• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு - 2

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
173
பகலிரவு பல கனவு - 2

“டீ சம்யூ! என்னடி பண்ற? யாருடீ அவன்? ஆளும் அவன் மூஞ்சியும்.. பார்க்க சகிக்கல. இந்தப் பக்கம் வாடி” என்ற சரண்யா தோழியை பிரபாகரன் இருந்த திசைக்கு எதிர் திசையில் இழுத்துச் சென்று அமர்ந்தாள். அதிலும் மிக கவனமாக சம்யுக்தாவை பிரபாகரன் கண்களில் படாதவாறு அமர்த்தி விட்டு அவனை நேரே பார்க்குமாறு சரண்யா அமர்ந்து கொண்டாள்.

வழக்கத்திற்கு மாறாக இன்று கடையில் கூட்டம் அதிகமாக இருக்க, இவர்களுக்கு உட்கார இடம் கிடைத்ததே பெரிய விஷயமாக இருந்தது. எப்போதும் வாங்குவது போல இரண்டு ஜூஸிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வளவளக்க ஆரம்பித்தாள் சரண்யா.

“என்னடீ லைஃப் இது, சம்யூ? டென்ந்த் படிக்கும் போது, போர்ட் எக்ஸாம் சமயத்துல இதோ இந்த ஒரு மாசம் எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சு மார்க் வாங்கிட்டா அப்புறம் ஃப்ரீயா இருக்கலாம்னு சொன்னாங்க. நம்பி.. படிச்சு வச்சோம், அப்புறம் அடுத்த இரண்டு வருஷம் தான் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான பேஸ்(base) போடற பீரியட். கொஞ்சம் கஷ்டப்பட்டா அப்புறம் காலேஜ்ல ஃப்ரீயா, ஜாலியா இருக்கலாம்னு சொன்னாங்க. இப்போ பாரு, ப்ளஸ் டூ முடிச்சா மட்டும் போதாது, இந்த எக்ஸாம் பாஸ் பண்ணினா தான் நீங்க நினைக்கிற மாதிரி டாக்டராக முடியும்னு இங்கே கொண்டு வந்து நிப்பாட்டி இருக்காங்க.

மெடிக்கல் காலேஜ்ல நுழையறதுக்கே இவ்வளவு வருஷம் கஷ்டப்படணும்னா, அப்புறம் அஞ்சு வருஷம் நம்மளை நல்லா வச்சு செய்வாங்களோ? இதுல இந்த டாக்டர் எல்லாரும் எப்படிடி பிஜி எல்லாம் படிக்கிறாங்க. தப்பித் தவறி நாமளும் படிச்சு டாக்டராயிட்டா, அப்புறம் இந்த மாதிரி ரிலாக்ஸா உட்கார்ந்து ஜூஸ் குடிக்கவாவது விடுவாங்களா? நினைக்கும் போதே கண்ணைக் கட்டுதே. ஆண்டவா! என்னை மட்டும் காப்பாத்துப்பா!” என்று புலம்பித் தள்ளிய சரண்யாவின் வார்த்தைகள் சம்யுக்தாவின் மூளையை என்ன காதுகளைக் கூட சென்றடையவில்லை. அவள் தான் சின்சியராக பிரபாகரன் யாராக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் இருந்தாளே.

அதைக் கவனிக்காமல் சரண்யா தன் புலம்பலைத் தொடர்ந்தாள். “ஹூம், இதையெல்லாம் விட ரொம்ப முக்கியமான விஷயம் நாம் என்னைக்கு டாக்டராகி என்னைக்கு கல்யாணம் பண்றது. உனக்குப் பரவாயில்லை, நீ எந்த வயசுலயும் உலக அழகிக்கு தங்கச்சி மாதிரி தான் இருப்ப. என்னை மாதிரி சுமார் ஃபிகரெல்லாம் படிக்கும் போதே யாரையாவது செட் பண்ணா தான் உண்டு. இல்லேன்னா, மதர் தெரசா மாதிரி நாட்டுக்கு சேவை பண்ணிட்டு காலத்தை ஓட்ட வேண்டியது தான்.”

இதற்கும் பதிலில்லை என்ற போது தான் சரண்யா தோழியை நிமிர்ந்து பார்த்தாள். அவள் இந்த உலகத்தில் இல்லை என்பது அவளது பார்வையில் தெரிந்தது. சரண்யா எதுவும் பேசுவதற்கு முன் அவர்கள் ஆர்டர் செய்திருந்த ஜூஸ் வந்துவிட்டது.

தோழியை முறைத்துக் கொண்டே சரண்யா ஜூஸில் கவனமாக, சம்யுக்தாவின் கண்கள் பிரபாகரனின் பக்கம் அடிக்கடி சென்று வந்தன. அவனோ ஐஸ்வர்யா ராயின் அடுத்த வாரிசு போலிருந்த ஒரு பெண் தன்னை மும்முரமாக சைட் அடிப்பது தெரியாமல் கண்மூடி அமர்ந்திருந்தான்.

அவனது அந்தக் கோலம் கண்ட சரண்யாவுக்கு பயமாக இருந்தது. கடையில் பல பேர் உட்கார இடமில்லாமல் நின்றிருந்த போதும் பிரபாகரனின் டேபிளில் இருந்த நாற்காலிகளில் அமரவில்லை. கடை ஊழியர்களும் அவ்வப்போது அவனைத் திரும்பிப் பார்த்தார்களே தவிர அவனை எழுப்பவோ என்ன வேண்டும் என்று கேட்கவோ செய்யவில்லை.

இதையெல்லாம் யோசிக்க யோசிக்க சரண்யாவின் பயம் மேலும் கூடியது. அவளது கற்பனை எங்கெங்கோ சென்றது. வேகமாக ஜூஸைக் குடித்து முடித்தவள் தோழியையும் அவசரப் படுத்தினாள். ஆனால் இவளது பயத்திற்கு முற்றிலும் மாறாக அவளது நிலை இருந்தது. அதனால் ஜூஸை சொட்டுச் சொட்டாக உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

யாரும் அறியாமல் அவளது கையில் நறுக்கென்று கிள்ளிய சரண்யா, அவள் குடித்த வரை போதும் என்று சம்யுக்தாவை வேகமாக வெளியே இழுத்துச் சென்றாள். பிரபாகரனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சரண்யாவுடன் சென்றாள் சம்யுக்தா.

இவர்களது செய்கை அங்கே இருந்த மற்றவர்களைப் புருவம் உயர்த்த வைத்தது. உடன் பயிலும் பல மாணவர்கள் ஏதோ பிரச்சினை என்று வேகமாக இவர்களின் அருகே வந்தனர். அவர்களிடம் ஒன்றும் இல்லை என்று சமாளித்து அந்த இடத்தை விட்டுக் கிளம்புவதற்குள் சரண்யாவிற்கு உள்ளே சென்ற ஜூஸ் ஜீரணமாகிவிட்டது.

கடைக்காரர்களுக்கு எதுவும் புரியவில்லை. திடீரென இந்தப் பெண்கள் ஏன் விநோதமாக நடந்து கொள்கிறார்கள் என்று ஆராய்ந்த போது அங்கே அமர்ந்திருந்த பிரபாகரனைக் கண்டார்கள். எவரும் அறியாமல் தலையில் அடித்துக் கொண்டு தங்கள் வேலையைத் தொடர்ந்தார்கள்.

வெளியே ஏற்பட்ட சலசலப்பு காரணமாகக் கண் விழித்தான் பிரபாகரன். உள்ளங்கைகளால் கண்களைத் தேய்த்துச் சுற்றுப்புறத்தை உணர்ந்து கொள்ள முயற்சி செய்தவன் எழுந்து நின்றான். அங்கே இருந்த ஆளுயர கண்ணாடி அவனைப் பிரதிபலித்ததில் அவனே ஒரு நிமிடம் பயந்து தான் போனான் எனும் போது, அன்று தான் அவனை முதன் முதலில் பார்ப்பவர்களின் நிலையை வார்த்தையில் விவரிக்க முடியாது.

வீட்டில் நடந்த களேபரத்தில் வழக்கமாக அவன் பயன்படுத்தும் ஹேர் ஜெல், சீரம் எதையும் இன்று அவன் தொடவே இல்லை. அது மட்டும் அல்லாமல் ஹெல்மெட் போடாமல் பைக்கில் பறந்து வந்து அப்படியே மூலையில் அமர்ந்து விட்டான். விளைவு, ஃபேஷன் என்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து கலர் கலராக ஒரு அடிக்கும் மேல் நீளமாக அவன் வளர்த்து வைத்திருந்த தலைமுடி கன்னாபின்னாவென்று கலைந்து அவனைப் பக்கா ரவுடி போலக் காட்டியது.

அவசரம் அவசரமாக அங்கே இருந்த சிறிய அறைக்குள் நுழைந்து கொண்டான், கடையின் முதலாளி எங்கே வேண்டுமானாலும் நுழையலாம் தானே. சற்று நேரத்தில் தலைமுடிக்கு செய்ய வேண்டிய பணிகளைச் செய்து பார்க்க ஓரளவு சுமாராக வெளியே வந்தவன், தானும் சேர்ந்து வாடிக்கையாளர்களின் தேவையைக் கவனிக்கத் தொடங்கினான்.

********

“அம்மா! தாயே! சம்யுக்தா! உன் கால்ல வேணும்னாலும் விழறேன் தெய்வமே. என் மேல கொஞ்சம் கருணை காட்டு” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் சரண்யா. இருவரும் சரண்யாவின் வீட்டில் இருந்தனர். கோச்சிங் சென்டரில் இருந்து அல்லிநகரம் செல்லும் வழியில் இருந்தது அந்த வீடு. சம்யுக்தாவின் வீடு அல்லிநகரத்தில் இருந்தது. அங்கே சென்றாலும் வேலையாட்கள் தான் இருப்பார்கள்.

அவள் இன்று இருக்கும் நிலையில் உருப்படியாக வீடு போய்ச் சேருவாள் என்ற நம்பிக்கை இல்லாத சரண்யா அவளது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டாள். நல்ல வேளையாக இருவரும் சம்யுக்தாவின் ஸ்கூட்டியில் தான் கோச்சிங் சென்டர் சென்றிருந்தனர்.

இது அடிக்கடி நடக்கும் வாடிக்கை தான் என்பதால் சரண்யாவின் தாய் பவானி அவர்களைக் கண்டு கொள்ளாமல் தனது வேலையில் கவனமானார். தேனியில் இருந்த புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் உயிரியல் ஆசிரியராகப் பணிபுரியும் பவானி தேர்வுத் தாள்களைத் திருத்தம் செய்யும் பணியைத் தொடர்ந்தார்.
சரண்யாவின் தந்தை ராஜேஷ் தேனியில் இருந்த முக்கியமான மருத்துவர்களில் ஒருவர். சரண்யா அவர்களின் ஒரே மகள்.

சம்யுக்தாவின் வீட்டில் அவளது தாய் பாரதி மருத்துவராகப் பணியாற்றினார். தந்தை கண்ணன் தேனி மாவட்ட வனத்துறை அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். காட்டிலும் வீட்டுலுமாகத் தனது வாழ்க்கையைக் கழிப்பவர். மனிதர்களை விட விலங்குகளை மிகவும் நேசிப்பவர்.

சம்யுக்தாவின் அண்ணன் சஞ்சய் தாய் வழியில் இளங்கலை மருத்துவம் முடித்துவிட்டு தந்தையின் வழியில் சிவில் சர்வீசஸ் எழுதும் முயற்சியில் இருக்கிறான். பாரதி, கண்ணன் இருவருமே ஒரு கோடு போட்டு அதற்குள் வாழ வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்பவர்கள். பிள்ளைகளின் விஷயத்தில் மிகவும் கடுமையாக இல்லாவிட்டாலும் இதைத் தான் செய்ய வேண்டும் என்பதைத் தங்கள் பாணியில் உணர்த்தி விடுவார்கள்.

சம்யுக்தாவும் சரண்யாவும் ப்ளே ஸ்கூலில் ஆரம்பித்து இப்போது ப்ளஸ் டூ வரை இரட்டையர்கள் போல ஒன்றாகவே இருப்பவர்கள். இருவருக்கும் இடையே வந்த சண்டைகள் ஏராளம். சிறு வயதில் சட்டை கிழிய சண்டை போட்டதும் உண்டு, விவரம் தெரிந்த பிறகு நாள் கணக்கில் பேசாமல் சண்டை போட்டதும் உண்டு. ஆனாலும் இருவருக்கும் இடையே சமாதானம் செய்வதற்காக என்று கூட மூன்றாவது நபர் நுழைய யோசிக்கும்படியான நட்பு அவர்களுடையது.

இப்போது இனிமேல் அந்த மூன்றாவது நபர் எளிதாக நுழைந்து விடமுடியுமோ என்று சரண்யாவை நினைக்க வைத்தது சம்யுக்தா பிரபாகரனைப் பார்த்த பார்வை. சாதாரணமாகவே சம்யுக்தா வேறு யாரிடமாவது சிரித்துப் பேசினாலே சரண்யா இடையே புகுந்து கலைத்து விடுவாள். அத்தனை பொஸஸிவாக அவளை மாற்றியிருந்தது சம்யுக்தாவுடனான நட்பு.

பதின் பருவத்தில் தோழிகளுக்கு இடையே வரும் க்ரிஷ், லவ், வாழ்க்கைத்துணை எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற பேச்சுக்களை எல்லாம் இவர்கள் பேசியதே இல்லை. அது பற்றிய நினைப்பே இருவருக்கும் இல்லை என்று அர்த்தம் இல்லை. அடுத்தவரின் விருப்பு வெறுப்புகளை அறிந்தவர்கள் தான் இருவரும். இப்போதைக்கு இருவரையும் பிரிக்கும் எதைப் பற்றியும் அவர்கள் பேசத் தயாராக இல்லை.

இன்று சரண்யாவை சொல்ல முடியாத உணர்வு ஒன்று ஆட்கொள்ள தொடங்கியது. ஜஸ்டின் பீபர், அர்ஜித் சிங், விக்கி கௌஷல் என்று சம்யுக்தா பேசும் போது வராத உணர்வுகள் எல்லாம் அருகில் இருக்கும் பிரபாகரனை அவள் பார்த்த பார்வையில் வந்தது. என்ன செய்து தோழியை திசை திருப்பலாம் என்று யோசிக்கத் தொடங்கிவிட்டாள்.

“சம்யூ! என்னடி பண்ற? உனக்கே இது நல்லா இருக்கா? அவன் யாரோ எவனோ? பார்த்த உடனே பித்து பிடிக்கிற மாதிரி அவன் கிட்ட எதுவும் கிடையாது.”

“....”

“நாம இப்போ தான் ஸ்கூல் முடிக்க போறோம். டாக்டர் ஆகணும்னு எய்ம் பண்ணிட்டு இருக்கோம், அதுவும் நீ சர்ஜன் ஆகணுமனு சொல்லிட்டு இருக்க. இப்போ போய் நீ பாட்டுக்கு லவ், ப்யார்னு போனா அந்த லட்சியம் என்ன ஆகிறது? என்ன தான் நம்ம ஊர்ல பிள்ளைங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னாலும் நம்ம வீட்டுல நம்மளை என்ன செய்வாங்கன்னு யாராலயும் சொல்ல முடியாது”

“....”

“இப்போ மட்டும் நீ நார்மல் ஆகல… நான் உங்க அம்மா கிட்ட போய் சொல்லிடுவேன் பாத்துக்கோ.. அப்புறம் உங்க அப்பா ஒரு புலியையோ சிங்கத்தையோ துணைக்கு கூட்டிட்டு வந்து அந்த ஆளோட பேச்சு வார்த்தை நடத்துவாரு. அவன் அப்புறம் அதோ கதி தான்..”
நியாயத்தை எடுத்துரைக்கிறேன் என்று வாய் வலிக்கப் பேசிய சரண்யா ஒரு கட்டத்தில் ஓய்ந்து போய் உட்கார்ந்து விட்டாள். ஆனால் சம்யுக்தா வாய் திறந்து ஒரு வார்த்தை அவளுக்கு பதில் பேசவில்லை.

சரண்யாவின் பொறுமை கரையைக் கடக்கும் அபாயத்தில் இருந்தது. “உன் கிட்ட வாயால் பேசி பிரயோஜனம் இல்லை” என்று கையால் சம்யுக்தாவின் முதுகில் ஓங்கி ஒரு அடி போட்டாள்.

“ஆ.. அம்மா…! ஏய் எதுக்குடி என்னை அடிச்ச?” என்று ஒரு வழியாக வாயைத் திறந்தாள் சம்யுக்தா.

முதுகைத் தேய்த்துக் கொண்டே தோழியை முறைத்தவள், “ஆமா.. சரண்.. நாம எப்படி இங்கே வந்தோம். நம்ம சென்டருக்கு பக்கத்தில் ஜூஸ் தானே குடிச்சிட்டு இருந்தோம்?” என்று ஒரு கேள்வியும் கேட்டு வைத்தாள்.

“ஐயோ! என் ஃப்ரெண்டுக்கு என்னமோ ஆயிடுச்சே.. கோவிலுக்கு கூப்பிட்டு போய் வேப்பிலை அடிக்கணும் போல இருக்கே” என்று மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள் சரண்யா.

“ஷ்ஷ்ஷ்.. போதும் சரண்.. ரொம்ப நேரம் பேசின போல இருக்கு. பேசி முடிச்சிட்டியா? ரொம்ப டயர்டா இருக்க? தொண்டை எல்லாம் வறண்டு போயிருக்கும், ஆன்ட்டி கிட்ட சொல்லி ஜூஸ் போட்டு வாங்கிட்டு வரவா?”

அதற்குள் பவானி வந்து இருவரையும் சாப்பிட அழைத்தார். இருவரையும் அவர் சந்தேகமாக ஒரு பார்வை பார்க்க அதில் அமைதியாகச் சென்று சாப்பாட்டை ஒரு கை பார்த்தனர் இருவரும்.

பின்னர் சம்யுக்தா தனது வீட்டிற்குக் கிளம்பினாள். தாயின் முன் எதையும் பேச முடியாத சரண்யா கண்களால் தோழியை மிரட்டி வழியனுப்பி வைத்தாள்.

பாதையில் கவனம் இருந்தாலும் சம்யுக்தாவின் மனம் மறுபடியும் ஜூஸ் கடைக்குச் சென்று விட்டது. அவன் யாராக இருக்கும் என்ற ஆராய்ச்சி செய்து கொண்டே சென்றவள் திருப்பத்தில் வந்த பைக்கைக் கவனிக்கத் தவறினாள். இருவரும் நேருக்கு நேர் மோதிக் கீழே விழுந்தனர்.

பைக்கில் வந்தவன் சட்டென்று எழுந்து நின்று பைக்கை நிறுத்தி விட்டு சம்யுக்தாவின் அருகில் வந்தான். அவளது ஸ்கூட்டியைத் தூக்கி நிறுத்தியவன் சம்யுக்தாவை நோக்கிக் கை நீட்டினான். சற்றே தயங்கி நீட்டிய கையைப் பற்றியவள் அப்போது தான் அவனது முகத்தைப் பார்த்தாள். அருகில் தெரிந்த அந்த முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்த சம்யுக்தா மறுபடியும் மோன நிலைக்குப் போனாள்.

முதலில் அவளது செயல் கண்டு எரிச்சல் வந்தது பிரபாகரனுக்கு. ஆனால் தனது முகத்தைப் பார்த்த உடன் அவளது முகத்தில் வந்து போன வர்ணஜாலங்களைப் பார்த்த பிரபாகரன் திகைத்து நின்று விட்டான்.

பின்னணியில் தம்னன தம்னன என்று இசைக்க, அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற போஸில் இருவரும் நடுரோட்டில் நின்றார்கள்.




 

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
136
சரண் நீ மிரட்டி னாலும் அவங்க மறுபடி மீட் பண்ணிட்டாங்களே
 
Top Bottom