• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இல்லறவீணை 7

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
இல்லற வீணையின் இனிய சங்கீதம்

அத்தியாயம் 7

" பொறுங்க மாப்பிள்ளை. நீங்க எதுக்கு எழுந்து போகணும்? அது தான் நீங்களும் எங்க குடும்பத்தில் ஒருத்தரா ஆயிட்டீங்களே? இனிமே எதுக்கு மூணாம் மனுஷனை மாதிரி ஒதுங்கிப் போகணும்? உக்காருங்க. நீங்க கூடவே நின்னா, நான் சொல்ல வந்ததை என்னால தெளிவாச் சொல்ல முடியும்" என்று சொல்லி, பிரசாந்த் அங்கிருந்து போவதைத் தடுத்து விட்டாள் காமாட்சி.

" சாந்தனு, நீ ஒரு பொண்ணோட ஒண்ணாத் தங்கியிருக்கறதையெல்லாம் என்னோட மனசு ஏத்துக்கலை. உனக்கு அவளைப் பிடிச்சிருக்கு, அவளுக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னா உடனே கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்க கல்யாணத்துக்கு நீ என் கிட்ட பெர்மிஷன் கேக்கலைன்னாலும், நான் பெர்மிஷன் தரேன். பத்மினிக்குன்னு ஒரு குடும்பம் வந்தாச்சு. நீயும் உன்னோட குடும்பம், குழந்தைகள்னு செட்டில் ஆகணுங்கறது தான் என்னோட ஆசை. உங்கப்பா இப்போ உசுரோட இருந்திருந்தாலும் இதையே தான் உன் கிட்ட சொல்லிருப்பாரு. நான் உசுரை விடறதுக்குள்ளே உன்னையும் கல்யாணக் கோலத்தில் பாக்கணும் " என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டாள்.

" அம்மா, நாங்க கல்யாணம் செஞ்சுக்கறதா ஆல்ரெடி முடிவு பண்ணிட்டோம்மா. ஆனா கேத்தரினோட பெற்றோர், எங்களை யு. கே. வந்து அங்கே தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒரு கண்டிஷன் வச்சிருக்காங்க. அதைப் பத்தி உங்களிடம் பேசணும்னு தான் நான் கேத்தரினையும் இங்கே கூட்டிட்டு வந்தேன்" என்றான்.

" இதிலென்னடா இருக்கு பேச? அவங்களுக்கும் ஆசை இருக்கும் இல்லையா? பெத்து வளத்தவங்களோட ஆசையை மதிக்கணும். நீங்க அவங்க இடத்துக்குப் போய்க் கல்யாணம் பண்ணிக்கோங்க. என்னால அங்கேயெல்லாம் வரமுடியும்னு தோணலை. அலைச்சலை நினைச்சா பயமா இருக்கு. பத்மினியும், பிரசாந்தும் முடிஞ்சா வந்து கலந்துக்குவாங்க" என்று சட்டென்று தன் முடிவை அறிவித்து விட்டாள்.

முடிவை அறிவித்ததோடு தனது மருமகளுக்கும் அவள் விருப்பப்படி ஆடை, அணிகலன்களையும் வாங்கித் தனது அன்பளிப்பாகக் கொடுத்து விட்டாள். பத்மினியும், பிரசாந்தும் போய்த் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். இரண்டு ஜோடிகளும் அங்கிருந்து ஸ்விட்சர்லாந்து போய்த் தங்கள் தேனிலவைக் கொண்டாடினார்கள். அது வரை எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது.

காமாட்சியின் விருப்பப்படி பிரசாந்த், பத்மினி இருவரும் தங்கள் கம்பெனியின் இந்திய அலுவலகத்தில் வேலைகளை மாற்றிக் கொண்டார்கள். காமாட்சிக்கும் நிம்மதியாக இருந்தது. காமாட்சி அவர்களை,

" நம்ம வீடு நல்ல பெருசு. நீங்க வேற வீடு பாக்க வேணாம். இங்கேயே வந்திருங்க. எனக்கும் போரடிக்காமல் இருக்கும் " என்று கேட்டபோது, பத்மினியே முதலில் மறுப்பு தெரிவித்து விட்டாள்.

' பிரசாந்த், வீட்டு வேலைகளில் நிறைய ஹெல்ப் பண்ணறான். நம்ம கூட நல்லா அட்ஜஸ்ட் பண்ணிக்கறான். அம்மா கூட இருந்தா இதெல்லாம் நடக்காது. நமக்கும் பிரைவசி இருக்காது' என்று தான் பத்மினியின் மனம் உண்மையில் யோசித்தது. இதை வெளியே எப்படி அவளால் சொல்லமுடியும்?

அதுவும் உண்மை தான். பத்மினியும், பிரசாந்தும் குணத்தில் எதிரெதிர் துருவங்கள். பத்மினியின் படபடப்பும், பிரசாந்தின் நிதானமும், பத்மினியின் கோபமும், பிரசாந்தின் பொறுமையும், பத்மினியின் வாய் ஓயாத சளசள பேச்சும், பிரசாந்தின் அமைதியும் நன்றாக ஒன்றை ஒன்று சமன் செய்தன.

எடுத்துக்காட்டாக இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு பத்மினி, சமையலறையில் அப்படியே போட்டது போட்டபடி போய்விடுவாள். பிரசாந்திற்கோ காலையில் எழுந்து வரும்போது சமையலறை சுத்தமாக இருக்க வேண்டும். எல்லா சாமான்களையும் அதனதன் இடத்தில் வைத்து விட்டு, பாத்திரங்களைக் கழுவித் துடைத்து எடுத்து வைத்து விட்டுத் தான் போவான்.

" நீ ஏன்டா இந்த வேலையெல்லாம் செய்யறே? ரொம்ப ஹெல்ப் பண்ணி என்னைக் கெடுக்காதே? " என்று கொஞ்சுவாள் பத்மினி.

" நான் எங்கே உனக்கு ஹெல்ப் பண்றேன்? நானும் நம்ம வீட்டு வேலையை உன்னோட ஷேர் பண்ணிக்கறேன். இதிலென்ன இருக்கு! நீயும் தானே வேலைக்குப் போய் சம்பாதிக்கிற? வீட்டு வேலையை முழுக்க முழுக்க நீயே செய்யணும்னு எதிர்பாக்கறது முட்டாள்தனம் இல்லையா? முட்டாள்தனம் மட்டுமா, அநியாயமும் கூட" என்று பதில் சொல்லி அவளை அசத்துவான்.

" நல்லவேளை அம்மாவோட சேந்து ஒரே வீட்டில் இருந்திருந்தா இந்த ஹெல்ப் எனக்குக் கெடைச்சிருக்காது இல்லை? "

" ஏம்மா அப்படி சொல்லறே? அங்கேயும் நான் இதே மாதிரி இருந்திருப்பேன்"

" நீ இருந்திருப்பே! ஆனா எங்கம்மா என்னைக் கொன்னே போட்டிருப்பாங்களே!
எங்கம்மால்லாம் இன்னும் பழைய பத்தாம்பசலிக் கொள்கைகளிலேயே ஊறிப் போய்க் கிடக்கறவங்க. அந்தக் காலத்தில் எங்கப்பா, அம்மாவுக்கு உதவி பண்ண கிச்சன் பக்கம் வந்தாலே துரத்தி
விட்டுருவாங்க. இப்படி நீங்க கிச்சனை க்ளீன் பண்றதைப் பாத்தா என்னைச் சும்மா விட மாட்டாங்க. ஏற்கனவே சோம்பேறி, வேலை வணங்கலைன்னு தினமும் அர்ச்சனை கிடைக்கும். இதைப் பாத்தா பத்மினிக்கு தினமும் லட்சார்ச்சனை தான் டெஃபனட்லி" என்று கன்னத்தில் கை வைத்துக் கொள்ளும் மனைவியைப் பார்த்துக் கடகடவென்று சிரிப்பான் பிரசாந்த்.

" என் செல்லப் பொண்டாட்டிக்கு நான் என்ன வேணாலும் உதவி செய்வேன்.யாராலயும் தடுக்க முடியாது. எப்படி உன்னைக் கண்ணுக்குள்ள வச்சுப் பாத்துக்கறேன்னு அவங்க சந்தோஷப்படுவாங்க டியர். டோன்ட் வொர்ரி.

"கம்பன் சொல்ல வந்து
ஆனால் கூச்சங்கொண்டு
எழுதா ஓர் உவமை நீ
வர்ணம் சேர்க்கும்போது
வர்மன் போதை கொள்ள
முடியா ஓவியமும் நீ!

எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்
உயிரே இல்லாத கல்கூட காமமுறும்
உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான்? "

என்று பிரசாந்த், காதலைப் பொழிய ஆரம்பித்து விட்டால் பத்மினியும் அந்தக் காதலின் ஆக்கிரமிப்பில் தன்னை மறந்து கரைந்து நெகிழ்ந்து போவாள். அந்த அறையின் சுவர்களும் வெட்கத்துடன் தங்களை இருட்டுப் போர்வையால் போர்த்திக் கொள்ளும்.

காதல் ஜோடி உல்லாசமாக இன்பக்கடலில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தபோது காதலின் வித்தும் பத்மினியின் வயிற்றில் துளிர்த்தது. காமாட்சியோ தகவல் தெரிந்ததும் பூரித்துப் போய் நின்றாள்.

" மாப்பிள்ளை, எங்கே இருக்கீங்க? "

" இப்போது தான் டாக்டர் கிளினிக்கில் இருந்து வீட்டுக்குப் போயிட்டிருக்கோம். காலையில் பத்மினி வீட்டில் மயக்கம் போட்டு விழுந்துட்டா. எதுக்கும் டாக்டர் பாத்துரலாம்னு தான் இங்கே வந்தேன். நியூஸ் கன்ஃபர்ம் ஆனதும் உங்க கிட்ட தான் முதலில் சொன்னேன். "

" ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மனசுக்கு. நீங்க பேசாம அவளோட இங்கே வந்திருங்க. ஆரம்ப நாட்களில் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். பத்மினிக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் போதாது. தாம் தூம்னு எதையாவது பண்ணி வச்சான்னா, ஏடாகூடமா ஆக வாய்ப்பு இருக்கு. இங்கே என் கூட இருக்கட்டும். நான் கவனமாப் பாத்துக்கறேன். நீங்க பாட்டுக்கு ஆஃபீஸ் போகலாம். வாய்க்கு ருசியா, அவளுக்குப் பிடிச்சதா நான் சமைச்சுத் தரேன். "

" அத்தை, அது ஓகே தான். ஆனா இப்போதைக்கு இங்கே என் கூட இருக்கட்டும். டாக்டரோட கிளினிக் பக்கத்தில் தான் இருக்கு. நான் கவனமாப் பாத்துக்கறேன். இல்லைன்னா ஒண்ணு பண்ணலாம். நீங்க இங்கே வந்துருங்க. இங்கே எங்க கூட தங்கி அவளைப் பாத்துக்குங்க" என்று பிரசாந்த் சொல்லி விட, காமாட்சியால் மறுக்க முடியவில்லை.

பத்மினியின் வீட்டுக்குப் போய்த் தங்கினாள் காமாட்சி. பிரசாந்தும் அவளுமாக பத்மினியைக் கண்ணும், கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்கள். பத்மினிக்கு ஆரம்ப மாதங்களில் மசக்கை சற்று அதிகமாகவே வாட்டியது. புளிப்பும், காரமுமாக, காமாட்சி பார்த்துப் பார்த்து சமைத்துப் போட்டாள். பிரசாந்தும் மனைவிக்குப் பிடித்த சாமான்களாக வாங்கிப் போட்டான். மூன்று மாதங்கள் முடிந்ததும் கொஞ்சம் உடம்பு கட்டுப்பாட்டிற்கு வந்தது. ஆரம்பத்தில் இருந்த தலைசுற்றல், மயக்கம் , வாந்தி எல்லாம் குறைந்தன. காமாட்சியும் தன் வீட்டுக்குக் கிளம்பி விட்டாள்.

" இனிமேல் நீயாக் கொஞ்சம் உன் வேலைகளைப் பாத்துக்கோ. வேலையே செய்யாம இருந்தாலும் டெலிவரி கஷ்டமாயிடும். எழுந்து நடமாடு. ரொம்ப உடம்பை வருத்திக்காம உன்னால முடிஞ்ச வேலைகளைச் செய். தினமும் வாக் போயிட்டு வா. ராத்திரி சீக்கிரம் சாப்பிடு. நல்ல புத்தகங்களாப் படி. மனசுக்குப் பிடிச்ச விஷயத்தில் மனசை செலுத்தணும். சந்தோஷமா இருக்கணும் " என்று மகளுக்கு ஆயிரத்தெட்டு அறிவுரைகளை வள்ளலாக நின்று வாரி வழங்கி விட்டுத் தான் காமாட்சி கிளம்பினாள்.

' என்ன தான் பத்மினியை இந்த சமயத்தில் நல்லாப் பாத்துக்கணுங்கற காரணம் இருந்தாலும் நாம கூடவே இருக்கிறது அவங்களுக்கு இடைஞ்சல் தான். பிரெக்னன்ஸி சமயத்தில் தனியாக இருக்கும் கணவன், மனைவிக்கு நடுவே நல்ல புரிதல் வருகிற வாய்ப்பு கிடைக்குது. அதை அவங்க ரெண்டு பேரும் முழுமையா அனுபவிக்கட்டும். நான் அங்கே இருக்கறதால மாப்பிள்ளைக்கும் இஷ்டம் போலப் பொண்டாட்டி கிட்ட ஆசையாப் பேச முடியறதில்லை. நாம ஒதுங்கி இருந்துகிட்டு, தேவைப்படும் சமயத்தில் சென்று உதவி செஞ்சாப் போதும்' என்று தீர ஆலோசித்து காமாட்சி முடிவு செய்தது தான் அவள் அங்கிருந்து கிளம்பியதன் பின்னே இருந்த உண்மையான காரணம். பிரசாந்துக்கும்
அது நன்றாகவே புரிந்தது.

அடுத்து இரண்டு மாதங்கள் ஓடின. இப்போது பத்மினிக்குத் தன்னுடைய வயிற்றுச்சுமை நன்றாகவே பழகி விட்டது. தினசரி வாழ்க்கை இயல்பாகவே ஓடியது. சின்னச் சின்னச் சண்டைகளும், ஊடல்களும், ஊடலைத் தொடரும் இன்பமான அனுபவங்களும் நன்றாகவே இருந்தன.

" ஆனாலும் நீ ரொம்பப் பொறுமைடா. எனக்கு அடிக்கடி மூட் ஸ்விங்க் ஆகும்போது ரொம்ப வினோதமா நடந்துக்கறேன். தேவையில்லாமல் கோபம் வருது. எரிச்சல் வருது. அடுத்த நிமிஷமே எல்லாமே மறந்து போகுது. உல்லாசமாப் பொழுதைக் கழிக்கணும்னு தோணுது. மழையில் நனையணும். ராத்திரி கிளம்பிப் போய் ஐஸ்க்ரீம் சாப்பிடணும். தெருவோரக் கடையில் பானி பூரி சாப்பிடணும். இப்படியெல்லாம் சின்னச் சின்ன ஆசைகள். நீயும் அலுக்காமச் சலிக்காம நான் கேக்கற எல்லாத்தையும் நிறைவேத்தறே! உனக்குக் கோபமே வராதா? " என்று அவன் சட்டையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவனிடம் கொஞ்சினாள்.

" எதுக்குடி பொண்டாட்டி கோவிச்சுக்கணும்? வயத்துல குழந்தையைச் சுமக்கறது எவ்வளவு பெரிய விஷயம்? பெண்களுக்கு மட்டுமே கிடைக்கற சுகமான சுமை இல்லையா இது? இதுக்காகப் பெண்கள் எவ்வளவு தியாகம் பண்றாங்க? சரியாகச் சாப்பிட முடியாமல், சரியாத் தூங்க முடியாமல் எவ்வளவு சங்கடங்கள்? அப்படி நடக்காது, இப்படி நடக்காதே, குதிக்காதேன்னு வீட்டுப் பெரியவங்க வேற கண்குத்திப் பாம்பாப் பாத்து அட்வைஸ் சொல்வாங்க. கண்ட வேளையில் பசிக்குதுன்னு நீ எழுந்து சாப்பிட ஏதாவது தேடும் போது எனக்குப் பாவமா இருக்கும்டி. என்ன சொன்னே, அடிக்கடி மூட் ஸ்விங்க் ஆகுதா? அது அப்படித் தான் இருக்கும்னு டாக்டர் சொன்னாங்களே? ஆக்சுவலி பிரெக்னன்டா இருக்கற பெண்கள் செக்கப்புக்குப் போகும் போது கணவனே கூட்டிட்டுப் போறது தான் சரி. இந்தக் காலத்தில் அதெல்லாம் தான் பாஸிடிவான விஷயங்கள். அந்தக் காலத்தில் பெண்களுக்கு அதுக்குக் கூடக் கொடுப்பினை கிடையாது. வெளிநாடுகளில் இதுக்குத் தான் அப்பாவாகப் போற ஆண்களுக்கும் கவுன்சிலிங் தராங்க. நம்ம நாட்டு ஆண்கள் இன்னும் திருந்தணும்" என்று நீண்ட லெக்சர் கொடுத்தான்.

" எவ்வளவு அழகாப் புரிஞ்சுக்கறே? நீயே எல்லாருக்கும் கவுன்சிலிங் தரலாம்டா"

" என்ன வரவர நிறைய டா போட்டுப் பேச ஆரம்பிச்சுட்டயே? அம்மா இருந்தபோது நிறுத்தியிருந்தயே? பழக்கம் போயிடுச்சோன்னு நானும் பயந்தே போனேன்? "

" போடா இடியட். அம்மா இருந்தபோது, நாக்கு நுனி வரைக்கும் வந்த வார்த்தையைக் கஷ்டப்பட்டு விழுங்கினேன். தப்பித் தவறி ஏதாவது சொல்லிருந்தேன்னா அம்மா என்னைக் கொன்னே போட்டிருப்பாங்க. எனிவே, ஐ ஆம் ரியல் வெரி லக்கி" என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

அதிர்ஷ்டக்காரி என்று எண்ணிப் பெருமிதப்பட்டுக் கொண்ட பத்மினியின் மனநிலையை அப்படியே திருப்பி எதிர்திசையில் தூக்கி எறியும் சந்தர்ப்பம் அவர்களைத் தேடி வந்து கதவைத் தட்டியது.
நிர்மலமான இல்லற வானம் இருண்டு போனது. இடி இடித்து மின்னல் வெட்டியதில் அமைதியான சூழ்நிலையில் புயலடித்து நிர்மூலமாக்கி, அவர்களுடைய உறவைச் சிக்கலாக்கிச் சின்னாபின்னமாக்கியது.
எதிர்காலமே அந்த நொடியில் அவர்களுக்கு கேள்விக்குறியாகி விட்டது.

அன்றைய தினம் வழக்கம் போலத் தான் கழிந்தது. மாலையில் இரண்டு பேரும் வேலையை முடித்து அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

" சரி, நீ போய் ரிலாக்ஸ் பண்ணிக்கோ. நான் உனக்கு ஜுஸ் போட்டு எடுத்துட்டு வரேன்"
என்று சொல்லி விட்டு சமையலறையில் நுழைந்தான் பிரசாந்த்.

தனக்கு காஃபியும், பத்மினிக்கு ஆரஞ்சு ஜுஸும் எடுத்துக் கொண்டு தங்களுடைய படுக்கையறையில் நுழைந்தான்.

" நைட் என்ன சாப்பிடலாம்? சப்பாத்தி செய்யலாமா? இல்லை தோசையா? "

" இரண்டுமே வேணாம். சாதம் சாப்பிடலாம். அம்மா கொடுத்த பூண்டுக்குழம்பு ஃப்ரிட்ஜில் இருக்கு. நேத்து பொரிச்ச அப்பளமும், வெங்காய வடகமும் டப்பாவில் இருக்கு. அதுவும் தயிர்சாதமும் போதும் " என்று சொல்லும் போதே காரசாரமான குழம்பின் சுவை நாவில் உமிழ்நீரைச் சுரக்க வைத்தது.

" உத்தரவு மகாராணியாரே! தங்கள் சித்தம் எனது பாக்கியம். பரிசாக ஒரு முத்தம் மட்டும் கிடைக்குமா? "

" ஒண்ணு இல்லை. நிறையக் கிடைக்கும். ஆனா ஒரு கண்டிஷன். இந்த மகாராணிக்கு நிரந்தர அடிமையாக இருக்க வேண்டும். முடியுமா? " என்று அவன் முகத்தின் முன்னே விரலைச் சொடுக்கியவளின் முகம், சின்னக் குழந்தை போலத் தான் இருந்தது. அடம் பிடிக்கும் அழகான சிறு குழந்தை.

" அப்படியே ஆகட்டும் " என்று தலை குனிந்து அவளை வணங்கி விட்டு சிரித்த முகத்துடன் சமையலறைக்குள் சென்றான்.

" இரு, சாதம் வச்சுட்டு வரேன். ஒரு முக்கியமான விஷயம் டிஸ்கஸ் பண்ணனும் " என்று சொல்லி அவளுடைய ஆர்வத்தைத் தூண்டிவிட்டுச் சென்றான்.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: இல்லறவீணை 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mahalakshmi Babu

New member
Joined
Aug 13, 2024
Messages
14
இப்போது இருக்கும் சந்தோஷத்தை விட எதனால் அவர்களுக்கிடையே பிரிவு ஏற்பட்டது என்பதே வேதனை என்றே தோன்றுகிறது
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
இப்போது இருக்கும் சந்தோஷத்தை விட எதனால் அவர்களுக்கிடையே பிரிவு ஏற்பட்டது என்பதே வேதனை என்றே தோன்றுகிறது
நன்றி
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
112
நல்லா தான் போகுது 🤔🤔🤔🤔🤔🤔🤔அப்புறம் ஏன் பிரிவு
 
Top Bottom