• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இருபுனலும் வருபுனலும் 4

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
173
இருபுனலும் வருபுனலும் 4

"பந்தா பாண்டி எப்படியும் போயிட்டுப் போறான். நமக்குப் பார்ட்டி எப்பன்னு கேளுங்க.. இன்னைக்கே போயிடுவோமா" என்றான் இட்லி பாண்டி. அவன் கவலை அவனுக்கு.

"டேய் பேச்சியப்பன் குடும்பத்தோட புரோட்டா சாப்பிட்டுட்டு வந்துருக்கான். நாளைக்குப் போவோம்" என்றான் முருகேசன். அவன் மாலையில்தான் மீன் குழம்பு வைத்து சோற்றை ஒரு பிடி பிடித்திருந்தான். வயிற்றில் இடம் இருக்காது. அதனால்தான் தள்ளிப் போடுகிறான்.

"வேலைக்குப் போய் சம்பளம் வாங்கினாத் தானேடே பார்ட்டி வைக்கலாம்.. என்கிட்ட நிறைய காசு இல்லயே.." என்று நான் கூற,

"நம்ம டிப்போக் கடையில வாங்கி குடு.. அக்கவுண்ட்ல வச்சுக்கிடலாம்.. சம்பளம் வாங்கிக் குடுத்துரலாம்.. என்ன நான் சொல்றது?" என்றான் இட்லிப் பாண்டி. டிப்போ கடை என்பது மலையடிவாரத்தில் அமைந்துள்ள அரசுப் போக்குவரத்து டிப்போவின் எதிரில் உள்ள கடை. டீக்கடை போல்தான் இருக்கும். ஓலைச் சாய்ப்பு வைத்து நான்கு பெஞ்ச் போட்டிருப்பார்கள். டிப்போவுக்கு வரும் பஸ் கண்டக்டர், டிரைவர்கள் அங்கு தான் சாப்பிடுவார்கள். வீட்டுச் சாப்பாடு மாதிரியே இருக்கும். இட்லி வீட்டு இட்லியை விடப் பூப்போல மெதுவாக இருக்கும்.

"என்ன அரிசிடா போடுதான்? நாமளும் அதே தண்ணில தான் மாவரைக்கோம்.. நமக்கு இவ்வளவு மெதுவா இட்லி வரமாட்டேங்குது?" என்பாள் அம்மா.

"நம்ம தண்ணீ ரொம்ப சுத்தமா இருக்கும்மா.. கீழே போகப் போக தண்ணீல என்ன கருமம்லாம் கலக்குதோ.. அதான் சாஃப்டா இருக்கு போல" என்பான் என் தம்பி கண்ணன். முட்டை தோசையும் அங்கு ரொம்ப பிரபலம். தோசையின் மேல் ஒரு பொடியைத் தூவுவார்கள். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற பக்குவத்தை எங்களுக்குச் சொல்லவே மாட்டார் கடையின் முதலாளி செல்வம் அண்ணன். முட்டைக்கோஸ் என்று ஒரு இனிப்பு மைதா மாவில் உருண்டையாக செய்திருப்பார்கள், எங்கள் பக்கத்து டீக்கடைகளில் மிகப் பிரபலம். அதுவும் டிப்போ கடையில் நன்றாக இருக்கும். ஒரு முட்டைக்கோஸைச் சாப்பிட்டு ஒரு காப்பி குடித்தால் வயிறு நிரம்பி விடும். காலைச் சாப்பாடு தேவையே இருக்காது.


இட்லிப் பாண்டிக்கு அந்தப் பட்டப் பெயர் சூட்டப்பட்ட திருத்தலமும் டிப்போக் கடை தான். வீட்டில் சாப்பிடும் இட்லி போரடித்துப் போய் எல்லாரும் வேறு ஏதாவது சாப்பிடலாம் என்று ஹோட்டலுக்குப் போவார்கள்.. பாண்டி மட்டும் வீட்டிலும் இட்லி தான் வேண்டும் என்பான், கடைக்கு வந்தாலும் இட்லி தான் சாப்பிடுவான். அதிலும் அடிக்கடி இட்லி சாப்பிடும் போட்டிக்கு யாரையாவது அழைப்பு விடுப்பான். ஒருமுறை என்னையும் வற்புறுத்தினான் என்று நானும் சாப்பிட்டுத் தான் பார்ப்போமே என்று களத்தில் இறங்கினேன்.

போட்டியில் இரண்டு பேர் எதிரெதிரே அமர்ந்து கொள்வோம். இலை போட்டு முதலில் ஆளுக்கு ஒரு இட்லி வைப்பார் செல்வம் அண்ணன். அந்த இட்லி முடிந்தவுடன், ஆளுக்கு இரண்டிரண்டு இட்லிகள். அந்த இரண்டும் தீர்ந்தபின் மூன்று, பின் தலா நான்கு, அதன்பின் தலா ஐந்து இட்லிகள். இப்படியாக முதல் ரவுண்டில் பதினைந்து இட்லிகள் உள்ளே போயிருக்கும். இழுத்துப் பிடித்து இந்த லெவல் வரை வந்து விட முடியும். அதன்பின் இட்லி எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். ஐந்து முடிந்துவிட்டதால் ஆளுக்கு நான்கு, மூன்று என்று இறங்கி ஒன்று வரை வரும். ஆக மொத்தம் இருபத்தி ஐந்து இட்லிகள் சாப்பிட வேண்டியிருக்கும். பாண்டி அனாயாசமாக ஜெயித்து விடுவான். இதுவரை யாருமே அவனை எதிர்த்து வென்றதில்லை.


அதிகபட்சமாக, வெளியூரிலிருந்து முருகேசன் வீட்டுக்கு விருந்தாடி வந்த கணேசன் என்று ஒருவன், ஆர்வமிகுதியில் இருபது இட்லி வரை சாப்பிட்டான். அதன் பின் வாய்க்குள் கையை விட்டு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். அம்மாடி ஆத்தாடி என்று இரண்டு நாள் புலம்பினான். இட்லிப் பாண்டி அப்படி எதுவும் செய்ய மாட்டான். சர்வ சாதாரணமாக சாப்பிட்டு ஒரு பெரிய ஏப்பமாக விட்டுவிட்டுப் போவான். முதல்நாளே பாண்டி மெனக்கெட்டு எட்டு கிலோமீட்டர் போய் செல்வம் அண்ணனிடம், "அண்ணே! நாளைக்கு பார்ட்டி இருக்கு.." என்று கூறி விடுவான். அவர் ஐம்பது அறுபது இட்லிகளுக்குத் தகுந்த மாதிரி அதிகமாக மாவரைத்து வைத்துக் காத்திருப்பார். வழக்கமாக தேங்காய் சட்னியும் வெங்காயச் சட்னியும் சாம்பாரும் இருக்கும். கூடுதலாக போட்டியன்று புதினாச் சட்னியும் இட்லி மிளகாய்ப் பொடியும் தயார் செய்வார். இட்லிப் போட்டியை வேடிக்கை பார்க்க பதினைந்து இருபது பேராவது கூடியிருப்பார்கள். அவர்களும் டீ வடை என்று ஏதாவது சாப்பிடுவதால் செல்வம் அண்ணனுக்கு அன்று வியாபாரம் அதிகரித்து வாயெல்லாம் பல்லாக இருக்கும். பரோட்டா சூரி காமெடியை டிவியில் பார்த்தபோது "டேய் நம்ம இட்லிப் போட்டிக்கு முன்னால இதெல்லாம் ஒண்ணுமே இல்லடா" என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வோம்.


இப்படியான டிப்போ கடையில் வைத்து பார்ட்டி வைக்கச் சொல்லித்தான் இப்போது கோரிக்கை வைத்திருக்கிறான் பாண்டி. இட்லி நான்கு ரூபாய் தான். ஆனால் அங்கு போனால் நண்பர்கள் வாய் சும்மா இருக்காது. பார்ப்போரிடமெல்லாம் மாப்பிள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைச்சிருச்சு என்பார்கள். எல்லாரும் எங்களுக்கு பார்ட்டி கிடையாதா என்று கேட்டு இணைந்து கொள்ள முயல்வார்கள்.

கையில் அவ்வளவு காசு இல்லை அதனால் சட்டென்று யோசித்து ஒன்றைச் சொல்லி விட்டேன். "நாளைக்கு அம்பை ஆத்துக்குப் போயிட்டு அப்படியே கௌரிசங்கர்ல சாப்பிட்டுட்டு வரலாம்" என்று.

"டேய் நீ பெரிய ஆள்தான்.. ரோட்டுக் கடையில சாப்பாடு கேட்டா பெரிய ஹோட்டல்லயே வாங்கித் தாரேங்கியே…" என்று ஆர்ப்பரித்தனர்.

"மத்தியான சாப்பாட்டுக்குப் பெறகு போவோம்.. குளிச்சுட்டு சாயங்காலம் பணியாரம், வடை, டீயோட முடிக்கலாம்" என்று நான் சொன்னதும் என்னை அடிக்கவே பாய்ந்து விட்டார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகள் என் வீட்டு வராண்டாவில் வைத்து நடந்ததால் என் அம்மா உள்ளிருந்து வந்து,

"டேய் பிரகாசு.. நான் துவரம்பருப்புச் சோறும் தொவையலும் குடுத்து விடுதேன்.. வத்தல் வறுத்துத் தாரேன். இல்லன்னா சிப்ஸ் பாக்கெட் வாங்கிட்டுப் போங்க" என்று புதிய யோசனை ஒன்றைக் கொடுத்தாள்.

"அப்ப சரி.. அதான் அத்தை வைக்கிற துவரம் பருப்பு சோறு அருமையா இருக்கும்ல.. அதை விடவா வேற பார்ட்டி வேணும்" என்று முருகேசன் கூற, "முத மாச சம்பளத்துல நம்ம எல்லாருக்கும் ஒண்ணு போல சட்டை எடுத்துருவான் பேச்சியம்மன்.. சரிதானே டே?" என்று கரடிப் பாண்டி ஒரு பிட்டைப் போட்டான்.

"சிவப்புச் சட்டை மட்டும் எடுத்துராத‌ ராசா.. பாண்டியை கரடி தேடி வரப் போகுது.." என்றான் இட்லிப் பாண்டி. 'கொல்' என்று ஒரு சிரிப்பலை பரவியது.

எங்கள் வட்டத்தில் மூன்று பாண்டிகள் உண்டு. பந்தாப் பாண்டிக்கும் இட்லிப் பாண்டிக்கும் முதலிலேயே பெயர் பொருத்தமாக அமைந்து விட்டது. மூன்றாமவனை வெறும் பாண்டி என்று தான் அழைத்து வந்தோம். ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னால் அவன் வாட்ச்மேனாக இருக்கும் ஸ்டோர்ஹவுஸில் ஒரு கரடி புகுந்து விட்டது. அப்போது இவன் மட்டுமே அங்கு இருந்திருக்கிறான். அமைதியாக இருந்திருந்தால் அதுவே போயிருக்குமாயிருக்கும், இவன் கத்திக் கூச்சல் போட்டத்தில் அது இவன் மேலே பாய்ந்து விட்டது. சட்டையைக் கிழித்து மேலே பிராண்டி விட்டது. குரல் கேட்டு நாங்கள் எல்லாரும் கூடி விட்டோம். கொட்டடித்து, பட்டாசு போட்டு மக்கள் அதகளப் படுத்தி விட்டார்கள். கரடி பயந்து போய் ஸ்டோரின் எதிரிலிருந்த ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டது. வரிசையாக மரங்கள் இருக்கும் இடங்களில் மனிதக் கூட்டத்தைக் கண்டால் தாவித்தாவிக் கடந்து போய் விடும். இது ஒற்றை மரம்.. மரத்தின் கீழே எல்லாரும் சுற்றி நிற்கவே அதுவும் பயந்துபோய் மேலேயே அமர்ந்திருந்தது.

பெரியவர்கள் சிலர், "டேய் வாங்கடே.. சுத்தி நின்னா பயந்துக்கிடும்... பொட்டக் கரடி.. பாவம் பால் குடுக்கிற தாய் மாதிரித் தெரியுது. எறங்கிப் போகட்டும்" என்று சொல்லிக் கொண்டே இருந்தனர். யாரும் கேட்பதாக இல்லை. காலை ஒன்பது மணிக்குத் தீவிரமாகத் துவங்கிய போராட்டம் வெயில் ஏற ஏறக் கொஞ்சம் நமநமத்துப் போனது. நாங்களும் சற்று ஒதுங்கிப் போய் நிழல்களில் நின்று கொண்டோம்.. கரடிக்கும் வெயில் சுட்டெரித்திருக்கும் போல, அதுவாக மெல்ல இறங்கி ஓடிப் போய்விட்டது.

"நாங்க தான் கரடியைத் தொறத்தி விட்டோமே" என்று இளைஞர்கள் பெருமை பேச,

"அளந்து விடாதீகடே! அதுவா தான் போயிருச்சு" என்பார்கள் பெரியவர்கள். உண்மை எதுவோ, அதன் பிறகு வெறும் பாண்டியின் பெயர் கரடிப் பாண்டி ஆனது மட்டும் நடந்து விட்டது. "சிவப்புச் சட்டைப் போட்டுருந்ததால தான் கரடி என்னைப் பரண்டி வச்சிருச்சு.." என்பான் பாண்டி. "கருப்பு சட்டை போட்டிருந்தேன்னா, அதோட இனம்னு நெனச்சு கூடவே கூட்டிட்டுப் போயிருக்கும்" என்போம் நாங்கள்.

மறுநாள் பத்து மணிக்குள்ளாகவே சமையல் செய்து தூக்குச்சட்டிகளில் எடுத்து வைத்து விட்டார்கள் அம்மாவும் தங்கமும். அப்பா, "இந்தாடே செலவுக்கு வைச்சுக்கோ" என்று ஒரு இருநூறு ரூபாயைக் கதவின் பின்புறம் மாட்டியிருந்த என் சட்டையின் பையில் வைத்தார்.

கண்ணன், "அண்ணே! வரும்போது மணி லாலாக் கடையில நேந்திரங்கா சிப்ஸ் வாங்கிட்டு வா.. அப்படியே உங்களுக்கு சாப்பிடவும் வாங்கிக்கோ" என்று அவன் ஒரு ஐநூறு ரூபாய்த் தாளை நீட்டினான்.

"இருக்கட்டும்.. என்கிட்ட இருக்கு" என்றேன் நான். "தங்கத்துக்கு மஸ்கோத் அல்வான்னாப் பிடிக்கும்.. அதுவும் ஒரு ரெண்டு பாக்கெட் வாங்கணும். இந்தா வச்சிரு" என்று கண்ணன் கூற,

"அப்ப மணி கடையிலேயே அல்லாவும் வாங்கினாத் தான் என்ன? அவனாவது அன்னன்னைக்கு சூடா கிண்டுவான். மஸ்கோத் அல்வா, மண்ணாங்கட்டி அல்வான்னுக்கிட்டு.. ரப்பர் மாதிரில்ல இருக்கும்" என்றாள் அம்மா.

"எனக்கு அதுதான் பிடிக்கும். அதான் வாங்கணும்" என்று பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த தங்கம் பின் கட்டிலிருந்து குரல் கொடுத்தாள்.

"ரெண்டுமே வாங்கிட்டு வரேன் டா... ஆள விடுங்க" என்று காசை வாங்கிக் கொண்டேன். என் தயக்கத்தைப் போக்கத் தான் மூன்று பேருமே முயல்கிறார்கள் என்பது தெரிந்தது. இவர்களிடம் காசு வாங்குவதற்கு நான் ஏன் ஈகோ பார்க்கவேண்டும்? சம்பளம் வந்தவுடன் வெயிட்டாக செய்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

எங்கள் மலைப்பகுதியில் குளிப்பதற்குப் பல இடங்கள் இருந்தாலும் அம்பை ஆற்றில் சமதளத்தில் பெருக்கெடுத்து ஓடிவரும் நீரில் குளிப்பது ஒரு தனி சுகம் என்று நண்பர்கள் சொல்லுவார்கள். எனக்கு எல்லா தண்ணீரும் ஒன்றுதான். எங்கிருந்தாலும் ஓரமாக நின்று தானே குளிக்கப் போகிறேன்.

"பேச்சியப்பா, ஆத்துக்கா போற? வாளியும் கப்பும் எடுத்துக்கோ" என்று பக்கத்து வீட்டு அத்தை கூட கிண்டல் செய்வார்கள். " நாம கழுவி விட்ட தண்ணி தான் அங்க வருது.. அங்கன போய் குளிக்கீகளே.." என்று அம்பைக்குக் குளிக்கக் கிளம்புபவர்களிடம் யாராவது சொன்னால் கூட, "எல்லா இடத்துலயும் குளிச்சுப் பாக்கணும்ல.. அப்படியே பெரிய கோயிலுக்கும் போயிட்டு வரலாம்" என்று பதில் வரும்.

காசி விஸ்வநாதர் கோயில் அருகில் இருக்கும் ஆற்றங்கரைக்கு முதலில் சென்றோம். இரண்டு பைக்குகள் மற்றும் எங்கள் வீட்டு டிவிஎஸ் இவற்றில் மொத்தம் ஐந்து பேர். கோவில் அருகில் சென்று நிற்கையிலே தீயணைப்பு வாகனம் தெரிந்தது. "தண்ணீர் நிரப்ப வந்துருக்கா.. இல்ல?' என்று யோசிக்கும்போதே குளித்து முடித்து எதிரில் சைக்கிளில் வந்த ஒருவர், "மெட்ராஸ் காரர் ஒருத்தர் முங்கிட்டாராம்.. ஒரு மணி நேரமாத் தேடுதாங்க" என்றார். எவ்வளவு அறிவிப்புகள் கண்காணிப்புகள் இருந்தாலும் எப்படியும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையாவது ஒரு இறப்பு நிகழ்ந்துவிடுகிறது. பெரும்பாலும் வெளியூர் வாசிகள் தான். தீயணைப்பு வீரர்கள் முதல் இரண்டுமணி நேரம் தேடிப்பார்த்துக் கிடைக்கவில்லை என்றால் தூத்துக்குடிக்குத் தகவல் சொல்லிவிடுவார்கள். அங்கு நீரில் மூழ்கிய உடல்களை எடுப்பதில் திறமையானவர்கள் சிலர் உண்டு. நான்கு மணிக்குள்ளாக வந்துவிட்டார்கள் என்றால் பொழுது சாய்வதற்கு எப்படியாவது எடுத்துவிடுவார்கள்.

தீயணைப்பு வாகனத்தின் பின் அருகே கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு குடும்பம் நின்றிருந்தது. அதைப் பார்க்கும்போது எனக்கு மனதைப் பிசைந்தது. "திருப்புங்கடே வண்டிய.. சின்னச் சங்கரன்கோவிலுக்குப் போயிருவோம்" என்றான் கரடிப் பாண்டி. சரி என்று வண்டியைத் திருப்பினோம். எனக்கு இந்த ஆற்றை விட சின்னச் சங்கரன்கோவில் தான் பிடிக்கும். அம்பை ஊருக்குள் சென்று
வண்டிமறிச்சியம்மன் கோவில் அருகே உள்ள ரோட்டில் திரும்பி ஒன்றரை கிலோமீட்டர் போக வேண்டும். பெரிய பெரிய மரங்கள் உள்ள விசாலமான ஆற்றங்கரை. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகாக இருக்கும். அதன் கரையிலிருந்த கோமதி அம்மன் கோவில் சிறிதாக இருந்தாலும் களையாக இருக்கும். சங்கரன்கோவில் போலவே இங்கும் ஆடித்தபசு பிரபலம்.

முகம் தெரியாத அந்த மனிதர் ஆற்றில் காணாமல் போனதைப் பற்றி நினைத்துக் கொண்டே வண்டியில் வந்தேன். நான் அங்கு சென்றதும் என் மனநிலை மொத்தமாக மாறிவிட்டது. அன்று ஆர்டிஓ ஆபீஸில் என் அப்பாவுடன் பேசியவரின் மகளை மறுபடி பார்த்தேன். ஆற்றங்கரையோரம் தள்ளுவண்டிக் கடையில் மிளகாய் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தாள்.
 

Author: SudhaSri
Article Title: இருபுனலும் வருபுனலும் 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom