• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இருபுனலும் வருபுனலும் 1

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம்.

தமிழகத்திலேயே தொடங்கி தமிழகத்திலேயே முடியும் ஒரு நதி தாமிரபரணி. வருடம் முழுவதும் ஓடும் வற்றாத ஜீவநதி என்ற சிறப்பும் இதற்கு உண்டு. நெல்லைச் சீமையின் உயிர்க் கண்ணாக இருந்து வருகிறது. அமைப்புரீதியாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி என்று மாவட்டங்கள் பிரிந்தாலும் 'நாங்கள் நெல்லைச் சீமை' என்பது எங்கள் மக்களின் பெருமிதம். தாமிரபரணி வேறு, நெல்லைச் சீமை வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது. அந்த வகையில் நதியுடன் பின்னிப்பிணைந்த ஒரு வாழ்வை எழுத வேண்டும் என்று நெடுநாளாக எண்ணம். அதற்கு வாய்ப்பாக அமைந்தது 'யாதுமாகி நின்றாய்' என்ற சங்கமம் குழுவினர் அளித்த கதைக்கரு. சங்கமம் இணையதள 'எக்ஸ்பிரஸ் நாவல் போட்டி'யில் பங்குபெற்ற இந்தக் கதையை பெருவாரியாக வாசித்து மதிப்புரை அளித்த வாசகர்களுக்கும், பரிசளித்த நடுவர் குழுவினருக்கும், இதை புத்தகமாக கொண்டு வரும் ஸ்ரீ பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நதியின் மடியில் பிறந்து வளர்ந்த ஒருவனுக்கு அந்த நதியே எல்லாமுமாக அமைந்தால் எப்படி இருக்கும்?


அதுவே இந்தக் கதை- இருபுனலும் வருபுனலும். வாருங்கள் வாசியுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். (akhilandabharati@gmail.com)


-அகிலாண்ட பாரதி

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

(அதிகாரம்- நாடு; குறள் எண் 737)


-*********************************************************

அத்தியாயம் -1


என்ன செய்வதென்று தெரியாமல் அன்றும் வெட்டியாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தேன். வீட்டுக்குள் இருந்தால் டவர் கிடைக்காது என்று எங்கள் குவாட்டர்ஸில் உள்ள ஆலமரத்தின் கீழுள்ள திண்டில் அமர்ந்து செல்போனை நோண்டியவாறு இருக்கையில் அப்பா போன் அடித்தார்.

"டேய் தம்பி பேச்சியப்பா!" என்றார். அவர் எப்போதும் இப்படி வாய் நிறைய தான் அழைப்பார். "என்னப்பா?" என்றேன்.

"வேலையா இருக்கியாப்பா?"

"இல்லப்பா. சும்மாத்தான் இருக்கேன்" நான் சும்மா இருப்பது ஊருக்கே தெரியும். இருந்தாலும் அப்பா மரியாதைக்காகக் கேட்பார். பெற்ற பிள்ளையிடம் என்ன மரியாதை என்று நினைக்கிறீர்களா? பிறந்த குழந்தையானாலும் உரிய மரியாதை கொடுப்பவர் அவர்.

"அப்பா ஆர்டிஓ ஆபீஸ்ல நிக்கேன்ப்பா. ஆதார் அட்டைய மறந்துட்டு வந்துட்டேன். கொஞ்சம் பஸ்ல குடுத்து விடுதியாப்பா. காரையார் பஸ்ஸு மேலருந்து இப்போ ஒரு இருவது நிமிஷத்துல வரும்" என்று அப்பா கேட்டார்.

"அப்பா! ஆதார் அட்டையை செல்லுலேயே இறக்கிக்கிடலாம்ப்பா. அங்கன ஒரு கலர் பிரிண்ட் எடுத்தா சரியாப் போச்சு. நான் வேணா அனுப்பி விடட்டா?" என்று நான் கேட்க,

"அதெல்லாம் நமக்கு லாயக்குப் படாதுப்பா.. நீ குடுத்துவிட்டுரு.. இன்னைக்கு நம்ம ஆறுமுகம் கண்டக்டர் தான் வந்திருப்பாரு. அப்பா பஸ்ஸை எதிர்பார்த்து வாங்கிக்கிடுதேன்" என்றார்.

"சரிப்பா!" என்றபடி ஆதார் அட்டையை எடுக்க வீட்டுக்குள் நுழைந்தேன்.

"வீட்ல இருக்குற ஆம்பளைக்கு ஒரு காப்பித் தண்ணி போடணும்னு யாருக்காவது தோணுதா?" அம்மா சலித்துக்கொள்ள, தம்பி மனைவி தங்கம், "விடிஞ்சதுல இருந்து வேலை செய்தாளே மருமவ.. அவளுக்கு ஒரு காப்பி தண்ணி போட்டுத் தருவோம்னு தோணுதா?" என்றாள் பதிலுக்கு. இதில் காப்பி போடுவது பிரச்சனையா இல்லை, நான் வீட்டில் சும்மா இருப்பது பிரச்சனையா என்று தெரியாத நான், ஆதார் அட்டையைத் தேடி எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு லுங்கியிலிருந்து பேன்ட்டுக்கு மாறினேன்.

"ஏண்டா பிரகாஸு.. காபி குடிச்சிட்டுப் போயேன்" என்றாள் அம்மா. அம்மா என்னை பிரகாஷ் என்று தான் அழைப்பாள். பேச்சியப்பன் என்பது பழங்காலப் பெயராக இருக்கிறதாம். இன்னும் 'போகும் போது எங்க போறன்னு கேக்கக்கூடாது' என்பது அவளின் நம்பிக்கை. அதனால் தான் மறைமுகமாகக் கேட்கிறாள்.

"அப்பா ஆதார் அட்டையை எடுத்துட்டு வரச்சொன்னாரு. பஸ்ல போயிட்டு வாரேன்மா" என்று கூறிக் கிளம்பினேன். மாமியாருக்கும் மருமகளுக்குமான வாய்ப் போர் இப்போதுதான் துவங்கியிருக்கிறது. இப்போதைக்கு ஓயாது. அதனால் நாமே போய்விட்டு வந்து விடலாம் என்று ஒரு திடீர் முடிவு எடுத்திருந்தேன்.

"சரிடா சாப்பாட்டுக்கு வந்துரு. காப்பி கூட குடிக்காமப் போற" என்றாள் அம்மா. நான் பகல் காபி குடிக்க மாட்டேன் என்று தெரியும். இருந்தும் தங்கத்துடன் வம்பிழுக்க அவளுக்கு இது ஒரு சாக்கு. தங்கமும் லேசுப் பட்டவள் இல்லை. இந்த ஒரு வார்த்தைக்காகவே அம்மாவை இன்னும் நாலு நாள் கதற அடித்து விடுவாள். என் அம்மாவே இறங்கி வந்து, "சரி என்னமோ தெரியாம ஒரு வார்த்தை சொல்லிட்டேன். அதுக்கு இப்படியா?" என்று தவறை ஒத்துக் கொள்ளும் வரை விடமாட்டாள். இரண்டு பேருக்கும் இது வாடிக்கைதான். இந்தச் சண்டை எங்களுக்கும் இப்போது பழகிப் போய்விட்டது. எப்போதுமே அப்பாவும் தம்பியும் இதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். நான்தான், "அம்மா சும்மாயிரு, சும்மாயிரு" என்று அம்மாவை அடக்கவேண்டும். இப்போது நானும் விட்டுவிட்டேன். அப்பாவிடம் ஆதார் அட்டையைக் கொடுத்து விட்டு இன்றைய பொழுதை அம்பையில் கழித்துவிட்டு வரலாம் என்று கிளம்பிவிட்டேன்.

சற்று நேரத்தில் காரையாரில் இருந்து பேருந்து வந்து விட்டது. எப்போதையும் விட கூட்டம் குறைவாகவே இருந்தது. மிஞ்சிப்போனால் ஏழு அல்லது எட்டு பேர் தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக தங்களுக்குப் பிடித்த சீட்டுகளில் அமர்ந்து கொண்டு வந்தனர். அப்பா சொன்னது போலவே ஆறுமுகம் கண்டக்டர் தான் இருந்தார்.

"வாங்க தம்பி, என்ன கோயிலுக்கா" என்று அவர் கேட்க, "இல்லண்ணே அம்பை!" என்றேன் நான். அம்பாசமுத்திரத்துக்கான டிக்கெட்டை நான் அமரும் முன்னே கிழித்து நீட்டி விட்டார். நான் அமரும் முன்னே எனக்கு பக்கவாட்டிலிருந்த சீட்டிலிருந்து, "தம்பி தூரமா?" என்ற குரல் கேட்டது. இந்தப் பகுதியில் இருப்பவர்கள், இங்கு அடிக்கடி வருபவர்களில் அநேகம் பேர் எங்களுக்குப் பழக்கம்தான். ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவர் எதையும் செய்துவிட முடியாது. இது கனகராஜ் அண்ணன்.

"கனகராஜ் அண்ணனா? ஓ! மாசி மாசமாச்சோ. அதான் வந்திருக்கீங்க" என்றேன். ஆமாப்பா இந்த வருஷம் சித்ராபௌர்ணமி மாச ஆரம்பத்துலயே வந்துருது. இப்பவே பர்மிஷன் அது இதுன்னு வேலைய ஆரம்பிச்சாத் தான் சரியா வரும். கடகடன்னு பொழுது ஓடி பெர்மிஷன் கிடைக்க கடைசி நாள் ஆயிரும். இந்த வருஷம் பயங்கர மழை வேற. வழக்கமா நடக்கிற தடம்லாம் எப்படி இருக்குன்னு தெரியல. அதான் ஒரு எட்டு மேல போயி பாரஸ்ட் ஆபீசர் கிட்ட கேட்டுட்டு வருவோம்னு வந்தேன்" என்றார் கனகராஜ் அண்ணன்.

நாங்கள் பொதிகை மலைப்பகுதியில் மின்சார வாரியத்தின் பாபநாசம் பவர் ஹவுஸ் குவாட்டர்ஸில் வசிப்பவர்கள். எங்கள் பெரியப்பா இபி ஆபிஸ் வாட்ச்மேனாக இருந்தவர். அவர் இங்கு வேலைக்கு வரும்போது எங்கள் தாத்தா, பாட்டி சகிதம் எங்கள் அப்பாவும் உடன் வந்து விட்டாராம். அப்போது அப்பாவுக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. பெரும்பாலும் மின்சாரத் துறை, வனத்துறை ஆட்கள் மட்டும்தான் இங்கே இருப்பார்கள். அதனால் இரண்டு டிபார்ட்மெண்டிலும் உருவாகும் ஒப்பந்தப் பணியிடங்களில் நிரந்தரப் பணியாளர்களே தங்கள் உறவினர்களைக் கொண்டுவந்து சேர்த்து விடுவார்கள். அப்படி ஒரு உறவினர் மூலம் தான் பெரியப்பாவே இங்கு வேலைக்கு வந்தது. அவருக்குப் பணி நிரந்தரம் ஆகிவிட்டது. அப்பாவையும் ஏதாவது ஒரு வேலையில் சேர்த்து விட வேண்டும் என்று பெரியப்பா முயன்றிருக்கிறார். அப்பாவின் நேரம் அப்போது எதுவும் வேலை அமையாமல் போய்விட்டது. அப்பா நண்பர்களுடன் சேர்ந்து காரையார் டேமில் மோட்டார் படகு ஓட்டப் போய்விட்டார். அப்போதெல்லாம் காரையார் அணைப் பகுதியில் இருந்து பாணதீர்த்தம் அருவி வரை படகுப் போக்குவரத்து உண்டு. இப்போது பத்து வருடங்களாக நிறுத்தி விட்டார்கள். அதனால் அப்பா கீழே பாபநாசத்தில் ஆட்டோ ஓட்டுகிறார். அவரது டிரைவிங் லைசென்ஸ் காலாவதி ஆகி விட்டதால் இப்போது புதிதாக விண்ணப்பிப்பதற்காக ஆர்டிஓ ஆபீஸில் நிற்கிறார்.

"கலெக்டர் ஆபீஸுக்கு நேத்துப் போனேன். செக்சன்லே வழக்கமான ஆளுக இல்லை.. மாறிட்டாங்க. இப்பமே வேலையை முடுக்கி விட்டாத்தான் சித்ரா பவுர்ணமிக்கு மொத நாளாவது அனுமதி லெட்டரத் தருவானுக. இல்லன்னா பாரஸ்ட்காரன் விடமாட்டான்" என்றார் கனகராஜ் அண்ணன்.

அகத்தியர் வாழ்ந்ததாக நம்பப்படும் பொதிகை மலைப்பகுதியில் அகத்தியர் கோவில் அமைந்திருக்கும் இடம் கேரள வனப்பகுதியில் உள்ளது. வருடா வருடம் சித்ரா பௌர்ணமிக்கு மட்டும் அங்கு செல்ல அனுமதி அளிப்பார்கள். அகத்தியரைக் குலதெய்வமாக கும்பிடும் சில மக்கள் மட்டும் நடந்து போய் வழிபட்டுத் திரும்புவார்கள். முப்பது கிலோமீட்டர்கள் வரை நடக்க வேண்டும் என்பார்கள்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை முன் சீட்டில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த கஜேந்திரன் அண்ணன், "வரவர பாரஸ்ட் காரங்க ரொம்பப் பண்றானுக.. எங்களையே பைக்ல காரையார் வரை விடமாட்டேன்னுட்டாங்க. புதுசு புதுசா ஏகப்பட்ட ரூல்ஸ் போடறானுக" என்றார். அண்ணன் அகஸ்தியர் அருவி பக்கம் கடை வைத்திருப்பவர். வீடும் அங்கே தான். படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மேலே பாணதீர்த்தத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் அவருக்கு வியாபாரம் குறைந்து விட்டது. அதனால் வனத்துறை மீது அவருக்குக் கொஞ்சம் கோபம்.

"நல்லதுதானே முதலாளி? இப்ப இருக்கிற ரேஞ்சர் ரொம்ப நல்லவரு.. டிஎஃப்ஓவும் நல்லா படிச்சவராம்.. ரொம்ப ஸ்ட்ரிக்ட்ன்னு சொன்னாங்க. புலி எண்ணிக்கை ரொம்பக் குறைஞ்சு போச்சுன்னு தானே இப்ப கெடுபிடியா இருக்கு. காட்டுக்குள் போகக் கூடாதுன்னு தடை போட்ட பிறகு இருவத்திமூணு புலி கணக்கெடுப்புல தெரிஞ்சுக்காம். போன தடவை கணக்கெடுக்கும் போது எட்டோ ஒம்பதோ தான் தென்பட்டுச்சாம்ல? கோர்ட் ஆர்டர் வேற இருக்குல்ல முதலாளி. என்ன சொல்லுதீங்க?" என்றார் கனகராஜ் அண்ணன்.

"ஆமா இவனுங்க பெரிய ஒழுக்கமாக்கும்.. இவனுக மிளாவப் புடிச்சுத் திங்கிறது, மான்கறி வச்சதெல்லாம் நமக்குத் தெரியாமலா இருக்கு? நமக்கு மட்டும்தான் ரூல்ஸ் போடுவானுக.."

"அதுவும் அங்கங்க நடக்கத் தான் செய்யுது முதலாளி.. அப்படி ஏதும் துப்பு கெடைச்சா நீங்க சொல்லுங்க.. நான் கலெக்டரைப் பாக்கும்போது நைசா காதுல போட்டு வைக்கிறேன்.. முண்டந்துறை புலிகள் சரணாலயம்னு போர்டு போட்டுருந்து, புலி எண்ணிக்கை ஒத்தைப் படைல இருந்தா நல்லாவா இருக்கும்"

"இந்தா.. இவங்க என் சகலரு குடும்பம்.. சுத்திப் பாக்க வந்தாங்க. பாணதீர்த்தம் போக முடியலன்னு வருத்தமா திரும்பிப் போறாங்க. டேமைப் பார்க்கவே ஒரு கிலோ மீட்டர் நடக்க வச்சுட்டானுக" வருத்தத்துடன் சொன்னார் கஜேந்திரன் அண்ணன்.

"டேம்ல முழுசாத் தண்ணி கிடக்குதே.. பாத்துட்டீங்களா?" என்று நான் கேட்க,

"ஆமா புள்ளைக ரெண்டும் ஏயப்பா எம்புட்டுத் தண்ணின்னு ஆச்சரியப்பட்டாங்க.." என்றபடி சிறு புன்னகையுடன் என் அருகில் அமர்ந்திருந்த இரு சிறுவர்களை காட்டினார் கஜேந்திரன் அண்ணன்.

"எந்த ஊரு இவங்களுக்கு?"

"கோவில்பட்டிப் பக்கம்"

"தம்பிகளா! ஆத்துல இன்னிக்கு ஒன்னுக்கு அடிச்சு விட்டீங்கன்னா நாளைக்கு உங்க ஊரு குழாயில வந்துரும். தெரியுமா?" என்று கனகராஜ் அண்ணன் அந்தச் சிறுவர்களிடம் விளையாட்டாய்க் கேட்க,

"சேய்ய்! அந்தத் தண்ணிலயா வரும்?" என்றான் பெரியவன் அருவருப்புடன்.

"எங்களுக்கு அடுத்த வாரம் தானே தண்ணி வரும்.." என்றான் சிறியவன். 'இப்ப என்ன செய்வீங்க?' என்பதுபோல் இருந்தது அவன் கூறியது. "அப்பன்னா.. அடுத்த வாரம் உங்க ஒன்னுக்கு அதுல வரும்" என்றார் அண்ணன். நான் சிரித்துக் கொண்டேன்.

"நிஜமாவாம்மா?" என்று பெரியவன் அதற்கு முன்சீட்டில் அமர்ந்திருந்த அவன் அம்மாவிடம் கேட்க, நான் அவனை அழைத்து, "தம்பி எவ்வளவு தண்ணி இருக்கு பார்த்தேல்ல.. அதுல இதெல்லாம் ஒண்ணும் இல்லாமப் போய்டும்" என்றேன்.

"அப்ப நான் நேத்து மூக்குச் சிந்திப் போட்டது என்ன ஆகும் தம்பி?" என்று கனகராஜ் தெரியாதவர் போலக் கேட்க, "சீ சும்மா இருங்கண்ணே.. பசங்கள பயமுறுத்திக்கிட்டு.." என்று நானே கனகராஜ் அண்ணனை அதட்ட வேண்டியதாகிப் போனது. அதன்பின் கனகராஜ் அண்ணன் ஆறு உருவாகும் இடம், அதன் போக்கு பற்றியெல்லாம் சிறுவர்களிடம் கூற ஆரம்பித்து விட்டார். தன் வாழ்நாளில் இந்த விஷயங்களை எப்படியும் ஆயிரம் முறையாவது பிறரிடம் கூறியிருப்பார். அவருக்கு இந்த மலைப்பகுதி எங்களை விட அதிகப் பரிச்சயம், அதன் மேல் பாசமும் அதிகம்.

வருடந்தோறும் சித்ரா பவுர்ணமி அன்று கேரள எல்லையில் இருக்கும் அகத்தியர் கோவிலுக்குச் செல்லும் குழுவினருக்கு அண்ணன் தான் தலைவர். அவரது அப்பா ஹார்வி மில் என்று அழைக்கப்படும் மெஜுரா கோட்ஸில் நல்ல பொறுப்பில் இருந்தார். ஆனால் அண்ணனுக்கு வேலை எதுவும் இல்லை. அவரது அப்பா மில்லில் சேரச் சொன்ன போதும் மாட்டேன் என்றுவிட்டார். சித்ரா பவுர்ணமி குழுத்தலைவர் என்பதுதான் அவருடைய அடையாளம். முன்பு ஒருமுறை பேசியபோது, "பக்தி எல்லாம் ஒன்னும் இல்ல தம்பி.. உங்கள மாதிரி இருக்கையில ஆசைக்குப் போனேன். ரூட்டு பழகிருச்சு. இப்ப நான் இவங்க கூட போகலேன்னு வையி.. வழியில ஏதாவது சேட்டை பண்ணி வப்பாங்க. இல்ல தொலைஞ்சு போயிடுவாங்க. அதுவும் போக, காடு நம்மள பாசமா 'வாடா வந்து பாத்துட்டுப் போ' ன்னு கூப்பிடும் தம்பி!" என்றிருக்கிறார்.

அந்த இரு சிறுவர்களும் இப்போது ஆர்வமாக சீட்டில் முட்டி போட்டு நின்றவாறு பின்புறம் திரும்பி அண்ணனின் கதைகளைக் கேட்க ஆரம்பித்திருந்தனர். "ஒரு ஆறு இல்லப்பா.. உள்ளாறு, பாம்பாறு, பேயாறுன்னு மூணு ஆறு மலை உச்சியில பெரிய ஆத்தோட கலக்குதுக.. அதுக்கப்புறம் தான் நீங்க பாத்தீங்கள்ள, காரையாறு.. அது தாமரபரணில கலக்குது. அவ்வளவு உயரத்திலிருந்து பாணதீர்த்த அருவியா விழுது.. அதுக்கு அப்புறம்தான் டேமுக்கு வருது.. தரைப்பாலம் பார்த்தீங்களா? வர்ற வழில? இரும்புல செஞ்சது..?" என்று அவர் கேட்க, "ஆமா பார்த்தோம்" என்றனர் சிறுவர்கள்.

"சேர்வலாறுங்குற ஆறு தரைப்பாலத்துக் கிட்ட வந்து மெயின் ஆத்தோட கலக்குது.."

"அப்ப மொத்தம் ஆறு ஆறு என்ன மாமா?" கனகராஜ் அண்ணன் சொல்லச்சொல்ல விரல் விட்டு எண்ணிக் கொண்டிருந்த பெரியவன் கேட்டான்.

"ஆமா உலகத்துல எல்லா ஆறுகளுமே பல ஆறுகளோட சேர்க்கைதான் தெரியுமா? இங்க பாருங்க பாணதீர்த்தம்" என்று தன் செல்போனில் படம் காட்டினார்.

"பெரியப்பா நீங்க அங்க போய் இருக்கீங்களா?" என்று சிறுவர்கள் கஜேந்திரன் அண்ணனைக் கேட்க,

"நாங்க ஆயிரம் தடவை போய் இருப்போம்டா.. என்றவர் என்னைக் காட்டி, "இந்த மாமாவோட அப்பா அங்கதான் போட் ஓட்டுனாரு.. தினம் நாலு தடவை போவாரு" என்றார்.

"அந்தப் பெரிய டேம்ல போட் ஓட்டுவாங்களா? ஏன் மாமா, நீங்களும் ஓட்டுவீங்களா?" என்று அவன் என்னைக் கேட்க,

"மாப்பிள்ளைய போட்ல ஏத்துறதே பெரும்பாடா இருக்கும். ரொம்ப பயப்படுவாப்ல.. ஒரு நாள் நீச்சல் பழகுறேன்னு முங்கப் பாத்தாரு.. அன்னைல இருந்து பயம் தான்" என்று கஜேந்திரன் அண்ணன் கூறினார். நான் சிரித்துக் கொண்டேன்.

"அப்படியா மாமா?" என்பது போல் சிறுவர்கள் என்னைப் பார்க்க, "நான் உங்கள மாதிரி சின்னப் பிள்ளையா இருக்கையில நடந்தது அது" என்றேன் நான்.

அதற்குள் அடிவாரம் வந்திருக்க, "பாவநாசத்துல இருந்து வேற பஸ்ல போறோம்.. இந்தக் கதையெல்லாம் பிறகு பேசலாம்.. பசங்களா செருப்பைக் கால்ல போட்டுக்கோங்க.. இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு" என்றார் கஜேந்திரன்.

"என்ன இங்கனக்குள்ளேயே இறங்குதீக.. அம்பை வரலாம்ல?" என்று கனகராஜ் அண்ணன் கேட்க,

"இந்த லொக்கடா பஸ்ஸுல இம்புட்டுத் தூரம் தான் வரமுடியும்" என்று கஜேந்திரன் அண்ணன் கூறினார்.

"என்னவே.. கொழுப்பா? லொக்கடா பஸ்ஸுன்னு தெரியுது இல்ல? பெறகு ஏன் ஏறுதீக? நடந்தே மலையில இருந்து இறங்க வேண்டியதுதானே?" என்றார் கண்டக்டர் ஆறுமுகம்.

"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னானாம்.. நல்லாத்தான் பாசம் வச்சு இருக்கீருய்யா ஓட்டை பஸ்ஸு மேல.. இந்தா இந்தப் பிள்ளைக வளர்ந்து பஸ் கம்பெனி வச்சு பஸ்ஸு விட்டா நீரு தான் சூப்பர்வைசர். இந்த ரூட்டுல வால்வோ பஸ் மாதிரி சொகுசு பஸ் விட்ருவோம். அதுவரைக்கும் மலைய பத்திரமாப் பாத்துக்கோங்க.. வாரோம்.." என்றபடி உடன் வந்தவர்களைக் கூட்டிக்கொண்டு இறங்கினார். அந்தச் சிறுவர்களும் டாட்டா காண்பித்தபடி நடந்தார்கள்.


"அப்புறம் தம்பி.." என்றார் கனகராஜ் அண்ணன், அவர்கள் எல்லாரும் இறங்கியவுடன் என்னிடம். இந்தக் கேள்வியை, இந்தப் பேச்சை எப்போதும் நான் எதிர்பார்த்தே இருக்கிறேன். ஏனென்றால் புதிதாக யாரைப் பார்த்தாலும் சரி, அல்லது பழைய ஆட்களை வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்தாலும் சரி, ஒரு சிறிய இடைவெளி கிடைக்கும்போது, "இப்ப என்ன செய்றீங்க தம்பி?" என்றுதான் கேட்கிறார்கள். தம்பி, மாப்பிள்ளை, மச்சான் என்று அவர்கள் விதவிதமாக என்னை அழைத்தாலும் நான் பெரும்பாலும் என்னைவிட வயது மூத்தவர்களை அண்ணன் என்றே அழைப்பது வழக்கம்.

"எக்ஸாம் எழுதி இருக்கேண்ணே.. இன்னும் ஒரு மாசத்துல ரிசல்ட் வரும்னு சொன்னாங்க" என்றேன்.

"டிஎன்பிஎஸ்சி தானப்பா? இந்த டிஎன்பிஎஸ்சி விவகாரமே அப்படித்தான்.. நாம பரீட்சை எழுதினது நமக்கே மறந்து போயிடும். அதுக்கப்புறம் தான் ரிசல்ட் போடுவான். அந்தக் காலத்துல நானும் அதெல்லாம் எழுதிக்கிட்டு இருந்தேன். இப்போ எல்லாம் நிறுத்தி பத்து வருஷம் ஆச்சு" என்றார். நான் கடந்த நான்கு வருடங்களாக அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டும், தயார் செய்து கொண்டும் எழுதிக்கொண்டும் வருகிறேன். அம்மாவுக்கு என்னை எங்காவது பெருநகரத்தில் வேலைக்கு அனுப்பிவிட வேண்டும், அப்படியே குடும்பத்தை அங்கு மாற்றிவிட வேண்டும் என்று தீராத ஆவல். அப்பாவுக்கும் தம்பிக்கும் இந்த மலையை விட்டுப் போக மனம் வராது. எத்தனையோ பேர், "வழக்கம்போல இபில காண்ட்ராக்ட் வேலையில் சேந்துருப்பா.. கண்டிப்பா மூணு வருஷத்துக்குள்ள பெர்மனெண்ட் ஆயிரும்" என்றார்கள். அம்மாதான் தடுத்துக் கொண்டே வந்திருக்கிறாள். எனக்கு சொந்த விருப்பு வெறுப்பு என்று இதுவரை ஏதும் இல்லை. எதுவானாலும் சரி என்றுதான் இருந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நம்பிக்கையுடன்தான் தேர்வு எழுதுவேன். ஆனால் ஏனோ கிடைக்காது. இந்த முறை சற்று அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

என் தம்பி இதற்கெல்லாம் மெனக்கெடவில்லை. பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தினான், காண்ட்ராக்ட் வேலையில் சேர்ந்தான், நடுவில் திடீரென்று கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்து நின்றான், அப்புறம் வேலையும் நிரந்தரமாகி விட்டது. அவன் கல்யாணம் பண்ணியது ஒரு தனிக்கதை.

கனகராஜ் அண்ணன் நல்லவர் தான், அவருக்கே வேலை என்று ஒன்று இல்லை, என்றாலும் யார் அதைக் கேட்டாலும் என்ன வேலை பார்க்கிறாய் என்று கேள்வியும் சரி, அந்தக் கேள்விக்கான எந்தவித முன்னோட்டமும் சரி, என்னை எப்போதும் அசௌகரியப் படவே வைக்கும்.

"நம்ம பக்கமாவே ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டு வந்திருங்க தம்பி.. இந்த காத்துலயும் தண்ணிலயும் இருந்தவன் வேற எங்கே போய் பொழைக்க முடியும்னு நினைக்கிறீங்க? நமக்கெல்லாம் வாளியில தண்ணி பிடிச்சு வச்சு குளிக்கிற கொடுமை மட்டும் வந்துரவே கூடாதுப்பா.. நான் வி.கே.புரத்துல இறங்கிக்குறேன். ஒரு ஆளப் பாக்க வேண்டியது இருக்கு. பாத்து பத்திரமா போயிட்டு வாங்க. ஆர்டிஓ ஆபீஸ்ல எதுவும் வேலை சட்டுனு முடியணும்னா சொல்லுங்க.. அங்க பரமசிவம்னு நம்ம பையன் ஒருத்தன் இருக்கான்" என்றபடி அடுத்துவந்த விக்கிரமசிங்கபுரத்தில் இறங்கிக் கொண்டார். நான் மட்டும் அம்பாசமுத்திரத்தை நோக்கிப் பயணமானேன்.


(உரை: ஊற்றும் மழையும் ஆகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து வரும் ஆற்று நீர் வளமும் வலிய அரணும் நாட்டுக்கு உறுப்புக்களாம்)
 
Top Bottom