• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இல்லறவீணையின் இனிய சங்கீதம் 1

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
இல்லற வீணையின் இனிய சங்கீதம் 1



அத்தியாயம் 1


காலைக் கதிரவன் பூமி வாசிகளை வறுத்தெடுத்துக் கடினமாக உழைத்து பின்னர், ஓய்வெடுத்துக் கொள்வதற்காக சென்றுவிட்ட முன்னிரவு நேரம். நிலவுப் பெண் தனது குளிர் கிரணங்களை அனுப்பி பூமி வாழ் மக்களைத் தாலாட்டிச் சீராட்ட வந்து விட்டாள்.

சென்னையின் அண்ணா நகர் பகுதியில் இருக்கும் அந்தப் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் ஒரு காட்சி. நல்ல ராசியான மகப்பேறு மருத்துவமனை என்று பேர் வாங்கியிருக்கும் காரணத்தால் அங்கே எப்போதும் ஜே ஜே என்று கூட்டம் குறையாமல் இருக்கும். நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் வீட்டு கர்ப்பிணிப் பெண்களை அழைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் சிகிச்சைக்காக வரும் மருத்துவமனை அது. .

காமாட்சி, அந்த மருத்துவமனையின் லேபர் ரூமின் எதிரே கவலையுடன் காத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்திற்கு முன்பு தான் அங்கு காமாட்சியின் மகள் பத்மினி அட்மிட் செய்யப்பட்டிருந்தாள். அவளுடைய நிலைமை கவலைக்கிடமாகத் தான் இருந்தது. நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள் காமாட்சி.

டாக்டர் வேகமாக வெளியே வந்து காமாட்சியிடம் பேசினார்.

" நீங்க தான் பேஷன்ட் கூட வந்திருக்கீங்களா? அம்மாவா, மாமியாரா? "

" நான் அவளோட அம்மா தான் டாக்டர். சொல்லுங்க"

" உங்க பொண்ணு நிலைமை ஸீரியஸாத் தான் இருக்கு. எங்களால முடிஞ்சவரை இரண்டு உயிர்களையும் காப்பாத்த முயற்சி செஞ்சுட்டுத் தான் இருக்கோம். கீழே விழுந்ததில வயித்தில பலமா அடிபட்டிருக்கு. சர்ஜரி இம்மீடியட்டாப் பண்ணிக் குழந்தையை எடுக்கணும். உங்க பொண்ணோட உயிரையும் காப்பாத்தணும். உங்க மருமகன் வந்திருக்காரா? ஆபரேஷனுக்கு சம்மதம் தரதா கன்ஸென்ட் ஃபார்மில கையெழுத்து போடணும். அவர் வர டயம் ஆகும்னா நீங்க கையெழுத்து போடுங்க. அப்புறம் கவுண்டரில பேசிப் பணமும் கட்டிடுங்க. லேட் பண்ணாதீங்க. லேட் பண்ணற ஒவ்வொரு நிமிடமும் இரண்டு உயிர்களுக்கும் ஆபத்து" என்று சொல்லி விட்டு உள்ளே விரைந்தாள்.

ஆபரேஷன் தியேட்டரைத் தயார் செய்யச் சொல்லி, அங்கிருந்த நர்ஸிடம் சொல்லிக் கொண்டே விரைந்தாள். கையில் இருந்த ஃபார்மை வெறித்துப் பார்த்தாள் காமாட்சி.

' ஆண்டவா, நான் இப்போ என்ன பண்ணுவேன்? ஃபார்மில வேணாக் கையெழுத்து போட்டிருவேன். பணம் உடனே கட்ட என்ன பண்ணுவேன்? என் அக்கவுண்டில அவ்வளவு பணம் இருக்காதே? ராத்திரி நேரத்தில் யார் கிட்டப் போய்க் கேக்க முடியும்? சாந்தனு கிட்டப் பேசிக் கேக்கலாம்னா அவன் இப்போ எங்கே இருக்கானோ? எவ்வளவு பிஸியா இருக்கானோ தெரியலை? ஃபோன் கிடைக்குமா, கிடைச்சாலும் அவன் ஃபோனை அட்டன்ட் பண்ணுவானான்னு தெரியலை. வேற வழியில்லை. பிரசாந்தையே கூப்பிட வேண்டியது தான். ஆனா பத்மினிக்கு நாளைக்கு விஷயம் தெரிஞ்சாக் குதி குதின்னு குதிப்பாளே? என்ன செய்யறது? ஆபத்துக்குப் பாவமில்லை. அவனையே கூப்பிடுவோம். கையில வெண்ணெயை வச்சிக்கிட்டு நெய்க்கு எதுக்கு அலையணும்? அவ மொதலில பொழைச்சு எழுந்து வரட்டும். அது தான் முக்கியம் இப்போ. ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு பிரசாந்தைக்
கூப்பிடறேன். அப்புறம் நடக்கப் போறதைப் பத்தி இப்போ கவலைப்பட வேண்டாம்" என்று முடிவு செய்து தலை நிமிர்ந்தவளின் எதிரே சாக்ஷாத் பிரசாந்த் நின்று கொண்டிருந்தான்.

" என்ன அத்தை? இந்த ராத்திரி நேரத்தில இங்கே என்ன பண்ணுறீங்க? "

" அது வந்து மாப்பிள்ளை… . " என்று பேசத் தயங்கியவர், " ஆமாம், நீங்க இங்கே எப்படி? " என்று எதிர்க் கேள்வி கேட்டாள்.

" என் ஃப்ரண்டோட அம்மா இங்கே அட்மிட் ஆயிருக்காங்க. யூட்ரஸ் ரிமூவ் பண்றாங்க நாளைக்கு. நான் அவனோட உதவிக்கு வந்தேன்" என்றவனுக்குச் சட்டென்று நிலைமை புரிந்தது.

" அத்தை, பத்மினி இங்கே? " என்று கேள்விக் கணையை அவள் மீது வீச, காமாட்சி தலை ஆட்டினாள்.

" ஆமாம்பா. ஆமாம். தெருவில் நடக்கும் போது ஸ்கூட்டர் மோதிக் கீழே விழுந்ததில் வயிற்றில் பலமா அடி. நிலைமை ஸீரியஸா இருக்கு. டாக்டர் அவளையும், குழந்தையையும் காப்பாத்தப் போராடிட்டு இருக்காங்க" என்று சொல்லும் போதே குரலில் அழுகை சேர்ந்து வந்தது.

" தனியாத் தவிச்சுட்டு நிக்கறீங்களே? என்னைக் கூப்பிட்டிருக்கலாம் இல்லையா? " என்பவனின் குரலில் லேசாகக் கோபம் எட்டிப் பார்த்தது.

" உங்களைக் கூப்பிடலாமான்னு யோசிச்ச போது தான் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி நீங்களே வந்துட்டீங்க? " என்று சொல்லி, டாக்டர் கொடுத்த விண்ணப்ப படிவத்தை நீட்டினாள்.

" நீங்க இங்கே உக்காருங்க. நான் கவுண்டரில் விசாரிச்சு மீதி வேலையை முடிச்சிட்டு வரேன்" என்று சொல்லி விட்டு பில்லிங் கவுன்டரை நோக்கி விரைந்தான்.

" இனிமேல் கவலையில்லை" என்று பெருமூச்சுடன் அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்தாள் காமாட்சி. சாய்ந்து கொள்ளப் பெரிய தூண் கிடைத்துவிட்டது.

'பிரசாந்த் ரொம்ப ரொம்ப நல்ல பையன் தான். மாப்பிள்ளைங்கறதை விட மூத்த பிள்ளை தான். ரொம்பப் பொறுப்பான புள்ளை. இந்தப் பொண்ணு புரிஞ்சுக்காம இப்படி மொறைச்சுக்கிட்டு நிக்குதே? எப்பத் தான் புரிஞ்சுப்பாளோ? எங்க விஷயத்தில் நீங்க தலையிடாதீங்கன்னு ரெண்டு பேரும் என் வாயையும் அடைச்சுட்டாங்க. இவங்க சண்டைல நான் தான் கெடந்து அல்லாடறேன். பிரசாந்த் தம்பியும் என்னை எதுவும் பேசவேணாம்னு ஸ்ட்ரிக்டாச் சொல்லிடுச்சு. ஆண்டவனே, நீ தான் இவங்க ரெண்டு பேரையும் எப்படியாவது சேத்து வைக்கணும்' என்று ஆண்டவனிடம் பெரிய கோரிக்கையை வைத்து விட்டுக் கண்களை மூடிக் கொண்டு அங்கிருந்த சேரில் ஆயாசத்துடன் உட்கார்ந்தாள்.

" அத்தை, இங்கே பாருங்க. எல்லா ஃபார்மாலிட்டிகளையும் முடிச்சுட்டேன். பணமும் கட்டிட்டேன். பத்மினிக்கு என்ன ஆச்சு? டாக்டர் கொடுத்த ட்யூ டேட்டுக்கு இன்னும் நிறைய டயம் இருக்கே? "

" அதுவாப்பா, அவளோட பிடிவாதம் பத்தி என்னை விட உங்களுக்கு நல்லாத் தெரியுமே?
ஆஃபிஸுக்குக் கடைசி நிமிஷம் வரை போணும்னு போயிட்டிருந்தா. குழந்தை பொறந்தப்புறம் அதிக நாட்கள் குழந்தையோட இருக்கலாமேன்னு சொன்னா. அதுவும் சரிதான்னு நானும் விட்டுட்டேன். இன்னைக்கு ஆஃபீஸில் இருந்து கேபில் வீட்டுக்கு வந்திட்டிருந்தா. வழியில் திடீர்னு ஐஸ்க்ரீம் சாப்பிட ஆசைப்பட்டு அவளோட ஃப்ரண்ட் ஜானு கிட்ட சொல்லிட்டு, கேபை விட்டுக் கீழே இறங்கிருக்கா.

ஜானுவும் பாவம் அவளைத் தனியா விடக்கூடாதுன்னு தானும் அவ கூடவே இறங்கியிருக்கா. ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கிட்டே ரோடில் நடக்கும் போது வேகமாக வந்த ஸ்கூட்டர் பின்னால இருந்து மோதித் தலைகுப்புற விழுந்துட்டாளாம் பத்மினி. வயத்தில் அடிபட்டு, வலியில் துடிச்சிருக்கா. ஜானு பாவம் பதறிப் போய் அவளை டாக்ஸியில கூட்டிக்கிட்டு இங்கே ஹாஸ்பிடல் வந்து அட்மிட் பண்ணிட்டு எனக்கு ஃபோன் பண்ணித் தகவல் சொன்னா.

நானும் பயந்தடிச்சுக் கிளம்பி வந்தேன். கையும் ஓடலை. காலும் ஓடலை. உங்களுக்கு எப்படியாவது தகவல் சொல்லணும்னு தவிச்சுக்கிட்டு இருந்தேன். நான் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க . நீங்களாவே திடீர்னு என் கண் முன்னால வந்து நிக்கறீங்க. பணத்தைக் கூடத் தனியா பாங்குக்குப் போய் எடுக்கத் தெரியாது எனக்கு. நீங்க வரலைன்னாத் திண்டாடிப் போயிருந்திருப்பேன். இது தான் உண்மை " என்று சொல்லும் போது அவளுடைய குரல் கம்மிப் போய்விட்டது.

" சரி அத்தை, என்னால புரிஞ்சுக்க முடியுது. நீங்க கவலைப்படாதீங்க. சரி, ஏதாவது சாப்பிட்டீங்களா, இல்லையா? உங்களுக்கு ஷுகர் பிராப்ளம் வேற இருக்கு. தலை சுத்தி வந்துருமே உங்களுக்கு?"

" இல்லைப்பா, நியூஸ் கெடைச்சதும் போட்டது போட்டபடி கிளம்பி வந்தேன். ஜானு வீட்டில் வயசான மாமனார், மாமியார் இருக்கறதுனால அவளுக்கும் வீட்டுக்குச் சீக்கிரமாப் போகவேண்டிய கட்டாயம். என் கிட்ட ஸாரி சொல்லிட்டுக் கிளம்பிப் போனா. அவ வீட்டுக்காரரும் ஒரு சிடுமூஞ்சி. அவரைக் கூட உதவிக்கு என்னால அனுப்பமுடியாதுன்னு வருத்தப்பட்டா" என்று
சொன்னதும், பிரசாந்த் அவளருகில் உட்கார்ந்து அவளுடைய கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான்.

" பரவாயில்லை விடுங்க. நான் தான் வந்துட்டேனே? நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன். பத்மினிக்கு நல்லபடியாக் குழந்தை பிறக்கணும்னு உங்களோட இஷ்ட தெய்வத்து கிட்ட வேண்டிக்குங்க. இதோ வரேன்" என்று சொல்லி விட்டு வெளியே போனவன், பத்தே நிமிடங்களில் திரும்பி வந்தான்.

" இந்தாங்க அத்தை, இட்லி தான் கிடைச்சது. நீங்க ராத்திரி சப்பாத்தி தானே சாப்பிடுவீங்க? ஆனா இங்கே கான்டீனில் இருக்கற சப்பாத்தியைப் பாத்தா மைதா சேத்துருக்கற மாதிரி இருந்துச்சு. அதுனால இட்லியே வாங்கிட்டு வந்தேன். சட்னி காரமா இருந்துடப் போகுதோன்னு கூடவே தயிரும் வாங்கிட்டு வந்திருக்கேன்" என்று சொல்லி, இட்லி பொட்டலத்தையும், சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் பேக் செய்யப்பட்ட தயிரையும் கொடுத்தான். கூடவே ஒரு தண்ணீர் பாட்டில்.

" மாத்திரை கொண்டு வந்திருக்கீங்களா? இல்லை அவசரத்தில் மறந்துட்டீங்கன்னா இங்கே மெடிக்கல் ஷாப்பில் போய் வாங்கிட்டு வந்துட்டேன்" என்றான்.

" இல்லைப்பா, என் கைப்பையில் இருக்கு. நான் போட்டுக்கறேன்" என்றவள் இட்லியை விண்டு சட்னியில் தோய்த்து வாயில் போட்டுக் கொண்டாள்.

' எவ்வளவு பொறுப்பா நடந்துக்கறாரு? எனக்கே இவ்வளவு தூரம் பாத்துப் பாத்து செய்யறவன் தன்னோட மனைவியை எவ்வளவு பிரியமா வச்சுக்குவார்? இந்த பத்மினி புரிஞ்சுக்காம இப்படி பிடிவாதம் பிடிக்கறாளே? இவ பண்ணற தப்புன்னால நாளைக்குக் குழந்தைக்கும் அப்பாவோட பாசம் கிடைக்காமப் போகப் போது' என்று நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இட்லியைச் சாப்பிட்டு முடித்தாள்.

" வருத்தத்திலயோ, டென்ஷனிலயோ இருக்கும் போது வயித்தில் என்னவோ பசி வந்து வேளாவேளைக்கு, டாண்ணு மணியடிக்கத் தவறுவதே இல்லை. இந்த சமயத்தில் தான் ஜாஸ்தி பசிக்குது. நல்லவேளை வயத்தை இப்போதைக்கு ரொப்பியாச்சு. இனிமேல் கவலை இல்லை" என்று சொல்லிக் கொண்டே பிரசாந்தை நன்றியுடன் பார்த்தாள்.

லேபர் ரூம் கதவு திறந்தது. ஒரு நர்ஸ் பரபரப்பாக ஓடினாள். இன்னொரு டாக்டரை அழைத்துக் கொண்டு உள்ளே ஓடினாள். மீண்டும் வெளியே வந்தாள்.

" நீங்க தானே பேஷன்ட் பத்மினி கூட வந்த ரிலேட்டிவ்ஸ். அவங்களுக்கு எமர்ஜன்சியா பிளட் தேவையா இருக்கலாம். நீங்க என்ன பண்ணுங்க. பிளட் பாங்கில் போய் அவங்களோட க்ரூப் பிளட் வாங்கிட்டு வாங்க. அங்கே நீங்களோ, உங்க ஃப்ரண்ட்ஸ் யாராவதோ பதிலுக்கு பிளட் டொனேட் பண்ணிடுங்க. அதுக்கப்புறம் இந்த இஞ்செக்ஷன் மருந்து இன்னும் சில மெடிசின்களையும் டாக்டர் இந்த லிஸ்டில் எழுதி இருக்காங்க. அதெல்லாம் சீக்கிரமா வாங்கிட்டு வாங்க" என்று சொல்ல, பிரசாந்த்தும் லிஸ்டர் சொன்ன வேலைகளை ஒவ்வொன்றாக முடித்தான்.

கொஞ்ச நேரத்தில் குழந்தையின் குவா குவா சத்தம் மெல்லியதாகக் கேட்டபோது காதில் தேன் வந்து பாய்ந்தது காமாட்சி, பிரசாந்த் இருவருக்கும்.

சிறிது நேரத்தில் ஒரு ஸிஸ்டர் டவலில் சுற்றிய ரோஜாப்பூ தேவதையை அவர்களிடம் கொண்டு வந்து காட்டினாள்.

" பாருங்க உங்க வீட்டு ஏஞ்சலை! க்யூட்டான பெண் குழந்தை. அம்மா, உங்க பொண்ணுக்கு இன்னும் மயக்கம் தெளியலை. கொஞ்ச நேரத்தில் ரூமுக்கு மாத்துவோம்.குழந்தையை இன்னைக்கு நைட் நர்ஸரியில் வச்சுக்குவோம். நாளை காலையில் உங்க ரூமில் கொண்டு வந்து விடுவோம். நல்லாப் பாத்துக்குங்க" என்று சொல்ல, காமாட்சி குழந்தையை வாங்கி, பிரசாந்தின் கையில் கொடுத்தாள். ஜாக்கிரதையாக வாங்கி அந்தப் பட்டுக் குட்டியின் முகத்தைப் பார்த்ததும் உடல் சிலிர்த்தது.

' இது என் குழந்தை; என் ரத்தம்; நானும் பத்மினியும் சந்தோஷமாகக் கழித்த தருணங்களின் அடையாளம்; எங்கள் அன்பின் சின்னம்' என்று கவித்துவமான வரிகள் பிரசாந்தின் மனதில் எழுந்தன.

'குழந்தையின் தந்தையாவது என்பது எவ்வளவு இன்பகரமான நிகழ்வு! அதை பத்மினியுடன் சேர்ந்து கொண்டாட, அவளுடன் அதைப் பகிர்ந்து கொள்ளத் தான் எனக்குக் கொடுத்து வைக்கவில்லை' என்று நினைத்த பிரசாந்தின் முகம் சட்டென்று மோப்பக் குழையும் அனிச்சமாக வாடியது. அதை காமாட்சி உடனே கவனித்து விட்டாள்.

" மனசைத் தளர விடாதீங்க மாப்பிள்ளை. இந்தக் குட்டி பிறந்த வேளை எல்லாம் சரியாகிடும். இவளே உங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கப் போறா பாருங்க" என்று சொல்லி விட்டுத் தன் பேத்தியின் பவித்திரமான அந்த முகத்தை நம்பிக்கையுடன் பார்த்தாள் காமாட்சி.

அவர்களிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு அருகிலிருந்த அறைக்குச் சென்றிருந்த ஸிஸ்டர் திரும்ப வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு சென்றாள்.

" சரி அத்தை, நான் கெளம்பறேன். பத்மினிக்கு நினைவு வரும் போது நான் அவ எதிரில் நின்னா அவளுக்கு பயங்கரக் கோபம் வரும். காச், மூச்னு கத்த முயற்சி பண்ணுவா. உடம்பில் திராணி இருக்காது. வேண்டாம், என்னால உங்களுக்கும் தர்மசங்கடமான நிலைமை ஏற்படலாம். உங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் இருக்கணும்னா நான் கிளம்பறதே நல்லது. ஏதாவது ஹெல்ப் வேணும்னா, உங்க பொண்ணைப் பத்திக் கவலைப்படாமல் என்னைக் கூப்பிடுங்க, இல்லைன்னா மெஸெஜ் பண்ணுங்க. எனக்கும் பொண்ணு பிறந்தாச்சே? எனக்கும் என் பொண்ணு முக்கியம் இல்லையா? " என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டான் பிரசாந்த்.

' பத்மினிக்கு உடம்பு ஓரளவு சரியாக வரைக்கும் பிரசாந்த் வந்த விஷயத்தை மூடி மறைச்சுடணும். அப்புறமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனதும் நிதானமாச் சொல்லிப் புரிய வச்சுக்கலாம்' என்று முடிவு செய்தாள் காமாட்சி.

ஆனால் நாமொன்று நினைத்தால் நம்மை ஆட்டிப் படைக்கும் ஆண்டவன் வேறொன்று அல்லவா நினைக்கிறான்! நினைப்பது மட்டுமல்லாமல் நிகழ்த்தியும் காட்டி விடுகிறான்!

காமாட்சி போட்ட திட்டத்தைத் தவிடு பொடியாக்கி நிலைமையை மோசமாக்க, விதி என்ற மந்திரவாதி ஒரு நர்ஸின் ரூபத்தில் நுழைந்து விட, அந்த நர்ஸ் பத்மினியின் முன்னால் உண்மையைப் பட்டென்று போட்டு உடைத்துச் சுக்கு நூறாக்கி விட்டாள்.


தொடரும்,

புவனா சந்திரசேகரன்.

( இது இந்த வீணை சீரிஸின் மூன்றாவது கதை. இதுவும் புதிய கதைதான்)
 

Author: Puvana
Article Title: இல்லறவீணையின் இனிய சங்கீதம் 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
சூப்பர், கடவுள் இருக்கான். ஒரு நர்ஸூக்கு பேஷண்டோட நிலைமை தெரியாதா?
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
அப்படி என்ன இருவருக்குள்ளும் பிரச்சினை - காச் மூச் என்றும் கத்தும் அளவுக்கு?
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
அப்படி என்ன இருவருக்குள்ளும் பிரச்சினை - காச் மூச் என்றும் கத்தும் அளவுக்கு?
நன்றி
 
Top Bottom