• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இருபுனலும் வருபுனலும் 2

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
இருபுனலும் வருபுனலும் 2

பெண்பிள்ளைகளுக்கு வெளியில் வேலை இல்லாவிட்டால் கூட வீட்டில் ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கிறது. ஒன்றும் இல்லை என்றாலும் தையல், டைப்ரைட்டிங் என்று ஏதாவது வகுப்புக்குப் போகிறார்கள். அரசுத் தேர்வுகளிலும் பெண்கள் நிறைய இடங்களைப் பிடிக்கிறார்கள். எனக்கு நினைவு தெரிந்து பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் எப்போதும் பெண்கள் தான் முதலிடம். அதற்கு முன்பும் அப்படித்தான் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனால் என்னைப் போன்ற ஆண்களிடம் கேட்டுப் பாருங்கள், சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதைச் சொல்வோம். வீட்டில் இருக்க முடியாமல் அகதி போல் அப்பா கூப்பிட்டதை சாக்காக வைத்து எப்படி ஓடி வந்திருக்கிறேன்.

அப்பாவிடம் ஆதார் அட்டையைக் கொடுத்தால் வேலை முடிந்தது. அடுத்து என்ன செய்வது என்று அங்கு போய் தான் யோசிக்க வேண்டும். இப்படி பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்கு காத்திருக்கும் போது ஏதாவது கடையிலோ, பெட்ரோல் பல்க்கிலோ வேலை பார்த்தால் கூட நல்லது தான். சாப்பாட்டுக்குக் கஷ்டம் என்பவர்கள் துணிந்து இறங்கி விடுகிறார்கள். பைக் வேண்டும், ஷு வேண்டும், ப்ராண்டட் ஷர்ட் வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஏதாவது வேலைக்குப் போகிறார்கள். எனக்கு அதிலும் தயக்கம்.. அப்படிப் பொருட்கள் வேண்டுமென்று ஆசையும் எனக்கு இல்லை.

தற்காலிக வேலை கேட்டுச் சென்றால் போகுமிடத்தில் எப்படிப் போய் வேலை கேட்க? அரசு வேலை கிடைத்தால் போய்விடுவேன் என்று கூற வேண்டுமா? ஆறு மாசம் தான் வேலைக்கு வருவேன் என்று கூறலாமா? என்று பல தயக்கங்கள். என்னுடைய தயக்கங்கள் ரொம்பப் பிரசித்தி பெற்றவை. நான் இப்படி வளர்ந்ததற்கு அம்மாதான் காரணம் என்று தம்பி உட்படப் பலரும் சொல்வார்கள்.

அம்மா என்னை இப்படி வளர்க்க என்ன காரணம் என்று கேட்டீர்களானால் அதற்கு நான் பிறந்த கதையைக் கூறவேண்டும். 1992-ஆம் வருடம் நவம்பர் மாதம் அது. வரலாறு காணாத வெள்ளம் தென்மாவட்டங்களில் வந்தது. சென்னை போல் இங்கு வருடா வருடம் வெள்ளம் வருவதில்லை. அதனால் என்றோ ஒரு நாள் வெள்ளம் வருவது கூட எங்கள் வாழ்வைப் புரட்டிப் போடும் என்றுதான் சொல்ல வேண்டும். 92 வெள்ளத்தில் குற்றாலம் கோயிலில் கூட முக்கால் வாசி உயரத்துக்கு தண்ணீர் போய் விட்டது என்பார்கள். இப்போது கூட கோவிலில் ஏதோ ஒரு இடத்தில் வெள்ளம் வந்த உயரத்தை மதிலில் குறித்து தேதி போட்டு வைத்திருக்கிறார்கள்.


எங்கள் அம்மாவின் சொந்த ஊர் சிவகிரி. அங்கிருந்து வந்து அம்மாவை பேறுகாலத்துக்காக ஒன்பதாம் மாதம் அழைத்துப் போவதாக இருந்திருக்கிறார்கள். ஏழாம் மாதமே வளைகாப்பு போட்டாயிற்று. இப்பவே வாயேன் என்று அம்மாச்சி சொன்னதற்கு அம்மாதான், "என் வீட்டுக்காரரு சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவாரு. இந்த டிப்போ கடையிலேயே எத்தனை நாள் சாப்பிட முடியும்? ஒன்பதாம் மாசம் வரேன்" என்று கூறிவிட்டாளாம்.

பெரியப்பா குடும்பத்தாரோடு எங்களுக்கு அப்போது ஒரு சடவு. அதனால் அங்கு போய் அப்பா சாப்பிடுவதில் அம்மாவுக்கு விருப்பமில்லை. பெரியப்பா குடும்பத்தினருடன் ஒரே வீட்டிலேயே இருந்த என் பெற்றோர், இந்தச் சின்னச் சடவினால் வேறு க்வார்ட்டர்ஸுக்கு மாறியிருந்தார்கள். அங்கேயே பல நாட்கள் குடியிருந்ததாலும் சில வீடுகள் காலியாக இருந்ததாலும் வீடு கிடைப்பது அவர்ளுக்கு சிரமமாக இல்லை. சிவகிரியில் இருந்து அம்மாச்சியும் தாய்மாமாவும் கிளம்பலாம் என்று இருக்க, அங்கும் பயங்கர மழையாம். தென்காசி பக்கம் நிறைய பெரிய மரங்கள் சாய்ந்து வழியை அடைத்துக் கொண்டதால் வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போதே மலையில் பயங்கர வெள்ளம். யாரும் இன்னும் ஒரு வாரத்துக்கு மலைக்கு மேலே போக முடியாது என்று கேள்விப்பட்டு, சரி பிரசவத்துக்குக் குறித்துக் கொடுத்த தேதி வர இன்னும் நாள் இருக்கிறதே.. அடுத்த வாரம் போய்க் கொள்ளலாம் என்று சாதாரணமாக இருந்து விட்டார்களாம்..

ஓயாமல் நாலு நாள் மழை பெய்திருக்கிறது. அணையில் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அப்பா மூன்று நாட்களாக மேலே காரையாருக்குப் போகவில்லை அப்போதுதான் லோன் போட்டு சொந்தமாக ஒரு படகு வாங்கியிருந்தார். 'கரையோரமா போட்டை நிறுத்திருக்கோம்.. நாலு பேராச் சேர்ந்து கயிறு கட்டி இழுத்து ஆபீஸ் பக்கம்விட்டுட்டு வரப் போறோம்' என்று காலையில் இன்னொரு படகுக்காரனுடன் பைக்கில் போயிருக்கிறார் அப்பா.

அன்று மழை ஓய்ந்து விடும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். அது பொய்த்துப்போய் அன்றும் தொடர்மழை பெய்ததால் அப்பா மேலேயே மாட்டிக்கொண்டார். டேமின் அருகில் இருக்கும் போலீஸ் பீட்டில் அவரும் நண்பரும் ஒதுங்கியிருக்கின்றனர். வெள்ளத்தில் முண்டந்துறைப் பகுதியில் ஆற்றுக்குக் குறுக்கே இருந்த இரும்பாலான தரைப்பாலம் நீரில் மூழ்கியிருக்க, கான்க்ரீட் பாலம் அடித்துக் கொண்டு போயிற்று. கீழே எங்கள் க்வாட்டர்ஸுக்கு அருகிலும் ஒரு ஆற்றங்கரை உண்டு. அதில் பெரிய பெரிய மரங்கள் அடித்து வந்து ஒதுங்கினவாம். தூரத்திலிருந்து பார்த்தாலே கட்டைகள், பாம்புகள் என்று என்னவெல்லாமோ நீரில் அடித்துக்கொண்டு போனது தெரிந்ததாகச் சொன்னார்கள். அப்படி வந்த மரக்கட்டைகளை எடுத்துவைத்து அதன்பின் செய்த கட்டில், மேஜை எல்லாம் இப்போதும் பல வீடுகளில் இருக்கிறது. க்வாட்டர்ஸும் சற்று தாழ்வான பகுதியில் இருந்ததால் கீழ்த்தள வீடுகளுக்குள் நீர் புகுந்து விட்டதாம். நல்லவேளையாக எங்கள் குடும்பம் அப்போது மேல்தளத்தில் இருந்திருக்கிறது.

முதலில் எல்லாரும் பெரியப்பா வீட்டுடன் ஒற்றுமையாக ஒரே வீட்டில் தான் இருந்திருக்கிறார்கள். அந்தச் சின்னச் சண்டைக்குப் பின் காலியாக இருந்த வேறொரு க்வாட்டர்ஸுக்கு எங்கள் குடும்பம் இடம்பெயர்ந்திருக்கிறது. ஈபி ஊழியர்கள் சிலர் குடும்பத்துடனும் சிலர் தனியாகவும் இருப்பார்கள். எல்லாருக்குமே ஒரு வீடு ஒதுக்கப்படும். குடும்பம் இல்லாமல் தனியாக இருப்பவர்கள் இரண்டு மூன்று பேர்களாக தங்கிக்கொண்டு எங்களைப் போன்றவர்களுக்கு வீடுகளைக் கொடுத்துவிடுவார்கள். எங்கள் உறவினர்கள் யாராவது சுற்றுலா வந்தால் கூட இப்படி சும்மா கிடக்கும் வீடுகளை பயன்படுத்திக் கொள்வோம். க்வாட்டர்ஸிலேயே ஒரு சின்ன டிஸ்பென்சரியும் ஒரு டாக்டரும் உண்டு. அவருக்கு உதவியாக ஒரு நர்ஸம்மா. அந்த நர்ஸம்மாவுக்குக் கொஞ்சம் காது கேட்காது. சேர்வலாறு அணைப் பகுதியிலும் இதே போன்ற ஒரு பவர் ஹவுஸ் உள்ளது. அங்கும் இதே போல ஒரு குடியிருப்பு. எங்கள் டிஸ்பென்சரியில் இருக்கும் இதே டாக்டர் தான் அங்கும் போவார். திங்கள், புதன், வெள்ளி மூன்று நாட்கள் அங்கேயும் செவ்வாய், வியாழன், சனி மூன்று நாட்கள் இங்கேயும் அவருக்கு ட்யூட்டி. இரண்டு டிஸ்பென்சரிகளுமே வீட்டுடன் இணைந்தவை தான். முந்தைய நாள் சேர்வலாறு போன டாக்டர் அதிக மழையால் அங்கேயே தங்கி விட்டாராம். இங்கே நர்ஸம்மா மட்டும்தான் இருந்திருக்கிறார்.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் எதிர்பாராமல் அம்மாவுக்கு பிரசவ வலி எடுத்து விட்டதாம். பெரியம்மா தகவல் கேள்விப்பட்டு வந்துவிட்டார்கள். பெரியப்பா எப்படியோ ஒரு ஃபோனைப் பிடித்து, லைன் கிடைக்காமல் பலமுறை முயன்று மேலே காரையாரில் இருக்கும் ஒரு வீட்டுக்குத் தகவல் சொல்லி விட்டார். மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுக்கும் ஆட்கள் நிறைய பேர் காரையாரில் உண்டு. அதில் ஒரு பெண்மணியின் கணவர் ஈபி லைன் மேன். அவர் வீட்டில் ஒரு தொலைபேசி உண்டு. அங்கு தொலைபேசி எடுத்தவர்கள் தகவலை அப்பாவுக்குச் சொல்ல, அப்பா உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இங்கு வர முயன்றிருக்கிறார். அவர் பதற்றத்தைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் தகவலைக் கூறாமலே விட்டிருக்கலாமே என்று அவ்வப்போது நான் நினைத்துக்கொள்வேன்.

ஆனது ஆகட்டும் என்று மழையோடு அவர் கிளம்பி பாதி வழி வருகையில் தான் கான்கிரீட் பாலம் தண்ணீரோடு போனது தெரிந்திருக்கிறது. அதுவும் சேர்வலாறு அணைத் தண்ணீரை மொத்தமாக திறந்து விட்டதால் தான் போனது என்று சொல்வார்கள். "ஆத்தா வனப்பேச்சி! என் பிள்ளையையும் என் பொண்டாட்டியையும் காப்பாத்தும்மா.." என்று வேண்டியிருக்கிறார்.

அந்த மலையில் எல்லாருக்குமே வனப்பேச்சி தான் இன்னொரு தாய். எங்கள் குவாட்டர்ஸின் அருகில் தான் அவள் கோயில் உள்ளது. சாதாரண நாட்களில் கோவில் ஆளே இல்லாமல் அமைதியாக இருக்கும். கோவில் கோடையின் போது மலையே அதிரும் வகையில் உலகின் பல மூலைகளில் இருந்தும் ஆட்கள் வருவார்கள். இங்கு வந்து கொஞ்ச நாள் மட்டுமே வேலை பார்த்து விட்டுப்போனவர்களுக்குக் கூட வனப்பேச்சியுடன் ஒரு அன்பு ஏற்பட்டு விடுமாம். மலையைப் பிரிய மனமின்றி இருப்பவர்கள் பாதிப்பேர் என்றால் வனப்பேச்சியை பிரிய மனமின்றி இருப்பவர்கள் மீதிப்பேர். பேச்சிமுத்து, பேச்சியப்பன், பேச்சிராஜ், பேச்சியம்மாள், பேச்சித்தாய் என்று வனம் எங்கும் பேச்சியின் அருள் பெற்றவர்கள் நிரம்பியிருப்பார்கள். வனக்குமார், வனராஜ் போன்ற பெயர்களும் நீங்கள் வேறு ஊர்களில் அதிகம் கேட்டிருக்க முடியாது.

என் அம்மா கொஞ்சம் குள்ளம் என்பதால், ஆபரேஷன் ஆனாலும் ஆகும் என்று எங்கள் டாக்டர் சொல்லி இருந்தாராம். அம்மாச்சி ஊரில் அதற்கேற்ற மாதிரியான பெரிய ஆஸ்பத்திரியில் காட்டுவதாகத் தான் ஏற்பாடு. எதிர்பாராமல் திடீரென வலி ஏற்பட்டு விடவே, 'ஐயோ ஆபரேஷன் பண்ணனும்னு சொன்னாங்களே..' என்று வேறு அம்மாவுக்கு ஒரே கவலை. பயமும் வலியுமாக வனப்பேச்சியையும் அந்த நர்ஸம்மாவையும் மட்டும் நம்பி பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கிறாள் அம்மா.

இதில் இன்னொரு விஷயம், ஈபி பவர் ஹவுஸின் அருகிலேயே நாங்கள் குடியிருந்ததால் எங்களுக்கு எப்போதும் மின்சாரம் இருக்கும். பவர்கட் என்பதே கிடையாது. பெருமழை காரணமாக பவர்ஹவுஸின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. கட்டை, கம்பு எல்லாம் வந்து டர்பைனில் மாட்டினால் மிஷின்கள் உடைந்து விடும் அபாயம் இருந்ததால் இப்படி சமயங்களில் உற்பத்தியை நிறுத்திவிடுவார்கள். மூன்று மாவட்டங்களிலும் எங்கு நீண்ட நேரம் கரண்ட் இல்லை என்றாலும் 'என்ன பாவநாசத்திலேயே கரண்ட் போயிருச்சா?' என்று தான் கேட்பார்கள். பவர் ஹவுஸ் மெஷின்கள், ராட்சத பைப்புகள் எல்லாவற்றிலும் 'மேட் இன் இங்கிலாந்து, பர்மிங்ஹாம்' என்று தான் போட்டிருக்கும். காரையார் டேமை‌ கட்டியதும் வெள்ளைக்காரர்கள் தான். சேர்வலாறு டேம் கட்டியது சுதந்திரத்திற்குப் பிறகு. 92, வெள்ளத்தில் சேர்வலாறு டேமில் நிறைய இடங்களில் கசிவு ஏற்பட்டு அணை உடைந்து விடும் என்ற அபாயம் இருந்ததால்தான் அன்று திறந்துவிட்டதாகச் சொல்வார்கள். இன்றும் அடிக்கடி சேர்வலாறு அணையில் மெயின்டனன்ஸ் என்று சொல்லி நிறையத் தண்ணீர் திறந்து விடுவார்கள். சற்று மஞ்சள் நிறத்தில் தண்ணீர் போனால், 'இது சேர்வலாறு தண்ணில்லா..' என்பார்கள் அனுபவஸ்தர்கள். ஆனால் காரையாரில் மெயின்டனன்ஸ் என்று இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை.

இந்தக் கதையை ஏன் சொல்கிறேன் என்றால் நான் பிறந்த அன்று கரண்ட் இல்லை. வழக்கமாக அடிக்கடி கரன்ட் போகும்போது வீடுகளில் மெழுகுவர்த்தி, அரிக்கேன் விளக்கு வைத்திருப்பார்கள். அவசியம் ஏற்படாததால் எங்கள் வீட்டில் அப்போது இல்லை. விளக்கு, பக்கத்து வீட்டு மெழுகுவர்த்தி இவற்றின் உதவியுடன், வெளிச்சத்துக்கு உள்ளே பறந்துவந்த தட்டான்கள் சூழ, காது கேட்காத நர்ஸம்மாவும் என் பெரியம்மாவும் சேர்ந்து என் அம்மாவுக்கு பிரசவம் பார்த்து, நான் நல்லபடியாகப் பிறந்துவிட்டேன்.

மறுநாள் காலை மழை நின்றிருக்கிறது. ஆனால் ஆற்றில் இன்னும் வெள்ளம் தான். இனிமேல் தாமதிக்க முடியாது என்று முண்டந்துறை ஆற்றை நீந்திக் கடந்து அப்பா வந்து சேர்ந்துவிட்டார். வந்தவர் சொன்ன முதல் வார்த்தை, "வனப்பேச்சியம்மா காப்பாத்திட்டா.. என் மகனுக்கு பேச்சியப்பன்னு தான் பேரு" என்பது தான்.

"அது ஏங்க? கஷ்டப்பட்டுப் பெத்தது நானு. பேரு சாமி பேரா?" என்றாளாம் என் அம்மா.

"அதுக்காக உன் பேரையா வைக்க முடியும்? நீ பொழச்சு வந்து இப்படி ஒரு கேள்வி கேட்கிறேன்னா அதுக்கு அந்தப் பேச்சியம்மன் தான் காரணம்" என்றாராம் அப்பா. அம்மா பல நவீன பெயர்களை யோசித்து வைத்திருக்க பேச்சியப்பன் என்ற பெயர் அவளது அகராதியிலேயே இல்லை. நர்ஸம்மா பெயரையோ, சண்டை போட்ட பெரியம்மா பெயரையோ வைப்பதற்குக் கூடத் தயார் என்றாள். ஆனால் அப்பா சம்மதிக்கவே இல்லை.

அதன்பின் நான் பிறந்த தகவலைச் சொல்லி அம்மாச்சி ஊருக்குத் தந்தியடிக்க, நான்கு நாள் கழித்துத் தான் அவர்களால் வர முடிந்ததாம். பெரும்பாடுபட்டு பிறந்த பையன் என்றுதான் எல்லாரும் என்னை கைக்குள் வைத்து வளர்த்து வளர்த்து நான் இன்னும் கைப் பிள்ளையாகவே இருக்கிறேன்.

இத்தகைய பின்புலத்தில் இப்போது சும்மாக் கிடக்கும் என் மனதில் சாத்தான் கும்மியடிக்க ஏதோ செய்து கொண்டிருக்கிறேன். அப்பா அம்பையில் பஸ்சை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார், ஆனால் என்னை எதிர்பார்க்கவில்லை போலும். என்னைப் பார்த்தவுடன் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி. சிறுபிள்ளையாக இருக்கும் போதிலிருந்தே அப்படித்தான். எப்போது என்னைப் பார்த்தாலும் இதே மாதிரியான மலர்ச்சி தான் அவர் முகத்தில் இருக்கும். அப்பாவிடம் ஆதார் அட்டையைக் கொடுத்து விட்டு நான் என்ன செய்வதென்று தெரியாமல் அவர் அருகிலேயே நின்று கொண்டேன். அப்பாவுக்குத் தெரிந்தவர் போல.. ஒரு பெரியவர் தன் பெண்ணிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

"எப்பவும் பேசுற மாதிரி இங்க பேசக் கூடாது பாப்பா. பாத்து பத்திரமா நடந்துக்கிடணும், அதிகாரிகளுக்கு மதிப்புக் குடுக்கணும்"

"நான் மதிப்புக் குடுத்துத் தான் நடந்துக்குறேன். ரூல்ஸ்னா எல்லாருக்கும் ஒண்ணு போல இருக்கணும்ல? அது என்ன ஆம்பளப் பையன் எட்டு போட்டு காமிக்கணும், பொம்பளப் புள்ளன்னா சும்மா அப்படிப் போயிட்டு இப்படி வான்னு சொல்றது? தப்பு இல்லையா? நான் எட்டுப் போட்டு தான் காண்பிப்பேன். அப்புறம் எனக்கு லைசென்ஸ் குடுத்தாப் போதும்" என்று தன் அப்பாவிடம் அந்தப் பெண் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள்.

அட! ஆண் பிள்ளைகளே பேச யோசிப்பதைக் கூட இவள் பேசுகிறாளே? யாரது என்று நிமிர்ந்து பார்க்கவேண்டும் போல் ஒரு எண்ணம் தோன்றினாலும் என் தயக்கம் என்னைப் பிடித்து இழுத்தது. அதற்குள் என் நண்பனிடமிருந்து போன் வர, அலைபேசியின் பக்கம் என் கவனத்தைத் திருப்பினேன். என்னை அழைத்திருந்தது கரடிப்பாண்டி. அவசியமில்லாமல் அழைக்க மாட்டானே என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் அழைப்பை ஏற்க,

"டேய் பேச்சி! டிஎன்பிஎஸ்சி ரிசல்ட் வந்திருச்சு போல. நம்ம பந்தா பாண்டி இருக்கானே அவன் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ்ல 'நான் ஒரு அரசு ஊழியன்'னு வச்சிருக்கான்டா. அனேகமா ரிசல்ட் வந்து நல்ல மார்க் வாங்கி இருப்பான்னு நினைக்கிறேன்" என்றான்.
இதை எப்படித் தெரிந்து கொள்வது? பந்தாப் பாண்டியிடம் கேட்கலாம். ஆனால் அவன் ரொம்ப பந்தா பண்ணுவான். அவனுக்கு அலைபேசியில் அழைப்பதில் எனக்கு சுத்தமாக விருப்பமில்லை. இந்த முறை என் ஆர்வம் என் தயக்கத்தை வென்றது. பந்தாப் பாண்டிக்கு அழைத்துக் கேட்டுவிட்டேன், "டிஎன்பிஎஸ்சி ரிசல்ட் வந்திருச்சாடா?" என்று. "ஆமாடா! குன்றின் மேலிட்ட விளக்கு மாதிரி பிரகாசிச்சிருக்கேன் டா.. நிச்சயமா கேட்ட இடத்துல வேலை கிடைக்கும். செமயா ரேங்க் போட்டுருக்கேன்" என்றான். உண்மையில் என்ன ரேங்க் வாங்கினானோ தெரியாது. பத்து ரூபாய் வைத்திருந்தால் கூட பத்து கோடி வைத்திருப்பது போல் பீலா விடுபவன் அவன்.

"என்னோட ரிசல்ட் தெரியுமாடா?" என்று கேட்டேன்.

"உன் ஹால் டிக்கெட் நம்பர் எனக்குத் தெரியாதே.. நீ வேணா எங்கேயாவது கம்ப்யூட்டர் சென்டர்ல பாரு. நான் பிஸியா இருக்கேன். அப்படி கிப்படி மார்க் கொறஞ்சிருந்தாலும் ஃபீல் பண்ணாதடா.. அடுத்த தடவை பார்த்துக்கிடலாம். சரியா?" என்று என் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டு ஃபோனை வைத்தான்.

நன்றாக இருப்பவனையும் சில வார்த்தைகளால் பதட்டத்தில் ஆழ்த்தி விட இவனால் தான் முடியும். இவனாலேயே மனச்சிதைவு அளவுக்குப் போனவர்கள் சிலபேர் உண்டு. இவன் படித்த கோச்சிங் சென்டரில் இவன் பேசுவதைக் கேட்டு பயந்து போய் பாதியிலேயே கோச்சிங்கை நிறுத்தியவர்களும் உண்டு.

என்ன செய்ய என்று யோசித்த நான் கனகராஜ் அண்ணன் யாரையோ சொன்னாரே, ஆர்டிஓ ஆபிசில் பரமசிவம் என்று.. அவரிடம் போய் உதவி கேட்டு கணிணியில் முடிவைப் பார்க்கலாம் என்று முடிவு செய்துகொண்டேன். பதட்டத்தில் ஹால் டிக்கெட் நம்பர் எனக்கு நினைவுக்கு வரவில்லை. வீட்டில் தான் இருக்கிறது. வீட்டில் தங்கமும் அம்மாவும் இருக்கிறார்கள். அம்மாவுக்கு இந்த விவரமெல்லாம் தெரியாது. தங்கத்துக்கு தெரியுமோ என்னவோ? இருந்தாலும் என்னால் அதற்கு மேல் பொறுக்க முடியாததால் தங்கத்துக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னேன். 'லைன்ல இருங்க மாமா' என்றவள் என் ஹால் டிக்கெட் நம்பரைப் பார்த்துத் தெளிவாகக் கூறிவிட்டாள்.

படபடக்கும் இதயத்துடன் பரமசிவத்தைத் தேடிக் கண்டுபிடித்து அவரது வேலைக்கு நடுவில் ஒரு நிமிடம் ஒதுக்கச் செய்து என் தேர்வு முடிவைப் பார்த்தேன். பயத்தில் வயிறெல்லாம் கலக்கியது. கழிப்பறை எங்கே இருக்கிறது என்று கூட ஒரு ஓரக்கண்ணால் பார்த்து வைத்துக் கொண்டேன். அவர் பார்த்துச் சொல்லும் வரை என் உயிர் அந்தக் கணிணிப் பெட்டிக்கும் எனக்கும் நடுவில் ஊசலாடிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.

அந்த ஒரு நிமிடத்தில் உயிர் போய் உயிர் வந்தது. நல்ல வேளையாக எதிர்பார்த்ததைவிட நூறு இருநூறு ரேங்க்குகள் முன்னதாகவே வாங்கியிருந்தேன். எப்படியும் இந்த முறை வேலை கிடைத்துவிடும். பிடித்த இடமும் பிடித்த துறையும் கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை. நிம்மதிப் பெருமூச்சுடன் பரமசிவத்திற்கு நன்றி கூறிவிட்டு அப்பாவிடம் விரைந்தேன்.

அப்பாவுக்கு விஷயத்தைச் சொன்னவுடன் முகம் கொள்ளா மகிழ்ச்சி. ஆதார் அட்டையைக் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்துவிட்டு அந்தப் பெரியவருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பெண் எட்டு போட்டு விட்டு வந்து விட்டாள் போல, தெம்பாக நின்று பேச்சில் கலந்து கொண்டிருந்தாள். அப்போது அவளை நிமிர்ந்து பார்க்கத் தயங்கிய நான், இப்போது நன்றாகவே நிமிர்ந்து பார்த்தேன்.

எனக்கு ஒரு நிமிடம் நான் நடந்து கொள்வதைப் பார்த்தால் அமைதிப்படை சத்யராஜ் போலத் தோன்றியது. அந்தப் படத்தில் ஓட்டு எண்ணும் முன் இருந்த நிலைக்கும் ஓட்டு எண்ணிய பின் நிமிர்ந்து
நின்ற சத்யராஜுக்கும் இடையிலான வித்தியாசம் எனக்கும் வந்திருந்தது.
 
Top Bottom