பண்ண வைக்குது? " மனதில் பொங்கிய வெறுப்பு, ஒவ்வொரு வார்த்தையிலும் கலந்து எரிமலைக் குழம்பாக தகித்தது.

" இல்லைம்மா. நான் நிச்சயமா யாருக்கும் லஞ்சம் கொடுக்கலை. என்னை நம்பு ப்ளீஸ். " என்று கெஞ்சினான் பிரசாந்த்.

" எப்படி நம்புவேன் நான் ? நாம காதலிச்ச போதே நீ இதையெல்லாம் என் கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்டிருந்தால் ஒருவேளை காதல் மயக்கத்தில் நானும் நம்பியிருப்பேன். இப்போ நிச்சயமா உன்னை நம்ப மாட்டேன். சரி, எனக்குத் தான் நடந்தது எதுவும் தெரியாது. உனக்குத் தெரியும் இல்லையா? என் கிட்ட சொல்லாம ஏன் மூடி மறைச்சே? அதை மாத்திரம் எனக்கு எக்ஸ்பிளெயின் பண்ணு பாக்கலாம். "

" பண்ணனும்னு எத்தனையோ தடவை முயற்சி செஞ்சேன். முடியலை பத்மினி. உன்னை இழந்துடுவோமேன்னு மனசுக்குள்ள பயந்துட்டேன். உறவுகளே இல்லாமல், பாசமோ, பிரியமோ இல்லாமல் வளந்தவன் நான். அம்மாவும், அப்பாவும் புகழ்பெற்ற லாயர்கள். என்னை கவனிச்சுக்க நேரமில்லாமல் டெஹ்ராடூன் போர்டிங் ஸ்கூலில் சேத்து விட்டுட்டாங்க. நான் லீவுக்கு வீட்டுக்கு வரும் போது கூட அவங்க பிஸியாத் தான் இருந்திருக்காங்க. அவங்க அன்புக்காக ஏங்கிப் பலநாட்கள் நான் ஏமாந்து போயிருக்கேன். நான் ஸ்கூல் படிப்பை முடிக்கறதுக்குள்ளயே பிளேன் கிரேஷில் அவங்க இறந்து போயிட்டாங்க. பணம் என்னவோ நிறைய சேத்து வச்சிருந்தாங்க. எனக்காகவே நிறைய பேங்க் பேலன்ஸ், அசையாச் சொத்துகள் எல்லாமே விட்டுட்டுப் போனாங்க. ஆனா அம்மா, அப்பாவோட கழிச்ச இனிமையான அனுபவத்தோட சிறு துளி நினைவு கூட இல்லை. அன்புக்கு ஏங்கற அனாதையாவே வளந்தேன்.

முதல் தடவையாக சாந்தனு கிட்ட இருந்து தான் நிபந்தனை எதுவும் இல்லாத, எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத பவித்திரமான அன்பு எனக்குக் கிடைச்சது. அழகான நட்பும் கிடைச்சது. அவனுக்காக என் உயிரைக் கூடக் கொடுக்கற அளவு பைத்தியக்காரத் தனமான பிரியம் அவன் மேல் எனக்கு உருவானது. அவன் தான் உன்னைப் பத்தி எனக்கு சொன்னான். உன்னைப் பாத்துக்கச் சொன்னான்.

உன்னை முதன்முதலில் பார்த்த உடனே நீ என்னை க்ளீன் பவுல்டு பண்ணிட்டே. உன்னோட அழகு, அறிவார்ந்த பேச்சு, குழந்தை மாதிரியான பிடிவாதம், எதையும் நம்பற அப்பாவித்தனம் எல்லாமாச் சேந்து என்னைப் புயலாத் தாக்கிடுச்சு. இந்தக் காதல் வேண்டாம்னு எவ்வளவோ முறை என்னை நானே தடுக்கப் பாத்தேன். என்னாலே முடியலை.

நீ தான், நீ தான், என் வாழ்க்கையில் அர்த்தம் சேர்ப்பதற்காகவே ஆண்டவனால் அனுப்பப்பட்ட தேவதைன்னு நினைச்சேன். காலியான என் வாழ்க்கைப் புத்தகத்தை நிரப்ப வந்த கவிதை நீன்னு எனக்குத் தோணுச்சு. வறண்ட பாலைவனமா இருந்த என் உலகம் பூம்பொழிலா மாறிடுச்சு. உன்னோட காதல் எனக்குக் கிடைச்ச பொக்கிஷம், அதை எந்த நிமிடமும் இழக்கக் கூடாதுன்னு நினைச்சு பத்திரமா மனசுக்குள்ள பூட்டி வைச்சேன். உன் கிட்ட நடந்ததை மறைக்காமச் சொல்லணும்னு சத்தியமாப் பலமுறை நான் நினைச்சேன். ஆனா ஏதோ பயமும், தயக்கமும் வந்து என்னைத் தடுத்துடுச்சு" என்றான் பிரசாந்த். அவனுடைய சொற்களில் வலி தெரிந்தது. உண்மையான வருத்தமும் இருந்தது.

" இப்படியெல்லாம் காதல் டயலாக் பேசினா, சினிமாவில் வர மாதிரி நான் உன்னைக் கட்டிப்பிடிச்சு அழுவேன்னு நினைச்சு டிசைன் டிசைனா டிரை பண்ணற இல்லையா? உன்னோட பாச்சா என் கிட்டப் பலிக்காது. நீ இப்போ சொன்னயே நான் அறிவாளின்னு? அந்த அறிவு என்னை அப்படியெல்லாம் உணர்ச்சி வசப்படாதேன்னு தடுக்குது. போயிடு, என் கண் முன்னால நிக்காமப் போயிடு. உன்னோட வாழற ஒவ்வொரு நொடியும் எனக்கு இனி நரகம் தான். போயிடு" என்று வாசல் கதவை அவளுடைய விரல்கள் சுட்டிக் காட்ட, உயிரை உலுக்கும் அந்தத் தோல்வியை விழுங்கிய படி, பிரசாந்த் அங்கிருந்து கிளம்பிவிட்டான். அதன் பிறகு அந்த வீட்டிற்கு வரவில்லை.

பிரசாந்த் முகத்தில் விழிக்கக் கூடாது என்று தனது வேலையை ராஜினாமா செய்தாள் பத்மினி. அவளுடைய நெருங்கிய தோழியான ஜானு வேலை செய்யும் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள். அவளுடைய தகுதிகளும், திறமையும், அனுபவமும் அவளுக்குக் கை கொடுத்தன.

காமாட்சி தனது மாப்பிள்ளை பிரசாந்திற்காகப் பரிந்து பேசத் தொடங்கிய போதெல்லாம் பத்மினி பொங்கி எழுந்து சண்டை போட்டாள்.

" உங்க அருமை மாப்பிள்ளையை, அவரோட புரஃபசர் தன்னோட பொண்ணைக் கட்டிக் கொடுத்து மாப்பிள்ளையாக ஆக்கிக்கணும்னு நெனைச்சாராம். ஜெயிலுக்குப் போன பையன் வேணாம்னு விட்டுட்டாராம். ஆனா நீங்க என்னன்னா, ஒரு படி மேல போயி உங்க புருஷனைக் கொன்னவனையே மாப்பிள்ளையா ஏத்துக்கிட்டிருக்கீங்க! பெரிய தியாகச் செம்மல் தான் நீங்க. சீர்திருத்தப் புலின்னு நினைப்பு, இல்லையா?

ஒருவேளை இதுக்காகத் தான் முதலில் இந்த ஐடியாவுக்குக் குறுக்கே நின்னீங்களோ? அப்பை, சப்பையா என்னென்னவோ காரணம் சொன்னீங்களே? அதுக்கு பதிலா அப்பவே உண்மையை என் கிட்ட சொல்லணும்னு தோணலையே உங்களுக்கு? அப்படி மட்டும் நீங்க சொல்லியிருந்தீங்கன்னா உங்களைத் தலையில் தூக்கி வச்சுக்கிட்டு நான் கொண்டாடியிருப்பேனே? போங்கம்மா, போங்க. எங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கணும்னு மனசில துக்கணிக்கூண்டு ஆசையிருந்தாக் கூட, அதைத் தூக்கி விட்டெறியுங்க" என்று நிர்தாட்சண்யமாகப் பேசி விட்டாள். அன்றிலிருந்து காமாட்சியும் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து வந்தாள்.



தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: இல்லற வீணை 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mahalakshmi Babu

New member
Joined
Aug 13, 2024
Messages
14
அந்த விபத்தில் ஏதோவொரு விஷயம் இருக்கிறது.எல்லோரும் சேர்ந்து மறைக்கிறார்கள் என்று நம்புகிறேன்.உண்மை வேறு ஏதோ இருக்கிறது
 
Top Bottom