• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இருபுனலும் வருபுனலும் 3

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
இருபுனலும் வருபுனலும் 3



அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெரியவரும் அவர் மகளும் விடைபெற்றுப் போக, அப்பா என் கைகளை மகிழ்வுடன் பிடித்துக் கொண்டார். "வனப்பேச்சிக்குப் பால்குடம் எடுக்கணும்டே!" என்றார்.

நான் ஹால் டிக்கெட் நம்பர் வாங்கியதை தங்கம் அம்மாவிடம் சொன்னாள் போல.. அம்மா போனில் அழைத்தாள். "பிரகாசு ரிசல்ட் வந்திருச்சா? பாஸாயிட்டியா?" என்றாள். ஆயிரம் சண்டை போட்டாலும் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வேகத்தில் அம்மாவுக்கும் தங்கத்துக்கும் விருதே கொடுக்கலாம். அவ்வளவு உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் நடக்கும்.

"நல்ல ரேங்க் தான் மா.. வேலை கிடைச்சிரும்னு நினைக்கிறேன்" என்றேன் நான். "மெட்ராசு, கோயம்புத்தூர் அப்படிப் பெரிய ஊராக் கேளுடா.. மதுரை கூட வேண்டாம்" என்றாள்.

அம்மாவுக்குப் பெருநகரங்களின் மீது ஒரு ஈர்ப்பு எப்போதும் உண்டு. "பாக்கலாம்மா.. அவங்களே ஆர்டர் போட்டு அனுப்புறாங்களா, இல்ல நம்மளக் கூப்பிட்டுக் கேக்குறாங்களான்னு தெரியல" என்றேன்.

"திருச்செந்தூருக்குப் போய் மொட்டை போட்டுருவோம்டா.. கண்டிப்பா கேட்ட இடம் கெடச்சுரும். பாயாசம் வச்சு வைக்கிறேன்..‌ சீக்கிரமா வா" என்றாள். எங்கள் குடும்பத்தினருக்குள் இருக்கும் ஒற்றுமையை நினைத்து சிரித்துக்கொண்டேன்.

அம்மாவிடம் பேசிக்கொண்டே அப்பாவோடு நடந்தேன். அப்பா வண்டியை எடுக்க, நான் பின்னால் ஏறிக் கொண்டேன். "என்னடே? என்ன சொல்லுதா உங்க அம்மா? பெரிய டவுனுக்கு வேலைக்குப் போகணும்னு சொல்லி இருப்பாளே?" என்று கேட்டார். நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அப்பா இன்று டிவிஎஸ் ஃபிப்டியில் வந்திருந்தார். ஆட்டோ எடுத்து வரவில்லை. ஊருக்குள் அலைவதற்கு டிவிஎஸ் தான் வசதி. மலைப்பகுதியில் எங்களது டிவிஎஸ் 50 அவ்வளவு உதவியாக இருந்தது. ஆட்டுக்குட்டிக்குப் புல்லறுக்கப் போவது முதல் அவசரத்துக்கு ஆம்புலன்ஸாக செயல்படுவது வரை டிவிஎஸ் இல்லை என்றால் நாங்கள் இல்லை.

அதில் கூட முன்பகுதியில் "வனப்பேச்சி துணை" என்று அப்பா எழுதி வைத்திருப்பார். தம்பி பின்புறம் என் பெயரையும் அவன் பெயரையும் எழுதி வைத்திருக்கிறான். நினைவுக்கு வந்தது போலத் தம்பியையும் அழைத்து விஷயத்தைச் சொன்னேன். தம்பி இப்போது எங்கள் பவர் ஹவுஸில் ஸ்டோர் வாட்ச்மேனாக இருக்கிறான். அவனுக்குப் பணிநிரந்தர ஆணை இன்னும் சில மாதங்களில் வந்துவிடும் என்று எதிர்பார்த்திருக்கிறான். படிப்பைப் பத்தாவது வகுப்புடன் நிறுத்திவிட்டான். எங்கள் குவாட்டர்ஸிலுள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. அதன்பின் பஸ் ஏறி கீழே விகே.புரம் பள்ளிக்குப் போவோம். ஆண்டுக்கு ஒருவராகக் கழன்று கொண்டு மலையிலேயே ஏதாவது ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். தட்டுத்தடுமாறி கல்லூரி வரை வந்து விட்டவர்கள் மிகக்குறைவு. என்னைப் போல.


ஈ.பி.யில் மெயின்டனன்ஸ், வாட்ச்மேன், ஆஃபிஸ் பாய் போன்ற வேலைகளுக்கு ஆள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். நூற்றுக்கணக்கில் தற்காலிகப் பணியாளர்கள் இருப்பார்கள். தம்பி வேலைக்குச் சேர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. நிரந்தரமாக்குவதற்காக தற்காலிகப் பணியாளர்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து ஒவ்வொரு அரசாங்கத்திடமும் மனு கொடுத்து காத்திருப்பார்கள். ஏதாவது ஒரு அரசாங்கம் பணி நிரந்தர ஆணையில் கையெழுத்திட்டு விடும்.

தங்கமும் ஒரு ஒப்பந்தத் தொழிலாளி தான். அவள் ஒரு சுவாரசியமான பணியில் இருக்கிறாள். அவளே ஒரு சுவாரசியமான பெண்தான். காரையாரில் காணிக்குடியிருப்பு என்ற ஒன்று இருக்கிறது. அங்கு காணிகள் என்ற பழங்குடியினர் இருக்கிறார்கள். அவர்களுடைய பேச்சு, உடை எல்லாம் நம்மைப் போன்றே இருக்கும். வீட்டை மட்டும் வட்டவட்டமான குடிசைகளாகக் கட்டி நாணல் புல்லால் கூரை போட்டிருப்பார்கள். அப்பாவுடன் படகு ஓட்டியவர்களில் நிறையப் பேர் காணிகள். மீன் பிடிப்பார்கள், விவசாயமும் செய்வார்கள். சிலர் ஈ.பி.யிலும் ஃபாரஸ்ட்டிலும் கூடப் பணியில் இருக்கிறார்கள்.

தங்கத்தின் அப்பா ஈபி லைன் மேனாக இருந்தவர். பாதி நேரம் மீன்பிடிக்கப் போய்விடுவார்‌. தங்கம் பதிமூன்று வயதிலேயே அவளது அப்பாவின் காக்கிப் பேன்ட்டைப் போட்டு இடுப்பில் அவளது ரிப்பனை வைத்து இறுக்கிக் கட்டிக் கொள்வாள். விறுவிறுவென்று எலக்ட்ரிக் போலில் ஏறிவிடுவாள். ஃப்யூஸ் போடுவது, லைன் மாற்றுவது, வவ்வால், காகம் எதுவும் ஒயர்களில் சிக்கியிருந்தால் எடுத்துவிடுவது என்று எல்லா வேலையும் செய்வாள். அப்போதெல்லாம் அவள் செய்வதை அதிசயமாகப் பார்ப்போம்.

எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் ஏறி விடுவாள். உயரத்திலிருந்து ஆற்றில் டைவ் அடித்து குதிப்பாள். காணிக்குடியிருப்புப் பள்ளியில்தான் படித்தாள் என்றாலும் மலை முழுவதுமே சுற்றி வருவாள். அவளுக்கு பதினெட்டு வயது நிரம்பிய சமயம் பவர்ஹவுஸில் காண்ட்ராக்டில் பல பணியிடங்களை நிரப்பினார்கள். இவளும் போய் வம்படியாக நின்றுகொண்டு எனக்கும் வேலை கொடுங்கள் என்றாள். பெண்களுக்கு என்ன வேலை கொடுப்பது என்று தலைமைப் பொறியாளர் மறுத்து விட, விடாமல் சண்டை போட்டாள்.

மங்க்கி பாய் என்று ஒரு பணியிடம் உண்டு. குரங்கு விரட்டுவது தான் அவர்களது வேலை. மலைப்பகுதி என்பதால் குரங்குகள் எண்ணிக்கை அதிகம் இருக்கும். பைப்புகள், முக்கிய இயந்திரங்கள் அருகில் குரங்குகள் வராமல் விரட்ட வேண்டும். அந்த வேலையைக் கொடுங்கள் என்றாள். 'விளையாடாதம்மா!' என்று கூறிவிட்டு இன்ஜினியர் சென்றுவிட, அன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு தினமும் நான்கைந்து குரங்குகளைக் கூட்டிக்கொண்டு போய் அவர் வீட்டு முன் அமர்ந்திருப்பாள். அவளுக்கென்று சில குரங்குகள் நண்பர்களாக இருந்தன. பழகின நபர்களைக் குரங்குகள் ஒன்றும் செய்வதில்லை. எனக்கே கூட ஒரு குரங்கு நண்பன் உண்டு. நான் சாப்பிடும் நேரம் சரியாக வீட்டுக்கு வந்து விடும். எங்கள் வீட்டு வாசலில் உள்ள குழாயைத் திறந்து தண்ணீர் குடித்துவிட்டுத் தானாகவே மூடிவிடும். இங்க் பேனாவை அழகாகத் திறந்து இங்க் குடித்து விட்டுப் போகும். வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ்களில் எவ்வளவு நூதனமான மூடிகள் இருந்தாலும் திறமையாகத் திறந்து மரத்தின் மேல் உட்கார்ந்து பொறுமையாக சாப்பிட்டுவிட்டு சம்படத்தை மேலிருந்து கீழே போட்டு விடும்.

இப்படி நட்புக் குரங்குகளைக் கூட்டிப்போய் குரங்குப் போராட்டம் நடத்தி 'மங்க்கி கேர்ளாக' வேலை வாங்கி விட்டாள் தங்கம். காணி இனப் பெண்களே தைரியமானவர்கள் தான். அதில் தங்கத்துக்கு சற்றுக் கூடுதல் விவரம்.

என் தம்பி கண்ணனும் அங்கு ஹெல்பராக பணியில் சேர்ந்திருந்தான். ஒரு வருடம் முன்பு அவனுக்கு 22 அல்லது 23 வயது தான் இருக்கும், திடீரென்று ஒருநாள் தங்கத்தைத் திருமணம் செய்து கொண்டு வந்தான். யாருமே எதிர்பார்க்காதது அது. ஆளாளுக்கு ஒரு கதை சொன்னாலும் என்னதான் நடந்தது என்று எங்கள் யாருக்குமே இன்றுவரை தெரியாது. அம்மாவும் அப்பாவும் ஆரம்பத்தில் எதிர்த்தாலும் பின் வேறு வழியின்றி சேர்த்துக் கொண்டார்கள். அவனது திருமணத்திற்குப் பிறகு, எனக்கு சீக்கிரம் வேலை வாங்க வேண்டிய அவசியம் இன்னும் அதிகமாகிவிட்டது. இப்போது தங்கம் மாசமாக இருக்கிறாள் போலும், அதனால் ஆபீஸ் வேலைக்கு போகிறாள். குரங்கு விரட்டுவதை ஆர்வமாகச் செய்தவள் ஆபீஸ் வேலைக்கு அடிக்கடி மட்டம் போடுகிறாள். கொஞ்ச நேரம் அலுவலகம் சென்றுவிட்டு வந்து அம்மாவுடன் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறாள்.

இன்று காலையில் கூட தங்கம் ஆற்றுக்குப் போய் குளிப்பதில் தான் அம்மாவின் முணுமுணுப்பு ஆரம்பித்தது. "இந்த நேரத்துலயாவது வீட்டுல குளிச்சாத்தான் என்ன?" என்றாள் அம்மா. அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. தங்கமும் ஓரமாகக் குளித்தோம் வந்தோம் என்று இருக்க மாட்டாள். ஆறு மணிக்குப் போகிறவள் எட்டு மணியானாலும் வரமாட்டாள். அம்மா வாசலை வாசலைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் சிரிப்பாக வரும். இத்தனைக்கும் தங்கம் வந்துதான் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்று எதுவும் கிடையாது. அம்மாவே செய்து விடுவாள். அப்பா தம்பி இருவரும் தினமும் ஆற்றில் தான் குளிப்பார்கள். அம்மா சில சமயம் வீட்டில், சில சமயம் ஆற்றில். தினமும் பாத்ரூமில் குளிக்கும் ஆள் நான் ஒருவன்தான். அதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

எனது ஐந்து வயது வரை என்னை ஆற்றுக்கே விடமாட்டாள் அம்மா. "ஆத்துல வெள்ளமாப் போகையில கஷ்டப்பட்டு புள்ளை பெத்துருக்கேன்.. ஆறு குளம்னு கூட்டிட்டு போகாதீங்க.. புள்ளைய அனுப்பிட்டு பக்குபக்குன்னு இருக்கு எனக்கு. என்னமும் ஆனா எனக்குத் தாங்குற சக்தி இல்லை" என்று பிடித்து வைத்து விடுவாளாம்.

அப்பா ஒருமுறை, "உனக்கு மட்டும்தான் மகனா? எனக்கும்தான்.. தாமிரபரணிக் கரையில் இருந்துக்கிட்டு ஆம்பளைப் புள்ளைக்கு நீச்சல் தெரியலன்னு சொன்னா கேவலமா இல்ல?" என்று வம்படியாக சண்டை போட்டு என்னை ஆற்றுக்குக் குளிக்ககூட்டிப் போயிருக்கிறார். நானும் ஜாலியாகக் குளித்தேனாம். கடைசியில் கிளம்பும்போது அப்பா தன் துண்டு, லுங்கியைத் துவைக்கப் போக, நான் என் ஜட்டியை அலசப் போகிறேன் என்று போயிருக்கிறேன். என் ஜட்டியைத் தண்ணீர் இழுத்துக் கொண்டு போய் விட, நானும் கூடவே போயிருக்கிறேன். அருகில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் வேகமாக நீந்தி என்னைப் பிடித்திருக்கிறார். அதுமுதல் எல்லாரும் 'ஆத்தோட போகப் பாத்தவம்லா இவன்..' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதனால் அதற்குப் பிறகு அம்மா என்னை ஆற்றுக்கு விட்டதேயில்லை. இன்றுவரை ஆற்றோடு போகப் பார்த்தவன் என்ற பெரும் பெயர் எனக்கு உண்டு. யாராவது அதைச் சொல்லிக் கிண்டல் செய்யும் போதெல்லாம் நான் அழ ஆரம்பித்தேன். அப்பா என்னை சமாதானப்படுத்தி, "உன் ஜட்டி போய் தான் பவர்ஹவுஸ்ல டர்பைன்லயே மாட்டிக்கிச்சாம்டே.. நாலு மணி நேரமா மிஷின் நின்றுச்சாம்.. தெரியுமா?" என்று போக்குக் காட்டுவார்.

நான் ஆற்றோடு போகப் பார்த்த காட்சி அவ்வளவாக ஞாபகம் இல்லை என்றாலும் அந்த ப்ரவுன் நிற ஜட்டி நீரில் இழுத்துக்கொண்டு போனதும் நான் அதைப் பிடிக்கப் போனதும் மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. இப்போதும்கூட எப்போது உடை எடுக்க போனாலும் "என்னண்ணே, பிரவுன் கலர் ஜட்டி வாங்கப் போறியா?" என்று கிண்டல் அடிப்பான் என் தம்பி.

அதன் பின் பிளஸ் 2 முடித்த புதிதில் நண்பர்கள் எல்லாரும் வற்புறுத்தி சேர்வலாறு ஆற்றுக்குக் கூட்டிப் போனார்கள். "இப்ப நீ பெரிய மனுஷன்டே... இப்பயும் அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு தண்ணிக்குள்ள கால் வைக்காம இருக்க?" என்று இழுத்துக்கொண்டு போனார்கள். நன்றாகக் குளித்து அங்கேயே மீன்பிடித்து சுட்டுத் தின்றோம். டேமின் அருகில் சென்று மீன் பிடித்தால் பெரிய பெரிய மீன்கள் கிடைக்கும். ருசியும் அபாரமாக இருக்கும். அணைக்கட்டு இருக்கும் இடங்களில் டேம் மீன்களுக்கென்றே பெரிய சந்தை உண்டு. என் நண்பன் இட்லி பாண்டி சமையலில் திறமையானவன். அன்று எல்லார் வீட்டிலிருந்த பழைய சோற்றையும் கொண்டு போயிருந்தோம். மிளகாய்த்தூள், உப்பு கொண்டு வந்திருந்தான் பாண்டி. அதைப் பதமாகத் தடவிக் காய வைத்து, பிறகு மூன்று கற்களை போட்டு, குச்சிகளில் தீ மூட்டி அதற்கு மேல் ஒரு வலைக் கம்பியைப் போட்டு ருசியாக மீனைப் பொரித்தெடுப்பான்.‌ பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறும். முதலில் குளியல், பின் சாப்பாடு, மீண்டும் குளியல் என்று மறக்க முடியாத நாளாக அமைந்தது அன்றைய தினம்.

நண்பர்களுக்கு அது வழக்கமான ஒன்று தான், எனக்குத் தான் புதிய அனுபவம். அந்த நாளை இன்னும் மறக்க முடியாததாக ஆக்கியது இன்னொரு சம்பவம். இரண்டாம் முறை குளிக்க போகும் போது திடீரென்று டேமில் தண்ணீரைத் திறந்துவிட்டு விட்டார்கள். எப்போதுமே பவர்ஹவுஸ் தேவைக்காக தண்ணீர் திறக்கும் முன் சத்தமாக சைரனை ஒலிப்பார்கள். நீண்ட தூரம் வரை அந்த சத்தம் கேட்கும். 'சங்கு ஊதியாச்சா, தண்ணி தொறக்கப் போறாங்க போல' என்று பேசிக்கொள்வோம். அன்றும் சைரன் ஒலித்திருக்கிறார்கள். நாங்கள் உற்சாக மிகுதியில் கவனிக்கவில்லை. திடீரென்று நிறைய தண்ணீர் வந்துவிட, எல்லாரும் வேகமாக நீந்தி அக்கரைக்குச் சென்று விட்டார்கள். நான் மட்டும் ஒரு பாதுகாப்பு உணர்வுடன் இக்கரையிலேயே ஓரத்தில் குளித்துக் கொண்டிருந்ததால் இந்தப்புறம் கரை ஏறிவிட்டேன். நண்பர்கள் நான்கு பேருடைய உடைகள், பர்ஸ், வாட்ச் எல்லாம் என் புறம் இருந்தது. அக்கரையில் கரையேறியவர்கள் சற்று நேரம் திகைத்து நின்றுவிட்டு காட்டுப் பகுதியில் சுற்றி நடக்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து காட்டுப்பகுதியில் சுற்றி நடந்து வியர்க்க விறுவிறுக்க அரைக்கால் டவுசருடன் வந்தவர்களைப் பார்க்க எனக்கு சிரிப்பாகவும் இருந்தது, பாவமாகவும் இருந்தது. அன்றைய நாளின் துவக்கத்தில் எனக்குக் குறைந்திருந்த தண்ணீர் பயம் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு முன்பை விட அதிகரித்திருந்தது.

நண்பர்கள் அப்பாவிடம் விஷயத்தைச் சொன்ன போது அப்பா பதறி விடுவாரோ என்று நினைத்து பயந்தேன். "அவன் தாமிரபரணியோட பிள்ளைல்லா.. ஒன்னும் ஆகாது. அம்மா அவனை எப்படியும் காப்பாத்திருவா.. எல்லா சூழ்நிலைக்கும் பழகணும்.. இனிமே சூதானமா இருங்க" என்றார் அவ்வளவு நம்பிக்கையுடன். அன்றிலிருந்து எனக்கும் ஆற்றின் மேல் ஒரு இனம் புரியாத பாசம் வந்திருந்தது. நல்லவேளையாக இந்த விஷயம் அம்மா காதுக்குப் போகவில்லை. ஒரு வேளை போயிருந்தால் வீட்டில் ஒரு பெரிய போராட்டம் நடந்திருக்கும். அம்மா எதிர்ப்பதனாலேயே கூட அப்பாவுக்கு என்னை ஆற்றில் நீந்த வைத்து திறமையான நீச்சல் வீரனாக்கிவிட வேண்டும் என்ற பிடிவாதம் வேறூன்றி இருக்கலாம்.

மார்க் வந்து விட்டதால் திட்டமிட்டபடியே பரோட்டாவும் பாயாசமும் சாப்பிட்டு அன்றைய தினத்தின் மகிழ்ச்சியைக் குடும்பத்துடன் கொண்டாடியிருக்க, நண்பர்களும் ஒவ்வொருவராக வந்து, "எங்களுக்கு என்னைக்கு பார்ட்டி?" என்றனர். ஒரேடியாகக் கொண்டாடுவதற்கும் எனக்கு பயமாக இருந்தது. ஒருவேளை வேலை கிடைக்காவிட்டால்? அப்படி கிடைக்காவிட்டாலும் கூட கிடைத்த வேலையில் இந்த முறை சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். நண்பர்கள் எல்லாருக்கும் பந்தாப் பாண்டி என்ன ரேங்க் வாங்கியிருக்கிறான் என்று தெரிந்து கொள்ள ஆவல். அவன் திருநெல்வேலிக்குக் குடிபோயிருந்தான். முருகேசன் அவனுக்கு ஃபோன் போட்டு,

"டேய் என்னடா பயங்கரமா மார்க் வாங்கி இருக்கியாம்? எத்தனாவது ரேங்க்கு?" என்று கேட்டான். அப்படியே என்னுடைய ரேங்க்கையும் முருகேசன் சொல்ல, பந்தாப் பாண்டியின் குரலில் சுருதி கொஞ்சம் இறங்கியிருக்கிறது. ஏதேதோ பேசிவிட்டு வைத்துவிட்டான். முருகேசன் எங்களிடம், "டேய் உன்ன விட ரேங்க்கு கொறஞ்சு இருப்பான்னு நினைக்கிறேன்.. அதுதான் அப்படியே சத்தம் உள்ள போயிருச்சு" என்று சொல்லிக்கொண்டிருக்க எனக்கு அழைப்பு வந்தது. பந்தாப் பாண்டி தான்.. நாங்கள் எல்லாரும் ஒன்றாய் அமர்ந்திருப்பது தெரியாதவன் உடனடியாக எனக்கு அழைத்திருக்கிறான் போல.. என்னிடம் வளவளவென்று ஏதோ பேசி முடித்தபின், "புடிச்ச டிபார்ட்மெண்ட்ல போஸ்டிங் வாங்கிக்கிடலாம்டா.. கொஞ்சம் செலவாகும். எங்க அப்பா நாலு லட்சம் வரை கூட செலவழிச்சுக்கோ.. பிடிச்ச இடமா வாங்குன்னு சொல்லிருக்காரு. நான் நல்ல பணம் புழங்குற டிபார்ட்மெண்ட்டா கேக்கப் போறேன்டா.. ஆர்டிஓ ஆபீஸ், தாலுகா ஆபீஸ் இந்த மாதிரி.. உனக்கு எதுவும் வேணும்னா சொல்லு. எந்த டிபார்ட்மென்ட்னாலும் கேட்டு வாங்கிக்கிடலாம்" என்றான்.

இறுதியில் "நீ என்ன ரேங்க்னு சொன்ன?" என்றான். அவன் பேசியது அவனிடமுள்ள பணப்புழக்கத்தைக் காட்டுவதற்காகவும் என்னுடைய ரேங்க்கைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவன் கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டு, "செலவழிக்கிற மாதிரி எல்லாம் இல்லடா.. கிடைச்ச ஊர்ல வேலைக்கு போய்க்கிட வேண்டியதுதான்" என்று கூறியதுடன் வைத்துவிட்டேன்.
 
Top Bottom